Pages

Thursday, June 6, 2013

இன்னபிற பாடலாசிரியர்கள் 3 : குருவிக்கரம்பை சண்முகம் "இங்கே இறைவன் என்னும் கலைஞன்"

இன்னபிற பாடலாசிரியர்கள் வாயிலாக, தமிழ்த்திரையுலகின் நன்முத்துக்களாய் அமைந்த பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களின் பாடல்களை இனம்காட்டும் வகையில் இந்தப் பதிவின் வாயிலாக,பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம் அவர்களின் பாடலோடு சந்திக்கின்றேன். என் மனசுக்கு நெருக்கமான இன்னொரு பாடல் இது, சென்னை வானொலி வழியாக எனக்கு அறிமுகம் கண்ட இந்தப் பாடலைக் கேட்கும் கணங்களில் பிரிந்த நண்பனை மீண்டும் சந்திக்கும் ஏக்கம் கலந்த சந்தோஷம் ஒட்டிக் கொள்ளும்.

 ஒரு சில வருடங்களுக்கு முன்னர், வானொலியிலே நிகழ்ச்சி படைத்துக் கொண்டிருக்கிறேன் ஒரு நாள். அந்த நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்குக் கலந்துரையாடல் நிகழ்ச்சி என்பதால் நேயர்கள் கலந்து கொண்டு கலகலப்பாகப் பேசி மகிழ்கின்றார்கள், இடைக்கிடை நானும் இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்கின்றேன். அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது, அழைத்தவர் எமது வானொலியின் சக அறிவிப்பாளர் செலஸ், "பிரபா நீங்கள் போடும் பாடல்கள் எல்லாமே அற்புதம், இந்த இரவு நேரத்தில் படுக்கையில் இருந்து கேட்கும் போது இதமாக இருக்கின்றது" என்று அவர் சொல்ல, நானும் சும்மா இருக்காமல் "சரி நல்ல பாடல்களை ரசிக்கின்றீர்கள் கண்டிப்பாக நல்ல பாடகர் உங்களுக்குள் ஒளிந்திருப்பார், உங்கள் மனதுக்கு நெருக்கமான பாடலை இப்போது எடுத்து விடுங்கள்" என்று அவருக்குத் தூண்டில் போட்டேன். கொஞ்சம் தயங்கியவரை விடாப்பிடியாகப் பாட நானும் சொல்ல "ஓகே என் குழந்தைகள் இருவரையும் நித்திரையாக்குவதற்காக நான் பாடும் பாடலைப் பாடுகிறேன், உங்களுக்குப் பிடிக்குமோ தெரியாது" கனத்த தன்னடக்கதோடு பாடுகின்றார், இப்படி
 "இங்கே இறைவன் என்னும் கலைஞன்
நன்றாய் உலகை என்றோ படைத்தான்
உண்மைகள் வந்து என் மனத்தாட வார்த்தைகள்
இல்லை நான் கவிபாட என்னென்ன அழகே ஹோ"
எனக்கோ உடம்பில் மின்சாரம் பாய்ச்சியது போன்ற ஒரு உணர்வு. ஏனென்றால் எவ்வளவு அருமையான இந்தப் பாடல், பலரால் நேசிக்கப்படாமலேயே போய்விட்டதே என்று ஏங்கிக்கொண்டிருக்கும் அதே பாடலை இன்னொரு ரசிகர் எதிர்பாராத தருணத்தில் பாடுவதோடு மட்டுமல்லாமல், தன் குழந்தைகளுக்கான தாலாட்டாகவும் பாடிப்போற்றுகின்றாரே என்று பேரானந்தம் கொண்டு அவரை வாயார வாழ்த்தினேன்.
அடுத்த நாள் முதல்வேலையாக உள்ளூர் ரெக்கார்டிங் சென்டருக்குச் சென்று அந்தப் பாடல் இடம்பெற்ற "சார்...ஐ லவ் யூ" படத்தின் ஒரிஜினல் இசைத்தட்டை வாங்கி என் மனதுக்குள் ஒரு கொண்டாட்டத்தை நிகழ்த்திக் கொண்டேன். அன்று முழுக்கக் காரிலும், வீட்டிலும் அதே பாடலைக் கேட்டுக் கேட்டுக் கொண்டாடினேன்.

