Pages

Monday, June 24, 2013

மெல்லிசை மாமன்னனுக்கு வயசு எண்பத்தைந்துஜூன் 24 இன்றைய தினம் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய எண்பத்தைந்தாவது வயதை எட்டியிருக்கின்றார். தமிழ்திரையிசைச் சாதனையாளர்களில் மூன்று முக்கியமான ஆளுமைகளான மெல்லிசை மன்னர் எம். எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆ.ரஹ்மான் ஆகியோர் இயங்குகின்ற சூழலில் நாமும் இருக்கின்றோம் என்பதில் ஒரு பெருமை தானாக வந்து சேர்கின்றது. இன்றைக்கு கணினி யுகத்தில் ஏராளம் டெஸ்ட் டியூப் பேபிகள் இசையமைப்பாளர்களாகக் குவிந்து விட்டார்கள் ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசையுலக மாமன்னன் எவ்வளவு பெரிய சாதனையை தசாப்தங்களைக் கடந்து செய்து காட்டிவிட்டு அமைதியாக எல்லாவற்றையும் பார்க்கின்றார் என்னும் போது சாதாரணர்களாகிய நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொன்றையும் அந்த அடக்கம் காட்டி நிற்கின்றது.

இன்றைக்குப் பன்மடங்கு பெருகிவிட்ட தொழில் நுட்ப முன்னேற்றத்தின் பல படிகள் பின்னோக்கிய காலகட்டத்தில் தான் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏராளம் பாடல்களை விதவிதமான சூழலுக்கேற்ப விதையாக்கிக் கொடுத்தார், இன்றைக்கும் பட்டுப்போகாத நல் விரூட்சம் போல அந்தப் பாடல்கள் ரசிகர் மனதில் எழுந்து நிற்கின்றன. ராமமூர்த்தி அவர்களோடு இணைந்து கூட்டாகப் படங்கள் கொடுத்த போதும், தனித்து இயங்கிய போதும் தன் அடையாளத்தை மிகக் கச்சிதமாக நிறுவியவர். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்துப் பாடல்களைக் கேட்கும் போது எம்.எஸ்.வி தனம் இருக்குமளவுக்கு அடுத்த சகாப்தத்திலும் கொஞ்சப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டவர். மெல்லிசை மாமன்னர் விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்கள் லேசுப்பட்டவர்களல்ல, ஒவ்வொருவருக்கும் தனிப்பாணி, இவர்கள் எல்லோருக்கும் ஏற்ற பாடல்களைப் பண்ணுவதோடு மட்டுமல்ல கவியரசு கண்ணதாசனோடு போராடியும், சந்தோஷித்தும் மெட்டுக் கட்டிய கதைகளைப் புத்தகம் ஆக்குமளவுக்கு அந்தப் பாடல்களுக்குப் பின்னால் ஏராளம் கதைகள். இவையெல்லாம் ஒரு மாமூல் கலைஞனுக்கு கிட்டாத அனுபவங்கள். அந்த வகையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் முழுமையான வரலாறு எவ்வளவு தூரம் பதிவாகியிருக்கின்றது என்பது கேள்விக்குறி.

படத்தின் கதையோட்டத்தோடு மாறுபடும் காட்சியமைப்பு வரும்போது ஒரு கட்டியக்காரனாகவும், அசரீரியாகவும் பல படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் ஒரு பாடகராகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். இதுதவிர காதல் பாடல்கள் சிலவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் பாங்கே தனி. அதற்கு உதாரணமாக மூன்று பாடல்களை இங்கே பகிர்கின்றேன்.

