Pages

Friday, April 25, 2008

சிறப்பு நேயர் "நித்யா பாலாஜி"


கடந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பித்திருந்தவர், தனது திருமணத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடிய நண்பர் "அய்யனார்". றேடியோஸ்பதியின் இசைப்பதிவுகள் பதிவர்களை மட்டுமன்றி பதிவுலக வாசகர்களையும் ஈர்த்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வாரம் கலந்து சிறப்பிக்கும் சிறப்பு நேயர் "நித்யா பாலாஜி" பதிவுலகிற்குப் புதியவர். அத்தோடு வலைப்பதிவை இன்னும் ஆரம்பிக்காதவரும் கூட. சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய சிறப்பு நேயர் தொடரால் கவரப்பட்டுத் தனது ஆக்கத்தை முத்தான ஐந்து பாடல்களுடன் அழகாகத் தொகுத்து அனுப்பியிருக்கிறார் இவர். தொடர்ந்து நித்யா பாலாஜி பேசுவதைக் கேளுங்கள்.


நான்
வலைப்பதிவுகளுக்கு புதியவள்.
றேடியோஸ்பதியின் "சிறப்பு நேயர் தொடர்" ரொம்பவும் சுவாரஸ்யம்.
எனக்கு பிடித்த ஐந்து பாடல்களை கொடுத்திருக்கிறேன்.
இந்த பாடல்களை வழங்கினால் மகிழ்வேன்.
அனைவரும் ரசிக்கும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன்.


பாடல்
: சங்கீத மேகம்
படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பி


இளையராஜா
, எஸ்.பி.பி கூட்டணியில் உருவான பாடல்களில் மிக அற்புதமான பாடல் இது.
எந்த மனோநிலையில் இருந்தாலும் கேட்ககூடிய பாடல்.

"இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்"
பாடல்
: நானே நானா
படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்: வாணி ஜெயராம்


வாணி
ஜெயராமின் குரலில் சுகமான பாடல்.
கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் அடிக்கடி கேட்ட பாடல்.
இது அந்த காலங்களுக்கு என்னை அழைத்து செல்லும்.
பாடல்
: நான் ஏரிக்கரை மேலிருந்து...
படம்: சின்னத்தாயி
இசை: இளையராஜா


எளிமையான
இயல்பான கிராமத்து காதல் பாடல்.
அற்புதமான பாடல் வரிகள்.
இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்.....
"கையேந்தும் ஆட்டுகுட்டி கன்னி பெண்ணா மாறாதோ
மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீர பேசாதோ...."
இந்த பாடல் அதிகம் பிரபலம் ஆகவில்லையோ?பாடல்
: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பி, ஜானகி


அருமையான
மெலடி.
பாடல் முழுவதும் வரும் புல்லாங்குழல் இசை அற்புதமாக இருக்கும்.
இளையராஜா இசையில் எஸ்.பி.பி, ஜானகியின் குரல் சுகமோ சுகம்.
பாடல்
: நினைத்து நினைத்து
படம்: ரெயின்போ காலணி
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: கே கே


பாடல்
முழுவதும் கேகேயின் குரல் இசையோடு இழையும்.
நா.முத்து குமாரின் வரிகளும் யுவன் சங்கரின் இசையும் மனதை நெகிழச் செய்துவிடும்.
எனக்கு இந்த பாடலில் பிடித்த வரிகள்,
"முதல்
கனவு முடிந்துடும் முன்னமே
தூக்கம் கலைந்ததேன்......"
நன்றி
நித்யா பாலாஜி

Wednesday, April 16, 2008

சிறப்பு நேயர் "அய்யனார்"


"தனிமையின் சிறகுகளை
விடுவித்துக் கொண்டது
காலம்
பாலை மணலுதறி
பசுஞ்சமவெளியில் தடம் பதிக்கிறேன்
நெடுகிலும் நின்று கொண்டிருக்கும்
துளிர்க்காத மரங்களிலெல்லாம்
நேரடியாய்ப் பூக்களைப் பிரசவிக்கின்றன
நானொரு பெண்ணின் விரல்களை
இறுகப் பற்றிக்கொள்கிறேன்......."

