Pages

Sunday, November 30, 2008

"அரண்மனை கிளி" பின்னணிஇசைத்தொகுப்பு

இளையராஜாவை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு திரையுலகில் சிறந்த ஒரு உதாரணம் விநியோகஸ்தராக இருந்து, தயாரிப்பாளராகி, நடிகராகி, இயக்குனரும் ஆகிய ராஜ்கிரண்.

ராசாவே உன்னை நம்பி என்னப் பெத்த ராசா என்று படங்கள் தயாரித்து, என் ராசாவின் மனசிலே என்று நாயகனாகி, அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா தான் என்று இயக்குனராகி தொண்ணூறுகளில் பணம் காய்க்கும் சினிமாக் குதிரையாக இருந்தவர் ராஜ்கிரண். படம் வெளி வந்து தாறுமாறாக வசூலைக் குவிக்கும் திரைப்படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் பெரும்பாலும் உரசல் வருவது சினிமாவின் எழுதப்படாத ஜோதிடங்களில் ஒன்று. அது தான் "என் ராசாவின் மனசிலே" திரைப்படத்தின் இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கும், அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் ராஜ்கிரணுக்கும் வந்தது. சமீபத்தில் கூட கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில் "என் ராசாவின் மனசிலே" படம் இப்போது வெளிவந்தால் அதிக நாள் தாக்குப்பிடிக்காது என்று சீண்டியிருந்தார். எனவே அடுத்த படமான "அரண்மனைக் கிளி" படத்திற்கு தானே நாயகனாக அரிதாரம் பூசிக்கொண்டு இயக்குனராகவும் ரிஸ்க் எடுத்தார் ராஜ்கிரண். அப்போது அவர் மலை போல நம்பியிருந்தது இளையராஜாவின் இசையை. இப்படத்தின் நாயகன் பெயரைக் கூட இளையராஜாவின் இயற்பெயரான ராசய்யா என்றே வைத்திருப்பார்.

ஆரம்பத்தில் குஷ்புவை ஒப்பந்தம் செய்து பின்னர் ஒதுக்கிவிட்டு அஹானாவை பிடித்தார். கூடவேஆன்றைய காலகட்டத்தில் குஷ்புவுக்கு குரல் கொடுத்த அனுராதா தான் அஹானாவுக்கு பின்னணிக் குரல். கூடவே காயத்ரி என்னும் இன்னொரு புதுமுகமும், முன்னர் என் ராசாவின் மனசிலே படத்தில் சிறுவேடத்தில் நடித்த வடிவேலுவும், விஜயகுமாரியும் நடித்திருப்பார்கள்.

இப்பதிவின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன், ராஜாவை நம்பினோர் கைவிடப்படார். அதையே தான் ராஜா தன் பாடல்களில் நிரூபித்திருந்தார். "அம்மன் கோயில் வாசலிலே" என்று மின்மினி குழு பாடும் பாடல், "நட்டு வச்ச ரோசாச்செடி" என்று பி.சுசீலா, " வான்மதியே" என்று எஸ்.ஜானகி, "ராசாவே உன்னை விட மாட்டேன்" என்று எஸ்.ஜானகி, "அடி பூங்கொடியே" என்று மனோ, மின்மினி குழுவினர், "ராத்திரியில் பாடும் பாட்டு" என்று மலேசியா வாசுதேவன், அருண்மொழி, மின்மினி குழுவினர், " என் தாயென்னும் கோயிலை" என்று இளையராஜா என்று மொத்தம் ஏழு முத்தான முழுப்பாடல்களையும் "துணிமேலே காதல்" மற்றும் "ராமர நினைக்கும் அனுமாரு" என்று படத்தில் வராத ஆனால் இசைத்தட்டில் மட்டும் வரும் பாடல்கள் என்று மொத்தம் ஒன்பது பாடல்களைக் கொடுத்து ராஜ்கிரணைக் காப்பாற்றி விட்டார் ராஜா. பாடல்களை வாலி மற்றும் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார்கள்.அந்தப் பாடல்களை இணைத்து செண்டிமெண்டாக ஒரு கதையும் பின்னி "அரண்மனை கிளி" யையும் வசூல் கிளியாக மாற்றி விட்டார் ராஜ்கிரண்.

