Pages

Wednesday, April 27, 2011

சிந்துபைரவி இசைத்தொகுப்பு


"சிந்து பைரவி" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா என்ற அலை வந்தபோதும் பல்லாண்டுகாலமாக இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தவில்லை அல்லது கிட்டவில்லை. ஆனால் இந்த இரு இமயங்களும் இணைந்த படங்களிலேயே "சிந்து பைரவி" உச்சமாக அமைந்து விட்டது. சங்கராபரணம் அளவுக்கு எங்களாலும் கொடுக்க முடியும் என்று தமிழ்த்திரையுலகம் சிந்து பாடிய படம் இது.1985 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் ஜே.கே.பி என்ற சங்கீதவித்துவான், சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் பைரவி என்னும் மனைவி, சங்கீதத்தை தெய்வமாகப் பூஜிக்கும் சிந்து என்ற நண்பி இந்த மூன்று புள்ளிகளை இணைத்துப் பின்னப்பட்ட கதைக்களம் சிந்துபைரவி.
ஜே.கே.பி என்ற சங்கீத வித்துவானாகவும் பின்னர் அவர் தரம் தாழ்ந்து போகும் போதும் சிறப்பானதொரு குணச்சித்திர நடிப்பை வழங்கிய சிவகுமார், பைரவி என்னும் சுலக்க்ஷணாவுக்கு இது போல் ஒரு பாத்திரம் இதற்கு முன்னும் பின்னும் கிட்டாத ஒரு வாய்ப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக சுஹாசினி என்ற நடிகையின் முழுமையான நடிப்பின் பரிமாணத்தைக் காட்டித் தேசிய விருதைக் கொடுத்துக் கெளரவித்தும் ஆயிற்று. கூடவே வந்து சென்ற குணச்சித்திரங்கள் மிருதங்க வித்துவான் குருமூர்த்தி - டெல்லி கணேஷ், தம்புரா - ஜனகராஜ், ஜட்ஜ் ஐயா - ராகவேந்திரர் என்று ஒவ்வொரு பாத்திரமும் பட்டை தீட்டி எடுக்கப்பட்டிருக்கிறது இப்படத்தில்.


கவிஞர் வைரமுத்துவின் பாடல்களோடு, மகாகவி சுப்ரமணியபாரதியார் பாடல்களும் தெலுங்குக் கீர்த்தனைகளுமாக ராஜபாட்டையோடு இருக்கும் இந்தப் படம் இசைஞானி இளையராஜாவுக்கு இரண்டாவது தேசிய விருதைக் கொடுத்து விருதுக்குப் பெருமை தேடிக் கொண்டது. பட்டமா, பாட்டா என்று மனதில் பட்டிமன்றம் போட்ட அந்தச் சின்னக்குயில் சித்ராவுக்கு சிறந்த பாட்டுக்குயில் என்று தேசிய விருதுப்பட்டம் கொடுத்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

