Pages

Sunday, December 30, 2018

🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 பாகம் நான்கு 🎷 ஏ.ஆர்.ரஹ்மானின் பங்களிப்பு 🎹

🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁

பாகம் நான்கு

🎷 .ஆர்.ரஹ்மானின் பங்களிப்பு 🎹

Attachment.png

இந்த 2018 இல் தமிழ்த் திரைப்படங்களிலேயே ரஹ்மானின் பங்களிப்பு அதிகம் குவிந்திருந்தது. இதில் இன்னொரு முக்கிய விடயம் இன்றைய தமிழ் சினிமாவின் போக்கைத் தீர்மானிக்கும் முக்கியமான மூவரின் படங்களாக அவை அமைந்திருந்தது தான்.

நடிகர் விஜய் உடன் ரஹ்மானின் முதல் கூட்டணிஉதயாபடத்தின் வழியாக நிகழ்ந்தது. தொடர்ந்துஅழகிய தமிழ் மகன்”. இவையிரண்டும் வணிக ரீதியில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தாதவை. இந்த நிலையை மாற்றியது கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானமெர்சல்”.

மெர்சல் படத்தின் இலாப நட்ட ஊகங்கள் வெவ்வேறாக இருப்பினும் படத்தினை ஒரு பரவலான வட்டத்துக்கு எடுத்துச் சென்றதில் ரஹ்மானின் பாடல்களுக்கு முக்கிய பங்குண்டு. “ஆளப் போறான் தமிழன்இன்று உசுப்பேத்தும் மொழிப் பற்றுப் பாடலாக இளையோரால் கொண்டாடும் அளவுக்கு இருக்கிறது. “மெர்சல்கொடுத்த வெற்றியோடு மீண்டும் சன் நிறுவனம் படத் தயாரிப்பில் கால் பதித்த சர்காரும் இந்த ஆண்டில் சேர்ந்து கொண்டது. ஆனால் பாடல்களைப் பொறுத்தவரை உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல், சர்கார் என்ற இறங்கு வரிசையிலேயே நோக்க முடியும். வசூலில் அதிக கவனத்தை ஈர்க்காத முந்திய இரண்டு படங்களின் பாடல்களில் உள்ள அழகு பிந்தியவற்றில் கொஞ்சம் குன்றியே இருக்கிறது. “சர்கார்படத்தை விஜய் ரசிகர்கள் சுதி ஏற்றி ரசித்தாலும்ஒரு விரல் புரட்சிமற்றும்சிம்டான்காரன்பாடல்கள் தான் பரவலான கவனத்தை ஈர்த்தன. அதிலும் சிம்டான்காரன் சொல்லுக்கு அரும் பத விளக்கக் தேடிச் சமூக வலைத்தளங்களில் முட்டி மோதிக் கொண்டார்கள்.

இருப்பினும் ரஹ்மான் பாடல்கள் என்பதால் டாப்பு டக்கர் போன்ற மற்றைய பாடல்களும் எஃப் எம் வானொலிகளுக்கு நல்ல தீனி.

சர்கார் பாடல்கள்

https://youtu.be/c0p1HZoyZW0

எந்திரன்திரைப்படம் என்னதான் அறிவியலையும், விஞ்ஞானத்தையும் தொட்டிருந்தாலும் அந்தப் படம் ஒரு பக்கா பொழுதுபோக்கு மசாலா. இனிய பாடல்கள், நகைச்சுவை என்று எல்லாமே கலந்து கட்டியிருந்தன. எட்டு வருடங்களுக்குப் பின் அதன் மறு பாகம் “2.0” ஆக இந்த ஆண்டு வந்த போது இந்தப் பொழுது போக்கு, மசாலா வகையறாவுக்குள்ளும் அடக்க முடியாமல் சமூக சீர்திருத்தப் போதனைக்குள்ளும் திணிக்க முடியாமல் அல்லாடியது. படத்தின் பின்னணி இசையும் வெகு சுமார். இதற்குள் அல்லாடியது ரஹ்மான் போட்டுக் கொடுத்தஎந்திரலோகத்துச் சுந்தரியே”, “ராஜாளி”, “புள்ளினங்காள்என்ற மூன்று பாடல்கள்.

பெரும் எடுப்பில் 2.0 பாடல்கள் வெளியிட்ட போது உடனடியாக ஈர்க்கா விட்டாலும் ரஹ்மான் பாடல்களுக்குண்டான பாங்கில் மெல்ல மெல்ல இசை ரசிகர்களுக்குப் பிடித்தமானவை ஆகி விட்டன.