இப்படத்தின் பின்னணி இசையைப் பொறுத்தவரை கிராமியப் படங்களுக்கு குறிப்பாக பாரதிராஜாவின் படைப்புக்களின் காட்சிகளின் அழகுணர்ச்சிக்கு மெருகூட்டுமாற்போலக் கொடுக்கும் பின்னணி இசை இப்படத்தில் இல்லை. அதற்கு காட்சி அமைப்புக்களின் தன்மையே காரணம் எனலாம். ஆனால் கிடைத்த வாய்ப்புக்களை வைத்துக்கொண்டு இப்படத்திலும் தன் பின்னணி இசைக் கைவரிசையைக் காட்டி விட்டார் இளையராஜா.
இதோ அந்த இசைத் தொகுப்பு

அரண்மனை கிளி பூங்கொடி அறிமுகம், வீணை இசை கலக்க



ஏழைப் பெண் செல்லம்மா மனதில் ராசய்யா மீது காதல் பூக்கின்றது, "ராசாவே உன்னை விட மாட்டேன்" பாடலின் இசை புல்லாங்குழலில் கலக்க



செல்லம்மாவை சீண்டி அவளின் தோழிமார் பாடும் "அடி பூங்குயிலே பூங்குயிலே"



ராசய்யாவை நினைத்து பூங்கொடி காதல் கனவில் மிதத்தல் "வான்மதியே" பாடல் மெட்டோடு கலக்கிறது



பூங்கொடியை பெண் பார்க்க வருவோர்களை "அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" பாடி கலாய்த்தல் (பாடல்: மின்மினி)



செல்லம்மா, ராசய்யாவை நினைத்து காதல் வானில் சிறகடிக்கிறாள், "ராசாவே உன்னை விட மாட்டேன்" பாடல் கூட வருகின்றது



பூங்கொடி தன் காதல் கைகூடாதோ என்று கவலையில் இருத்தல்



செல்லம்மா காதல் தோல்வியில் துயர் அடைதல்



பூங்கொடி, ராசய்யா திருமண நாள்



ராசய்யா கவலையில் பாடும் "ராத்திரியில் பாடும் பாட்டு"



செல்லம்மா ஆபத்தான நிலையில்



மனம் பேதலித்த செல்லம்மாவை தன் வீட்டுக்கு அழைத்து வரும் பூங்கொடி, நிறைவுக்காட்சி

Tuesday, November 25, 2008

றேடியோஸ்புதிர் 28 - பெண் பாடும் "வீட்டுக்கு விட்டுக்கு வாசப்படி வேணும்"?

றேடியோஸ்புதிரின் கேள்வியாக இங்கே இரண்டு ஒலித் துண்டங்களை வைத்து கேட்கின்றேன். இரண்டுமே ஒரே படத்தில் இருந்து தான். முதலில் வரும் ஒலித்துண்டம் முன்னர் கிழக்கு வாசல் திரைப்படத்தில் இளையராஜா பாடி மிகப்பிரபலமான "வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" இந்தப் பாடலை குறித்த இந்தப் படத்தின் நாயகி பாடுமாற் போல ஒரு சிறுபாடலாக மின்மினி பாட வருகின்றது. இந்தப் பாடல் அமைந்த திரைப்படம் எது என்பதே கேள்வியாகும்.
இந்தப் படத்தின் மறுபாதிக்கும், இசையமைப்பாளருக்கு வாழ்வளித்த முதல் படத்தின் தலைப்பிற்கும் நெருங்கிய உறவு இருக்கின்றது.

