தமிழ்த் திரையிசையின் நம்பிக்கை ஊற்றாய், தன் செழுமையான வரிகளால் வளம் சேர்க்கும் இன்றைய தலைமுறைப் பாடலாசிரியர்களில் விவேகாவுக்கு இது வெள்ளிவிழா ஆண்டு.
ஆகஸ்ட் 14, 1999 அவர்தம் பாட்டுப் பயணத்தின் திறவுகோலாய் அமைந்தது “நீ வருவாய் என”.
நடிக்க வாய்ப்புக் கேட்கச் சென்ற நண்பரோடு சென்றவரை நீங்கள் வருவீர்கள் என இயக்குநர் இராஜகுமாரன் சிவப்புக் கம்பளம் விரித்தார்.
“பூங்குயில் பாட்டுப் பிடிச்சிருக்கா” என்று பட்டிமன்றமே போடாமல் இன்றுவரை யாழ்ப்பாணத்து மினிபஸ்கள் ஈறாகப் பாட்டு மன்றம் கட்டிக் கொண்டிருந்த வரலாறு திறந்த நாள் அது.
பழநி பாரதி தொட்டு, தன் உதவி இயக்குநர்களையும் கூட பாடலாசிரியர் ஆக்கி உதவிய இயக்குநர் விக்ரமன்.
இசைக் கவி என்ற இரட்டைஸ்தானம் கொண்ட இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரை எடுத்துக் கொண்டால் ஒரு தொகை அறிமுகப் பாடலாசிரியர்களுக்கான ஸ்தாபனம் அவர்.
இந்த வழியில் பிறந்த இராஜகுமாரனும் விவேகா எனும் பாடலாசிரியரைக் கண்டெடுத்து அறிமுகப்படுத்தியது இந்தப் பாட்டுச் சந்தையின் மரபை நிரூபித்தது.
“பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா” பாடல் வெளியார் காதுக்குப் போகமுன்பே தன் குரு நாதர் காதில் போட்டு விட, விக்ரமனும் “தாவணியே என்னை மயக்குறியே” என்று “வானத்தைப் போல” மனசோடு விவேகாவுக்கு அடுத்த தளத்தைக் காட்டினார். “நீ வருவாய் என” உதவி இயக்குநர் லிங்குசாமியும், தன் முதல் படைப்பு “ஆனந்தம்” படத்திலும் “என்ன இதுவோ” என்று விவேகாவை இழுத்து வைத்துக் கொண்டார்.
விவேகாவின்
“மின்சாரம் என் மீது பாய்கின்றதே” பாடலைக் கேட்டு இயக்குநர் ஷங்கர் பாராட்டியதைப் பூரிப்போடு சொன்னாராம் லிங்குசாமி.
அப்படியே “என் ப்ரெண்டைப் போல யாரு மச்சான்” இலும் ஷங்கர் விவேகாவைப் பயன்படுத்தியதோடு, அவரின் தயாரிப்பு “ஈரம்” ஈறாக வாய்ப்பு வழங்கினார்.
எஸ்.ஏ.ராஜ்குமார், சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் என்று விவேகாவைப் பற்றெனப் பிடித்தவர்களோடு அப்படியே தேவி ஶ்ரீ பிரசாத்தின் அரசவைப் பாடலாசிரியர் ஆகவும் ஆகிவிட்டார். தேவி ஶ்ரீ பிரசாத்தின் அனேக படங்கள் அனைத்துப் பாடல்களும் விவேகா, அது கூட இல்லையென்றால் தன் படங்களில் விவேகா பாட்டு இருக்கும் என்பதை ஒரு அறிவிக்கப்படாத சட்டமூலமாக்கி விட்டார் இந்த DSP.
“ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே”
என்று தகதகக்கும் வரிகளோடு சுடச் சுட கங்குவா பாடலைக் கேட்டு ரசிக்கும் இன்றைய நடப்புக்குச் சற்று முன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் “புஷ்பா” அலையிலும் கனன்றார் பாடலாசிரியர் விவேகா.
பார்வ கற்பூர தீபமா…ஶ்ரீவள்ளி
பேச்சே கல்யாணி ராகமா….
அந்தப் பாடலை இந்த நிமிடம் கேட்கும் போதும் திருவண்ணாமலை தீபமாய் “காதுகள்” பிரகாசிக்கும்.
இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் தொடங்கி இளைய தலைமுறைக்காரர் அனிருத் உள்ளிட்டு, இசைஞானி இளையராஜா கூட விட்டு வைக்காத பாடலாசிரியர்,
இன்னோர் புறம் கமல், ரஜினி தொடங்கி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என்று இன்னொரு தலைமுறை வரை பயணப்படுகிறார்.
மெல்லிசைப் பாடல்கள் தொடங்கி,
துள்ளிசைப் பாடல்கள் ஈறாக ரசிகர்களின் நாடித்துடிப்போடு விளையாடும் வரிகளை அளிப்பது அவ்வளவு சுலபமல்ல. அந்த வித்தை கைவரப் பெற்றவர் விவேகா.
“கருத்தவன்லாம் கலீஜா” பாடல் வெளித்தோற்றத்தில் ஒரு துள்ளிசை, அந்த வரிகளுக்குள் நுழைந்தால் பட்டுக்கோட்டையார் போல திருவண்ணாமலையார் சமூக நீதி போதிப்பார்.
இங்கே நான் தொகுத்த, பாடலாசிரியர் விவேகாவின் பாடல்களில் எனக்கு அணுக்கமான ஐம்பது இவை.
1. பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா (எஸ்.ஏ.ராஜ்குமார்) – நீ வருவாய் என
2. தாவணியே என்னை மயக்குறியே (எஸ்.ஏ.ராஜ்குமார்) – வானத்தைப் போல
3. என்ன இதுவோ (எஸ்.ஏ.ராஜ்குமார்) – ஆனந்தம்
4. இப்பவே இப்பவே ( வித்யாசாகர்) – ராமன் தேடிய சீதை
5. மின்சாரம் என் மீது (வித்யாசாகர்) – ரன்
6. சொல்லத்தான் நினைக்கிறேன் ( லவ் டுடே சிவா) – காதல் சுகமானது
7. ஆகாயம் பூக்கள் (சிற்பி) – விண்ணுக்கும் மண்ணுக்கும்
8. இதுவரை யாரும் (எஸ்.ஏ.ராஜ்குமார்) – காதலுடன்
9. விடிய விடிய ( சபேஷ் முரளி) – சமுத்திரம்
10. அமளி துமிளி (ஹாரிஸ் ஜெயராஜ்) – கோ
11. வானே வானே (டி.இமான்) – விஸ்வாசம்
12. முளைச்சு மூணு (விஜய் ஆன்டனி) – வேலாயுதம்
13. சக்கை போடு போட்டாலே (யுவன் ஷங்கர் ராஜா) – தாஸ்
14. அலேக்ரா ( தேவி ஶ்ரீ பிரசாத்) கந்தசாமி
15. ஶ்ரீவள்ளி ( தேவி ஶ்ரீ பிரசாத்) – புஷ்பா
16. விழிகளில் விழிகளில் (டி.இமான்) – திருவிளையாடல் ஆரம்பம்
17. அழகாப் பொறந்துப்புட்ட (வித்யாசாகர்) – சிறுத்தை
18. உயிர் நதி கலங்குதே (அனிருத்) – வேதாளம்
19. சின்னச் சின்ன வீட்டு வேலை (எஸ்.ஏ.ராஜ்குமார்) – பாட்டாளி
20. கிளியோப்பட்ரா (யுவன் ஷங்கர் ராஜா) – உனக்காக எல்லாம் உனக்காக
21. ஒரே ஒரு வார்த்தைக்காக (தேவி ஶ்ரீ பிரசாத்) – வேங்கை
22. டாடி மம்மி (தேவி ஶ்ரீ பிரசாத்) – வில்லு
23. என் ப்ரெண்டைப் போல (ஹாரிஸ் ஜெயராஜ்) – நண்பன்
24. எப்ப மாமா ட்ரீட்டு (டி.இமான்) – ஜில்லா
25. எப்படி இருந்த நாங்க (விவேக் மெர்வின்) – சுல்தான்
26. எப்படி இருந்த என் (தேவி ஶ்ரீ பிரசாத்) – சந்தோஷ் சுப்ரமணியம்
27. காதலெனும் ஜோருல (பரத்வாஜ்) – தமிழ்
28. கருப்பு பேரழகா (தமன் எஸ்.எஸ்) – காஞ்சனா 1
29. மொட்டைப் பையா (தமன் எஸ்.எஸ்) – காஞ்சனா 2
30. ஒரு கண் ஜாடை செய்தாளே (யுவன் ஷங்கர் ராஜா) – அஞ்சான்
31. கண்ணென்ன மின்சாரமா (எஸ்.ஏ.ராஜ்குமார் ) – ஜேம்ஸ் பாண்டு
32. சின்னத்தாமரை (விஜய் ஆன்டனி) – வேட்டைக்காரன்
33. மழையே மழையே (தமன் எஸ்.எஸ்) – ஈரம்
34. வெள்ளை பம்பரம் (ஜி.வி.பிரகாஷ்குமார்) – சகுனி
35. காதல் வந்தாலே (தேவி ஶ்ரீ பிரசாத்) – சிங்கம்
36. Feel My Love என் காதல் சரியோ (தேவி ஶ்ரீ பிரசாத்) – குட்டி
37. Teddy Bear (ஜிப்ரான்) - நய்யாண்டி
38. புரியவில்லை இது புரியவில்லை (தேவி ஶ்ரீ பிரசாத்) – சிங்கம்
39. குட்டிப்புலி கூட்டம் ( ஹாரிஸ் ஜெயராஜ்) – துப்பாக்கி
40. அந்த வானவில்லின் பாதி (தேவி ஶ்ரீ பிரசாத்) – வீரம்
41. என்னத்தைச் சொல்ல (ஹாரிஸ் ஜெயராஜ்) – என்றென்றும் புன்னகை
42. கோழி வெடக்கோழி (தேவி ஶ்ரீ பிரசாத்) – சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
43. ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால ( (தேவி ஶ்ரீ பிரசாத்) – மன்மதன் அம்பு
44. கண்களினாலே (பரத்வாஜ்) – ப்ரியசகி
45. இதயம் கரைகிறதே (தமன் எஸ் எஸ்) – தில்லாலங்கடி
46. சிக்கு சிக்கு பூம் பூம் (டி.இமான்) – மாசிலாமணி
47. தனிமையிலே (சி.சத்யா) – இவன் வேற மாதிரி
48. நாணிக் கோணி (ஹாரிஸ் ஜெயராஜ்) – மாற்றான்
49. இறைவா (அனிருத்) – வேலைக்காரன்
50. தென்றல் வரும் வழியில் (இளையராஜா) – ஓய்
தாய்த்தமிழகத்தை ஈழத்தோடு கால்கட்டுப் போட்டு பருத்தித்துறையில் பெண்ணெடுத்து நம் உறவுக்காரரும் ஆகி விட்டார்.
அதிசயனே
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம்
தவிர எதுவும் இல்லையே…
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நம் பாட்டுக்காரர் விவேகா.
கானா பிரபா
10.09.2024