எண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் பயணித்துக் கொண்டிருந்த வேளை ஆபாவாணன் என்கிற திரைப்படக் கல்லூரி மாணவர் ஊமை விழிகள் என்கிற ஒரு பிரமாண்டமான படைப்பை முற்றுமுழுதான மாறுபட்ட திரைக்கதையம்சம் கொண்ட பாணியிலே தமிழ் சினிமாவுக்கு ஒரு புது அம்சமாக பாய்ச்சுகின்றார். இந்த பன்முகக் கலைஞர் ஆபாவாணன் திரைத்துறைக்கு வந்து 25 வருடங்களை கடந்த 2011 ஆம் ஆண்டில் எட்டிய வேளை எமது ஆஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சார்பிலே சந்திக்கவிரும்பினேன். முதல் என்னை அறிமுகப்படுத்திப் பேட்டி செய்யலாமா என்று கேட்டபோது 20 நிமிடங்கள் தான் பேசுவதாகத் திட்டம், ஆனால் நமது உரையாடல் சுவாரஸ்யமாகப் பயணிக்கவே, 25 வருஷங்களுக்கு முந்திய அதே இளமைக் களையோடு தொடர்ந்து மகிழ்ச்சியோடு பேசினார், ஒரு மணி நேரம் கடந்தது அந்தப் பேட்டி. பேட்டி முடிவில் அவர் பகிர்ந்த நன்றியின் பின்னால் தன்னுடைய சாதனைகளை இன்னும் நினைவுறுத்தி ஒரு பேட்டி அமைந்ததே என்ற மகிழ்வு இருந்ததை உணர்ந்தேன்.
இந்தப் பேட்டியை இரண்டு பாகங்களாகப் பிரித்து ஒலி வடிவிலும் எழுத்து வடிவிலும் தரவிருக்கின்றேன்
இதோ அந்தப் பேட்டி ஒலி வடிவில் கேட்க
Download பண்ணிக் கேட்க
எழுத்து வடிவில் தொடர்ந்து இந்தப் பேட்டியைத் தருகின்றேன்
கேள்வி- 80களிலே அதாவது 1986ல் ஊமைவிழிகள்; என்ற திரைப்படத்தோடு உங்களுடைய திரைப்பயணம் ஆரம்பிக்கின்றது. இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் உங்களுடைய திரையுலக வாழ்வு அமைந்திருக்கிறது அப்படித் தானே?
(ஆமாம் என்கிறார்);
இந்த ஊமைவிழிகள் என்ற திரைப்படத்திலே உங்களுடைய ஆரம்பம் வருவதற்கு முன்னர் சினிமா மீதான காதல். அதன் வழியாக இந்த சினிமா குறித்து உங்களுடைய தேடல் எப்படி அமைந்ததென்று சொல்லுங்களேன்?
பதில்- சினிமாவிற்கு அறிமுகம் என்று சொல்லிச் சொன்னால் பள்ளிப் பருவத்திலிருந்து சொல்லாம். பள்ளிப் பருவத்தில சிவாஜியினுடைய படங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. என்னுடைய சினிமா ஆர்வத்திற்கு தூண்டுகோலாக இருந்த வி ஷயம். ஊரில அப்பா அம்மா எல்லோரும் சிவாஜி படம்னா விரும்பிப் பார்த்திட்டு இருப்பாங்க. அதால அவங்கட பிள்ளையான எனக்கும் அவங்ககூட படத்திற்கு போறது அதப்பத்தி பேசுறது என்று வந்ததால அது மேல ஒரு ஈர்ப்பு. வேற ஒரு கட்டத்திற்கப்புறம் சிவாஜி மேல அவர் நடிப்பு மேல அபரிதமான பற்றுதல். சிவாஜி படங்கள்னா வெறித்தனமான ஒரு காதல். இப்படியே அது வந்து கொஞ்சம் கொஞ்மாக வளர்ந்திட்டு போய்ட்டே இருந்திச்சு. பள்ளிப் பருவத்தில ஏற்பட்ட அந்த ஈர்ப்பு தான் சினிமா மேல ஒரு ஆர்வத்தையும் வேகத்தையும் ஏற்படுத்தின ஒரு வி ஷயம். அதனுடைய ஒரு விளைவு என்னன்னா பள்ளிப் பருவத்துல தெரிஞ்சதெல்லாம் நடிப்பு. நடிகர்கள் மாத்திரம் தான் நம்முடைய கண்ணு முன்னாடி தெரிவார்கள். சினிமாவுன்னா வந்து நடிகர்கள் தான் அப்படிங்கிற தோற்றத்தில .இருந்த காலகட்டத்துல நம்ம வந்து நடிக்கப் போகனும் அப்படிங்கிற ஒரு ஆர்வத்தை ஆறாம் வகுப்பு காலகட்டத்துல இருந்து எனக்குள்ள ஒரு வேகம் வளர்ந்திட்டே இருந்திச்சு. பள்ளிக்கூடத்துல நாடகங்கள் நடிக்கிறது இசையில் ஈடுபாடு கொள்றது. அந்த மாதிரி பள்ளிப்பருவத்துல சினிமா சம்பந்தப்பட்ட எல்லாத்திலும் தயாராக ஆரம்பிச்சேன்.
ரெண்டாவது பிற்காலத்துல தான் சினிமா வந்து அதனுடைய உண்மையான தலைமை தளபதி யார்னா இயக்குநர் தான் அப்படிங்கிறது புரிஞ்சது இந்த கட்டத்தில தான். அது பின்னாடி ஏற்பட்ட ஒரு மாற்றம், அந்த பள்ளிப்பருவத்தில என்னோட கவனம் முழுக்க சினிமாவுல நடிக்கணும் என்ற விதத்தில் தான் போய்ட்டிருந்தது.