படத்தின் பின்னணி இசைப் பிரிப்புக்கு வழக்கம் போல எனக்கு இரண்டு நாட்கள் மொத்தமாக ஆறரை மணி நேரம் தேவைப்பட்டதென்றால் இதுபோன்ற நூறாயிரம் இசையைத் தன்னுள்ளே தேக்கிவைத்த இசைஞானியின் பெருமையை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்பதால் அவர் மீட்டிய வாத்தியத்தால் சொல்ல விழைகிறேன். சிந்து பைரவி படம் வந்து 26 ஆண்டுகள் மிதக்கும் இவ்வேளை இப்படத்தில் இருந்து மொத்தம் 25 இசைக்குளிகைகளைத் தருகின்றேன். அனுபவியுங்கள்.படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும்"ஆதித்ய ஹிருதயம் புண்யம் சர்வசத்து விநாசனம்" பாடலை நாயகன் ஜே.கே.பிக்கு குரல் வடிவம் கொடுக்கிறார் கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் முடிவில் இனியதொரு வீணையிசை மீட்போடு நிறைவுறுகிறதுமிருதங்கவித்துவான் குருமூர்த்தி (டெல்லி கணேஷ்) மது அருந்திவிட்டு வந்திருக்கிறார் என்றுணர்ந்து அவரை கச்சேரியில் வாசிக்கவிடாமல் தடுத்து மிருதங்க இசை இல்லாமலேயே "மகா கணபதிம்" பாடும் பாடும் ஜே.கே.பி"மரிமரி நின்னே" பாடலைப் பாடும் ஜே.கே.பி, சிந்து அறிமுகமாகிறாள்சிந்து, ஜே.கே.பியிடம் மக்களைச் சென்றைடையும் பாடல் வடிவம் எப்படி இருக்கவேண்டும் என்று வாதாடி கூடவே "பாடறியேன் படிப்பறியேன்" பாடலைப் பாடி நிறைவில் "மரிமரி நின்னே" ஆக நிறைவாக்கிக் கைதட்டல் பெறும் காட்சி. பாடலின் ஆரம்பத்தில் சிந்துவுக்கு ஒத்துழைக்காத பக்கவாத்தியம் மெல்ல மெல்ல இணைகின்றதுஜட்ஜ் ஐயா (ராகவேந்திரர்) ஆரபி ராகம் என்று தேவகாந்தாரி ராகத்தை ஆலாபனை செய்து தனது கார்ச்சாரதியிடம் (கவிதாலயா கிருஷ்ணன்) வாதிட்டு, விளக்கம் கேட்டு ஜே.கே.பியிடம் செல்லும் சுவாரஸ்யமான காட்சி. கூடவே இந்த நீதிபதி பாத்திரம் எவ்வளவு தூரம் சங்கீதம் மீது நாட்டம் கொண்டவர் என்பதைக் காட்டப் பயன்படுகிறதுசிந்து கொடுத்த பாரதியார் கவிதைகளை கடற்கரைப் பாறையில் அமர்ந்து "மனதில் உறுதி வேண்டும்" பாடலைப் பாடி ரசிக்கும் ஜே.கே.பிக்கு பாமர மீனவன் சங்கு மாலை கொடுக்கும் நெகிழ்ச்சியான காட்சி. அந்தக் காட்சியில் இழையோடும் வயலின் இசை ஜே.கே.பி என்ற கலைஞனை எப்படி நெகிழவைத்திருக்கின்றது என்பதை மனக்கண்ணில் கொண்டு வரும்.மீனவன் கொடுத்த சங்குமாலையைப் பற்றி ஜே.கே.பி தன் மனைவி பைரவியிடமும், நண்பி சிந்துவிடமும் சொல்லும் போது அவர்கள் இருவருக்கும் உள்ள முரண்பட்ட பார்வையைக் காட்டுதல். காட்சி ஆரம்பத்தில் ஒலிக்கும் இசை தான் சிந்து பைரவியின் அடி நாதமாகப் படம் முழுதும் விரவியிருக்கும் இசையின் ஒரு பகுதிபைரவிடம் சிந்து "உங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கு உங்க புருஷனை அபேஸ் பண்ணிக்கொண்டு போகலாமான்னு பார்க்கிறேன்" என்னும் போது பைரவிக்கு எழும் கோப அலைகள் வயலினின் இழை வழியேஜே.கே.பி முன் சிந்து ஆலாபனை இசைக்க கூடவே இணையும் ஜே.கே.