

சிட்னியில் இயங்கும் Symphony Entertainers என்ற அமைப்பு முன்னர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை அழைத்து வந்து ஒபரா ஹவுஸில் அவருக்கான உச்சபட்ச கெளரவத்தையும் நேர்த்தியானதொரு இசை நிகழ்ச்சியையும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தியிருந்ததை இங்கே சொல்லியிருக்கின்றேன். அந்த நிகழ்வு கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுக்கு எப்படியொரு மணிமகுடமாக அமைந்ததோ அதேஅளவு கெளரவத்தை இசையுலகில் இத்தனை வருடங்களை ஊதித்தள்ளிய வாணி ஜெயராமுக்கும் நேற்றைய நிகழ்வு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் இன்றைய தவிர்க்கமுடியாத பாடகர்களில் ஹரிச்சரண், சின்மயி, விஜய் ஜேசுதாஸ் கூட்டணியோடு வாணி ஜெயராமும் வருகின்றார் என்றபோது ஓடும் புளியம்பழமும் போட எட்ட நிற்குமே இந்தக் கூட்டணி என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த நினைப்பைப் பொய்க்க வைத்தது இந்த நிகழ்ச்சியை அமைக்கவேண்டும் என்று தயாரிப்புப் பணியில் முதன்மையாகச் செயற்பட்ட விஜய் ஜேசுதாஸின் சிறப்பான கூட்டணி.
ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சி என்றாலே கஷ்டப்பட்டுத் தான் காருக்குள் ஏறிப்போவேன். ஆனால் இது இஷ்டப்பட்ட நிகழ்ச்சி எனவே மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டே இசை நிகழ்வு நடந்த ஹில்ஸ் செண்டருக்குச் சென்றேன். நிகழ்ச்சி சம்பிரதாயப்படி 20 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தது. "கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்" என்ற ரெட்டைவால் குருவி படப்பாடலை கீபோர்ட்டும், சாக்ஸபோன், கிட்டார் சகிதம் சென்னை, கேரளா இசைக்குழுக் கூட்டணி இசைக்க ஆரம்பித்ததும் அந்த மூலப்பாடலில் மோகன் மனதில் நுழைந்த ராதிகா போல மனசு அப்படியே இசைக்கூட்டுக்குள் தாவித் தன்னைத் தயார்படுத்தியது. விஜயாள் என்ற குட்டிப்பிள்ளை வந்திருந்த பாடகர்களை தன் அளவில் குட்டியாக அழகு தமிழில் அறிமுகப்படுத்திவிட்டுப் போக சின்மயி அரங்கத்தில் நுழைந்தார். "ஈழத்தமிழர்களோட இசையுணர்வை நான் எப்பவுமே மெச்சுவேன்" என்ற தோரணையில் அவர் ஆரம்பிக்க "ஆஹா வழக்கமான பஞ்ச் டயலாக்கா" என்று நான் நினைக்க, "நான் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவள், எங்களுக்கும் இலங்கைக்கும் நிலத்தால் நெருக்கம் அதிகம், இலங்கையில் எங்க தமிழர்கள் கொல்லப்பட்டதையும், கஷ்டப்பட்டதையும் அறிந்து நாங்க வேதனைப்பட்டோம், பட்டுக்கிட்டிருக்கோம், என்னோட முதற்பாடலே இலங்கைத் தமிழர்களோட கதைக்கருவோடு வந்த "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தின் பாடல் என்று சொல்லியவாறே ஒரு நிமிட மெளன அஞ்சலியைப் பகிர்ந்தவாறே சின்மயி பாடியது நெகிழ வைத்தது. சின்மயி சிட்னிக்கு வருவது இது இரண்டாவது முறை, கடந்த நிகழ்ச்சியில் அவர் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற தன்னுடைய முதற்பாடலைப் பாடாத ஆதங்கத்தில் இருந்தேன். அதை ஈடுகட்டவோ என்னமோ அவரை இரண்டாவது தடவை சிட்னி முருகன் இறக்கியிருக்கின்றான். வைரமுத்து நேசித்து இழைத்த வரிகளை சின்மயி வெறும் குரலைக் கொடுத்தா பாடினார் உணர்வைக் குழைத்தும் அல்லவோ.
