Pages

Tuesday, August 27, 2024

வளையல்…வளையல்…இந்த வளையல் போடம்மணி ❤️




சில குரல்கள் அத்திப்பூ போல அப்படியொன்றாகத் தான் எஸ்.குழந்தைவேலுவின் குரலும் தமிழ்த் திரையிசையில் அமைந்தது. ஆனாலும் அமர்க்களமானதொரு பாடலில் அவர் குரல் காலத்துக்கும் நின்று நிலைத்திருக்கிறது.


“வந்தாளப்பா வந்தாளப்பா

 வந்து ஜென்னலில நின்னாளப்பா”


https://youtu.be/HuIsseB2Pvw?si=2aW0GAknvYaCUaWf


எல்லாரும் அந்தப் பக்கம் ஒதுங்க, நானோ அடிக்கடி கேட்டது என்னமோ

“வளையல் வளையல் இந்த

வளையல் போடம்மணி” 


https://youtu.be/r0nC0maXkFw?si=3q7RuRUWODYQ5aQS


காரணம், வந்தாளப்பா போல தேவா சில பல் கொடுத்திருக்கிறார். 

ஆனால் இந்த “வளையல்” பாட்டு அவரின் தனித்துவம் எனலாம்.


இந்தப் பாடலை நினைக்கும் போது எஸ்பிபி பாடும் பாங்கில் தான் நினைப்பூட்டும்.

புதுப் பாடகர்களை அரவணைத்துப் பாடுவதில் ஜானகி போலத் தான் சித்ராவும். இந்தப் பாடலை எவ்வளவு அழகாகக் கையாண்டிருப்பார்.


தேவா “தாமரை” படத்துக்காகக் கொடுத்த “எங்கே தேன் துளி” 


https://youtu.be/P2-3aPyU0S8?si=nxglEDcArJo8tJU9


பாடலையும் ஞாபகமூட்டும் ஆரம்பச் சந்தம்.


இயக்குநர் ஆர்.சுந்தரராஜனே அனைத்துப் பாடல்களையும் எழுதி வெளிவந்தது “சீதனம்”.

அவரது கொங்கு நாட்டு வார்த்தைப் பிரயோகமாக “அம்மணி” யைச் சேர்த்துக் கொடுத்த பாட்டு. அத்தோடு பல்லவியின் ஆரம்ப வரிகளை மிக அழகாகப் பொருத்தியிருப்பார்.


ஆர்.சுந்தரராஜனின் “காந்தி பொறந்த மண்” படத்தில் அவர் எழுதிய  இன்னொரு பாடலுக்குக் குரல் கொடுத்திருப்பார் குழந்தைவேலு.

“வளையல்” பாடலில் சித்ராவோடு ஜோடி கட்டியவர், “தலைவா” வில் எஸ்.ஜானகியோடு அணி சேர்ந்திருப்பார்.


“தலைவா நான் வரவா

  தனிமை என்னை அழைக்குது

  முதன்முறையா….


https://youtu.be/9wEy4EaBMyM?si=-AqPigH91EiyAHXk


இந்தப் பாடலில் இன்னமும் அவர் சிறப்பாகக் கொடுத்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றும். 


பாடகர் எஸ்.குழந்தைவேலுக்கு தேனிசைத் தென்றல் தேவா கொடுத்த இன்னொரு வாய்ப்பு “மண்ணைத் தொட்டு கும்பிடணும்” படத்துக்காக மின்மினியோடு

 “எனக்கின்று தீபாவளி”


https://youtu.be/e4pzVGDvN8Q?si=TN7_fJbRKDMppDdT


ஆக 1995 இல் முத்தான மூன்று வித்தியாசமான வாய்ப்பை இவருக்குக் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் தேவா.


“கன்னத்தில் குழி விழுந்த 

அப்பாவின் முகம் போக”

 நாயகன் பிரபுவின் முக லட்சணத்தை அச்சேற்றுவார் பாடலாசிரியர் சுந்தரராஜன்.


“காலையில் உதிக்கிற கதிரவன் நெருப்புல

பொறக்கணும் பொறக்கணும்

பொறந்ததும் சிரிக்கணும்”


காவல்துறை அதிகாரிக்குப் பிறக்கப் போகும் பிள்ளை எப்படியிருக்க வேண்டுமென்று தோழிமார் கூடிப் பாடமெடுக்கிறார்கள்.