மேற்கண்ட கவிதையையே தன் திருமணச் செய்தியில் கொடுத்திருந்த நம்ம நண்பர் அய்யனார் விஸ்வநாதன் இன்று கல்பனாவை தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்கின்றார்.
இவர்கள் இருவரும் மணமேடையில் இருக்கும் இந்த நேரம் சரியாக இந்தப் பதிவும் போடப்படுகின்றது.
முதலில் அய்யனார் - கல்பனா தம்பதிகள் நீடூழி காலம் நிலைக்கும் இன்பம் பொங்கும் இல்லற வாழ்வில் இனிதாய்க் கழிக்க வாழ்த்துகின்றோம். இவர்களுக்காக நாம் தரும் சிறப்புப் பாடல்
"நூறு வருஷம் இந்த
மாப்பிளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்"
றேடியோஸ்பதியின் இவ்வார சிறப்பு நேயராக வலம் வருபவர் நண்பர் அய்யனார்.
தனிமையின் இசை என்னும் வலைப்பதிவில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இலக்கியப் படையல் கொடுத்து வருபவர். பின்நவீனத்துவக் கவிதைகள், உலக சினிமா, நூல் விமர்சனங்கள் என வலைப்பதிவுலகில் இனம்காணக்கூடிய சிறந்த இலக்கியக்காரர் இவர். விமர்சனம் என்று வரும்போது தீப்பொறி கனக்கும் வரிகளை இவரது தட்டச்சு பொறிக்கும். இவரது எழுத்துக்களில் செறிவான கருத்துக்கள் எந்தவித நெகிழ்வுக்கும் ஈடுகொடுக்காது இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக தனிப்பட்ட ரீதியில் மிகவும் இயல்பாகப் பேச, பழகக்கூடிய இனிய நண்பர் இவர்.

நண்பர் அய்யனாரின் இசை மீதான நேசிப்பு எவ்வளவு தூரம் இருக்கின்றது என்பதற்கு தொடர்ந்து அவர் பேசுவதைக் கேட்டால் அதை விட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது.


திரைப்பட பாடல்களின் மீது 95 களில்தான் ஈர்ப்பு ஏற்படத் துவங்கியது அது மெல்ல பெரும் பைத்தியமானது. ஒரு கட்டத்தில் இரவில் பாடல்களைக் கேட்காமல் தூங்குவதில்லை,காலை எழுந்தவுடன் பாடல்களை கேட்டேயாகவேண்டும் என்பது போன்ற நிர்பந்தங்களில் என்னைத் தள்ளியது.எல்லாரையும் போல இளையராஜா வின் பாடல்கள்தான் எனக்கும் மிகப்பெரிய கிறக்கமாக இருந்து வந்தது/கிறது.

கல்லூரிக் காலங்களில் பிடித்தமான பெண்களைப் பார்க்கும்போதே மனதிற்குள் பாடல்கள் தானாய் உயிர்ப்பெறும்.வரிகளை முணுமுணுத்தபடி பகல் கனவுகளில் மூழ்குவது என் பெரும்பாலான பகல்களின் வேலையாய் இருந்தது.பாடல்களை விரும்பும் நண்பர்களாகவே சேரத் துவங்கினர்.அரிய பாடல்களை தேடி தேடி கேசட்டுகளில் பதிவித்து அதற்காக ரெக்கார்டிங்க் சென்டர் வாசலில் காத்திருந்து மிகுந்த ஆசைகளோடு பாடல்கள் கேட்ட மிகவும் அற்புதமான காலங்கள். எங்களுடைய பிடித்தமான பொழுது போக்கே எந்த பாட்டு எந்த படத்தில் என்பதை கண்டுபிடிப்பதாகத்தான் இருந்தது.இந்த பாடல்களின் மீதிருந்த காதல் என்னையும் என் அண்ணனையும் ஒரு இசைப்பதிவுக் கூடத்தை தொடங்கமளவிற்குத் தள்ளியது 98 களின் இறுதி வாக்கில் ஓசூரில் ஸ்ருதி மியூசிக்கல்ஸ் என்ற கடையைத் தொடங்கினோம் அப்போதுதான் குறுந்தட்டுக்களிள் பதிவது துவங்கியிருந்தது நாங்கள் குறுந்தட்டுக்களிள் பதியும் உபகரணங்களை வாங்கினோம் இருப்பினும் கிராமபோன் பிளேயர்கள் தட்டுக்களையும் விடவில்லை மிக மிக அரிதான பாடல்களயெல்லாம் கைவசம் வைத்திருந்தோம்.