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!
இந்த வரிகளைப் பாடும் போது சின்மயி கண்டிப்பாக உள்ளுக்குள் பொருளுணர்ந்து அழுதிருப்பார், பார்த்துக்கொண்டிருந்த நம்மைப் போல.

"என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்" என்று ஒரு குரல், அரங்கத்தின் இண்டு இடுக்கெங்கும் வந்திருந்த கூட்டம் அவரைத் தேட அரங்கத்தின் பின் வாயிலில் இருந்து "தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு" என்று பாடிக்கொண்டே வந்தார் விஜய் ஜேசுதாஸ். ஒபரா ஹவுசில் நடந்த இசை நிகழ்ச்சிக்குத் தந்தையோடு வந்து கொஞ்சம் அடக்கமாகவே இருந்த பையன் இந்த முறை தன்னோடு இரண்டு இளசுகளையும் கூட்டி வந்ததால் குஷி மூடில் இருந்ததை நிகழ்ச்சி தொடங்கி முடியும் வரை காண முடிந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளமைக்குரலின் எச்சம் எஸ்.பி.பி.சரணிடம் இருந்தாலும் அது மட்டுமே போதும் என்று அவர் இருந்து விட்டார். இதுக்கு இது போதும் என்றோ என்னமோ திரையிசையும் அவருக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பையே கொடுத்திருந்தது. ஆனால் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற மேதையின் மகன் என்பதை விட, கடுமையான விமர்சகரின் மகனாகப் பிறந்து விட்டுக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடமுடியாது என்பதை விஜய் ஜேசுதாஸ் உணர்ந்திருப்பார் என்பதை அவருக்கான பாடல்கள் மட்டுமல்ல, தந்தையின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவர் பாடிச் சிறப்பிப்பதிலும் உணரலாம். விஜய் ஜேசுதாஸுக்கு, சென்னை 28 இல் வந்த "உன் பார்வை மேலே பட்டால்" பாடலுடன் தனக்குக் கிடைத்த பாடல்கள் சிலவற்றைப் படித்தாலும் பெரும்பொறுப்புத் தன் தந்தை வராத வெற்றிடத்தை நிரப்புவது. அதை அவர் சிறப்பாகவே செய்தார்.

"ஹாய் சிட்னி" என்று ஆர்ப்பாட்டமாகக் களமிறங்கிய ஹரிச்சரண், சிட்னி என்றால் யுத்துக்கள் கொட்டிக் கிடக்கும் சீமை என்றோ என்னமோ முதலில் இளசுகளைக் குறிவைத்துத் தான் சிக்ஸர் அடித்தார், பின்னர் போகப் போக நிலமையை உணர்ந்திருப்பார். சிட்னிக்கு முதன்முதலில் வரும் பாடகர்கள் போடும் தப்புக்கணக்கு இதுதான், வெளிநாடு என்றால் ராப், பாப், பப்பரபப்ப வகையறாக ரசிகர்கள் தான் அதிகம் என்று (அல்லது எனக்குத்தான் வயசு போட்டுதோ ;-))
ஹரிச்சரணின் ஸ்பெஷாலிட்டி, கொடுத்த பாட்டை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவிக்காமல், அந்தப் பாடலின் ஆரம்பத்தில் மெல்ல மெல்லத் தானே ஆலாபனைகளை இட்டுக்கட்டிப் பின்னர் மூலப்பாடலுக்குத் தாவி அங்கேயும் ஜாலம் செய்து பின்னர் செஞ்சரி அடித்து விட்டுக் களம் திரும்பும் ஆட்டக்காரன் போல நிதானமாகப் பாடலை இறக்கி முடிக்கும் வல்லமை கைவரப்பெற்றிருக்கின்றார்.