"சொல்லத்தான் நினைக்கிறேன்" படத்தில் வரும் "சொல்லத்தான் நினைக்கிறேன்" பாடலை எஸ்.ஜானகியோடு பாடுகின்றார்.
"நிலவே நீ சாட்சி" பாடலில் "நீ நினைத்தால்" பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியோடு பாடும் பாங்கைக் கேளுங்கள், இவர்தான் பாடியிருக்கிறார் என்று ஊகிக்கமுடியாத அளவுக்கு மிகவும் கட்டையான சுருதியில் பாடுவார். "முத்தான முத்தல்லவோ" படத்தில் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு பாடும் போது எப்படி அநாயசமாக  போட்டு வாங்குகிறார் பாருங்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் அளவுக்கு மற்றைய இசையமைப்பாளர்களோடு நேசம் கொண்டு, அவர்களின் படங்களிலும் கெளரவப்பாடகராக வந்துகாட்டும் போது அவரின் இன்னொரு பரிமாணம் வெளிப்படுகின்றது. இவர் அளவுக்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு தொகை இசையமைப்பாளர்கள் இசையில் பாடிய இன்னொரு இசையமைப்பாளரை அடையாளம் காட்டுவது மிகக்கடினம், இரண்டாவது இடத்தில் கங்கை அமரனைச் சேர்த்துக் கொள்ளலாம், அந்த வகையில் தமிழ்த்திரையுலக முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எம்.எஸ்.வி பாடிய பாடல்கள் சில இங்கே,

இளையராஜா - தாயே மூகாம்பிகையே (தாய் மூகாம்பிகை) நல்ல காலம் ( கருவேலம் பூக்கள்)
ஏ.ஆர்.ரஹ்மான் -  ஆலாகண்டா (சங்கமம்), விடை கொடு எங்கள் நாடே (கன்னத்தில் முத்தமிட்டால்)
ஜி.வி.பிரகாஷ்குமார் - "மேகமே ஓ மேகமே ( மதராசப்பட்டணம்)
வி.குமார் - உனக்கென்ன குறைச்சல் (வெள்ளி விழா)
பரத்வாஜ் - மெட்டுத் தேடித் தவிக்குது  (காதல் மன்னன்)
தேவா - கதிரவனை முத்தமிட்டு கடல் மேலே வித்தை செய்து (வைதேகி வந்தாச்சு)
சந்திரபோஸ் - எந்த வழி போவது (குற்றவாளி)
கங்கை அமரன்  இசையில் இனி ஒரு சுதந்திரம் படத்தில் ஒரு பாடல்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் -  நட்பு நட்பு (உன்னைச் சரணடைந்தேன்)

சினிமாத் தயாரிப்பாளராக கலைக்கோயில் படம் உட்படக் கையைச் சுட்டுக் கொண்டாலும், குணச்சித்திர நடிகராக ஏற்ற பாத்திரத்தில் வாழ்ந்து காட்டியவர் இவர்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இசைஞானி இளையராஜாவும் தனித்தே சாதித்துக் காட்டியவர்கள் ஆனாலும் இவர்கள் இருவரும் புதுமையான முயற்சியாக ஜோடி கட்டி இசையமைத்த படங்கள்
மெல்லத் திறந்தது கதவு ( சிறப்புத் தொகுப்பைப் பார்க்க)
என் இனிய பொன் நிலாவே ( சிறப்புத் தொகுப்பைப் பார்க்க)
செந்தமிழ்ப்பாட்டு
செந்தமிழ்ச் செல்வன்
இரும்புப்பூக்கள்
விஸ்வதுளசி

மெல்லிசை மாமன்னரின் பாடல்கள் ஒவ்வொன்றும், பயன்படுத்திய வாத்திய வகையறாவில் இருந்து பல்வேறு காட்சிமைப்புக்களுக்கேற்ப என்னவெல்லாம் புதுமையான மெட்டையும், குரல் அமைப்பையும் புகுத்தியிருக்கிறார் என்பதையும் ஒரு பெரிய ஆய்வுக்குட்படுத்திப் பார்க்கவேண்டும், ஆண்டுக்கணக்கில் எடுக்கும் ஆய்வாக இது அமைந்து விடும் அளவுக்கு அள்ள அள்ள ஏராளம் புதையல்கள் அவர்தம் பாடல்களுக்குள்ளே ஒளிந்திருக்கின்றன.

மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வாழிய பல்லாண்டு

Thursday, June 6, 2013

இன்னபிற பாடலாசிரியர்கள் 3 : குருவிக்கரம்பை சண்முகம் "இங்கே இறைவன் என்னும் கலைஞன்"

இன்னபிற பாடலாசிரியர்கள் வாயிலாக, தமிழ்த்திரையுலகின் நன்முத்துக்களாய் அமைந்த பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களின் பாடல்களை இனம்காட்டும் வகையில் இந்தப் பதிவின் வாயிலாக,பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம் அவர்களின் பாடலோடு சந்திக்கின்றேன். என் மனசுக்கு நெருக்கமான இன்னொரு பாடல் இது, சென்னை வானொலி வழியாக எனக்கு அறிமுகம் கண்ட இந்தப் பாடலைக் கேட்கும் கணங்களில் பிரிந்த நண்பனை மீண்டும் சந்திக்கும் ஏக்கம் கலந்த சந்தோஷம் ஒட்டிக் கொள்ளும்.