கேள்வி- அதன் பின்னதாக நீங்கள் திரைப்படக் கல்லூரியிலே ஒரு மாணவராக இணைந்து அந்தப் படிப்பையும் பயின்று கொண்டீர்கள். முக்கியமாக எந்த துறையை தேர்ந்தெடுத்து நீங்கள் படித்திருந்தீர்கள்?
பதில்- ஆம். சினிமாவுல நுழையணும்னா சென்னைக்குப் போகணும். சென்னைக்குப் போகணும்னா என்ன பண்ணலாம்; பட்டப்படிப்பை சென்னையில வைச்சுக்கிட்டா நமக்கு வசதியாயிருக்கும். அதால நம்ம அடுத்த தேடலுக்கு வசதிப்படும்னு சொல்லிட்டு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில வந்து ஆங்கில இலக்கியம் படித்தேன். காரணம் என்னன்னா படிச்சது முழுக்க தமிழ் மீடியம்;. ஆங்கில அறிவையும் வளர்த்துக்கிட்ட மாதிரியும் இருக்கும். அத மாதிரி சினிமாவுக்கான தேடலையும் வளர்க்க அது வசதியா இருக்கும்னு சொல்லிட்டு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில பட்டப்படிப்பிற்கு சேர்ந்திட்டு அதுக்குப் பிறகு நிறைய தேடல்களை ஆரம்பிச்சேன். சரி என்ன பண்ணலாம். யார்கிட்ட போய் சேரலாம். எப்பிடி சினிமா எழுதலாம். அப்பிடிங்கிற இதில இருந்தப்போ அப்ப திரைப்படக் கல்லூரியைப் பற்றி கேள்விப்பட்டேன். எப்பிடி கேள்விப்பட்டேன்னா "அவள் அப்படித்தான்" என்கிற படம். டைரக்டர் ருத்ரையா டைரக்ட் பண்ணின படம். ரஜனி கமல் ரெண்டு பேரும் தான் அதில நடிச்சிருப்பாங்க. அந்தப் படத்தை பர்த்தப்போ அந்தப் படத்திற்கான விமர்சனங்கள் திரைப்படக் கல்லூரி மாணவர் வந்து அவர் தயாரித்து இயக்கிய படம். அது நல்லா திரைப்படக் கல்லூரியில இருக்கு.
அதுல இத மாதிரி கற்றுக் கொள்ள முடியும்ன்னு தெரிஞ்சவுடன் திரைப்படக் கல்லூரிக்கு அங்க இருந்து சென்னை கிறிஸ்துவக் கல்லூரிக்கு அப்ப மன்றத்துக்கு தலைவராயிருந்தேன். அவங்க சார்பில வந்து அங்க புரோகிராம் எல்லாம் நடத்தலாம் என்று அவங்கள மீட் பண்ணினேன். அப்பத் தான் தெரிய வந்தது. பள்ளிக்கூட நண்பர் நாகராஜன்னு சொல்லிட்டு எடிட்டிங். படத்துறை பிரிவில படிச்சிட்டு இருந்தான். பார்த்தானா ஆஹா! உனக்கு ஏற்ற துறை இது. பள்ளிக்கூடங்கள்ல பார்த்திருக்கிறான். நான் நல்ல நாடகங்கள்ல ஈடுபாடா இருக்கிறவன். இலக்கிய ஆர்வம். நாடகம் மற்ற வருடாவருடம் நடக்கிற நிகழ்ச்சிகளை பார்த்து ஒரு ஈர்ப்பில இருந்தவன். உனக்கு வந்து இந்த திரைப்படக் கல்லூரி நல்லதாக இருக்கும். இயக்குநர் துறையில நீ படிச்சீன்னா உனக்கு நல்ல பெரியதாய் வாய்ப்பு இருக்கும் அப்பிடின்னு சொன்னவுடன் அவன் மூலமா தான் கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன். அதுக்கப்புறம் தான் முடிவு பண்ணினேன். ஓகே. பட்டப்படிப்பை முடிச்சிட்டு திரைப்படக் கல்லூரியில சேருவோம்னு சொல்லி.
அதே காலகட்டத்தில வந்து 80களில் அதன் உண்மையான பாதை என்று பார்த்தால் இயல்பு வாழ்க்கை இயல்பான படங்கள் அப்படிங்கிற மாதிரி தான் முதல் ஈர்ப்பு இருந்தது. ஒரு கிராமிய வாழ்வை பிரதிபலிக்கக் கூடிய படங்களை பண்ணணும். நான் ஒரு கிராமத்தில இருந்து வந்ததால தானா தான் விருப்பம் இருந்திச்சு. அந்த ஒரு நோக்கத்தில தான் மனசுக்குள்ள அந்த மாதிரி தான் ஒரு வேகம் இருந்திச்சு. அப்ப அந்த காலகட்டத்துல தான் பட்டப்படிப்பு படிச்ச காலகட்டத்துல தான் பதினாறு வயசினிலே திரைப்படத்தை பார்த்தேன். பார்த்தவுடன் ஒரு வாரம் நான் தூங்கலை. ஏன்னா எப்படி ஒரு கிராமிய வாழ்க்கையை கிராமிய இயல்பை வைச்சு நாம சினிமாவுக்குள்ள நுழையலாம்னு கனவு கண்டிருந்தமோ அதைவிட பல மடங்கு சிறப்பாகவும் பிரமாதமாகவும் பதினாறு வயசினிலே திரைப்படத்தை எடுத்திருக்காங்க. நம்ம போய் எப்பிடி சினிமாவுல என்ன பண்ண முடியும். என்ன பண்ணப் போறோம். அது எனக்குள்ளேயே ஒரு பயம். ஒரு தடுமாற்றம். எல்லாம் ஏற்பட்டிச்சு.
