Pages

Sunday, June 29, 2014

இயக்குனர் இராம நாராயணன் திரைப்பாடல் திரட்டு


இயக்குனர் இராம நாராயணன் குறித்த சிறப்பு வானொலிப்பகிர்வொன்றை நமது ATBC வானொலிக்காகத் தயாரித்து வழங்கியிருந்தேன். இந்தத் தொகுப்பில் இராம நாராயணனின் முக்கியமான சில படங்களில் இருந்து பாடல் தொகுப்போடு 1 மணி நேரம் 18 நிமிடங்கள் வரை அமைகின்றது. இப்பாடல்களை நீங்களும் கேட்டு மகிழ இதோ அந்த ஒலிப்பதிவைப் பகிர்கின்றேன்.




Download பண்ணிக் கேட்க





Download பண்ணிக் கேட்க

தொகுப்பில் இடம்பெற்ற பாடல்கள்
1. ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
படம்: சிவப்பு மல்லி
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்

2. காளிதாசன் கண்ணதாசன்
படம்: சூரக்கோட்டை சிங்கக்குட்டி
பாடியவர்கள்: பி.சுசீலா,ஜெயச்சந்திரன்
இசை: இளையராஜா

3. வாலைப் பருவத்திலே
படம்: கண்ணே ராதா
பாடியவர்கள்: பி.சுசீலா,எஸ்.பி.சைலஜா
இசை: இளையராஜா

4. காட்டுக்குள்ளே காதல் கிளியைக் கண்டேன்
படம்: கரிமேடு கருவாயான்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

5. வெண்ணிலா முகம் பாடுது
படம்: ஜோதி மலர்
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்

6.அழகிய பொன்வீணையே என்னோடு வா
படம்: காகித ஓடம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்

7. அழகான புள்ளிமானே
படம்: மேகம் கறுத்திருக்கு
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: மனோஜ்-கியான்

8. செந்தூரக் கண்கள் சிரிக்க
படம்: மணந்தால் மகாதேவன்
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்

9. வண்ண விழியழகி வாசக் குழலழகி
படம்: ஆடி வெள்ளி
பாடியவர்கள்: சித்ரா குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்


10.பாப்பா பாடும் பாட்டு
படம்: துர்கா
பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசை: சங்கர்-கணேஷ்

11.யக்கா யக்கா யக்கா
படம்: செந்தூரதேவி
பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசை: சங்கர்-கணேஷ்

12.விடுகதை ஒன்று
படம்: ஒரு விடுகதை ஒரு தொடர்கதை (இராம நாராயணன் தயாரிப்பு, அவரின் நண்பர் எம்.ஏ.காஜா இயக்கம்)
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்

Monday, June 23, 2014

இராம நாராயணன் ஒரு சினிமாத் தொழிற்சாலை


தமிழ் சினிமா இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன் காலமான செய்தி வந்திருக்கிறது.

இராம நாராயணனைப் பொதுவாகவே தேவர் பிலிம்ஸ் இன் நீட்சியாகவே பார்க்கும் அளவுக்கு அவர் கொடுத்த படங்களில், பரவலாக சினிமா ரசிகனுடைய கவனத்தை ஈர்த்தவை பிராணிகளை வைத்து அவர் இயக்கிய துர்கா போன்ற படங்கள். 


உலக சினிமாத்தரம் என்று இன்று ஒருவகையான கெளரவ முத்திரையைப் தமக்குத் தாமே சூட்டித் திரியும் ரசிக மகாஜனங்களைத் தாண்டி, தியேட்டருக்கு வந்து பார்க்கும் அடிமட்டத்து உழைக்கும் வர்க்கத்திலிருந்து, சிறுவர், குடும்பத் தலைவிகள் ஈறாக அனைவரையும் திரையரங்குக்கு இழுக்கும் வகையில் படங்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமா உலகில் இயங்கிய அவர் சினிமாவில் தொடாத கதைகளே இல்லை எனுமளவுக்கு அவரின் படைப்புலகம் பரந்தது. 
எண்பதுகளிலே தொழிலாள வர்க்கத்தின் குரலாக, சமூக நீதி சார்ந்த தொனியில் ஒலித்த அவரின் சிவப்பு மல்லி, இது எங்கள் நாடு போன்ற படங்கள். இன்றைய விளம்பர யுகத்தில் விருதுக்கு ஏற்றி வைக்கக்கூடிய அளவுக்கு நடுத்தர வர்க்கத்தின், ஏழைகளின் பாட்டை முன்னுறுத்தி எடுத்த சுமை, சோறு போன்ற படங்கள். இவற்றைப் பார்க்கும் போது இராம நாராயணனின் இன்னொரு பரிமாணம் புரியும்.

முன் சொன்ன படங்கள் வழியாக பொருளாதார ரீதியாகப் பெரிதாகச் சாதிக்க முடியாத சூழலில் அவர் நகைச்சுவைப் படங்களைக் கொடுக்கத் தொடங்கினார். மன்மத ராஜாக்கள் போன்ற படங்களின் வழியாக நகைச்சுவை சார்ந்த படங்களை இயக்கிய போது
மணந்தால் மகாதேவன், சகாதேவன் மகாதேவன் போன்ற படங்கள் அவருக்கு உச்ச பட்ச வெற்றியைக் கொடுத்தன.

என்பதுகளிலே படம் கொடுத்துப் பரவலாக அறியப்பட்ட இயக்குனர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் தங்கி நின்று படம் பண்ண வேண்டிய சூழலைக் கண்டிப்பாகச் சந்தித்திருப்பர். ஆனால் இராம நாராயணன், விசு போன்ற மிகச் சில இயக்குனர்களே இளையராஜா இசை கொடுத்த படங்களை இயக்கியிருந்தாலும் அதில் மட்டும் தங்கியிராது தனித்து வெற்றியைக் கொடுத்துச் சாதித்தவர்கள்.
சங்கர் கணேஷ் இசை இரட்டையர்கள் நிறையக் கொடுத்த படங்கள் இராம நாராயணனின் படங்களாகத் தானிருக்கும். அது போல சங்கர் கணேஷ் இருவரும் பிரிவு ஏற்பட்டுத் தனித்தனியாக இசையமைத்த வேளை இருவருக்கும் மாறி மாறித் தனது படங்களில் வாய்ப்புக் கொடுத்திருந்தார்.

