Pages

Wednesday, February 25, 2015

பாடல் தந்த சுகம் : ஒரு மைனா மைனாக்குருவி


இந்தமாதிரிப் பாட்டெல்லாம் ரஜினிகாந்துக்கு உரியது என்று படத்தைப் பற்றிய ஜாதகம் தெரியாதவர்களே சொல்லிவிடக் கூடிய அளவு பொருத்தம் நிறைந்த பாட்டு. பாடலைக் கேட்கும் போது ரஜினிகாந்த் இன் நளினமான அசைவுடன் கூடிய நடனமே துணைக்கு வந்து கொள்ளும். எனக்கெல்லாம் இந்தப் பாட்டெல்லாம் ஒரு உற்சாக பானம் போல.

நடிகர் ரஜினிகாந்த் இற்கு ஆரம்பகாலத்தில் மலேசியா வாசுதேவன், தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பின்னர் மனோ என்று குரல் கொடுத்த போது மூவருமே பங்கமில்லாமல் அச்சொட்டாக ரஜினிகாந்த் ஆக மாற வேண்டிய உழைப்பு இருந்தது. ரஜினிக்கேயான குரலின் நளினங்களைக் காட்டி அதை மெய்ப்பிக்க வேண்டியிருந்தது. ரஜினிகாந்த் இற்கு முன்னால் இருந்த எம்.ஜி.ஆர் யுகத்தில் கூட டி.எம்.செளந்தரராஜனைத் தாண்டி யாரும் உச்ச குரலாக மாறமுடியவில்லை.
நல்ல பாடகர்கள் என்பது எக்காலத்திலும் இருந்தார்கள் என்பது தனியான விஷயம்.

"ஒரு மைனா மைனாக்குருவி" பாடலைப் பாடுவதற்காக ஒலிப்பதிவுக்கூடத்துக்குள் பாடல் பதிவாகும் போதுதான் இது ரஜினிகாந்த் இன் உழைப்பாளி படத்துக்காக எடுக்கிறோம் என்று சொன்னார்கள் என்று ஒருமுறை குறிப்பிட்டார் பாடகி சித்ரா. அப்போதே ட்ராக் சிஸ்டம் எனப்படும் பாடகர் தனித்தனியாகப் பாடிப் பின்னர் ஒட்டும் தொழில்நுட்பம் வந்து விட்டாலும் இந்தப் பாடல் மனோ, சித்ரா சம காலத்தில் பாடி ஒலிப்பதிவு செய்தது.

கவிஞர் வாலி படத்தின் முழுப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். ஏனோ இரண்டு பறவைகளை ஒரே படத்தில் இழுத்து விட்டிருக்கிறார். ஒன்று "ஒரு கோலக்கிளி ஜோடி தன்னை" இன்னொன்று இந்த "மைனா மைனாக்குருவி" . காலையில் வேலைக்கு வரும் போது திரும்பத் திரும்ப இதையே கேட்டுக் கொண்டு வந்து பொச்சம் தீராமல் அலுவலகத்துக்கு வெளியில் நின்றும் ஒரு முறை கேட்டுவிட்டு வேலைக்குப் போனேன். வேலை நேரத்தில் பாடல் கேட்பதில்லை. எப்பவாவது அரிதாகத் தான் அது நடக்கும்.

"ஒரு மைனா மைனாக்குருவி" பாடலுக்கு ஒன்று விட்ட சித்தி மகளாக "வெண்ணிலவு கொதிப்பதென்ன" (சின்ன மாப்ளே) http://youtu.be/e_jSgAfrYuA படப்பாட்டைச் சொல்லலாம். அந்தப் பாட்டு மனோ, சொர்ணலதா பாடியது. முன்னர் ஒருமுறை சொன்னது போல ஒவ்வொரு பருவத்திலும் ராஜா இம்மாதிரி ஒத்த வடிவங்களில் அமையும் பாடல்களைக் கொடுப்பது வழக்கம்.

"ஒரு மைனா மைனாக்குருவி" பாடலெல்லாம் மெல்லிசை மேடைக் கச்சேரி வைப்பவர்களுக்கே தாரை வார்த்தது மாதிரி இசைக்கட்டோடு இருக்கும்.  மிக இலகுவாக மேடைக்கச்சேரியில் வாசிக்கக் கூடிய பாட்டு. மனோ (மேனாட்டுப் பெண்களிடம்) , சித்ரா (ஏதேதோ எண்ணம் கொண்டு) பாடும் போது இரட்டைப்படையாக அவர்களின் குரல் ஒலிக்கும் உத்தி முன்னர் ராஜாதி ராஜா படத்தில் வரும் "வா வா மஞ்சள் மலரே" பாடலிலும் பயன்பட்டுச் சிறப்பாக அமைந்திருக்கும்.

இப்போதெல்லாம் ஒவ்வொரு படம் வரும் போதெல்லாம் புதுசு புதுசா தினுசு தினுசா சண்டை, வழக்கு, போராட்டம் எல்லாம் இல்லாத காலம் அப்போது இதற்கெல்லாம் ஆதியும் அந்தமுமாக ரஜினிகாந்த் இற்கும் விநியோகஸ்தர் சங்கத்துக்கும் இடையில் புட்டுக் கொள்ளவே  விஜயா வாஹினி பல்லாண்டுகளுக்குப் பின்னர் எடுக்க வந்தபோது உழைப்பாளியின் பூஜையில் இருந்து படம் வெளிவரும் வரை உண்மையான பிரசவ வேதனை தான். அப்போது விநியோகஸ்தர் சங்கத் தலைவராக இருந்த சிந்தாமணி முருகேசன் பரவலாகத் தன் பெயரைத் தக்கவைத்ததோடு சரி. படம் வெளி வந்து ரஜினிகாந்த் - பி.வாசு கூட்டணியில் வசூலை அள்ளிய இன்னொரு படமாக அமைந்தது.

