Pages

Monday, February 9, 2015

மனதில் என்ன நினைவுகளோ

எப்போதாவது அரிதாக என் நாட்டுக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்தால் கொழும்பில் இறங்கிய அடுத்த நிமிடமே யாழ்ப்பாணம் நோக்கிப் பறந்து விடும் மனசு.

இணுவிலில் இருந்து கே.கே.எஸ் றோட்டால் எதிர்க்காற்று முகத்தில் அப்ப சைக்கிள் வலித்து யாழ்ப்பாணம் ரவுண் நோக்கிப் போய்க் கொண்டிருப்பேன். தாவடிச் சந்தி, கொக்குவில் சந்தி, பூ நாறி மரத்தடி எல்லாவற்றையும் குசலம் விசாரிக்குமாற் போல நின்று நிதானித்து விட்டு நாச்சிமார் கோயிலடியிலும், சிவன் கோயிலடியிலும் சைக்கிளை ஸ்ராண்டில் போட்டு விட்டு றோட்டுக்கு அப்பால் இருக்கும் கோபுரத்தைக் கிழித்து எரியும் விளக்கொளியில் தொலைவில் இருக்கும் கர்ப்பக்கிருகத்தில் இருக்கும் மூல மூர்த்தியை வழிபட்டுவிட்டு தொடரும் பயணம்.
இடையில் வரும் மனோகரா தியேட்டர் தரிசனம்.

சுப்பரமணியா புத்தகசாலை, வரதரின் ஆனந்தா அச்சகம், டொமினிக் ஜீவாவின் மல்லிகை காரியாலயம் இவையெல்லாம் இருந்த இடங்களையும் எட்டிப் பார்த்துப் பெரு மூச்சு கிளம்பும்.

அப்படியே வீரசிங்கம் மண்டபம், கோட்டை முனியப்பர், 1974 ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூபி, உருக்குலைந்து கிடக்கும் றீகல் தியேட்டர் (இப்ப அதுவும் இல்லை) , துரையப்பா ஸ்டேடியம், யாழ் பொது நூலகம், சுப்ரமணியம் பார்க், பண்ணைப் பாலம், சென்றல் கொலிச் எல்லாம் எட்டிப் பார்த்து அப்படியே வளைந்து போய் முன்னர் மூத்திரச் சந்தாக இருந்த குச்சொழுங்கையால் ஹரன் தியேட்டர் இருந்த பக்கத்தை எட்டிப் பார்த்து விட்டு  சாந்தி தியேட்டருக்கு (இப்ப நாதன்ஸ்) ஓடும் சைக்கிள். அங்கே வெறும் தியேட்டரைக் கொஞ்ச நேரம் பார்த்து விட்டு முன்னால் தேங்கிய குப்பைக் குவியலின் துர் நாற்றம் நாசியில் அடிக்க அப்படியே பஸ் ஸ்ராண்டடிக்குப் போய் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி உருட்டிக் கொண்டே யாழ் போதனா வைத்தியசாலையை ஒரு எட்டு அப்படியே பூபாலசிங்கம் புத்தகசாலையில் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து விட்டு, ராணி தியேட்டர் இருந்த இடத்தில் இயங்கி இப்போது பூட்டியிருக்கும் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தை ஏறிட்டு விட்டு நவீன சந்தைக் கட்டடத்துக்குள் நுழைந்து ஷண் றெக்கோர்டிங் பார் இருந்த பக்கமெல்லாம் பார்த்து விட்டு வெளியே வந்து சைக்கிளை மீண்டும் வலித்து கன்னாதிட்டி றோட்டில் இருக்கும் லிங்கன் கூல்பாரில் ஒரு சர்பத் இரண்டு மட்டன் றோல்ஸ் சாப்பிட்டு விட்டு அப்படியே லிடோ தியேட்டர் இருந்த இடத்தில் வந்திருக்கும் கட்டட வளாகத்தையும் ஏறிட்டு விட்டு வின்சர் தியேட்டருக்கு முன்னால் மெளன அஞ்சலி செலுத்துமாற்போல கொஞ்ச நேரம் நிற்பேன். அந்த இடம் சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் களஞ்சிய அறையாக வாழ்விழந்து நிற்கும். பக்கத்தில் இருக்கும் ராஜா தியேட்டரில் என்ன படம் ஓடுது என்று பார்த்து விட்டு ஸ்ரான்லி றோட்டால் நியூ விக்டேர்ஸ் இருந்த பக்கம் போய் பின்னர் வெட்டிக் கொண்டு வந்து வெலிங்டன் தியேட்டர் இருந்த காணியையும் ஏறிட்டுப் பார்த்து விட்டு ஈபிடிபி கட்சியால் சுற்றி வளைக்கப்பட்டு கைதியாய் நிற்கும் உடைந்த ஶ்ரீதர் தியேட்டரையும் ஊமையாகப் பார்த்து, றயில்வே கடவைக்கு அப்பால் இருந்த விக்னா டியூட்டரி பக்கம் பார்த்து விட்டு ஆரிய குளச் சந்தியால் நல்லூரை நோக்கிச் சைக்கிள் போகும். இதுதான் என் ஒவ்வொரு யாழ்ப்பாணப் பயணத்தில் தவறாது நிகழ்ச்சி நிரலில் இருக்கும் விடயம்.