இருப்பினும் படத்தில் கடித்துக் குதறப்பட்ட பாடல் காட்சியால் மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாகக் கொடுத்தது. இப்போது மீண்டும் எந்திரன் படப் பாடல்களைக் கேட்டால் அவை எவ்வளவு தூரம் வெகு சிரத்தையோடு பல்வேறு பரிமாணங்களில் கொடுத்த பாங்கு புரியும். புதிய மனிதா பூமிக்கு வா பாடலைக் கேட்டாலேயே இயந்திர மனிதனின் வருகைக்கான அதிர்வலைகளை ஏற்படுத்தும் இசை 2.0 இல் மங்கிப் போனது.

2.0 பாடல்கள்

https://youtu.be/su9J9HkvcF0

ரஹ்மான் - மணிரத்னம் மந்திரக் கூட்டணியாவது வேலைக்கானதா என்றால்செக்கச் சிவந்த வானம்படமும் கொடுத்த பாடல்கள் ஒன்றையுமே முழுமையாகத் திரையில் பயன்படுத்தாது பாதி தின்றது. ஆனால் பாடல்கள் என்ற கணக்கில் மணிரத்னம் - .ஆர்.ரஹ்மான் - வைரமுத்து கூட்டணி சோடை போகாது என்று மீள நிரூபித்ததுசெக்கச் சிவந்த வானம்”.

நீல மலைச்சாரல் என்ற மழைக்குருவி பாட்டு, மதுர மரிக்கொழுந்தே , பூமி பூமி, நீ வந்து சென்றனை என்று பாடல்கள் இனித்தன. பாடல்களைக் கேட்டு வாங்கியதில் மணிரத்னம் வெற்றி கண்டார் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக மதுர மரிக்கொழுந்தே பாடலில் அப்படியே தொண்ணூறுகளின் ரஹ்மான்.

செக்கச் சிவந்த வானம் பாடல்கள்

https://youtu.be/uYuZMr4dqv0

.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு மட்டுமன்றிப் பொதுவான இசைப் பிரியர்களுக்கும் கொண்டாட்டமாக அமைந்ததுசர்வம் தாள மயம்படத்தின் முன்னோட்டம் வந்த போது. அதை ஈடுகட்டுமாற் போல மதன் கார்க்கியின் வரிகளில்சர்வம் தாள மயம்” https://youtu.be/d3OZVsHG9TM தலைப்பிசைப் பாடல் வந்த போதுமின்சாரக் கனவுயுகத்தில் நுழைந்து விட்டது போலக் கொண்டாட்டத்தைக் கூட்டியது அந்தப் பாட்டு. “சர்வம் தாள மயம்படப் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சுதி ஏத்துகின்றன. இதில் ஒரு புதுமைவரலாமாஎன்ற பாடலை இசையமைத்திருக்கிறார் இயக்குநர் ராஜீவ் மேனன்.

2018 இல் .ஆர்.ரஹ்மான் செய்த இன்னொரு பங்களிப்பு பாம்பா பாக்யா என்ற பாடகரைக் கை தூக்கி விட்டது. இது நாள் வரை சேர்ந்திசைக் குரலாக ஒலித்த பாடகர் பாக்யராஜ் பிரபல சூபி பாடகர் பாம்பா போலப் பாடச் செய்து அதன் தாக்கத்தில் பாம்பா பாக்யா என்று பெயரையும் சூட்டி விட்டார் ரஹ்மான்.

புள்ளினங்காள் (2.0), சிம்டான்காரன் (சர்கார்), டிங்கு டொங்கு ( சர்வம் தாள மயம்) என்று மூன்று முத்தான பாடல்கள் பாம்பா பாக்யாவுக்குக் கிட்டியிருக்கின்றன. “நெருப்புடாபுகழ் அருண்ராஜ் காமராஜ் முதன் முதலாகச் சர்வம் தாள மயம் வழி ரஹ்மானுக்குப் பாடல் எழுதியிருக்கிறார்.

2.0 இல்புள்ளினங்காள்”, சர்வம் தாள மயம் படத்தில்மாயா மாயா” https://youtu.be/4BueIUDPriY என்று இரு பாடல்களோடு நா.முத்துகுமார் பங்களிப்பு ரஹ்மான் இசையில்.

வைரமுத்து, மதன் கார்க்கி, விவேக், அருண்ராஜ் காமராஜ் இவர்களோடு பாடல் இழப்புக்குப் பேரிழப்பாக அமைந்த நா.முத்துக்குமாருடன் இணைந்து .ஆர்.ரஹ்மான் கொடுத்த இறுதித் திரைப்படம் என்ற வரலாற்ற்றையுக் இந்த 2018 விட்டுச் சென்றிருக்கிறது.

தொடர்ர்ர்ரும்

கானா பிரபா

14.12.2018


0 comments: