Pages

Sunday, January 31, 2010

2009 றேடியோஸ்பதி பரிசுக் கட்டுரை - ரவிஷங்கர்ஆனந்த்

கடந்த டிசம்பர் , 2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி வாயிலாக ஒரு போட்டியை வழங்கியிருந்தேன். அந்தப் போட்டியில்
1. 2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்
2. 2009 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் பாடல்களைச் சிறப்பாகவும், பொருத்தமாகவும் பயன்படுத்திய படங்கள் குறித்த அலசல்
3. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது 2009 ஆண்டின் தமிழ்த் திரையிசை எப்படி இருந்தது?








ஆகிய மூன்று தெரிவுகள் வழங்கப்பட்டிருந்தன. இவற்றில் ஏதாவது ஒரு தலைப்பில் ஆக்கம் எழுதி அனுப்பக் கோரப்பட்டிருந்தது. அதன்பிரகாரம் ரவிஷங்கர்ஆனந்த் போட்டியின் முதற் தலைப்பான "2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்" இனைத் தேர்ந்தெடுத்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
அவருக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்களோடு பரிசாக என்.சொக்கன் எழுதிய "ஏ.ஆர்.ரஹ்மான்' என்ற நூல் வழங்கிக் கெளரவிக்கப்படுகின்றது. தொடர்ந்து ரவிஷங்கர் ஆனந்த் எழுதிய பரிசுக் கட்டுரை இதோ.

உலகில் அனைத்தும் இசைக்கடிமை, அந்த இசையே உனக்கடிமை
















தலைப்பை பார்த்த உடன் உங்களுக்கு புரிந்து இருக்குமே, யாரை பற்றிய பதிவென்று!

” எனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள்,அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்” என்று இன்று வரை விருந்தென்ன, அதற்கும் மேல் படைத்து கொண்டு இருக்கும் என் தலைவர் இசைஞானிய பத்திதானுங்க… குள்ளமான அவர் இசை களத்தில், தொட்ட உயரங்கள் தான் எத்தனை!

அவருடைய ஆரம்ப நாட்கள், அவர் பாடுபட்டு திரை உலகில் கால்பதித்தமை, இவை எல்லாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதை பற்றியே கூறி மீண்டும் உங்களை வெறுபேற்ற விரும்பவில்லை.

இத்தனை ஆண்டுகள், பிறகும் இன்றைக்கும் அந்த ராசாவுக்கு மட்டும் ஏன் இன்னும் இத்தனை மரியாதை? அவரை நம்பியே, இன்னும் எத்தனை படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எத்தனை எத்தனை!! அவர் கையில் இன்றய தேதியில் மட்டும் 35 படங்கள் உள்ளதாம்.!! யுவன்சங்கரை விட அதிக படங்கள் ராசாவின் கையில் உள்ளதாக ஒரு தகவல்!!!
65 வயது தாத்தாவுக்கு எப்படி இது சாத்தியமாகிறது??

இவர் இப்படி தமிழகத்திலேயே இருந்து விடுகிறாரே, அவர் 80-ல் போட்ட பாடலை இந்திக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒருவர் ஏங்குகிறார்!! ஒரு புறமிருக்க, அட நாமளும் புகழ் அடையணுமே, என்ன பண்ணலாம், அட்லீஸ்ட் அவரை திட்டியாவது புகழ் அடைய மாட்டோமா என்று ஏங்கும் தமிழ் நாடே அறியாத தமிழ் எழுத்தாளர் ஒருவர்!!! கேட்டால், கேரளாவில் என்னை பற்றி கேள் என்று எஸ்கேப் ஆகிரார்.!
இதுல என்ன ஒரு தமாஷ் என்றால், பல மலையாளிகள், ராஜாவை, மலையாளி என்றல்லவோ நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

சரி சொல்ல வந்த விஷயத்தை, சொல்கிறேன், ராஜா அடைந்த உச்சங்கள் என்ன, அதற்கு அவர் மெற்கொண்டுள்ள தவங்கள் என்ன? ஒரு அலசல். What makes Raaja different from others?

வயதாகிவிட்டதே என்று கவலை கொள்ளாமை
நம்ம ராஜா, தனராஜ் மாஸ்டர் கிட்ட மேற்கத்திய இசை கத்துக்கும் போது அவர் வயது 26. அவருக்கு அன்னக்கிளி படம் வாய்ப்பு வந்தபோது அவர் வயது 34!!. 34 வயதில் தான் அவர் தன் திரைப்பட இசையமைப்பாளராகத் துவங்குகிறார்.
அவருடைய நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலும் (80, 90-களில்), அவர் தான் பிசியான இசைஅமைப்பாளர்!! காலை 5 மணிக்கு எழுந்தால், இரவு 1-2 வரை இசைப்பணி முடித்து தான் வீடு திரும்புவார்! இன்றும் அப்படியே!!
சிம்பனி இசை அமைக்கும் போது அவருக்கு வயது 50. இன்றும் வயது ஆக ஆக, இசை இன்னும் பொலிவு பெற்றெ காணப்படுகிறது.. குறையக்காணோமே!!