ஒரு வித்தியாசமான மெல்லிசை வளைகாப்பு இந்த வளையல் வளையல் இந்த

வளையல் போடம்மணி.


ஆரிரோ ஆரிரோ 

பாடிடும் நாள் வரும்

அதுவரை பொறுத்துக்கோ

வளையலைப் போட்டுக்கோ


வளையல் வளையல் இந்த

வளையல் போடம்மணி ❤️


கானா பிரபா

Tuesday, August 13, 2024

எஸ்.வரலட்சுமி 💚🩵 நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட ❤️



என் சின்ன வயதில் வானொலியில்


 "இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூ தொட்டிலைக் கட்டிவைத்தேன்' 


https://youtu.be/f4XlCyyLnk8?si=9Z9PJ-IWDsGF01Yd


பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் அம்மாவே வந்து பாடுவது போல ஒரு பிரமையை உண்டாக்கியிருக்கும் எஸ்.வரலட்சுமியின் அந்தக் குரல். 


நீதிக்குத் தலைவணங்கு திரைப்படத்தில் ஆண் குரலில் ஜேசுதாஸ் பாடிய பாடலை விட என் மனதுக்கு நெருக்கமாக வந்து உட்கார்ந்து இன்று வரை இடம்பிடித்தது அந்தப் பாடல். இன்று வரை அந்தப் படத்தை நான் பார்க்காவிட்டாலும் கற்பனையில் இன்றும் என் அம்மாவே பாடுமாற்போல ஒரு தாய்மை உணர்வை அந்தப் பாடல் உண்டு பண்ணும். அந்தப் பாட்டுக்குச் சொந்தக்காரக் குயில் எஸ்.வரலட்சுமி.


கந்தன் கருணை, வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், , பூவா தலையா, குணா போன்ற படங்களில் எல்லாம் எஸ்.வரலட்சுமியின் நடிப்புக்குத் தனியிடம் உண்டு. இன்னொரு நடிகையை அந்தப் பாத்திரங்களிலும் பொருத்திப் பார்க்க முடியாத சிறப்பைக் குறித்த படங்களில் தந்திருப்பார் இவர்.


கந்தன் கருணை படத்தில் வரும் "வெள்ளிமலை மன்னவா" பாடலைப் பக்தி ரசம் கனியக் கொடுத்திருக்கும் அதே வரலட்சுமி பின்னாளில் "குணா" படத்தில் நடித்ததோடு "உன்னை நானறிவேன்" 


https://youtu.be/brk2NpX_aD8?si=TcqE06Q3W2STHPTl


என்ற வெறும் 36 செக்கன் மட்டுமே ஒலிக்கும் பாடலிலும் தன் தனித்துவக் குரலினிமையைக் காட்டிச் சென்றவர்.


ஒரு கல்விப் புலமை கொண்ட குடும்பப் பின்னணியில் சங்கீதம் எவ்வளவு முக்கியம் பெறுகிறது என்பதை 

கவரிமான் திரைப்படத்தில் வரும் பாரதியார் பாடலான "சொல்ல வல்லாயோ கிளியே" வழியாகச் சொல்லி இருப்பார்.


https://youtu.be/f47LWDPNqGo?si=AIfsQlbTamahqvSY


கந்தன் கருணை திரைப்படத்தில் வரும் "வெள்ளிமலை மன்னவா"


https://youtu.be/c5fgAvPaqKU?si=zQRHSQIxz4rTIvZd


ராஜராஜ சோழன் படத்தில்

“ஏடு தந்தானடி தில்லையிலே”


https://youtu.be/iRkQgqqw2Cw?si=Ixpb4sA6jCTv9B7o


பாடக ஜோடியே படத்திலும் தோன்றி நடிப்பது அபூர்வம்

அப்படி ஒன்று தான் T.R.மகாலிங்கம், S.வரலட்சுமி ஜோடியாகப் பாடி, நடித்த

“ஓ ஜகமதில் இன்பம்” மோகன சுந்தரம்

படத்துக்காக


https://youtu.be/LP017ZFciDs?si=cNa22tQwP8bFOzka


1938-ம் ஆண்டு முன்னோடி இயக்குநர் கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "சேவாசதனம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எஸ். வரலட்சுமி.


