Pages

Thursday, February 5, 2015

ஷமிதாப் பாடல்கள் - கொண்டாடித் தீரா இசை வெள்ளம்

ஷமிதாப் (Shamitabh) பாடல்கள்
கொண்டாடித் தீரா இசை வெள்ளம்

சிட்னியில் வாரத்துக்கு இரண்டு ஹிந்திப் படங்களாவது தியேட்டரில் வந்து விடும் என்றாலும் ஒரு சில படங்களை மட்டுமே பார்ப்பதற்காக தியேட்டர் வாசலை மிதித்திருக்கிறேன். 
ஆனால் இளையராஜாவின் இசையை அகன்ற திரையரங்கில் காட்சிவடிவத்தோடு பார்த்தும், கேட்டும் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டுப் பார்த்த ஹிந்திப் படங்கள் 
சீனி கம் (2007)

http://www.radiospathy.com/2007/05/cheeni-kum.html

பா (2009)

http://www.radiospathy.com/2009/12/paa.html

இப்போது ஷமிதாப் படமும் சேர்ந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை தான் படம் வரும் என்றார்கள் ஆனால் தியேட்டரின் வலைபக்க வாசலிலேயே காத்துக் கிடந்த எனக்கு வியாழனே சிறப்புக் காட்சி இருப்பதாகக் காண்பித்தது. இன்றிரவு படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டினால் சிறப்புப் பதிவு வரும்.

ஷமிதாப் பாடல்கள் iTunes இல் வெளியாகியிருந்தாலும் இசைத்தட்டில் வாங்கிக் கேட்டு இன்புறுவோம் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தது தான் மிச்சம். படம் வருவதற்கு ஒரு வார இடைவெளி தான் இருந்தது. இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாது iTunes வழியாகவே தரவிறக்கிக் கேட்க ஆரம்பித்தேன்.

ஒவ்வொன்றாகப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்த போதும் புதுமை புதுமை புதுமை 
என்று காட்டிக் கொண்டே போனது ஆறு பாடல்களின் இசைக் கோவையும்.

அன்னக்கிளி காலத்தில் இருந்து நான்கு தசாப்தங்களாக இளையராஜாவின் இசையைப் பிரித்துப் பார்த்தால் ஒவ்வொரு காலகட்டமும் புதுப் புது இசையமைப்பாளரை அவரிடமிருந்து காட்டுகின்றதே. ராஜாவின் 90 களிலும் 2000 களிலும் கொண்டாட மறந்த பாடல்களை இப்போது கேட்டால் காலம் தவறிக் கொண்டாடுது மனம்.
"ஷமிதாப்" பாடல்களைக் கேட்டால் 71 வயசுக்காரர் கொடுத்தது என்று நம்ப முடியவில்லை.

"சத்தியமா சொல்றேன் ஷமிதாப் பாடல்களை ஒவ்வொரு நாளும் கேட்க உடம்பெல்லாம் உருக் கொள்ளுது"
என்று ட்விட்டரில் பகிர்ந்திருந்தேன்.

ஷமிதாப் பாடல்களில் எது நன்றாக இருக்கிறது என்பது ஒவ்வொரு நாளும் கேட்கும் போதும் மாற்றம் கண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு "ஷா ஷா ஷா" என்றிருந்தது. அடுத்த நாளோ "ஸ்டீரியோஃபோனிக் சன்னாட்டா" என்று முன்னுக்குத் தள்ளுகிறது.
"ஸ்டீரியோஃபோனிக்" பாடல் வரிகள் தான் வணிக விளம்பரம் போல முரண்டு பிடிக்கின்றது. இந்தப் பாடலின் நதி மூலப் பாட்டு "ஆசையைக் காத்துல தூது விட்டு" சமீப ஆண்டுகளில் தெலுங்கில் "குண்டல்லோ கோதாரி" (தமிழில் மறந்தேன் மன்னித்தேன்) படத்திற்காக மீள் இசையாக வந்தது. இப்போது ஹிந்திக்குப் போயிருக்கிறது. ஹிந்தி வடிவத்தில் மெட்டு மட்டுமே அவ்வப்போது காட்டிக் கொடுக்கிறது. ஆனால் பாட்டு வடிவமே முழுமையான பிரிட்டிஷ் மகாராணி விருந்து. ஆயிரம் படங்களின் பாடல்களையும் திரும்ப இசையமைக்கக் கொடுத்தால் இன்னும் ஆயிரம் இசைத் தொகுப்புகளைப் புது வடிவில் கொடுக்க நம்ம ஆளால் முடியும். ராஜாவின் இசையை சீரழிக்கும் ரீமிக்ஸ் வெறியர்களுக்குப் பாடமெடுக்கும்.