"தங்கர்பச்சனுக்கும் இராம நாராயணனுக்கும் என்ன வித்தியாசம்?
முன்னவர் மனிதர்களை மிருகங்களைப் போல வதைத்து எடுப்பார், பின்னவர் மிருகங்களை மனிதர்களாக்கிப் படம் எடுப்பார்" என்று சாரு நிவேதிதா எழுதியது ஞாபகம் வருகிறது. நகைச்சுவைப் படங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருந்த இராம நாராயணன் அடுதுக் கையில் எடுத்தது மிருகங்களும் சிறுவர்களும், கூடவே சாமிப்படங்கள். அப்போது சுட்டிக் குழந்தையாக பேபி ஷாம்லியின் சினிமா வரவு இராம நாராயணனுக்கும் பேருதவியாக அமைந்திருக்கும். 
முன்னர் இவர் பக்திப் படங்களைக் கொடுத்திருந்தாலும்
ஆடி வெள்ளி படத்தின் வெற்றி தான் இவருக்கு பக்திப் படங்களைத் தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என்ற பலத்தைக் கொடுத்திருக்க வேண்டும். 
அதன் தொடர்ச்சியாக அவர் இயக்கிய படங்களில் துர்கா, தைப்பூசம், செந்தூரதேவி, ஈஸ்வரி போன்ற படங்கள் பரவலான ஈர்ப்பை அப்போது பெற்றவை அதையும் தாண்டி நிறையப் படங்கள் இதே பாணியில் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். 

அம்மன் படங்களென்றால் இராம நாராயணன் தான் என்னுமளவுக்கு 
ராஜ காளியம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிக் குவித்திருக்கிறார்.

எனக்குத் தெரிந்து ஒரே கட்சியில் தொடர்ந்து அந்தக் கட்சி வென்றாலும் தோற்றாலும் அங்கேயே தங்கி நின்ற மிகச் சில திரைக் கலைஞர்களில் இவரும் ஒருவர். தி.மு.கவிலேயே எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இன்றைய ஜெயலலிதா காலம் வரை தொடர்ச்சியாகத் தங்கியிருக்கிறார். இந்தப் பண்பு மிகச் சிலரிடமே இருந்திருக்கிறது. 
கலைஞர் எண்பதுகளில் நிறையப் படங்களுக்குக் கதை வசனம் எழுதிய காலத்திலும் இவர் தி.மு.க வில் இருந்தாலும் வீரன் வேலுத்தம்பி, மக்கள் ஆணையிட்டால் போன்ற மிகச் சில படங்களே இராம நாராயணனுக்கு வாய்த்திருக்கின்றன.
இவருடைய படங்களில் குறிப்பாக எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டான போது வந்த படங்களில் எஸ்.எஸ்.சந்திரன் நடித்த பாத்திரங்களின் வாயிலாக அந்தக் கால அரசியல் எள்ளல் மிகுந்திருந்தது. உதாரணம் சகாதேவன் மகாதேவன்

திரையிலகுக்கு வந்த புதிதில் ஶ்ரீ தேவி பிரியா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி இராம நாராயணன் இன்னொரு இயக்குனர் நண்பரான எம்.ஏ.காஜாவோடு படங்களைத் தயாரித்திருந்திருந்திருக்கிறார். இருவரும் அதே தயாரிப்பு நிறுவனம் வழியாக மாறி மாறிப் படங்களைத் தயாரித்திருந்திருக்கின்றனர். அப்படி வந்த படங்களில் ஒன்று தான் எண்பதுகளில் மறக்க முடியாத திரைச் சித்திரம் எம்.ஏ.காஜாவின் "ஒரு விடுகதை ஒரு தொடர்கதை". இந்தப் படம் தான் கங்கை அமரன் இசைத்து வெளிவந்த முதல் படம். 
" நாயகன் அவன் ஒரு புறம்", "விடுகதை ஒன்று" போன்ற அருமையான பாடல்கள் இருக்கும்.
பின்னர் ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழியாக நேரடிப் படங்களை இயக்கியும், மொழி மாற்றுப் படங்களைத் தமிழுக்கும் கொண்டு வந்திருக்கிறார். பிரபல ஆங்கில, தெலுங்குப் படங்களை இவரின் தேனாண்டாள் பிலிம்ஸ் வழியாக வெளியிட்டு கொழுத்த வெற்றியையும் பெற்றிருக்கிறார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற ஒரு சில நடிகர்கள் தவிர எண்பதுகளின் நாயகர்களை இயக்கிய பெருமை இராம நாராயணனைச் சேரும். குறிப்பாக விஜய்காந்த், எஸ்.வி.சேகர், மோகன், நிழல்கள் ரவி போன்றோருக்கு இவரின் படங்கள் மறுபிரவேசமாகவும் வெற்றியாகவும் அமைந்தவை. அர்ஜூனஒத் தமிழுக்கு முதலில் இயக்கியவர் இவரே.
ராமராஜன் இவரின் உதவியாளராக இருந்திருக்கிறார்.

கடைசியாக வந்த ஆர்யா சூர்யா உட்பட 125 படங்களை இயக்கியிருக்கிறார். நிறையப் படங்களை இயக்கிய இயக்குனர் என்ற வகையில் இவருக்கு ஒரு சாதனையும் உண்டு.

திரைப்படத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தயாரித்த தென்பாண்டிச் சீமையிலே படத்துக்கு இவர் தான் கதை, வசனம்.

2008 இல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அவர் இருந்த வேளை, கர்நாடகாவில் தொடர்ச்சியாக தமிழ்த்திரைபடங்கள் திரையிடும் அரங்கங்கள் தாக்கப்பட்டவேளை திரையுலகினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்திய வேளை அவரை நமது வானொலிக்காகப் பேட்டி காண அழைத்த மறு நிமிடமே வானலைக்கு வந்திருந்தார். அந்தப் பேட்டியின் சுட்டி இது.
http://www.radiospathy.com/2008/04/blog-post_05.html

ஒருவன் தான் சார்ந்த துறையில், தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத் தன்னுள் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். இது எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும் இதுவே நிலைத்திருத்தலின் அடிப்படையும் கூட. அந்த வகையில் இராம நாராயணனை நான் ஒரு சினிமாத் தொழிற்சாலையாகவே பார்க்கிறேன், இன்று அந்தத் தொழிற்சாலை நிரந்தர ஓய்வெடுத்திருக்கிறது. 

இராம நாராயணன் குறித்து நிறைய எழுதலாம். இவ்வளவும் என் காலை வேளை ஒரு மணி நேர ரயில் பயணத்தின் செல்லிடப் பேசி வழியாக எழுதியது மட்டுமே.

