2008 ஆம் ஆண்டின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றோம். இந்த ஆண்டைப் பொறுத்தவரை எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் சாதனைகளை விடை வேதனைகளையும், சோதனைகளையும் சம்பாதித்த ஆண்டு. உலகெங்கும் ரத்த வெறி பிடித்து அலையும் போர் அரக்கனின் கோரத்தாண்டம் இந்த ஆண்டிலும் தன் ஈடு இணையற்ற கொடுமையைக் காட்டியது. பிறக்கப் போகும் 2009 ஆம் ஆண்டு ஒரு சுபீட்சமான ஆண்டாக அமைய வேண்டும். வீட்டுக்கும், நாட்டுக்கும் நிரந்தர நிம்மதியை ஒரு இனிய இசை கொடுக்கும் திருப்தியை வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்து என்னோடு கூடப் பயணித்தவர்களுக்கும், பயணிக்க இருப்பவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றேன். உங்கள் அனைவருக்காகவும் சிறப்புப் பாடலாக "எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே" என்ற கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் மறுபடியும் திரைப்பாடலை அர்ப்பணிக்கின்றேன்.
கடந்த ஒருவாரமாக றேடியோஸ்பதியின் சிறந்த இசைக்கூட்டணிப் போட்டியை வைத்திருந்தேன். இதன் மூலம் வலைப்பதிவு வாசகர்களின் நாடித்துடிப்பை அறிய 2008 இல் சிறந்த இயக்குனர் - இசையமைப்பாளர் என்று இசைக்கூட்டணியாக அமைந்த ஒரு பட்டியலையும் கொடுத்திருந்தேன்.
இன்றோடு அதன் வாக்கெடுப்பு ஒரு முடிவுக்கு வந்து, இதுவரை கிடைத்த முடிவுகளின் படி வாக்கெடுப்பில் பங்கேற்ற 114 பேரில் 41 பேர் ஹாரிஸ் ஜெயராஜ் - கெளதம் வாசுதேவ மேனன் இணைந்த வாரணம் ஆயிரம் கூட்டணிக்குத் தம் வாக்குகளை அளித்து முதல் இடத்தில் அமையும் இசைக் கூட்டணியாக அமைத்திருக்கின்றார்கள்.
அடுத்ததாக 30 வாக்குகள் அளித்து ஜேம்ஸ் வசந்தன் - சசிகுமார் கூட்டணிக்கு இரண்டாவது இடத்தையும், 9 வாக்குகளைப் பெற்று சரோஜாவில் இணைந்த யுவன்ஷங்கர் ராஜா - வெங்கட் பிரபு கூட்டணிக்கு மூன்றாவது இடத்தையும் அளித்திருக்கின்றார்கள். வாக்கெடுப்பில் பங்கேற்ற அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;-)
றேடியோஸ்பதியின் வாக்கெடுப்புக்கு இதுவரை வாக்களிக்காதவர்கள் ஒரு எட்டு இங்கே நடந்து போய் வாக்களித்து விட்டு இந்த ஆண்டின் நிறைவாக வரும் றேடியோஸ்புதிருக்கு வாருங்களேன்.
ஒரு காலகட்டத்தில் தொடர்ச்சியான வெற்றிப்படங்களைத் தந்த இயக்குனர் இவர். அதனாலோ என்னவோ அளவுக்கு அதிகம் படங்களை இயக்கித் தள்ளி இப்போது சரக்கில்லாமல் நகைச்சு வைக்கிறார். இவருடைய உதவி இயக்குனர் ஒருவரின் பேட்டியை சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த போது அவர் சொன்ன தகவலை இங்கே புதிராகவே போடுகிறேன்.
ஒரு படத்துக்கான பாடல்களை இசைஞானி இளையராஜா உருவாக்கி அவை ஒலிப்பேழைகளிலும் வந்து வெகு பிரபலம். அபோதெல்லாம் வழக்கமாக எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை வைத்து ஒரு பாடலாவது தரும் ராஜா அந்தப் படத்தில் அவரை உபயோகிக்காமலேயே பாடல்கள் அனைத்தும் பேசப்பட்டன. அதில் ஒரு பாடல் ஆண்குரலிலும், பெண் குரலிலும் தனித் தனியாக இருக்கும். பெண் குரலில் பாடியவர் பி.சுசீலா.ஆண் குரல் பாடலை மட்டும் இயக்குனர் இயக்கிக் கொடுத்து விட்டு படத்தையும் முடித்து விட்டு அடுத்த படத்திற்குப் பாய்ந்து விட்டார். தயாரிப்பாளரோ "படத்தை பிரிவியூ பார்த்த விநியோகஸ்தர்கள் கேட்கிறார்கள், அந்தப் பெண் குரல் பாடலையும் படமாக்கித் தாருங்களேன்" என்று கேட்கவும் அந்த இயக்குனரோ அதெல்லாம் முடியாது என்று மறுத்து விட்டாராம்.
அப்போது அவரின் உதவி இயக்குனராக இருந்தவர் தயாரிப்பாளரிடம் சென்று, "நான் ஒரே நாளில் அந்தப் பாடலைப் படமாக்கித் தருகின்றேன், எனக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள்" என்று கேட்கவும், தயாரிப்பாளரும் வேறு வழியின்றி சம்மதித்து, பணத்தையும் கொடுக்கிறார். அந்த உதவி இயக்குனரும் தான் சொன்னது போலவே இதை சவாலாக எடுத்துக் கொண்டு அந்தப் பாடலைப் படமாக்கிக் கொடுக்கிறார். அந்தப் படம் பெரு வெற்றி கண்டது. அந்த உதவி இயக்குனருக்கு நன்றிக் கடனாகக் கிடைத்தது அதே தயாரிப்பாளரின் அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பு. அந்த உதவி இயக்குனர் இயக்குனராகிய அடுத்த படத்தில், அதே இளையராஜா இசையமைக்க முன்னர் சொன்ன படத்தில் தனித் தனியாகப் பாடிய பாடகர் ஜோடி இணைந்து பாடிய பாடல் வெகு பிரபலமானது. படமும் ஓரளவு ஓடியது.
கேள்வி இதுதான், அந்த பெண் குரலில் வந்த பாடலை இயக்காமல் அடம்பிடித்த இயக்குனர் யார்? உதவிக் குறிப்பு, இந்த இயக்குனர் பெயரில் இன்னொரு குணச்சித்திர நடிகர் இருந்தவர், அவர் கூட படங்களை பின்னாளில் இயக்கியவர். வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் பதிலை சொல்லுங்கள், இல்லாவிட்டால் காத்திருங்கள் ;)
இந்த ஆண்டின் நிறைவை எட்டிப் பிடிக்க சில நாட்களே எஞ்சிய நிலையில், 2008 இல் இதுவரை திரைப்படமாக வெளிவந்து பிரபலமான பாடல்களை முன்வைத்து ஒரு இசை குறித்த வாக்கெடுப்பு இடம்பெறுகின்றது. எந்த ஒரு நல்ல இசையமைப்பாளருக்குமே அவரோடு இணையும் இயக்குனரின் வேலை வாங்கும் திறன் தான் பல சந்தர்ப்பங்களில் நல்ல பல பாடல்களுக்கு வழி வகுத்திருக்கின்றது. அந்த வகையில் 2008 இல் சிறந்த இசைக்கூட்டணி யார் என்பதே இந்த ஜாலியான வாக்கெடுப்பின் நோக்கம். உங்கள் ரசனையில் பிடித்த இசைக்கூட்டணி யார் என்பதைத் தேர்ந்தெடுங்களேன்.
பி.கு 1. 2008 இல் இசைத்தட்டு வெளியாகி இதுவரை வெளிவராத படங்கள் இங்கே சேர்த்தியில்லை. 2. சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் பாடல்கள் ஏற்கனவே தெலுங்கில் வெளியானாலும் அதை அப்படியே பயன்படுத்திய ராஜாவின் பெருந்தன்மை(?) கருதி அவரும் ஆட்டத்தில் இருக்கிறார். 3. ஒருவர் தலா ஒரு ஓட்டே வழங்கலாம் (குடும்ப உறுப்பினர்கள் சார்பில் வாக்களிக்க முடியாது ;) 4. வாக்களிப்பு முடிவுத்திகதி 31 டிசம்பர் 2008
கடந்த றேடியோஸ்புதிரில் ஒரு பாடலின் இடைக்குரலை ஒலிபரப்பி அந்த மழலைக் குரல் யார் என்று கேட்டிருந்தேன். மனோஜ் கியான் இசையில் வெளிவந்த விஜயகாந்த் படமான "உழவன் மகன்" திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சசிரேகா பாடிய "செம்மறியாடே செம்மறியாடே செய்வது சரிதானா" என்ற பாடலின் இடையில் வரும் மழலைக் குரல் தான் யுகேந்திரன் பாடகராக அறிமுகமானது.
அதன் பின்னர் இவர் வளர்ந்த பின்னர் கங்கை அமரன் தன் மகன் வெங்கட் பிரபுவை போட்டு எடுத்திருந்த "பூஞ்சோலை" திரைப்படத்தில் இளையராஜா இசையில் "உன் பேரைக் கேட்டாலே" என்ற பாடலை பவதாரணியுடன் சேர்ந்து பாடினார் யுகேந்திரன். அந்தப் படம் பத்து வருஷங்களுக்கு மேலாகக் கிடப்பில் இருக்கின்றது. "ஒருவன் ஒருவன் முதலாளி" என்ற பெயரில் அதனைப் பெயர் மாற்றி 2 வருஷங்களுக்கு முன்னர் மீண்டும் கொண்டு வர இருந்தார்கள். அப்படியும் வரவில்லை.
அதன் பின்னர் தேவாவின் இசையில் "பொற்காலம்" திரைக்காக "சின்னக் காணங்குருவி ஒண்ணு" என்ற பாடலைப் பாடினார்.அதுவும் இசைத்தட்டில் வந்ததோடு சரி. படத்தில் வரவில்லை. இவர்களை எல்லாம் கடந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் அருள் யுகேந்திரனுக்குக் கிடைக்கவே "பூவேலி" திரைப்படத்தில் "பொள்ளாச்சி சந்தையிலே" என்ற பாடலைப் பாடி நல்லதொரு அறிமுகத்தைப் பெற்றார். தொடர்ந்து பரத்வாஜின் இசையில் நிறையப் பாடல்களைப் பாடியிருக்கின்றார் இவர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் "காதலர் தினம்" திரைக்காக "ஓ மரியா" பாடலை தேவனுடன் இணைந்து பாடியும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "முதன் முதலாய்" பாடலை மதுமிதாவுடன் இணைந்தும் பாடி அந்தப் பாடல்கள் பிரபலமாயிருக்கின்றன. "வீரமும் ஈரமும்" என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கின்றார்.
சிங்கப்பூர் ஒலி வானொலியில் நிகழ்ச்சி படைத்திருந்த மாலினி என்னும் அறிவிப்பாளர் இலங்கையின் சுவர்ண ஒலி என்ற வானொலியின் நிகழ்ச்சிப் பணிப்பாளராகச் சென்றபோது அந்த நேரத்தில் கெளரவ அறிவிப்பாளராக் வந்து நிகழ்ச்சி படைத்திருந்த யுகேந்திரனுடன் காதல் மலர்ந்து சிங்கப்பூரையும் தமிழ்நாட்டையும் கொழும்பு இணைத்தது ;) அவர்தான் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன். இவரது தங்கை பிரசாந்தியும் வளர்ந்து வரும் பின்னணிப் பாடகிகளில் ஒருவர். இவர் பின்னாளில் பாடகராகவும், நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றைய தொகுப்பிலே யுகேந்திரன் பாடிய சிறந்த பாடல்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்கின்றேன். கேட்டு மகிழுங்கள். (மேலே படத்தில் யுகேந்திரன் சிட்னி வந்திருந்த போது)
யுகேந்திரன் மழலையாகப் பாடிய "செம்மறி ஆடே" பாடல் உழவன் மகன் படத்திலிருந்து மனோஜ் கியான் இசையில் இணைந்து பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சசிரேகா
பூஞ்சோலை படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் 'உன் பேரைக் கேட்டாலே" இணைந்து பாடியவர் பவதாரணி
தேவாவின் இசையில் பொற்காலம் திரையில் வரும் "சின்னக் காணாங்குருவி ஒண்ணு"
பரத்வாஜின் இசையில் பார்த்தேன் ரசித்தேன் படத்திற்காக ரேஷ்மியுடன் "பார்த்தேன் பார்த்தேன்"
சித்ரா சிவராமனுடன் பாண்டவர் பூமி திரைக்காக "தோழா தோழா" பரத்வாஜ் இசையில்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லேசா லேசா திரைப்படத்தில் இருந்து "முதன் முதலாய" இணைந்து பாடியவர் மதுமிதா
ஆட்டோ கிராப் திரையில் இருந்து " கிழக்கே பார்த்தேன்" பரத்வாஜ் இசையில்
சபேஷ் முரளி இசையில் தவமாய் தவமிருந்து திரைக்காக "என்ன பார்க்கிறாய்" இணைந்து பாடியவர் சுசித்ரா
கடந்த றேடியோஸ்புதிரும் இலகுவாக அமைந்ததில் பலருக்கு கொண்டாட்டமாம். எனவே ஒரு புதிரோடு வந்திருக்கிறேன், ராஜா இல்லாமல் ;)
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த்தின் ஒரு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் இடைக் குரலைப் பாடியிருக்கும் மழலை பின்னாளில் பாடகராகவும், நடிகராகவும் வலம் வந்திருக்கிறார். அவர் யார் என்பதே கேள்வி. இவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் இவர் முதலில் பாடியதே இங்கே கொடுத்த பாடல் தானாம். அதனைத் தொடர்ந்து பெரியவரானதும் ராஜாவின் இசையில் ஒரு வாரிசை வைத்து அவரின் அப்பா இயக்குனர் இயக்கிய படத்தில் பவதாரணியுடன் கூடப் பாடிய பாடலும் அந்தப் படம் வெளியே வராததால் பிரபலமாகவில்லை. அதனைத் தொடர்ந்து தேவாவின் இசையில் சேரன் இயக்கிய அருமையானதொரு படத்தில் இவர் பாடி அந்தப் பாடல் ஒலிநாடாவில் மட்டுமே வந்தது, பாடற் காட்சியாக்கப்படவே இல்லையாம். அதன் பிறகு இன்னொரு இசையமைப்பாளரின் அருளால் பாடகராக வந்தார். பெரும் பாடகர் என்று இவரை சொல்ல முடியாது. வெற்றி பெறும் யோகம் இருந்தால் இந்த யுகத்திலேயே கண்டு பிடிச்சு சொல்லுங்க ;)
மீண்டும் "ராஜ"பாட்டையோடு வந்திருக்கின்றேன் ;) இங்கே கொடுத்திருக்கும் பின்னணி இசை வந்த படம் 28 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. ஒரு முன்னணி இயக்குனர் இயக்கத்தில் வந்த இப்படம் ஒரு சமுதாயப் பிரச்சனையைப் பேசுகின்றது. இதே ஆண்டு இதே காலப்பகுதியில் இன்னொரு முன்னணி இயக்குனரும் கூட இதே சமுதாயப் பிரச்சனையை வைத்தே ஒரு படம் பண்ணி இரண்டும் ஒரே ஆண்டில் வெளியாயின.
இங்கே நான் கொடுத்திருக்கும் பின்னணி இசை வந்த படத்தின் கதையை எழுதியவர் பின்னாளில் ஒரு முக்கியமான இயக்குனரானார். ஆனால் இந்தப் படம் அவருக்கு பேர் வாங்கிக் கொடுக்கவில்லை. இந்தப் படத்தில் இதே படத்தில் ஒரு நாயகனாக நடித்தவர் கூட பின்னாளில் இயக்குனர் தான். இந்தப் படத்தின் இன்னொரு நாயகி மேலே நான் சொன்ன படம் வந்தபோது இதே சமுதாயப் பிரச்சனையை வைத்து படம் பண்ணிய இயக்குனரின் இன்னொரு படைப்பில் நாயகியாக நடித்தார். இந்தப் படம் தமிழ் திரையுலகின் முக்கியமான படைப்பாளியை கூட அறிமுகப்படுத்திய பெருமை கொடுத்தது.
அட இளையராஜாவை கெளரவ நடிகர் பட்டியலில் கூட போட்டிருக்கிறார்களே ;) சரி இம்புட்டும் போதும் ஏதாவது மரத்தின் கீழே இருந்து யோசிச்சு கண்டுபிடிங்கப்பா
கடந்த றேடியோஸ்புதிரில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலாக அமைந்த "மனசுக்குள் மத்தாப்பு" திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலப் பாடல்களைக் கொண்ட தொகுப்பாக இப்பதிவு அமைகின்றது.
ஒரு நட்சத்திர ஹோட்டலின் வாத்தியக் கலைஞராக இருந்த இளைஞர் எஸ்.ஏ.ராஜ்குமார், இயக்குனர்கள் ராபட் ராஜசேகரனின் கண்ணில் படவும் "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார். அந்த நேரத்தில் இசையில் பேராட்சி நடத்தி வந்த இசைஞானி இளையராஜாவின் காலத்தில் அறிமுகமாகி அதுவும் நடிகர் பிரபு தவிர ராம்கி உட்பட முற்றிலும் புதுமுகங்களோடு களம் இறங்கிய "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் ஏழு பாடல்களுமே ஹிட் ஆகி படமும் வெள்ளி விழாக் கண்டு எஸ்.ஏ.ராஜ்குமாருக்குப் பெருமை சேர்த்தது. இதில் பெருமைக்குரிய ஒரு விஷயம் இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் தானே எழுதி இசையமைத்தது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் எல்லாப் பாடல்களுக்கும் எழுதி இசையமைத்த பெருமை டி.ராஜேந்திருக்குப் பின் இவரையே சேர்கின்றது. தொடர்ந்து பல படங்களுக்கு தானே பாடல் எழுதி இசையமைத்திருக்கின்றார்.
"ஒரு வழிப்பாதை" போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்ததோடு "முதல் பாடல்" என்ற படத்தை புதுமுகங்களை வைத்து தயாரித்து அதுவரை தன் பாடல்கள் மூலம் சேர்த்து வைத்த பணத்தையும் கரைய வைத்தார்.
இன்றைய தொகுப்பிலே எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்ப காலப்படங்களை மட்டும் வைத்துக் கொண்டு இவரின் முதல் படமான "சின்னப்பூவே மெல்லப் பேசு" திரைப்படத்தில் ஆரம்பித்து சினிமா ரவுண்டில் முதல் ஆட்டத்தை நிறுத்திய படங்களில் ஒன்றான "பெரும் புள்ளி படத்தோடு நிறைவாக்குகிறேன்.
ஆரம்பத்தில் குறிப்பிட்ட "சின்னப்பூவே மெல்ல பேசு" திரையில் இருந்து இரண்டு பாடல்கள் வருகின்றன. முதலில் "சங்கீத வானில்" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் ஆகியோர் பாடுகின்றார்கள்.
அடுத்து இதே படத்தில் வந்த "ஏ புள்ள கருப்பாயி" என்ற பாடலை எழுதி, இசையமைத்து முதன் முதலில் பாடுயிருக்கின்றார் எஸ்.ஏ.ராஜ்குமார். அந்தப் படம் வந்த வேளை ஏகத்துக்கும் பிரபலமாகி இருந்தது இப்பாடல்.
அடுத்து வருவது இந்த வாரம் றேடியோஸ்புதிரில் கேள்வியாக அமைந்த படமான "மனசுக்குள் மத்தாப்பு" . மலையாளத்தில் தாள வட்டம் என்ற பெயரில் மோகன்லால் நடிக்க பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். இந்தப் படமே ராபர்ட் ராஜசேகரன் இயக்கத்த்தில் "மனசுக்குள் மத்தாப்பு" என்ற பெயரில் பிரபு, சரண்யா, லிஸி நடிப்பில் வந்தது. இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இப்படத்தில் நடித்த லிஸி தன் வாழ்க்கைத் துணையாக பிரியதர்ஷனை பின்னாளில் தேடிக் கொண்டார். சரண்யா இந்தப் படத்தின் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகரனை மணமுடித்து கொஞ்ச காலம் ஒன்றாக வாழ்ந்தவர். "மனசுக்குள் மத்தாப்பு" படத்தை சில மாதங்களுக்கு முன் பார்த்தபோது தான் அவதானித்தேன் அப்படத்தின் பின்னணி இசை கொடுத்திருந்தவர் வித்யா சாகர். ஏனோ எஸ்.ஏ.ராஜ்குமார் அப்போது பின்னணி இசைக்காகப் பயன்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின்பே வித்யாசாகர் முழு இசையமைப்பாளராக அறிமுகமானவர்.
மனசுக்குள் மத்தாப்பு படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்களைத் தருகின்றேன். முதலில் வருவது றேடியோஸ்புதிரில் இடையிசையாக வந்த பாடலான "ஓ பொன்மாங்குயில்" என்ற இனிய பாடலைப் பாடுகின்றார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
அடுத்து வருவது "பூந்தென்றலே ஓடோடி வா" என்னும் பாடல், இதனை ஜெயச்சந்திரன், சுனந்தா ஆகியோர் பாடுகின்றார்கள்.