என் வாழ்வின் மிக அழகான நாட்களாக அவற்றை சொல்லலாம் தூங்கும் நேரம் தவிர்த்து எப்போதும் பாடல் கேட்டபடியே திரிந்த நாட்கள் அவை. தூக்கத்திலும் ஏதாவது ஒரு பாடல் மண்டைக்குள் ஓடியபடி இருக்கும் கனவுகளும் பாடல்களாகவே வரும்.ஒரு கட்டத்திற்கு மேல் எங்களால் அக்கடையை தொடர்ந்து நடத்த இயலவில்லை.சில ஆயிரங்களை இழந்திருந்தாலும் எங்களிருவருக்கும் கிடைத்த மகிழ்வும் நிறைவும் வார்த்தைகளால் சொல்ல இயலாதது. வாழ்வு முழுக்க வரும் அய்ந்து பாடல்களை தாங்களென பிரபா கேட்டபோது எதைத் தவிர்க்க எனத்தான் குழம்பிப் போனேன் இப்போதைய மனநிலையில் தோன்றும் பாடல்களாக இவற்றைச் சொல்லலாம்.

1.புத்தம் புது காலை
அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல். இது அத்திரைப்படத்தில் இடம்பெரவில்லை. எஸ் ஜானகியின் ரம்மியக் குரலில் மிகவும் நெகிழ்வாக,ஆத்மாவை தொடும் பாடலாக இதை உணர்கிறேன். என் பெரும்பாலான காலைகளை நிரப்பிய பாடல் . ஒரு கட்டத்தில் காலை எழுந்தவுடன் இந்த பாடலைக் கேட்காவிடின் அந்த நாளே நிறைவு பெறாதோ எனத் தோன்றியதும் உண்டு.
2.தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நிழல்கள் படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல் இதுவும் அத்திரைப்படத்தில் இல்லையென நினைக்கிறேன் (நான் தொலைக்காட்சியில் பார்த்தேன் அதில் இல்லை) அதிர்வுகளை ஏற்படுத்தும் பாடலென்று சொல்லலாம் தனிமையும் ஏக்கமும் காத்திருப்பும் ததும்பி வழியும் ஒரு மாதிரி பித்துப் பிடிக்க வைக்கும் பாடலிது.அதிர்வது இசையா ஜானகியா என பல முறை குழம்பிப் போயிருக்கிறேன் தனிமை மனநிலையில் இப்பாடலைக் கேட்டால் கிடைக்கும் திருப்தி வேறுமாதிரியானது.
3.ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாள்
காற்றினிலே வரும் கீதம் திரைப்படத்தில் வரும் பாடலிது மென்மையான பாடலென இதைச் சொல்லலாம் அழகான வரிகள் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் எனும்போது நம்து இதயமும் உருகத் துவங்கும்.மகிழ்வும் காதலுமாய் கிறங்க வைக்கும் பாடல்.
4.கனா காணும் கண்கள் மெல்ல
அக்னிசாட்சி திரைப்படத்தில் வரும் பாடல் பரிவும் தவிப்புமான பாடல் உங்களுக்கு சுமாராய் பாட வருமெனில் அருகில் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு பாடுவது கைமேல் பலன்களைத் தரலாம்.இதைக் கேட்கும் பெண்கள் உடனடியாய் மயங்குவர்.குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ தலைவன் மடியில் மகளின் வடிவில் உறங்கும் சேயோ எனும்போது இன்ம்புரியாத பரிவு மெல்ல வந்து படரும் .
5.நதியிலாடும் பூவனம்
காதல் ஓவியம் திரைப்படத்தில் வரும் பாடல் எனக்கு மிகமிகமிக மிகப் பிடித்த டூயட். மந்திரங்களோடு துவங்கும்போதே மனம் உருகத் துவங்கும் எத்தனை முறை கேட்டாலும் எஸ்பிபி மற்றும் ஜானகி குரலில் வழியும் ஆத்ம திருப்தியை உணர முடியும்.
மூன்று நாட்களில் எழுதித் தருகிறேனென கிட்டத் தட்ட இரண்டு மாதங்கள் இழுத்தடித்த என் சுறுசுறுப்பை இங்கே வெட்கத்தோடு நினைத்துக் கொள்கிறேன் பொறுமையாய் காத்திருந்த தல பிரபாவிற்கு நன்றிகளும் அன்பும்
================
Ayyanarviswanath
அய்யனார் விஸ்வநாத்
http://ayyanaarv.blogspot.com