பியும் சேர்ந்து நிறைவாக்கும் ராகமஞ்சரி ராகம்ஜட்ஜின் மனைவி தான் தன் தாய் என்று கண்டுணரும் சிந்து, பின்னே ஒலிக்கும் இசையில் அவள் உணர்வைப் பகிரஜட்ஜ் வீட்டில் சிந்து பாடும் "நானொரு சிந்து காவடிச்சிந்து" பாடல் , பின்னணிக்குரல் கே.எஸ்.சித்ராவேற்றுமொழிக்கீர்த்தனைகளை தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என்று சொல்லி ஜே.கே.பி "நீ தயராதா" என்று பாட சிந்து இந்தப் பாடலை ஏற்கனவே தமிழில் மொழிபெயர்த்ததாகச் சொல்லி "உன் தயவில்லையா" என்று அந்தப் பாடலை முழுமையாகத் தமிழில் பாடுகிறாள்பாடலைக் கேட்டு ஜே.கே.பி "உன்னுடைய இசைக்கு அடிமையாகிவிட்டேன்" என்று சொல்லி சிந்துவின் கையில் தன் கல்யாண மோதிரத்தை அணிவிக்கப் படத்தின் மூல இசை புல்லாங்குழலில் துள்ளுகிறதுஜே.கே.பி மெல்ல மெல்லத் தன் வயத்தை சிந்து மீது கொடுக்கும் தர்ம அவஸ்தையில் பெண்குரல்களின் ஆர்ப்பரிப்போடு ஒலிக்கும் பின்னணி இசையோடு "மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்" பாடல் இணைகிறதுஜட்ஜ் "நானொரு சிந்து காவடிச்சிந்து" பாடலைத் தாளம் தட்டிப் பாடிவிட்டு "கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் என்னிடம்" பாடலை கமல், ரஜினி, சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்றோருக்குப் பாடுவதாகக் கற்பனை செய்து பாடும் சுவாரஸ்யக் காட்சிஜே.கே.பி தமிழிசைப்பாடல்களை வெளிக்கொணரும் காட்சியியில் பின்னணி ஆண்குரல்களோடு ராஜாவின் குரலிசையும்சிந்துவின் மனதில் ஜே.கே.பி இப்போது காதலனாக மாறும் தருணம் புல்லாங்குழல் அவள் மனதின் தூதுவனாகசிந்து தன் உள்ளக்கிடக்கையை ஜே.கே.பியிடம் சொல்லி இணையும் வேளை தத்தளிக்கும் மனவுணர்வை மிருதங்க இசையில் ஆரம்பித்து மெல்ல மெல்ல இரு மனமும் சேரும் போது ஒத்துழைக்கும் இசை ஆர்ப்பரிப்பு. படத்தின் உச்சபட்ச பின்னணி இசை இதுதான்ஜே.கே.பி பாடும் "ஆனந்த நடனமாடினார்" பாட்டில் கடத்துக்கும் மிருதங்கத்துக்கு ஒரு ஆரோக்கியமான போட்டிசிந்து தன் தாயிடம் அவமானப்பட்டு நிற்கும் காட்சியைத் தொடர்ந்து "பாடறியேன் படிப்பறியேன்" பாடல் குழந்தைகளின் கோரஸ் குரலாக"பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே" ஜே.கே.பி என்ற பூக்கடை சாக்கடை நிலையில் போகும் நிலையில் "நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது"தர்பார் ராகத்தில் பாடுவதாகச் சொல்லிப் பாடிக்கெடுக்கும் வித்துவானைக் கண்டித்து ஜே.கே.பி பாடும் "லோசனா""தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்" குவாட்டர் யாசகத்துக்காக டப்பாங்குத்துக்கு இறங்கும் ஜே.கே.பி"தென்றலெது கண்டதில்லை மனம் தான் பார்வை" என்ற பாடலைப் பாடி சிந்து தன் பாடசாலைப் பிள்ளைகளுக்குப் பாடமெடுக்கும் காட்சி
மீண்டும் ஜே.கே.பி மிடுக்கோடு சபையேறும் அந்த நாள், ஜட்ஜ் ஐயா ஆரோகணம் அவரோகணம் குறித்து விளக்கமும் கொடுத்த சிறப்புரையைத் தொடர்ந்து ஆரோகணப் பிரயோகத்தை மட்டும் பாவித்துப் பாடும் "கலைவாணியே உனைத்தானே அழைத்தேன்"Thursday, April 21, 2011