இந்தப் படத்தின் நாயகன் ஒரு காலகட்டத்தில் திடீரென்று தன் வேஷ்டி உயரத்துக்கு புகழடைந்து எல்லாப் பிரபலங்களையும் கடந்து வந்த வேகத்தில் போய்ச் சேர்ந்தவர் மீண்டு(ம்) வந்திருக்கிறார் குணச்சித்திர நடிகராக.
இங்கே கொடுத்திருக்கும் அடுத்த ஒலித்துண்டம் இப்படத்தின் இசையமைப்பாளரை அழைக்குமாற் போல அமையும் பாடலின் இசை, படத்தையும் காட்டிக் கொடுத்து விடும்.
கீகீகீ ;-)




Wednesday, November 19, 2008

திரைக்கலைஞன் எம்என் நம்பியார் நினைவாக...!

கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராகத் தமிழ் சினிமாவின் வரலாற்றின் விலக்கமுடியாத கலைஞன் எம்.என் நம்பியார் இன்று இவ்வுலகை விட்டு நீங்கியிருக்கின்றார். அவர் நினைவாக எம்.என்.நம்பியார் நடித்த திரைப்படங்களில் இருந்து சில பாடல்களை அஞ்சலிப் பகிர்வாகத் தருகின்றேன்.

மக்களைப் பெற்ற மகராசி திரைப்படத்தில் இவர் நாயகனாக நடித்த பாடல் காட்சி
Ondru Serntha -

குணச்சித்திர நடிகராக "தூறல் நின்னு போச்சு" படத்தில் ஏரிக்கரைப் பூங்காற்றே பாடல் காட்சியில் (பின்னணி குரல் ஜேசுதாஸ்)
ERIKKARAI -

பதினோரு வேடங்களில் இவர் நடித்த "திகம்பர சாமியார்" படப் பாடல்
paarappa.mp3 -

கதாநாயகனாக நடித்த "கவிதா" திரைப்படப் பாடல்
parakkum...KAVITHA -


தற்ஸ் தமிழில் வந்த எம்.என்.நம்பியார் குறித்த ஆக்கம்
சென்னை: அமரர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் பழம்பெரும் நடிகருமான எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.

உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.

வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.

எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நப்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:

எனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.

அந்த விழாவில் தலைமை விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். கடைசியாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார்.

நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி.

தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.

திகம்பரசாமியார் எனும் சூப்பர் ஹிட் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார் என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது.

நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதாராகவே வாழ்ந்தார் நம்பியார்.

பாஜகவின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாறன் நம்பியார் இவரது மகன்தான்.

Thursday, November 13, 2008

றேடியோஸ்புதிர் 27 - நம்ம பதிவரின் சொந்தக்கார இசையமைப்பாளர்?


திரையுலகம் என்பது வாய்ப்பைத் தேடிப் போன எல்லோருக்குமே தன் வாசல் கதவைத் திறந்து விடவில்லை. அதே போல் என்னதான் திறமைசாலிக என்றாலும் மேலதிகமாக அதிஷ்ட தேவதையும் கரம் பற்றாவிட்டால் தொலைந்து போகும் மாய லோகம் அது. றேடியோஸ்புதிரில் பிரபலமான பல இசையமைப்பாளர்களது பாடல்கள் குறித்த பதிவுகள் வந்திருக்கின்றன. அவ்வப்போது அத்திப் பூக்களாய் வந்த இசையமைப்பாளர்களது தொகுப்பும் இடம் பெற்றிருக்கின்றது. அந்த வகையில் இன்று நான் தரப்போகும் புதிர் உங்களில் பலருக்கு அறிமுகம் இல்லாத இசையமைப்பாளர்.

