சமூக வலைத்தளங்களில் நம்முடையே இயங்கிய பதிவர்கள் மற்றும் கலைஞர்கள் திரைத்துறையில் சாதிப்பது சமீப ஆண்டுகளில் மகிழ்ச்சிக்குரிய விடயம். அந்த வகையில் நம்முடைய நண்பர் ஜிரா எனும் கோ.ராகவன் 15 ஆண்டுகளாக வலைப்பதிவு உலகில் செழுமையான, ஆழமான படைப்புகளைத் தொடர்ந்து எழுதி வருபவர். அவர் தொடும் இலக்கியமாகட்டும், திரையிசையாகட்டும் அதில் ஆராய்ச்சி பூர்வமான அணுகுமுறையும், படிப்போருக்குப் புதிய பல விடயங்களைக் காட்டும் பாங்கிலும் எழுதி வருபவர்.
“நாலு வரி நோட்டு” என்ற திரையிசைப் பாடல்கள் பற்றிய தொடர் ஒன்றை சக எழுத்தாளர்கள் என்.சொக்கன், மோகன கிருஷ்ணன் உடன் இணைந்து தனித்தனியாகப் பகிர்ந்து பின்னர் மூவரின் எழுத்துகளும் நூல் வடிவில் வந்திருந்தது.
நம்ம ஜிராவுக்கு 2018 ஆம் ஆண்டு முக்கியமானதொரு ஆண்டாக அமைந்திருக்கிறது.
ஏற்கனவே ஷான் ரால்டன் இசையில் ஒரு பெட்டக நிகழ்ச்சிகான பாடலை எழுதியவர் இந்த ஆண்டு “அமுதா” என்ற திரைப்படத்துக்காக மூன்று பாடல்களை எழுதி, அருண் கோபன் இசை வழியாகத் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் திரையிசையின் முக்கிய ஆளுமைகளான ஜெயச்சந்திரன், சித்ரா இவர்களோடு வினீத் ஶ்ரீனிவாசன் ஆகிய மூன்று பாடகர்களின் குரலும் தன்னுடைய முதல் படத்திலேயே கிட்டிய பெருமையும் ஜிராவுக்கு. தமிழ் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் துறை தேர்ந்த நம்ம ஜிரா தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பது வரவேற்க வேண்டியதொரு செயற்பாடு.
தொடர்ந்து பாடலாசிரியர் மதன் கார்க்கி ஒருங்கமையில் இயங்கும் DooPaaDoo தளத்துக்காக ஹரிச்சரண் இசையில் இளம் இசையமைப்பாளர் ப்ரித்விக் இசையில் “கனவே” என்ற புதுமையான உரையாடல் பாணி பாடலையும் எழுதியிருக்கிறார் ஜிரா.
பாடலாசிரியராக அடியெடுத்து வைத்திருக்கும் ஜிராவின் அனுபவப் பகிர்வை உரையாடல் பாணியில் பேசியிருந்தோம். அதனைக் கேட்க.
https://www.mixcloud.com/kana-praba/gira_interview/
அமுதா படப் பாடல்களைக் கேட்க
சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகி 2018 இல் திரையிசைப் பாடகி என்ற அறிமுகத்தை எட்டியியிருக்கிறார் ஷாலினி JKA. தன்னுடைய கல்லூரிப் பருவத்திலும், பின்னர் மேடை இசை நிகழ்ச்சிகளிலும் பாடிய அனுபவம் கொண்டவர், இந்த ஆண்டு சாம் C.S இசையில் வெளியான “கரு” பின்னர் “தியா” என்று பெயர் மாற்றப்பட்ட படத்தில் “கொஞ்சாளி” https://youtu.be/gGBQUO_FBBI என்ற பாடலை சத்ய பிரகாஷ் மற்றும் நேகா வேணுகோபாலுடன் இணைந்து பாடியிருக்கிறார் ஷாலினி. ஒரு கல்யாணப் பாடலுடன் அமர்க்களமாகத் தொடங்கியிருக்கும் அவரின் திரைப் பயணம் தொடரும் ஆண்டுகளிலும் நல்ல பல படைப்புகளை வழங்க வேண்டும்.
இதில் புதுமை என்னவெனில் திரையிசைப் பாடகிக்குண்டான சிறப்பான குரல் வளம் கொண்ட ஷாலினி தன்னுடைய தாய் நாட்டில் இருக்கும் போது எட்டாத திரையுலக வாபு இன்று அவர் புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் சூழலில் எட்டியிருக்கிறது.
