இறுகிப் போன மன நிலையில் தன் மன ஆற்றாமையைப் பாடல் வழியாக வடிகால் தேட முனையும் ஒருவனின் உணர்வு எப்படியிருக்கும்?
அதையே தான் எஸ்பிபி இந்தப் பாடலின் வழி பிரசவிக்கின்றார்.
“உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி” அந்தத் தொடக்கமே உள்ளிருக்கும் பெருமூச்சைக் கக்குமாற் போல.
ஒரு பாடகனாக மட்டுமன்றி அந்தப் பாத்திரத்தின் மனவுணர்வைக் கேட்பவருக்குக் கடத்தி ஒரு பெருமூச்சைப் பிறக்க வைக்கிறாரே
அங்கே தான் எஸ்பிபி என்ற மகா கலைஞனின் சக்தி பொங்கிப் பிரவாகிக்கின்றது. இங்கே எந்த விதமான சங்கதிகளோ, குரல் பரிமாணமோ அன்றி வெறும் தட்டையாகவே தன்னுணர்வை அவர் பரிமாறுகின்றார்.
எடுத்த எடுப்பிலேயே தன் மனைவியின் அழகலங்காரத்தைச் சீவி முடித்துப் பின்னி முடித்து விட்டுத் தான் விஷயத்துக்கு வருகிறார்.
“பச்சமலைப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க”
“பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க”
“கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க”
“செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க”
எங்காவது அவன் ஊரார் கதையை நம்புகிறானா பாருங்கள்?
“சொன்னாங்க” என்று சொல்லி அதைக் கட்டுக்கதை என்று சப்பைக்கட்டுக் கட்டு வேறு கட்டுகிறான் பாருங்கள்.
அந்த ஒவ்வொரு அடியிலும் தன் மனைவியை மேம்படுத்தியே
தொடக்கி வைத்து ஊரார் பழியைத் துடைக்க முற்படுகின்றான்.
“எங்கை மேய்ஞ்சுட்டு வாறாய்” என்று ஊர்ச் சொலவாடை உண்டு.
இங்கே பாடலாசிரியரும் அவ்விதமே “மேயுதுன்னு” என்று எடுத்தாள்கிறார்.
“நாயமென்ன கண்ணாத்தா”
இளையராஜா காலத்தில் இலக்கணத்தமிழை மருவிய கிராமியச் சொலவாடலுக்கு முன்னோடியாய் எழுந்த பாடல்களில் இதுவுமொன்று என்பதால் நியாயம் என்பதை “ நாயம்” ஆக்கிக் காட்டுகிறார்.
இம்மட்டுக்கும் இப்பாடலைப் புனைந்த புலமைப்பித்தன் என்ன இலேசானவரா? இலக்கண நுட்பம் தெரிந்த, திரையிசைப் பாடல்களில் இலக்கியம் படைத்த புலவர் ஆயிற்றே. ஆனால் காட்சிச் சூழலில் தானும் இறங்கி அந்தப் பாத்திரத்தின் குரலாகவே ஆகி விடுகிறார்.
எஸ்பிபியைப் பாருங்கள். “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” படத்தின் நாயகன் வண்டிச்சோலை செம்பட்டையான் எப்படியானதொரு வெகுளி என்பதை அடையாளப்படுத்த அவரின் குரலில் எழும் வெகுளித்தனத்தை “மாமேன் (மாமன்) ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்”
https://www.youtube.com/watch?v=XE5kKXdgRuw
இல் அப்பட்டமாகக் காட்டியிருப்பார்.
அந்தப் பாட்டில் காட்டும் நுணுக்கமான சங்கதிகளில் அந்த வெகுளியின் பிரதிபலிப்பு. தேங்காப்பூ உதாரணம் ஒன்று
மாங்கா தோப்போரம் நான்
மறுநாள் போனேனாம்
தேங்காப் பூவாட்டம் நான்
சிரிச்சுக்கிட்டிருந்தேனாம்
இதில் “மாங்கா” “தேங்காப்பூ” இவற்றை உற்றுக் கவனித்துக் கேளுங்கள். மனுஷர் செம்பட்டையானின் நகல் ஆகி விடுவார்.
