ஒரு பாடலுக்குள் இன்னொரு பாடலைப் பதிவாக்குவது, அதைக் காட்சிப்படுத்துவது எப்படியென்ற அழகியலைப் பார்க்க மிகவும் பிடிக்கும்.
"அவளுக்கென்ன அழகிய முகம்" காலம் தொட்டு இசைஞானியின் "பூந்தென்றல் காற்றே வா" பாடலில் இருந்து நீண்டு செல்லும் பட்டியலில் ரஹ்மானுக்கானதாக நான் கொண்டாடுவது இந்தப் பாடலை.
ரஹ்மான் இசையில் இம்மாதிரிப் பாடல் பதிவு, நடன ஒத்திகை என்று இரண்டு பாடல்கள் ஐஸ்வர்யா ராய் இற்கு அமைந்து விட்டன.
ஒன்று, "கண்டு கண்டேன் கண்டு கொண்டேன்" படத்தில் அமைந்த
"எங்கே எனது கவிதை".
இன்னொன்று " வா மன்னவா வா மன்னவா". அதுவும் இந்தப் பாட்டு, பாடல் ஒத்திகை, நடன ஒத்திகை, அரங்கியல் என்று ஒரு முழுப் பயணமாகக் கண்ணுக்குள் விருந்து படைக்கும்.
பாடல் காட்சியில் பிலிம்பேர் விருது நிகழ்விலும் ஆடிப் பாடுவது போல வரும். பின்னாளில் தொடர்ச்சியாகப் பல விருது விழாக்களில் இந்தப் பாடலை ஆடிப் பாடியது கனவு நிஜமானதன் வரலாறு.
"உன்னைத்தான் உயிரும் தேடுது குக்கூ குக்குக்கூ"
அந்தப் பிஞ்சுக்குரல் பேபி தீபிகா.
"கையளவு மனசு" தொலைக்காட்சித் தொடரில் பாடி நடித்த பிரபலக் குழந்தை. "கோகுலத்துக் கண்ணா கண்ணா" தேவா தொட்டு, இசைஞானி இளையராஜா ஈறாகப் பாடியவர் இங்கே ரஹ்மானின் பாடலுக்கு மிக அழகாகப் பயன்படுத்தப்பட்டிருப்பார்.
தீபிகாவின் தாய் பின்னணிப் பாடகி கீதா இளையராஜாவிடம் பாடல்கள் பாடியிருப்பவர். தீபிகாவின் மாமா பிரபல வயலின் வித்துவான் எம்பார் கண்ணன். தீபிகாவின் குரலை ஹிந்தியில் பாடிய மழலை ஆதித்யா நாராயண் வேறு யாருமல்ல, உதித் நாராயண் இன் மகன் தான்.
எப்படி ரஹ்மானின் "ரங்கீலா" ஹிந்தி ரசிகர்களுக்கு அதுவரை இருந்த மாமூல் இசையைக்கு மாற்று மருந்தாகப் பெரு வெற்றி கொடுத்ததோ அது போலவே சுபாஷ் கை இன் "தால்" படம் ஹிந்தியில் ஆகப் பெரிய மியூசிக்கல் ஹிட். அந்தக் காலத்தில் ரஹ்மானின் பஞ்சாதன் ஒலிப்பதிவுக் கூடத்தின் வெளியே சோபாவில் நள்ளிரவில் தூங்கி வழிந்து ரஹ்மான் இசைக்காகத் தவம் கிடந்த இயக்குநர் கூட்டத்தில் அவரும் ஒருவர்.
ரஹ்மானின் பெரும்பலமே அவரின் பாடல்களைக் காட்சி விருந்து படைக்கக் கூடிய கதைக்களங்களும், இயக்குநர்களும் கிட்டியது தான். ஆனால் அது மட்டுமே அவரின் சாதனைக்குப் பலமாக இருந்து விடவில்லை.
உதாரணத்துக்கு
உன்னைத்தான் உயிரும் தேடுது குக்குக் கூ குக்குக் கூ"
என்று வரும் போது அந்தக் குயிலோசையை அப்படியே
"குக்கூஊஊஊஊ" என்று நாகரிக ஓசை நயமாக்கி விடுவார்
இசைப்புயல்.
அந்த இடத்தை அப்படியே ஒற்றி எடுத்து
அனில் கபூர் "குக்கூஊஊஊ" என்று ஒலிவாங்கியில் கொடுக்க,
ஒலிக்கட்டுப்பாட்டு இயக்கம் மேலெழும்ப,
வயலின் கூட்டத்தை நோக்கி கேமரா போய், அப்படியே
நடன ஒத்திகைக்குள் இட்டு விடும். இதுதான் காட்சியும் இசையும் போட்டி போடும் இடம்.
ஹிந்தியில் ஆஷா போஸ்லே என்ற இசை ராட்சசி பாடியதைக் கேட்டு விட்டு தமிழில் சுஜாதா பாடுவதைக் கேட்டால் எந்த உறுத்தலும் தெரியாமல் கொண்டாடத் தோன்றும்.
அதுபோல் ஆனந்த் பக்க்ஷியின் மூல வரிகள் ஹிந்திக்கான இசைக்குப் பொருந்தியதை ஒரு மொழி மாற்று இயக்கத்தில் வைரமுத்து அழகாகக் கையாண்டிருப்பார்.
தால் படத்தில் ஐஸ்வர்யா ராய், அனில் கபூர், ஐஸ்வர்யா ராயின் தந்தை என்று அற்புதமான பாத்திரத் தேர்வு இருந்தாலும்
ஒரு அனுதாபத்துக்குரிய காதலனாக மிக அற்புதமாக நடித்திருப்பார் அக்ஷய் கண்ணா.
இங்கே ரஹ்மானின் தனித்துவத்தை மெச்ச ஒரு துளி என் மனம் கவர்ந்த நடிகன் அக்ஷய் ஐப் பயன்படுத்தியதை வைத்துக் காட்ட வேண்டும்.
ஏழைக்காதலியின் வாழ்வியல் ஒரு பாடலில் மாறுகிறது. அது பிரமாண்டமாக உருவெடுக்கிறது. அப்படியானால் அவளை நேசித்தவன் பாடு என்னவாயிற்று?
அதற்கான கேள்வியை இந்தத் துள்ளிசையின் இடையில்
போட்டு விடுவார், ஐஸ்வர்யா ராய் உயரே போய்க் கொண்டிருக்கிறார்.
காட்சி இன்னொரு தளத்துக்குக் கொண்டு போய் வயலினோடு, பியானோ இசையாக உருமாறி மெல்லிசை கொள்ளும் இப்படி
"காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா".
வயலின் மீட்டிக் கொண்டே அந்தக் காதலன் உருக்கம்,
மீண்டும் துள்ளிசைக்குப் பாய்வார்.
அவன் வட்ட வட்ட நிலவையும் வரைவான்
அதன் மறுபக்கம் என்ன உண்டு தெளிவான்
வண்ண மலர்களின் வலிகளும் தெரிவான்
சில பறவைகள் மொழிகளும் புரிவான்
ஆனால் பேதை உள்ளம் புரியல அவனா மேதை ?
துள்ளிசை இன்னும் வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும்.
பாடலைக் கேட்கும் போதே இருட்டில் ஒளிரும் வெள்ளொளிகள் போலக் கண்கள் பளிச்சிடும் நமக்கு.
0 comments:
Post a Comment