தொடர்ந்து வரும் படம் "பறவைகள் பலவிதம்" . கல்லூரி வாழ்வில் எதிர்காலக்கனவோடு இணைந்த நண்பர்கள் பின்னர் திசைமாறிய பறவைகளாய் மாறும் சோகமே படத்தின் கரு. இப்படத்தினையும் ராபர்ட் ராஜசேகரன் இரட்டையர்கள் இயக்கியிருந்தார்கள். இப்படத்தின் தோல்வி இரட்டை இயக்குனர்களையும் நிரந்தரமாகப் பிரித்தது. பின்னர் "பூமணம்" என்ற பெயரில் ராஜசேகரன் நாயகனாக ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்து இப்போது தொலைக்காட்சி தொடர்களிலும், சினிமாவிலும் அப்பா வேஷம் கட்டுகிறார். நிழல்கள் படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" பாடலைப் பாடி நடித்த இந்த ராஜசேகரனை மறக்க முடியுமா?
"பறவைகள் பலவிதம்" திரையில் வந்த "மனம் பாடிட நினைக்கிறதே" என்ற இனிய பாடலை மனோ, சுனந்தா, எஸ்.சந்திரன், எஸ்.பி.சைலஜா ஆகியோர் பாடுகின்றார்கள்.
தொடர்ந்து எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு பெயர் சொல்லும் விதமாக எந்தப் படமோ இயக்குனரோ அமையவில்லை. அவரின் சரிவுக்காலத்தில் வந்த படங்களில் வந்த " ஒரு பொண்ணு நெனச்சா" படத்தில் வரும் "உதயமே உயிரே" என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமா ரமணன் பாடும் பாடலை கேட்க கேட்க இனிமை. கேட்டுப் பாருங்களேன்
எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு ஆரம்பத்தில் நல்லதொரு அறிமுகத்தை ராபர்ட் ராஜசேகரன் கொடுத்தது போல இவருக்கு "புதுவசந்தம்" மூலம் வாழ்க்கையே கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். "இது முதல் முதலா வரும் பாட்டு" என்று பாடியே புதுவசந்தத்தை வெற்றி வசந்தமாக்கினார். புது வசந்தம் படத்தின் பாடல்கள் எல்லாமே தேன் தேன் தேனே தான். இப்படம் வந்த காலம் குறித்து இன்னொரு விரிவான பதிவு தேவை. எனவே "புதுவசந்தம்" படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்களைக் கேளுங்கள்.
ஆர்மோனியத்தினை முக்கிய பலமாக வைத்துக் கொண்டு "பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா" என்று கே.ஜே.ஜேசுதாஸ் பாடுவது ஒரு வகை இனிமை.
அதே "அதே பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா" (மற்றைய வரிகளில் மாறுதலோடு) வேக இசை கலந்து பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல் தான் அன்று சூப்பர் ஹிட்.
ராஜாவின் புண்ணியத்தில் பொழைப்பை நடத்திய ராமராஜன் சொந்தக் காலிலும் நின்று பார்ப்போமே என்று தன் குருவானவர் எம்.ஜி.ஆரின் படங்களின் தலைப்புக்களை உல்டா செய்து அன்புக்கட்டளை (அரசகட்டளை) இதுக்கு ராஜா தான் இசை, மற்றும் மில் தொழிலாளி (விவசாயி), வகையறாக்களில் நடித்த படம் "தங்கத்தின் தங்கம்" (எங்கள் தங்கம்). தங்கத்தின் தங்கம் படத்தின் இசை எஸ்.ஏ.ராஜ்குமார். ஆஷா போன்ஸ்லேயை வைத்தும் பாடல் கொடுத்திருப்பார், அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் தருகின்றேன். இப்போது அந்தப் படத்தில் இருந்து " செவ்வந்திப்பூ மாலை கட்டு" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடக் கேளுங்கள்.
பல வருஷமாக எடுபிடியாகவும், உதவி இயக்குனராகவும் அலைந்து திரிந்த கே.எஸ்.ரவிகுமாருக்கு இயக்குனர் பட்டம் கொடுத்தது "புரியாத புதிர்" முந்திய தனது தயாரிப்பான புது வசந்தம் பெரு வெற்றி கண்டதால் சூப்பர் குட் பிலிம்ஸ் எஸ்.ஏ.ராஜ்குமாரையே ஆஸ்தான இசையமைப்பாளராக பல காலம் வைத்திருந்தது. அந்த வகையில் புரியாத புதிர் படத்திலும் "கண்ணோரம் கங்கை தான்" பாடலோடு இங்கே நான் தரும் "ஓர் இரவில் பாட்டு வந்தது" பாடலும் இனிமை. பாடலைப் பாடுகின்றார்கள் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பி.சுசீலா.
எஸ்.ஏ.ராஜ்குமாருக்கும், இயக்குனர் விக்ரமனுக்கும் சரிவைக் கொடுத்த காலம் "பெரும்புள்ளி" படத்தோடு. இப்படத்தில் தற்போது செயல் இழந்து பரிதாப நிலையில் இருக்கும் பாபு மற்றும் சுமா ரங்கனாத் நடித்திருப்பார்கள். இப்போது ரீமிக்ஸ் பாட்டில் பேயாய் அலையும் இசையமைப்பாளர்களுக்கும் முன்னோடியாக சொர்க்கம் படத்தில் வரும் "பொன்மகள் வந்தாள்" என்ற ரி.எம்.செளந்தரராஜன் பாடலை புது இசை கலந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கொடுத்திருந்தார். அதை விட்டு விட்டு இன்னொரு இனிய பாடலான "மனசும் மனசும் சேர்ந்தாச்சு" பாடலை சுனந்தா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடக் கேளுங்கள். இன்னொரு தொகுப்பில் சந்திப்போம்.
இந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண்பதுகளில் கலக்கிய இன்னொரு பாடல் இது. சென்னை வானொலியின் நேயர் விருப்பத்தில் 90 களில் ஆரம்பவரை ஒலித்துக் கொண்டே இருந்தது.
இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆரம்பத்த்தில் ஒரு குண்டான நடிகர் நடித்து வந்தது. பின்னர் தமிழில் ஒரு குண்டான நடிகர் நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. பின்னர் ஹிந்தியிலும் மான் வேட்டை நடிகர் நடித்து மலையாளத்திலிருந்து ஹிந்திக்கு மாற்றும் தொழிலை மும்முரமாக செய்துவரும் இயக்குனர் கைவண்ணத்தில் வந்தது. தமிழில் மட்டும் இரண்டு இயக்குனர்கள் சேர்ந்து வேலை செய்தால் தான் படமே வந்ததாமே ;)
இன்னொரு க்ளூ, தமிழில் காதலியாக நடித்த நடிகை, மலையாள,ஹிந்திப் பதிப்பு இயக்குனரின் மனைவி.
பாடல் இசையைக் கேட்டுக் கண்டு பிடியுங்கள், வெற்றி பெற்றால் பட்டாசு இல்லாவிட்டால் புஸ்வாணம் தான் ;)
இளையராஜாவை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு திரையுலகில் சிறந்த ஒரு உதாரணம் விநியோகஸ்தராக இருந்து, தயாரிப்பாளராகி, நடிகராகி, இயக்குனரும் ஆகிய ராஜ்கிரண்.
ராசாவே உன்னை நம்பி என்னப் பெத்த ராசா என்று படங்கள் தயாரித்து, என் ராசாவின் மனசிலே என்று நாயகனாகி, அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா தான் என்று இயக்குனராகி தொண்ணூறுகளில் பணம் காய்க்கும் சினிமாக் குதிரையாக இருந்தவர் ராஜ்கிரண். படம் வெளி வந்து தாறுமாறாக வசூலைக் குவிக்கும் திரைப்படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் பெரும்பாலும் உரசல் வருவது சினிமாவின் எழுதப்படாத ஜோதிடங்களில் ஒன்று. அது தான் "என் ராசாவின் மனசிலே" திரைப்படத்தின் இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கும், அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் ராஜ்கிரணுக்கும் வந்தது. சமீபத்தில் கூட கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில் "என் ராசாவின் மனசிலே" படம் இப்போது வெளிவந்தால் அதிக நாள் தாக்குப்பிடிக்காது என்று சீண்டியிருந்தார். எனவே அடுத்த படமான "அரண்மனைக் கிளி" படத்திற்கு தானே நாயகனாக அரிதாரம் பூசிக்கொண்டு இயக்குனராகவும் ரிஸ்க் எடுத்தார் ராஜ்கிரண். அப்போது அவர் மலை போல நம்பியிருந்தது இளையராஜாவின் இசையை. இப்படத்தின் நாயகன் பெயரைக் கூட இளையராஜாவின் இயற்பெயரான ராசய்யா என்றே வைத்திருப்பார்.
ஆரம்பத்தில் குஷ்புவை ஒப்பந்தம் செய்து பின்னர் ஒதுக்கிவிட்டு அஹானாவை பிடித்தார். கூடவேஆன்றைய காலகட்டத்தில் குஷ்புவுக்கு குரல் கொடுத்த அனுராதா தான் அஹானாவுக்கு பின்னணிக் குரல். கூடவே காயத்ரி என்னும் இன்னொரு புதுமுகமும், முன்னர் என் ராசாவின் மனசிலே படத்தில் சிறுவேடத்தில் நடித்த வடிவேலுவும், விஜயகுமாரியும் நடித்திருப்பார்கள்.
இப்பதிவின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன், ராஜாவை நம்பினோர் கைவிடப்படார். அதையே தான் ராஜா தன் பாடல்களில் நிரூபித்திருந்தார். "அம்மன் கோயில் வாசலிலே" என்று மின்மினி குழு பாடும் பாடல், "நட்டு வச்ச ரோசாச்செடி" என்று பி.சுசீலா, " வான்மதியே" என்று எஸ்.ஜானகி, "ராசாவே உன்னை விட மாட்டேன்" என்று எஸ்.ஜானகி, "அடி பூங்கொடியே" என்று மனோ, மின்மினி குழுவினர், "ராத்திரியில் பாடும் பாட்டு" என்று மலேசியா வாசுதேவன், அருண்மொழி, மின்மினி குழுவினர், " என் தாயென்னும் கோயிலை" என்று இளையராஜா என்று மொத்தம் ஏழு முத்தான முழுப்பாடல்களையும் "துணிமேலே காதல்" மற்றும் "ராமர நினைக்கும் அனுமாரு" என்று படத்தில் வராத ஆனால் இசைத்தட்டில் மட்டும் வரும் பாடல்கள் என்று மொத்தம் ஒன்பது பாடல்களைக் கொடுத்து ராஜ்கிரணைக் காப்பாற்றி விட்டார் ராஜா. பாடல்களை வாலி மற்றும் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார்கள்.அந்தப் பாடல்களை இணைத்து செண்டிமெண்டாக ஒரு கதையும் பின்னி "அரண்மனை கிளி" யையும் வசூல் கிளியாக மாற்றி விட்டார் ராஜ்கிரண்.
