Pages

Thursday, March 31, 2011

பட்டுக்கோட்டை பிரபாகரைச் சந்தித்த பிரபாகர்


"தொட்டால் தொடரும்" என்னுடய பால்யம் கடந்த காலத்தில் அம்புலிமாமாக்கள் அலுத்தவேளையில் கல்லூரி நூலகத்தில் கிடைத்த நாவல். வாசித்தபோது தான் தெரிந்தது காதல்கதை இப்படியானதொரு கோணத்திலும் பார்க்கலாமே என்று சிலாகிக்கவைத்த அந்த எழுத்தாளர் என் பெயர் கொண்ட பட்டுக்கோட்டை பிரபாகர். பல்லாண்டுகள் கழித்து அவரை நான் வானொலிப்பேட்டி காணப்போகின்றேன் என்று அன்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. கடந்த மாதம் அந்த வாய்ப்புக் கைகூடியது. இந்தப் பேட்டிக்கு ஏற்பாட்டில் உதவிய ரேகா ராகவன் சார், புதுவை சந்திரஹரி ஆகியோருக்கும் நன்றிகளைப் பகிர்ந்து கொண்டு இதோ பட்டுக்கோட்டை பிரபாகரை, பிரபாகர் ஆகிய நான் சந்திக்கின்றேன்.

நேரடியாகக் கேட்க


Download பண்ணிக் கேட்க

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை அவுஸ்திரேலியாவில் இருந்து பிரபாகர் சந்திக்கின்றேன் வணக்கம் சார்.

வணக்கம் அவுஸ்திரேலியாவில் இருந்து பேசுறிங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.

அதாவது ஒரே பெயரிலே இரண்டு பேர் சந்திக்கின்றோம் இது உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும் அப்படியா?
உண்மைதான் உண்மைதான் ரொம்ப மகிழ்ச்சி

அதாவது பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற எழுத்தாளர் உடைய அறிமுகம் அப்படி அமைந்திருந்தது?


அதாவது என்னுடைய கல்லூரி நாட்களில் என்னுடைய ஆரம்ப ஆர்வம் நாடகங்களில் தான் இருந்தது. நுண்பர்களோடு சேர்ந்து எழுதி ஒரு குழு அமைத்து கல்லூரி நாடக விழா, ஆண்டுவிழா, விடுதிதினம் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் நாடகங்கள் போட்டு இருக்கின்றேன் அதில நிறைய பரிசுகள் கிடைச்சது. இது குடுத்த உற்சாகம் தான் என்ன எனக்குள்ள இருக்கின்ற ஒரு எழுத்தாளன் என்ற விஷயத்தை அடையாளப்படுத்தியது இந்த நாடக மேடை அனுபவங்கள். நான் படிச்சாது திருச்சியில சென் மேரி யோசப் கல்லூரியில் பட்டுக்கோட்டை என்பது தான் என்னுடைய சொந்த ஊர் நான் பிறந்து வளர்ந்து படிச்ச ஊர். கல்லூரி படிப்பு முடிச்ச பிறகு என்னுடைய சொந்த ஊரான பட்டு கோட்டையில் எங்களுடைய குடும்ப தொழில் சென்ட் வியாபாரம். அந்த தொழில நான்; இறங்கிட்டேன் அந்த நேரத்தில் மீண்டும் என்னால நாடகங்கள் போடுற சூழல் இல்லை அந்த நேரத்தில் எதாவது ஒரு வகையில் உள்ளத்தில் இருக்கின்ற எழுத்து ஆர்வத்திற்கு ஒரு வடிகால் தேவைப்பட்டபொழுது ஏன் சிறுகதைகள் எழுதக்கூடாது அப்படின்னு தோனிச்சு நான் அப்படி எழுத ஆரம்பிச்சு வழக்கம் போல எல்லா எழுத்தாளர்களுக்கும் நேர்கின்ற அனுபவம் போல பல கதைகள் திரும்பி வந்திச்சுசு.அப்புறமா போராட்டத்திற்கு பிறகு ஒரு கதை பிரசுரம் ஆச்சு அப்ப ஆர்.பிரபாகர் என்ற பெயரிலதான் எழுதினேன் . 2,3 கதைகள் அப்படி தான் வந்தது. ஏன்னுடைய தந்தை தான் சொன்னார் பட்டுக்கோட்டை என்ற ஊருக்கு புகழ் சேர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள் ஒவ்வொரு துறையாலுமே, அது எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம், திரைப்பாடல் அப்படியான ஒரு இடத்தில பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் சாதிச்சு இருந்தார்கள் அரசியல் துறையில் பட்டுக்கோட்டை அழகிரி, நாடகத்துறை ரேடியோ நாடகங்களில் பட்டுக்கோட்டை குமாரவேல் இவங்களெல்லாம் இதேமாரி பெயருக்கு முன்னால் பட்டுக்கோட்டை அப்படினுதான் போட்டு பண்ணினாங்க நீ எழுத்தாளன வந்து இருக்கிகின்றாய் நீ ஏன் பட்டுக்கோட்டை பிரபாகர் என்று வைச்சு கொள்ளக்கூடாது. ஏன்று யோசனை சொன்னவர் என்னுடைய தந்தை. என்னுடைய 4வது சிறுகதையில் இருந்து பிரபாகர் பட்டுக்கோட்டை பிரபாகராக மாறினார்.