றேடியோஸ்புதிர் 61: ஒரே படம் மூன்று தேசிய விருதுகள்


என்னதான் சிறப்பானதொரு படைப்பாக இருந்தாலும்,இந்தப் படம் இவ்வளவு தேசிய விருதுகளைக் கொடுக்கும் என்று இயக்குனரே எதிர்பார்த்திருக்கமாட்டார். படிப்பைத் தொடர வேண்டிய பாடகியை நிறுத்தி இந்தப் படம் உன்னை உயர்த்தும் என்ற இசைஞானியின் சொல்லை மெய்ப்பிக்க சிறந்த பாடகி என்ற தேசிய விருது அவருக்குக் கிட்டியது. பாடல்கள் ஒவ்வொன்றுமே முத்துக்கள் ஆனால் இந்தப் படத்துக்கு முன்னமே கவிஞர் இன்னொரு படத்துக்குத் தேசிய விருதை வாங்கி விருதுக்கு கெளரவம் தேடிக்கொடுத்து விட்டார். ஆனால் இத்தனை ஆண்டுகள் உழைப்பில் ஒவ்வொரு படத்துக்குமே விருதுகள் வாங்கக்கூடிய தரத்தில் இருந்தாலும் இந்தத் தேசிய விருது இசையமைப்பாளருக்கு இரண்டாவது தடவையாகக் கிடைக்கின்றது. ஒளிப்பதிவாளராகவேண்டும் என்று ஆசைப்பட்டுத் திரையுலகம் வந்த அம்மணிக்கு அரிதாரம் போட்டு, கூடவே இந்தப் படத்தின் மூலம் தேசிய விருதையும் கொடுத்துக் கெளரவித்துக் கொண்டது.

என்ன இருந்தாலும் வாழ்க்கையில் இப்படி ஒரு இயல்பானதொரு கலைஞன் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்தும் நாயகனுக்குத் தேசிய விருது கிட்டவும் வரவில்லை இனியும் கிட்டாது ஏனென்றால் அவர் இனி நடிக்க மாட்டாராமே.

ஒகே மக்கள் புதிருக்கு ஏகப்பட்ட க்ளூ விரவியிருக்கு, பதிலோடு வருக
என்ன படம் கூடவே ஒரே படத்தில் தேசிய விருது கிடைத்த அந்த மூன்று பிரபலங்கள் யார்?

சரியான பதில்

சிறந்த நடிகை: சுஹாசினி
சிறந்த பாடகி: சித்ரா
சிறந்த இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சிந்து பைரவி

போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

Thursday, April 14, 2011

நந்தனா....வானத்துமலரே...எழுதுகிறேன் ஒரு கடிதம்


எத்தனை செல்வங்கள் கிடைத்தாலும் செல்வத்துள் பெருஞ்செல்வம் பிள்ளைச்செல்வம் என்பார்கள். அப்படியானதொரு செல்வத்துக்காகப் பல்லாண்டுகள் காத்திருந்தவர் எல்லாச் செல்வங்களையும் கொண்டிருந்த பாடகி சித்ரா. நீண்ட நாட்களாக அவருக்குப் பிள்ளை இல்லை,அந்த ஏழ்மையை மனதுள் புதைத்துக் கொண்டிருந்த அவருக்கு தேவா இசையில் புதியவர் இளந்தேவன் வரிகளில் கல்கி படத்துக்காகப் பாடும் வய்ப்புக் கிடைக்கின்றது.
"முத்து முத்து மகளே முகங்காணா நிலவே
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து -
கற்பனையில் பெற்ற கண்மணியே நானுனக்கு
கவிதையில் எழுதும் கடிதம்"இப்படியாகக் கருவுறாத் தாய் ஒருத்தியின் ஏக்கம் சுமந்த பாடலாக வருகின்றது. பாடலைப் பாடி முடித்து விட்டு பாடல் ஒலிப்பதிவுக் கூடத்திலேயே தன் மனதில் அதுநாள் வரை கொண்டிருந்த சுமையை இறக்குமாற்போல வெடித்து அழுகிறார் சித்ரா. இது நடந்தது 1996 ஆம் ஆண்டு.

2006 ஆம் ஆண்டு மலையாளத் திரையுலக இசை மேதை ரவீந்திரன் இசையில் "நந்தனம்" திரைப்படத்துக்காக சித்ராவுக்கு அவரின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத பாடலாக "கார்முகில் வந்த" என்ற பாடல் கிட்டுகிறது. கேரள அரசின் சிறந்த பாடகிக்கான விருதை மட்டுமல்ல இது நாள் வரை அவர் ஏங்கிக் கொண்டிருந்த பிள்ளைச் செல்வமும் கிடைக்கிறது.