Sunday, April 13, 2008

பாடகர் கமல்ஹாசன்....!

கமல்ஹாசன் என்னும் கலைஞன் தன் நடிப்புத் திறனோடு, ஆடல், பாடல் திறனையும் ஒருங்கே வளர்த்துக் கொண்டவர். முன்னர் ஒருமுறை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பாலமுரளிகிருஷ்ணா கூட, கமல் தன்னிடம் சங்கீதம் கற்க வந்ததாகவும், ஒரு சில நாட்களிலேயே அவரின் திறமையைக் கண்டு தான் வியந்ததாகவும் முறையாக இன்னும் பயிற்சி எடுத்திருந்தால் அவரின் பாடும் திறன் இன்னும் உயர்ந்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

குணா பாடல் ஒலிப்பதிவில் கூட இளையராஜா கமலோடு பேசும் போது கமலுக்கு ஹைபிட்சில் பாடும் திறன் இருப்பதைச் சிலாகித்து, சிங்கார வேலனில் "போட்டு வைத்த காதல் திட்டம்" பாடலைப் பாட வாய்ப்புக் கொடுத்ததைக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே இன்றைய பதிவில் கமல்ஹாசன் பாடிய அருமையான, ஏராளம் பாடல்களில் தேர்ந்தெடுத்த சில முத்துகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில், அவர் அந்தரங்கம் திரையில் பாடிய "ஞாயிறு ஒளி மழையில்", அவள் அப்படித்தான் திரையில் இருந்து "பன்னீர் புஷ்பங்களே", குணாவில் இருந்து "கண்மணி அன்போடு காதலன்", தொடர்ந்து தேவர் மகனில் "இஞ்சி இடுப்பழகி", நிறைவாக சிகப்பு ரோஜாக்களில் இருந்து "நினைவோ ஒரு பறவை" ஆகிய பாடல்களோடு இடம்பெறுகின்றது இத்தொகுப்பு.


Sunday, April 6, 2008

சிறப்பு நேயர் "துளசி கோபால்"

ஸ்ரீராமின் விருப்பத்தைத் தாங்கி முத்தான ஐந்து பாடல்களோடு கடந்த வார சிறப்பு நேயர் விருப்பம் அமைந்திருந்தது. அவர் கேட்ட பாடல்கள் வரும்போது அவர் இலங்கையை விட்டு குடும்பமாக ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டார். புது இடம் அவர்களுக்கு செளகரிகமான வாழ்வைக் கொடுக்கட்டும்.