தொண்ணூறுகளில் தாயகத்தில் இருந்த போது சக நண்பர் வட்டத்தோடு கேட்டு ரசித்து அனுபவித்த பாடல்களில் இதுவுமொன்று. ஏனோ இப்பாடலில் ஒரு ஈர்ப்பும் இருக்கின்றது. இனிய இசையும் வித்தியமெட்டும் தான் காரணமோ?
இந்தப் பாடலை இங்கே முழுமையாகத் தருகின்றேன். கேள்வி இது தான். இந்தப் பாடலுக்கு இசை வழங்கிய இசையமைப்பாளர் உங்களுக்கு எல்லாம் பரவலாக அறிமுகமான பிரபல பதிவரின் உறவினர். இவர் தனது பதிவொன்றில் இந்த இசையமைப்பாளர் குறித்து ஒரு வரியில் சொல்லியிருக்கின்றார். குறித்த இசையமைப்பாளர் யார் என்பதைக் கண்டுபிடிக்க கஷ்டப்படுவீர்கள் எனவே அந்த பதிவர் யார் என்று சொல்லி விடுங்களேன், கூடவே அவர் குறிப்பட்ட அவரின் உறவினரான இசையமைப்பாளர் பெயரைச் சொன்னால் போனஸ் வாழ்த்துக்கள் ;-)
பாடலுக்குள்ளே இப்பாடலுக்காக இசையமைத்த படத்தின் பெயரும் இருக்கின்றது.
இந்தப் பதிவர் பெயரின் பாதி பிரபல ஹிந்திப் பாடகியின் பெயர் ஆகும். அவர் அகத்தியன் இயக்கிய படமொன்றில் பாடிய பாடகி. இந்தப் பதிவரின் வலைப்பக்கத்தின் பெயர் புரட்சித் தலைவர் நடித்த படமொன்றின் தலைப்பு ;)



Chemparuthi chemparuthi - Kana Praba

மேற் சொன்ன புதிருக்கான விடை:

அந்தப் பதிவர்: இளா
அவரின் பெயரில் உள்ள பாடகி: காதல் கவிதை படத்தில் பாடிய பிரபல ஹிந்தி பாடகி இளா அருண்.
அவரின் வலைப்பக்கம்: விவசாயி
அவரின் சொந்தக்கார இசையமைப்பாளர்: இவரின் மாமன் முறையான திலீப் என்ற செந்தில்நாதன்,
மனோ, சுவர்ணலதா குரல்களில் ஒலித்த இந்த அருமையான பாடல் இடம்பெற இருந்த திரைப்படம்: பவளக்கொடி
பின்னர் இந்தப் பாடல் தாட் பூட் தஞ்சாவூர் என்ற திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது.
இளா தன்னுடைய இந்தப் பதிவிலே தன் உறவுக்கார இசையமைப்பாளர் பற்றி ஒன்பதாவது கேள்விக்கான பதிலாக சொல்லியிருக்கிறார்.

Sunday, November 9, 2008

"நிறம் மாறாத பூக்கள்" பின்னணிஇசைத்தொகுப்பு

பதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்புக்களோடு தொடர் வெற்றிகளாக வந்த வரிசையில் அவருடைய வெற்றிச் சுற்றில் ஒரு தற்காலிக அணை போட்டது ஐந்தாவதாக தமிழில் வந்த "நிறம் மாறாத பூக்கள்" படத்தின் பெருவெற்றி. அந்தப் படத்தைத் தொடர்ந்து வந்த கல்லுக்குள் ஈரமும், நிழல்கள் படமும் வர்த்தக ரீதியில் எடுபடாத படங்கள். அவர் மீண்டு வந்தது அந்த இரண்டு படங்களின் தோல்விகளைத் தொடர்ந்து அப்போதைய இவரின் உதவி இயக்குனர் மணிவண்ணன் கதையில் வந்த அலைகள் ஓய்வதில்லை.


"நிறம் மாறாத பூக்கள்" படம் எடுத்த எடுப்பிலேயே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி குரலில் கடவுள் வாழ்த்தோடு "லேனா புரொடக்க்ஷன்ஸ்" தயாரிப்பில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த படம். பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வெற்றிப்படங்கள் சிலதைப் பார்க்கும் போது காலமாற்றமோ என்னவோ அதிகம் ரசிக்கமுடிவதில்லை. அந்தந்தக் காலகட்டத்தின் நிகழ்வாகவோ அல்லது அந்தக் காலத்துக்கு மட்டுமே பொருந்தும் கதைக்களனாகவோ அவை இருப்பதும் ஒரு காரணம். முப்பது வருஷங்களுக்கு முன்னால் வந்த வெற்றிப் படம் என்றாலும் அதே புத்துணர்வோடு மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடிய சிறப்பை இது கொடுத்திருக்கின்றது.