சக்கரவர்த்தி திருமகள், வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், கந்தன் கருணை, நீதிக்குத் தலைவணங்கு, பூவா தலையா, குணா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தவர் எஸ் வரலட்சுமி.


திருடாதே, கந்தன் கருணை, சினிமா பைத்தியம் உள்ளிட்ட ஏராளமான படங்களின் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனின் மனைவி வரலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.


கலைமாமணி, கலைவித்தகர், கண்ணதாசன் விருது, உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசிப், பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்ற தகவலை அப்போது அவரின் மறைவின் போது தட்ஸ் தமிழ் தளம் பகிர்ந்திருந்தது.


ஒரு பக்கம் வீரபாண்டிய கட்டப்பொம்மன், இன்னொரு பக்கம் கண்ணதாசனின் சிவகங்கைச் சீமை என்று இரு பெரும் படைப்புகள்.

இந்த இரண்டிலும் தன் முத்திரை கொடுத்திருப்பார் இப்படி


சிங்காரக் கண்ணே உன் தேனூறும்

சொல்லாலே தீராத துன்பங்கள்

தீர்ப்பாயடி


https://youtu.be/4zSFKpIQHjk?si=yqWqkcFDb0z-Icvt


இன்னொரு புறம்


“தென்றல் வந்து வீசாதோ

 தென்பாங்கு பாடாதோ

 செல்வ மகன் கண்களிலே

 நின்று விளையாடாதோ

 சிந்து கவி பாடாதோ”


https://youtu.be/JRusmxAhnJk?si=H259HBP8wLLYEM_y


உன்னை, நான் அறிவேன்!

என்னையன்றி யாரறிவா?


தாலாட்டுக் குரல்

எஸ்.வரலட்சுமியின் 

பிறந்த நாள் இன்றாகும்.


கானா பிரபா

13.08.2024

Sunday, August 11, 2024

வா மன்னவா ❤️❤️❤️

ஒரு பாடலுக்குள் இன்னொரு பாடலைப் பதிவாக்குவது, அதைக் காட்சிப்படுத்துவது எப்படியென்ற அழகியலைப் பார்க்க மிகவும் பிடிக்கும்.

"அவளுக்கென்ன அழகிய முகம்" காலம் தொட்டு இசைஞானியின் "பூந்தென்றல் காற்றே வா" பாடலில் இருந்து நீண்டு செல்லும் பட்டியலில் ரஹ்மானுக்கானதாக நான் கொண்டாடுவது இந்தப் பாடலை.

ரஹ்மான் இசையில் இம்மாதிரிப் பாடல் பதிவு, நடன ஒத்திகை என்று இரண்டு பாடல்கள் ஐஸ்வர்யா ராய் இற்கு அமைந்து விட்டன. 

ஒன்று, "கண்டு கண்டேன் கண்டு கொண்டேன்" படத்தில் அமைந்த

"எங்கே எனது கவிதை".

இன்னொன்று " வா மன்னவா வா மன்னவா". அதுவும் இந்தப் பாட்டு, பாடல் ஒத்திகை, நடன ஒத்திகை, அரங்கியல் என்று ஒரு முழுப் பயணமாகக் கண்ணுக்குள் விருந்து படைக்கும்.

பாடல் காட்சியில் பிலிம்பேர் விருது நிகழ்விலும் ஆடிப் பாடுவது போல வரும். பின்னாளில் தொடர்ச்சியாகப் பல விருது விழாக்களில் இந்தப் பாடலை ஆடிப் பாடியது கனவு நிஜமானதன் வரலாறு.

"உன்னைத்தான் உயிரும் தேடுது குக்கூ குக்குக்கூ"

அந்தப் பிஞ்சுக்குரல் பேபி தீபிகா.

"கையளவு மனசு" தொலைக்காட்சித் தொடரில் பாடி நடித்த பிரபலக் குழந்தை. "கோகுலத்துக் கண்ணா கண்ணா" தேவா தொட்டு, இசைஞானி இளையராஜா ஈறாகப் பாடியவர் இங்கே ரஹ்மானின் பாடலுக்கு மிக அழகாகப் பயன்படுத்தப்பட்டிருப்பார்.