உங்களுடைய முதல் படைப்பு எந்த சஞ்சிகையில் வந்திருந்தது?


1979ம் வருடம் ஆனந்தவிகடன் பத்திரிகையில் தான் என்னுடைய முதல் சிறுகதை “அந்த மூன்று நாட்கள்” அப்படிங்கிற கதை பிரசுரமாச்சு. அப்ப வந்து நான் எம்.ஏ பொருளாதாரம் வந்து தொலைத்தொடர்பில வந்த கரஸ்பாண்டன்ஸ் என்பர்கள் அதில படிச்சிட்டு இருக்கன் மாணவர் பகுதி என்ற பகுதியில் மாணவர் எழுதிய சிறுகதை அப்பன்ன ஒரு தலைப்போடு என்னுடைய புகைப்படத்தோடு அந்த சிறுகதையை அரங்கேற்றினார்கள் விகடனில அது தான் என்னுடைய முதல் படைப்பு

அதற்கு பின்னர் துப்பறியும் நாவல்கள் அஎன்ற உலகிலே பட்டுக்கோட்டை பிரபாகர் என்பவர் தனித்துவமான எழுத்தாளர் ஆக தமிழ் வாசகர்களிடையே அறியப்படுகின்றார் நீங்கள் துப்பறியும் நாவல்கள் என்ற பரிணாமத்தை தொட்டது எப்பொழுது?