இப்படத்தின் கதை, அப்போது உதவி இயக்குனராக இருந்த கே.பாக்யராஜின் கைவண்ணத்தில் இருக்கின்றது. இவர் ஏற்கனவே சிகப்பு ரோஜாக்கள் படத்தின் கதையும் எழுதியவர். தொடர் வெற்றிகளாகக் குவித்த பாரதிராஜாவின் வெற்றியில் பாக்கியராஜுக்கும் பெரும் பங்கு இருக்கின்றது என்று அப்போது ஒரு பத்திரிகை எழுத, அது பாரதிராஜாவின் கோபத்தினை எழுப்பியதை மீண்டும் ஒரு பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன்னர் நினைவுபடுத்தியிருந்தது.
வசனத்தினை பஞ்சு அருணாசலம் எழுத, பாடல்களை கண்ணதாசன், கங்கை அமரன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் எழுதியிருக்கின்றார்கள். இப்படத்தில் உதவி இயக்குனர்களாக இருந்து பின்னர் பேசப்பட்டவர்கள் கே.ரங்கராஜன் மற்றும் மனோபாலா. ஆனால் இணை இயக்குனர் என்று பெயர் போட்டிருந்த ஜே.ராமு எங்கே என்று தெரியவில்லை, அல்லது பெயர் மாற்றிக் கொண்டு வந்தாரோ தெரியவில்லை. முன்னர் ஊரில் வின்சர் திரையரங்கில் ஓடியதாகவும், கே.எஸ்.ராஜாவின் கம்பீரமான குரலில் திரை விருந்து படைத்ததும் தூரத்து நிழலாக நிற்கும் நிஜங்கள்.

றேடியோஸ்புதிரில் பின்னூட்டிய ஆளவந்தான் சொன்னது போல இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்துமே அவரவர் பெயர்களிலேயே வந்ததும் ஒரு சிறப்பு. பின்னூட்டத்தில் தங்கக்கம்பி சொன்னது போல முதன் முதலாக பாரதிராஜாவின் படத்திற்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் "முதன் முதலாக" என்று பாடி தொடர்ந்ததும் இப்படத்தில் இருந்து தான்.

இப்படத்தின் முதல்பாதி ஏழை சுதாகர் பணக்கார ராதிகா காதலை முக்கியப்படுத்தி சென்னையைச் சுற்றி வருகின்றது. அடுத்த பகுதி விஜயன் ரதியின் பணக்காரத்தனமான காதல் ஊட்டியை வலம் வருகின்றது. நிவாசின் கமராவுக்கே ஜலதோஷம் பிடித்து விடும் அளவிற்கு குளு குளு காட்சிகள் பின் பாதியில். ஆனால் இப்படியான ஒரு சிறந்த களத்திற்கு பாலுமகேந்திராவின் கமரா கண் மட்டும் இருந்தால் இன்னும் ஒரு படி மேல் போயிருக்குமே என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. அசாதாரண திருப்பங்களோ, கதைப்பின்னல்களோ இல்லாவிட்டாலும் புத்திசாலித்தனமான திரைக்கதை அமைக்கும் பாணி இருந்தால் முப்பது வருஷத்துக்குப் பின்னரும் சிகரெட் இடைவேளை எடுப்பவர்களையும் கட்டிப் போட்டு விடும் சாமர்த்தியம் தெரிகின்றது. ஆனால் ஐம்பது பைசா சுதாகர் பின்னர் ஐந்து லட்சத்தோடு ஓடி விட்டார் என்றால் பின்னர் ஏன் ஊட்டியில் வந்து புல்லு நறுகணும், அதைப் பார்த்து ராதிகா ஏன் வெறுக்கணும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஐம்பது பைசாவுக்கு அலையும் அப்பாவி சுதாகர் பாத்திரமும், கிழக்கே போகும் ரயில் படத்தில் தமிழைக் கதறக் கதறக் கொலை செய்த ராதிகாவின் இங்கிலீஷ் தனமான பேச்சுக்கு துணையாக இந்தப் படத்தில் அவரின் பணக்காரத் தனமான பாத்திரமும் சிறப்பு என்றால்,
"நானே தான்" என்று குரல் கொடுக்கும் பக்கத்து வீட்டு விரகதாபப் பாத்திரம் பாக்யராஜின் ஐடியா போலும். ஒரு காலகட்டத்தில் இந்த வசனம் அடிக்கடி பலர் வாயில் ஏற்ற இறக்கத்தோடு பேசியதை அரைக்காற்சட்டை வயசில் கேட்டிருக்கிறேன் ;-)