"லைப்ஃபோய்" பாடலின் இடையிசை கலக்கல் துள்ளிசை.

"ப்ரியா" படத்தின் பாடல்களை வாக்மேனில் கேட்ட போது ஒரு காதில் ஒரு 
வித இசை இன்னொரு காதில் இந்தா இன்னொரு இசை என்று ஸ்டீரியோவைக் காட்டிய சுகத்தை "தப்பட்" பாடல் இப்போது கொடுக்கின்றது. எழுதிக் கொண்டிருக்கும் போது "தப்பட்" பாடல் தான் முன்னுக்கு நிற்கிறது.

"பா" படத்தைத் தொடந்து இந்தப் படத்திலும் "பிட்லி" பாடல் மூலம் அமிதாப் குரல் கொடுத்திருக்கிறார். இப்போதைக்கு இசையை மட்டும் அனுபவிக்கிறேன். காட்சி வடிவத்தோடு காணும் போது இன்னும் நெருக்கமாகும் போல.
சில்சிலா படத்தில் அமிதாப் பாடிய இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று http://youtu.be/Jf92MOkrbEw

இந்த இசைத் தொகுப்பில் பாடகர்களின் தேர்வு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அளவு சிறப்பு வாய்ந்தது.

ஆயிரம் படங்களைத் தொட்ட இளையராஜாவுக்கு "ஷமிதாப்" மேற்கத்தேய இசைக்கும், "தாரை தப்பட்டை" நமது கிராமிய இசைக்குமாக இரு வேறுபட்ட இசைப் படையல்களைக் கொடுக்கும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறது.
 "ஷமிதாப்" இல் சாதித்து விட்டார்.
"தாரை தப்பட்டை" தரும் அடுத்த கொண்டாட்டத்துக்குக் காத்திருப்போம்.

4 comments:

Unknown said...

தப்பட் தான் என் தேர்வும். அந்த அலட்டல், துள்ளல்.. நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நான் ராஜா எனும் வரிகளை நிதமும் உண்மையாக்கி ஓடிக்கொண்டே இருக்கிறது. :))

செங்கதிரோன் said...

Ilayaraja s great

சிவா said...

இந்த ஒரு வாரமும் ஷமிதாப் தான். நீங்கள் கூறிய படி ஒவ்வொரு முறையும் கேட்கும் போது ஒவ்வொரு பாடலில் மனது சிக்கிக் கொள்கிறது. இப்போதைக்கு எல்லாமே ஓடிக் கொண்டே இருக்கிறது. ஷா ஷா மீ யில் வரும் ஒரு prelude செம. Ishq E Fillum -இல் பாடல் முழுவதும் வரும் இணை இசை செம. Stereophonic Sannata - சுருதி வாய்ஸ் அல்டிமேட். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ் said...

இயக்குனர் பால்கி முயற்சியால் அமிதாப், ஸ்ரீராம், தனுஷ் ஒன்று சேர அந்தப் படத்திற்கு இசை இளையராஜா என்றதும் , ஹிந்தி கஜல்கள் பேய் முழி முழித்திருக்கும்.

அந்த அதிர்ச்சி கலந்த பயத்தை அப்படியே மெயிண்டன் செய்து, ஒரு உயர் தர இசையை ( சுந்தரி கண்னால் ஒரு சேதி ....போல) இறைத்து விட்டு வருவார் நம்ம வீட்டு ராஜா என நாம் எதிர்பார்த்திருந்த்தால், நம்மை முழிக்க செய்துவிட்டார். பாடல்கள் எல்லாமே சராசரி ரகம்.

"ஷஷஷ ,மிமிமி ,த்ததா" அப்புறம் "இஷ்க் அ பில்லும்" ஆகிய இரண்டு பாடலும் மோசமில்லை. மற்றது 'எல்லாம் எல்லாமே என் காதலி' யில் டி. ராஜேந்தர் போட்ட பாட்டு மாதிரி அத்தனை இரைச்சல்.

போதாதற்கு நாமெல்லாம் கேட்டு கேட்டு சொக்கிப் போன " ஆசையை காத்துல தூது விட்டு" பாடலை " ஸ்டீரியோஃபோனிக் சன்னாட்டா" என்று ரீ- மிக்ஸ் செய்து , ஒரிஜினல் மீது நமக்கிருந்த காதலை உதறச் செய்து விட்டார் ராஜா.