அதாவது நான் வந்து எல்லா வகையான கதைகளையும் எழுதியிருக்கின்றேன் நான் முதலிலேயே சொன்னபடி நான் நாடகங்கள் எழுதினபோது 6 நாடகங்கள் எழுதியிருக்கிறேன் அத்தனையுமே நகைச்சுவை நாடகங்கள் 1 மணிநேரம் முக்கால் மணிநேரம் அந்தமாதிரியான கல்லூரி காலத்தில நான் எழுதிய எல்லா நாடகங்கள் எல்லாமே நகைச்சுவை. சிறுகதைகள் எழுதி வருகின்ற போது எல்லா வகைகளையும் எழுதினேன், சிறுகதைகளிலே திருப்பங்களுடன் கூடிய சிறுகதைகள்,குடும்ப கதைகள் ஒரு யதார்த்தமான சிறுகதைகள், மனப்போராட்டம் இப்படி வாழ்க்கையின் அத்தனை விசயங்களையுமே சிறுகதையில் தொட்டன, தொடர்கதைகள் அப்படி என்று வருகின்ற போது அங்கேயும் குடும்பகதைகள் காதல் கதைகள் பிரச்சனை கதைகள் இப்படினு எல்லாம் தொட்டேன் . அப்படியான காலகட்டத்தில் மாத நாவல்கள் கொடிகட்டி பறந்தகாலம் இந்த நேரம் 80 களில் இருந்து 95 வரை என்று கூட சொல்லலாம் அந்த காலகட்டத்தில் தான் எழுதத் தொடங்கிய காலத்தில் அப்ப எல்லாம் வந்து தொலைக்காட்சி கிடையாது இணையம் கிடையாது அப்ப வந்து ஒரே ஒரு பொழுது போக்கு மீடியம் மக்களுக்கு புத்தகங்கள் அத்தனையும் மாதம் மாதம் ஒரு நாவலுடன்; வருகின்ற மாத நாவல்கள் புத்தகங்கள் 60 தலைப்புகளுடன் வந்து கொண்டு இருந்தது. அப்ப வந்து அந்த மாத நாவல்களுடைய வாசகர்களை பார்த்தீர்கள் என்றால் அவர்கள் வந்து விரைவாக படிக்கணும், பயணங்களில் படிக்கணும்,ஓய்வு நேரங்களில் படிக்கணும், பஸ் நிறுத்தலில் காத்து இருக்கும் போது படிக்கணும், ஒரு இரயில் பயணத்தில் படிக்கணும் இந்த மாதிரியான ஒரு பொழுது போக்கு அம்சத்திற்காகவும் அவர்களுடைய அவசர தேவைக்காகவும் தான் இந்த மாத நாவல்கள் இலக்கு பண்ணிச்சு, அந்த மாதிரியான வாசகர்களை. அவங்களுக்கு வந்து பரபரப்பான வேகமாக படிக்க கூடிய ஒரு விசயமாக இருக்ககூடிய கதைகள் என்று பார்த்தால் க்ரைம் கதைகள் மாத நாவல்கள் அன்று நான் எழுதத் தொடங்கின்ற போது நான் பிரிச்சுக்கிட்டே ன் தொடர்கதைகள் என்று எழுதுகின்ற போது சீரியசான குடும்ப கதைகளும், காதல் கதைகளும் மாத நாவல்களுக்கு பெரும்பாலும் க்ரைம் கதைகள் அன்று என்ன நானே பிரிச்சுக்கிட்டேன். என்னுடைய எழத்து வகையை மாத நாவல்களில் க்ரைம் கதைகள் அதிகமாக எழுதினன் அதே மாத நாவல்களில் நான் குடும்பக்கதைகளும் முயற்சி பண்ணி இருக்கிறே ன் அதே மாத நாவல்களில் நகைச்சுவை கதையும் எழுதி இருக்கின்றேன் ஆனால் பெரும்பான்மையான க்ரைம் நாவல்கல் எழுதியது மாத நாவல் வாசகர்களுக்காக மட்டும்.

இப்படியான மாத நாவல்கள் அல்லது பாக்கெட் நாவல்கள் என்று சொல்லக்கூடிய வடிவங்களிலே குடும்ப கதைகள் குடும்ப சார்ந்த கதைகள் இருந்தாலும் கூட துப்பறியும் நாவல்களுக்கு அதிக வரவேற்பு வாசக உலகிற்கு இருந்த காரணம் நகரம் சார்ந்த வாசகர்கள் இந்த நாவல்களை விரும்பிய படிப்பதன் காரணமாகவா?

இல்லை அது இருக்கலாம் அது ஒரு காரணம் ஆன எல்லா ஊரிலுமே அது இருக்கலாம் அது ஒரு காரணம் அந்த தாக்கம் அந்த நேரத்தில் பார்த்தால் கல்லூரி மாணவர்களிட்ட மாணவிகளிட்ட குடும்பதலைவிகள்களிட்ட நகரம் என்று மட்டுமே என்னால சொல்ல முடியாது ஏன்னா என்னுடைய வாசகர்கள் வந்து சின்ன கிராமங்களில் இருந்து கடிதம் போட்டு இருக்காங்க இப்பவும் போட்டுட்டு இருந்தாங்க இப்படின்னு ஊர் இருக்கா என்று கூட அதிசயப்பட்டு இருக்கன். அந்தமாதிரி சின்ன கிராமங்கள் அந்த கிராமத்தின் பெயர் கூட நான் தெரிஞ்சுக்க முடியாது 12 கிலோ மீற்றர் நான் டவுணுக்கு வந்து உங்களுடைய புத்தகம் வாங்குவன் ஏன்னு கூட எழுதி இருக்காங்க அந்த மாதிரி வந்து எல்லா இடத்தினையும் இருக்கு நகரம் சார்ந்த இடத்தில தான் ஆர்வம் இருந்தது அன்று சொல்லமுடியாது.