 இன்று வேலையில் இருந்து வீடு திரும்பும் போது ஏதாவது ஒரு ராஜா இசையமைத்த பாடலைக் கேட்கவேண்டும் என்று நினைத்தபோது என் ஞாபகக்குதிரை பாய்ந்து வந்து இதே பாடலை எடுத்துக் கொடுத்தது. "சார்...ஐ..லவ் யூ" படத்துக்காக இடம்பெற்ற இங்கே இறைவைன் என்னும் கலைஞன்" பாடலை இசைஞானி இளையராஜாவின் இசையில் இசையரசி பி.சுசீலா மற்றும் மனோ ஆகியோர் பாடுகின்றார்கள்.  பாடலில் மனோ பாடும் பாடும் அதை அடிகளை பி.சுசீலா சற்று மாறுபட்டுப் பாடி நுணுக்கம் காட்டியிருப்பார், கூடவே உறுத்தாத புல்லாங்குழல் முன்னணியில் வர பின்னே வாத்தியங்களின் அடக்கமான ஆர்ப்பரிப்பு.
எண்பதுகளில் வலம் வந்த பாடலாசிரியர்களில் குருவிக்கரம்பை சண்முகம் அவர்களும் நல்ல சில பாடல்களின் கருவாக விளங்கிச் சிறப்புச் சேர்த்திருக்கின்றார். அந்தவகையில் இங்கே நான் பகிரும் பாடலும் அவரின் கவிச்சிறப்பைச் சான்று பகிரும் இதோ,இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்
உண்மைகள் வந்து என் மனத்தாட
வார்த்தைகள் இல்லை நான் கவிபாட
என்னென்ன அழகே ஓ

இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்

பனியின் துளி சூடியே கொடியில் மலர் ஆடுதே
நதியின் அலை நாளுமே கரையில் இடும் தாளமே
காலமே நீயும் நீர் போல் வேகமாய் ஓடலாம்
வருவார் போவார் நிலையாய் இங்கே நீதான் உண்டு
அழகே ஹோய்

இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்
உண்மைகள் வந்து என் மனத்தாட
வார்த்தைகள் இல்லை நான் கவிபாட
என்னென்ன அழகே ஹோ

எழில் நிறைந்த கோலங்கள் எண்ணிறைந்த ஞாலங்கள்
இதை மறந்து வாழ்ந்திடும் மனிதர் என்ன ஜென்மங்கள்
விழித்திருந்தும் தூங்குவோர்க்கு விழியிரண்டு ஏனடா
வருவார் போவார் நிலையாய் இங்கே நீதான் உண்டு
அழகே ஹா

இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்
உண்மைகள் வந்து என் மனத்தாட
வார்த்தைகள் இல்லை நான் கவிபாட
என்னென்ன அழகே ஓ
இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்


9 comments:

Anonymous said...

அற்புதம். எப்படி சார் தகவல்களை சேகரிக்கிறீர்கள்?. கண்ணுல விளக்கெண்ண்ய் விட்டு தேடுவீங்களோ?

கானா பிரபா said...

வணக்கம் ரவி சார்

இசையைத்தவிர வேறு நினைப்பேது :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இசையைத்தவிர வேறு நினைப்பேது :-)//

இன்னிசையாய், செந்தமிழாய்
இருப்பவனே
எங்கும் "கானா"வாய் நிலைப்பவனே! நிலைப்பவனே...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குரவிக்கரம்பை சண்முகம் பற்றிச் சிறப்பித்தமைக்கு நன்றி கா.பி..

கரம்பை = கரம்பையான நிலம்
குருவிகள் கூடும் கரம்பை = குருவிக்கரம்பை!
தமிழ்ப் பேரே நல்லாருக்கு-ல்ல? தஞ்சை, பேராவூரணி பக்கம் இருக்கும் ஊரு!
----

ஏரியிலே இலந்தை மரம் - தங்கச்சி வச்ச மரம்
(வச்ச மரம் கீழே - கீழ் ஸ்தாயி-ன்னு இளையராஜா பாட்டு சொல்லிக் குடுப்பாரு; அதான் ஞாபகம் வருது)

குருவிக் கரம்பையார் எழுதுன பாட்டு தான்!
பேராசிரியர், ஆனா சினிமாவில் ரொம்ப பிரபலமாக முடியல!