அந்த எண்ணுதலோட தான் திரைப்படக் கல்லூரியில சேர்ந்தேன். சேர்ந்ததற்கப்புறம் தான் நாம கிணற்றுத்தவளையா இருந்திருக்கோம். இது வந்து எல்லையில்லாதது. சினிமாங்குறது எல்லையில்லாதது. பல வித கோணங்கள் இருக்குதில்ல எந்தக் கோணத்தை வேணுமினாலும் வந்து தேர்ந்தெடுத்துக்க முடியும். அப்பிடிங்கிற ஒரு அறிவு அங்க கிடைச்சது. அதற்கப்புறம் தான் ஓகே. நாம எந்த கோணத்தில நுழைஞசா நாம கவனிக்கப்படுவோம். கவனிக்கப்பட்டதிற்கு பின்னாடி நம் எதிர்கால திட்டங்கள் என்ன அப்பின்னு எனக்கு நானே ஒரு வரைமுறைகளை ஏற்படுத்திக்கிட்டு வேர்க் பண்ண ஆரம்பிச்சேன். அதனுடைய ரிசல்ட்டு தான் நீங்க பார்த்த ஊமைவிழிகள் திரைப்படம்.அந்த திரைப்படக் கல்லூரியில கதை திரைக்கதை இயக்குநர் பிலிம் டைரக்க்ஷன் அதில மூன்றாண்டு காலம் படிச்சிட்டு அதுக்கப்புறம் படம் எடுத்தேன்.
கேள்வி- அதாவது இந்தப் படத்தை பற்றி சொல்லும் போது ஊமைவிழிகள் என்ற படம் வந்த காலகட்த்தில இந்தப் படத்தினுடைய பிரம்மாண்டம். அந்த கதை சொன்ன உத்தி. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது அந்தக் காலத்திலே ஒரு தயாரிப்பாளராகத் தான் அந்தப் படத்ழத நீங்கள் முன்னெடுத்திருக்கிறீர்கள். அதாவது பல திரைப்படங்களிலே நீங்கள் உங்களுடைய அடிப்படையிலே திரைக்கதை ஆசிரியராக இயக்குநராக இருந்தாலும் ஒரு உதவி ஆசிரியராக அல்லாத இணை என்ற பாணியிலே முழுமையான எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு அவற்றிலே முழுமையான பங்களிப்பாக உங்களுடைய பங்களிப்பு இருந்திருக்கிறது. நேரடியாக இயக்குநர் என்ற துறையிலே நீங்கள் அப்படியே கால் வைக்கவில்லை. அதற்கு ஏதும் அடிப்படை காரணம் இருக்கிறதா?
பதில்- ஆம். நிச்சயமாக. திரைப்படக் கல்லூரியைமுடிச்சவுடன் திரைப்படக் கல்லூரியில படிக்கும் காலகட்டத்திலேயே வந்து ஒரு முக்கியமாக முடிவெடுக்கிறதுக்கு சில நிகழ்ச்சிகள் காரணமாக இருந்திச்சு. அந்த திரைப்படக் கல்லூரி ஆண்டு விழாவில பிரபலமான இயக்குநர் ஒருத்தர் வந்தாரு. அந்த ஆண்டுவிழாவில அவர் பேசறப்போ திரைப்படக்கல்லூரி என்கிறது வந்து டோட்டலா வேஸ்டு. இந்த கல்லூரியில படிச்சிட்டு வந்து நீங்க என்ன பண்ணப் போறீங்க? அதுக்கப்புறம் வந்து திரும்ப எங்கள மாதிரி இயக்குநர்களிடம் உதவியாளராய் சேர்ந்து தொழிலைப் படிச்சிட்டு அதுக்கப்புறம் தான் படம் எடுக்க முடியும். இடையில் திரைப்படக் கல்லூரியில இந்த படிப்பறிவையும் அனுபவத்தையும் வைச்சுக்கிட்டு உங்களால படங்கள் எடுக்க முடியாது. ஏன் வந்து உங்க வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிக்கிறீங்க. அப்பிடி சொன்னவுடன எனக்கு பெரிய அதிர்ச்சியாய் இருந்திச்சு. என்னடா அப்பிடி ஒரு எண்ணத்தோட பேசறாரு. அதுவும் திரைப்படக் கல்லூரியின் ஆண்டு விழாவுக்கு வந்திட்டு அங்க வைச்சு மாதிரி சொன்னவுடன் என்னால ஜீரணிக்கவே முடியலை. என்ன இப்பிடி ஒரு கற்றுக்குட்டியாக இருக்காரு. என்ன இப்படி பேசறாரு. மிகப் பெரிய இயக்குநர். பெரிய சாதனைகளை பண்ணிட்டு இருக்கிற பெரிய டைரக்டர். இப்படி ஒரு எண்ணத்தை அவர் வளர்த்திட்டு இருக்காரே என்று நினைச்சவுடனே அதுக்கப்புறம் தான் ஓகே. இதுக்கு முன்னாடி திரைப்படக் கல்லூரிக்கு வந்த யாருமே படங்கள் கொடுத்திருக்காங்க. நான் முதலே சொன்ன மாதிரி அவள் அப்படித் தான் என்கிறது மிகச் சிறந்த படம். ஆனா என்னன்னா வணிகரீதியா வெற்றியடையணும். கமர்ஷியல் சக்சஸ் அப்பிடின்னு வந்தா தான் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் எதற்குமே என்றதை புரிஞ்சுகிட்டேன்.