அந்தப் பாடல் ஒலிப்பதிவு வேளையில் இதுநாள் வரை கிட்டாத கரு உருக்கொண்டிருக்கும் வேளை அந்தப் பாடல் வாய்ப்பைச் சித்ரா தட்டிக்கழிக்க, ரவீந்திரனோ இல்லை நீ தான் பாடணும் என்று வற்புறுத்திப் பாடவைக்கிறார். பாடலும் பிரசவிக்க, பிள்ளைச் செல்வமும் கிட்ட, ஆசையோடு பேர் வைக்கிறார் அந்தப் பிள்ளைக்கு "நந்தனா" என்று

தன்னைப் பற்றிப் பேசும் வாய்ப்புக்களில் நந்தனாவை அதிகம் சேர்த்துக் கொள்ள சித்ரா தவறுவதில்லை. சிட்னியில் இசை நிகழ்ச்சி செய்ய வந்த போது கூட ஒரே நந்தனா புராணம் தான். நந்தனாவுக்கு இசை பிடிக்கும் என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்லிவைத்த அந்தச் சித்ராவின் மனதில் நிறைந்து இருந்த தாய்மையின் பூரிப்புத் தெரிந்தது.

ஏப்ரல் 14, துபாயில் உள்ள எமிரேட்ஸ் ஹில்ஸ் இல் இருக்கும் நீச்சல் குளத்தில் காத்திருந்த காலன் "நந்தனா"வை சித்ராவிடம் இருந்து நிரந்தரமாகப் பிரித்தெடுத்துவிட்டான் :(

முத்து முத்து மகளே முகங்காணா நிலவே
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து -
கற்பனையில் பெற்ற கண்மணியே நானுனக்கு
கவிதையில் எழுதும் கடிதம்

எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்தின் நிலவே வாழ்க்கையின் பொருளே வா
எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்

பாறையில் மலர்ந்த தாமரையே இரவினில் எழுந்த சூரியனே
எழாமலே எழும் நிலா நீயே

நந்தனாவுக்கு என் ஆத்மார்த்தமான அஞ்சலிகள்

Friday, April 8, 2011

சிட்னியில் ஶ்ரீகுமாரும் பின்னே ஞானும்


சிட்னிக்கு மலையாளப்பாடகர் எம்.ஜி.ஶ்ரீகுமார் வருகிறார் என்பதை இங்குள்ள மலையாளிகளின் கூட்டு மின்னஞ்சல் எனக்கு உறுதிப்படுத்தியது. சிட்னிக்கு வருகின்ற மலையாளப்படங்களை ஆதரிக்கும் என்னை சக மலையாளியாகவே கருதி என்னையும் தமது மின்னஞ்சல் பட்டியலில் சேர்த்த அவர்தம் பெருந்தன்மை தான் என்னே. இருந்தாலும் எம்.ஜி.ஶ்ரீகுமாரின் இசை நிகழ்ச்சியை என்ன விலை கொடுத்தாலும் பார்த்தே தீரவேண்டும் என்ற என் தீரா ஆசைக்கு விதையாக இருந்தது,வழக்கம் போல இசைஞானி இளையராஜா தான். ஏனென்றால் தான் இசையமைத்த பெரும்பாலான மலையாளப்படங்களில் எம்.ஜி.ஶ்ரீகுமாருக்கு வாரி வழங்கியிருக்கிறார் ராஜா. அதில் ஒன்றிரண்டையாவது மனுஷர் மேடையில் பாடுவாரே என்ற நப்பாசை தான் காரணம். ஆனால் என் ஆசையை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பார்வையாளர்களைக் குறிவைத்து அடித்த ஶ்ரீசாந்த் இன் பந்து போல நிராசை ஆக்கி விட்டது. மேற்கொண்டு இசை நிகழ்ச்சிக்குச் செல்வோம் ;0