'ரீ.ரிக்கார்டிங்க்கில் ராஜா அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார்' என் சொல்லி வைத்தாற் போல அனைவரும் மெய் மறந்து கூறுகிறார்கள். இந்திய திரையுலகத்திற்கு ரீ- ரிக்கார்டிங்கின் இலக்கணம் அமைத்துத் தந்தவரே நம்ம மகா'ராஜா' தானே என்பதால், எனக்கு அது அத்தனை சுவாரசியமாகப் படவில்லை. அதாவது விராத் கோலி இலங்கைக்கு எதிராக செஞ்சுரி அடித்தார் என்பது போல அது ஒரு சாதராண செய்தி.


ரோஜா, ஜெண்டில் மேன் ,திருடா , திருடா, கிழக்கு சீமையிலே என்று வரிசையாக எல்லோரும் ரஹ்மான் , ரஹ்மான் எனக் கூவிக்கொண்டிருந்த 1994 கால கட்டத்தில் பஞ்சு அருணாசலமும் , ரஜினியும் மட்டும் இளையராஜாதான் இந்த படத்திற்கு வேண்டும் என முடிவு செய்தார்கள்
அதனால், ராஜாவின் புதிய இசை பரிமாணத்தில் வீரா நமக்கு கிடைத்தது. கொஞ்சி,கொஞ்சி, முந்தி முந்தி வினாயகரே, மலைக்கோயில் வாசலில், மாடத்திலே போன்ற எவர் கிரீன் பாடல்கள் , டைம்லி ஹிட்டான ஒட்டகத்தை கட்டிக்கோ , வீரபாண்டி கோட்டையிலே, ஆத்தங்க்கரை மரமே போன்ற பாடல்களை ஓரம் கட்டின.

சார்ஜா வில் இந்தியா தோற்றிருந்த நேரம் அது. " சார்ஜா கோப்பை கிடைக்க வில்லை என வருத்தப்படும் நெஞ்சங்களுக்கு ஆறுதல் சொல்கிறது கொஞ்சி, கொஞ்சி பாடலின் பி.ஜி.எம் " என விமர்சனம் எழுதியது குமுதம்.

இப்பவும் , மயில் போல பொண்ணு ஒன்னு , மணியே மணிக்குயிலே, தென்றல் வந்து தீண்டும் போது பாடல்களை மீறி எந்த இசைப் பிதாமகன்களும் ஸ்வரக்கோர்வையை உருவாக்கியததே இல்லை.

ரகுமானின் 3 ஆண்டு கால பரபரப்பை , ஒரு மாலை நேரத்தில் வெறும் 3 மணி நேரத்தில் தனது கட்டை ஆர்மோனியத்தால் தவிடு பொடி ஆக்கிய அந்த இசைத்திருமகனின் முத்திரை ஷமிதாப்பில் இல்லையே என்பது தான் எனது வருத்தம் கல்ந்த கோபம்.

இப்போ இருக்கும் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் ? நம்ப பாரம்பரிய இசையை இப்போ கொண்டு வரலாமா? இப்போ டிரண்ட் என்ன? வெஸ்டர்ன் சாயலில் கலந்து கொடுக்கலமா? போன்ற குழப்பங்கள் தான் ஷமிதாப்பின் சுமார் ரக பாடல்களுக்கு காரணமாக இருக்க முடியும்.
மொழி தாண்டிய ரசனைக்குரிய இசைக்கலவையை கொடுக்கவல்ல ராஜாவிடம் பால்கி தனது தேவையை சரியாக வரையறுக்க வில்லை என்பது இதிலிருந்து பூரணமாக தெரிகிறது. அதாவது மும்பையில் உள்ள ஒரு அம்மியைக் கொத்துவதற்கா , நாங்கள் தலை மேல் வைத்துக் கொண்டாடும் சிற்பியை கொண்டு செல்ல வேண்டும்? அந்நிய மண்ணில் ஒற்றை இலக்க ரன்கள் எடுக்கும் தோனி போல ஏன் இந்த மெத்தன இசை?

ஷமிதாப்பில் ஒரு பிரம்மிக்கத்தக்க இசையை எதிர்பார்த்திருந்த எனது நெஞ்சத்து செவிகள் அடைந்த ஏமாற்றத்திற்கு பதிலாக , உதடுகள் ஷஷஷ , மிமிமி ,த்ததா என்று பாடி திருப்தி பட்டுக் கொள்கின்றன. கஷ்டமாக இருக்கிறது .உதடுகளுக்கு மட்டுமில்ல, நெஞ்சத்திற்கும்..

எங்களை ஏமாற்றாதீர்கள் இளையராஜா! அது காதல் தோல்வியை விட கடினமாக இருக்கிறது.

- பார்த்தசாரதி சுப்ரமண்யம்