பரத் சுசீலா என்ற இரட்டையர்கள் இவர்களுடைய ஆரம்பம் நீங்கள் எந்த நாவல்களில இருந்து ஆரம்பித்து இருந்தீர்கள்?

மாத நாவல்களில் வந்து 3, 4 கதைகளுக்கு அப்புறம் ஆரம்பித்த கதைதான் அது திட்டமிட்ட அமைக்கப்பட்ட பாத்திரங்கள் தான் உசiஅந நாவல்கள் எழுதுகின்ற போது உலகம் முழவதும் உள்ள ஆங்கில எழுத்தாளர்கள் இருந்த எல்லாருமே க்ரைம் நாவலுக்கு துப்பறியும் கதை என்றே தொடர்ந்து ஒரு பாத்திரத்தை வைச்சிருக்கிறங்க என்கின்றது எல்லாருக்கும் தெரிஞ்சா ஒரு விசயம் இதை ஒன்னும் தமிழ நான் புதுசா பண்ணல இதுக்கு முன்னால நிறைய பேர் சாதிச்சிட்டாங்க “தேவன்” மிகப் பெரும் பழம் பெரும் எழுத்தாளர் சார் வந்து துப்பறியும் கதைகள் நிறைய எழுதியிருக்கிறார் அவர் துப்பறியும் சாம்பு அப்படி என்ற பாத்திரத்த பண்ணியிருந்தார் தமிழ்வாணன் எல்லாருக்கு தெரிஞ்ச விசயம் தெரிந்த ஒரு நபர் அவர் வந்து சங்கர்லால் என்ற பாத்திரத்தை வைச்சு அதிக கதைகள் எழுதியிருக்கின்றார் அதே மாதிரி எனக்கு முன்னோடியாக பார்த்தீர்களென்றால் சுஜாதா சுஜாதா வந்து தமிழ் எழுத்து வரலாற்றில யாராலாயும் மறக்கேலாது அவர் வந்து கணேஸ், வசந் பாத்திரங்களை தொடர்ந்து துப்பறியும் பாத்திரங்களாக பயன்படுத்தினார். ஆக இவங்கஇப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கின்றபோது நான் துப்பறியும் கதை எழுதும் போது இந்தப் பாத்திரங்களை வைத்தும் எழுதலாம் இல்லாமலும் எழுதலாம். தொடர்ந்து ஒரு பாத்திங்கள் வருகின்ற போது வாசகர்களுக்கு தொடர்ந்து ஈடுபாடு வரும் இதற்காக எல்லாருமே இந்தமாதிரி தனிதனிப் பாத்திரங்களாவும் ஆண் பாத்திரமாகவும் வைத்திருக்கின்ற பொழுது நான் ஏன் காதல் ஜோடியாக வைத்திருக்க கூடாது அந்த துப்பறியும் பாத்திரங்கள் ஒரு காதலனும் ஒரு காதலியுமாக இருந்தா இன்னுமொரு சுவாரஸ்யமாக இருக்குமே அப்படின்னு யோசிச்சு பரத் சுசீலா அப்படி என்ற இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் தங்களுடைய அன்பையும் பாசத்தையும் காதலையும் கொட்டிக்கொண்டே துப்பறியும் கலைகளிலும் ஈடுபடுவார்கள் என்ற அமைப்போடு துவக்கப்பட்ட பாத்திரங்களே பரத் சுசீலா பாத்திரங்கள்.

அந்த பரத் சுசீலா கூட்டு எந்த நாவலிலே ஆரம்பித்து இருந்தார்கள்?

அவன் தப்பக்கூடாது என்ற மாலைமதியில் வந்த ஒரு நாவல்லதான் பரத் சுசீலா இடம் பெற்றார்கள்

அந்தப் பாத்திரப்படைப்பின் டீ சார்ட்டில் இல் வருகின்ற தனித்துவமான வாக்கியங்கள் குறிப்பாக ஒவியர் ஜெ இன் உடைய ஒவியங்கள் வருகின்ற போது தனித்துவமான இருக்கும் அந்த கற்பனை உங்களுடைய கற்பனையா அல்லாத ஒவியர் உடைய கற்பனையா?