Saturday, June 14, 2014

பாடல் தந்த சுகம் : மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கைகூடாதோ


இசைஞானி இளையராஜாவின் கோரஸ் குரல்கள் தொடர் போட்டி ஆரம்பித்த பின்னர் ஒவ்வொரு நாளும் எனக்கு விசேஷமாகப்படுவதாக எண்ணுகின்றேன். ஒரு மாதத்துக்கு முன்னரே பகுத்து வைத்திருந்த பாடல்கள் என் மனமாற்றம் காரணமாக கடைசி நிமிடத்தில் மாற்றம் காண்பதுண்டு.
அப்படித்தான் கடந்த வியாழன் இரவு 10 மணியைக் கடந்தவேளை கணினியில் வேலை செய்துகொண்டிருந்தபோது எதோச்சையாக என் மூளைக்குள் மணி அடித்த பாட்டு இந்த "மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள்தான் கைகூடாதோ" பாடல்.

சிறைச்சாலை படம் வந்த போது அந்தப் படத்தின் பாடல்கள் பரவலாக ரசிக்கப்பட்டாலும் ஒப்பீட்டளவில் இந்த "மன்னன் கூரைச்சோலை" பாடல் மட்டும் அதிகம் கேட்காமல் அமுங்கிப் போன கவலை எனக்குண்டு. வானொலியில் நேயர் விருப்பத்தில் கூட "சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே" மற்றும் "செம்பூவே செம்பூவே" பாடல்கள் தான் நேயர்களின் பெருவிருப்பாய் அமைந்திருக்கின்றன.

"காலாபாணி" என்று மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகி பின்னர் தாணுவின் தயாரிப்பில் தமிழில் மொழிமாற்றப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த தியாகிகளை அந்தமானின் காலாபாணி
சிறைச்சாலையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்திய வரலாற்றைப் படம் பிடித்தது இப்படம்.

மோகன்லால், தபு, பிரபு ஆகியோர் முக்கிய வேடமிட்டு நடித்தனர். பாடலாசிரியர் அறிவுமதி அவர்களே அனைத்துப் பாடல்களையும் எழுதி, உரையாடலையும் எழுதியிருந்தார். இப்படத்தை இயக்கியிருந்தவர் மோகன்லாலின் ஆத்ம நண்பர், இயக்குனர் பிரியதர்ஷன். 1995 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்காகவும், சிறந்த இரண்டாவது படத்துக்காக தயாரிப்பாளராகவும் இப்படத்திற்காக கேரள அரசின் விருதாகப் பெற்றார் மோகன்லால்.

இப்படத்தின் இசையைப் பொறுத்தவரை இளையராஜாவின் ராஜாங்கத்துக்கு மாற்றீடாக எவரையும் எண்ணிப் பார்க்கவே முடியாது. கிராமியப்படங்களுக்கும், பீரியட் படங்களுக்கும் சிலிர்த்துக் கொண்டு இசையில் சாதனை படைக்கும் இளையராஜா காலாபாணிக்கும் அந்தக் குறையை விடவில்லை. அறிவுமதி அவர்களின் தெள்ளு தமிழ் வரிகளை எப்படி செம்பூவே பூவே, ஆலோலங்கிளி தோப்பிலே, மன்னன் கூறைச் சேலை, நம் பாரத நாடு, சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே என்று இனிய பாடல்களாக நெய்தாரோ அதே இன்னிசை முழக்கத்தை இப்படத்தின் பின்னணி இசையிலும் கொடுத்திருந்தார். சந்தோஷ்சிவனின் அழகிய வரலாற்றுக் காட்சிப்படுத்தலோடு இழைந்தோடுகின்றது ராஜாவின் இசை. திரையில் சிம்பொனியைக் கேட்ட பரவசத்தை இது ஏற்படுத்துகின்றது. இந்தப் படத்தின் பின்னணி இசையை ஆறு வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தேன் இங்கே http://www.radiospathy.com/2008/09/blog-post.html


"மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை" பாடலின் மூலப் பாடல் மலையாளத்தில் வந்த போது பாடல் வரிகளை எழுதியவர் இசைஞானி இளையராஜாவோடு பல படங்களில் பணியாற்றிய க்ரிஷ் புத்தன்சேரி, எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர். இவரைப் பற்றி ஒரு தொகுப்பு எழுதணும் என்பது என் நீண்ட நாள் அவா.
இந்தப் பாடலின் தமிழ் வடிவத்தின் வரிகளுக்குச் சொந்தக்காரர் பெருமதிப்புக்குரிய அன்பின் அறிவுமதி அண்ணர். இருவரும் பாடல்வரிகளை இழைத்துச் செதுக்கி அழகிய ஆரமாக்கியிருக்கிறார்கள். ராஜாவின் இசைக்குக் கொடுக்கும் மகத்துவமான மணியாரம் இது.
பொதுவாக ஒரு பாடல் மொழிமாற்றம் காணும் போது இன்னொரு மொழியில் வேறொரு பாடகி பாடியிருப்பார். ஆனால் குறித்த இந்தப் பாடல் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று நான்கு மொழிகளுக்குப் போன போது நான்கு மொழிகளிலும் சித்ராவே பாடியிருக்கிறார். எனக்குத் தெரிந்து ஒரே பாடலை இம்மாதிரி ஒரே சமயத்தில் நான்கு மொழிகளில் ஒரே பாடகி பாடுவது இதுதான் முதன்முறை. எந்த மொழியில் கேட்டாலும் சித்ராவுக்கு மாற்றீடு தேவை இல்லாமல் அத்துணை கனிவாகப் பாடியிருக்கிறார்.
சித்ராவுக்கு இந்தப் பாடல் இன்னொரு "வந்ததே குங்குமம்" (கிழக்கு வாசல்) பாடல் என்று எனக்குத் தோன்றுகின்றது.