நடிகை ரூபிணி மேரி அதாலத் என்ற ஹிந்திப் படத்தில் நடித்த காலத்திலேயே ரஜினிகாந்த் உடன் நடித்த பெருமை. ஆனால் அந்தப் படத்தில் அவர் ஜோடி இல்லை. பின்னாளில் மனிதன் படத்தில் ஜோடி சேர்ந்து கொண்டார். ரூபிணிக்குப் பட வாய்ப்புகள் ஓய்ந்து காணாமல் போன நிலையில் உழைப்பாளி படத்தில் "ஒரு மைனா மைனாக்குருவி" பாடலில் மூன்றில் ஒரு குமரியாக ஆடினார். போனவாரம் 80ஸ் நட்சத்திரங்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் பார்த்த போது அதே ரூபிணி அப்படியே இருக்கிறார் என்பதோடு நிறுத்திக் கொண்டு "ஒரு மைனா மைனாக்குருவி மனசாரப் பாடுது" பாடலைக் கேட்போம் 😄😄😄

Wednesday, February 11, 2015

"வீசும் தென்றல் காற்றினைப் போல்" - மலர்ந்தும் மலராதது

வீசும் தென்றல் காற்றினைப் போல் என் இதயத்தில் நீ நுழைந்தாய் - ஏ.ஆர்.ரஹ்மானின் மலர்ந்தும் மலராத பாடல்

நேற்று YouTube இல் 90 களின் இறுதியில் வந்த பாடல்களை ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டு வந்தேன். அப்போது உல்லாசம் படத்தில் வந்த "வீசும் காற்றுக்குப் பூவைத் தெரியாதா" பாடலைக் கேட்டு முடித்ததும் YouTube தானாகவே ஒரு பாடலைப் பரிந்துரைத்தது. அந்தப் பாடல் தான் "வீசும் தென்றல் காற்றினைப் போல்". இந்தப் பாடலை எங்கோ கேட்ட மாதிரி இருக்கே என்று மனசைக் கேட்கும் அளவு சுத்தமாக மறந்து விட்ட பாட்டு, கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் கேட்கிறேன். 

தொண்ணூறுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் அலை 
அடித்துக் கொண்டிருந்த போது அடுத்து இவர் எதைக் கொடுப்பார் என்று கன்னம் வைத்துக் கொண்டிருந்த நேரம். மலையாளத்தில் இருந்து வந்த அசோகா, தெலுங்கில் இருந்து வந்த சூப்பர் போலீஸ், மனிதா என்று தமிழ் மாற்றுப்பட்ட பாடல்களையும் விட்டு வைக்கவில்லை. அப்போது தான் "மோனலிசா" என்ற படப் பாடல்கள் வந்திருந்தன. ரஹ்மான் படமும் மோனலிசா ஓவியமும் பொதிந்த விபரங்கள் தவிர வேறு எதுவும் அப்போது மட்டுமல்ல இப்போதும் தெரியாத ரகசியமாக வந்த பாடல் பொதி இது.
சம காலத்தில் ரஹ்மான் இசையில் வந்த  doli saja ke rakhna (காதலுக்கு மரியாதை ஹிந்திப் பதிப்பு) பாடல்கள் "ஊஞ்சல்" என்ற இசைத் தொகுப்பாக வந்திருந்தது. அதுவும் பெயரளவில் மட்டுமே வந்த  திரைப்படமாக்கப்படாத தமிழாக்கப் பாடல்கள். பின்னர் இது ஜோடி திரைப்படத்துக்காக வேறு பாடகர்கள் பாடித் திரை வடிவம் கண்டது.
Daud ஹிந்திப் படமும் ஓட்டம் என்ற பெயரில் தமிழில் பாடல்களாக ஒரு வருட இடைவெளியில் வந்தது.

மோனலிசா படத்தின் பாடல்கள் 1998 காலப்பகுதியில் வெளியானது. இந்தப் பாடல்கள் அனைத்துமே பழநி பாரதி அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு இந்த "வீசும் தென்றல் காற்றினைப் போல்" பாடலைப் பரிந்துரைத்த YouTube இல் அப்போது கேட்டுக் கொண்டிருந்த "வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா" பாடலும் பழநி பாரதியால் எழுதப்பட்டது ஆச்சரியமான இன்னொரு ஒற்றுமை. இந்தப் பாடலை அப்போது வகை தொகையில்லாமல் கேட்டிருக்கிறேன். இப்போது திருவிழாவில் தொலைந்த குழந்தை மீசை முளைத்த விடலைப்பையனாக அடையாளம் காணமுடியாத அளவுக்கு  என் முன்னால் நிற்பது போல பிரமை :-)
உன்னி கிருஷ்ணன், ஸ்வர்ணலதா பாடிய அட்டகாசமான பாடல் இது.

இந்தப் பாடலின் நதிமூலத்தை ஆராய்ந்தால் முதலில் ஹிந்தியில் வெளியான "Kabi Naa Kabi" படத்திற்காகத் தான் இந்தப் பாடல்கள் முதலில் பதிவாகித் திரை வடிவம் கண்டன. குறிப்பாக இந்த "வீசும் தென்றல் காற்றினைப் போல்" பாடலின் மூலப் பாடலான "Tu Hi Tu" பாடலை சித்ராவும் மலையாளப் பாடகர் ஶ்ரீகுமாரும் பாடியிருப்பார்கள். இதுவரை கேட்காதவர்கள் கேட்டுப் பாருங்கள். https://m.youtube.com/watch?v=6Y_8-Wg0qIA 
பாடகர்கள் ஏதோ வீராணம் குழாய்க்குள் இருந்து பாடுவது போல அமுங்கிப் போய் இருக்கும் ஹிந்தி வடிவம். வழக்கமாக பாடல்களின் மூல வடிவத்தைக் கேட்கும் போது இனிமையாக சுகமாகவும் இருக்கும். அதை மொழி மாற்றும் போது பாடகர் தேர்வில் சறுக்கல் இருக்கும். குறிப்பாக அக்னி நட்சத்திரம் பாடல்களை தெலுங்கில் வாணி ஜெயராம் பாடியதைக் கேட்டால் தெரியும். 
இங்கோ தலைகீழ் ஹிந்தியில் எடுபடாதது போல இருக்கும் பாட்டு தமிழில் உன்னிகிருஷ்ணன், ஸ்வர்ணலதா பாடும் போது ஏதோ தமிழுக்காகவே
தாரை வார்க்கப்பட்ட மெட்டுப் போல பாடல் வரிகளும், பாடும் திறனும் வெளிப்படுகின்றது. கிட்டத்தட்ட இதே பாணியில் ஏ.ஆர். ரஹ்மான் பல்லாண்டுகளுப்பின் கொடுத்த இன்னொரு பாட்டு "அழகிய தமிழ்மகன்" படத்தில் வரும் "கேளாமல் கையிலே வந்தாயே காதலே" பாடல் இருக்கும்.

"வீசும் தென்றல் காற்றினைப் போல்" பாடலை இன்னொரு பாடலில் கண்டுகொண்டோமே என்று முடியைப் பிய்த்துக் கொள்ளாதீர். வழக்கம் போல தேனிசைத்தென்றல் தேவாவின் பெருங்கருணையால்  " நெஞ்சினிலே" படத்தில் வரும் "மனசே மனசே கலக்கமென்ன" https://m.youtube.com/watch?v=YVqvSMDXsFk பாடலின் ரிதம் ஒரே காலேஜ்ல ஒண்ணாப் படிச்சவங்க என்று சொல்லும். அண்ண்ணன்ன் அண்ண்ணன்ன் 😄




Monday, February 9, 2015

மனதில் என்ன நினைவுகளோ

எப்போதாவது அரிதாக என் நாட்டுக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்தால் கொழும்பில் இறங்கிய அடுத்த நிமிடமே யாழ்ப்பாணம் நோக்கிப் பறந்து விடும் மனசு.

இணுவிலில் இருந்து கே.கே.எஸ் றோட்டால் எதிர்க்காற்று முகத்தில் அப்ப சைக்கிள் வலித்து யாழ்ப்பாணம் ரவுண் நோக்கிப் போய்க் கொண்டிருப்பேன். தாவடிச் சந்தி, கொக்குவில் சந்தி, பூ நாறி மரத்தடி எல்லாவற்றையும் குசலம் விசாரிக்குமாற் போல நின்று நிதானித்து விட்டு நாச்சிமார் கோயிலடியிலும், சிவன் கோயிலடியிலும் சைக்கிளை ஸ்ராண்டில் போட்டு விட்டு றோட்டுக்கு அப்பால் இருக்கும் கோபுரத்தைக் கிழித்து எரியும் விளக்கொளியில் தொலைவில் இருக்கும் கர்ப்பக்கிருகத்தில் இருக்கும் மூல மூர்த்தியை வழிபட்டுவிட்டு தொடரும் பயணம்.
இடையில் வரும் மனோகரா தியேட்டர் தரிசனம்.

சுப்பரமணியா புத்தகசாலை, வரதரின் ஆனந்தா அச்சகம், டொமினிக் ஜீவாவின் மல்லிகை காரியாலயம் இவையெல்லாம் இருந்த இடங்களையும் எட்டிப் பார்த்துப் பெரு மூச்சு கிளம்பும்.

அப்படியே வீரசிங்கம் மண்டபம், கோட்டை முனியப்பர், 1974 ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூபி, உருக்குலைந்து கிடக்கும் றீகல் தியேட்டர் (இப்ப அதுவும் இல்லை) , துரையப்பா ஸ்டேடியம், யாழ் பொது நூலகம், சுப்ரமணியம் பார்க், பண்ணைப் பாலம், சென்றல் கொலிச் எல்லாம் எட்டிப் பார்த்து அப்படியே வளைந்து போய் முன்னர் மூத்திரச் சந்தாக இருந்த குச்சொழுங்கையால் ஹரன் தியேட்டர் இருந்த பக்கத்தை எட்டிப் பார்த்து விட்டு  சாந்தி தியேட்டருக்கு (இப்ப நாதன்ஸ்) ஓடும் சைக்கிள். அங்கே வெறும் தியேட்டரைக் கொஞ்ச நேரம் பார்த்து விட்டு முன்னால் தேங்கிய குப்பைக் குவியலின் துர் நாற்றம் நாசியில் அடிக்க அப்படியே பஸ் ஸ்ராண்டடிக்குப் போய் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி உருட்டிக் கொண்டே யாழ் போதனா வைத்தியசாலையை ஒரு எட்டு அப்படியே பூபாலசிங்கம் புத்தகசாலையில் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து விட்டு, ராணி தியேட்டர் இருந்த இடத்தில் இயங்கி இப்போது பூட்டியிருக்கும் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தை ஏறிட்டு விட்டு நவீன சந்தைக் கட்டடத்துக்குள் நுழைந்து ஷண் றெக்கோர்டிங் பார் இருந்த பக்கமெல்லாம் பார்த்து விட்டு வெளியே வந்து சைக்கிளை மீண்டும் வலித்து கன்னாதிட்டி றோட்டில் இருக்கும் லிங்கன் கூல்பாரில் ஒரு சர்பத் இரண்டு மட்டன் றோல்ஸ் சாப்பிட்டு விட்டு அப்படியே லிடோ தியேட்டர் இருந்த இடத்தில் வந்திருக்கும் கட்டட வளாகத்தையும் ஏறிட்டு விட்டு வின்சர் தியேட்டருக்கு முன்னால் மெளன அஞ்சலி செலுத்துமாற்போல கொஞ்ச நேரம் நிற்பேன். அந்த இடம் சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் களஞ்சிய அறையாக வாழ்விழந்து நிற்கும். பக்கத்தில் இருக்கும் ராஜா தியேட்டரில் என்ன படம் ஓடுது என்று பார்த்து விட்டு ஸ்ரான்லி றோட்டால் நியூ விக்டேர்ஸ் இருந்த பக்கம் போய் பின்னர் வெட்டிக் கொண்டு வந்து வெலிங்டன் தியேட்டர் இருந்த காணியையும் ஏறிட்டுப் பார்த்து விட்டு ஈபிடிபி கட்சியால் சுற்றி வளைக்கப்பட்டு கைதியாய் நிற்கும் உடைந்த ஶ்ரீதர் தியேட்டரையும் ஊமையாகப் பார்த்து, றயில்வே கடவைக்கு அப்பால் இருந்த விக்னா டியூட்டரி பக்கம் பார்த்து விட்டு ஆரிய குளச் சந்தியால் நல்லூரை நோக்கிச் சைக்கிள் போகும். இதுதான் என் ஒவ்வொரு யாழ்ப்பாணப் பயணத்தில் தவறாது நிகழ்ச்சி நிரலில் இருக்கும் விடயம்.

யாழ்ப்பாணத்தில் எண்பதுகள் காலகட்டத்தில் தமது இளமையைக் கழித்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். முந்திய பந்திகளில் நான் தரிசித்த இடங்கள் உயிர்பெற்று விளங்கிய காலங்கள் அவை. 
எண்பதுகளின் இறுதிக் கால்பகுதியோடு வசந்தங்கள் எல்லாம் தேய்ந்து போய்விட்டன.
எனது கொடுப்பினையோ என்னவோ, எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் அரைவாசியையும் யாழ் மண்ணில் கழித்ததால் இந்த அனுபவத்தை நினைவு தெரியாத சிறுவயதில் இருந்தே சுவைத்திருக்கிறேன். அதனால் தான் இருபது வருடங்களைத் தொடும் என் புலம்பெயர் வாழ்க்கையிலும் உதறித் தள்ள முடியாத பந்தம் இந்த இடங்களில் எல்லாம். இவையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்தோ அல்லது இருந்தாலும் பழைய நினைவுகளைத் தொலைத்த அம்னீசியா கண்ட நோயாளியாகவோ....

"தனிமை இருளில் உருகும் நெஞ்சம் துணையை விரும்புமே 
துணையை விரும்பி இணையும் பொழுது
அமைதி அரும்புமே"

"மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ இதுவோ அதுவோ இனிய ரகசியமோ"

"அந்தப் பாடல் பஞ்சு அருணாசலம் வரிகளில் பூந்தளிர் படத்துக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா குரல்களில் இளையராஜா இசையமைக்க ஒலித்தது, நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் வழங்கும் வர்த்தக சேவை" எங்கே ஒரு தேத்தண்ணிக் கடையில் இருந்து கிளம்பும் பாடல் அந்த எண்பதுகளில் ஒரு வசந்த காலத்துக் கீதமாக.
சைக்கிளில் பரரலாக போய்க் கொண்டு கதை பேசிக் கொண்டிருக்கும் காதலர்கள் போல.

"மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ இதுவோ அதுவோ இனிய ரகசியமோ"
இந்தப் பாடல் மட்டும் தான் இந்த இடங்களையெல்லாம் உயிர்த்தெழ வைத்து  மனதில் அசைபோட வைக்கிறது எங்கோ பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்.
 இன்று காலையில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  
 
என்னைப் போலவே இன்னொருத்தர் இந்த நேரம் யாழ்ப்பாணம் ரவுண் பக்கம் இந்த இடங்களில் அலைந்து கொண்டிருப்பார், தேடிக் கொண்டிருப்பார் அந்த வசந்த காலங்களை.
 
 http://soundcloud.com/kanapraba/manadhil-enna
 
 

 

Friday, February 6, 2015

SHamitabh - ஷமிதாப் - shAMITABH

சினிமாவை ஆத்மார்த்தமாக நேசிப்பவனின் இலட்சிய இருப்பு,  தன்  அடையாளத்தைத் தொலைத்தவரின் ஆதங்கம் இதை அடித்தளமாக வைத்து Shamitabh படத்தின் மூலக்கரு அமைந்திருக்கின்றது. 

