Pages

Wednesday, November 19, 2008

திரைக்கலைஞன் எம்என் நம்பியார் நினைவாக...!

கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராகத் தமிழ் சினிமாவின் வரலாற்றின் விலக்கமுடியாத கலைஞன் எம்.என் நம்பியார் இன்று இவ்வுலகை விட்டு நீங்கியிருக்கின்றார். அவர் நினைவாக எம்.என்.நம்பியார் நடித்த திரைப்படங்களில் இருந்து சில பாடல்களை அஞ்சலிப் பகிர்வாகத் தருகின்றேன்.

மக்களைப் பெற்ற மகராசி திரைப்படத்தில் இவர் நாயகனாக நடித்த பாடல் காட்சி
Ondru Serntha -

குணச்சித்திர நடிகராக "தூறல் நின்னு போச்சு" படத்தில் ஏரிக்கரைப் பூங்காற்றே பாடல் காட்சியில் (பின்னணி குரல் ஜேசுதாஸ்)
ERIKKARAI -

பதினோரு வேடங்களில் இவர் நடித்த "திகம்பர சாமியார்" படப் பாடல்
paarappa.mp3 -

கதாநாயகனாக நடித்த "கவிதா" திரைப்படப் பாடல்
parakkum...KAVITHA -


தற்ஸ் தமிழில் வந்த எம்.என்.நம்பியார் குறித்த ஆக்கம்
சென்னை: அமரர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் பழம்பெரும் நடிகருமான எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.

உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.

வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.

எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நப்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:

எனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.

அந்த விழாவில் தலைமை விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். கடைசியாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார்.

நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி.

தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.

திகம்பரசாமியார் எனும் சூப்பர் ஹிட் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார் என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது.

நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதாராகவே வாழ்ந்தார் நம்பியார்.

பாஜகவின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாறன் நம்பியார் இவரது மகன்தான்.

15 comments:

ஆயில்யன் said...

வில்லனாக நடிப்பில் களம் கண்டிருந்தாலும் நிஜத்தில் தனிமனித வாழ்க்கையில் நாயகனாய் திகழ்ந்தவர்!

அன்னாரின் ஆன்மா அமைதியடையட்டும் !

கோபிநாத் said...

;-(

அன்னாரின் ஆன்மா அமைதியடையட்டும்.

தமிழன்-கறுப்பி... said...

எளிமையான நல்ல மனிதர் என்று அறிந்திருக்கிறேன்....

அத்மசாந்திக்கு அஞ்சலிகள்...!

கலைக்கோவன் said...

சினிமாவில் வில்லன்களின் வில்லன்
நிஜ வாழ்வில் சினிமா ஹீரோக்களின் ஹீரோ ...

சினிமாவிலும்(ஹீரோக்களாலும் முடியாத)
நல்லொழுக்கம் கடைபிடித்த
அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும்

ILA (a) இளா said...

நிஜ வாழ்வின் ஹீரோ.

நீங்களும் ஹீரோதான் படத்தில் உண்மையான நம்பியாராவே நடிச்சது மறக்க முடியாது.

அன்னாரின் ஆன்மா அமைதியடையட்டும்.

அருண்மொழிவர்மன் said...

அலுவலகத்திலிருந்துவந்து இப்போதுதான் தகவலறிந்தேன். ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்றே எண்ணத்தோணுகின்றது.

இவர் ராஜ வம்சத்தில் வந்தவர் என்ற ஒரு தகவலையும் நான் அறிந்திருக்கிறேன். இவ்வாண்டின் ஆரம்ப பகுதியில் சுகவீனமுற்றிருக்கும் இவர் நலம்பெறாவேண்டும் என்று வைரமுத்துகூட தனது பாற்கடல் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சகாதேவன் said...

"எம்ஜியார் என்றதும் நம்பியார் என்று சேர்த்தே அழைப்பார்கள். இன்று அவர் போயிட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க. அவர் என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம்".

வில்லனும் ஹீரோவும் இத்தகைய நண்பர்களா? எல்லோரும் அறிய வேண்டிய தகவல். நன்றி

சகாதேவன்

கானா பிரபா said...

ஆயில்யன், தல கோபி,தமிழன், தங்கக்கம்பி, கலைக்கோவன், இளா, அருண்மொழி வர்மன், சகாதேவன்

வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி

Anonymous said...

சிறந்த அய்யப்ப பக்தரான எம்.என்.நம்பியார் -"மஞ்சரி நாராயணன் நம்பியார்"
அய்யப்ப சாமிக்கு விரதம் மேற்கொள்ளும் இந்த கார்த்திகை மாதத்தில் அவர் மரணம் அடைந்தது. அய்யப்ப சாமி திருவடிகளை அவர் அடைந்து இருப்பதாக அய்யப்ப பக்தர்கள் தெரிவித்தனர்.

Anonymous said...

விக்கியில் நம்பியார் குறித்த கட்டுரை:
மா. நா. நம்பியார்

கானா பிரபா said...

பின்னூட்டல்கள் மூலம் தகவல்களை வழங்கிய அன்பர்களுக்கு நன்றி

G.Ragavan said...

வில்லனாகவே சினிமாவில் வாழ்ந்தவர் நம்பியார். நிஜ வாழ்க்கையில் கதாநாயகர்கள் வில்லனாக இருந்த பொழுதும்... இந்த வில்லன் குணச்சித்திரமாகவே இருந்தார். இதை வைத்தே வெ.சேகர்..அவரது முதற்படமான நீங்களும் ஹீரோதான் படத்தில் ஒரு காட்சி கூட அமைத்திருந்தார்.

பிற்காலத்தில் நிறைய பக்திப்படங்களிலும் நகைச்சுவைப் படங்களிலும் நடித்திருக்கும் நம்பியாரின் நடிப்பு பாராட்டுக்குரியது.

அவரது ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுவோம்.

இந்த வேளையில் அவரது பாடல்கள் சிலவற்றை நீங்கள் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

கானா பிரபா said...

வாங்க ராகவன்,

நம்பியார் நிறைவானதொரு வாழ்வை வாழ்ந்திருந்தாலும் அவரின் இழப்பு சோகத்தை ஏற்படுத்தியது. உங்கள் தகவல் குறிப்புக்களுக்கும் மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

கடற்கரைச் சாலையில் காலை வேளைகளில் அவரைக் காணலாம்.
மிகவும் மென்மையான முகம். நான் சொல்வது ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு.

பார்க்கும்போதெ வணக்கம் சொல்லிக் கும்பிடவேண்டும் என்று தோன்றும். நிறைவான மனிதர். இறைவன் அவருக்கு நல்வழி கொடுத்திருப்பார்,.

கானா பிரபா said...

வல்லியம்மா

‍உங்கள் பின்னூட்டம் போல நிறைவாழ்வு வாழ்ந்தவர் அவர், அவர் ஆன்மா சாந்தியடைவதாக‌