பாடகி ஷாலினி JKA உடன் நான் நிகழ்த்திய ஒரு குறும் பேட்டியின் ஒலி வடிவம் இதோ.
https://www.mixcloud.com/kana-praba/interview-with-singer-shalini-jka/
2018 ஆம் ஆண்டியின் திரையிசையில் இன்னும் சொல்ல வேண்டிய பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் முதலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனைத் தொட வேண்டும். இந்த ஆண்டு “காலா” படம் வழியாக மீண்டும் இன்னொரு ரஜினி படம் என்ற மாபெரும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கிறது. ஆனாலும் கபாலி, காலா போன்ற படங்களில் ரஜினியின் முத்திரை இல்லாது பா.இரஞ்சித் படங்களாக அமைந்திருந்ததால் பாடல்களிலும் பெரிய வேறுபாடில்லாத மீள் கலவைகளாகவே அமைந்திருந்தன.
ஆனால் “பரியேறும் பெருமாள்” படம் சந்தோஷ் நாராயணனுக்குச் சரியான தீனி கொடுத்தது. “கருப்பி கருப்பி”
https://youtu.be/5IXdCWhQG78 பாடல் மலேசியாவில் தமிழர் படைக்கும் ரெகே போன்ற வடிவில் எழுந்த அட்டகாசமான பாடல்.
“பொட்டக் காட்டில் பூவாசம்” https://youtu.be/zRnPYVDIiJY பாடலிலும் பழைய “மெட்ராஸ்” சந்தோஷ் நாராயணனைப் பார்க்க முடிகிறது.
பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த “வட சென்னை” முதன் முதலாக வெற்றி மாறன் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரிடமிருந்து வெளியேறி சந்தோஷ் நாராயணன் கூட்டில் இணைந்த படம். வட சென்னை பாடல்களிலும் வெற்றி மாறனோடு இணைந்த கூட்டுக்கு நியாயம் கற்பித்தது சந்தோஷ் நாராயணன் இசை.
பாடல்கள் முன்பே வெளியாகி விட்டாலும் 2018 இல் வெளி வந்த படம் என்ற ரீதியில் “மேற்குத் தொடர்ச்சி மலை” படத்தில் “கேட்காத வாத்தியம்”, “அந்தரத்தில் தொங்குதம்மா” பாடல்கள் படத்தோடு ஒன்றி இயங்கிய இசைப் பாடல்களாக ரசிகர் மனதை ஆட் கொண்டன.
“மகா நதி....மகா நதி” என்ற தலைப்பிசைப் பாடலிலேயே ஈர்த்தவர் இசையமைப்பாள்ர் மைக்கி ஜே. மேயர் அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் படத்தின் மையவோட்டத்தோடு இணைந்து கொடுத்திருந்தது சிறப்பு. மகா நதி படப் பாடல்கள் https://youtu.be/Oh6-QVX-CZQ 2018 இன் திரையிசைப் பாடல்களில் தவிர்க்க முடியாது குறிப்பிட வேண்டியவை.
சிவகார்த்திகேயன் வீட்டில் இருந்து இரண்டு புது வரவுகள். ஒன்று சிவகார்த்திகேயன் பாடலாசிரியராகி அனிருத் இசையில் “கோலமாவு கோகிலா” படத்துக்காக “கல்யாண வயசு” https://youtu.be/qNW9MLk4lF4 பாடலை எழுத, சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா “கனா” திரைப்படத்துக்காக “வாயாடி பெத்த புள்ள” https://youtu.be/00fWlZnZAo0 பாடலை திபு நினான் தாமஸ் இசையில் பாடிக் கலக்கி விட்டார். இரண்டு பாடல்களுமே 2018 இன் சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் அமர்ந்து கொண்டன.
“நீயும் நானும் வந்தே” https://youtu.be/dImiR3Sr8Wo இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழாவை “இமைக்கா நொடிகள்” வழியாக மீட்டெடுத்தது.
இவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிட்ட வேண்டும் என்றதொரு எதிர்பார்ப்பைத் தன் பாடல்கள் வழியாகவும், பின்னணி இசை மூலமும் கிளப்புவர் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
இந்த ஆண்டு விஸ்வரூபம் 2 படம் அவருக்குக் கை கொடுக்கா விட்டாலும் ராட்சஷனில் தன்னை நிரூபித்தார். ஜிப்ரானின் இசை என்று அதிகம் அடையாளப்படாமல் போன “ஆண் தேவதை” படப் பாடல்களிலும் சிறப்பாகப் பங்களித்திருந்தார்.
2018 ஆம் ஆண்டில் வெளி வந்த படங்களின் பாடல்களில் பரவலான கவனத்தை ஈர்த்த பாடல்களை ஓரளவு தொட்டுச் சென்றிருக்கிறேன். இவற்றை விடத் தனிப்பட்ட ரீதியில் ரசிகர் மனதைக் கவர்ந்தவை என்ற தொகையில் இன்னும் பல இருக்கும். அவற்றை நீங்கள் பின்னூட்டம் வழியாகவும் அறியத் தரலாம்.