இந்தப் பதிவில் தலைப்பில் இருக்கும் SHamitabh VS shAMITABH தான் காட்சிகளை நகர்த்தும் பகடைக் காய்களாய். ஆனால் வழக்கம் போல கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஈகோ யுத்தம், நாலு சண்டை என்ற ரீதியில் அமைந்த மாமூல் மசாலாவும் அல்ல.  இயன்றவரை இயல்பாகவே திரைக்கதையோட்டத்தை அமைத்திருப்பதால் முழுமையான வணிக சினிமாவாக இந்தப் படத்தைச் சொல்ல முடியாது.

அமிதாப் பச்சான் என்ற மிகப் பெரும் நடிகருக்கெல்லாம் இந்த மாதிரிக் கதாபாத்திரம் ஊதித்தள்ளக்கூடியது. ஆனால் இந்தப் படமும் இவர் ஏற்று நடித்த பாத்திரமும் அமிதாப் இன் திரையுலக வாழ்வில் தவிர்க்க முடியாத அளவுக்கு படம் முழுக்க நிரம்பியிருக்கிறார். அமிதாப் ஐ விட்டு எந்த நடிகரையும் பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்குச் சிறப்புச் சேர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட அவரின் நிஜ வாழ்க்கையின் ஒரு பகுதிதான் படமாகியிருக்கிறது.

 தனுஷ் இற்கு ஷமிதாப் இன்னொரு மிகச்சிறந்த வாய்ப்பு, சிறுவயதில் இருந்தே சினிமா சினிமா என்று அலைந்து, ஏங்கி அந்த வாய்ப்பைப் பற்றிப் பிடிக்க எத்தனிப்பதிலும், புகழின் உச்சியில் இருக்கும் போது தன் சினிமா வாழ்க்கை தொலையப் போகின்றதே என்று துடிக்கும் போதும் சரி, மிகை நடிப்பில்லாது வாழ்ந்து காட்டியிருக்கிறார். படம் முழுக்க இவரின் அங்க அசைவுகள் தான் பிரதானம். 

தமிழ் சினிமா நாயகர்களில் கமல்ஹாசன் உயர்ந்தவர்கள் படத்தில் வாய் பேச முடியாத பாத்திரத்தில் முழுமையாக நடித்திருந்தார். கே.பாக்யராஜ் கூட ஒரு கை ஓசை படத்தின் இறுதிக்காட்சி வரை வாய் பேச முடியாதவராக நடித்திருப்பார்.  தனுஷிற்கு இந்தப் படம் வாயிலாக இப்படியானதொரு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த நடிகர் போட்டியில் அமிதாப் அல்லது தனுஷ் இந்தப் படத்தில் வந்தது போலவே போட்டி போடப் போகும் கூத்தும் நடக்கப் போகுதோ என்னமோ என்று சொல்லுமளவுக்கு அமைந்திருக்கிறது.

தனுஷ் இன் உடல் மொழிக்கு அமிதாப் இன் குரலைப் பொருத்தும் முதல் காட்சியில் அமையும் நடிப்புப் பயிற்சி கல கல கலக்கல்.
ஆரம்பத்தில் தனுஷ் இன் உருவத்தோடு அமிதாப் குரலைப் பொருத்திக் கேட்கும் போது ஏற்படும் நெருடலை அமிதாப் வழியாகவே கிண்டலாக "உன்னுடைய உடம்பின் எடையை விட என் குரலின் எடை அதிகம்" என்று பகிர்ந்து சமரசம் கொள்ள வைக்கிறார் இயக்குநர்.

களத்தூர் கண்ணம்மா கமலின் அக்கா மாதிரியே அக்க்ஷரா, உதவி இயக்குநராக  இது நாள் வரை இருந்தவர் இப்போது நாயகி ஆன முதல் வாய்ப்பிலேயே உதவி இயக்குநர் பாத்திரத்தில் நடித்திருப்பதும் புதுமை. 

 பொம்மலாட்டம் புகழ் ருக்மணி ஒரு சில காட்சிகளில் வரும் போது இழுத்து வாருங்கள் தமிழ் சினிமாவுக்கு என்று சொல்லுமளவுக்கு அழகுப் பதுமையாக இருக்கிறார்.
நாடோடிகள் அபிநயா ஒரு காட்சியில் எட்டிப் பார்க்கிறார்.

ஆரம்பத்தில் படத்தின் எழுத்தோட்டத்தோடு தாவும் மேற்கத்தேய இசை ஒரு பெரும் இசைக்கச்சேரியைக் கேட்கும் ஆவலோடு எம்மைத் தயார்படுத்துகின்றது.
தனுஷ் இன் சிறுவயதுக் காட்சியில் கிராமத்தில் நடித்துக் காட்டும் போது இயங்கும் ஒற்றை வயலின் அப்படியே ஒரு கூட்டம் வயலின் ஆவர்த்தனத்தைத் துணைக்கழைத்துப் பெருக்கெடுக்கும் போது மீண்டும் இளையராஜாவே வந்து இந்திய சினிமாவுக்குப் பின்னணி இசையின் தாற்பர்யத்தைப் பாடமெடுக்கும் காட்சியாகவே அமைந்து சிறப்பு சேர்க்கிறது.
அது போல் தனுஷ் வாய்ப்புத் தேடும் போதும் அமையும் பின்னணி இசையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.


படத்தின் மிகப் பெரிய ஏமாற்றம் வழக்கம் போல இசைஞானி இளையராஜாவின் இசையில் கிடைத்த ஆறு முத்தான பாடல்களில் இரண்டை மட்டுமே பயன்படுத்திவிட்டு மீதியைக் கடாசிய போது வந்த எரிச்சல் இன்னமும் அடங்கவில்லை. 

Ishq E Fillum நம்மூர் "ஜாதி மத பேதமின்றி (சினிமா சினிமா) மாதிரியான பாடல் முழுமையாக இருக்கிறது. பிட்லி பாடலும் இடையில் சிறு பொத்தல் போட்டுத் தொடர்கிறது. ஸ்டீரியோஃபோனிக் பாடல் அரை நிமிடமே படமாக்கப்பட்டு மண்ணை வாரி வீச வைக்கிறது. "தப்பட்" பாடல் ஒரு நிமிடம் ஒலித்து போங்காட்டம் ஆடுகிறது.
தெரியாமல் தான் கேட்கிறேன். சினிமாவை முழுமையாகக் களமாக அமைத்த படத்தில் இந்த மாதிரி லட்டு மாதிரி ஆறு பாடல்கள் கிட்டியிருக்கிறதே அவற்றை மோசம் செய்யாமல் பயன்படுத்த வேண்டும் என்ற மானசீக எண்ணம் கூட இல்லாமல் என்னத்தைப் படம் எடுக்கிறது? 
இனி டிவிடிக்காகக் காத்திருந்து அதிலாவது வெட்டுப்படாத முழுப்படமும் கொடுக்கிறார்களா என்று தேடவேண்டும். அதுவே இடைவேளைக்குப் பின் படத்தை ஒன்றிப் பார்க்க முடியாமல் செய்துவிடுகின்றது.

ராஜாவின் பாடல்களை மோசம் செய்த பெரும் குறையோடு அமிதாப், தனுஷ் ஆகியோரின் உழைப்புக்காக ஷமிதாப் படத்தைப் பாத்து விடுங்கள்.





Thursday, February 5, 2015

ஷமிதாப் பாடல்கள் - கொண்டாடித் தீரா இசை வெள்ளம்

ஷமிதாப் (Shamitabh) பாடல்கள்
கொண்டாடித் தீரா இசை வெள்ளம்

சிட்னியில் வாரத்துக்கு இரண்டு ஹிந்திப் படங்களாவது தியேட்டரில் வந்து விடும் என்றாலும் ஒரு சில படங்களை மட்டுமே பார்ப்பதற்காக தியேட்டர் வாசலை மிதித்திருக்கிறேன். 
ஆனால் இளையராஜாவின் இசையை அகன்ற திரையரங்கில் காட்சிவடிவத்தோடு பார்த்தும், கேட்டும் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டுப் பார்த்த ஹிந்திப் படங்கள் 
சீனி கம் (2007)

http://www.radiospathy.com/2007/05/cheeni-kum.html

பா (2009)

http://www.radiospathy.com/2009/12/paa.html

இப்போது ஷமிதாப் படமும் சேர்ந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை தான் படம் வரும் என்றார்கள் ஆனால் தியேட்டரின் வலைபக்க வாசலிலேயே காத்துக் கிடந்த எனக்கு வியாழனே சிறப்புக் காட்சி இருப்பதாகக் காண்பித்தது. இன்றிரவு படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டினால் சிறப்புப் பதிவு வரும்.

ஷமிதாப் பாடல்கள் iTunes இல் வெளியாகியிருந்தாலும் இசைத்தட்டில் வாங்கிக் கேட்டு இன்புறுவோம் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தது தான் மிச்சம். படம் வருவதற்கு ஒரு வார இடைவெளி தான் இருந்தது. இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாது iTunes வழியாகவே தரவிறக்கிக் கேட்க ஆரம்பித்தேன்.

ஒவ்வொன்றாகப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்த போதும் புதுமை புதுமை புதுமை 
என்று காட்டிக் கொண்டே போனது ஆறு பாடல்களின் இசைக் கோவையும்.

அன்னக்கிளி காலத்தில் இருந்து நான்கு தசாப்தங்களாக இளையராஜாவின் இசையைப் பிரித்துப் பார்த்தால் ஒவ்வொரு காலகட்டமும் புதுப் புது இசையமைப்பாளரை அவரிடமிருந்து காட்டுகின்றதே. ராஜாவின் 90 களிலும் 2000 களிலும் கொண்டாட மறந்த பாடல்களை இப்போது கேட்டால் காலம் தவறிக் கொண்டாடுது மனம்.
"ஷமிதாப்" பாடல்களைக் கேட்டால் 71 வயசுக்காரர் கொடுத்தது என்று நம்ப முடியவில்லை.

"சத்தியமா சொல்றேன் ஷமிதாப் பாடல்களை ஒவ்வொரு நாளும் கேட்க உடம்பெல்லாம் உருக் கொள்ளுது"
என்று ட்விட்டரில் பகிர்ந்திருந்தேன்.