கொஞ்சமே காட்சிகளில் வந்தாலும் மின்னுகிறார் ரதி, அவருக்கு குரல் கொடுத்தவரின் குரல் அளவாகப் பொருந்தியிருக்கிறது. இந்தப் படம் எடுக்கும் வேளை ஹிந்திப் படவாய்ப்புக்கள் இவருக்கு வந்து அதனால் மட்டம் போட்டு பாரதிராஜாவின் வெறுப்பைச் சம்பாதித்து பின்னர் இவரின் காட்சிகளை தன் உதவியாளர்களை வைத்தே எடுத்ததாகவும், படம் எடுத்து முடிந்த பின்னர் ரதியின் தாயார் பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேள் என்று வருந்தியதாகவும், அப்போது ரதி பாரதிராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் சமீபத்திய பேட்டியில் பாரதிராஜா குறிப்பிட்டிருக்கின்றார்.

இப்படத்தின் முத்திரை நடிப்பு என்றால் அது மறைந்த விஜயன் நடிப்பு தான். தனது முந்திய படங்களில் பெரும்பாலும் கிராமியத்தனமான பாத்திரங்களில் நடித்தவருக்கு கூலிங் கிளாசும், மதுப்புட்டியோடும் வந்து விரக்தியான வசனங்களை உதிர்க்கும் ஊட்டிப் பணக்காரர் வேஷம் கச்சிதமாக இருக்கும் அதே வேளை, அந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்த பாரதிராஜாவின் குரலுக்கும் பாதிப் புண்ணியம் போய்ச் சேரவேண்டும். "மெட்ராஸ் கேர்ள்" என்றவாறே அவர் பேசும் வித்தியசமான பேச்சு நடை சிறப்பாக இருக்கின்றது. விஜயன் போன்ற இயல்பான நடிகரைத் தமிழ் சினிமா தொலைத்த பாவம் சும்மா விடாது.

ஆக மொத்தத்தில் "நிறம் மாறாத பூக்கள்" எத்தனை வருஷங்கள் கடந்தாலும் நிறம் இழக்காத பூக்கள்.

சரி, இனி முக்கியமான இன்னொரு விஷயத்துக்கு வருவோம். இப்படத்தின் இசையை வழங்கிய இளையராஜா தன் நண்பன் பாரதிராஜாவுக்கு கொடுத்த இன்னொரு நெல்லிக்கனி.
"முதன் முதலாக காதல் டூயட்", "இரு பறவைகள் மலை முழுவதும்", "ஆயிரம் மலர்களே" போன்ற இனிமையான பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, ஜென்ஸி, சைலஜா ஆகியோர் பாடியிருக்கின்றார்கள். கூடவே "இரு பறவைகள் மலை முழுவதும்" பாடலின் சோக மெட்டை சசிரேகாவும், "காதலிலே" என்ற சின்னஞ்சிறு பாட்டை இளையராஜாவும் பாடியிருக்கின்றார்கள் என்றாலும் இவர்களை பாடியவர்கள் பட்டியலில் டைட்டில் கார்ட்டில் போடவே இல்லை. இந்த இரண்டு பாடல்களும் இசைத்தட்டில் கிடையாது. படத்துக்காக மேலதிகமாகப் போடப்பட்டவை. அவற்றையும் இந்தத் தொகுப்பில் கொடுத்திருக்கின்றேன்.