அலுவலகத்தில் இருந்து அரை மணி நேரம் சீக்கிரமாகவே மொட்டை அடித்து விட்டு, இரவு வானொலி நிகழ்ச்சிக்கும் கட் அடித்து விட்டு நிகழ்ச்சி பார்க்கவேண்டும் என்ற என் பேராசைக்கு செமத்தியான முதல் அடி கிடைத்தது. ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போதோ, இறங்கும் போதோ என் பாண்ட் இல் இருந்த சாவிக்கொத்து, கார்ச்சாவி, வீட்டுச்சாவி உள்ளடங்கலாகத் தொலைந்து விட்டது. அதைத் தேடி அரைமணி நேர அலைச்சல், சலிப்போடு சரி மனசை ரிலாக்ஸ் ஆக்க எப்படியாவது இசை நிகழ்ச்சிக்குப் போ என்று மன வேதாளம் கட்டளை இட ரயில் நிலையத்தில் இருந்தே அடுத்த ரயிலைப் பிடித்து இசை நிகழ்ச்சிக்குப் போனேன்.

நிகழ்ச்சி தொடங்கியது. எம்.ஜி.ஶ்ரீகுமார் இதோ வருகிறார் என்று மஞ்சள் நிற சேச்சிகள் மேடையில் பகிர, வெள்ளை வெளேர் சேர்ட் உடன் கேரளத் தேங்காய் எண்ணை மகிமையில் வழுக்கை விழாத் தலையர் எம்.ஜி.ஶ்ரீகுமார் வந்தார். ஆங்கிலக் கலப்பில்லாத அட்சர சுத்தமான மலையாளம், வழக்கம் போல சிட்னி ரசிகர்கள் உலகத்திலேயே தலை சிறந்தவர்கள் என்ற ஓவர் பனிக்கட்டி சமாச்சாரம் இல்லாத இயல்பான பேச்சு என்று 80களின் மலையாள சினிமா போன்று எளிமையாக இருந்தார். தனக்குப் பின் வந்த பாடகர்கள் எல்லாம் சிட்னி போய் வந்துட்டோம் என்று சொல்லும் போதெல்லாம் நானும் எப்போ போவேன் என்ற நினைப்பை இன்று நிரூபித்தாகிவிட்டது என்றார். அம்மா பாடலோடு ஆரம்பித்தது அவர் கச்சேரி. கூடவே அப்துல் ரஹ்மான் என்ற ஒரு இளம் பாடகரும் ஒரு ரஞ்சினி ஜோஷ் இளம்பாடகி plus ஏஷியா நெட் புகழ் பிரபல அறிவிப்பாளினியும்ளினியும் வந்திருந்தார்கள்.

கேரளத்தின் சப்தம் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற மேதையில் குரலாகப் பிரதிபலிக்கின்றது என்று சிலாகித்தவர் ஜேசுதாசின் தந்தை அகஸ்டின் யோசப் உம் தன்னுடைய தந்தையும் நாடகத்தில் ஒன்றகா நடித்தவர்கள் அந்தக் காலத்தில் இருந்தே நாம் குடும்ப நண்பர்கள். நான் இசையமைக்கும் சகுடும்பம் ஷியாமளா படத்தில் ஒரு பாடலைப் பாடுகிறீர்களா என்று ஜேசுதாசைக் கேட்க "பாடலாமே , அதானே என் தொழில்" என்றவர் விளிச்சோ நீ என்னை விளிச்சோ என்ற பாடலைப் பாடியதோடு, அடுத்தமுறை நீ இசையமைக்கும் போதும் நீ என்னை விளிக்கும் என்று சொன்னதாகக் சொல்லிச் சிரித்தவர் அந்தப் பாடலையும் மேடையில் பாடினார்.