 ஒரு சில வருடங்களுக்கு முன்னர், வானொலியிலே நிகழ்ச்சி படைத்துக் கொண்டிருக்கிறேன் ஒரு நாள். அந்த நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்குக் கலந்துரையாடல் நிகழ்ச்சி என்பதால் நேயர்கள் கலந்து கொண்டு கலகலப்பாகப் பேசி மகிழ்கின்றார்கள், இடைக்கிடை நானும் இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்கின்றேன். அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது, அழைத்தவர் எமது வானொலியின் சக அறிவிப்பாளர் செலஸ், "பிரபா நீங்கள் போடும் பாடல்கள் எல்லாமே அற்புதம், இந்த இரவு நேரத்தில் படுக்கையில் இருந்து கேட்கும் போது இதமாக இருக்கின்றது" என்று அவர் சொல்ல, நானும் சும்மா இருக்காமல் "சரி நல்ல பாடல்களை ரசிக்கின்றீர்கள் கண்டிப்பாக நல்ல பாடகர் உங்களுக்குள் ஒளிந்திருப்பார், உங்கள் மனதுக்கு நெருக்கமான பாடலை இப்போது எடுத்து விடுங்கள்" என்று அவருக்குத் தூண்டில் போட்டேன். கொஞ்சம் தயங்கியவரை விடாப்பிடியாகப் பாட நானும் சொல்ல "ஓகே என் குழந்தைகள் இருவரையும் நித்திரையாக்குவதற்காக நான் பாடும் பாடலைப் பாடுகிறேன், உங்களுக்குப் பிடிக்குமோ தெரியாது" கனத்த தன்னடக்கதோடு பாடுகின்றார், இப்படி
 "இங்கே இறைவன் என்னும் கலைஞன்
நன்றாய் உலகை என்றோ படைத்தான்
உண்மைகள் வந்து என் மனத்தாட வார்த்தைகள்
இல்லை நான் கவிபாட என்னென்ன அழகே ஹோ"
எனக்கோ உடம்பில் மின்சாரம் பாய்ச்சியது போன்ற ஒரு உணர்வு. ஏனென்றால் எவ்வளவு அருமையான இந்தப் பாடல், பலரால் நேசிக்கப்படாமலேயே போய்விட்டதே என்று ஏங்கிக்கொண்டிருக்கும் அதே பாடலை இன்னொரு ரசிகர் எதிர்பாராத தருணத்தில் பாடுவதோடு மட்டுமல்லாமல், தன் குழந்தைகளுக்கான தாலாட்டாகவும் பாடிப்போற்றுகின்றாரே என்று பேரானந்தம் கொண்டு அவரை வாயார வாழ்த்தினேன்.
அடுத்த நாள் முதல்வேலையாக உள்ளூர் ரெக்கார்டிங் சென்டருக்குச் சென்று அந்தப் பாடல் இடம்பெற்ற "சார்...ஐ லவ் யூ" படத்தின் ஒரிஜினல் இசைத்தட்டை வாங்கி என் மனதுக்குள் ஒரு கொண்டாட்டத்தை நிகழ்த்திக் கொண்டேன். அன்று முழுக்கக் காரிலும், வீட்டிலும் அதே பாடலைக் கேட்டுக் கேட்டுக் கொண்டாடினேன்.