பின்னணி இசையினைப் பொறுத்தவரை, அன்னக்கிளி தொடங்கி தொடர்ந்த ஒரு சில வருஷங்களுக்கு இளையராஜாவை மேற்கத்திய வாத்தியங்களுக்கு அதிகம் வேலை வைக்காத படங்கள் வாய்த்ததாலோ என்னவோ அவரின் ஆரம்ப காலப்படங்களின் பின்னணி இசை தாரை தப்பட்டை வகையறாக்களின் தாகம் தூக்கலாக இருந்தது. ஆனால் நிறம் மாறாத பூக்கள் தான் இளையராஜாவின் பின்னணி இசைப்பயணத்தின் முக்கியமான ஒரு திருப்பம் என்பேன். இதில் பாவித்திருக்கும் மேற்கத்திய வாத்தியங்களின் சுகமான பயணம் படத்துக்குப் பெரியதொரு பலம். குறிப்பாக கிட்டார், வயலின் போன்றவற்றின் பயன்பாடு தனித்துவமாக இருக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் தான் வயலின் மேதை நரசிம்மன் போன்றோர் ராஜாவுடன் இணைந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன். இந்த இசைப் பிரித்தெடுப்பில் 23 ஒலிக்கீற்றுக்கள் உள்ளன. மொத்தமாக ஐந்தரை மணி நேர உழைப்பு ;-)

முக்கியமான இன்னொரு விஷயம், இந்த றேடியோஸ்பதியின் முக்கியமான சிக்கலில் ஒன்று, தளத்தில் இருக்கும் ஒலி இயங்குகருவிகள் வேலை செய்வதில்லை என்ற பலரின் குற்றச்சாட்டு இன்று தீர்க்கப்பட்டிருக்கிறது. அதற்கு பெரும் நன்றி நண்பர் சயந்தனுக்கு உரித்தாகட்டும். இந்த ஒலி இயங்கு கருவி எப்படி இருக்கின்றது என்று சொல்லுங்களேன்.

சரி இனி நான் பேசப் போவதில்லை ராஜாவின் பின்னணி இசை உங்களோடு பேசட்டும்.

படத்தின் முகப்பு இசை, ஆயிரம் மலர்களே சங்கதியோடு கலக்கும் சிறப்புப் படையல்



சுதாகர் டயரியைப் படிக்கும் ராதிகா.
புல்லாங்குழல் இசை பின்னர் வயலினுக்கு கலக்க



சுதாகர் ராதிகா மோதல், கிட்டார் இசை கலக்க



சுதாகருக்கு மனேஜர் போஸ்டிங் கிடைக்கிறது, வயலின்களின் ஆர்ப்பரிப்பு



சுதாகர் மேல் மையல் கொள்ளும் பக்கத்து வீட்டு பெரிய மனுஷி,
மேற்கத்தேய மெட்டில் வயலின்



முதன் முதலாக காதல் டூயட் பாடலுக்கு முன்னால் வரும் ராதிகாவின் ஊடல், கிட்டார் இசை கலக்க, தொடர்ந்து பாடல் கலக்கிறது வயலின் இசையோடு



சுதாகர்-ராதிகா கல்யாணத்துக்கு அப்பா சம்மதம், இசையோடு "இரு பறவைகள் மலை முழுவதும்"

<

சுதாகர் பணத்துடன் ஓடிவிட்டார், அதிர்ச்சியில் வயலின்களின் அவல ஓலம்



விஜயன் அறிமுகக் காட்சி, "ஆயிரம் மலர்களே மலருங்கள்" சிறு பகுதியோடு கூடவே அவர் ஆற்றோடு உரையாடுவது "நான் மட்டும் அகத்தியனா இருந்தா இந்த உலகத்து தண்ணியெல்லாம் ஒரு சொட்டாக்கிக் குடிச்சிருபேன்", கூடவே வயலின் அழுகிறது.