எம்.ஜி.ஶ்ரீகுமாரின் சகோதரர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மலையாள உலகில் இசையமைப்பாளர். காலமான அவரை நினைவு கூர்ந்தவர் தன் சகோதரர் மூலம் எத்தனையோ நல்ல சாகித்யங்கள் நிரம்பிய பாடல்கள் கிட்டியதாகச் சொல்லி ஒரு சில வரிகளையும் அந்தப் பாடல்களை நினைவுபடுத்திப் பாடினார். எம்.ஜி.ராதாகிருஷ்ணனோடு கடந்த வருஷம் தனது 48 வயதிலேயே காலமான பிரபல திரையிசைக் கவிஞர் கிரிஷ் புத்தன்சேரியின் இழப்பும் பெருங்கவலை தரும் விஷயம். இருவரும் இணைந்து பணியாற்றிய தேவாசுரம் என்ற ஐ.வி.சசியின் திரைப்படம். அந்தப் படம் மோகன்லாலின் படங்களில் அவருக்கு முத்திரைப் படமாக அமைந்த படங்களில் ஒன்று அந்தப் படத்தில் எனக்குக் கிடைத்த பாடல் சூர்ய கிரீடம் என்ற பாடலை இருவருக்கும் சமர்ப்பிக்கின்றேன் என்றவாறே உணர்ச்சிப்பெருக்கோடு அந்தப் பாடலைப் பாடி வசீகரித்தார்.
கிலுக்கம், பிரியதர்ஷன் - மோகன்லால் வெற்றிக்கூட்டணியில் வெளிவந்த படம். அந்தப் படத்தில் வரும் பாடலான ஊட்டிப்பட்டணம் பாடலைப்பாடினார். பாடலில் தமிழ் வரிகள் நிரம்பியது இன்னும் ரசிக்க முடிந்தது.ம்ம்ஹிஹிம்ஹிம் என்று ஶ்ரீகுமார் ஆலாபனை செய்ய ஆரம்பிக்கவே குறிப்பால் உணர்ந்து ரசிகர் கூட்டம் ஆர்ப்பரித்த அந்தப் பாடல் தாளவட்டம் என்ற படத்தில் இடம்பெற்ற "பொன் வீணை என்னுள்ளில் மெளனம் வானோ" என்ற பாடலைப் பாடும் போது மெய்சிலிர்க்க அனுபவித்துக் கேட்டேன். எனக்கு நிரம்பப்பிடித்த ஆர்ப்பாட்டமில்லாத பாடல். இந்தப் படம் தமிழில் மனசுக்குள் மத்தாப்பு என்று பிரபு நடிக்க மீள எடுத்த படம்.
கேரள சினிமாக்காரருக்கு தமிழ் என்றால் எனிமா என்பது உலகறிந்த ரகசியம். பாண்டி பாண்டி என்று மூச்சுக்கு மூச்சு கிண்டலடித்து ரசித்த அவர்களையே தமிழின் அதிரடி இசையமைப்பாளர்கள் கவிழ்த்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என்பதை நிகழ்ச்சியில் காணக்கூடியதாக இருந்தது. "குண்டு மாங்காத் தோப்புக்குள்ள" என்ற பாடலுக்கு குலுக்கல் ஆட்டமும், இமானின் இசையில் சமீபத்தில் வந்த அட வாடா வாடா பையா என்ற கச்சேரி ஆரம்பம் படப்பாடலும், கந்தசாமியில் வந்த அலேக்ரா, காதலன் படத்தின் முக்காலா முக்காபுலா, வில்லுவில் இருந்து வாடா மாப்பிளை போன்ற பாடல்களை இளம்பாடகர்கள் ரஹ்மானும், ஜோடிப்பெண் ரஞ்சினி ஜோஷ் உம் பாடி சூழலை மாசுபடுத்தினார்கள். இருந்தாலும் பாடிய தமிழில் குறை ஒன்றும் இல்லைக் கண்ணா.

ஐடியா சிங்கர் புகழ் கீபோர்ட் ப்ளேயர் அனூப் குமாரின் இசை கலக்கலாக இருந்தது. ஶ்ரீகுமாரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பாடலைப் பாடுமாறு கேட்க , "இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை" என்ற பாடலை அவர் பாடிய போது இலைமறை காயாக இன்னொரு நல்ல பாடகர் இருப்பது தெரியவந்தது.