சரி, இனி இந்த வார நேயர் பகுதிக்குச் செல்வோம்.
இந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பிக்கவிருப்பவர் கடந்த நான்காண்டுகளாக வலையுலகில் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே கலக்கலான பதிவுகளை அளித்துவரும் டீச்சரம்மா "துளசி கோபால்".
நகைச்சுவை இழையோடும் சொற்கட்டுக்களோடு வித விதமான அனுபவ, ரசனைப்பதிவுகளைக் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரே தான். தொடர்ந்து பதிவுகளை அள்ளிவிட்டாலும் ஒன்றுமே விலத்தி வைக்கமுடியாத அளவிற்கு சுவாரஸ்யமான எழுத்து நடையை அளிப்பவர். அதனால் தான் ஒவ்வொரு நாளும் மட்டம் போடாத கணிசமான மாணவர் கூட்டம் இவர் பதிவுக்கு எப்போதுமே உண்டு.
துளசி தளம் என்பது இவரின் தனித்துவமான வலைத்தளமாகும்.சாப்பிட வாங்க, விக்கி பசங்க,சற்று முன் ஆகிய கூட்டுத் தளங்களில் இவரின் பங்களிப்பு உண்டு. தொடர்ந்து துளசிம்மாவின் முத்தான ஐந்து தெரிவுகளைப் பார்ப்போம்.

நேயர் விருப்பமாக சில பாட்டுகளைக் கேட்டுருக்கேன். விருப்பமான பாட்டுக்கள்னு பார்த்தால் நூத்துக்கணக்கில் வருது. அதில் சமீபத்தியக் காலப் பாட்டுக்களை நண்பர்கள் ஏற்கெனவே விரும்பிக்கேட்டு, அதையெல்லாம் அனுபவிச்சாச்சு.

தமிழ்ப்பாட்டுக்களை இந்தப் பட்டியலில் சேர்க்கலைன்னா தமிழ்த்துரோகியா நினைச்சுக்குவாங்களோ என்ற ஒரு பயத்தில்(???) ரெண்டு தமிழ்ப்பாட்டுக்கள், ஒரு மலையாளம், ஒரு ஹிந்தி & ஒரு கஸல்னு என் தெரிவு இருக்கு இப்போ:-))))
இரைச்சலான இசைக்கருவிகள் ஓசையும், என்னென்றே புரிபடாத சொற்களும் நிறைஞ்சிருக்கும் பாட்டுக்களை எப்போதுமே விரும்பியதில்லை.

அழகா...மெல்லிய இசையில் மனசுக்குப் பக்கத்துலே வந்து பாடும் பாட்டுக்களைத்தான் மனம் விரும்புது.

1.விஜய் ஆண்ட்டனி இசையில் 'டிஷ்யூம்' என்ற படத்தில் எங்களுக்கு(!!) பிடிச்சது இது. பாடியவர்: ஜெயதேவ் & ராஜலக்ஷ்மி
பாடல்: "நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்"

இப்பாட்டின் வீடியோ வடிவம்


2. அடுத்த பாட்டின் இசை அமைப்பாளரும் இவரேதான். படம்: நினைத்தாலே
அநேகமாக அதிகம் பேர் பார்க்காத படமாக இருக்கலாமுன்னு நினைக்கிறேன்.
வெட்டு, குத்து, ரத்தம்ன்னு தேவையில்லாத காட்சிகள் ஒண்ணும் இல்லாம யதார்த்தமா இருக்கும் கதைதான். ஒருவேளை இப்படி இருக்கறதாலேயே படம் ஓடலையோ?
இந்தப் பாடலைப் பாடியவர்கள்: ராஹுல் நம்பியார் & சாதனா சர்கம்
பாடல் "நாந்தானா இது நாந்தானா"

3. இந்தப் பாட்டு நம் யேசுதாஸ் பாடியது. பாடல் இடம் பெற்ற படம் செம்பருத்தி.
படம் வந்தே 36 வருசமாகுது. மனசை அப்படியே வருடிக்கொண்டுபோகும் இசை. இப்பாடலை எழுதியவர் வயலார்.
பாடல்:"சக்ரவர்த்தினி நினக்கு ஞான் என்ற சில்ப கோபுரம் துறந்நு"