உடல் நிலைகளை காரணம் காட்டாமை
ஒரு சின்ன தலைவலி, காய்சல் என்று கூட வேலைக்கி டிமிக்கி கொடுக்காதவர், அவர் நினைத்தால் நாளைக்குப் பாத்துக்கலாம் என்று தள்ளி போடலாம், ஆயினும் அவ்வாறு செய்யாதவர். நான் அறிந்த இரண்டு உதாரனங்கள் கூறலாம்:
1. றேடியோஸ்பதியில் வந்துள்ளது, காய்ச்சளை பொருட்படுத்தாது, ஈரத்துணியை தலையில் போட்டு கம்போஸ் செய்யும் புகைப்பட புதிர்
2. ”காதலின் தீபம் ஒன்று” பாடலை அவர் எப்படி கம்போஸ் செய்தார் தெரியுமா? பேசவே இயலாத நிலையில், விஸில் அடித்து!
3. "கத கேளு கத கேளு கருவாயன் கத கேளு" என்ற பாடலை நன்றாகக் கவனித்துக் கேட்டீர்கள் என்றால், ஆப்பரேஷன் முடித்து அவர் அன்று அனுபவித்த வயிற்று வலியும் இன்னைக்கும் புரியும்.
இதற்கெல்லாம் ஒரே காரணம், தன்னை நம்பி வந்துவிட்டர்கள், அவர்கள் வருந்தக்கூடாதென, தன்னை வருத்திக்கொள்ளும் attitude!!
80/90-ளில் வந்த முக்கால்வாசி படங்களை இன்றைக்கு உக்கார்ந்து பார்க்க முடியாது! ஆனால், அதை இன்றைக்கும் பார்க்கவைப்பது, அருடைய பாடல்களுக்காகவும், பின்னணி இசைக்காகவும் மட்டுமே என்பதை உறுதியாகவும், ஆதாரப்பூர்வமாகவும் சொல்ல முடியும்.

அதிகம் பேசாது செயலில் காட்டும் தன்மை
தலைவர் அதிகம் பேச மாட்டார், ஆனால் செயலில் வீரர். அன்றும் சரி இன்றும் சரி, தேவை இல்லா பேச்சு அவரிடம் கிடயாது. சில சமயங்களிள், வாரக்கணக்காக யாரிடமும் பேசாது, ராகங்களுடன் வாழ்கிறார்!
ஆடம்பரமின்மை அவர் கொண்ட கொள்கை, தங்க நகை அனிய மாட்டார்.. கதர் வேட்டி தான், கதர் ஜிப்பாதான். எப்போதாவது வெளி நாடுகள் சென்றால், குளிருக்காக கோட் அணிவார்!

புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆற்றல்
சொன்னா நம்புவீங்களா? நம்ம ராஜாவுக்கு ஆர்குட் என்றால் என்ன? யாஹூ க்ரூப்ஸ் என்றால் என்ன? எந்த எந்த இணையத் தளங்கள் மூலம் பாடல்களை மக்கள் ட்வுன்லோடு செய்கிறார்கள் என்றெல்லாம் கூட தெரியுமாம்.
யுவன் காலத்திலும் தல களத்தில் கலக்குகிறார் என்றால், சும்மாவா! கூம்பு ஒலிபெருக்கி காலம் தொட்டு, ஸ்டீரியோ காலம் கலக்கி, டிஜிட்டல் இசையிலும் பின்னுகிறார்!!

பன்முகத்தன்மை
” மேகத்தில் ஈரம் போல், கண்ணுக்குள் நீரேனம்மா?
பூமிக்குள் வைரம் போல், நெஞ்சத்தில் நீ தானம்மா!”
என்று ஒரு தேர்ந்த திரைபட கவிஞர் போல எழுதும் அவரே,
” ஒரு முறையா? இரு முறையா? பல முறை
பலப்பிறப்பெடுக்க வைத்தாய்” என்று ஒரு பட்டினத்தார் ரேஞ்சுக்கும் எழுதுவார்!

” பூஜையில் குத்து விளக்கை ஏற்றவைத்து அது தான் நல்லதென்பார்கள்,
படத்தில் முதல் பாடலை பாட வைத்து, அது நல்ல ராசி என்பார்கள்” என ஒரு யதார்த்த கவிஞனாவார்!
பல படங்கள் எடுத்து தயாரிப்பாளறாக கலக்குவார்!
போட்டோகிராபி அவருடைய பொழுதுபோக்கு

இசைஞானம்:
முக்கியமான ஒரு விஷயம், அவருடைய, இசை ஞானத்தை பத்தி நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்கணுமா?? ஜாங்கரி இனிக்கும் என்று தான் சொல்ல முடியும், அது எப்படி இனிக்கும், எவ்வளவு இனிக்கும் என்று சொல்லவா முடியும்? தின்று பார்த்தால் தானே, உணர முடியும்? அவர் இசை உங்களை அமைதிப்படுத்தவில்லையா? அழ வைக்கவில்லையா? காமத்தை தூண்டவில்லையா? சிரிக்கவைக்கவில்லையா?, தாய் பாசத்தை உணர்த்தவில்லையா? தேச பக்தி கொள்ள வைக்கவில்லையா?
காதலிக்க தூண்டவில்லையா? இறைவனை அடைய உதவவில்லையா? தாலாட்டுபாடி தூங்க வைக்கவில்லையா?
ஆனந்தமாக ஆட வைக்கவில்லையா? உங்கள் மனசோர்வுகளை நீக்கவில்லையா?

ஒன்று மட்டும் சர்வ நிச்சயம், யாரிடமும் இருந்து காப்பி அடிக்காமல், மற்றவர்கள் தன்னிடமிருந்து காப்பி அடித்துவிட்டு போகட்டும் என்ற பெருந்தன்மை, அவரை இன்னமும் வியப்புற என்னை பார்க்க வைக்கிறது! அவரை அண்ணாந்துதான் பார்க்கவைக்கிறது!!

எத்தனையோ பாடுகளை, அதை பாடல்களாய்- நான்
விற்றேன் இது வரையில்!
அத்தனையும் நல்லவையா,? இல்லை கெட்டவையா? – நான்
அறியேன் உண்மையிலே?

ஐயா, நீங்கள் விற்றவை யாவும், நல்லவையே!! நல்லவையே!! நல்லவையே!!

Sunday, January 17, 2010

சிட்னியில் மையம் கொண்ட "இசைப்புயல்"

எம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கும் கூட வரும், அது எத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும். அப்படி ஒரு விதமான அனுபவம் தந்த திளைப்பில் அதனை இங்கே பதிவாக்கிக் கொண்டிருக்கின்றேன்.