கோரஸ் குரல்களோடு வரும் ஆண் குரல்களில், மலையாளத்தில் இசைஞானி இளையராஜா குரல் கொடுத்திருப்பார், தமிழுக்கு கங்கை அமரன், ஹிந்தி, தெலுங்கில் வெவ்வேறு பாடகர்கள். இங்கேயும் அண்ணன், தம்பி மாற்றீடாகப் பயன்படுத்தப்பட்டுப் புதுமை விளைவிக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு பெண்ணின் தவிப்பு, எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் பாடகியின் குரல், சேர்ந்திசைக்கும் கோரஸ் குரல்கள், இசை, பாடல் வரிகள் எல்லாவற்றையும் இறுகக் கட்டித் திரட்டிய இனிப்புப் பொதி இது. உண்மையில் இப்படியான பாடல்களைக் கேட்கும் போது ஏனென்றே தெரியாமல் கண்கள் கலங்குவதைத் தவிர்க்க முடிவதில்லை. கோரஸ் குரல்களின் ஸ்வரஆலாபனையே அந்தப் பெண்ணோடு சேர்ந்து ஆமோதிக்குமாற் போல அமைந்த புதுமையில் இசைஞானியின் முத்திரை அழுத்தமாகப் பதிகின்றது. இடையிசையில் கூட இவ்வளவு சிரத்தையா என்று பெருமையோடு பார்க்க வைக்கிறார் ராஜா.
மலையாளம் (இளையராஜா), தமிழ் (கங்கை அமரன்), ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்த இடைக்குரல்களோடு காலாபாணி படத்தின் பாடலின் அறிமுகத்தில் க்ரிஷ் புத்தன்சேரி கொடுக்கும் பகிர்வும், தமிழ்ப்பாடலும் சேர்த்து மொத்தம் 14 நிமிட இசைக்குளிகையாக இங்கே பகிர்கின்றேன்.

இப்படியான புதுமைகளை இனிக் காண்பது எக்காலம் என ஏங்க வைக்கும் அமைந்த பாடல்களில் ஒன்று மீண்டும் கேட்கும் போது உங்களுக்கும் அதை மெய்ப்பிக்கலாம்.



http://soundcloud.com/kanapraba/mannankoorai

Wednesday, June 11, 2014

தமிழ் சினிமாவில் பின்னணிக் குரல்கள்

இலங்கை வானொலியில் ஒரு காலகட்டத்தில் ஒலிச்சித்திரம் என்ற தலைப்பில் பிரபல படங்களின் கதையோட்டத்தைச் சுருக்கி, பாடல்கள் தவிர்த்து ஒரு மணி நேர நிகழ்ச்சியாக அமைத்துக் கொடுத்ததைக் கேட்டிருக்கிறேன். இந்திய வானொலியிலும் கூட இதே பாங்கான நிகழ்ச்சியைக் கேட்ட ஞாபகமுண்டு. அந்தக் காலத்தில் சிவாஜிகணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திலிருந்து விதி படம் வரை இவ்வாறான ஒலிச்சித்திரங்களும் பாடல்களுக்கு நிகராக, உள்ளூர் ஒலிப்பதிவுக் கூடங்களில் ஒலி நாடாக்களில் பதிவு பண்ணி விற்றது ஒரு காலம். 

எங்களூரில் சில வீடுகளில் விதி பட சுஜாதா நீதிமன்றக் காட்சியில் பரபரப்பாக வாதிடுவதை சத்தமாக ஒலிபரப்பிக் கேட்டதை இப்போது நினைத்தால் சிரிப்பாக வரும். அப்போதெல்லாம் இவ்வாறான ஒலிச்சித்திரங்களைக் கேட்கும் போது இந்த வசனத்தை இன்னார் பேசுகின்றார் என்பதைக் கண்டுபிடிப்பதே ஒரு சுவாரஸ்ய அனுபவமாக இருக்கும். 

எண்பதுகளில் இந்த நிலை பெரும் மாற்றம் கண்டது கதாநாயகிகள் விஷயத்தில் தான். ஏறக்குறைய எல்லாப் படங்களிலும் ஒரே நாயகி பேசுமாற்போல இருக்கும். அதற்குக் காரணம் ஒரு சில முன்னணி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப்படும் பின்னணிக் குரல் பேசுபவர்களின் குரலே பெரும்பாலான நாயகிகளுக்குப் பயன்பட்டது. தமிழ் சினிமாவில் பிற மொழி பேசும் நாயகிகள் சரோஜாதேவி காலத்தில் இருந்தாலும் கூட, அந்தக் காலத்தில் எண்பதுகளில் நிலவியது போன்ற பரவலான நாயகிகளின் அறிமுகம் அதிலும் குறிப்பாக மொழி வளம் அற்ற நாயகிகள் மிகுதியாய் வந்த காரணத்தால் தயாரிப்பாளர்களுக்கும் இந்த பின்னணிக் குரல் பேசுபவர்களால் குறுகிய காலத்தில் படத்தை எடுத்து முடித்து பின்னணி பேச் வைத்து முடிக்க இலகுவாக இருந்திருக்கும். ஆனால் அப்போதெல்லாம் இந்தக் கலைஞர்கள் யாரென்று ஒரு சினிமாப் பத்திரிகை தானும் சிரத்தையெடுத்து அதிகம் வெளிக்கொண்டு வந்ததில்லை. படங்களின் எழுத்தோட்டத்தில் மட்டும் இவர்களின் பெயர் பொறிக்கப்படுவதோடு நின்றுவிடும்.

குணா படம் வெளிவரவிருந்தப்காலத்தில் கமல்ஹாசன் ஆனந்த விகடன் பேட்டியில் இந்தப் படத்தின் கலை இயக்குனரைப் பற்றிப் பேசும் போது கொஞ்சம் மிகப்படுத்திப் பேசி, அடுத்த இதழில் கலை இயக்குனர் சங்கத்தின் எரிச்சலை வாங்கிக் கட்டி பின்னர் தன்னுடைய கருத்தை மீண்டும் தெளிவாக்கிக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எது எப்படியிருப்பினும் என்னுடைய பார்வையில் மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்துக்குப் பின்னால் தான் சினிமாவின் இயக்கத்துக்கு உறுதுணையாகவிருக்கும் இசை மட்டுமன்றி ஒளிப்பதிவு உள்ளிட்ட இன்ன பிற சமாச்சாரங்களும் அதிக கவனத்தைப் பெற்றன. குறிப்பாக கமல்ஹாசன் இவ்வாறான சக தொழில் நுட்பக் கலைஞர்களை ஏதோவொரு வகையில் வெளிப்படுத்துவதில் முக்கிய காரணியாக இருந்திருக்கிறார். 

அண்மையில் சன் டிவியின் விருந்தினர் பக்கம் பேட்டியில் டப்பிங் கலைஞர் அனுராதாவின் பேட்டியைக் கேட்டபோது இந்தத் துறை குறித்து இன்னும் பல நுட்பமான கருத்துகளை வெளிப்படுத்தினார். நடிகை ஜெயப்பிரதாவில் ஆரம்பித்து ராதா, அம்பிகா, குஷ்பு, கெளதமி என்று அன்றைய நட்சத்திரங்கள் அனைவருக்கும் ஆயிரம் படங்களுக்கு மேல் குரல் கொடுத்தவர் இவர்.