தீபிகாவின் தாய் பின்னணிப் பாடகி கீதா இளையராஜாவிடம் பாடல்கள் பாடியிருப்பவர். தீபிகாவின் மாமா பிரபல வயலின் வித்துவான் எம்பார் கண்ணன். தீபிகாவின் குரலை ஹிந்தியில் பாடிய மழலை ஆதித்யா நாராயண் வேறு யாருமல்ல, உதித் நாராயண் இன் மகன் தான்.

எப்படி ரஹ்மானின் "ரங்கீலா" ஹிந்தி ரசிகர்களுக்கு அதுவரை இருந்த மாமூல் இசையைக்கு மாற்று மருந்தாகப் பெரு வெற்றி கொடுத்ததோ அது போலவே சுபாஷ் கை இன் "தால்" படம் ஹிந்தியில் ஆகப் பெரிய மியூசிக்கல் ஹிட். அந்தக் காலத்தில் ரஹ்மானின் பஞ்சாதன் ஒலிப்பதிவுக் கூடத்தின் வெளியே சோபாவில் நள்ளிரவில் தூங்கி வழிந்து ரஹ்மான் இசைக்காகத் தவம் கிடந்த இயக்குநர் கூட்டத்தில் அவரும் ஒருவர். 

ரஹ்மானின் பெரும்பலமே அவரின் பாடல்களைக் காட்சி விருந்து படைக்கக் கூடிய கதைக்களங்களும், இயக்குநர்களும் கிட்டியது தான்.  ஆனால் அது மட்டுமே அவரின் சாதனைக்குப் பலமாக இருந்து விடவில்லை.

உதாரணத்துக்கு 

உன்னைத்தான் உயிரும் தேடுது குக்குக் கூ குக்குக் கூ"

என்று வரும் போது அந்தக் குயிலோசையை அப்படியே

"குக்கூஊஊஊஊ" என்று நாகரிக ஓசை நயமாக்கி விடுவார் 

இசைப்புயல்.

அந்த இடத்தை அப்படியே ஒற்றி எடுத்து

அனில் கபூர் "குக்கூஊஊஊ" என்று ஒலிவாங்கியில் கொடுக்க,

ஒலிக்கட்டுப்பாட்டு இயக்கம் மேலெழும்ப,

வயலின் கூட்டத்தை நோக்கி கேமரா போய், அப்படியே

 நடன ஒத்திகைக்குள் இட்டு விடும். இதுதான் காட்சியும் இசையும் போட்டி போடும் இடம்.

ஹிந்தியில் ஆஷா போஸ்லே என்ற இசை ராட்சசி பாடியதைக் கேட்டு விட்டு தமிழில் சுஜாதா பாடுவதைக் கேட்டால் எந்த உறுத்தலும் தெரியாமல் கொண்டாடத் தோன்றும்.

அதுபோல் ஆனந்த் பக்க்ஷியின் மூல வரிகள் ஹிந்திக்கான இசைக்குப் பொருந்தியதை ஒரு மொழி மாற்று இயக்கத்தில் வைரமுத்து அழகாகக் கையாண்டிருப்பார். 

தால் படத்தில் ஐஸ்வர்யா ராய், அனில் கபூர், ஐஸ்வர்யா ராயின் தந்தை என்று அற்புதமான பாத்திரத் தேர்வு இருந்தாலும் 

ஒரு அனுதாபத்துக்குரிய காதலனாக மிக அற்புதமாக நடித்திருப்பார் அக்‌ஷய் கண்ணா.

இங்கே ரஹ்மானின் தனித்துவத்தை மெச்ச ஒரு துளி என் மனம் கவர்ந்த நடிகன் அக்‌ஷய் ஐப் பயன்படுத்தியதை வைத்துக் காட்ட வேண்டும்.

ஏழைக்காதலியின் வாழ்வியல் ஒரு பாடலில் மாறுகிறது. அது பிரமாண்டமாக உருவெடுக்கிறது.  அப்படியானால் அவளை நேசித்தவன் பாடு என்னவாயிற்று?

அதற்கான கேள்வியை இந்தத் துள்ளிசையின் இடையில்

போட்டு விடுவார், ஐஸ்வர்யா ராய் உயரே போய்க் கொண்டிருக்கிறார்.

காட்சி இன்னொரு தளத்துக்குக் கொண்டு போய் வயலினோடு, பியானோ இசையாக உருமாறி மெல்லிசை கொள்ளும் இப்படி 

"காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா".