அப்ப வந்து நல்ல கமர்ஷியல் சக்ஸசை கொடுக்கனும்னா தான் நம்ம யாரு என்றதை தெரிஞ்சுக்குவாங்க. அதனால வெறும் திரைப்படக் கல்லூரியில படிச்ச அனுபவமுள்ளவர்களை வைச்சுக்கிட்டு படங்களை நம்ம எடுக்கனும். நம்ம வகுப்பு தோழர்கள் நம்ம கூடப் படிக்கிறவங்க நமக்கு கீழ படிச்சிட்டு இருக்கிறவங்க இந்த மாதிரி ஒரு டீமை செட் பண்ணுவம். நம்மளே அத தயாரிப்போம். நம்மளே அத முழுமையா எடுப்போம். முழுக்க முழுக்க திரைப்படக் கல்லூரியில படிச்ச அந்த அனுபவத்தை வைச்சு ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தோம் என்கிற பெருமையை நெறிப்படுத்தணும் அப்பிடிங்கிற ஒரு வேகத்தை உண்டுபண்ணினது அந்த நிகழ்ச்சி. அதனுடைய விளைவு தான் நான் அங்க திரைப்படக் கல்லூரியில படிக்கிறப்போ ஊமைவிழிகள் திரைப்படத்தை எடுத்தம். அங்க டிப்ளோமாவுக்கு பிலிம் ஒன்று எடுக்கணும். எங்க பைனல் இயர்ல மூன்றாவது வருடத்துல கடைசியாக நாங்க படிச்சிட்டு அதை எடுத்துக் காட்டணும். அதில வந்து இந்த ஊமைவிழிகள் ஷா ர்ட் சீனை தான் டிப்ளோமாவிற்காக நான் எடுத்தன். அது வந்து 1600 லென்த் இருக்கும். அந்தப் படத்தினுடைய நீளம் அது. அது எடுக்கப்பட்டு இன்னைக்கு வரைக்கும் திரைப்படக் கல்லூரியில அதை ஒரு பொக்கிஷமாக வைச்சிட்டு இருக்காங்க. கல்லூரியில யார் வந்தாலும் சாம்பிளா கல்லூரி மாணவர்கள் படிக்கிறப்போ எடுத்தது என்று போட்டுக் காட்டுறதில முன்னணியில இருக்கிற படம் அது. அதுக்கப்புறம் முழுமையாக நாம தயார் பண்ணிக்கணும். ஏன்னா நாளைக்கு கதை திரைக்கதை வசனகர்த்தாவாகவோ ஒரு இயக்குநராகவோ ஒரு தயாரிப்பாளராகவோ இருக்கிறப்போ அது முழுமையாக வெற்றியடையனுங்கிறதில முழுமையாக நான் தயார் பண்ணிக்கிட்டேன். தயார் பண்ணிட்டு என்னோட வகுப்பு தோழர்கள் கூடப் படிச்சவங்க ஜீனியர்ஸ் எல்லாரையும் ஒரு டீம் ஆக்கி அந்த ஊமைவிழிகள் படத்தை அதுக்கப்புறம் நாங்க ஆரம்பிச்சோம்.
கேள்வி- அந்தக் காலகட்டத்திலே தமிழ் சினிமாவின் ஒரு பெரும் நட்சத்திரமாக இருந்தவர் விஜயகாந்த். புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள். அவருக்கு இப்படியான ஒரு இளைஞர் பட்டாளம். அதாவது அதுவரை இப்படியான ஒரு வர்த்தக சினிமாவை சாதித்துக் காட்டாத திரைப்படக் கல்லூரி சமூகம் ஒன்று இப்படியான ஒரு கதையோடு வந்திருக்கிறது. அந்தக் கதையை நம்பிக் கொண்டு எவ்வளவு தூரம் எங்களுக்கு நம்பிக்கையை ஊட்டியிருந்தார்?
பதில்- அது சரியாகச் சொல்லனும்னா 2 விடயங்கள் தான் அந்தப் படத்தில அவங்க ஈடுபாடு காட்டறதுக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஒன்னு என்னன்னா நான் சொன்னேனே திரைப்படக் கல்லூரியில டிப்ளோமா எடுத்த அந்த படம். அந்த படத்தை வந்து நான் ஸ்கிரின்ல காண்பிச்சேன். விஜயகாந்த் நண்பன் இப்ராஹிம் ராவுத்தருக்கு போட்டுக் காண்பிச்சேன். அடுத்து அத காட்டுறதுக்கு முன்னாடி ஏற்கனவே பாடல்கள் அத்தனையும் பதிவு பண்ணி வைச்சிருந்தேன். 7 பாடல்கள். அத்தனையையும் போட்டுக் காண்பிச்சேன். பார்த்த அந்த டிப்ளோமா பிலிமும் இந்தப் பாடல்களும் குறிப்பாக ராவுத்தர் அந்தக் காலத்தில சொன்னது. 'நிலை மாறும் உலகில் நிலைக்கும் கனவு' என்ற பாடல் இருக்கும். அதில வந்து சரணத்தில வரிகள் வரும். 'தினந்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு கனவான நிலையில் புது வாழ்வுக்கு இங்கே நினைவு' அப்பிடிங்கிற அந்த பாடல் இருக்கும். நாங்கள்லாம் போராடிட்டு இருந்த காலகட்டத்தில எங்களுடைய போராட்டத்தை அப்பிடியே நினைவுபடுத்துது. அதில வந்து ஒரு உண்மை இருக்கு அந்த வார்த்தைகளை கேட்டவுடன வந்து எனக்கு அப்பிடியே உலுக்கிடுச்சு. அந்த வார்த்தைகள் தான். எங்களோட படம் பண்ணனுங்கிற எண்ணத்தையே உருவாக்கிடுச்சு.