ஶ்ரீகுமாரும் தன் பங்கிற்கு "ஒரு Black & White குடும்பம்" திரைப்படத்தில் இருந்து "ஆள மயக்கண குப்பி பாடலைப் பாடி, பிரியாணிப் பார்சலோடு பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களையும் ஆட வைத்தார்.


கூடவே ஹரிஹரன் நகரில் படத்தில் வந்த "உண்ணம் மறந்து" என்ற பாடல் அந்தப் படம் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்ட போதும் வந்ததாகச் சொல்லி அதையும் பாடிவைத்தார்.

நரன் படத்தில் மோகன்லால் வேலோடு ஆடிய வேல்முருகா அரோஹரா பாடலுக்கு ரசிகர்கள் காவடி தூக்காதது தான் குறைஅடுத்தது ராஜாவின் பாடல் தான் என்று மனதைச் சமாதானப்படுத்தி மூன்று மணி நேரக் கச்சேரிக்கும் முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. கேரள சினிமாவின் எண்பதுகளின் ராஜா, ரவீந்திரனை மட்டுமல்ல இசைஞானி இளையராஜா மலையாளத்தில் இசையமைத்த எத்தனையோ நல்ல பாடல்களைப் பாடி இருந்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட ஶ்ரீகுமாரை என்ன செய்யலாம்? விஜய் ஆண்டனி இசையில் இவர் குரலை ரீமிக்ஸ் செய்து தண்டனை கொடுக்கக் கடவது.

Wednesday, April 6, 2011

றேடியோஸ்புதிர் 60 - "பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு"


வணக்கம் வணக்கம் வணக்கம், ஒரு சின்ன இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிரோடு வந்திருக்கிறேன். இந்தப் புதிரில் நான் கேட்கப்போவது ஒரு பாடல் குறித்தது. கவிஞர் முத்துலிங்கம் அவர்களும் இசைஞானி இளையராஜாவும் இணைந்து ஏராளமான முத்துக்களைக் கொடுத்திருக்கின்றார்கள். அதில் ஒன்றுதான் இந்த முத்து.

பாரதிராஜாவின் ஒரு படம், இந்தப் படத்தின் அறிமுக நாயகிக்கான பாடலை எழுதவேண்டும் என்று ஒரு நாள் இரவு பாரதிராஜாவின் மேலாளர் வடுகநாதன் கவிஞர் முத்துலிங்கத்தைச் சந்தித்து கூடவே அந்தப் பாடலுக்கான மெட்டமைக்கப்பட்ட இசை தாங்கிய ஒலி நாடாவையும் கொடுத்து விட்டுக் கிளம்பினார். துரதிஷ்டவசமான வீட்டில் மின்சாரம் இல்லை அன்று. அடுத்த நாள் பாடல் ஒலிப்பதிவு. இந்த நிலையில் மறுநாள் ராஜாவைச் சந்திக்கிறார் முத்துலிங்கம். பாடல் ரெடியா என்று கேட்டபோது நிலமையைச் சொல்லி விளக்கிவிட்டுடு இப்பொழுதே எழுதிவிடுகிறெஎன் என்று சொல்லியவாறே அவர் முன்னால் எழுத ஆரம்பிக்கிறார். முதல் அடியை எழுதி விட்டு பொருத்தமான அடுத்த அடியை எழுதும் போது கவனித்த ராஜா இரண்டாவது அடியை மாற்றிவிட்டு "பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்" என்று எழுதுமாறு சொன்னாராம். அதையே இணைத்துவிட்டு முழுப்பாடலையும் எழுதிமுடித்தார் முத்துலிங்கம். அந்தப் படத்திலேயே வெற்றிபெற்ற பாடலாக இந்தப் பாடலும் அமைந்து விட்டது. அது எந்தப் பாடல் என்பது தான் கேள்வி. பதிலோடு ஓடி வாருங்கள் ;-)

இதோ போட்டி முடிவடைந்து விட்டது, சரியான பதில் இதுதான்

பாடல் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
படம்: புது நெல்லு புது நாத்து
அறிமுக நாயகி: சுகன்யா