“உச்சி வகுந்தெடுத்து” எப்படித் தன் மனைவியின் கயமைத்தனத்தை அறிந்து அதை ஏற்க மறுத்து மனம் புழுங்கிப் பாடுமாற் போல அமைகிறதோ, அதே போல ஒரு இரவுப் பாடலில் இழந்து போன காதலிக்காகப் பாடும் பாட்டு “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி”.
https://www.youtube.com/watch?v=T2mgqnNgA0A
இரண்டு பாடலிலும் இடைக் குரல்களாக தாலாட்டுப் பாடும் பெண் குரல்கள். உச்சி வகுந்தெடுத்துவில் அதை எஸ்பிபியின் சகோதரியே செய்து விட, மீதியில் வரும்
உடுக்கை ஒலியோடு எழும் சாமியார்க்குரலாகவும் எஸ்பிபி. அதையே காத்திருந்து காத்திருந்து” பாடலிலும் இன்னோர் குரலாகக் காணலாம்.
ஆனால் “ஏ ஆரீராரோ ஆரீராரோ” மற்றும் “ரா ரா ரா ரா ஏஏஏ” என்று உச்சி வகுந்தெடுத்து பாடலில் வரும் நிதான நடைக்கு முரணாக வேகம் கொட்டும் இடைக்குரல்கள் “காத்திருந்து காத்திருந்து” வில்.
“உச்சி வகுந்தெடுத்து” பாடலைக் கேட்டு முடித்ததும் அந்தப் பாட்டுக் கொடுக்கும் உணர்வுக் கடத்தலைச் செரிமானம் கொள்ள வைக்க நேரம் பிடிக்கிறது. பின்னர் சங்கதிகளை முணுமுணுக்கும் போது
“பட்டு வண்ண ரோசாவாம்
பாத்த கண்ணு மூடாதாம்”
https://www.youtube.com/watch?v=xVZd7nDM-0c
என்று தொடர்புபடுத்திப் பார்க்கிறது. இதுவும் புலவர் புலமைப்பித்தன் கைவண்ணம் தான். சங்கர் – கணேஷ் இசையமைப்பில் மலேசியா வாசுதேவனுக்குக் கிட்டிய ஆகச் சிறந்ததில் இதையே முதலாவதாக வைப்பேன். இந்தப் பாடல் இடம் பிடித்த “கன்னிப் பருவத்திலே” படமும் ஒரே ஆண்டில் (1979) தான் வெளியானது. ஆனால் மூத்தவள் “ரோசாப்பூ ரவிக்கைக்காரி”
கிராமியப் பாடல் என்றாலேயே அந்த மண்வாசனையைத் தன் நாசியில் ஏற்றி விடுவார் மலேசியா வாசுதேவன். எனவே அவருக்கு இந்த மாதிரியான பாடல் எல்லாம் கேப்பங்களி.
ஆனால் எஸ்பிபி எல்லாம் ஒரு செம்பட்டையானாகி கிராமத்து நாதமாக ஒலிப்பது என்பதெல்லாம் அபூர்வ வெளிப்பாடு அதையே “உச்சி வகுந்தெடுத்து” நிகழ்த்திக் காட்டுகிறது.
“நம்ப மனம் ஒத்துக்கல.....” அந்த ஒத்துக்கல வரும் இரண்டாம் சங்கதி மிதப்பை ஒருமுறை கேட்டுப் பாருங்கள் மனுஷர் நிலை குலைந்து தள்ளாடிப் போவார்.
அந்தக் காலத்தில் ஒரு பாட்டுக்குள்ளேயே பக்கம் பக்கமாக எழுதக் கூடிய இலக்கியம் சமைத்தார்கள். அதுவும் கதைக்கருவின் அடி நாதமாக அது இருக்க வேண்டும் என்ற இசைஞானி இளையராஜாவின் பிடிவாதங்களில் ஒன்று இந்தப் பாட்டு.
புலம் பெயர்வதற்கு முந்திய கிராமத்து வாழ்வியலில் இருட்டுக்குள் இருந்து கதை பேசிய காலமெல்லாம் இந்தப் பாட்டின் வழி நினைப்பில் வந்தால் நீங்களும் என் நண்பரே.
“வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க”
https://www.youtube.com/watch?v=LV0m2OCk6Ao
கானா பிரபா