இந்தியாவின் பெரும் இசையமைப்பாளர், ஆஸ்கார் விருது பெற்றவர் என்ற அடைமொழிகளோடு தான் அவுஸ்திரேலிய ஊடகங்கள் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசை மேதையை சமீபகாலமாக அதிகம் உச்சரித்தன. அதற்குக் காரணமாக அமைந்தது நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் Sydney Festival 2010. ஆம் இந்த நிகழ்வுக்கு வந்து சிறப்பிக்க இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும் அவர் யார் என்று சிறு குறிப்போடும் அவ்வப்போது அடையாளப்படுத்திக் கொண்ட இந்த நிகழ்வு ஆரம்பமாகும் தினம் வரை.

நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் மேற்குப் பிராந்தியம் பெருமளவு ஆசிய நாட்டவர்களையும் உள்வாங்கிக் கொண்ட பிரதேசமாகும். இங்கு தான் சிட்னி முருகன் ஆலயம் என்னும் பெரியதொரு ஆலயமும், இலங்கை, இந்திய மக்களின் குடியேற்றம் பரவலாக உள்ள இடமுமாகும். இந்த மேற்குப் பிராந்தியத்தின் தலைநகராக விளங்குவது Parramatta என்ற பெருநகராகும். இந்த நகரில் உள்ள Parramatta Park என்ற விசாலமான பூங்காவே ஏ.ஆர்.ரஹ்மான் நடத்த இருக்கும் அதுவும் உலகின் முழுமையான இலவச நிகழ்ச்சியாக அமைந்த Indo Australian Peace concert என்ற நிகழ்வாகும். இதனை நியூசவுத்வேல்ஸ் மாநில அரசாங்கமே பொறுப்பேற்று நடத்தியதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஏகப்பட்ட எதிர்பார்ப்பும், ஆர்வமும் தொற்றிக்கொள்ள, இரவு 7.30 மணிக்கு நடைபெறவிருந்த அந்த நிகழ்வுக்கு நண்பர்கள் புடைசூழ மதியம் 12 மணிக்கே Parramatta Park இற்கு நடைபயில்கின்றோம். வழியெங்கும் வாகனங்களை நிறுத்துவதற்கு அன்று தற்காலிகத் தடை போடப்பட்டிருந்தது. வீம்புக்காக ஏற்கனவே தரித்து நின்ற கார்களைத் தூக்கி அகற்றும் பணியில் போக்குவரத்து அதிகார சபையின் tow away வாகனங்கள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. Sydney Festival என்று பெயர் தாங்கிய ரீ சேர்ட் அணிந்து, விழாவின் கையேட்டுடன் வெள்ளைக்கார இளசுகள். இதையெல்லாம் கடந்து பூங்காவுக்குள் நுழைகின்றோம். அது நாள் வரை சுதந்திர வலயமாக இருந்த பூங்கா கூட்டுப் படைத் தலைமையகம் கணக்காக ஆங்காங்கே தடுப்பும் மறிப்புமாக இருக்கிறது. ஒற்றைப் பாதை மட்டும் தான். அந்தப் பாதையால் போக முன்னர் எல்லோருடைய கைப்பைகளும் சோதனையிடப்பட்டு அனுமதிக்கப்படுகின்றார்கள். "என்ன இது வழியில் போகின்றவர்களைப் பார்த்தால் சில நூறும் தேறாதே" என்ற சொல்லிக் கொண்டே நிகழ்வு நடக்கும் திடலை நோக்கி நடக்கின்றோம். சிட்னியின் முன்னணி நாளேடான Daily Telegraph ஏ.ஆர்.ரஹ்மானின் முழு அளவிலான படத்தை முன் அட்டையாகப் போட்டு souvenir இதழாகத் தயாரிக்கப்பட்டு அந்தத் திடலின் முகப்பில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். ஓரமாக தற்காலிக உணவகங்கள் போடப்பட்டும், தாக சாந்திக்காக Sydney Water தன் இலவசப்பணியையும் செய்து கொண்டிருந்தன.

நிகழ்வு நடைபெறும் அரங்கம் திடலில் நடுநாயகமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. பார்வையாளர் பகுதிகள் வலயங்களாகத் தடுப்புக்கள் போடப்பட்டு இருக்கின்றன. நேராக அந்த முதல் வலயத்தில் நிகழ்வு நடைபெறும் மேடைக்குச் சமீபமாக இடம் பிடித்துக் கொள்கின்றோம். 30 பாகைக்கு மேல் சூரியன் சோதனை செய்து கொண்டிருந்தான். பானி பூரி தட்டுக்களுடன் சூழவும் ஹை ஹை வட இந்தியக் கூட்டம். பன்னிரண்டு மணியில் இருந்து காத்திருப்போர் பட்டியலில் சில நூறு வெள்ளையர்கள், மற்றைய சமூகத்தினரும் அடக்கம். மெல்ல மெல்ல நூறு இருநூறாகப் படையெடுக்கின்றது நம் முதல் வலயத்துக்குள் சூரியக் குளியலில் நாம் வேர்த்துப் போன இடியப்பம் கணக்காகத் தவமிருக்கிறோம் வெறும் தரையில். மூன்று மணிக்குள் முதல் வலயம் நிரம்பி கூட்டம் ஐந்தாயிரத்தைக் கடந்திருக்கும். இதிகாசம் வர்ணிக்கும் ஆஜானுபாகு தோற்றம் கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வலுக்கட்டாயமாக முன் வலயத்தை மூடித் தடுப்புப் போடுகிறார்கள். அங்கிருந்து வெளியே சென்று திரும்புபவர்களுக்கு அடையாளமாக சிவப்பு முத்திரையைப் பொறிக்கப்படுகின்றது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேனே என்று சில புத்திசாலிகள் நான்கு, ஐந்து மணி கணக்கில் வந்து முன் இருக்கைகளுக்காக நுழையப் பலவிதமான அஸ்திரங்களையும் பாவிக்கிறார்கள்.
"My brother sits inside" இது லேட்டா வந்த ஒருவர் பாவித்த அஸ்திரம்
"Who cares man" இது ஆஜானுபாகு செக்யூரிட்டி.