"கலைவாணியே உனைத்தானே அழைத்தேன்" என்று விஜய் ஜேசுதாஸ் பாட, அரங்கத்துக்கு வந்த வாணி ஜெயராம் கூப்பிய கரங்களுடன். வாணி ஜெயராமோடு ஜோடிகட்டிப் பாடியவர்களில் கே.ஜே.ஜேசுதாஸ் தான் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர் என்பது என் கருத்துக்கணிப்பு. இன்னொரு அல்ல மேலும் இரண்டு ஒற்றுமையைக் கண்டேன். ஒன்று மனிதர்களை நேசியுங்கள் என்று மனித நேயக்கருத்தை அழகாக வெளிப்படுத்திவிட்டே தன் கச்சேரியை ஆரம்பித்தது, இன்னொன்று இப்படியானதொரு இசை நிகழ்ச்சி தன் நீண்ட நெடிய இசைவாழ்வில் பத்தோடு பதினொன்று என்று ஒப்புக்குப் பாட்டு நிகழ்ச்சி வைக்காமல், ஒரு அர்ப்பணிப்போடு பள்ளியில் கற்றதை வீடு வந்து ஆசையாகத் தன் பெற்றோரிடம் அழகாகப் ஒப்புவித்து முறுவலிக்குமே சின்னக்குழந்தை? அந்தப் பெரிய மனசு வாணி ஜெயராமிடம் இருந்ததை நிகழ்ச்சி முடியும் வரைக் காணமுடிந்தது. "இன்னும் வருவேன்" என்று சொல்லிக்கொண்டே ஐந்து மணி நேர இசை நிகழ்வில் இதைத் தொடர்ந்தார்.
"ஒரு காலத்தில் இலங்கை வானொலியைக் கேட்டுச் சங்கீதம் கற்றுக்கொண்டவள், Binaca Geet Maala என்ற ஹிந்தித் திரைப்பாடல் வரிசை நிகழ்ச்சியைப் பாடகியாக வருவதற்கு முன்னர் நேசித்துக் கேட்டவள், 1971 ஆம் ஆண்டு வஸந்த் தேசாயின் இசையில் Guddi என்ற ஹிந்தித் திரைப்படத்துக்காக முதலில் பாடி அந்தப் படத்தின் "Bole Re Papihara" என்ற பாடலை இதே Binaca Geet Maala திரைப்பாடல் நிகழ்ச்சியில் கேட்ட போது வாய்விட்டு அழுதேன்" என்று வாணி ஜெயராம் சொன்னபோது நெகிழ்வோடு உணர முடிந்தது. இந்தப் படத்தில் குல்ஸார் எழுதிய மொத்தம் மூன்று பாடல்கள் ஆனால் "Bole Re Papihara"மற்றும் Hum Ko Manki Shakti Dena ஆகிய பாடல்கள் தான் படத்தில் வந்தது என்று சொன்னதோடு நிகழ்ச்சியில் "Bole Re Papihara"பாடலையும் சேர்த்துக் கொண்டார். தென்னிந்தியாவில் இருந்து ஹிந்தித் திரையுலகம் போய்ப் பாடிய முதற்பாடகி வாணி ஜெயராம் என்று சின்மயி சொன்ன புகழாரத்தை ஏற்கிறோம், ஆனால் எனக்கென்னமோ முன்னரேயே தென்னகக் குயில்கள் சென்ற ஞாபகம்.
வாலி எழுதிய "மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடலோடு ஆரம்பித்தவர், "மேகமே மேகமே", "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" "நானே நானா" (வாலி எழுதியது) என்று அவரின் தனித்துவமான தனிப்பாடல்களை எல்லாம் அள்ளிச் சேர்த்த மகிழ்ச்சியை விட எதிர்பாராத பரிசு தானே எப்போதும் உச்சபச்ச சந்தோஷத்தைக் கொடுக்கும்? அப்படி அமைந்தது தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் அவர் பாடி "என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது" பாடலைப் பாடிய போது கிட்டியது. இப்படியான மேடைக்கு அந்நியமான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடிய வகையில் கேளடி கண்மணி படத்தில் வந்த "தென்றல் தான் திங்கள் தான்" பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் முன்னர் ஒபரா ஹவுஸ் நிகழ்ச்சியில் பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
ஒவ்வொரு பாடல்களையும் எழுதியவர், இசையமைப்பாளர் என்று சொல்லி வாணி ஜெயராம் பாடியது இதுவரை நான் மேடை எதிலும் காணாதது. வாணி ஜெயராமே ஒரு நல்ல கவிஞர், அப்படி இருக்கையில் எப்படிப் பாடலாசிரியரைத் தவிர்ப்பார்? வாணி ஜெயராம் தான் கவிதை எழுதுவேன் என்றதோடு பகிர்ந்த கவிதைகளில் "கவிதை" இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் இப்படிக் கவிஞர் பெயர் சொல்லிப்பாடியவர் "என்னுள்ளில் எங்கோ" என்ற பாடலைக் கங்கை அமரன் எழுதினார் என்ற போது எனக்குப் பின் வரிசையில் இருந்தவர் உணர்ச்சிவசப்பட்டுப் பக்கத்தில் இருந்தவரிடம் "கங்கை அமரன் இளையராஜாவின்ர son" என்றபோது கங்கையைத் தேடினேன் குதிக்க.