இப்படத்தின் பின்னணி இசையைப் பொறுத்தவரை கிராமியப் படங்களுக்கு குறிப்பாக பாரதிராஜாவின் படைப்புக்களின் காட்சிகளின் அழகுணர்ச்சிக்கு மெருகூட்டுமாற்போலக் கொடுக்கும் பின்னணி இசை இப்படத்தில் இல்லை. அதற்கு காட்சி அமைப்புக்களின் தன்மையே காரணம் எனலாம். ஆனால் கிடைத்த வாய்ப்புக்களை வைத்துக்கொண்டு இப்படத்திலும் தன் பின்னணி இசைக் கைவரிசையைக் காட்டி விட்டார் இளையராஜா. இதோ அந்த இசைத் தொகுப்பு
அரண்மனை கிளி பூங்கொடி அறிமுகம், வீணை இசை கலக்க
ஏழைப் பெண் செல்லம்மா மனதில் ராசய்யா மீது காதல் பூக்கின்றது, "ராசாவே உன்னை விட மாட்டேன்" பாடலின் இசை புல்லாங்குழலில் கலக்க
செல்லம்மாவை சீண்டி அவளின் தோழிமார் பாடும் "அடி பூங்குயிலே பூங்குயிலே"
ராசய்யாவை நினைத்து பூங்கொடி காதல் கனவில் மிதத்தல் "வான்மதியே" பாடல் மெட்டோடு கலக்கிறது
பூங்கொடியை பெண் பார்க்க வருவோர்களை "அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" பாடி கலாய்த்தல் (பாடல்: மின்மினி)
செல்லம்மா, ராசய்யாவை நினைத்து காதல் வானில் சிறகடிக்கிறாள், "ராசாவே உன்னை விட மாட்டேன்" பாடல் கூட வருகின்றது
பூங்கொடி தன் காதல் கைகூடாதோ என்று கவலையில் இருத்தல்
செல்லம்மா காதல் தோல்வியில் துயர் அடைதல்
பூங்கொடி, ராசய்யா திருமண நாள்
ராசய்யா கவலையில் பாடும் "ராத்திரியில் பாடும் பாட்டு"
செல்லம்மா ஆபத்தான நிலையில்
மனம் பேதலித்த செல்லம்மாவை தன் வீட்டுக்கு அழைத்து வரும் பூங்கொடி, நிறைவுக்காட்சி
றேடியோஸ்புதிரின் கேள்வியாக இங்கே இரண்டு ஒலித் துண்டங்களை வைத்து கேட்கின்றேன். இரண்டுமே ஒரே படத்தில் இருந்து தான். முதலில் வரும் ஒலித்துண்டம் முன்னர் கிழக்கு வாசல் திரைப்படத்தில் இளையராஜா பாடி மிகப்பிரபலமான "வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" இந்தப் பாடலை குறித்த இந்தப் படத்தின் நாயகி பாடுமாற் போல ஒரு சிறுபாடலாக மின்மினி பாட வருகின்றது. இந்தப் பாடல் அமைந்த திரைப்படம் எது என்பதே கேள்வியாகும். இந்தப் படத்தின் மறுபாதிக்கும், இசையமைப்பாளருக்கு வாழ்வளித்த முதல் படத்தின் தலைப்பிற்கும் நெருங்கிய உறவு இருக்கின்றது.
இந்தப் படத்தின் நாயகன் ஒரு காலகட்டத்தில் திடீரென்று தன் வேஷ்டி உயரத்துக்கு புகழடைந்து எல்லாப் பிரபலங்களையும் கடந்து வந்த வேகத்தில் போய்ச் சேர்ந்தவர் மீண்டு(ம்) வந்திருக்கிறார் குணச்சித்திர நடிகராக. இங்கே கொடுத்திருக்கும் அடுத்த ஒலித்துண்டம் இப்படத்தின் இசையமைப்பாளரை அழைக்குமாற் போல அமையும் பாடலின் இசை, படத்தையும் காட்டிக் கொடுத்து விடும். கீகீகீ ;-)
கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராகத் தமிழ் சினிமாவின் வரலாற்றின் விலக்கமுடியாத கலைஞன் எம்.என் நம்பியார் இன்று இவ்வுலகை விட்டு நீங்கியிருக்கின்றார். அவர் நினைவாக எம்.என்.நம்பியார் நடித்த திரைப்படங்களில் இருந்து சில பாடல்களை அஞ்சலிப் பகிர்வாகத் தருகின்றேன்.
மக்களைப் பெற்ற மகராசி திரைப்படத்தில் இவர் நாயகனாக நடித்த பாடல் காட்சி
குணச்சித்திர நடிகராக "தூறல் நின்னு போச்சு" படத்தில் ஏரிக்கரைப் பூங்காற்றே பாடல் காட்சியில் (பின்னணி குரல் ஜேசுதாஸ்)
பதினோரு வேடங்களில் இவர் நடித்த "திகம்பர சாமியார்" படப் பாடல்
கதாநாயகனாக நடித்த "கவிதா" திரைப்படப் பாடல்
தற்ஸ் தமிழில் வந்த எம்.என்.நம்பியார் குறித்த ஆக்கம் சென்னை: அமரர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் பழம்பெரும் நடிகருமான எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.
உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.
வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.
எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நப்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:
எனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.
அந்த விழாவில் தலைமை விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். கடைசியாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார்.
நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி.
தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.
திகம்பரசாமியார் எனும் சூப்பர் ஹிட் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார் என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது.
நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதாராகவே வாழ்ந்தார் நம்பியார்.
பாஜகவின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாறன் நம்பியார் இவரது மகன்தான்.
திரையுலகம் என்பது வாய்ப்பைத் தேடிப் போன எல்லோருக்குமே தன் வாசல் கதவைத் திறந்து விடவில்லை. அதே போல் என்னதான் திறமைசாலிக என்றாலும் மேலதிகமாக அதிஷ்ட தேவதையும் கரம் பற்றாவிட்டால் தொலைந்து போகும் மாய லோகம் அது. றேடியோஸ்புதிரில் பிரபலமான பல இசையமைப்பாளர்களது பாடல்கள் குறித்த பதிவுகள் வந்திருக்கின்றன. அவ்வப்போது அத்திப் பூக்களாய் வந்த இசையமைப்பாளர்களது தொகுப்பும் இடம் பெற்றிருக்கின்றது. அந்த வகையில் இன்று நான் தரப்போகும் புதிர் உங்களில் பலருக்கு அறிமுகம் இல்லாத இசையமைப்பாளர்.
தொண்ணூறுகளில் தாயகத்தில் இருந்த போது சக நண்பர் வட்டத்தோடு கேட்டு ரசித்து அனுபவித்த பாடல்களில் இதுவுமொன்று. ஏனோ இப்பாடலில் ஒரு ஈர்ப்பும் இருக்கின்றது. இனிய இசையும் வித்தியமெட்டும் தான் காரணமோ? இந்தப் பாடலை இங்கே முழுமையாகத் தருகின்றேன். கேள்வி இது தான். இந்தப் பாடலுக்கு இசை வழங்கிய இசையமைப்பாளர் உங்களுக்கு எல்லாம் பரவலாக அறிமுகமான பிரபல பதிவரின் உறவினர். இவர் தனது பதிவொன்றில் இந்த இசையமைப்பாளர் குறித்து ஒரு வரியில் சொல்லியிருக்கின்றார். குறித்த இசையமைப்பாளர் யார் என்பதைக் கண்டுபிடிக்க கஷ்டப்படுவீர்கள் எனவே அந்த பதிவர் யார் என்று சொல்லி விடுங்களேன், கூடவே அவர் குறிப்பட்ட அவரின் உறவினரான இசையமைப்பாளர் பெயரைச் சொன்னால் போனஸ் வாழ்த்துக்கள் ;-) பாடலுக்குள்ளே இப்பாடலுக்காக இசையமைத்த படத்தின் பெயரும் இருக்கின்றது. இந்தப் பதிவர் பெயரின் பாதி பிரபல ஹிந்திப் பாடகியின் பெயர் ஆகும். அவர் அகத்தியன் இயக்கிய படமொன்றில் பாடிய பாடகி. இந்தப் பதிவரின் வலைப்பக்கத்தின் பெயர் புரட்சித் தலைவர் நடித்த படமொன்றின் தலைப்பு ;)
மேற் சொன்ன புதிருக்கான விடை:
அந்தப் பதிவர்: இளா அவரின் பெயரில் உள்ள பாடகி: காதல் கவிதை படத்தில் பாடிய பிரபல ஹிந்தி பாடகி இளா அருண். அவரின் வலைப்பக்கம்: விவசாயி அவரின் சொந்தக்கார இசையமைப்பாளர்: இவரின் மாமன் முறையான திலீப் என்ற செந்தில்நாதன், மனோ, சுவர்ணலதா குரல்களில் ஒலித்த இந்த அருமையான பாடல் இடம்பெற இருந்த திரைப்படம்: பவளக்கொடி பின்னர் இந்தப் பாடல் தாட் பூட் தஞ்சாவூர் என்ற திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. இளா தன்னுடைய இந்தப் பதிவிலே தன் உறவுக்கார இசையமைப்பாளர் பற்றி ஒன்பதாவது கேள்விக்கான பதிலாக சொல்லியிருக்கிறார்.
பதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்புக்களோடு தொடர் வெற்றிகளாக வந்த வரிசையில் அவருடைய வெற்றிச் சுற்றில் ஒரு தற்காலிக அணை போட்டது ஐந்தாவதாக தமிழில் வந்த "நிறம் மாறாத பூக்கள்" படத்தின் பெருவெற்றி. அந்தப் படத்தைத் தொடர்ந்து வந்த கல்லுக்குள் ஈரமும், நிழல்கள் படமும் வர்த்தக ரீதியில் எடுபடாத படங்கள். அவர் மீண்டு வந்தது அந்த இரண்டு படங்களின் தோல்விகளைத் தொடர்ந்து அப்போதைய இவரின் உதவி இயக்குனர் மணிவண்ணன் கதையில் வந்த அலைகள் ஓய்வதில்லை.