ஐந்து மணி அளவில் சூரியன் ஏமாற்றத்தோடு அங்கிருந்து நகர்ந்து கொள்ள மெல்லிய சிலிர் காற்று வந்து ஹலோ சொல்லிக் கொள்கிறது. ஆங்காங்கே பொருத்தப்பட்ட பெரும் திரைகள் இயங்க ஆரம்பிக்கின்றன. பாலிவூட் சினிமா குறித்து உலகெங்கும் உள்ள விமர்சகர்களும், ஹிந்தி சினிமாவின் கரன் ஜோகர் அசுதேஷ் கோவாரிகர், குல்சார் உள்ளிட்ட பிரபலங்களும் பேசுகிறார்கள். அவ்வப்போது ராஜ்கபூர் காலத்தில் இருந்து ஷாருக், சல்மான், அமிர் கான்கள் ரித்திக் ரோஷன் காலம் வரையான தேர்ந்தெடுத்த படத்துண்டுகளும் பாடல்களாக வருகின்றன.
"இந்தி சினிமா ஒன்றும் இந்திய சினிமா இல்லை" என்று மம்முட்டி கணக்காகக் கத்த வேண்டும் போலிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முன்னுறுத்திச் செய்கின்ற விழாவில் அவரின் பெருமைகளையாவது ஒரு பத்து நிமிடத்தில் சொல்லியிருக்கலாமே, சிட்னியிலும் வடக்கு வாழ்கிறது.

எங்களுக்குப் பின்னால் பரந்து விரிந்த அந்தத் திடலை மீண்டும் திரும்பிப் பார்க்கின்றேன். சில மணி நேரங்களுக்குள் சில ஆயிரங்களாக இருந்த கூட்டம் எண்பதாயிரத்தைத் தொட்டு நிரம்பி வழிகின்றது.

மணி ஏழுமணியைக் காட்ட விழா ஆரம்பமாகின்றது என்ற அறிவிப்போடு அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளின் பிரதிநிதியாக Uncle Sam இன் பேச்சோடு ஆரம்பிக்கின்றது.
அவரைத் தொடர்ந்து நியூசவுத் வேல்ஸ் மாநிலப் பிரதமர் Kristina Keneally இன் சம்பிரதாயமான பேச்சு சுருக்கமாக வந்து நிறைகிறது. அவரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானை வரவேற்க அவுஸ்திரேலிய முன்னாள் கிறிக்கற் அணித்தலைவர் Steve Waugh. தனக்கும் இந்தியாவுக்கும் கடந்த 25 வருஷ பந்தம் இருக்கிறது என்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையுலகின் சச்சின் டெண்டுல்கர் என்று தன் ட்ரேட் மார்க்கைப் பதித்தார். இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்புச் செய்து கொண்டிருந்த ABC தொலைக்காட்சி சார்பில் இன்னொரு கிறிக்கற் வீரர் மத்தியூ ஹெய்டன் நிகழ்ச்சித் தொகுப்புச் செய்தது இன்னொரு சுவாரஸ்யம்

அரங்கம் மெளனமாகிறது. அடுத்து என்ன என்ற ஆவலோடு முழுக்கூட்டமும் மயான அமைதியில். ட்ரம்ஸ் சிவமணி தன் கழுத்தில் ட்ரம்ஸ் ஐத் தொங்க வைத்துக் கொண்டே ஆரம்பிக்கிறார் தன் கச்சேரியை, அது மெல்ல மெல்ல டிக்கு டிக்கு டிக்குடீ Rang De Basanti என மாறி வேகம் பிடிக்கின்றது. அரங்கத்தில் மேல் அடுக்குகளில் இருந்து நடன மங்கையரும் கீழ் அடுக்குகளில் இருந்து ஆடவர்களும் ஆடியவாறே பாடுகின்றார்கள். தலேர் மெஹந்தி, சித்ரா பாடிய பாட்டு பாடகர் இல்லாமல் கண்கவர் ஆட்டத்தோடு நிறைகிறது.


மேடையின் வாய் மெதுவாகப் பிளந்து நகர்கிறது, இருக்கையில் அமர்ந்தவாறே ரஹ்மானைத் திருப்பிக் காட்டுகிறது. கூட்டம் வாய் பிளந்து ஹோஓஓஓ என்று ஆர்ப்பரிக்கின்றது. ரஹ்மான் "வந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் எனது நன்றி" என்று விட்டுப் பாடத் தொடங்குகிறாரே ஒரு பாட்டு, வந்திருந்த minority தமிழ்க் கூட்டமும் majorityக்கு சவால் விடுவது போல கைகளை அகல விரித்து அசைத்தவாறே கூக்குரல் இடுகிறார்கள். சும்மாவா, அவர் பாடிய முதல் பாட்டு சிவாஜியில் இருந்து "அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சானே".

இதுக்கு மேல் இருக்கவே முடியாது என்று முழுக்கூட்டமுமே மொத்தமாக எழுந்து நின்று இரண்டு மணி நேர நிகழ்ச்சி முடியும் வரை நின்று கொண்டே ஆடியும் பாடியும், கைதட்டியும் ரசித்தது இதுவரை நான் பார்த்திருக்காத புதுமை.

தொடர்ந்து A.R.Rahman Connections என்ற தனி ஆல்பத்தில் இருந்து JIYA SE JIYA பாடலும், தில் சே படத்தில் இருந்து தில் சே ரே, Tere Bina என்று குரு படத்தில் இருந்தும் பாடினார் ரஹ்மான். அவரோடு கூட்டுச் சேர்ந்து சுருதி கூட்டினார்கள் பிளேஸ், பென்னி தயாள் , அஸ்லாம் , மற்றும் சில வட நாட்டுக் குரல்கள்.