வயலின் மீட்டிக் கொண்டே அந்தக் காதலன் உருக்கம், 

மீண்டும் துள்ளிசைக்குப் பாய்வார்.

அவன் வட்ட வட்ட நிலவையும் வரைவான்

அதன் மறுபக்கம் என்ன உண்டு தெளிவான்

வண்ண மலர்களின் வலிகளும் தெரிவான்

சில பறவைகள் மொழிகளும் புரிவான்

ஆனால் பேதை உள்ளம் புரியல அவனா மேதை ?

துள்ளிசை இன்னும் வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும்.

பாடலைக் கேட்கும் போதே இருட்டில் ஒளிரும் வெள்ளொளிகள் போலக் கண்கள் பளிச்சிடும் நமக்கு.

https://www.youtube.com/watch?v=3myie6iW95c

Thursday, August 8, 2024

காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம் ❤️

தேடினேன் ஓ என் ஜீவனே

தென்றலிலே மிதந்தது வரும் 

தேன் மலரே…..

தென்றலிலே மிதப்பது போலத் தான் இந்தப் பாட்டு.

பிறப்பால் இரண்டு மதம் ஆனால் கொண்ட காதலால் ஒன்று பட்ட இதயம் கூடும் போது அந்தப் பாட்டுப் பொதுத் தன்மையில் பிறக்கிறது.

கேட்கும் போதெல்லாம். ஒரு கிராமத்துக் காதலன், அவன் நிறமோ வெயிலில் உருக்கிய கருப்பு இவனுக்கோர் காதலி அவன் நேரெதிர் மாநிறம், பட்டணத்துப் பவிசை அவள் குரலே காட்டிக் கொடுத்து விடும். இப்படியானதொரு ஜோடியைக் கற்பனை செய்து இந்தப் பாடலை ரசிப்பேன்.

ராஜாவில் குரலிலும், ஜென்ஸியின் குழைவிலும் அவ்வளவு அந்நியோன்யம் இருக்கும். 

அதுவும் “காதல் ஓவியம்” என்று காதலி தொடங்க 

ஓஹோஹோ காதல் ஓவியம் பாடும் காவியம்

என்று காதலன் குரலாக ராஜா இணைய, 

ஓஓஓ என்று காதலியாக ஜென்ஸி தானும் கூட்டுச் சேரும் இடமிருக்கிறதே ஆகா

இதை விட காதல் வழி பிறக்கும் ஆழமான நேசிப்பை எப்படிக் காட்ட முடியும்? 

பாட்டு முடிவுறும் இடத்தில் இரு குரலும் சங்கமமாகி ஆலாபனை தரும் போது ஒரு முழுமையைக் காட்டி நிற்கின்றது.

ராஜாவின் பாடல்களில் மேடைப் பாடலாக எடுத்துக் கையாளக் கூடிய செளகரியத்தை இந்தப் பாடலின் மெட்டையும், எளிமையான வரிகளையும் கொடுத்து விடுவது சிறப்பு. 

சொற் கட்டில் எவ்வளவு சிக்கனம்.

மெல்லிசைப் பாடகராக வரித்துக் கொண்ட எழுபதுகள், எண்பதுகளில் பிறந்தவர்கள் இந்தப் பாடலைக் கடக்காமல் விடுவதில்லை என்று நினைக்கிறேன். 

ஆனால் இந்தப் பாடலில் வாத்திய அணி வகுப்பு, இரண்டு சரணங்களுக்கும் முந்திய கோரஸ் கூட்டின் பரிமாணம் இதையெல்லாம் பார்த்தால் ஒரு இசை மேதையின் முத்திரை இருக்கும்.

கைப் பிடித்துக் கொண்டே கடற்கரையின் கருங்கல் பாறைகளைக் கடக்கும் காதலர்களின் துள்ளலுக்கு இசைவாக அந்த முதல் சந்ததின் கோரஸ். இரண்டாவது சரணத்தில் மிதக்கும் கோரஸில் சிம்பொனியின் ஒத்திகை. ‪ஒவ்வொரு வாத்தியத்தையும் ஆகாயத்தில் மிதக்க வைத்து வாசித்தது போலவொரு உணர்வு.‬

இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு ராகத்தில் அமைந்திருக்கிறது என்று ராஜா இங்கே 

https://youtu.be/sbe_FdInHLM 

சொல்லியிருக்கிறார். கேட்டுப் பாருங்கள். ஒரு சாதாரணமான கதைக் களத்திலும் இம்மாதிரி அசாதாரணமாகச் சிந்தித்துப் புதுமை படைக்கும் ராஜாவின் ஒவ்வொரு பாடல்களுக்குப் பின்னால் கொட்டியிருக்கும் அபூர்வத்தை ஆராய்ந்தாலேயே எத்தனையோ ஆராய்ச்சிக் கட்டுரைகள் பிறக்கும்.