"நிறம் மாறாத பூக்கள்" படம் எடுத்த எடுப்பிலேயே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி குரலில் கடவுள் வாழ்த்தோடு "லேனா புரொடக்க்ஷன்ஸ்" தயாரிப்பில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த படம். பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வெற்றிப்படங்கள் சிலதைப் பார்க்கும் போது காலமாற்றமோ என்னவோ அதிகம் ரசிக்கமுடிவதில்லை. அந்தந்தக் காலகட்டத்தின் நிகழ்வாகவோ அல்லது அந்தக் காலத்துக்கு மட்டுமே பொருந்தும் கதைக்களனாகவோ அவை இருப்பதும் ஒரு காரணம். முப்பது வருஷங்களுக்கு முன்னால் வந்த வெற்றிப் படம் என்றாலும் அதே புத்துணர்வோடு மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடிய சிறப்பை இது கொடுத்திருக்கின்றது.
இப்படத்தின் கதை, அப்போது உதவி இயக்குனராக இருந்த கே.பாக்யராஜின் கைவண்ணத்தில் இருக்கின்றது. இவர் ஏற்கனவே சிகப்பு ரோஜாக்கள் படத்தின் கதையும் எழுதியவர். தொடர் வெற்றிகளாகக் குவித்த பாரதிராஜாவின் வெற்றியில் பாக்கியராஜுக்கும் பெரும் பங்கு இருக்கின்றது என்று அப்போது ஒரு பத்திரிகை எழுத, அது பாரதிராஜாவின் கோபத்தினை எழுப்பியதை மீண்டும் ஒரு பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன்னர் நினைவுபடுத்தியிருந்தது. வசனத்தினை பஞ்சு அருணாசலம் எழுத, பாடல்களை கண்ணதாசன், கங்கை அமரன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் எழுதியிருக்கின்றார்கள். இப்படத்தில் உதவி இயக்குனர்களாக இருந்து பின்னர் பேசப்பட்டவர்கள் கே.ரங்கராஜன் மற்றும் மனோபாலா. ஆனால் இணை இயக்குனர் என்று பெயர் போட்டிருந்த ஜே.ராமு எங்கே என்று தெரியவில்லை, அல்லது பெயர் மாற்றிக் கொண்டு வந்தாரோ தெரியவில்லை. முன்னர் ஊரில் வின்சர் திரையரங்கில் ஓடியதாகவும், கே.எஸ்.ராஜாவின் கம்பீரமான குரலில் திரை விருந்து படைத்ததும் தூரத்து நிழலாக நிற்கும் நிஜங்கள்.
றேடியோஸ்புதிரில் பின்னூட்டிய ஆளவந்தான் சொன்னது போல இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்துமே அவரவர் பெயர்களிலேயே வந்ததும் ஒரு சிறப்பு. பின்னூட்டத்தில் தங்கக்கம்பி சொன்னது போல முதன் முதலாக பாரதிராஜாவின் படத்திற்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் "முதன் முதலாக" என்று பாடி தொடர்ந்ததும் இப்படத்தில் இருந்து தான்.
இப்படத்தின் முதல்பாதி ஏழை சுதாகர் பணக்கார ராதிகா காதலை முக்கியப்படுத்தி சென்னையைச் சுற்றி வருகின்றது. அடுத்த பகுதி விஜயன் ரதியின் பணக்காரத்தனமான காதல் ஊட்டியை வலம் வருகின்றது. நிவாசின் கமராவுக்கே ஜலதோஷம் பிடித்து விடும் அளவிற்கு குளு குளு காட்சிகள் பின் பாதியில். ஆனால் இப்படியான ஒரு சிறந்த களத்திற்கு பாலுமகேந்திராவின் கமரா கண் மட்டும் இருந்தால் இன்னும் ஒரு படி மேல் போயிருக்குமே என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. அசாதாரண திருப்பங்களோ, கதைப்பின்னல்களோ இல்லாவிட்டாலும் புத்திசாலித்தனமான திரைக்கதை அமைக்கும் பாணி இருந்தால் முப்பது வருஷத்துக்குப் பின்னரும் சிகரெட் இடைவேளை எடுப்பவர்களையும் கட்டிப் போட்டு விடும் சாமர்த்தியம் தெரிகின்றது. ஆனால் ஐம்பது பைசா சுதாகர் பின்னர் ஐந்து லட்சத்தோடு ஓடி விட்டார் என்றால் பின்னர் ஏன் ஊட்டியில் வந்து புல்லு நறுகணும், அதைப் பார்த்து ராதிகா ஏன் வெறுக்கணும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ஐம்பது பைசாவுக்கு அலையும் அப்பாவி சுதாகர் பாத்திரமும், கிழக்கே போகும் ரயில் படத்தில் தமிழைக் கதறக் கதறக் கொலை செய்த ராதிகாவின் இங்கிலீஷ் தனமான பேச்சுக்கு துணையாக இந்தப் படத்தில் அவரின் பணக்காரத் தனமான பாத்திரமும் சிறப்பு என்றால், "நானே தான்" என்று குரல் கொடுக்கும் பக்கத்து வீட்டு விரகதாபப் பாத்திரம் பாக்யராஜின் ஐடியா போலும். ஒரு காலகட்டத்தில் இந்த வசனம் அடிக்கடி பலர் வாயில் ஏற்ற இறக்கத்தோடு பேசியதை அரைக்காற்சட்டை வயசில் கேட்டிருக்கிறேன் ;-)
கொஞ்சமே காட்சிகளில் வந்தாலும் மின்னுகிறார் ரதி, அவருக்கு குரல் கொடுத்தவரின் குரல் அளவாகப் பொருந்தியிருக்கிறது. இந்தப் படம் எடுக்கும் வேளை ஹிந்திப் படவாய்ப்புக்கள் இவருக்கு வந்து அதனால் மட்டம் போட்டு பாரதிராஜாவின் வெறுப்பைச் சம்பாதித்து பின்னர் இவரின் காட்சிகளை தன் உதவியாளர்களை வைத்தே எடுத்ததாகவும், படம் எடுத்து முடிந்த பின்னர் ரதியின் தாயார் பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேள் என்று வருந்தியதாகவும், அப்போது ரதி பாரதிராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் சமீபத்திய பேட்டியில் பாரதிராஜா குறிப்பிட்டிருக்கின்றார்.
இப்படத்தின் முத்திரை நடிப்பு என்றால் அது மறைந்த விஜயன் நடிப்பு தான். தனது முந்திய படங்களில் பெரும்பாலும் கிராமியத்தனமான பாத்திரங்களில் நடித்தவருக்கு கூலிங் கிளாசும், மதுப்புட்டியோடும் வந்து விரக்தியான வசனங்களை உதிர்க்கும் ஊட்டிப் பணக்காரர் வேஷம் கச்சிதமாக இருக்கும் அதே வேளை, அந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்த பாரதிராஜாவின் குரலுக்கும் பாதிப் புண்ணியம் போய்ச் சேரவேண்டும். "மெட்ராஸ் கேர்ள்" என்றவாறே அவர் பேசும் வித்தியசமான பேச்சு நடை சிறப்பாக இருக்கின்றது. விஜயன் போன்ற இயல்பான நடிகரைத் தமிழ் சினிமா தொலைத்த பாவம் சும்மா விடாது.
ஆக மொத்தத்தில் "நிறம் மாறாத பூக்கள்" எத்தனை வருஷங்கள் கடந்தாலும் நிறம் இழக்காத பூக்கள்.
சரி, இனி முக்கியமான இன்னொரு விஷயத்துக்கு வருவோம். இப்படத்தின் இசையை வழங்கிய இளையராஜா தன் நண்பன் பாரதிராஜாவுக்கு கொடுத்த இன்னொரு நெல்லிக்கனி. "முதன் முதலாக காதல் டூயட்", "இரு பறவைகள் மலை முழுவதும்", "ஆயிரம் மலர்களே" போன்ற இனிமையான பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, ஜென்ஸி, சைலஜா ஆகியோர் பாடியிருக்கின்றார்கள். கூடவே "இரு பறவைகள் மலை முழுவதும்" பாடலின் சோக மெட்டை சசிரேகாவும், "காதலிலே" என்ற சின்னஞ்சிறு பாட்டை இளையராஜாவும் பாடியிருக்கின்றார்கள் என்றாலும் இவர்களை பாடியவர்கள் பட்டியலில் டைட்டில் கார்ட்டில் போடவே இல்லை. இந்த இரண்டு பாடல்களும் இசைத்தட்டில் கிடையாது. படத்துக்காக மேலதிகமாகப் போடப்பட்டவை. அவற்றையும் இந்தத் தொகுப்பில் கொடுத்திருக்கின்றேன்.
பின்னணி இசையினைப் பொறுத்தவரை, அன்னக்கிளி தொடங்கி தொடர்ந்த ஒரு சில வருஷங்களுக்கு இளையராஜாவை மேற்கத்திய வாத்தியங்களுக்கு அதிகம் வேலை வைக்காத படங்கள் வாய்த்ததாலோ என்னவோ அவரின் ஆரம்ப காலப்படங்களின் பின்னணி இசை தாரை தப்பட்டை வகையறாக்களின் தாகம் தூக்கலாக இருந்தது. ஆனால் நிறம் மாறாத பூக்கள் தான் இளையராஜாவின் பின்னணி இசைப்பயணத்தின் முக்கியமான ஒரு திருப்பம் என்பேன். இதில் பாவித்திருக்கும் மேற்கத்திய வாத்தியங்களின் சுகமான பயணம் படத்துக்குப் பெரியதொரு பலம். குறிப்பாக கிட்டார், வயலின் போன்றவற்றின் பயன்பாடு தனித்துவமாக இருக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் தான் வயலின் மேதை நரசிம்மன் போன்றோர் ராஜாவுடன் இணைந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன். இந்த இசைப் பிரித்தெடுப்பில் 23 ஒலிக்கீற்றுக்கள் உள்ளன. மொத்தமாக ஐந்தரை மணி நேர உழைப்பு ;-)
முக்கியமான இன்னொரு விஷயம், இந்த றேடியோஸ்பதியின் முக்கியமான சிக்கலில் ஒன்று, தளத்தில் இருக்கும் ஒலி இயங்குகருவிகள் வேலை செய்வதில்லை என்ற பலரின் குற்றச்சாட்டு இன்று தீர்க்கப்பட்டிருக்கிறது. அதற்கு பெரும் நன்றி நண்பர் சயந்தனுக்கு உரித்தாகட்டும். இந்த ஒலி இயங்கு கருவி எப்படி இருக்கின்றது என்று சொல்லுங்களேன்.