இல்லை இல்லை என்னுடைய கற்பனை தான் நான் எழுதிக்க்கொடுக்கிறதைத்தான் அவர் வரைவார்


தொட்டால் தொடரும் நாவலை மறுவாசிப்பிலே நான் வாசித்த பொழுதும் முதல்முறையாக வாசித்த பொழுதும் ஒரு நெகிழ்ச்சியான வித்தியாசமான ஒரு காதல் கதை... காதல் சூழல். ஆனால் அந்த கதையை பின்பற்றி உங்களுடைய அனுமதி இல்லாமலேயே நிறைய படங்கள் பல்வேறு வடிவங்களிலே வந்து விட்டன இல்லையா?


இது ஒரு வருத்தமான விடயம் தான். இது வந்து இந்தக் கதைன்னு மட்டும் சொல்ல முடியாது. எனக்கு மட்டும் நேர்ந்த விடயம் என்றும் சொல்ல முடியாது. இந்த தொட்டால் தொடரும் என்னுடைய மிகவும் பேவரிற்(Favorite) நாவல்களில் ஒன்று. அது தவிர இதில தனிச்சிறப்பு என்னான்னா. என்னை அறிமுகப்படுத்திய ஆனந்த விகடனில் நான் எழுதிய முதல் தொடர்கதை அந்தக் கதை. பரவலாக வரவேற்கப்பட்ட ஒரு கதை. மிக அதிகமான பதிப்புக்கள் பதிப்பகங்களால் போடப்பட்டது. மூன்று பதிப்பகங்கள் போட்டிருக்காங்க. பல பதிப்புக்கள் வந்திருக்கு. இந்தளவிற்கு வெற்றிகரமாக போய் இன்னைக்கும் விற்பனையில சாதனை பண்ணிட்டு இருக்கிற ஒரு புத்தகம்.
நான் அந்தக் கதையை எழுதறப்போ ஒரே ஒரு விடயம் தான் இன்ஸ்ரேசனா(Instance) எடுத்துக்கிட்டது என்னன்னா அந்தக் காலகட்டத்தில எழுதப்பட்ட சிறு கதைகளாகட்டும் வந்து கொண்டிருந்த திரைப்படங்களாகட்டும், எல்லா காதல் திரைப்படங்களிலும் கிளைமாக்ஸ்ல வந்து ஊரை விட்டு உறவை விட்டு எல்லாத்தையும் உதறிட்டு காதலர்கள் ஓடிப் போறது ஒரு கிளைமாக்ஸாக இருந்து கொண்டிருந்தது. அது எனக்கு சம்மதமில்லாத ஒரு விடயம்.

இத்தனை வருடங்கள் வளர்த்த பெத்தவங்களை காதலுக்காக உதறி விட்டு...காதலை ஏற்றுக் கொள்ள வைக்கத் தெரியணும் பெற்றோரை. அத விட்டிட்டு காதலுக்காக உறவுகளை உதறிட்டு போறதென்றது எனக்கு உறுத்தலான ஒரு வடயம்.
என்னோட கேள்விகள் என்னான்னா அதோட கதை முடிஞ்சிடுது. ஆனால் அதுக்குப் பிறகு யாரும் பார்க்கிறதில்லை. அப்படி ஓடிப் போற காதலர்கள் அவர்கள் சந்திக்கிற பிரச்சினைகள் அந்தக் காதலுக்கும் அவங்க பண்ணிக்கப் போகிற திருமணத்திற்கும் நடுவிலேயே ஒரு வித்தியாசமான நிலமை வந்தா அந்தப் பெண்ணின் நிலமை என்ன அந்த ஆணின் நிலமை என்ன? இப்படி வந்து ஒரு பத்து இருபது கேள்விகள் என்னை குடைந்து கொண்டேயிருந்தன. அந்தக் கேள்விகளுக்கு ஒரு பதிலாக அமைக்கப்பட்ட ஒரு கதை தான் தொட்டால் தொடரும்!

