தேடினேன் ஓ என் ஜீவனே
தென்றலிலே மிதந்தது வரும்
தேன் மலரே…..
தென்றலிலே மிதப்பது போலத் தான் இந்தப் பாட்டு.
பிறப்பால் இரண்டு மதம் ஆனால் கொண்ட காதலால் ஒன்று பட்ட இதயம் கூடும் போது அந்தப் பாட்டுப் பொதுத் தன்மையில் பிறக்கிறது.
கேட்கும் போதெல்லாம். ஒரு கிராமத்துக் காதலன், அவன் நிறமோ வெயிலில் உருக்கிய கருப்பு இவனுக்கோர் காதலி அவன் நேரெதிர் மாநிறம், பட்டணத்துப் பவிசை அவள் குரலே காட்டிக் கொடுத்து விடும். இப்படியானதொரு ஜோடியைக் கற்பனை செய்து இந்தப் பாடலை ரசிப்பேன்.
ராஜாவில் குரலிலும், ஜென்ஸியின் குழைவிலும் அவ்வளவு அந்நியோன்யம் இருக்கும்.
அதுவும் “காதல் ஓவியம்” என்று காதலி தொடங்க
ஓஹோஹோ காதல் ஓவியம் பாடும் காவியம்
என்று காதலன் குரலாக ராஜா இணைய,
ஓஓஓ என்று காதலியாக ஜென்ஸி தானும் கூட்டுச் சேரும் இடமிருக்கிறதே ஆகா
இதை விட காதல் வழி பிறக்கும் ஆழமான நேசிப்பை எப்படிக் காட்ட முடியும்?
பாட்டு முடிவுறும் இடத்தில் இரு குரலும் சங்கமமாகி ஆலாபனை தரும் போது ஒரு முழுமையைக் காட்டி நிற்கின்றது.
ராஜாவின் பாடல்களில் மேடைப் பாடலாக எடுத்துக் கையாளக் கூடிய செளகரியத்தை இந்தப் பாடலின் மெட்டையும், எளிமையான வரிகளையும் கொடுத்து விடுவது சிறப்பு.
சொற் கட்டில் எவ்வளவு சிக்கனம்.
மெல்லிசைப் பாடகராக வரித்துக் கொண்ட எழுபதுகள், எண்பதுகளில் பிறந்தவர்கள் இந்தப் பாடலைக் கடக்காமல் விடுவதில்லை என்று நினைக்கிறேன்.
ஆனால் இந்தப் பாடலில் வாத்திய அணி வகுப்பு, இரண்டு சரணங்களுக்கும் முந்திய கோரஸ் கூட்டின் பரிமாணம் இதையெல்லாம் பார்த்தால் ஒரு இசை மேதையின் முத்திரை இருக்கும்.
கைப் பிடித்துக் கொண்டே கடற்கரையின் கருங்கல் பாறைகளைக் கடக்கும் காதலர்களின் துள்ளலுக்கு இசைவாக அந்த முதல் சந்ததின் கோரஸ். இரண்டாவது சரணத்தில் மிதக்கும் கோரஸில் சிம்பொனியின் ஒத்திகை. ஒவ்வொரு வாத்தியத்தையும் ஆகாயத்தில் மிதக்க வைத்து வாசித்தது போலவொரு உணர்வு.
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு ராகத்தில் அமைந்திருக்கிறது என்று ராஜா இங்கே
https://youtu.be/sbe_FdInHLM
சொல்லியிருக்கிறார். கேட்டுப் பாருங்கள். ஒரு சாதாரணமான கதைக் களத்திலும் இம்மாதிரி அசாதாரணமாகச் சிந்தித்துப் புதுமை படைக்கும் ராஜாவின் ஒவ்வொரு பாடல்களுக்குப் பின்னால் கொட்டியிருக்கும் அபூர்வத்தை ஆராய்ந்தாலேயே எத்தனையோ ஆராய்ச்சிக் கட்டுரைகள் பிறக்கும்.
ஜென்ஸியின் குரல் பலருக்கு 86, 96 என்று தத்தமது காதலிகளின் குரலை ஞாபகப்படுத்தி விடும். இந்த ஜென்ஸியின் குரல் நித்தியமானது.
அப்படியே தெலுங்குப் பக்கம் போனால் இது எங்களுக்கே எங்களுக்கானது என்று கொண்டாடித் தீர்க்கிறார்கள்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா கூட்டில் மலரும் அந்தப் பாடலின் ஆரம்ப வீணை இசைத் துளியில் சிறு விள்ளலை மட்டும் கொடுத்து நிதானமாகப் பயணிக்கும்.
Maate Mantramu ❤️
https://youtu.be/vmG_2fhXi0o?si=3_9HiHnhn-OZbeyS
அங்கும் மந்திரப் பிரயோகமாக மயக்கித் தள்ளி விடும்.
ஈராயிரக் குழவிகள் கூட இந்தப் பாடலை இப்போது வைப் செய்து தம் முற்பிறப்பைக் கொண்டாடுகிறார்கள் போல 😇 😍
https://youtu.be/2LYhT21EqKw?si=inb5e7dR1GpYnJLS
எல்லா வேலைகளையும் போட்டது போட்டபடி விட்டு விட்டு நேற்று சுமார் 2 மணி நேரம் இந்தப் பாடலிலேயே கட்டுண்டு கிடந்தேன். இப்படியென்றால் மீதியிருக்கும் ஆயிரங்கள் ஒவ்வொன்றையும் அனுபவிக்க எத்தனை கோடி யுகம் வேண்டும்?
நூறு ஆண்டுகள் நோய் நொடியின்றி வாழும் சிறப்பைக் காட்டும்
“சதமானம் பவதி சதாயு புருஷ”
என்ற வேத மந்திர அடிகளை அப்படியே கிறீஸ்தவத் தேவாலயத்தின் கூட்டுப் பிரார்த்தனையோடு கலக்க விட்டு படைப்பின் அடி நாதமான பாடலாக்கி விடுகிறார்.
பஞ்சு அருணாசலம் அவர்கள் நோகாமல் இழைத்துக் கொடுத்த பாடல் வரிகளை முணுமுணுக்கும் போதே நெஞ்சம் இசை மீட்டும்.
இந்த இடத்தில் அந்தக் கடைசிச் சரணத்துக்கு முன்பு வரும் வயலின் ஆவர்த்தனத்தை ஒருமுறை கேட்டு விட்டு வாருங்கள்.
பூவை முத்தமிட்டு அழகு பார்க்கும் தேனீக்களின் ரீங்காரம் அல்லவா?
நீ என் நாயகன்
காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி
என்றும் காணலாம் ❤️❤️❤️
https://youtu.be/s_4HQnCki4o?si=m9zXon5jWwLAY17R
கானா பிரபா
0 comments:
Post a Comment