சரி இனி நான் பேசப் போவதில்லை ராஜாவின் பின்னணி இசை உங்களோடு பேசட்டும்.
படத்தின் முகப்பு இசை, ஆயிரம் மலர்களே சங்கதியோடு கலக்கும் சிறப்புப் படையல்
சுதாகர் டயரியைப் படிக்கும் ராதிகா. புல்லாங்குழல் இசை பின்னர் வயலினுக்கு கலக்க
விஜயன் அறிமுகக் காட்சி, "ஆயிரம் மலர்களே மலருங்கள்" சிறு பகுதியோடு கூடவே அவர் ஆற்றோடு உரையாடுவது "நான் மட்டும் அகத்தியனா இருந்தா இந்த உலகத்து தண்ணியெல்லாம் ஒரு சொட்டாக்கிக் குடிச்சிருபேன்", கூடவே வயலின் அழுகிறது.
ராதிகாவின் காதல் தோல்வியில் "இரு பறவைகள் மலை முழுவதும்" சசிரேகா பாடும் சோகப் பாட்டு
"இன்னும் என் கனவுகளில் , கற்பனைகளில் நான் அவளோடு வாழ்ந்துகிட்டு தான் இருக்கேன்" ஆயிரம் மலர்களே பாடலை கிட்டார் துள்ளிசைக்க விஜயன் ராதிகா உரையாடல்
ரதியை பற்றி விஜயன் சொல்லும் காட்சிகள், கிட்டார் மீண்டும் "ஆயிரம் மலர்களே" இசைக்க
ரதியின் பின்னால் துரத்தும் விஜயன், அதை இசைஞானி வயலின்கள் மூலம் துரத்துவார்
ரதியின் காதலை யாசிக்க விஜயன் அலைதல், இங்கே அதீத ஆர்ப்பரிப்பில் இசை
விஜயன், ரதியிடம் கெஞ்சலாகக் கேட்கும் காதல் யாசகம், வயலின் அழுகையோடு மனப்போராட்டம். ஒற்றை வயலின் சோக மெட்டைக் கொடுக்க, மற்றைய வயலின்கள் போராடும், கிட்டாரில் ஆயிரம் மலர்களே மெட்டுத்தாவ இருவரும் காதலில் ஒன்று கலக்கின்றார்கள்.
ராதிகா, விஜயனின் கதையைக் கேட்டு உரையாடல்,"ஆயிரம் மலர்களே" பாடலோடு விஜயன் தன் காதல் நினைவுகளுக்கு மீண்டும் தாவல்.
ரதி-விஜயன் விளையாட்டுத்தனமாக செய்யும் வினைகள், தாள வாத்தியங்களின் கலவையோடு ஆபத்தை கட்டியம் காட்டுகிறது
ரதி-விஜயன் விளையாட்டு வினையாகி, ரதி ஆற்றோடு போதல், முன்னர் பயன்படுத்திய தாள வாத்தியஙகளோடு ஒற்றை வயலின் சோக இசை
"ஆயிரம் மலர்களே" பாடல் ஆண் குரல்களின் ஹோரஸ் இசையாக மட்டும்
ராதிகா - விஜயன் இருவரும் ஒரே நிலையில் இருப்பதாக காட்டும் காட்சி சைலஜா "ஆயிரம் மலர்களே" பாடலைப் பாடுவதோடு மலேசியா வாசுதேவனும் கலக்கிறார்.
சுதாகரை மீண்டும் காணும் ராதிகா, "காதலிலே ஒர் கணக்கு" இளையராஜா மேலதிகமாகப் பாடிக் கொடுத்த பாடல் துண்டத்தோடு
விஜயன் தன் ரதி இறந்த அதே நாளில் அவளைத் தேடி ஆற்றில் போதல், வயலின் களின் அலறலோடு தாள வாத்தியங்களின் பயமுறுத்தல், முடிவில் சலனமில்லாத ஆறு, ஆற்றில் தொலையும் காதல் "ஆயிரம் மலர்களே மலருங்கள்" பாடலோடு நிறைவுறுகின்றது.
ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர் ராகவேந்தனின் பின்னணி இசை கலந்து வருகின்றது. இந்தப் புதிரில் வரும் ஒலிப்பகிர்வு லாலலா லாலலா லாலலா என்று வருகின்ற ஒரு பின்னணிபாடல் மெட்டோடு கலக்கும் பின்னணி இசை இது.
இப்படம் குறித்து அதிக உபகுறிப்புக்கள் தேவை இல்லை என்றாலும் கொடுக்கின்றேன். இப்படத்தின் கதாசிரியர் பின்னாளில் பிரபலமான இயக்குனரார். இப்படத்தின் நாயகன் பின்னாளில் பின்னாளில் வேற்று மொழியில் பிரபல நகைச்சுவை நடிகனாரர். இப்படத்தின் இன்னொரு நாயகன் படத்தில் வருவது போலவே மதுவுக்கு அடிமையாகி பின்னர் படத்தின் இறுதிக் காட்சி போலவே அல்ப ஆயுசில் போய்ச் சேர்ந்து விட்ட நல்ல நடிகர்.
சரி இனி இந்தப் படம் என்னவென்று சொல்லுங்களேன், உங்கள் நினைவு மாறாமல் இருந்தால் ;-)
கடந்த றேடியோஸ்புதிரில் "நெற்றிக்கண்" திரைப்படத்தின் பின்னணி இசையைக் கொடுத்து ஒரு புதிரைக் கேட்டிருந்தேன். இயக்குனர் கே.பாலசந்தர் முன்னர் தனது நண்பர்களுடன் இணைந்து "கலாகேந்திரா" என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை ஏற்படுத்தி தனது இயக்கத்திலேயே பல படங்களை இயக்கியிருந்தார். பின்னர் 1981 இல் கவிதாலயம் என்ற பெயரில் (பின்னர் கவிதாலயா ஆயிற்று) தயாரிப்பு நிறுவனம் ஏற்படுத்தி வெளியாட்களையும் தனது தயாரிப்பில் படங்கள் இயக்கச் செய்தார். அந்த வரிசையில் கவிதாலயம் தயாரித்த முதல் படமே "நெற்றிக்கண்" இதன் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.
லீலைகள் செய்யும் கிருஷ்ணன் போல தந்தையும், அடக்கமான ராமன் போல மகனுமாக இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த் செய்திருப்பார். கூடவே லஷ்மி, சரிதா, மேனகாவுடன் பின்னாளில் அதிரடி நாயகியாக விளங்கிய விஜயசாந்தி இப்படத்தில் ஒரு ரஜினிக்கு மகள், இன்னொரு ரஜினிக்கு தங்கையாக சிறுவேடமொன்றில் நடித்திருப்பார்.
இப்படத்தின் இசை, இசைஞானி இளையராஜா. பாடல்களைப் பொறுத்தவரை, "ராமனின் மோகனம்" (கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி), "தீராத விளையாட்டு பிள்ளை" (ஏஸ்.பி.பாலசுப்ரமணியம்), "மாப்பிளைக்கு மாமன் மனசு" (மலேசியா வாசுதேவன், பி.சுசீலா), "ராஜா ராணி ஜாக்கி" (எஸ்.பி.சைலஜா, மலேசியா வாசுதேவன்)ஆகிய பாடல்கள், எல்லாமே ரசிக்கக் கூடியவை.
இளையராஜாவின் ஆரம்பகாலப் படங்களில் பின்னணி இசையில் பெரிய அளவிற்கு இப்படம் முத்திரை பதித்தது என்று சொல்வதற்கில்லை. காரணம் இந்த முழுநீள மசாலாப்படத்தில் இசையால் தூக்கி நிறுத்தும் காட்சிகளுக்குப் பதில் ரஜினியின் ஸ்டைல் நடிப்பையே நம்பியிருக்கின்றார்கள். ஆனாலும் படத்தின் முகப்பு இசையும், பின்னர் இங்கே நான் கொடுத்திருக்கும் இசைத் தொகுப்புக்களும், இப்படத்திலும் தன்னைக் காட்ட முடியும் என்று ராஜா உணர்த்தியிருக்கின்றார். ஓவ்வொரு படத்திலும் குறித்த ஒரு வாத்தியத்தின் முக்கியத்துவத்தைக் காட்டும் ராஜா இப்படத்தில் வயலினை முக்கியத்துவப்படுத்தியிருக்கின்றார் என்பதை இப்படப் பின்னணி இசைத் தொகுப்பில் இருந்து கண்டு கொள்ளலாம்.
இசை 1 படத்தின் முகப்பு இசை, இதில் கலவையாக மெல்லிசையும், ஆர்ப்பரிக்கும் வாத்திய இசையும், கூடவே ராமனின் மோகனம் பாடலை நினைவுபடுத்தும் அந்த மெட்டிசையும் விரவியிருக்கின்றது.
இசை 2 மகன் ரஜினியை நல்லவர் என்பதைக் காட்டும் காட்சி. இதில் புல்லாங்குழல் ஆரம்பத்துடன், கிட்டார் இசை கலக்கின்றது.
இசை 3 தந்தை ரஜினி சில்மிஷ மன்னர் என்பதைக் காட்ட குறும்போடு வரும் இசை முன்னதில் இருந்து வேறுபட்டது. 2.30 நிமிடங்களுக்கு வசனமே இல்லாமல் இவரின் அறிமுகக் காட்சி இசையாலேயே நிரப்பப்பட்டிருக்கின்றது.
இசை 4 மேலே இசை 3 இல் தந்த தந்தை ரஜனிக் காட்சியின் இசைத்துண்டில் இருந்து வயலின் வாசிப்பை மட்டும் பிரித்தெடுத்துத் தருகின்றேன். இந்த இசை தான் இப்படத்தின் உயிர்நாடி இசை. தந்தை ரஜினி வரும் காட்சிகள் பலவற்றில் இதுதான் பயன்பட்டிருக்கின்றது.
இசை 5 இசை 3 மற்றும் இசை 4 இல் தந்த அந்த வயலின் இசை நோஸ்ட்ஸ் விசில் சத்த வடிவில், அப்பா ரஜினி தன் சில்மிஷத்தை ஆரம்பிக்கத் தயாராக இருக்கிறார் என்பதைக் காட்ட.
இசை 6 இசை 3, இசை 4 மற்றும் இசை 5 இல் வந்த அதே இசை இங்கே வயலினில் சற்று மெதுவாக. அப்பா ரஜினி சரிதாவிடம் அடி வாங்கிய ஏமாற்றத்தில் இருப்பதைக் காட்ட
இசை 7 மேலே இசை 4, 5, 6 இல் வந்த அதே இசை மெதுவாக வயலின் இசைக்கப்படுகின்றது. மனைவியிடம் மாட்டிய ரஜினி
இசை 8 மேனகா, ரஜினி மீது காதல் கொள்ளும் காட்சி, ராமனின் மோகனம் பாட்டின் மெட்டு புல்லாங்குழல் இசையாக.