பிளெஸ்ஸிக்கு வழக்கம் போல பாடல்களுக்கு முன்னும் இடையிலும் வரும் சிறப்புச் சப்தப் பணி தான் இந்த நிகழ்ச்சிக்குக் கொடுக்கப்பட்டது. தன் வழக்கமான வெள்ளைக் கலர் ஜம்பரும், வெள்ளைக் கோடு பிளாஸ்டிக் கண்ணாடி சகிதம் வந்த பென்னி தயாள் ஹோரஸ் கொடுத்தும் ஒரு சில பாடல்களில் ஆடவும் செய்தார். அஸ்லாமுக்கு இன்னும் கூடுதல் தகுதியாக அதிக பாடல்களில் ரஹ்மானுடன் சேர்ந்து பாடிச் சிறப்பித்தார். அஸ்லாமின் குரலில் ரஹ்மானுக்கு பெரு விருப்பு போல. காதல் தேசம் காலத்தில் இருந்து மனுஷரை விடமாட்டேன் என்கிறார். அஸ்லாம் இடையே ஒரு சில படங்களுக்கு இசையமைப்பாளராக ப்ரொமோஷன் கிட்டிப் போனாலும் ரஹ்மானிடமே மீண்டும் வந்து விடும் யோகம் அவருக்கும்.

இடையில் Pray For Me Brother என்ற தனிப்பாடலும் பெருந் திரைகளில் காட்சியாக விரிந்தது.

ஹோரஸ் குரல்களாக ரஹ்மானின் தங்கைகளில் வழக்கமாக மேடையில் வரும் ரைஹானா உடன் இஸ்ராத்தும் இணைந்து கொண்டார்.
சைய சையா (தைய தையா) பாட்டின் "காட்டு வழியே தூக்கணாங்குருவீகளாம்" என்று ரெஹ்னா சுபாவின் குரலில் அச்சொட்டாகப் பாட ஹிந்தியாகத் தொடர்ந்தது.
பாடகிகளில் "ஜெய ஹோ" புகழ் தான்வீ உடன் ஒரு இன்னொரு வட நாட்டுப் பாடகியும் இணைந்து பாடினார். அவர் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ரஹ்மானோடு கூடவே பயணிக்கும் வெள்ளை இனப்பாடகி Clare ஆங்கிலத்தில் பாடியும் , பாடல்களிடையே மெருகேற்றியதோடு அழகாக ஆடவும் செய்தார்.
இவர்களின் குரல்களில் குரு (ஹிந்தி) படத்தில் இருந்து நன்னாரே பாடலும் Delhi 6 இல் இருந்து Delhi 6 பாடலும் கூட வந்தன. "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு' பாடலை தான்வி உடன் அந்த வடநாட்டுப் பாடகியும் இணைந்து பாடியதுயது ஆடியதும் Fire ;-)

"குட் ஈவினிங் சிட்னி" என்றவாறே தன் நாசியை உயர்த்திய சிரிப்பைக் காட்டி விட்டு பக்காவாக பாடல்கள் சிலதைக் கொடுத்தார் ஹரிஹரன். Nahin Saamne (தமிழில் கலைமானே) என்ற தால் பாடலை அவர் பாடியபோது கள் வெறி கொண்டு களிப்பில் இருந்தது ரசிகர் கூட்டம். நம் ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைப்போமா ரஹ்மான் என்று சொல்லி விட்டு கூட்டத்தின் இரு பக்கமுள்ள ரசிகர்களுக்கும் தான் பாடுவதை மீண்டும் பாடுமாறு கேட்டவாறே சில ஸ்வர வரிசைகளை அள்ளி விட்டார். இரண்டு பக்கமும் சேர்ந்திசையாக மீள எதிரொலித்தன அவை. போட்டியில் எல்லோருமே வெற்றி ஏனென்றால் இங்கே வெற்றி தோல்விக்கு இடமில்லை என்று முறுவலித்துக் கொண்டே சொன்னார் ரஹ்மான்.


உங்களுக்காக ஒரு ரொமான்டிக் பாட்டு என்றவாறே பம்பாய் படத்தின் ஹிந்தி தழுவலாக துஹிரே (உயிரே) என்று ஹரிஹரன் பாட ஆரம்பிக்க மீண்டும் ஒரு கலக்கல் பாட்டாச்சே என்று கூட்டமும் ஆரவாரித்தது. அந்தப் பாடலை ஹரிஹரன் தன் பாணியில் உச்ச ஸ்தாயியில் சாதகம் பண்ணி மெல்லக் கீழிறங்க அதைக் கையில் ஏந்துமாற் போலப் பிடித்து "உதயா உதயா உளறுகிறேன்" என்று பாடி தேசிய நதி நீர் இணைப்பாகச் செய்து வைத்தார் சாதனா சர்க்கம்.




இடையில் ஒரே பாடல் பாடிய அந்த ஆபிரிக்கப் பாடகரும், இன்னொரு ஹிந்தி முகமும் அந்த நேரத்தில் அந்நியமாக இருந்த புதுப்பாட்டுக்களிலும் சிறப்பாகவே செய்தார்கள்.

பின்னணி இசைத்தவர்களில், ட்ரம்ஸ் சிவமணி, புல்லாங்குழல் இசைத்த நவீன் தவிர மற்றையவர்கள் பழக்கமற்ற முகங்கள். ஆனால் வாசிப்போ ரஹ்மானின் பஞ்சாதன் ஸ்டூடியோவில் கேட்ட ஒலித்தரம். அதுவும் நிகழ்ச்சி முடியும் போது சிதார் இசைத்த Asad Khan உம், கீபோட் இல் கொத்து பரோட்டா போட்டவரும் அவரவர் கணக்கில் சுயேட்சையாக நின்று ஜெயித்து விட்டார்கள்.