ஒரு பாடகிக்கு ஏராளம் நல்ல நல்ல பாடல்கள் வாய்க்கலாம் ஆனால் பாடகி என்ற கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுக்கும் நல்வாய்ப்பு எத்தனை பாடகிகளுக்கு வரும்? அப்படி அமைந்த வாணி ஜெயராமின் முத்திரை "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்" என்ற பாடலைப் பாடும் போது
"காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்"
என்ற வரிகளை அவர் அழுத்திப் பாடியபோது இத்தனை நாளும் இவ்வளவு தூரம் அனுபவிக்காமல் கற்பனை சந்தோஷத்தில் இருந்த உணர்வில் கண்ணதாசனை நினைக்க, வாணியோ கண்ணதாசனைப் பற்றிப் பேசினார்.
"நாளைக்கு உங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன் நாளை பத்திரிகையில் வரும் "என்று குழந்தை உள்ளத்தோடு என்னிடம் சொன்ன கண்ணதாசன் பாடகிகள் என்றளவில் என்னைப் பற்றி மட்டுமே தனது "சந்தித்தேன் சிந்தித்தேன்" தொடர் கட்டுரையில் எழுதியிருக்கின்றார். "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்" இதை எங்கே கேட்டாலும் அங்கே நின்று முழுப்பாடலையும் கேட்டுத்தான் அங்கிருந்து விலகுவாராம் கண்ணதாசன். எனக்கு வாசிக்கப் பிடிக்கும் என்பதால் தான் எழுதிய 43 நூல்களைக் கொடுத்திருக்கின்றார் என்று கண்ணதாசனைப் புகழந்தார்.
"அபூர்வ ராகங்கள்" படத்தின் பாடல் ஒலிப்பதிவு நடக்கும் நாட்களில் காலையில் சீக்கிரமாகவே பாடற்பதிவு ஸ்டூடியோவுக்குப் போய் விட்டோம் என்று நினைத்தால் எங்களுக்கு முன்னார் வெகு சீக்கிரமாவே எம்.எஸ்.விஸ்வநாதன் வந்திருப்பார். அவ்வளவுக்கு பங்சுவாலிட்டி நிறைந்தவர்களோடு பணியாற்றியதெல்லாம் மறக்கமுடியாத காலங்கள், என்னோட முதல் இசையமைப்பாளர் வஸந்த் தேசாய் முதற்கொண்டு பணியாற்றிய இசையமைப்பாளர்கள் வெறும் இசையை மட்டுமே எனக்குப் போதிக்கல" என்று அந்தப் பொற்காலத்தை நினைவுபடுத்தினார் வாணி ஜெயராம்.
"அந்தமானைப் பாருங்கள் அழகு" என்று விஜய் ஜேசுதாஸோடு வாணி ஜெயராம், கொடுத்த ஜேசுதாஸ் - வாணி ஜெயராம் பாடல்கள் எல்லாமே முத்துக்கள். குறிப்பாக "சிவாஜி கணேசன் நினைவு நிகழ்வுக்காக வை.ஜி.மகேந்திரன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதன்முதலில் பாடிவிட்டு இப்போது படிக்கிறேன்" என்றவாறே விஜய் ஜேசுதாஸ் வாணியோடு பாடிய "கங்கை யமுனை இங்குதான் சங்கமம்" என்ற இமயம் படப்பாடல் சொர்க்கம். ஒருப்பக்கம் ஜேசுதாஸ் பாடல்களை தனயன் பாட, இன்னொரு பக்கம் "மழைக்கால மேகம் ஒன்று" (வாழ்வே மாயம்)," ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்" (நீயா) போன்ற பாடல்களை ஹரிச்சரணோடு பாடியதும் இணையாக ரசிக்க வைத்தது.