இப்பாட்டின் வீடியோ வடிவம்

4. இது என்ன வகையைச் சேர்ந்த பாட்டுன்னு தெரியாமலேயே இதை எங்கியோ கேட்டு மனசைப் பறி கொடுத்தேன். சில வருடங்களுக்குப்பிறகு டெல்லி போனப்ப, அங்கே ஒரு ம்யூசிக் ஷாப்லே இந்தப் பாட்டை 'ஹம்' செஞ்சு காமிச்சுக் கேஸட்டை வாங்கிவந்தாச்சு. அதுக்கப்புறம் ஜக்ஜீத் சிங்கின் எத்தனையோ கஸல்களைக் கேட்டாலும், இந்தப் பாட்டு மனசுலே தங்குனதுமாதிரி வேற எதுவும் தங்கலை. அவருடைய ஒரே மகன் விபத்துலே இறந்துபோனதுக்குப் பிறகு, அவருடைய குரலில் அவ்வளவான குதூகலம் இல்லாமப்போச்சுன்னு கேள்விப்பட்டேன்.
பாடல்: "கல் செளதினிகி ராத் தி"

இப்பாட்டின் வீடியோ வடிவம்

இது அதே பாட்டுக்கு மக்கள்ஸ் யாரோ எடுத்த ஹோம்வீடியோ ஒரே சிரிப்புத்தான் அந்த தபேலா வாசிக்கிற பொடியன். fun. கேலி கலாட்டான்னு எடுத்துக்கலாம்:-))))
வீடியோ வடிவம்

5. இப்போதைக்குக் கடைசியா விரும்பிக்கேட்ட பாட்டு பஜன் வகையைச் சேர்ந்ததாவும் இருக்கலாம். கண்ணனைப் பார்க்க மனம் உருகிப்பாடும் பாட்டு.
எப்போ கேட்டாலும் கண்ணுலே நீர் கோத்துக்கும்.
பாடல் இடம்பெற்ற படம் நார்ஸி பகத்
ரொம்பப் பழைய படம்(நான் பார்க்கலை)51 வருசப் பழசு.
பாடுனவுங்க ஹேமந்த் குமார், மன்னாடே, சுதா
பாடல்: "தர்ஷன் தோ கனுஷ்யாம் நாத்......."
ரவியின் இசையில்

விரும்புன பாட்டை வச்சுக் கேக்குறவங்க வயசைக் கண்டுபிடிக்கலாமுன்னு யாராவது சொன்னா
நம்பாதீங்க:-))))
வாய்ப்பளித்ததற்கு நன்றி பிரபா

அனைவருக்கும் அன்பான உகாதிப் பண்டிகை
வாழ்த்து(க்)கள்.
என்றும் அன்புடன்,
துளசி கோபால்


Saturday, April 5, 2008

திரையுலகின் போராட்டம் குறித்து இராம நாராயணன் ஒலிப்பேட்டி


கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் தாக்குதல்களையும், திரையரங்கங்களை அடித்து நொருக்குவதையும் கண்டித்து தமிழ் திரைப்பட நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், தொழில்நுட்ப உதவியாளர் சங்கம் உட்பட்ட அமைப்புக்கள் இன்று நடத்திய உண்ணா நோன்பு குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக சற்று முன்னர் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு.இராம நாராயணன் அவர்களை சற்று முன்னர் குறுகிய நேரடிப்பேட்டி ஒன்று கண்டிருந்தேன். அதன் ஒலி வடிவம் இதோ:

Tuesday, April 1, 2008

நடிகர் ரகுவரன் நினைவாக....!

கடந்த மார்ச் 19 இல் நடிகர் ரகுவரன் அகால மரணமடைந்த நாளுக்கு அடுத்த நாள் சிங்கப்பூரில் இருந்து பஸ்ஸில் மலாக்கா நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன். எப்.எம் ரேடியா என் காதை நிறைத்துக்கொண்டிருந்தது. சிங்கப்பூர் எல்லை வரை சிங்கப்பூர் ஒலி 96.8 கேட்கும் போது இடையில் ரகுவரனுக்காய் ஒரு மனிதனின் கதை தொலைக்காட்சித் தொடரில் இருந்து "மங்கியதோர் நிலவினிலே" என்ற இனிமையான எஸ்.பி.பாலா பாடும் பாடலோடு அஞ்சலியைக் கொடுத்திருந்தது. மலேசியாவை அண்மித்த போது சிங்கப்பூர் ஒலி வானொலி இரைச்சலை அதிகப்படுத்த, மலேசிய எம்.எம் றேடியோவான ரி.எச்.ஆர் ராகாவைச் சுழட்டினேன். அதில் புன்னகைப் பூவே கீதா, ரகுவரனுக்காக ஒரு அஞ்சலிப்பாடலைப் போடக் கேட்டேன்.