இசை 9 மேலே இசை 8 இல் தந்த ராமனின் மோகனம் மெட்டு சோக இசை புல்லாங்குழலில், மேனகா காதல் தேல்வி விரக்தியில்
இசை 10 ராமனின் மோகனம் பாடல் சோகப் பாடலாக எஸ்.ஜானகி படத்தில் மட்டும் பாடும் பாடல், இசைத்தட்டில் இது இருக்காது.
இந்த வார றேடியோஸ்புதிர் மூன்று வார இடைவெளியின் பின் மீண்டும் பட்டையைக் கிளப்பும் ராஜாவின் பின்னணி இசையோடு வருகின்றது.
கேள்வி இதுதான். இப்படம் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவர் நடித்த படம். 1981 இல் வெளிவந்த அப்படத்தின் பின்னணி இசையை இங்கே கொடுத்திருக்கின்றேன். இந்தப் படத்தில் நாயகனின் தங்கையாக சிறு வேடத்தில் நடித்தவர் 11 வருஷம் கழித்து 1992 இல் அதே நாயகனுக்கு நிகரான பாத்திரத்தில் நடித்தவர். அந்த நாயகி யார் என்பதே கேள்வி.
இங்கே கொடுக்கப்பட்டிக்கும் 1981 இல் வெளிவந்த அப்படத்தின் பின்னணி இசையே சுலபமாக உங்களுக்கு மேலதிக தகவலைக் கொடுக்க இருக்கின்றது. அதை நீங்களே கேட்டுப் புரிந்தால் வெற்றிக்கனி, இல்லாவிட்டால் குற்றம் குற்றமே ;-)
மேலே உள்ள ஒலிச்சுழலில் கேட்க வசதி இல்லாதவர்களுக்காக இந்த ஒலிச்சுழல்
மேலே கொடுக்கப்பட்ட போட்டிக்கான பதில்;
அந்த நடிகை விஜயசாந்தி. 33 பேர் சரியான பதில் அளித்திருக்கின்றீர்கள். இவர் 1981 இல் வெளிவந்த "நெற்றிக்கண்" திரைப்படத்தில் அப்பா ரஜினியின் மகளாகவும், மகன் ரஜினியின் தங்கையாகவும் சிறு வேடம் ஏற்றவர், பின்னர் 1992 இல் வெளிவந்த மன்னன் திரைப்படத்தில் ரஜினியின் ஜோடியாக சவால் விடும் பாத்திரத்தில் நடித்தார். இப்போட்டியில் கேட்கப்பட்ட அந்தக் காட்சியின் பாடல் நெற்றிக் கண் படத்தில் இருந்து "மாப்பிளைக்கு மாமன் மனசு" (youtube; ivanrockyrock)
எண்பதுகள் என்பது தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத இளையராஜா காலம். தீபாவளிப் படங்களில் எல்லாமே ராஜாவின் இசையில் பல வருடங்களாக வந்த காலமும் இருக்கின்றது, அதே போல் அந்தக் காலகட்டத்தின் முதல் வரிசை நாயகர்களின் முதல் தேர்வே இளையராஜாவாகத் தான் இருந்தது. அந்த வேளையில் சிறு முதலீட்டில் உருவான படங்களுக்கும், பெரிய நாயகர்கள் நடித்த ஒரு சில படங்களுக்கும் ஆபத்பாந்தவர்களாக இருந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் சங்கர்-கணேஷ், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன் வரிசையில் மிக முக்கியமாகக் குறிப்படத்தக்கவர் இசையமைப்பாளர் சந்திரபோஸ்.
1978 இல் வெளியான "மச்சானைப் பார்த்தீங்களா" திரைப்படம் சந்திரபோஸுக்கு நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்திருந்தது. அதில் குறிப்பாக "மாம்பூவே சிறு மைனாவே" பாடல் காலத்தால் விஞ்சிய ஒரு தேன் விருந்து.ஒரு சிறு இடைவெளிக்குப் பின் சந்திரபோஸின் அலை அடிக்க ஆரம்பித்தது கே.பாலாஜியின் "விடுதலை" திரைப்படத்தின் மூலம். எண்பதுகளின் மத்தியிலே கே.பாலாஜியின் மொழிமாற்றப்படங்களிலே கங்கை அமரனுக்கு மாற்றீடாக "விடுதலை" (குர்பானியின் மொழிமாற்றம்)திரைப்படத்தில் சந்திரபோஸின் இசைதான் வந்து கலக்கியது. பொதுவாக இப்படியான மொழிமாற்றுப் படங்களிலே மூலப்படங்களின் பாடல்கள் முழுவதையுமே நகல் எடுப்பது வழக்கம். ஆனால் "விடுதலை" திரைப்படத்துக்காக விஷேஷமாக சந்திரபோஸால் மெட்டமைக்கப்பட்ட "நீலக்குயில்கள் ரெண்டு" பாடல் மீண்டும் இவர் அடுத்த இசையாட்டத்தில் ஆட சிறப்பானதொரு வாய்ப்பைக் கொடுத்தது. அடுத்த சில ஆண்டுகளில் ஏ.வி.எம் நிறுவனத்தின் செல்ல இசையமைப்பாளரானார்.
சந்திரபோஸின் இசை ஜாலங்கள் ராஜாவின் இசையைப் போல மந்திரித்து வைக்கவில்லை என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இளையராஜாவுக்கு சவால் இளையராஜாவே தான். ஆனால் அவருக்கு அடுத்த வரிசை இசையமைப்பாளர்களில் தனித்துவம் மிக்கவராக சந்திரபோஸ் இருந்ததாலேயே மற்றைய இசையமைப்பாளர்களை ஓரம் கட்டிவிட்டு அவரின் இசையில் மலர்ந்த பாடல்கள் ரசிகர்களின் காதுகளை வெகுவாக ஆக்கிரமித்தன. இளையராஜா என்னும் மகா கலைஞன் இசையாட்சி நடத்திக் கொண்டிருக்கும் வேளை அவருக்கு ஈடு கொடுத்து இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்களையும் ரசிகர்களைக் கேட்க வைக்க இன்னொருவருக்கும் திறமையும் வல்லமையும் வேண்டும். அந்த வல்லமை சந்திரபோஸிற்கு இருந்திருக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் ராஜாவைச் சீண்டவோ என்னவோ "வில்லதி வில்லனையும் ஜெயிச்சுடுவேன், நான் ராஜாதிராஜனையும் தோற்கடிப்போன்" என்று மதுரைக் காரத் தம்பி திரைப்படத்திலும், கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் வந்த "அண்ணனுக்கு ஜே" படத்தை சீண்டுமாற் போல என்று நினைக்கிறேன் "உங்கப்பனுக்கும் பே பே" என்று "ராஜா சின்ன ரோஜா"விலும் பாட்டுப் போட்டிருந்தார் சந்திரபோஸ். ராஜா-வைரமுத்து விரிசல் கடலோரக் கவிதைகளைத் தொடர்ந்து வரவும், வைரமுத்துவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது சந்திரபோஸ் இசையமைத்த படங்கள். சொந்தக்காரன் திரைப்படத்தில் வைரமுத்துவின் குரலையும் பயன்படுத்தி ஒரு பாடலும் பண்ணியிருக்கிறார். இசையமைப்பாளர் சந்திரபோஸை வானொலிப் பேட்டி ஒன்று எடுத்து அவர் காலகட்டத்து இசையனுபவங்களைத் திரட்டவேண்டும் என்பது என் வெகுநாட் கனவு.
உண்மையில் கடந்த றேடியோஸ்புதிரைத் தொடர்ந்து இன்னொரு இசைப்படைப்பைத் தான் கொடுக்க இருந்தேன். ஆனால் என் நினைப்பை மாற்றி சந்திரபோஸின் பாடல்களையே முழுமையாகக் கொடுக்க ஏதுவாக அமைந்தது, கடந்த புதிரின் பின்னூட்டம் வாயிலாக R.லதா, இசையமைப்பாளர் சந்திரபோஸ் குறித்து வழங்கிய இந்தக் கருத்துக்களை அவருக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டே பகிர்கின்றேன்.
From: R.Latha on Mon Feb 18 5:31:35 2008. தமிழ் சினிமாவில் 350-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். இதில் ரஜினி நடித்த மனிதன், ராஜா சின்னரோஜா உள்ளிட்ட ஏவி.எம்.மின் தயாரிப்பில் வந்த 12 படங்களும் அடங்கும். 1977-ல் தொடங்கிய இவரது இசை சாம்ராஜ்யம் தொடர்ந்து 20 வருடங்களுக்கும்மேலாக நிலைத்தது.
ஒய்வெடுக்கிறாரோ என்ற யோசித்த நேரத்தில் இதோ வந்து விட்டேன் என்று சின்னத்திரையில் ஆஜர். இம்முறை இசையமைப்பாளராக அல்ல, நடிகராக. மெட்டிஒலி சித்திக் தயாரித்த மலர்கள் தொடரில் லிங்கம் என்ற வில்ல கேரக்டரில் தனது நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்தவும் செய்தார்.
இந்த லிங்கம் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு இவரை தொடர்ந்து நடிப்புக்கு முகம் காட்ட வைத்தது. இந்த கேரக்டரில் இவரது நடிப்பை பார்த்த டைரக்டர் தினேஷ் இவரை தனது கத்திக்கப்பல் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் போட்டு விட்டார்.அதோடு ஏவி.எம்.மின் வைர நெஞ்சம் தொடரிலும் மாமனார் கேரக்டரில் குணசித்ர நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். மெகா சேனலில் இப்போது திகிலும் தெய்வீகமுமாய் யார் கண்ணன் இயக்கத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜனனம் தொடரில் வைத்தியராகவும் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
"இனி தொடர்ந்து நடிப்பு தானா?''
ஜனனம் தொடர் படப்பிடிப்பில் இருந்தவரிடம் கேட்டபோது...