"உனக்கு கல்யாணம் ஆச்சா"என்று வாணி கேட்க
"இன்னும் இல்லை" என்று ஹரிச்சரண் சொல்ல
"இளமை ஊஞ்சலாடுகிறது" என்று சொல்லி நிறுத்தி விட்டு "அடுத்துப் பாடப்போற படம் பேர் சொன்னேன்" என்று குறும்பாகச் சொல்லி
"ஒரே நாள் உனை நான்" என்ற பாடலை வாணி ஜெயராம், ஹரிச்சரணோடு பாடியபோது அந்தச்
"சங்கமங்களில் இதம் இதம்" ஆக மனது இருந்தது.
"கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்" என்ற பாடலுக்கு ஹரிச்சரண் ஜதி சேர்க்க, வாணியின் வயதை மறைத்தது குரல்.
"மேகமே மேகமே பாடல் சிவாஜி கணேசன் சாருக்குப் பிடிச்ச பாட்டு, அந்தப் பாட்டு வந்த நாட்களில் இரவில் இந்தப் பாட்டைக் கண்டிப்பாகக் கேட்டுவிட்டுத் தான் தூங்குவார்" என்றார் வாணி.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, சங்கர்-கணேஷ், கங்கை அமரன் என்று தேடித் தேடி ஏறக்குறையத் தன்னுடைய எல்லாப்பாடல்களையும் பாடி அழகு சேர்த்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்காகப் பாடிய "சுகம் சுகம்" (வண்டிச்சோலை சின்ராசு) பாடலையும் இணைத்திருக்கலாமோ?
விஜய் ஜேசுதாஸ், சின்மயி, ஹரிச்சரண் கூட்டணி சேர்ந்தால் அடிப்பொளி தான், கலகலப்பாகப் பேசும் கலையும் சபையோரோடு அந்நியப்படாத நிகழ்ச்சி வர்ணனையும் சின்மயி இன் சொத்து. ஹரிச்சரணுக்கு வரமாக அமைந்த யுவனின் பாடல்கள் சமீபத்திய "ராசாத்தி போல" பாடல்களில் இளசுகளோடு பழசுகளும் இணைந்து தாளம் தட்டி ரசித்தது.


"லேசாப்பறக்குது" என்ற வெண்ணிலா கபடிக்குழு பாடலின் ஹிட் ஐத் தொடர்ந்து கார்த்திக், சின்மயி காம்பினேஷன் இருக்கணும் என்று குள்ளநரிக்கூட்டம் படத்திலும்"விழிகளிலே விழிகளிலே" பாடலை கடம் புகழ்விக்கு விநாயக்ராம் மகன் செல்வகணேஷ் "விழிகளிலே விழிகளிலே" பாட்டுக்கொடுத்ததாகச் சொல்லி ஹரிச்சரணோடு பாடினார். "லேசாப்பறக்குது" பாடல் மேடையில் லேசாகப் பாடமுடியாத சங்கதி, சின்மயி அதை மூலப்பாடலில் மிகவும் சன்னமாகப் பாடிச் சிறப்பித்திருப்பார். அதை ஈராயிரம் பேர் கொண்ட சபையில் பாடுவது சவால், அதைச் சமாளித்துப் பாடினார்.
"சத்யம் தியேட்டரில் வைத்து எனக்கு ஒரு பாட்டு சான்ஸ் கொடுங்களேன்" என்று ஹாரிஸ் ஜெயராஜிடம் கேட்க அவர் கொடுத்த "வாராயோ வாராயோ காதல் கொள்ள" ஆதவன் படப்பாடல் எனக்கு முதற்பாடல் கொடுத்த புகழுக்கு மேலாக விருதுகளைக் கொடுத்துப் புகழ் கொடுத்தது என்றவாறே ஹரிச்சரணோடு பாடினார், மேடையில் வைத்து இன்னொரு விருது கொடுத்திருக்க வேண்டும். அவ்வளவு அழகு, பாட்டைச் சொன்னேன் சார்.