யாழ்ப்பாணத்தில் எண்பதுகள் காலகட்டத்தில் தமது இளமையைக் கழித்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். முந்திய பந்திகளில் நான் தரிசித்த இடங்கள் உயிர்பெற்று விளங்கிய காலங்கள் அவை. 
எண்பதுகளின் இறுதிக் கால்பகுதியோடு வசந்தங்கள் எல்லாம் தேய்ந்து போய்விட்டன.
எனது கொடுப்பினையோ என்னவோ, எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் அரைவாசியையும் யாழ் மண்ணில் கழித்ததால் இந்த அனுபவத்தை நினைவு தெரியாத சிறுவயதில் இருந்தே சுவைத்திருக்கிறேன். அதனால் தான் இருபது வருடங்களைத் தொடும் என் புலம்பெயர் வாழ்க்கையிலும் உதறித் தள்ள முடியாத பந்தம் இந்த இடங்களில் எல்லாம். இவையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்தோ அல்லது இருந்தாலும் பழைய நினைவுகளைத் தொலைத்த அம்னீசியா கண்ட நோயாளியாகவோ....

"தனிமை இருளில் உருகும் நெஞ்சம் துணையை விரும்புமே 
துணையை விரும்பி இணையும் பொழுது
அமைதி அரும்புமே"

"மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ இதுவோ அதுவோ இனிய ரகசியமோ"

"அந்தப் பாடல் பஞ்சு அருணாசலம் வரிகளில் பூந்தளிர் படத்துக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா குரல்களில் இளையராஜா இசையமைக்க ஒலித்தது, நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் வழங்கும் வர்த்தக சேவை" எங்கே ஒரு தேத்தண்ணிக் கடையில் இருந்து கிளம்பும் பாடல் அந்த எண்பதுகளில் ஒரு வசந்த காலத்துக் கீதமாக.
சைக்கிளில் பரரலாக போய்க் கொண்டு கதை பேசிக் கொண்டிருக்கும் காதலர்கள் போல.

"மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ இதுவோ அதுவோ இனிய ரகசியமோ"
இந்தப் பாடல் மட்டும் தான் இந்த இடங்களையெல்லாம் உயிர்த்தெழ வைத்து  மனதில் அசைபோட வைக்கிறது எங்கோ பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்.
 இன்று காலையில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  
 
என்னைப் போலவே இன்னொருத்தர் இந்த நேரம் யாழ்ப்பாணம் ரவுண் பக்கம் இந்த இடங்களில் அலைந்து கொண்டிருப்பார், தேடிக் கொண்டிருப்பார் அந்த வசந்த காலங்களை.
 
 http://soundcloud.com/kanapraba/manadhil-enna
 
 

 

2 comments:

Kasthuri Rengan said...

நல்லதோர் பதிவு.. பாடலை தொடர்ந்து கேட்கிறேன்...

Anonymous said...

இளமைக் கனவோ இதுவோ அதுவோ இனிய ரகசியமோ.....
என் முகம் தெரியாத எத்தனையோ (என்) காதலிகளை நீங்கள் சொன்ன அத்தனை பாதைகளிலும் தொலைத்திருப்பேன். வரிசையாக அந்த இடங்களை சொன்ன போது இதயம் ஒரு கணம் நின்று வலித்தது.
-கிருபா