 இன்று வேலையில் இருந்து வீடு திரும்பும் போது ஏதாவது ஒரு ராஜா இசையமைத்த பாடலைக் கேட்கவேண்டும் என்று நினைத்தபோது என் ஞாபகக்குதிரை பாய்ந்து வந்து இதே பாடலை எடுத்துக் கொடுத்தது. "சார்...ஐ..லவ் யூ" படத்துக்காக இடம்பெற்ற இங்கே இறைவைன் என்னும் கலைஞன்" பாடலை இசைஞானி இளையராஜாவின் இசையில் இசையரசி பி.சுசீலா மற்றும் மனோ ஆகியோர் பாடுகின்றார்கள்.  பாடலில் மனோ பாடும் பாடும் அதை அடிகளை பி.சுசீலா சற்று மாறுபட்டுப் பாடி நுணுக்கம் காட்டியிருப்பார், கூடவே உறுத்தாத புல்லாங்குழல் முன்னணியில் வர பின்னே வாத்தியங்களின் அடக்கமான ஆர்ப்பரிப்பு.
எண்பதுகளில் வலம் வந்த பாடலாசிரியர்களில் குருவிக்கரம்பை சண்முகம் அவர்களும் நல்ல சில பாடல்களின் கருவாக விளங்கிச் சிறப்புச் சேர்த்திருக்கின்றார். அந்தவகையில் இங்கே நான் பகிரும் பாடலும் அவரின் கவிச்சிறப்பைச் சான்று பகிரும் இதோ,இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்
உண்மைகள் வந்து என் மனத்தாட
வார்த்தைகள் இல்லை நான் கவிபாட
என்னென்ன அழகே ஓ

இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்

பனியின் துளி சூடியே கொடியில் மலர் ஆடுதே
நதியின் அலை நாளுமே கரையில் இடும் தாளமே
காலமே நீயும் நீர் போல் வேகமாய் ஓடலாம்
வருவார் போவார் நிலையாய் இங்கே நீதான் உண்டு
அழகே ஹோய்

இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்
உண்மைகள் வந்து என் மனத்தாட
வார்த்தைகள் இல்லை நான் கவிபாட
என்னென்ன அழகே ஹோ

எழில் நிறைந்த கோலங்கள் எண்ணிறைந்த ஞாலங்கள்
இதை மறந்து வாழ்ந்திடும் மனிதர் என்ன ஜென்மங்கள்
விழித்திருந்தும் தூங்குவோர்க்கு விழியிரண்டு ஏனடா
வருவார் போவார் நிலையாய் இங்கே நீதான் உண்டு
அழகே ஹா

இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்
உண்மைகள் வந்து என் மனத்தாட
வார்த்தைகள் இல்லை நான் கவிபாட
என்னென்ன அழகே ஓ
இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்