ஜனனி படத்தின் டப்பிங் பணிகள் நடந்துகொண்டிருந்த வேளை இவருக்குப் பிரசவ வலி ஏற்படவே ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்து நேராக மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டு குழந்தையைப் பிரசவித்துவிட்டுக் களைப்போடு கண்ணயர்ந்தாராம். விழித்துப் பார்த்தால் அந்தப் படத்தின் திரைப்படக்குழுவினர் சூழ நின்று ஒலிப்பதிவுக் கருவிகளோடு படத்தின் விட்ட இடத்திலிருந்து டப்பிங் பேசச் சொன்னார்களாம்.

இங்கே தான் கமல்ஹாசன் மீண்டும் வருகின்றார். தான் இயங்கும் சினிமா ஊடகத்தில் தொழில் நுட்ப ரீதியாக புதுமைகளையும், மேம்படுத்தல்களையும் செய்யும் முனைப்போடு இருக்கும் கமல் வழியாக ராஜபார்வை திரைப்படத்தின் வழியாக டப்பிங் கலைஞர்களுக்கும் பேருதவி கிட்டியது. அது நாள் வரை ஒரு காட்சியின் வசன ஒலிப்பதிவு நடக்கும் போது சிறு பிசிறு ஏற்பட்டால் அந்தக் காட்சி முழுமைக்குமான ஒலிப்பதிவு செய்யும் நிலை மாறி, பகுதி பகுதியாக ஒலிப்பதிவு செய்யும் கருவியை அறிமுகப்படுத்தியவர் கமல் என்று நெகிழ்வோடு நினைவு கூர்ந்தார் அனுராதா.

மூன்றாம் பிறை படத்திற்காக சில்க் இற்கு அனுராதா குரல் கொடுத்தபோது ஒவ்வொரு வரியாக எப்படி உச்சரிக்கப்படவேண்டும் என்று பக்கத்தில் நின்று பயிற்சி கொடுத்தாராம் பாலுமகேந்திரா. ஆனால் வீடு படத்துக்கு நடிகை அர்ச்சனாவுக்கு தேசிய விருது கிடைத்தபோது, பாலுமகேந்திராவைச் சந்தித்து "இந்த நடிகைக்குக் குரல் கொடுத்த என் பெயர் எடுபடாமல் போய்விட்டதே" என்று அழுதிருக்கிறாராம் அனுராதா. உண்மையில் தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் நடிகர் கண்டிப்பாகச் சொந்தக் குரலில் பேசியிருக்க வேண்டும். இதன் காரணமாகவே பலருக்கு தேசிய விருது வாய்ப்பு கை நழுவியிருக்கிறது. வீடு படத்தில் அர்ச்சனாவே சொந்தக் குரலில் பேசியதாக நம்ப வைத்திருக்கலாம்.

தமிழ், தெலுங்கு உட்பட ஆயிரம் படங்களுக்கு மேல் குரல் கொடுத்த பின்னணிக்குரல் கலைஞர் 
அனுராதா கிட்டத்தட்ட இருநூறு படங்களுக்கு மேல் ஒரே படத்திலேயே வெவ்வேறு கதாபாத்திரங்கள், இரட்டை வேடம் போன்றவற்றுக்குக் குரலை வேறுபடுத்தியும் கொடுத்திருக்கிறாராம். அனுராதாவிப் குரல் கச்சிதமாகப் பொருந்திப் போன நடிகைகளாக கெளதமி, குஷ்பு ஆகியோரை அடையாளம் காட்டுவேன். கெளதமிக்கு ஒரு தேவர் மகன் என்றால் குஷ்புவுக்கு சின்னத்தம்பி.

முன்னர் பிரதாப் போத்தன், கார்த்திக் பின்னர் நடிகர் மோகனுக்கு தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து அவரின் வெற்றிப் பயணத்தில் முக்கிய பங்கெடுத்தவர்,  பின்னாளில் மோகன் தன்னை உதாசீனம் செய்ததாகப் பேட்டி கொடுத்தார் பாடகர் சுரேந்தர்.
சுரேந்தரை விட்டு விலகிய மோகனின் மெல்லத்திறந்தது கதவு இறுதிக் காட்சியில் சொந்தக் குரல் கொடுத்தார். பின்னர் அதைத்தொடர்ந்து வந்த ஜெகதலப் பிரதாபனில் இருந்து அன்புள்ள காதலுக்கு, சுட்ட பழம் உட்பட எல்லாமே மோகனின் இறங்குமுகத்தின் முக்கிய காரணியாக அமையுமளவுக்கு பின்னணிக் குரல் செல்வாக்குப் பெற்றது.

நடிகர் விக்ரம் கூட அஜித்குமார் உள்ளிட்ட கலைஞர்களுக்குப் பின்னணி பேசியிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரின் சகோதரி ஹேமமாலினியைப் பலருக்குத் தெரிந்திருக்காது ஆனால் அவரின் கவர்ச்சி மிக்க குரல் நடிகை சில்க் இன் உருவத்தோடு பொருந்திப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தது.

பின்னணிக் குரல்கள் என்னும் போது அவை படத்தின் கதையோட்டத்தில் மட்டுமன்றி, திரையிசைப் பாடல்களில் இடம்பெறும் சேர்ந்திசைக் குரல்களுக்கும் இதே நிலை தான். எண்பதுகள் தொண்ணூறுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களில் ஒரு சில வரிகளைப் பாடிய பாடகர்கள் பலரைக் கூடத் தெரியாது இசைத்தட்டுகளும் ஓரவஞ்சனை செய்துவிடும்.
எண்ணற்ற பாடல்களில் ஆலாபனை பாடும் பாடகர்களுக்கும் இதே நிலை தான். இவர்களின் எண்ணற்ற அனுபவங்களை எடுத்தாலே ஒவ்வொரு பாடல்களும் தோன் றிய சுவாரஸ்யமான அனுபவங்கள் கிட்டும் இல்லையா?

ஏ.ஆர்.ரஹ்மான் தலையெடுத்த பின்னர் சேர்ந்திசைக் குரல்களும் இசைவட்டில் இடம்பெறும் அளவுக்கு மகத்துவம் பெற்றனர். அப்படி வந்தவர்களில் பின்னாளில் முன்னணிப் பாடகியாகவும் விளங்கிய கங்கா, பெஃபி மணியைக் குறிப்பிடலாம்.

