
"சிந்து பைரவி" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா என்ற அலை வந்தபோதும் பல்லாண்டுகாலமாக இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தவில்லை அல்லது கிட்டவில்லை. ஆனால் இந்த இரு இமயங்களும் இணைந்த படங்களிலேயே "சிந்து பைரவி" உச்சமாக அமைந்து விட்டது. சங்கராபரணம் அளவுக்கு எங்களாலும் கொடுக்க முடியும் என்று தமிழ்த்திரையுலகம் சிந்து பாடிய படம் இது.



1985 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் ஜே.கே.பி என்ற சங்கீதவித்துவான், சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் பைரவி என்னும் மனைவி, சங்கீதத்தை தெய்வமாகப் பூஜிக்கும் சிந்து என்ற நண்பி இந்த மூன்று புள்ளிகளை இணைத்துப் பின்னப்பட்ட கதைக்களம் சிந்துபைரவி.
ஜே.கே.பி என்ற சங்கீத வித்துவானாகவும் பின்னர் அவர் தரம் தாழ்ந்து போகும் போதும் சிறப்பானதொரு குணச்சித்திர நடிப்பை வழங்கிய சிவகுமார், பைரவி என்னும் சுலக்க்ஷணாவுக்கு இது போல் ஒரு பாத்திரம் இதற்கு முன்னும் பின்னும் கிட்டாத ஒரு வாய்ப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக சுஹாசினி என்ற நடிகையின் முழுமையான நடிப்பின் பரிமாணத்தைக் காட்டித் தேசிய விருதைக் கொடுத்துக் கெளரவித்தும் ஆயிற்று. கூடவே வந்து சென்ற குணச்சித்திரங்கள் மிருதங்க வித்துவான் குருமூர்த்தி - டெல்லி கணேஷ், தம்புரா - ஜனகராஜ், ஜட்ஜ் ஐயா - ராகவேந்திரர் என்று ஒவ்வொரு பாத்திரமும் பட்டை தீட்டி எடுக்கப்பட்டிருக்கிறது இப்படத்தில்.

படத்தின் பின்னணி இசைப் பிரிப்புக்கு வழக்கம் போல எனக்கு இரண்டு நாட்கள் மொத்தமாக ஆறரை மணி நேரம் தேவைப்பட்டதென்றால் இதுபோன்ற நூறாயிரம் இசையைத் தன்னுள்ளே தேக்கிவைத்த இசைஞானியின் பெருமையை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்பதால் அவர் மீட்டிய வாத்தியத்தால் சொல்ல விழைகிறேன். சிந்து பைரவி படம் வந்து 26 ஆண்டுகள் மிதக்கும் இவ்வேளை இப்படத்தில் இருந்து மொத்தம் 25 இசைக்குளிகைகளைத் தருகின்றேன். அனுபவியுங்கள்.

படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும்"ஆதித்ய ஹிருதயம் புண்யம் சர்வசத்து விநாசனம்" பாடலை நாயகன் ஜே.கே.பிக்கு குரல் வடிவம் கொடுக்கிறார் கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் முடிவில் இனியதொரு வீணையிசை மீட்போடு நிறைவுறுகிறது
மிருதங்கவித்துவான் குருமூர்த்தி (டெல்லி கணேஷ்) மது அருந்திவிட்டு வந்திருக்கிறார் என்றுணர்ந்து அவரை கச்சேரியில் வாசிக்கவிடாமல் தடுத்து மிருதங்க இசை இல்லாமலேயே "மகா கணபதிம்" பாடும் பாடும் ஜே.கே.பி
"மரிமரி நின்னே" பாடலைப் பாடும் ஜே.கே.பி, சிந்து அறிமுகமாகிறாள்
சிந்து, ஜே.கே.பியிடம் மக்களைச் சென்றைடையும் பாடல் வடிவம் எப்படி இருக்கவேண்டும் என்று வாதாடி கூடவே "பாடறியேன் படிப்பறியேன்" பாடலைப் பாடி நிறைவில் "மரிமரி நின்னே" ஆக நிறைவாக்கிக் கைதட்டல் பெறும் காட்சி. பாடலின் ஆரம்பத்தில் சிந்துவுக்கு ஒத்துழைக்காத பக்கவாத்தியம் மெல்ல மெல்ல இணைகின்றது
ஜட்ஜ் ஐயா (ராகவேந்திரர்) ஆரபி ராகம் என்று தேவகாந்தாரி ராகத்தை ஆலாபனை செய்து தனது கார்ச்சாரதியிடம் (கவிதாலயா கிருஷ்ணன்) வாதிட்டு, விளக்கம் கேட்டு ஜே.கே.பியிடம் செல்லும் சுவாரஸ்யமான காட்சி. கூடவே இந்த நீதிபதி பாத்திரம் எவ்வளவு தூரம் சங்கீதம் மீது நாட்டம் கொண்டவர் என்பதைக் காட்டப் பயன்படுகிறது
சிந்து கொடுத்த பாரதியார் கவிதைகளை கடற்கரைப் பாறையில் அமர்ந்து "மனதில் உறுதி வேண்டும்" பாடலைப் பாடி ரசிக்கும் ஜே.கே.பிக்கு பாமர மீனவன் சங்கு மாலை கொடுக்கும் நெகிழ்ச்சியான காட்சி. அந்தக் காட்சியில் இழையோடும் வயலின் இசை ஜே.கே.பி என்ற கலைஞனை எப்படி நெகிழவைத்திருக்கின்றது என்பதை மனக்கண்ணில் கொண்டு வரும்.
மீனவன் கொடுத்த சங்குமாலையைப் பற்றி ஜே.கே.பி தன் மனைவி பைரவியிடமும், நண்பி சிந்துவிடமும் சொல்லும் போது அவர்கள் இருவருக்கும் உள்ள முரண்பட்ட பார்வையைக் காட்டுதல். காட்சி ஆரம்பத்தில் ஒலிக்கும் இசை தான் சிந்து பைரவியின் அடி நாதமாகப் படம் முழுதும் விரவியிருக்கும் இசையின் ஒரு பகுதி
பைரவிடம் சிந்து "உங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கு உங்க புருஷனை அபேஸ் பண்ணிக்கொண்டு போகலாமான்னு பார்க்கிறேன்" என்னும் போது பைரவிக்கு எழும் கோப அலைகள் வயலினின் இழை வழியே
ஜே.கே.பி முன் சிந்து ஆலாபனை இசைக்க கூடவே இணையும் ஜே.கே.பியும் சேர்ந்து நிறைவாக்கும் ராகமஞ்சரி ராகம்
ஜட்ஜின் மனைவி தான் தன் தாய் என்று கண்டுணரும் சிந்து, பின்னே ஒலிக்கும் இசையில் அவள் உணர்வைப் பகிர
ஜட்ஜ் வீட்டில் சிந்து பாடும் "நானொரு சிந்து காவடிச்சிந்து" பாடல் , பின்னணிக்குரல் கே.எஸ்.சித்ரா
வேற்றுமொழிக்கீர்த்தனைகளை தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என்று சொல்லி ஜே.கே.பி "நீ தயராதா" என்று பாட சிந்து இந்தப் பாடலை ஏற்கனவே தமிழில் மொழிபெயர்த்ததாகச் சொல்லி "உன் தயவில்லையா" என்று அந்தப் பாடலை முழுமையாகத் தமிழில் பாடுகிறாள்
பாடலைக் கேட்டு ஜே.கே.பி "உன்னுடைய இசைக்கு அடிமையாகிவிட்டேன்" என்று சொல்லி சிந்துவின் கையில் தன் கல்யாண மோதிரத்தை அணிவிக்கப் படத்தின் மூல இசை புல்லாங்குழலில் துள்ளுகிறது
ஜே.கே.பி மெல்ல மெல்லத் தன் வயத்தை சிந்து மீது கொடுக்கும் தர்ம அவஸ்தையில் பெண்குரல்களின் ஆர்ப்பரிப்போடு ஒலிக்கும் பின்னணி இசையோடு "மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்" பாடல் இணைகிறது
ஜட்ஜ் "நானொரு சிந்து காவடிச்சிந்து" பாடலைத் தாளம் தட்டிப் பாடிவிட்டு "கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் என்னிடம்" பாடலை கமல், ரஜினி, சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்றோருக்குப் பாடுவதாகக் கற்பனை செய்து பாடும் சுவாரஸ்யக் காட்சி
ஜே.கே.பி தமிழிசைப்பாடல்களை வெளிக்கொணரும் காட்சியியில் பின்னணி ஆண்குரல்களோடு ராஜாவின் குரலிசையும்
சிந்துவின் மனதில் ஜே.கே.பி இப்போது காதலனாக மாறும் தருணம் புல்லாங்குழல் அவள் மனதின் தூதுவனாக
சிந்து தன் உள்ளக்கிடக்கையை ஜே.கே.பியிடம் சொல்லி இணையும் வேளை தத்தளிக்கும் மனவுணர்வை மிருதங்க இசையில் ஆரம்பித்து மெல்ல மெல்ல இரு மனமும் சேரும் போது ஒத்துழைக்கும் இசை ஆர்ப்பரிப்பு. படத்தின் உச்சபட்ச பின்னணி இசை இதுதான்
ஜே.கே.பி பாடும் "ஆனந்த நடனமாடினார்" பாட்டில் கடத்துக்கும் மிருதங்கத்துக்கு ஒரு ஆரோக்கியமான போட்டி
சிந்து தன் தாயிடம் அவமானப்பட்டு நிற்கும் காட்சியைத் தொடர்ந்து "பாடறியேன் படிப்பறியேன்" பாடல் குழந்தைகளின் கோரஸ் குரலாக
"பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே" ஜே.கே.பி என்ற பூக்கடை சாக்கடை நிலையில் போகும் நிலையில் "நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது"
தர்பார் ராகத்தில் பாடுவதாகச் சொல்லிப் பாடிக்கெடுக்கும் வித்துவானைக் கண்டித்து ஜே.கே.பி பாடும் "லோசனா"
"தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்" குவாட்டர் யாசகத்துக்காக டப்பாங்குத்துக்கு இறங்கும் ஜே.கே.பி
"தென்றலெது கண்டதில்லை மனம் தான் பார்வை" என்ற பாடலைப் பாடி சிந்து தன் பாடசாலைப் பிள்ளைகளுக்குப் பாடமெடுக்கும் காட்சி
மீண்டும் ஜே.கே.பி மிடுக்கோடு சபையேறும் அந்த நாள், ஜட்ஜ் ஐயா ஆரோகணம் அவரோகணம் குறித்து விளக்கமும் கொடுத்த சிறப்புரையைத் தொடர்ந்து ஆரோகணப் பிரயோகத்தை மட்டும் பாவித்துப் பாடும் "கலைவாணியே உனைத்தானே அழைத்தேன்"