"நடிக்கும் ஆசையில் தான் சினிமாத் துறைக்கே வந்தேன்.ஆனால் வெளிப்படுத்த முடிந்தது எனக்குள் இருந்த இசையைத்தான். 12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கவந்து விட்டேன். கலைஞர் நடித்த மணிமகுடம் நாடகத்தில் கூட நடித்திருக்கிறேன். கலைஞரின் பராசக்தி நாடகமாக நடந்தபோது அதிலும் நடித்திருக்கிறேன்.என் நடிபபில் எனக்கே திருப்தி ஏற்பட்ட நேரத்தில் தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன்.எதிர்பாராமல் இசையமைப்பாளராகி அதில் பிரபலமான நேரத்தில் நடிப்பு ஆசையை ஒத்தி வைத்தேனே தவிர, நடிப்பார்வம் உள்ளூர கனன்று கொண்டுதான் இருந்திருக்கிறது. அதுதான் இத்தனை வருடம் கழித்து மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இசையமைப்பில் சாதித்ததையும் தாண்டி நடிப்பில் சாதிக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு எனக்குள் விதவித கேரக்டர்களாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.''
இப்படி சந்திரபோஸ் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். அவரின் அரிய பாடல்கள் பலவற்றைத் தேடித் தேடிச் சேமித்தும் இருக்கின்றேன். ஆனால் இந்த வாரம் சந்திரபோஸின் இசையில் மலர்ந்த முத்தான பத்து காதல் மெட்டுக்களை மட்டும் தருகின்றேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் எஞ்சிய பாடல்களோடு அவற்றின் சிறப்பையும் தருகின்றேன்.
"மச்சானைப் பார்த்தீங்களா" திரைப்படம் வி.சி.குகநாதன் இயக்கத்தில் சிவகுமார், சுமித்ரா போன்றோர் நடித்து 1978 இல் வெளிவந்த திரைப்படம். இப்படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா பாடும் "மாம்பூவே சிறு மைனாவே" பாடல் ஆரம்ப தபேலாவும், மெலிதாக இழையோடும் கிட்டார் இசையும் கலக்க, ஒரு காலகட்டத்தில் றேடியோ சிலோனில் கலக்கிய பாடல் என்று இப்போதும் அந்த நாளைய இளைசுகள், இந்த நாளைய பெருசுகள் சொல்லும். அதே காலகட்டத்தில் இளையராஜா போட்ட பாடல்களை நினைவுபடுத்துவதே இந்த இசையின் பலவீனம். அருமையான பாடகர் கூட்டும், இசையும் கலக்க இதோ "மாம்பூவே"
தொடர்ந்து 1982 இல் வெளிவந்த வடிவங்கள் திரைப்படம் , ராம்ஜி என்ற ஒரு நடிகர் நடித்தது. ஆனால் படத்தின் பெயரை இன்றும் ஞாபகம் வைக்க உதவுவது சந்திரபோஸின் இசை. இப்படத்தில் இவரே பாடிய "நிலவென்ன பேசுமோ" என்ற அருமையான சோகப்பாடல் இன்றும் இருக்கின்றது. கூடவே எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடும் 'இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே" ரசிகர்களின் இதய வானில் பச்சென்று இடம்பிடித்த காலம் ஒன்றும் இருக்கின்றது. அதற்கும் இலங்கை வானொலியை ஆதாரம் காட்டவேண்டி இருக்கின்றது.
கே.பாலாஜியின் இன்னொரு மொழிமாற்றுத் திரைப்படம் "விடுதலை". சிவாஜி, ரஜினி, விஷ்ணுவர்த்தன் போன்ற பெருந்தலைகளைப் போட்டும் இசைக்கு மட்டும் சந்திரபோஸை மீண்டு(ம்) திரைக்கு வரவழைத்த படம். புத்துணர்ச்சியோடு சந்திரபோஸ் மெட்டமைத்திருக்கின்றார் என்பதற்கு சிறப்பானதொரு உதாரணம், இப்படத்தில் வரும் "நீலக் குயில்கள் ரெண்டு" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல். இடையிலே ஹோரஸ் குரலாய் 'ஓஹோஹோ ஓஹோஓஹோஓஒ" என்று சந்திரபோஸ் கலப்பது வெகு சிறப்பு.
எண்பதுகளில் ஏ.வி.எம் நிறுவனத்துக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்த திரைப்படம் சங்கர் குரு. அர்ஜீன, சீதாவுடன் பேபி ஷாலினி பாடிக் கொண்டே வரும் "சின்னச் சின்னப் பூவே" பாடலும் இப்பட வெற்றிக்குக் கைகொடுத்த சமாச்சாரங்கள் என்றால் வைரமுத்து வரிகளில் சந்திரபோஸ் இசையமைத்த "காக்கிச் சட்டை போட்ட மச்சான்" பாட்டு கூட இந்த வெற்றியில் பங்கு போட்டது.இதோ மலேசியா வாசுதேவன், மற்றும் அந்தக் காலகட்டத்தில் சந்திரபோஸின் இசையில் அதிகம் பாடிய சைலஜா குரல்களில் "காக்கிச் சட்டை போட்ட மச்சான்"
ஆண்பாவம் படம் கொடுத்த போதையும் பாண்டியராஜன் கன்னாபின்னாவென்று படங்களை நடித்து வைக்க, பதிலுக்கு ரசிகர்களும் அவர் படங்களுக்கு டூ விட்டுக் கொண்டிருந்த வேளை டில்லிக்கு ராஜான்னாலும் "பாட்டி சொல்லைத் தட்டாதே" என்ற மந்திரத்தோடு வெற்றிக் கனியை அவருக்குக் கொடுத்தது. இப்படத்தில் வெத்தல மடிச்சுக் கொடுத்த பொம்பளை பாடல் சோகம், சந்தோஷம் இரண்டிலும் கேட்க இதமான பாடல்கள். அத்தோடு "வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சு" பாடல் அந்தக் காலகட்டத்தில் நம்மூர் திருவிழாக்களில் நாதஸ்வரக் கலைஞர்களின் வாசிப்பில் தவறாது இடம்பிடித்த கலக்கல் பாடல். அந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோர் பாடுகின்றார்கள்.
ஏ.வி.எம் தயாரிப்பில் வசந்தி என்றொரு படம் வந்தது. மோகன், மாதுரி ஆகியோர் நடித்திருப்பார்கள். அப்படத்தில் வரும் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் "ரவிவர்மன் எழுதாத கலையோ" என்று. அப்பாடலில் நாயகன் பாடுவதாக " பூமாலையே உன்னை மணப்பேன், புதுச் சேலை கலையாமல் அணைப்பேன்" என்று வைரமுத்து எழுதியிருப்பார். அணைக்கும் போது சேலை கலையாதா என்று என்று ஒரு ரசிகர் வைரமுத்துவிடம் ஒருமுறை கேட்கவும் அதற்கு "முதலிரவில் அணைக்கும் போது சேலைக்கு என்ன வேலை என்று சொன்னாராம் அந்தக் குறும்புக்கார வைரமுத்துக் கவிஞர். இதோ அந்தப் பாடல்.
மலையாளத்தின் சிறந்த மசாலாப் படங்களையும் குடும்பப் படங்களையும் கொடுத்து வரும் சத்யன் அந்திக்காட் எடுத்து மோகன்லால், சிறினிவாசன் போன்றோர் நடித்த "காந்திநகர் 2nd Street" அதுவே பின்னர் சத்யராஜ், ராதா, பிரபு (கெளரவம்) ஜனகராஜ் நடித்த "அண்ணா நகர் முதல் தெரு" ஆனது. "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" பாடலை அந்தக் காலகட்டத்தில் காதல் திரி வைத்தவர்களுக்கு ஒருமுறை போட்டுக் காட்டுங்கள். முகத்தில் ஒரு புன்னகை தானாகக் கிளம்பும். பலரைக் காதலிக்க வைத்ததும், காதலியை நினைத்து மனசில் பாடவைத்ததும்" இந்த எஸ்.பி.பி, சித்ரா பாடும் பாட்டு. "ராத்தூக்கம் ஏனம்மா கண்ணே உன்னாலே" என்று காதலன் பாடவும் பதிலுக்கு "ராசாவே நானும் தான் கண்கள் மூடல்லே" என்று காதலியும் பாடும்போது புதுசா புதுசா அதில் காதில் கேட்டு காதலிக்கத் தோன்றும் மீண்டும் மீண்டும். என்னவொரு அற்புதமான மெட்டும், இசையும்.
எண்பதுகளில் ஏ.வி.எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்திரபோஸுக்கு போனஸாய் கிடைத்தவை ரஜினிகாந்திற்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுத்த "மனிதன்", ராஜா சின்ன ரோஜா" திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்புக்கள். ரஜினியின் திரைப்படங்களில் இளையராஜாவுக்கு அடுத்து இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்கள் வெகுவாக அன்று பேசப்பட்டதென்றால் அவை இவை இரண்டும் தான். குறிப்பாக ரஜினியின் "ராஜா சின்ன ரோஜாவில்" வரும் "பூ பூ போல் மனசிருக்கு" பாடலும் "மனிதன்" திரைப்படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் "ஏதோ நடக்கிறது" பாடலும் மெல்லிசையாக மனதில் இடம்பிடித்த அருமையான பாடல்கள். இதோ ஏதோ நடக்கிறது கேளுங்கள், இதமாய் இருக்கிறதல்லவா சொல்லுங்கள்.
நடிகர், இயக்குனர் பார்த்திபனுக்கு இளையராஜாவே முதல் படத்தில் இசையமைக்காத வாய்ப்பு. ஆனாலும் சந்திரபோஸுடன் இணைந்து "புதிய பாதை" போட்டார். இப்படத்தின் பாடல் காசெட் அப்போது வெளியானபோது ஒவ்வொரு பாடலுக்கும் வைரமுத்துவின் முத்தான குரல் விளக்கமும் இருக்க வந்திருந்தது. "பச்சப்புள்ள அழுதிச்சின்னா பாட்டு பாடலாம் இந்த மீசை வச்ச கொழந்தைக்கு என் பாட்டு போதுமா?" என்று வாணி ஜெயராம் கேட்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ன சொல்கின்றார் என்பதைப் பாடலிலேயே கேளுங்கள்.
இசையமைப்பாளர் சந்திரபோஸுன் உச்சம் குறைந்து மெதுவாகக் குறைந்த காலகட்டத்தின் போது வந்தது ஏ.வி.எம்மின் "மாநகரக் காவல்".விஜய்காந்த், சுமா ஆகியோர் நடித்திருக்க, சந்திரபோஸின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் "தோடி ராகம் பாடவா" என்று கேட்க சித்ரா சொல்லும் " மெல்லப்பாடு" என்று பதில் போடும் பாட்டோடு அடுத்த கட்ட சினிமா யுகமும் ஆரம்பித்தது, புதுப்புது இசை (இளவரசர்கள்)யமைப்பாளர்கள் வந்தார்கள். குறுநில மன்னர்களும் மெல்ல மெல்ல விலகினார்கள். சந்திரபோஸும் நீண்ட பல வருசங்களாய் இசையமைப்பில் இருந்தும் விலகப் போனார்.