அதுக்கப்புறம் டிப்ளோமா பிலிம் பார்த்தேன். ஏதோ வித்தியாசமா பண்ணுவீங்கன்னு ஒரு எண்ணத்தை அந்த சின்னப் படம் உருவாக்கிச்சுது அப்பிடின்னார். முழுக்க முழுக்க சொல்லனும்னா இப்ராஹிம் ராவுத்தர் சார் தான் மிகப் பெரிய ஈடுபாடு காண்பிச்சாரு. விஜயகாந்த்தைப் பொறுத்தவரைக்கும் அவருக்கு இதைப் கற்றியோ பாதிப்பைப் பற்றியோ எந்த ஒன்றும் தெரியாமல் இருந்திச்சு. அதுக்கப்புறம் இப்ராஹிம் ராவுத்தர் தான் இந்தப் படத்தை செய்யணும் என்று அவரை சம்மதிக்க வைச்சு பண்ணச் சொல்லியிருக்காரு.
விஜயகாந்த் சார் படப்பிடிப்புக்கு வரும் போது சொல்லுவாரு. சார் அது என்னன்னு தெரியல. ராவுத்தருக்கு உங்களை ரொம்ப பிடிச்சுப் போயிட்டு என்பாரு. கரெக்டா சொல்லனும்னா படம் ஆரம்பிச்சதில இருந்து முடிவு வரைக்கும் நாங்க என்ன பண்ணிட்டு இருக்கோம். என்ன அதனுடைய ரிசல்ட்டு என்ன மாதிரி வரும்னு அவருக்கு தெரியல. படப்பிடிப்பின் போது சொல்வாரு. உதாரணத்துக்கு அந்த இன்ரறக்சன் சீன் எல்லாம் எடுத்தப்போ சொன்னாரு. வெறுமனே காலைக் காட்டறது கையைக் காட்டறது வழக்கமாக அறிமுகப்படுத்தறது தானே அப்பிடின்னு சொன்னப்போ நான் சொன்னேன். அதாவது கையைக் காலைக் காட்டறது ஷாட்ஸ்னு பார்த்தால் வழக்கமாக எடுக்கிற ஷாட்ஸ் தான். ஆனா ஒரு கதையில எந்தக் கட்டத்தில எந்த மாதிரி சூழ்நிலையில எந்த மாதிரி ஷாட்ஸ்ல அறிமுகம் கொடுக்கிறோம். அது எந்தளவிற்கு ஓப்னிங் ஆகுதோ அதுக்கு முன்னாடி பின்னாடி இருக்கிற சீக்குவன்ஸோட லிங் பண்ணி பார்த்தால் தெரியும். இப்பத் தெரியாது. படத்தைப் பாருங்க அதுக்குப் பிறகு தெரியும் எவ்வளவு பிரமாதமாக இருக்கப் போகுது
என்றது. சூட்டிங் ஸ்பொட்டிலேயே தெரியும். அத வந்து படம் ரிலீஸ் ஆனதுக்கப்புறம் தான் தெரிஞ்சுகிட்டாங்க. ஏன்னா அதுக்கு முன்னாடி வந்த படங்களை விட விஜயகாந்த்துடைய என்ட்ரிக்கு அதாவது படத்தில அவருடைய தலை தெரியும் பொழுது அரங்கம் முழுவதும் கைகட்டி விசிலடித்து ஒரு பெரிய வரவேற்பைக் கொடுத்த முதல் படம் ஊமைவிழிகள். அதை அவங்களும் சொல்வாங்க. நாங்களும் தெரிஞ்சுகிட்டோம்.
கேள்வி- அதில் இன்னுமொரு புதுமை என்னவென்றால் பொதுவாக நாயகன் முதல் சீனிலோ அல்லது அடுத்த சீனிலோ வருவார். ஆனால் விஜயகாந்த்திற்கு எந்தவிதமான பாடல்கள் எதனையும் கொடுக்காமல் அந்தப் படத்தினுடைய இடைவேளைக்கு சமீபமாகத் தான் அந்த என்ட்ரியும் இருக்கும் இல்லையா?
பதில்- ஆமாம். என்னன்னா குறிப்பாக நல்ல விசயம் என்டு சொல்றேன்னா பாடல்கள் எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு என்று பாராட்டுதல்கள் வந்துட்டு இருந்திச்சு. ஆனால் அவருக்கு முதலே சொல்லிட்டேன். உங்களுடைய கேரக்டருக்கு பாடல்கள் கிடையாது. உங்க கேரக்டர் பாட்டுப் பாடினால் நல்லாயிருக்காது அப்படின்னு முதலே சொல்லிட்டேன் நான். ஆனா படப்பிடிப்பு நடந்திட்டு இருந்த காலகட்டத்தில பாட்டுக்கள் மிகப் பெரிய ஹிட். எங்க பார்த்தாலும் பெரிய சக்சஸ். அப்பப்ப கேட்பார். சார் ஒரு பாட்டு நான் பாடலாமான்னு. இந்த பாட்டுப் பாடலாமா அந்த பாட்டுப் பாடலாமா ஏதாச்சும் சிச்சுவேஷன் பண்ணலாமா என்று கேட்டிட்டு இருந்தாரு. நான் சொன்னேன் இல்ல சார் உங்க கரெக்டர் பாடினால் நல்லாயிருக்காதுன்னு. அதை கேட்டிட்டு அமைதியாயிடுவார். அன்னைக்கு இருந்த காலகட்டத்தில நாங்கள்லாம் புதுசு. ஒரு தயாரிப்பாளராக ஒரு டைரக்டராக ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டராக எல்லாமே புதுசாயிருந்தோம். ஒரு வரிகளை வற்புறுத்தி இல்லையில்லை எனக்கு பாட்டு கொடுத்தாகனும் என்றிருந்தார்னா என்ன நடந்திருக்குமோ தெரியாது. ஆனால் எந்த ஒரு ஆளுமையும் காட்டாம எங்களுடைய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு ஒத்துழைப்பு கொடுத்தார். அன்றைக்கும் ஒரு விழாவில குறிப்பிட்டு சொன்னேன். எவ்வளவோ நடிகர்கள் இருக்கிறாங்க. ஆனால் வந்து இயக்குநர்களின் நடிகராக வெற்றி பெற்றவர் என்று குறிப்பிட்டாகணும் என்று அந்த மேடையில் சொன்னேன். எந்த தலையீடும் இருக்கலை.