ஷமிதாப் பாடல்களில் எது நன்றாக இருக்கிறது என்பது ஒவ்வொரு நாளும் கேட்கும் போதும் மாற்றம் கண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு "ஷா ஷா ஷா" என்றிருந்தது. அடுத்த நாளோ "ஸ்டீரியோஃபோனிக் சன்னாட்டா" என்று முன்னுக்குத் தள்ளுகிறது.
"ஸ்டீரியோஃபோனிக்" பாடல் வரிகள் தான் வணிக விளம்பரம் போல முரண்டு பிடிக்கின்றது. இந்தப் பாடலின் நதி மூலப் பாட்டு "ஆசையைக் காத்துல தூது விட்டு" சமீப ஆண்டுகளில் தெலுங்கில் "குண்டல்லோ கோதாரி" (தமிழில் மறந்தேன் மன்னித்தேன்) படத்திற்காக மீள் இசையாக வந்தது. இப்போது ஹிந்திக்குப் போயிருக்கிறது. ஹிந்தி வடிவத்தில் மெட்டு மட்டுமே அவ்வப்போது காட்டிக் கொடுக்கிறது. ஆனால் பாட்டு வடிவமே முழுமையான பிரிட்டிஷ் மகாராணி விருந்து. ஆயிரம் படங்களின் பாடல்களையும் திரும்ப இசையமைக்கக் கொடுத்தால் இன்னும் ஆயிரம் இசைத் தொகுப்புகளைப் புது வடிவில் கொடுக்க நம்ம ஆளால் முடியும். ராஜாவின் இசையை சீரழிக்கும் ரீமிக்ஸ் வெறியர்களுக்குப் பாடமெடுக்கும்.

"லைப்ஃபோய்" பாடலின் இடையிசை கலக்கல் துள்ளிசை.

"ப்ரியா" படத்தின் பாடல்களை வாக்மேனில் கேட்ட போது ஒரு காதில் ஒரு 
வித இசை இன்னொரு காதில் இந்தா இன்னொரு இசை என்று ஸ்டீரியோவைக் காட்டிய சுகத்தை "தப்பட்" பாடல் இப்போது கொடுக்கின்றது. எழுதிக் கொண்டிருக்கும் போது "தப்பட்" பாடல் தான் முன்னுக்கு நிற்கிறது.

"பா" படத்தைத் தொடந்து இந்தப் படத்திலும் "பிட்லி" பாடல் மூலம் அமிதாப் குரல் கொடுத்திருக்கிறார். இப்போதைக்கு இசையை மட்டும் அனுபவிக்கிறேன். காட்சி வடிவத்தோடு காணும் போது இன்னும் நெருக்கமாகும் போல.
சில்சிலா படத்தில் அமிதாப் பாடிய இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று http://youtu.be/Jf92MOkrbEw

இந்த இசைத் தொகுப்பில் பாடகர்களின் தேர்வு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அளவு சிறப்பு வாய்ந்தது.

ஆயிரம் படங்களைத் தொட்ட இளையராஜாவுக்கு "ஷமிதாப்" மேற்கத்தேய இசைக்கும், "தாரை தப்பட்டை" நமது கிராமிய இசைக்குமாக இரு வேறுபட்ட இசைப் படையல்களைக் கொடுக்கும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறது.
 "ஷமிதாப்" இல் சாதித்து விட்டார்.
"தாரை தப்பட்டை" தரும் அடுத்த கொண்டாட்டத்துக்குக் காத்திருப்போம்.

Monday, February 2, 2015

பாடல் தந்த சுகம் : ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு

முன்பெல்லாம் சினிமா விவசாயியே தன் பயிரை அறுவடை செய்து சந்தைப்படுத்தக்கூடிய சூழல் இருந்தது.  இன்று அந்த நிலை இல்லை என்ற கசப்பான நிதர்சனத்தை அண்மையில் கமல்ஹாசன் தன் குமுதம் கேள்வி பதில் பகுதியில் சொல்லியிருந்தார்.

அப்படியானதொரு காலகட்டம் எண்பதுகளின் தமிழ் சினிமா. எந்தவொரு துறையின் சரிவோ அல்லது அழிவோ அதன் உச்சத்தை நீண்ட வருடங்கள் எட்டிவிட்டுத் தான் சராலென்று விழுந்து விடும். அப்படியானதொரு காலகட்டம் தமிழ்சினிமாவின் எண்பதுகள்.

குரு சிஷ்யன் படத்தை ரஜினிகாந்த் இன் கால்ஷீட் நெருக்கடியில் அவரிடம் கொடுத்த உறுதிமொழியின் பிரகாரம் வெறும் 28 நாட்களே எடுத்து இயக்கி முடித்த படம் என்று குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். நினைத்துப் பார்க்க முடியுமா இப்படியொரு சாதனையை? 
அதுவும் ரஜினிகாந்த், பிரபு ஆகிய உச்ச நட்சத்திரங்களை வைத்து அவரவர் ரசிகர்களையும் திருப்திப்படுத்துவது என்பது இலேசுப்பட்ட காரியமல்ல.
இவ்வாறான தன் சுவாரஸ்யமான பட அனுபவங்களை ஏவிஎம் தந்த எஸ்பிஎம் என்ற நூலில் பதிந்து வைத்திருக்கிறார் எஸ்.பி.முத்துராமன். இந்த நூலாசிரியர் ராணி மைந்தனுடன் நான் எடுத்த பேட்டியை இங்கு கேட்கலாம்.