ஜென்ஸியின் குரல் பலருக்கு 86, 96 என்று தத்தமது காதலிகளின் குரலை ஞாபகப்படுத்தி விடும். இந்த ஜென்ஸியின் குரல் நித்தியமானது.

அப்படியே தெலுங்குப் பக்கம் போனால் இது எங்களுக்கே எங்களுக்கானது என்று கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா கூட்டில் மலரும் அந்தப் பாடலின் ஆரம்ப வீணை இசைத் துளியில் சிறு விள்ளலை மட்டும் கொடுத்து நிதானமாகப் பயணிக்கும்.

Maate Mantramu ❤️

https://youtu.be/vmG_2fhXi0o?si=3_9HiHnhn-OZbeyS

அங்கும் மந்திரப் பிரயோகமாக மயக்கித் தள்ளி விடும்.

ஈராயிரக் குழவிகள் கூட இந்தப் பாடலை இப்போது வைப் செய்து தம் முற்பிறப்பைக் கொண்டாடுகிறார்கள் போல 😇 😍

https://youtu.be/2LYhT21EqKw?si=inb5e7dR1GpYnJLS

எல்லா வேலைகளையும் போட்டது போட்டபடி விட்டு விட்டு நேற்று சுமார் 2 மணி நேரம் இந்தப் பாடலிலேயே கட்டுண்டு கிடந்தேன். இப்படியென்றால் மீதியிருக்கும் ஆயிரங்கள் ஒவ்வொன்றையும் அனுபவிக்க எத்தனை கோடி யுகம் வேண்டும்?

நூறு ஆண்டுகள் நோய் நொடியின்றி வாழும் சிறப்பைக் காட்டும் 

“சதமானம் பவதி சதாயு புருஷ”

என்ற வேத மந்திர அடிகளை அப்படியே கிறீஸ்தவத் தேவாலயத்தின் கூட்டுப் பிரார்த்தனையோடு கலக்க விட்டு  படைப்பின் அடி நாதமான பாடலாக்கி விடுகிறார்.

பஞ்சு அருணாசலம் அவர்கள் நோகாமல் இழைத்துக் கொடுத்த பாடல் வரிகளை முணுமுணுக்கும் போதே நெஞ்சம் இசை மீட்டும்.

இந்த இடத்தில் அந்தக் கடைசிச் சரணத்துக்கு முன்பு வரும் வயலின் ஆவர்த்தனத்தை ஒருமுறை கேட்டு விட்டு வாருங்கள். 

பூவை முத்தமிட்டு அழகு பார்க்கும் தேனீக்களின் ரீங்காரம் அல்லவா?

நீ என் நாயகன் 

காதல் பாடகன்

அன்பில் ஓடி இன்பம் கோடி 

என்றும் காணலாம் ❤️❤️❤️

https://youtu.be/s_4HQnCki4o?si=m9zXon5jWwLAY17R

கானா பிரபா


Monday, August 5, 2024

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் ❤️❤️❤️ தோழிமார் கதை 🧟‍♀️🧟‍♀️

ஓடமும் நீரின்றி ஓடாதம்மா

நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா

தோழமை உறவுக்கு ஈடேதம்மா

நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா…..

அந்த நண்பிகள் தப்பி ஓடி நகரத்துக்கு வந்ததின் பின்னால் இருவருக்கும் தனித்தனி நியாயம் உண்டு. 

ஆனால் நட்பு என்ற இலக்கணம் வழி, அவர்கள் இந்த உலகமே அவர்களைப் பிரிக்க நினைத்தாலும் ஒன்றுபட்ட நியாயத்தோடு  வாழத் தலைப்படுபவர்கள்.