அதை மாதிரி ஆக்க்ஷன் காட்சிகளுக்கு சூப்பர் சூப்பராயன் மாஸ்டரை கூப்பிட்டு சொன்னேன். சார் இந்த மாதிரி எனக்கு வந்து பறந்து பறந்து அடிக்கிற பம்மாத்து வேலையெல்லாம் கூடாது. உடைக்கிற வேலை இருக்கக் கூடாது. காய்கறி வண்டி உடைக்கிறது. கண்ணாடி உடைக்கிறது என்று இப்பிடியெல்லாம் சொல்லிட்டு வேணாம். எனக்கு சும்மா இருந்தால் போதும் என்றேன். இதுக்கு எதுக்கு சார் நாங்க சும்மா ஒரு அசிஸ்டெண்ட் வைத்து செய்திட்டு போகலாம் என்றார். இது வந்து இப்ப சொன்னா தெரியாது மாஸ்டர் இதை முடிச்சிட்டு முழுக்க படமாக பார்க்கேக்க தெரிஞ்சுக்குவீங்க என்று சொல்லிட்டிருந்தேன். அவரு அமைதியாக போய் விஜயகாந்த்ட்ட ஏத்தி விட்டு பேசிட்டு இருந்தாரு. கிண்டலடிச்சிட்டே இருப்பாங்க. காதுபடவே என்ன சொல்லுவாங்க. அப்ப வந்து டி.ராஜேந்தரின் பட சூட்டிங். கிட்டத்தட்ட 10, 15 நாள் பைட் எடுத்தாங்க. என் காதுபடவே என்னாமா எடுத்தம் பைட் என்று எரிச்சலை ஏற்படுத்தனும்னு பேசிட்டே இருப்பார். நான் எதுவுமே கண்டுக்க மாட்டேன். சிரிச்சுக்கிட்டே படம் எடுத்துக்கிட்டு இருப்பேன். கரெக்டா சொல்லப் போனால் ஓவர்லோயினுடைய அக்சன்பிளக் என்னான்னா 4 மணி நேரம் 5 மணி நேரம் இவ்வளவு தான் அந்த பைட் எடுத்ததே. முதலே முடிவு பண்ணிட்டம். இவ்ளோ தான் எடுக்கிறது எண்டு. இவர் போய் விஜயகாந்த்ட்ட ஏத்தி விட்டவுடன விஜயகாந்த் கூப்பிடுவார். சார் நீங்க படமெல்லாம் நீங்க எடுத்திடுங்க இந்த பைட் மாத்திரம் நானும் மாஸ்டரும் எடுத்துக் கொடுத்திடறோம், அப்போ நான் தனிய அவர கூட்டிட்டு போய் சொன்னன். இந்தப் படம் வந்து உங்க யுத்தி இல்ல. நான் அப்பிடித் தான் சொன்னன். அதாவது ராவுத்தர் சொன்னாரு இவங்க என்னவோ பண்ணுவாங்க அப்பிடிங்கிற நம்பிக்கையில பண்ணட்டிருக்கிறீங்க. அதால இந்தப் படத்தை நம்பி நீங்க இல்ல. அப்போ ஏழெட்டு படங்கள்ல கதாநாயகனாக அவர் நடிச்சிட்டிருந்த காலகட்டம் அது. அதால இந்தப் படம் பொறுத்தவரைக்கும் முழுசாக எங்கிட்ட விட்டிடுங்க. எந்த தலையீடும் வைச்சுக்காதீங்க. நான் வந்து டிபரெண்ட்டா பண்ணணும் என்று நினைக்கிறேன்.
உங்களுடைய வெற்றிக்கும் விருப்பத்திற்கும் சில படங்கள் இருக்கு. அது எந்த வகையிலும் தடையில்லாம போகப் போகுது. இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் முழுக்க என்னோட விருப்பத்திற்கு விட்டீங்கன்னா அதில வந்து நான் என்ன நினைக்கிறேனோ அதை செயற்படுத்த முடியும். இதில ஃபைட்டிலிருந்து எல்லாமே புதுசா பண்ணணும் எண்டு நினைக்கிறேன். அப்ப அவர் ஓகே ஓகே என்று இவ்ளோ தான் பேசினார். என்ன சொல்ல வாறேன்னா அந்தப் படம் முழுக்கவே அப்பப்ப வந்து தன்னோட ஆதங்கத்தை வெளிப்படுத்துவாரேயொழிய எந்த சூழ்நிலையிலும் ஆளுமை பண்ணலை. ஒரு இயக்குநராக ஒரு தயாரிப்பாளராக முழு சுதந்திரம் இருந்திச்சு. கேட்பாரு நான் அதற்கு விளக்கம் கொடுத்தவுடன அமைதியாயிடுவாரு. அந்தக் காலகட்டத்தில ஒரு நடிகர் வந்து ஒரு இயக்குநரின் ஒரு தயாரிப்பாளரின் பேச்சைக் கேட்டுபண்றது என்றது பெரிய விசயமாக இருந்தது. ஆனா அவர் அதை பண்ணினாரு. அதை இன்னைக்கும் நான் நினைச்சுப் பார்த்துக்குவன். அந்த அவர் கொடுத்த முழு ஒத்துழைப்புத் தான் முழு வெற்றிக்கும் காரணம் என்று நான் நினைக்கிறன்.