இடையில் கழுத்தில் ஸ்டைலாக கீ போர்ட் போட்டுக்கொண்டே அதை வாசித்தவாறே பாடிய அதே ரஹ்மான், தலையில் வெண் தொப்பியுடன் சம்மணமிட்டுக் கொண்டே ஆர்மோனியத்தை வாசித்தவாறே கூட அஸ்லாம் துணை சேர்க்க Khwaja Mere Khwaja (ஜோதா அக்பர்) போன்ற சூஃபி வடிவ மெட்டுக்கள் சிலதைப் பாடித் தன் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார். குறித்த ஜோதா அக்பர் பாடல் மழை வேண்டிப் பாடுவது போன்றே பாடப்பட்டது என்று அவர் சொல்லிப் பாடிய போது அதுவரை ஆங்காங்கே மெல்லிய துளிகளாக துமித்த மழை மேகம் பாடல் முடியும் போது வெறிகொண்டு சுழற்றி அடித்தது. மழையில் நனைந்தாலும் இசை மழையை விடமாட்டோம் என்று அப்படியே கட்டுப் போட்டுக் கிடந்தது கூட்டம்.






அது மட்டும் போதுமா மீண்டும் நவீன உலகிற்குத் திரும்பிய இசைப்புயல் "முஸ்தபா முஸ்தபா' என்றும், பிளேஸ் புதுவிதமான ஒரு ராப் போட்டுக் கொண்டே பார்வையாளர் கடலில் இருந்து வர "அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே" என்றும் கலகலக்கினார். நிகழ்ச்சி முடிந்து ஒரு நாள் கடந்த நிலையிலும் முஸ்தபா முஸ்தபாவை என் காதே கதி என்று சுற்றிக் கொண்டு இருக்கின்றது.





ஒவ்வொரு பாடலுக்கும் விதவிதமான காட்சிகள் பின்னே விரிகின்றன. சில இடங்களில் பாடல்களுக்கு அணி சேர்த்த பாடகர்கள், பாடலாசிரியர் என்ற விபரம் வேறு. அத்தோடு தேவையான பாடல்களுக்கு உறுத்தல் இல்லாத நடன அமைப்புக்கள் அவை இந்திய நடனங்களில் இருந்து மேற்கேத்தேயம் வரை, எண்பதாயிரம் பேரையும் சம அளவில் எட்ட வைத்த ஒலித் துல்லியம், நீட்டி முழக்கும் பேச்சுக் கச்சேரிகள் இல்லதது இப்படி இந்த இந்த இசை நிகழ்ச்சியினை மெருகேற்றிய அம்சங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
மேடை நிகழ்ச்சி என்று வந்து விட்டாலே போதும் முன்னே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதில் வைத்த புத்தகத்தை ஒப்புவிக்கும் பாடகர்களை ஒழித்த பெருமை ரஹ்மான் காலத்திலாவது வந்ததே என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மேடை இசை நிகழ்ச்சி என்றாலே வழக்கமாக ஒலிப்பதிவு செய்த பாடலைக் குறித்த பாடகரை வைத்து மீண்டும் அச்சொட்டாகப் பாடவைப்பது என்ற கலாச்சாரத்தை இனியாவது இப்படியான நிகழ்ச்சிகளைப் பார்த்து மற்றவர்களும் குறிப்பெடுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒவ்வொரு பாடகனும் பாடகியும் அந்தப் பாடல்களை மனதில் இருந்து எழும் உணர்வாகப் பாடிக் கொண்டே அவற்றினை அனுபவித்துப் பாடியது வெகு சிறப்பு. ரஹ்மானின் வெற்றிக்குப் பின்னால் அவரோடு இசைக்கும் வாத்தியக் கலைஞர்களும் இருக்கின்றார்கள் என்று நேரே உறுதிப்படுத்தினார்கள் உறுத்தல் இல்லாத இசை கொடுத்த அந்த வாத்தியக்காரர்கள்.



போர்க்களக் காட்சி ஒன்று விரிகின்றது. பின்னே திரையில் ஆயிரம் ஆயிரம் படைகள். அதற்கு முன்னே நிஜமான படையணி ஒன்று நடுவே ரஹ்மான். பெரும் முரசறைதலோடு ஜோதா அக்பரின் Azeem-O-Shaan Shahenshah பாடலை அவர் பாடி அதையும் லாவகமாக 'வீரபாண்டிக் கோட்டையிலே மின்னல் அடிக்கும்" வேளையிலே என்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கித் தன் பாட்டுப் படையைத் திருப்பி விட்டார்.


மற்றவர்களை நேசியுங்கள், உலகத்தை ஒன்றாகப் பாருங்கள் என்று நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாகச் சொல்லியவறே இரண்டரை மணி நேரமாக வழங்கிய அந்த நிகழ்ச்சி முடியப் போகின்றது என்று ரஹ்மான் சொல்லவும் ரசிகக் கண்மணிகள் விடுவார்களா? மேலெழுந்து பரவியது தொடர்ச்சியான வாண வேடிக்கைகள் வின்ணில் பரவ ஜெய ஹோ என்ற தன் விருதுப் பாடலோடு வந்தே மாதரம் பாடலையும் இணைத்துக் கூட்டாகப் பாடிக் கூட்டத்தை அரை மனதோடு கலைய வைத்தார். மார்ட்டின் லூதர் கிங் இன் பொன்மொழிகளும் மகாத்மா காந்தியின் வாசசங்களும் திரைகளை நிறைத்தன.



be the change you wish to see in the world!