படிக்காத தோழி அனு (லதா), தன் தோழி மாலதி (சுமித்ரா) படித்து ஆளாக வேண்டும் என்ற ஒரே கொள்கைக்காக, 

எந்த உலகம் அவள் கொள்ளாத செயலுக்காகப் பழித்ததோ அதன் வழி 

வாழ்வைச் சுமக்கிறாள்.


“என் மனசில் 

கோயில் கட்ட இருந்தேன்

ஆனா ஹோட்டல் கட்டி இருக்கேன்”

என்ற அனுவின் வாக்குமூலம் 

வாழ்வை முடிக்கும் வரை தன் தோழிக்காகவே அர்ப்பணிக்கிறாள்.

பஞ்சு அருணாசலம் அவர்களின் திரைக்கதை, வசனம், பாடல்களோடு 

எழுத்தாளர் மகரிஷியின் மூலக் கதையோடு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் இந்தப் படம் அமைகின்றது.

எழுத்தாளர் மகரிஷியின் நாவல் “பத்ரகாளி” என்று A.C.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்து பெரு வெற்றி பெறுகிறது.

தொடர்ந்து  “புவனா   ஒரு கேள்விக்குறி” வெற்றிப் படத்தை மகரிஷி கதை கொண்டு பஞ்சு அருணாசலமும், எஸ்.பி.முத்துராமனும் கொடுத்த கையோடு அவர்கள் அடுத்து எடுத்தது தான் “வட்டத்துக்குள் சதுரம்”.

இந்தப் படமும், தொடர்ந்து தேவராஜ் - மோகன் இரட்டையர்கள் எடுத்த “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” கதையும் மகரிஷி தான். ஆனால் இவ்விரண்டும் எதிர்பார்த்த வெற்றி கொள்ளவில்லை.

“வட்டத்துக்குள் சதுரம்” படத்தைத் திரையிட முன்னர் எம்.ஜி.ஆர் சில திருத்தங்களைச் சொன்ன போது, அடுத்து “ப்ரியா” படப்பிடிப்புக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தத்தால் அதைத் தவிர்த்ததாகவும் ஒருவேளை அதைக் கேட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்குமோ என்று SPM ஐயம் எழுப்பியிருந்தார் தன் தொடரில்.

ஆனால் தன்னுடைய கதைகளிலேயே மிகவும் உயிரோட்டமாக எடுக்கப்பட்டது “வட்டத்துக்குள் சதுரம்” என்றார் எழுத்தாளர் மகரிஷி.

“இதோ இதோ என் நெஞ்சிலே” இசையோட்டத்தைக் கதைப் போக்கோடு கொடுத்திருப்பார் ராஜா.

தோழிகளின் கதை என்பதால் ஜிக்கி, எஸ்.ஜானகி, B.S.சசிரேகா மற்றும் ஜென்ஸி , உமாதேவி என்று பாடகிகள் அணி செய்த பாடல்கள்.

நடிகை சாவித்திரியின் அந்திம காலத்துப் படங்களில் ஒன்று. இரண்டு காட்சிகளில் துணை நடிகை போன்று வருவது கூட ஒரு துன்பியல் தான்.

பேபி இந்திரா, பேபி சுமதி என்று இளவயது சுமித்ரா, லதா.

அடுத்த ஆண்டே (1979) சுமதி நாயகியாக “சுவர் இல்லாத சித்திரங்கள்” இல் வந்து விட்டார்.

நடிகை லதாவின் வாழ்க்கையில் இது போல் ஒரு பாத்திரப்படைப்பு கிட்டியிருக்காது. மொத்தப் படைப்பையும் அவரே சுமக்கிறார்.

எழுபதுகளில் காய்ச்சி எடுக்கும் வரட்டு நகைசுவை இல்லாத முழு நீளக் கதைச் சித்திரம் “வட்டத்துக்குள் சதுரம்”

காற்றினில் ஒலியாக வருவேனடி

கனவுக்குள் நினைவாக வருவாயடி

நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்

கொடிக்கொரு கிளைபோல் 

துணை நீயம்மா

இனி வாழ்வில் நீதான் 

என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே 

ஒரே பாடல்

அதோ அதோ என் பாட்டிலே 

ஓரே ராகம்

https://www.youtube.com/watch?v=RRbKqfVqtec

கானா பிரபா

04.08.2024