Tuesday, June 4, 2013

இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஒரு இசையமைப்பாளரின் பாடலுக்கு உயிர்கொடுப்பது மட்டுமன்றி, குறித்த பாத்திரமாகவே மாறி அந்தந்த நடிகர்களின் குணாம்சத்துக்கேற்பத் தன்னை ஆவாகித்துக் கொண்டு பாடும் தொழில் திறன் மிக்க பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு வாழும் உதாரணம் எனலாம். பாடகராக பொன்விழாக் காண இன்னும் இரண்டு ஆண்டுகளே மிச்சம் வைத்திருக்கும் இவர், இன்றைய தலைமுறை வரை அச்சொட்டாகப் பொருந்தக்கூடிய குரல் வளம் கொண்டு இயங்கிவருவது ஆண்டவன் கொடுத்த வரம் எனலாம். எண்பதுகளில் இசைஞானி இளையராஜா முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்ந்த போது, மற்றைய இசையமைப்பாளர்களின் பாடல்கள் பிரபலம் ஆகுவதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பங்கு பெரிது என்பதை, இசையமைப்பாளர் யாரென்றே தெரியாமல் வாய் முழுக்க முணுக்கும் பாடல்கள் ஒரு தொகை பெறும். அவ்வளவுக்கு முன்னணி, பின்னணி பாராது எல்லா இசையமைப்பாளர்களது பாடல்களையும் நேசித்து அந்தப் பாடல்களை உயிரோட்டம் நிறைந்ததாய் ஆக்கிவிடுவார். சங்கர் கணேஷ், சந்திரபோஸ் என்று நீண்டு செல்லும் இசையமைப்பாளர்களின் பாடல்களை இதற்கு உதாரணமாக அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னும் ஏன், என் போன்ற ரசிகர்களுக்கு பல இசையமைப்பாளர்களைத் தேடி அறிய வைத்ததே பாலசுப்ரமணியம் அவர்கள் கொடுத்த பாட்டுத்திறனே காரணம். தெலுங்கு மொழியைத் தன் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் எல்லா மொழிகளையும் மாற்றாந்தாயாக நினையாது அந்தந்த மொழிக்கு விசுவாசம் செய்தவர். எத்தனையோ பாடல்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நளினமான சிரிப்பும், ஏற்ற இறக்கமும் படம் வருவதற்கு முன்பே காட்சி இப்படித்தான் இருக்கும் என்று ஊகிக்கும் அளவுக்குக் கொடுத்திருப்பார், ஆனால் அந்தப் பாடல்களின் திறன் உணராத இயக்குனர்கள் கையில் சிக்குண்டு க்ளோசப் காட்சியில் அந்த நாயகன் காட்டவேண்டிய நுணுக்கமான முக உணர்வுக்குப் பதில் லாங் ஷாட் இல் வைத்துப் பழிவாங்கிவிடுவர். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தனது 67 வது பிறந்த நாளைக்காணும் இந்த நாளில் அவரின் சாகித்தியத்தின் இன்னொரு பரிமாணமாக, இசையமைப்பாளராக வலம் வந்த படங்களில் இருந்து ஒரு சிறு தொகுப்பையே அவரின் பிறந்த நாள் பரிசாகக் கொடுப்பதில் மகிழ்கின்றேன். தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களுக்கும், தனிப்பாடல் தொகுப்புக்களுக்கும் இசையமைத்திருக்கும் இவரின் தமிழ்ப்படங்களின் பாடல்களையே இங்கு நீங்கள் காணலாம். இந்தப் பாடல் துளிகளே எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற மாபெரும் கலைஞனின் உள்ளிருக்கும் இசைத்திறமையை வெளிக்கொணரும் சான்றுகள். கண்ணை மூடிக்கொண்டே அந்தப் படத்தின் இசையமைப்பாளர் யாராகினும், இயக்குனர் ஶ்ரீதர் படம் என்றால் சொக்கவைக்கும் இசையைக் கொடுத்துக் கிறங்கடித்துவிடுவார். அதற்கு இயக்குனர் ஶ்ரீதர் கலைஞரிடம் எப்படியாவது தனக்குத் தேவையானதை வாங்கிவிடவேண்டும் என்ற முனைப்பும் முக்கிய காரணம். ஏ.எம்.ராஜா காலத்தில் இருந்து பல ஆளுமைகளைக் கண்ட ஶ்ரீதர், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தைத் தனது துடிக்கும் கரங்கள் படத்துக்கான இசையமைப்பாளராக அமைத்துக் கொண்டார். அந்தப் படத்தில் வந்த "சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்" பாடல் அன்றைய றேடியோ சிலோன் என்ற இலங்கை வானொலியின் பிரபல பாடலாகச் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டது. பாடலை எஸ்.ஜானகியோடு பாடுகின்றார் இசையமைப்பாளர் எஸ்.பி.