ரஹ்மான் வேட்டி கட்டிக் கொண்டு வந்திருக்கலாம், பொம்பிளைகள் பொட்டு வைத்து கும்மி அடித்திருக்கலாம், ரஹ்மான் இன்னும் நிறையத் தமிழ்ப்பாடல்களைப் பாடியிருக்கலாம் என்ற வழக்கமான விமோசனமில்லாத விமர்சனங்களும்(!) ஒலிக்காமல் இல்லை. ரஹ்மான் என்ற கலைஞன் தமிழைக் கடந்த பொதுவான இந்திய இசையின் அடையாளமாக மாறி எவ்வளவோ காலம் கடந்து விட்டது. இசைக்கு மொழி இல்லை என்பதை அந்த அரபிக் கடலோரம் ரசித்த ஹிந்திக்காரனும், ஜோதா அக்பர் பாட்டுக் கேட்டு ரசித்த தமிழனும் ஒத்துக் கொள்வான். ஏன் இந்த இரண்டு மொழிகளும் தெரியாமல் இசை மழையை அனுபவிக்க மட்டும் வந்த சில நூறு அவுஸ்திரேலியனும் உணர்ந்து கொள்வான். உண்மையான/நேர்மையான ரசிகனுக்கு அதுதான் இலக்கணம். ஆனால் இந்த அரைவேக்காட்டு விமர்சனங்கள் எல்லாம் கடந்து, புதிய குரல்களை நான் தேடிக் கொண்டே இருப்பேன், இசையை இன்னும் நான் தேடிப் படித்துக் கொண்டே இருப்பேன் என்று ஓடிக் கொண்டே இருப்பார் ரஹ்மான். ஒவ்வொரு வெற்றியாளனின் ரகசியமும் அதுதான் சாகும் வரை தேடுவார், ஓடுவர் ரஹ்மானைப் போல.

பதிவும் படங்களும் முன் அனுமதி பெற்று மீள் பிரசுரம் செய்யப்படவேண்டியவை.
video courtesy: senthilles1

Sunday, January 10, 2010

(பால்)"கோவா" - கேட்டதில் இனித்தது
















நேற்றுத்தான் எண்பதுகள் பாணி பாடலைப் பற்றிப் பேசி முடித்தால் இன்று இன்னொரு இன்னொரு இன்ப அதிர்ச்சி கோவா பாடல்களைக் கேட்ட பின்னர்.

ராஜ்கிரண், ராமராஜன் வகையறாப் படங்களில் ஒரு தெம்மாங்கு குத்தோடு களைகட்டும் ராஜாங்கம் படம் முழுக்க கோயில் மடை மாதிரி விரவியிருக்கும். அதே புத்துணர்வை "ஏழேழு தலைமுறைக்கும்" பாடலைக் கேட்ட போது மீண்டும் உணர்ந்தேன். வெங்கட்பிரபு, கார்த்திக் ராஜா, பவதாரணி, யுவன் ஷங்கர் ராஜா, ப்ரேம்ஜி ஆகியோர் கூட்டுச் சேர்ந்த பாடல் காட்டுக் கத்தலாக இல்லாமல் குலவைச் சத்தம் போல ரீங்காரிக்கின்றது. தமது தந்தையரின் கிராமத்துப் பெருமையோடு பாடம் இந்தப் பாடலின் இசையாகட்டும், பொருத்திய வரிகளாகட்டும் அக்மார்க் எண்பதுகளின் இளையராஜா ரகம். பாடலில் இணைத்த அத்தனை வாத்தியங்களுமே பாரம்பரிய இசையை விரவி நிற்கின்றமை இன்னொரு சிறப்பு. கண்ணை மூடிக் கொண்டே பாடலைக் கேட்டால் அப்படியே காலச்சக்கரம் எண்பதுகளுக்குப் பின்னோக்கிப் பயணிக்கின்றது. பாடலுக்கான இசை யுவன் ஷங்கர் ராஜா என்பதை முழுமையாக ஏற்க மறுக்கின்றது மனம். நிச்சயம் அண்ணன் கை கொடுத்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

முன்னர் கோழி கூவுது, கொக்கரக்கோ, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், சின்னவர் என்று கணக்கில்லாத படங்களில் கைகோர்த்த அண்ணன் தம்பி ஜோடியான இளையராஜா - கங்கை அமரன் குறித்த படங்களில் இசை விருந்தே படைத்திருந்தார்கள். இளையராஜாவோடு கங்கை அமரன் கூட்டுச் சேர்ந்த படப்பாடல்களை இன்று கேட்டாலும் ஒரு ஸ்பெஷல் விருந்தாக இருக்கும். அதே வரிசையில் அவர்களின் அடுத்த தலைமுறையாக வெங்கட் பிரபு - யுவன் ஷங்கர் ராஜா ஜோடியும் சேர்ந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதுவும் "கோவா" அதை ஆணித்தரமான நிரூபித்திருக்கின்றது.




Saturday, January 9, 2010

"பார்த்ததும் கரைந்தேனடா" - கேட்டதில் இனித்தது

















கடந்த வாரம் இசைத்தட்டு விற்கும் கடைக்குள் நுழைகின்றேன், "பார்த்ததும் கரைந்தேனடா..காதலில் உறைந்தேனடா" என்று சித்ராவின் குரல் ஸ்பீக்கர் வழியாக வந்து செவி வழி போய் நெஞ்சில் கலக்கின்றது. அந்தப் பாடல் ஒலித்து ஓயும் வரை கடையில் சீடிக்களை மேய்வது போல பாவ்லா காட்டி விட்டு, முடிந்த கணம் பாடல் இசைத்தட்டை வாங்கிக் காரில் போட்டுக் கொண்டே மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கின்றேன்.

"பார்த்ததும் கரைந்தேனடா" என்ற அந்தப் பாடல் யாதுமாகி என்ற திரைப்படத்திற்காக ஜேம்ஸ் வசந்தனின் இசையில் சித்ராவோடு, விஜய் ஜேசுதாஸ் இணைந்து பாடியது. புதிதாக வரும் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டோ, திரையில் பார்த்தோ தான் மனதுக்கு நெருக்கமாக வைக்க முடிகின்றது. ஆனால் கேட்ட கணத்தில் இப்படி உடனேயே ஊடுருவும் பாடல்களில் சென்னை 28 இல் வந்த "யாரோ யாருக்குள் இங்கு யாரோ" பாடல் வரிசையில் இந்தப் பாடலும் சேர்ந்து விட்டது. என்ன காரணம் என்று பார்த்தால் உடனேயே தீர்மானமாகச் சொல்லக் கூடியது இந்தப் பாடல்களில் அந்நியமில்லாத எண்பதுகளில் வந்த பாடல்களின் வாடை என்று தான் தெரிகின்றது.