கேள்வி- ஊமை விழிகள் படத்திலே மற்றைய கலைஞர்களை எடுத்துக் கொண்டால் கூட கார்த்திக் உட்பட முன்னணி நட்சத்திரங்கள் எல்லாருமே இணைந்து அவர்களுக்கான அந்த காட்சிகள் கூட குறிப்பிட்டளவு காட்சிகள் தான் இருக்கும். ஆனால் படத்திலே அவர்கள் இணைந்து பணியாற்றியது கூட புதுமை இல்லையா?
பதில்- ஆமாம். நான் குறிப்பிட்ட மாதிரியே அந்த பைற்க்கு அவர் கூப்பிட்டுக் கூப்பிட்டு பேசினாருன்னு. அதற்கப்புறம் படம் ரிலீஸ்க்கப்புறம் சூப்பர் சூப்பராவில இருந்து போன் வந்திச்சு. ஏன்னா இந்துப் பத்திரிகைல ஆக்சன் சீனுக்கு மிகப் பெரிய பாராட்டு. அதப் பற்றி எழுதப்பட்டவுடனே அப்பத் தான் போன் பண்ணினாரு. சார் என்னை மன்னிச்சிடுங்க படப்பிடிப்பு நடந்த காலகட்டத்தில நான் உங்களை புரிஞ்சுக்கல. நான் அதில சொல்லப் போனால் எந்த வேலையும் பார்க்கலை. ரொம்ப சிம்பிளா பண்ணினேன். இதையே வேறு படங்களுக்கென்றால் 10 நாள் பதினைஞ்சு நாள் தலைகீழாக தொங்கி நின்று பல யுக்திகள் பண்ணியிருக்கோம். சார் நான் எந்தப் படத்திலையும் எடுக்காத பேரு வந்து இந்தப் படம் எடுத்துக் கொடுத்திச்சு. நீங்க என்ன பண்ணீங்க என்றது இப்பத் தான் படத்தைப் பார்த்தவுடன் தான் எனக்கு புரிஞ்சுது. அதால தப்பாய் எடுத்துக்காதீங்க என்டாரு. அதுக்கப்புறம் உழவன் மகன் படம் பண்ணறப்போ வந்திடுவாரு. வந்திட்டு சார் இதில நான் என்ன பண்ணணும் நாம என்ன பண்றோம் இதில என்டு ஒவ்வொன்றையும் கேட்டுக் கேட்டு நாம சொல்றதை வந்து சொல்றதை விட பல மடங்கு சிறப்பாக பண்ணிக் கொடுத்தாரு.
கேள்வி- இந்த ஊமைவிழிகள் படத்தை எடுத்துக் கொண்டால் நீங்கள் அதற்கான பாடல்களை ஏற்கனவே பதிவு செய்தனீர்கள் எனக் குறிப்பிட்டீர்கள். அதாவது மனோஜ் கியான் இரட்டையர்கள் அவர்கள் உங்களோடு அதிக படங்களிலே பணியாற்றியவர்கள். அப்படியானதொரு வட இந்திய இசையமைப்பாளர்களை தமிழ் சூழலுக்கு நீங்கள் பயன்படுத்தும் போது உங்களுக்கு நிச்சயமாக ஒரு சவாலாக இருந்திருக்கும் இல்லையா?
பதில்- சரியாக சொல்லனும்னா திரைப்படங்களுக்கு எப்போதுமே டியூன் போடறது முக்கியமான இசை சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுக்கிறதுன்னா நான் தான் எடுப்பேன். எனக்கு ஒரு நல்ல அசோஸியேட் தேவைப்பட்டிச்சு. அந்தக் காலகட்டத்தில தான் மனோஜ் கியானை நான் சந்திக்கிறேன். இரவுப் பாடகன் என்ற படத்தை நான் வந்து இயக்கி தயாரிச்சப்போ எல்.வைத்யநாதன் எங்கிற மியூசிக் டைரக்டர பிக்ட்ஸ் பண்ணிட்டு பம்பாய் போனோம். பம்பாய்ல தான் ரெக்காடிங் எல்லாம் வைச்சிட்டிருந்தோம். இந்த பம்பாய் ரெக்காடிங்ல இவர அறிமுகப்படுத்தினது ஜேசுதாஸ்;.நாங்க வேறொரு லிஸ்ட் எடுத்திட்டு போயிருந்தோம். வேறொரு வெளியாளை வைத்துத் தான் செய்றதுன்னு. அப்ப ஜேசுதாஸ் சொன்னாரு. இல்லையில்ல ஒரு நல்ல ஒரு மியூசிக் டைரக்டரை அறிமுகப்படுத்தறேன் சிறப்பாய் செய்வாருன்னு சொல்லிட்டு எங்களை ஒரு பக்டரிக்கு கூட்டிட்டு நேரா அவர்ர வீட்டுக்கு கூட்டிட்டு போனார். அங்க அவரு ஒர்க் பண்ணிட்டிருந்தாரு. நல்ல உதவியாளரோடு. இவர வைச்சு பண்ணுங்க சிறப்பாக பண்ணிக் கொடுப்பாருன்னு சொல்லி அறிமுகப்படுத்தி வைச்சாரு. அப்படித் தான் கியான்வர்மாவை நான் சந்திச்சேன். அவரு அந்த இரவுப் பாடகனுக்கு உதவி இசையமைப்பாளராக பணிபுரிந்தார். அப்போ நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டிச்சு. அதுகப்புறம் அந்தப் படத்தை இப்போ பண்ண வேண்டாம். ஏன்னா இப்ப இருக்கிற காலகட்டத்தில ஒரு தயாரிப்பாளராக போராடி படத்தை வெளிக் கொண்டு வாறது முக்கியம். அதனால நாம வந்து ஒரு தயாரிப்பாளராக நடந்துக்குவோம். அப்போ எனது வகுப்புத் தோழர் அரவிந்தரராஜ் வந்து என்னோட உதவியாராக இருந்தாரு. அப்ப நான் சொன்னேன். நீ வந்து இயக்குநராக வேலை பாருன்னு. நான் வந்து ஸ்கிரிப்ட் ரைட்டர். கோ மியூசிக் டைரக்டர் மியூசிக் டைரகடர் புரொடியுசர். இது என்னுடைய இலக்கு. அதனால அந்த படத்தை வந்து புரமோட் பண்ண முழு ஈடுபாடு வேணும். அதனால வந்து இயக்குநராக வந்து என்னால நூறு சதவீதம் கவனம் செலுத்த முடியாது. அதால நீங்க இந்த பிலிம்க்கு டைரக்டர்.