எனக்கு அனுராதா என்ற பின்னணிக் குரலை அடையாளப்படுத்தியது செந்தமிழ்ப் பாட்டு படத்தில் வரும் "சின்னச் சின்னத் தூறல் என்ன" மற்றும் ரிக்ஷா மாமா படத்தில் வரும் தங்க நிலவுக்குள் ஆகிய இரு பாடல்களிலும் வரும் அவரின் குரல் மற்றும் சிரிப்புப் பகிர்வு. அந்த இரண்டு பாடல்களோடு நிறைவாக்குகிறேன்.







Saturday, June 7, 2014

பாடல் தந்த சுகம்: சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை


பல நாட் கழித்து ஒரு பாடலை யதேச்சையாகக் கேட்க நேரிட்டால் அது நம்மைச் சுற்றிக் கொண்டே வருமாற்போல இருக்கும். சில வேளை அடுத்தடுத்த நாட்களில் அந்தப் பாடல் ஏதாவது ஒரு வானொலி வழியாகத் தானும் கேட்க நேரும் போது ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் போல இருக்கும். அப்படித்தான் இந்தப் பாடலும். சற்று முன்னர் சிங்கப்பூர் ஒலி வானொலியின் "எண்பதுகளின் தொண்ணூறுகளின் இசைச் சங்கமம்" நிகழ்ச்சித் தொகுப்பை காரில் பயணிக்கும் போது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் வீடு திரும்பியதும் இந்தப் பாடலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் பாட்டு வானலை வழியே வருகின்றதே.

"சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை" பாடல் இந்த வார சூப்பர் சிங்கர் ஜூனியரில் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் சுற்றுப் பகிர்வில் வந்திருந்தது. எனக்கு நினைவு தெரிந்து இந்தப் பாடல் போட்டி இசைமேடையில் பாடப்படுவது இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன். அதையே சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியின் நடுவராக அமர்ந்திருந்த பாடகி சித்ரா அவர்களும் உறுதிப்ப்படுத்தியிருந்தார். கூடவே இதே பாடலில் பங்கெடுத்துப் பாடிய மனோ அவர்களும், சித்ரா அவர்களும் வீற்றிருக்க, அவர்கள் முன்னால் 25 வருடங்களுக்கு முந்திய பாடலைப் பாடுவது அவர்களுக்கு எவ்வளவு தூரம் பசுமை நினைவுகளைக் கிளப்பியிருக்குமோ அது போலவே இந்தப் பாடல் இசைத்தட்டு வந்த காலத்தில் என்னைப் போலப் பதின்ம வயதுகளில் இருந்த ராஜாவின் வெறிபிடித்த ரசிகர்களுக்கும் இன்பமான கணங்களாக இருந்திருக்கும்.

"பாண்டி நாட்டுத் தங்கம்" படப்பாடல்கள் அப்போது எல்.பி ரெக்கார்டில் வந்தபோது எங்களூரில் திவா அண்ணர் வழியாகத் தான் இந்தப் பாடல்களைக் கேட்கும் வாய்ப்பும் கிட்டியது. அப்போது நமக்கெல்லாம் முன்னோடியாக, ராஜாவின் பாடல்கள் வரும்போது அவற்றை ஒலி நாடாவில் பதிந்து வைத்து சுடச் சுடப் போட்டுக் காட்டி "எப்பிடி மொட்டைச்சாமி பின்னியிருக்கிறார் இல்லையா" என்று கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு சொல்லிக் கொண்டே பாடல்கள் ஒவ்வொன்றாகப் போட்டுக் காட்டும் போது ஏதோ தானே அந்தப் பாடல்களை இசையமைத்த பெருமை அவருக்கு இருக்கும்.

இயக்குனர் விசுவின் பட்டறையில் இருந்து வந்த டி.பி.கஜேந்திரன் எப்படி சங்கிலி முருகனின் அலைவரிசையில் சிக்கினாரோ தெரியவில்லை. கங்கை அமரன் "எங்க ஊரு பாட்டுக்காரன்" என்ற பெரு வெற்றிப் படத்தை இயக்கிக் கொடுத்தாலும், சங்கிலி முருகனின் "எங்க ஊரு காவக்காரன்" படத்திற்கும் அதனைத் தொடர்ந்த "பாண்டி நாட்டுத் தங்கம்" படத்துக்கும் டி.பி.கஜேந்திரன் தான் இயக்குனர்.
அதன் பின்னர் "எங்க ஊரு மாப்பிள்ளை" என்ற இன்னொரு படத்தையும் டி.பி.கஜேந்திரன் வெளியார் தயாரிப்பில் இயக்கினார். ஆனால் பாண்டி நாட்டுத் தங்கம் படத்தைக் கங்கை அமரன் இயக்கவில்லையே தவிர இந்தப் படத்தின் முத்தான ஆறு பாடல்களையும் எழுதியது அவர் தான். 
எண்பதுகளில் இம்மாதிரிப் படங்கள் வந்தபோது அது கங்கை அமரனாகட்டும், டி.பி.கஜேந்திரனாகட்டும் இயக்குனர் யாரென்ற அடையாளம் தெரியாது ஆனால் இசைஞானி இளையராஜாவின் முத்திரை கண்டிப்பாக இருக்கும். இந்தப் படத்தின் பாடல்களில் பாடலாசிரியராக கங்கை அமரன் வஞ்சகமில்லாமல் உழைத்திருப்பார். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலம் தொட்டு கங்கை அமரனை மட்டுமே வைத்துக் கொண்டு பாடல்களைக் கொடுத்திருந்தாலும் நின்று பிடித்திருக்கும் பாடல் வரிகளைக் கொடுக்கும் ஆளுமை படைத்தவர் கங்கை. ஆனாலும்...

"சிறு கூட்டுல உள்ள குருவிக்கு" பாடல் அனுபவத்தைப் பற்றிப் பாடகி சித்ரா சொல்லும் போது "இந்தப் பாடல் அப்போது மனோ, சித்ரா இருவரும் ஒரே சமயத்தில் பாட, இசைக்கருவிகள் இசை மீட்ட லைவ் ரெக்கார்டிங் முறையில் எடுக்கப்பட்டதாம். அப்போது ராஜா சார் ஒவ்வொரு வரிகளுக்கும் பாடும் பாங்கில் திருத்தம் சொல்லிக் கொண்டே பாடவைப்பார் என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்தார் சித்ரா. . ஒரு பாடல் வரியை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் செல்லும் பாடகனுக்கு எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதை ராஜா அடிக்கடி உணர வைப்பதாகவும், ராஜாங்கிற யுனிவர்சிட்டியில் நாம படிச்சதால தான் மற்ற இசையமைப்பாளர்களும் துணிஞ்சு நமக்கெல்லாம் வாய்ப்புக் குடுத்தாங்க என்றார்.