மரணம் எல்லோர்க்கும் பொதுவானது தான், ஆனால் திரையில் தோன்றி மறையும் விம்பங்களாய் இருந்தாலும் எமது வாழ்வில் ஏதோ இணைந்துவிட்ட பிடிப்போடு தொடர்ந்தே நினைவில் இருத்தி வைத்திருக்கும் கலைஞர்கள் சொற்பமே. அந்த வகையில் ரகுவரனும் கூட இந்தப் பட்டியலில் வந்து விட்டார்.

ஏழாவது மனிதன் வந்தபோது எனக்கு அவ்வளவாக நடிப்பை ரசித்துப் பார்க்கும் வயதில்லை. ஆனால் சம்சாரம் அது மின்சாரம் திரையில் மூத்த பையனாகவும், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் புத்திபேதலித்த மனைவியைச் சமாளித்து அதே வேளை தொலைந்த குழந்தையை மீட்கும் பாத்திரத்திலும், மந்திரப்புன்னகையில் கொல்லப்பட்ட காதலியில் நினைவில் வாடும் வில்லனாகவும், கலியுகம் திரையில் அப்பாவி இளைஞனாகவும், மைக்கேல் ராஜில் பீடிக்கட்டு முரடனாகவும், குற்றவாளியில் இன்னொரு வகை நடிப்பிலும், பாட்ஷாவில் மார்க் ஆண்டனியாகவும், புரியாத புதிரில் சந்தேகக் கணவனாகவும், இப்படி நான் பார்த்த அந்தந்தக் காலகட்டத்துத் திரைப்படங்களில் ரகுவரனுக்கு மாற்றாக இன்னொரு நடிகரை நினைத்துப் பார்க்கமுடியவில்லை.

ஜீனியர் விகடன், குமுதம், நக்கீரன் என்று ரகுவரனின் மரணத்தின் பின் ஒவ்வொரு வார இதழ்களிலும் இந்தக் கலைஞனின் நிஜப்பரிமாணம் குறித்து சககலைஞர்கள் பேசும் போது வியப்பாக இருக்கின்றது. அத்தனை உலக ஞானமும் தெரிந்துகொண்டே, அடக்கமாக இயக்குனர் செதுக்கிய சிலையாகவே இது நாள் வரை இவர் இருந்திருக்கின்றார். ஒரு வாரப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்கள் இப்படி " ஹாலிவூட் தரத்தில் அடக்கமாக நடிக்கத் தெரிந்த நடிகர் ரகுவரன்" உண்மைதான், ஆனால் இவருக்கு இப்படியான கச்சிதமான பாத்திரத்தில் முறையான தீனியை முழு அளவில் எந்தப் படமுமே கொடுக்கவில்லை என்பது கசப்பான நிஜம்.

நண்பர் பாரதிய நவீன இளவரசன் தன் பதிவின் மூலம் , ரகுவரனுக்காக நினைவுப்பதிவைப் பாடலோடு இடக் கேட்டிருந்தார். காலம் கடந்து அவரின் கோரிக்கையோடு ரகுவரனுக்கு அஞ்சலியாக இப்பாடல் தொகுப்பு அரங்கேறுகின்றது.

"ஒரு ஓடை நதியாகிறது" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ராஜேஸ்வரி பாடும் தலையை குனியும் தாமரையே"

Get this widget | Track details | eSnips Social DNA


ஏழாவது மனிதன் திரைப்படத்திலிருந்து சில பாடல்கள்


YouTube இல் thecrowresurrect ஒளியேற்றிய காட்சித்துண்டங்கள்