அப்பிடின்னு ஆரம்பிச்சு முதல்ல வந்து ஊமைவிழிகள் திரைப்படத்தை ஆரம்பிச்சோம். அப்போ நான் வந்து கியான்வர்மாவ கூப்பிட்டேன். இந்த மாதிரி தமிழ் இரவுப் பாடகனை ஆரம்பிக்க போறோம். நீங்க வாங்க நீங்க வந்து மியூசிக் பண்ணுங்க என்டு கூப்பிட்டேன். முந்தின படங்கள்ல வேலை பார்த்தப்போ என்னை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்கிட்டார்.டியூன்ஸ் எல்லாம் நான் போடறேன். இசையை வந்து நான் அடிப்படையாக கத்துக்கலையே ஒழிய கேள்விஞானத்தை வைச்சு நான் டியூன் போடறேன்றத கூட இருந்து கவனிச்சதால அவரு வந்து என்ன சொன்னாருன்னா நீங்க வந்து இசையமைப்பாளராக செய்யுங்க. சான் உங்க உதவியாராக பண்ணித்தாறேன்னு. நான் சொன்னேன். எந்த ஒரு துறையையும் வந்து முழுமையாக தெரிஞ்சுக்காம தலையிடக் கூடாது. அதால இசையைப் பொறுத்தவரைக்கும் எனக்கு கேள்விஞானம் தான். டியூன் போடறேன் எல்லாமே செய்வேன்.
அதைப் பற்றி அடிப்படை அறிவு எனக்கு கிடையாது. அது இல்லாம எனக்கு வந்து அந்தப் போஸ்ட்ல பண்றதுக்கு விருப்பம் இல்ல. அதால நீங்க இசையமைப்பாளராக வாங்க. நான் வந்து இணை இசை ஆக சேர்ந்துக்குவோம் என்றேன். அப்ப கேட்டாரு தன் நண்பன் மனோஜ்னு இருக்காரு. அவர நான் கூப்பிட்டுக்கலாம என்றாரு. எனக்கு ஒன்றுமில்லை. படத்தில நீங்க மனோஜ் கியான்னு போட்டாலும் சரி கியான்வர்மான்னு போட்டாலும் சரி. நீங்க அவர வந்து கூப்பிடுங்க என்றேன். கூட்டணியாக வந்து ஊமைவிழிகள் படத்திற்கான பாடல்களுக்கு இசையமைத்தோம். அதுக்கு முன்னாடி நாலைஞ்சு டியூனை ரெடி பண்ணி வைச்சிருந்தோம். அந்த ரெடி பண்ணி வைச்சிருந்த டியூனை போட்டுக் காண்பிச்சேன். அது ரொம்ப நல்லாயிருக்கு. அதெல்லாத்தையும் எடுத்துக்கிட்டோம். ப்ரெஷ்ஷா கம்போஸிங்ல உட்கார்ந்து சில பாடல்களை தயார் பண்ணினம். 7 பாடல்கள் பதிவு செய்யப்பட்டிச்சு.
ஆபாவாணன் விழிகள் இன்னும் பேசும்.....
Monday, May 28, 2012
Tuesday, May 8, 2012
றேடியோஸ்புதிர் 65 : சாக்ஸ் கலந்து நான் தருவேன்
வணக்கம் மக்கள்ஸ், மீண்டும் ஒரு றேடியோஸ்புதிரோடு வந்திருக்கின்றேன். இந்தத் தடவையும் கடந்த இரு போட்டிகள் போன்று பாடல்களின் இடை இசை கொடுக்கப்பட்டு அந்தப் பாடல்கள் எவை என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். இதோ
தொடர்ந்து வரும் இடையிசை எந்தெந்தப் பாடல்களில் அமைந்தவை என்று கண்டுபிடித்துப் பதிலோடு வாருங்கள்.
புதிர் 1
பதில்
காதல் பரிசு படத்தில் வரும் "ஏ உன்னைத்தானே"
புதிர் 2
பதில்
தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் வரும் "வருது வருது"
புதிர் 3
பதில்
ரெட்டைவால் குருவி படத்தில் வரும் "கண்ணன் வந்து பாடுகின்றான்"
புதிர் 4
பதில்
நினைக்கத் தெரிந்த மனமே படத்தில் இருந்து "கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்"
புதிர் 5
பதில்
வெற்றிவிழா படத்தில் இருந்து "சீவி சிணுக்கெடுத்து"
Subscribe to:
Posts (Atom)