உண்மையில் எனக்கு பாண்டி நாட்டுத் தங்கம் படப்பாடல்கள் வந்த போது "உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது" என்ற பாடலில் தான் மோகம் அதிகமாக இருந்தது. 
வயசும் ஒரு காரணமாக இருக்கலாம் :-)
அந்தப் பாடலைத் தான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பேன்.  ஆனால் நாளாக நாளாகத் தான்"சிறு கூட்டுல உள்ள குருவிக்கு" பாடல் மீது இன்னும் மோகம் வளர்ந்தது. இந்தப் பாடல் ஒரு இசை கற்கும் மாணவி பாடும் தொனியில் இருக்கும் சூழல் என்பதால் உன்னிப்பாகக் கேட்கும் போது சங்கதிகளில் அழுத்தமும் ஒரு சங்கீதத் தனமும் தெரியும் ஆனால் மேலோட்டமாகக் கேட்டால் அக்மார்க் மசாலாப் பாடலாக இருக்கும். அதுதான் ராஜா. பாடலின் இடையிசையில் வளர்ந்து மேலெழும் வாத்திய இசை இந்தப் பாடலுக்கு அளவான சட்டை. இருபத்தைந்து வருடங்கள் கழித்து பழைய டயரியைப் படிக்கும் போதோ, பால்ய நண்பனை வெகு காலம் கழித்துச் சந்திக்கும் போதோ தரும் உணர்வை ராஜாவின் பாடல்கள் கொடுத்துக் கொண்டேயிருக்கும். இந்தப் பாடலைக் கேட்கவேண்டும் என்று ஆசையோடு என் இசைப் பெட்டகத்தில் இருந்து "பாண்டி நாட்டுத் தங்கம்" இசைவட்டை எடுக்கும் போது, தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை தூளியில் இருந்து எடுத்து உச்சி மோந்து மகிழும் தாய்க்கு ஒப்பான மன நிலையில் இருக்கும்.

"பாட்டால தான் பரலோகமே
உன்னோட இடம் தேடி வரலாகுமே
பாட்டால தான் மனம் மாறுமே
உன்னோட மனந்தேடி உறவாடுமே
இட்டுத்தான் ராகம் கட்டி பாட்டு பாடி வச்சா
தொட்டுத்தான் உன்ன கட்ட சொர்க்கம் இங்க வரும்"


Monday, June 2, 2014

இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் - இசைப்பொட்டலம் நூறு

றேடியோஸ்பதி தளத்தின் நேயர்களுக்கு றேடியோஸ்பதி என்ற புதிரைக் கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்து பரிச்சயமாக இருக்கும்.
ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக இளையராஜாவின் பாடல்களில் சேர்ந்திசைக் குரல்கள் (கோரஸ்) பயன்பாட்டைச் சிறப்பிக்கவெண்ணிக் கடந்த பெப்ரவரி மாதம் முதல் சக வலைப்பதிவான http://radiospathy.wordpress.com
 வழியாக நாள் தோறும் கோரஸ் குரல் போட்டியை நடாத்தி வந்தேன்.

அந்தப் போட்டியின் நூறாவது இசைப்பகிர்வு நேற்று இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளோடு அமைந்திருந்தது. ஆரம்பத்தில் சராசரியாக 20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இப்போட்டி சமீப காலங்களில் சராசரியாக ஒரு போட்டிக்கு 55 பேர் என்ற ரீதியில் எகிறியிருப்பது மகிழ்வை அளிக்கின்றது. கடந்த போட்டிகளில் முதல் 20 இடங்களைப் பிடித்த போட்டியாளர்களுடன் முதல் மூவருக்கு நாலு வரி நோட்டு புத்தகத் தொகுதியும் பரிசாக வழங்கப்படவுள்ளது. அந்த விபரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.

இது வெறும் போட்டியாக அன்றி இசைஞானி இளையராஜா, சேர்ந்திசைக் குரல்களைக் கூட எவ்வளவு சிரத்தையாத் தன் பல நூறு பாடல்களில் உபயோகித்துக்கொண்டார் என்பதன் தொகுப்பாகவே இந்தப் பணியைத் தொடர்கின்றேன். ஆகவே பிரபலமான, பிரபலமாகாத என்று எந்த வரையறையும் இந்தப் போட்டிக்கு இல்லை.
உங்கள் ஆதரவோடு 500 பாடல்களையாவது இம்மாதிரிச் சேகரித்துப் பகிர ஆவல்.