பாலு. "சங்கராபரணம்" கொடுத்த மாபெரும் வெற்றி அலையால் அந்தக்காலத்தில் தொகையாய்க் குவிந்த சங்கீத, நாட்டியப்படங்களில் மக்கள் மனதில் இடம்பிடித்துக் கொண்டது என்னவோ "மயூரி" போன்ற ஒரு சில படங்கள் மாத்திரமே. கால் ஊனமுற்ற பெண் நடிகை சுதா சந்திரனுக்குப் பெரும்புகழையும் ஈட்டிக் கொடுத்த அந்தப் படம் தேசிய அளவில் அவருக்குச் சிறந்த நடிகையாக்கி அழகு பார்த்தது. இயக்கத்தை, கமல்ஹாசனின் நிழல் இயக்குனர் என்று சொல்லுமளவுக்கு அவரால் அறியப்பட்ட சிங்கிதம் சீனிவாசராவ் கவனித்துக் கொண்டார். இந்தப் படத்தின் இசையை வழங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர் விருதுகளை மாநில அளவில் பெற்றுக்க் கொள்ள உறுதுணை புரிந்தது "மயூரி". இந்த மொழிமாற்றுப்படத்தில் இருந்து "மெளனம் நாணம் மலரும் புது யெளவனம்" பாடல் இதோ எஸ்.பி.பி ஒரு இசையமைப்பாளர் என்று பரவலாக உலகை அறிய வைத்த பெருமையை "சிகரம்" தட்டிக்கொண்டது. கே.பாலசந்தரின் உதவியாளர் அனந்து இயக்கிய முதல்படம். படத்தின் பாடல்கள் எல்லாமே பரபரப்பான வெற்றிவாகையைக் கொண்டாடின. கூடவே விருதுகளும் வந்து சேர்ந்தன சிறந்த இசையமைப்பாளர் என்று. இந்தப்படத்தின் எந்தப் பாடலை எடுப்பது எதை விடுவது என்று திணறும் அளவுக்கு "வண்ணம் கொண்ட வெண்ணிலவே", "அகரம் இப்போ சிகரம் ஆச்சு", "உன்னைக்கண்ட பின்புதான்" என்று வரிசைகட்டி நிற்கும். ஆனால் எல்லாவற்றிலும் இருந்து தனித்து அமைதியாக, நிதானமாக ஈர்த்தது என்னமோ "இதோ இதோ என் பல்லவி பாடல்" முந்திய பாடல்களை எல்லாம் கேட்டுத் தித்தித்த வேளை மெதுவாக வந்து மனசின் ஓரத்தில் இடம்பிடித்துக் கொண்டது. இசையமைப்பாளர் தாயன்பன் ஒருமுறை மேடையில் சொன்னது போல இந்தப்பாடலுக்கு அவ்வளவு ஸ்பெஷலைக் கொடுக்கலாம் என்பேன். "சிகரம்" பாடல்கள் கொடுத்த வெற்றியால் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தமிழில் தொடர்ச்சியாக அப்போது இசையமைக்கும் வாய்ப்பு, அதில் முத்திரை இயக்குனர் மகேந்திரனின் "ஊர்ப்பஞ்சாயத்து" படமும் ஒன்று. கூடவே தயாரிப்புலகின் ஜாம்பவான் கலைப்புலி தாணு தயாரிக்க, இயக்குனர்மகேந்திரன் கதை வசனம் எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்க, பார்த்திபன் நடித்த "தையல்காரனும்" பரபரப்பாகப் பேசப்பட்டது ஆனால் ஏனோ மனசில் ஒட்டுமளவுக்கு தையல்காரன் உழைக்கவில்லை. பாடல்களை எடுத்துக் கொண்டால் அந்தக்கால விவித்பாரதி விளம்பரங்களில் கொஞ்சூண்டு துளி பாடலைக் கேட்டு இன்னும் கேட்கமுடியாதா என்று ஆசை கொள்ள வைத்த பாட்டு "மை மை" என்ற பாட்டு, பின்னர் பல மாதங்களுக்குப் பின்னர் தலைநகர் கொழும்பில் இருந்த ஒரு ரெக்கார்டிங் பார் இல் ஒலிப்பதிவு செய்து கேட்கும் அளவுக்கு உயிர் வைத்து நேசித்த பாட்டு "மை மை மை" "தையல்காரன்" படத்தில் இருந்து இன்னொரு நல்லதொரு தெரிவாக "உலகம் ஒரு வாடகை வீடு" பாடலைத் தவிர்க்க மனமின்றி அதையும் கொடுக்கிறேன், ரசியுங்கள். "உலகம் பிறந்தது எனக்காக" என்றதொரு மசாலாப்படம், ஏவிஎம் நிறுவனம் இளையராஜாவோடு ஊடல் கொண்டிருந்த காலகட்டத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடிக்க வெளிவந்திருந்தது. அந்தப் படத்தின் முக்கிய இசையமைப்பாளராக, பிரபல இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் அமைய, இணை இசையமைப்பாளர் பொறுப்பை எஸ்.பி.பாலு எடுத்துக் கொண்டார். அந்தப் படத்தின் பேரைக்காப்பாற்றிய இரண்டு பாடல்கள் இரண்டு இதோ "நீ அழுத கண்ணீர் மழையாச்சு" "மாங்காட்டு மயிலே நில் நில் நில்" எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன் தனையன் எஸ்.பி.பி.சரணுக்கும் ஒரு நல்வழி காட்டவெண்ணி எடுத்த "உன்னைச் சரணடைந்தேன்" படத்தின் இசையமைப்பாளராக அமர்ந்துகொண்டார். அந்தப் படத்தின் பாடல்களிலே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, பாடும் நிலா பாலு ஆகிய மூன்று இசையமைப்பாளர்களும் கொடுத்த நட்புப் பாடல் அருமையிலும் அருமை.