ராதிகாவின் காதல் தோல்வியில் "இரு பறவைகள் மலை முழுவதும்" சசிரேகா பாடும் சோகப் பாட்டு




"இன்னும் என் கனவுகளில் , கற்பனைகளில் நான் அவளோடு வாழ்ந்துகிட்டு தான் இருக்கேன்" ஆயிரம் மலர்களே பாடலை கிட்டார் துள்ளிசைக்க விஜயன் ராதிகா உரையாடல்



ரதியை பற்றி விஜயன் சொல்லும் காட்சிகள், கிட்டார் மீண்டும் "ஆயிரம் மலர்களே" இசைக்க



ரதியின் பின்னால் துரத்தும் விஜயன், அதை இசைஞானி வயலின்கள் மூலம் துரத்துவார்



ரதியின் காதலை யாசிக்க விஜயன் அலைதல், இங்கே அதீத ஆர்ப்பரிப்பில் இசை



விஜயன், ரதியிடம் கெஞ்சலாகக் கேட்கும் காதல் யாசகம், வயலின் அழுகையோடு மனப்போராட்டம். ஒற்றை வயலின் சோக மெட்டைக் கொடுக்க, மற்றைய வயலின்கள் போராடும், கிட்டாரில் ஆயிரம் மலர்களே மெட்டுத்தாவ இருவரும் காதலில் ஒன்று கலக்கின்றார்கள்.



ராதிகா, விஜயனின் கதையைக் கேட்டு உரையாடல்,"ஆயிரம் மலர்களே" பாடலோடு விஜயன் தன் காதல் நினைவுகளுக்கு மீண்டும் தாவல்.



ரதி-விஜயன் விளையாட்டுத்தனமாக செய்யும் வினைகள், தாள வாத்தியங்களின் கலவையோடு ஆபத்தை கட்டியம் காட்டுகிறது



ரதி-விஜயன் விளையாட்டு வினையாகி, ரதி ஆற்றோடு போதல், முன்னர் பயன்படுத்திய தாள வாத்தியஙகளோடு ஒற்றை வயலின் சோக இசை



"ஆயிரம் மலர்களே" பாடல் ஆண் குரல்களின் ஹோரஸ் இசையாக மட்டும்



ராதிகா - விஜயன் இருவரும் ஒரே நிலையில் இருப்பதாக காட்டும் காட்சி சைலஜா "ஆயிரம் மலர்களே" பாடலைப் பாடுவதோடு மலேசியா வாசுதேவனும் கலக்கிறார்.



சுதாகரை மீண்டும் காணும் ராதிகா, "காதலிலே ஒர் கணக்கு" இளையராஜா மேலதிகமாகப் பாடிக் கொடுத்த பாடல் துண்டத்தோடு



விஜயன் தன் ரதி இறந்த அதே நாளில் அவளைத் தேடி ஆற்றில் போதல், வயலின் களின் அலறலோடு தாள வாத்தியங்களின் பயமுறுத்தல், முடிவில் சலனமில்லாத ஆறு, ஆற்றில் தொலையும் காதல் "ஆயிரம் மலர்களே மலருங்கள்" பாடலோடு நிறைவுறுகின்றது.

Friday, November 7, 2008

றேடியோஸ்புதிர் 26 - லாலலா லாலலா லாலலா...!


ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர் ராகவேந்தனின் பின்னணி இசை கலந்து வருகின்றது. இந்தப் புதிரில் வரும் ஒலிப்பகிர்வு லாலலா லாலலா லாலலா என்று வருகின்ற ஒரு பின்னணிபாடல் மெட்டோடு கலக்கும் பின்னணி இசை இது.

இப்படம் குறித்து அதிக உபகுறிப்புக்கள் தேவை இல்லை என்றாலும் கொடுக்கின்றேன். இப்படத்தின் கதாசிரியர் பின்னாளில் பிரபலமான இயக்குனரார். இப்படத்தின் நாயகன் பின்னாளில் பின்னாளில் வேற்று மொழியில் பிரபல நகைச்சுவை நடிகனாரர். இப்படத்தின் இன்னொரு நாயகன் படத்தில் வருவது போலவே மதுவுக்கு அடிமையாகி பின்னர் படத்தின் இறுதிக் காட்சி போலவே அல்ப ஆயுசில் போய்ச் சேர்ந்து விட்ட நல்ல நடிகர்.


சரி இனி இந்தப் படம் என்னவென்று சொல்லுங்களேன், உங்கள் நினைவு மாறாமல் இருந்தால் ;-)