விஜய் ஜேசுதாஸ் உடன் "சஹானா சாரல் தூவுதோ" பாடலைப் பாடுமுன் "நீங்க தலைவா என்று போடும் சத்தம் சென்னை வரை கேட்கணும்" என்று சின்மயி தன் தலைவர் பற்றை வெளிப்படுத்தினார். தொடர்ந்து கிளிமாஞ்சாரோ பாடலும் இதே கூட்டணியில். பெரியம்மா பையன் உதித் நாராயணணை விட விஜய் ஜேசுதாஸை வைத்தே அந்த சஹானா சாரல் தூவுதோ டூயட் பாடலையும் ரஹ்மான் கொடுத்திருக்கலாம் என்ற அளவுக்கு இருந்தது விஜய் ஜேசுதாஸின் குரலினிமை.
ஹரிச்சரண்-விஜய் ஜேசுதாஸ்- சின்மயி மூன்றுபேரும் சேர்ந்து அன்றிருந்து இன்றுவரை பாடல்களைக் கோர்த்துக் கொடுத்த unplugged என்ற தொகுப்பில் ஏதாவது ஒரு தீம் ஐ முன்னிலைப்படுத்தியிருக்கலாம். " தாய்க்கு நீ மகனில்லை"(உள்ளத்தில் நல்ல உள்ளம்) என்ற தியாகம் ததும்பும் பாடலோடு திடீரென முளைத்த "கனவில் வடித்து வைத்த சிலைகள்" (விழியே


வழக்கமாக இந்தியாவில் இருந்து வரும் இசைக்குழு கையோடு நாலைந்து சீடிக்களையும் கொண்டு வரும். கீ போர்ட் வாசிப்பவரின் கையசைப்பு மட்டும் இருக்கும் ஆனால் என்ன அதிசயம் பின்னணியில் இசை இருக்கும். இப்படியான அற்புதங்கள் எதுவுமில்லாமல் தேர்ந்ததொரு இசைக்குழு கூடவே பயணித்தது சிறப்பு. குறிப்பாகப் புல்லாங்குழலையும் சாக்ஸபோனையும், இன்ன பிற குழல் வாத்தியங்களையும் நொடிக்கொரு தடவை மாற்றி மாற்றி வாசித்த அந்த சகலகலா இளைஞனுக்குப் பாராட்டுக்கள். இவ்வளவு இருக்கும் போது நாமும் நல்லா இயங்கணும் என்ற எண்ணத்தில் அரங்கத்தின் ஒலியமைப்பும் பங்கு போட்டுக்கொண்டது.

மைக்கை ஒருகையில் வைத்துக் கொண்டு மற்றக்கை அசைத்து தன் தந்தையை அழைக்கிறாள். அவரும் வருகிறார். தந்தை விஜய் ஜேசுதாஸ், அந்தக் குட்டி அவரின் மூன்று வயது மகள் அமயா. அந்தச் சுட்டிக் குழந்தைதான் இடைவேளைக்குப் பின்னான நிகழ்ச்சியின் ஹீரோயின். தன் தந்தையோடு "அன்னாரக்கண்ணா வா" பாடலைப்பாடுவதும் அவர் நிறுத்த தானும் நிறுத்துவதும், தந்தை பாட மகள் ஆடுவதுமாக ஒரே கொட்டம் தான். சும்மாவா புலிக்குப் பிறந்த பேத்தி ஆயிற்றே.
சிட்னியில் நடந்த இந்த நிகழ்ச்சி ஐந்து மணி நேரங்களைக் கடந்தது, வாணி ஜெயராம், விஜய் ஜேசுதாஸ், சின்மயி, ஹரிச்சரண் என்று வந்த பாடகர்கள் தம் முழுமைக்குமான வெளிப்பாட்டைக் காட்டிச் சிறப்பித்தது. அந்த வகையில் இது மறக்கவொண்ணா இசை விருந்து அவர்களுக்கும் எங்களுக்கும்.