28 நாட்களில் எடுத்த படம் 175 நாட்கள் ஓடிய வெற்றிச் சித்திரமானது.

குரு சிஷ்யன் படத்தின் வரவால் இன்னும் சில கவனிக்கத்தக்க நிகழ்வுகளும் தமிழ் சினிமாவில் அமைந்தன.
தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு "கெளதமி" என்ற நவ நாகரிக மங்கை கிட்டினார். மேற்கத்தேய நடை உடையிலும் கிராமியத்தனமான பாவாடைத் தாவணியிலும் கலக்கிய மிகச்சில நாயகிகளில் கெளதமி தவிர்க்க முடியாதவர். உதாரணமாக இதே படத்தில் சீதாவின் நாகரிகத் தோற்றம் எடுபடாமல் இருக்கும். குரு சிஷ்யன் படத்தில் கெளதமியின் நடிப்பு தமிழுக்கு அந்நியமில்லாத பாங்கில் இருக்கும்.

ஒரு பக்கம் ரஜினி, கமல் என்று ஜோடி கட்டி ஸ்டைலான பாத்திரப் படைப்புகளும் இன்னொரு பக்கம் ராமராஜனுடன் கிராமியத் தனமான பாத்திரங்களிலும் கலக்கியவர். ஆனாலும் கெளதமியை முதலில் அதிகம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவை 
ராமராஜனுடன் அவர் நடித்த படங்களே.

பாடகி ஸ்வர்ணலதா முந்திய ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியார் பாடலை கே.ஜே.ஜேசுதாசுடன் பாடித் தமிழுக்கு முதல் வரவு வைத்தார்.
தொடர்ந்து 1988 இல் குரு சிஷ்யன் படத்தில் இடம்பிடித்த "உத்தம புத்திரி நானு" என்ற பாடல் மூலம் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் அவர் கொடுத்த வெற்றி முத்திரைகளைச் சொல்லவா வேண்டும்?  

குரு சிஷ்யன் படத்தின் ஏனைய பாடல்களை வாலி எழுத "ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு" பாடலை மட்டும் இளையராஜா எழுதியிருந்தார். தயாரிப்பாளர் பிரபல பாடலாசிரியர் பஞ்சு அருணாசலமாக இருந்தும் அவர் பாட்டெழுதாதது புதுமை.

இரண்டு ஜோடிப்பாடல்களில் ஒன்றான
"வா வா வஞ்சி இள மானே"
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா 
குரல்களில் இன்னொரு "இரு விழியின் வழியே நீயா வந்து போனது" ரக துள்ளிசைக் காதல் பாடல்.

இந்தப் படத்தின் பாடல்களில் வந்த புதுசில் பள்ளிக்காலத்துக் காதல்களைச் சீண்டிப் பார்க்க "கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்" பாடல் கை கொடுத்ததைப் பலர் இப்போது ஞாபகப்படுத்த முடியும் :-)
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தனித்துவமான சிரிப்புடன் கூடிய பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏதோ பழக்கப்பட்ட பாடலைப் பாடிக் கொள்வது போல இவரின் பாணி இருக்கும்.



""ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்கு என்னடி உன் மனக்கணக்கு"  பாடலை 
வாலியோ அல்லது கங்கை அமரனோ இல்லாது போனால் பஞ்சு அருணாசலமோ கூட எழுதியிருக்கலாம் என்று தான் பலர் நினைக்குமளவுக்கு பாடலின் மெட்டுடன் போட்டி போடும் ஜாலியான ஊடல் பொருந்திய வரிகள். ஆச்சரியமாக இந்தப் பாடலை இளையராஜா தேர்ந்தெடுத்து ஏன் எழுதினார் என்பது கண்டுபிடித்துத் திருப்தி காண வேண்டிய இசை ரகசியம்.

எண்பதுகளில் கலக்கிய மனோ, சித்ரா ஜோடிக் குரல்களின் இன்னொரு சூப்பர் ஹிட் பாடல். 

இந்தப் பாடலின் இரண்டாம் சரணத்துக்கு முந்திய இடையிசையில் 2.44 நிமிடத்தில் தொடங்கும் வயலினும் தொடர்ந்து வாசிக்கும் புல்லாங்குழலும் கூட இந்தக் காதலர்களின் ஊடலின் பிரதிபலிப்பாக இருக்குமாற் போலத் தென்படும் அற்புதமான இசைக் கோவை.

"கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்" பாடலும் "ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு" பாடலும் கிட்டத்தட்ட ஒரே தொனியில் இருக்குமாற் போல வரும் உணர்வு எனக்கு மட்டும் தானா?

"இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்ல(து) அவர் அளிக்கு மாறு" -  திருக்குறள் 1321

அதாவது காதலரிடத்துத் தவறெதுவும் இல்லையெனினும் ஊடல் மூலமாக அவர் மீதான காதல் இன்னும் பெருக வல்லது என்ற விளக்கத்தைக் கொண்டது மேற்சொன்ன குறள்.
இனி இந்தப் பாடல் காட்சியைக் குறித்த குறளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். கச்சிதமான பொருள் விளக்கம் மனக்கண்ணில் விரியும்.

http://www.youtube.com/watch?v=wpTK2RLR9cM&sns=em