அதனாலென்ன? எழுதுன சொச்சமும் மிக நல்ல பாடல்கள்!
* ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள்
* இங்கே இறைவன் என்னும் கலைஞன் படைத்தான்
* கவிதை அரங்கேறும் நேரம்

அதிலும், அந்தக் கவிதை அரங்கேறும் நேரம் பாட்டு இருக்கே... அப்பப்பா

பாட்டின் ஆரம்பத்தில்...
ஆர்மோனியம் just for 2 seconds,
Opening Music எதுவுமே இல்லாம, நேரடியா, சசக நிசபநி சச
-ன்னு No prelude at all; அப்படித் தான் அமைச்சி இருப்பாரு MSV!

ஒடனே, மலையாளத்தில், சப்த ஸ்வர தேவி உணரு -ன்னு வரும்...
அப்பறம் தான் Flute Music போகும் பாருங்க.... Long Play!

கவிதை அரங்கேறும் நேரம்-ன்னு பாட்டின் ஆரம்பமே அப்பறம் தான் தொடங்கும்!
----

ஏன் இப்படிப் பண்ணாரு MSV?
பொதுவா, இசையை ஒலிக்க விட்டுத் துவக்குவது தானே மரபு?

அதுவும், இளையராஜா காலங்களில், முழுப் பாடலின் ஆத்மாவும், ஆரம்ப இசையிலேயே, வந்து லயிச்சிக், கண்ணடிச்சிட்டுப் போகும்!

அப்படியிருக்க, MSV ஏன் இந்த "மரபு மீறல்"?
---------

ஏன்-ன்னா, இது "கவிதை அரங்கேறும்" நேரம்-ய்யா!
"இசை அரங்கேறும்" நேரமில்ல -ன்னு சொன்னாராம் MSV!

அவன் தன் பாடல்கள் அரங்கேறாதா? -ன்னு தவிக்கிறான்;
அதனால், அவன் பாட்டும்/ மெட்டும் தான் மொதல்ல அரங்கேறணும்; அப்பறம் தான் இசை அரங்கேறணும் -ன்னு அப்படி வச்சேன்...

குருவிக்கரம்பை சண்முகத்தின் பாடல் வரிக்கும் காட்சிக்கும் அத்தனை மதிப்பு குடுத்தாரு MSV!

கவிதை அரங்கேறும் நேரம்
கவிதை அரங்கேறும் நேரம்

காமன் பல்லாக்கில் ஏறி – நாம்
கலப்போம் உல்லாச ஊரில்

உன் அங்கம் தமிழோடு சொந்தம்-அது
என்றும் திகட்டாத சந்தம்
(கவிதை அரங்கேறும் நேரம்)
Kannabiran, Ravi Shankar (KRS) said...

எப்படியெல்லாம் ஒவ்வொரு சொல்லா "லயிச்சி" இசை அமைச்சி இருக்காங்கடா முருகா!

இசையோடவே லயிச்சி வாழ்ந்து இருக்காங்க போல;
இப்பிடியொரு லய வாழ்வே நீயெனக்குத் தா!

மொகு மொகு மொகு என
ஞிமிறிசை பரவிடும்
காதலில் நான் உனைத் தொழுவேனோ?

திகு திகு திகு என
தமிழிசை முருகனைக்
கலவியில் இன்பம் காண்பேனோ?

கானா பிரபா said...

ஆகா ஆகா கேயாரெஸ் பின்னூட்டத்திலேயே பெருஞ்சரித்திரம் சுவைபட ;-)

நண்பா said...

அருமையான பாடல். என்னுடைய சேகரிப்பில் இந்த பாடல் இருந்தாலும் அதன் பாடல் ஆசிரியர் இப்போ தான் தெரிந்து கொண்டேன்.. மிகவும் நன்றி.
ஒரே ஒரு மாற்றம்..

என்றோ உலகை நன்றாய் படைத்தான்..

தவறு இருந்தால் மன்னிக்கவும்..

கானா பிரபா said...

வணக்கம் அன்பின் சிவக்குமார்

நீங்கள் சொன்ன வரிகள் தான் சரி, அதைத் திருத்திவிட்டேன் இப்போது. மிக்க நன்றி

incissor said...

இதே படத்தில் இவர் எழுதிய வானம்பாடி பாடும் நேரம் பாடலும், தாவணிக் கனவுகள் படத்தில் வரும் செங்கமலம் சிரிக்குது பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்!
10 வருடங்களுக்கு முன்பு பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை கிராமத்தில், தன் வீட்டு திண்ணையில், மனநலம் பாதிக்கப்பட்டவராக பரிதாபகரமான நிலையில் அவரைப் பார்த்தேன். இப்போது எப்படி இருக்கிறாரோ தெரியவில்லை!?