இன்று ஒரு படத்திலேயே பட்டியல் போட்டுப் பார்க்கக் கூடிய அளவுக்குப் பாடகர்களின் எண்ணிக்கை வந்த பின்னர் சித்ரா போன்ற பழைய குரல்களை எப்போதாவது தான் புதுப்பாடல்களில் கேட்க முடிகின்றது. அதுவும் "பார்த்ததும் கரைந்தேனடா" என்ற இந்தப் பாடலில் எண்பதுகளிலே கோர்த்த மெட்டுப் போன்ற வகையறாவுக்குச் சித்ராவின் குரல் எடுப்பாகப் பொருந்துகின்றது. கூடவே விஜய் ஜேசுதாசுக்குப் பதில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஜேம்ஸ் வசந்தனிடம் மெல்லிசையாகக் கொடுக்கக் கூடிய பாடல்கள் இன்னும் நிறைய தன் நெஞ்சிருப்பில் வைத்திருப்பார் போல. ஹாரிஸ் ஜெயராஜ் அரைத்த மாவையே அரைத்து வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்தாலும், ஜேம்ஸ் வசந்தன் கவனிக்கப்படத்தக்க அளவில் இசையமைத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு சுப்ரமணியபுரம், பசங்க வரிசையில் "யாதுமாகி" பாடலும் சேர்ந்து கொள்கிறது. மனுஷருக்கு இளையராஜா காலத்தில் இருந்து விடுபடமுடியாத ஆசை இருப்பதை இங்கே நான் பகிரும் பாடலே சாட்சியமாக அமைகின்றது.

சமீபகாலமாக அதிகம் காதல் பாடல்களில் பயன்படுத்தப்படாத தபேலா வாத்தியத் துள்ளலும் எடுப்பாக இந்த எண்பதுகள் மெட்டை அலங்கரித்து மெருகூட்டுகின்றது. உதாரணமாக "கேட்கும் போது இல்லை என்று ஏங்க வைக்கிறாய்" என்று விஜய் ஜேசுதாஸ் முடிக்க நினைக்க வந்து ஒட்டிக் கொள்ளும் தபேலாவின் தாளக்கட்டு அருமை.
ஆனால் என்ன, பாடல் ஆரம்பிக்கும் விதமும், இடையிசையில் பாவித்திருக்கும் நவீன வாத்தியக்கருவிகள் பாடலின் ஓட்டத்துக்கு அந்நியமாக இருக்கின்றன. இருந்தாலும்

பார்த்ததும் கரைந்தேனடா
காதலில் உறைந்தேனடா
கேட்டுக் கொண்டே இருப்பேனடா...



Monday, January 4, 2010

ஏ.ஆர் ரஹ்மான் வழங்கும் உலகின் முதல் இலவச இசைவிருந்து

Sydney Festival 2010 என்ற வருடாந்திர நிகழ்வின் அதிதிக் கலைஞராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் நாற்பது கலைஞர்களை அவுஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் Parramatta என்ற பிராந்தியத்தில் நடாத்த இருக்கும் மாபெரும் இசை நிகழ்வு வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஆரம்பமாக இருக்கின்றது.

"அமைதிக்கான என் இசை விருந்து" என்று ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இந்த இசை நிகழ்வு குறித்துப் பேட்டி அளித்ததோடு, அவுஸ்திரேலியாவில் வாழும் பல்லின மக்களின் சகோதரத்துவத்திற்கான அடையாளமாக இந்த இசை நிகழ்ச்சியை அமைக்கவிருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்.

நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் முதல் பெரும் நகராக சிட்னியும் அதற்கு அடுத்த பெரு நகராக பரமற்றா பகுதியும் விளங்கி வருகின்றது. இந்த பரமற்றா நகரின் மையமாக அமைந்திருக்கும் பெரும் பூங்காத் திடலின் வெட்ட வெளி அரங்கிலேயே நகர சபை ஏற்பாட்டில் முழுமையான இலவச நிகழ்ச்சியாக இந்த இசை விருந்து இடம்பெற இருக்கின்றது.

இந்திய சூப்பர் ஸ்டார் என்ற அறிமுகத்துடன் உள்ளூர் ஊடகங்களின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் வருகைக்கான வரவேற்புக்களும், நிகழ்வு குறித்த விளக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கூடவே இந்தப் பிராந்தியத்தின் ஐந்து நட்சத்திர விடுதிகள் ரஹ்மானின் வருகையை முன்னுறுத்தி தமது விளம்பரங்களைச் செய்து வருகின்றன. நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் போக்குவரத்து அதிகார சபை முன் கூட்டியே இந்த விழாவுக்கு வருவோர் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து ஒழுங்குகளை அறிவித்து வருகின்றது.குறித்த நிகழ்வுக்காக நியூசவுத்வேல்ஸ் ரயில்வே இலாகா மேலதிக ரயில்சேவையை ஒழுங்கு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய வரலாற்றில் முன்னெப்போதும் ஒரு ஆசிய நாட்டவருக்கு இவ்வாறான பெரும் எடுப்பிலான முன்னேற்பாடுகளோடு கெளரவமளிப்பது பெருமைக்குரிய விஷயம.
இந்த நிகழ்வு குறித்த மேலதிக விபரங்களை அவ்வப்போது இந்தப் பதிவில் சேர்த்துக் கொள்கின்றேன்.

மேலதிக இணைப்புக்கள்
Sydney Festival 2010

Parramatta Park