முதல் ஐம்பது பாடல்களின் இசைப்பொட்டலம் இதோ



அடுத்த ஐம்பது பாடல்களின் இசைப்பொட்டலம் இதோ






இதோ இதுவரை இடம்பிடித்த பாடல்களின் பட்டியல் இதோ

No Song Name Movie
1 இரு விழியின் வழியே நீயா வந்து போனது சிவா
2 பூங்காற்றே இது போதும் படிச்ச புள்ள
3 ஓம் சிவோஹம் நான் கடவுள்
4 தை தக தை துடி கொட்டுது பாரய்யா அந்தப்புரம்
5 தேவதை இளம் தேவி ஆயிரம் நிலவே வா
6 காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் இதயத்தை திருடாதே
7 சிட்டான் சிட்டான் குருவி புது நெல்லு புது நாத்து
8 முற்றத்து மாடப்புறா பெரிய குடும்பம்
9 பூப்பூக்கும் மாசம் வருஷம் 16
10 மந்திரம் இது மந்திரம் ஆவாரம் பூ
11 எங்கிருந்தோ இளங்குயிலின் பிரம்மா
12 மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா மகளிர் மட்டும்
13 ஓ ஒரு தென்றல் புயலாகி புதுமை பெண்
14 மானின் இரு கண்கள் கொண்ட மாப்பிள்ளை
15 சோலை இளங்குயிலே அண்ணனுக்கு ஜே
16 அதோ அந்த நதியோரம் ஏழை ஜாதி
17 பாராமல் பார்த்த நெஞ்சம் பூந்தோட்ட காவல்காரன்
18 ஓ பேபி பேபி காதலுக்கு மரியாதை
19 சொந்தங்களே அடுத்தாத்து ஆல்பட்
20 இதயமே இதயமே அடுத்தாத்து ஆல்பட்
21 ஹோலி ஹோலி ஹோலி ராசுக்குட்டி
22 மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ பெரிய வீட்டுப் பண்ணக்காரன்
23 புது ரூட்டுல தான் மீரா
24 காதல் மயக்கம் புதுமை பெண்
25 மானே தேனே கட்டிப்புடி உதய கீதம்
26 ஆயிரம் தாமரை மொட்டுக்களே அலைகள் ஓய்வதில்லை
27 ஏலேலக் குயிலே பாண்டி நாட்டு தங்கம்
28 பூபாளம் இசைக்கும் தூறல் நின்னு போச்சு
29 மீனம்மா மீனம்மா ராஜாதி ராஜா
30 அந்தி வரும் நேரம் முந்தானை முடிச்சு
31 மேகம் கறுக்கையிலே வைதேகி காத்திருந்தாள்
32 ராஜா ராஜாதி ராஜனெங்கள் அக்னி நட்சத்திரம்
33 ஆட்டமா பாட்டமா நடிகன்
34 பள்ளிக்கூடம் போகாமலே கடலோர கவிதைகள்
35 மான் கண்டேன் நான் கண்டேன் ராஜரிஷி
36 வேகம் வேகம் அஞ்சலி
37 ஆதாமும் ஏவாளும் போல மருதுபாண்டி
38 இந்த அம்மனுக்கு தெய்வ வாக்கு
39 ராசாவே உன்னை நான் எண்ணித்தான் தனிக்காட்டு ராஜா
40 வேறு வேலை உனக்கு இல்லையே மாப்பிள்ளை
41 ஊரோரமா ஆத்துப்பக்கம் இதய கோவில்
42 இசை மேடையில் இன்ப வேளையில் இளமை காலங்கள்
43 தாயறியாத தாமரையே அரங்கேற்ற வேளை
44 போட்டதெல்லாம் வெற்றிக்கல்லு பரதன்
45 வா வா மஞ்சள் மலரே ராஜாதி ராஜா
46 தத்தித் தத்தி தாவிடும் பெரிய குடும்பம்
47 ஏ ஐய்யா சாமி வருஷம் 16
48 நிக்கட்டுமா போகட்டுமா பெரிய வீட்டுப் பண்ணக்காரன்
49 ஹாப்பி நியூ இயர் ஓ மானே மானே
50 மடை திறந்து தாவும் நதியலை நான் நிழல்கள்
51 ஓடைக்குயில் ஒரு பாட்டு படிக்கலையா தாலாட்டு பாடவா
52 மேக வீதியில் நூறு வெண்ணிலா வெற்றி கரங்கள்
53 மாசறு பொன்னே வருக தேவர் மகன்
54 முத்து மணி முத்து மணி அதர்மம்
55 ஒரு முத்துக்கிளி தாயம்மா
56 ஓஹோஹோ காலைக்குயில்களே உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
57 வண்ணப் பூங்காவனம் ஈரமான ரோஜாவே
58 ஆறும் அது ஆளமில்லை முதல் வசந்தம்
59 யாரடி நான் தேடும் காதலி பொண்டாட்டி தேவை
60 இரு பறவைகள் நிறம் மாறாத பூக்கள்
61 வருது வருது இளங்காற்று பிரம்மா
62 பூத்து பூத்து குலுங்குதடி கும்பக்கரை தங்கையா
63 ப்ரியசகி ஓ ப்ரியசகி கோபுர வாசலிலே
64 ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே வாத்தியார் வீட்டு பிள்ளை
65 கண்ணா வருவாயா மனதில் உறுதி வேண்டும்
66 விழியில் புதுக்கவிதை படித்தேன் தீர்த்த கரையினிலே
67 ஆனந்தம் பொங்கிட சிறை பறவை
68 மானுக்கும் மீனுக்கும் பார்வதி என்னைப் பாரடி
69 தம்தன நம்தன புதிய வார்ப்புகள்
70 என்னோட ராசி நல்ல ராசி மாப்பிள்ளை
71 ஊருவிட்டு ஊரு வந்து கரகாட்டக்காரன்
72 கரையோரக் காற்று பகலில் பவுர்ணமி
73 நள்ளிரவு மெல்ல மெல்ல வெற்றி கரங்கள்
74 விக்ரம் விக்ரம் விக்ரம்
75 பூவே பூச்சூடவா பூவே பூச்சூடவா
76 ஹே சித்திர சிட்டுகள் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
77 பாசமுள்ள பாண்டியரு கேப்டன் பிரபாகரன்
78 கலகலக்கும் மணி ஓசை ஈரமான ரோஜாவே
79 மாடத்துலே கன்னி மாடத்துலே வீரா
80 யாரும் விளையாடும் தோட்டம் நாடோடி தென்றல்
81 தம்பி நீ திரும்பிப் பாரடா என் உயிர் தோழன்
82 ஏழை ஜாதி ஏழை ஜாதி
83 இப்படை தோற்கின் அமைதி படை
84 மயிலாடும் தோப்பில் சின்ன பசங்க நாங்க
85 மாசி மாசம் ஆளான பொண்ணு தர்ம துரை
86 மறக்குமா செழும் மலரைக் காற்று காதல் தேவதை
87 மானம் இடி இடிக்க உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
88 பூவே இளைய பூவே கோழி கூவுது
89 போட்டா படியுது சத்யா
90 சொன்னபடி கேளு சிங்கார வேலன்
91 பாட வந்ததோ கானம் இளமை காலங்கள்
92 சின்னப்பூ சின்னப்பூ ஜப்பானில் கல்யாண ராமன்
93 வீட்டுக்குள்ள கட்டுப்பட்ட பச்சைக்கிளி மை டியர் மார்த்தாண்டன்
94 குங்குமம் மஞ்சளுக்கு எங்க முதலாளி
95 ஓ பாட்டி நல்ல பாட்டி தான் இதயம்
96 வீட்டுக்கு கதவிருக்கு/ ஐயா வீடு தெறந்து தான் இருக்கு காதலுக்கு மரியாதை
97 மைனா மைனா மாமன் புடிச்ச மைனா பகல் நிலவு
98 அடி ஆத்தாடி கடலோர கவிதைகள்
99 பொன்னோவியம் கண்டேனம்மா கழுகு
100 தென்றல் வந்து தீண்டும் போது அவதாரம்