நீங்க சொன்ன இந்தக் கேள்விகளுக்கு வரேன். இந்தக் கதைல வந்து பல பகுதிகள் பல திரைப்படங்கள்ல கொஞ்சம் கொஞ்சம் அடிச்சிட்டாங்க. அது இந்தக் கதைல மட்டும் என்று இல்லை. இந்த மாதிரி நிறைய கதைகள்ல வந்து பண்ணிட்டிருக்காங்க. இது வந்து ஒரு அநாகரிகமான செயல். இந்த தவறுகள் எங்கேயும் நடக்குது. இது தனி மனித வக்கிரம் என்று தான் சொல்லனும். வேறென்ன சொல்ல முடியும்?


நீங்களொரு வசனகர்த்தாவாக மகாபிரபு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தீர்கள் இல்லையா!
உங்களுக்கு கிட்டியது?


நான் பட்டுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய சூழல் வந்தது. ஏன்னா என்னுடைய ஆர்வம் எழுத்துத்துறையோட மட்டும் இல்லாம அதுக்கு அடுத்த கட்டமாக பதிப்புத்துறை. புத்தகங்கள் வந்து பப்ளி(Pulish) பண்ணணும். சொந்தமாக இதழ்கள் வெளியிடனும் அப்பிடிங்கிற சில ஆர்வம் ஏற்பட்டது. அதே மாதிரி ஒத்த ஆர்வம் என்னோட சக எழுத்தாளர்கள் சுபா, சுரேஸ்பாலா என்று ரெண்டு பேர் சேர்ந்து தான் சுபான்னு எழுதிட்டிருக்காங்க. அவங்களும் நானும் நீண்ட கால நண்பர்கள். அவங்களுக்கும் அதே ஆர்வம் இருந்ததால் மூன்று பேரும் சேர்ந்து சென்னையில் ஒரு பப்ளிக்கேசன்(Publication) தொடங்கினோம்.

அதன் மூலம் அப்ப பரபரப்பாக இருந்த மாத நாவல்கள் காலகட்டம் என்பதால் மூன்றில் ஜீனியர் உல்லாச ஊஞ்சல் அப்பிடிங்கிற ரெண்டு பத்திரிகைகள் நாங்கள் தொடங்கினோம். அது 1988-1998 வரை 10 வருடங்கள் கிட்டத்தட்ட 120 இதழ்கள் கொண்டு வந்தோம். எங்களுடைய அடுத்த கட்டமாக குழசவ fortnightly, weekly என்று திட்டங்கள் இருந்தது. ஆனால் அதற்கு நடுவில வந்து வேறு சில காரணங்களாலும் எங்களால தொடர்ந்தும் நிர்வாகம் பண்ண முடியாத சூழ்நிலையினாலும் அந்த பப்ளிக்கே~ன் துறையிலிருந்து வெளியில வர வேண்டிய கட்டாயம் வந்தது.

சென்னைக்கு வந்த போது இயக்குநர் கே.பாக்கியராஜ் சார். அவரை எங்க இதழுக்காக பேட்டி எடுக்கப் போயிருந்தோம். அது ஒரு முழு நீளப் பேச்சு. இரவு பத்து மணிக்கு துவங்கி ஒரு மணி வரையில் அவரது படப்பிடிப்புக்கு நடுவுல நடுவுல வந்து பேட்டியை குடுத்திட்டருந்தாரு. அப்ப அவர் சொன்ன வார்த்தை என்னான்னா சினிமா என்றதில வந்து அடிப்படையான முக்கியமான விடயம் கதை. எவ்ளோ பெரிய நடிகரைப் போட்டாலும் எவ்ளோ செலவு செய்தாலும் கதை சரியா இல்லைன்னா அந்தப் படம் ஓடாது.

கதையே வாழ்க்கைன்னு வைச்சிருக்கிற கற்பனையே தொழிலாக வைச்சிருக்கிற பல எழுத்தாளர்கள் சினிமாத்துறைக்கு வர்றதில்லை. அது எனக்கு ஒரு புரியாத விடயமாயிருக்கு. அதைப்பற்றி ஒரு ஆதங்கத்தினை சொன்னேன். அதாவது பத்திரிகையில் எழுதுற எழுத்தாளர்கள் ஏன் சினிமாப் பக்கம் வருவதில்லை என்பது அவரது கேள்வியாக இருந்தது. அந்தக் கேள்வி என்னை யோசிக்க வைச்சது. அவர எனக்கு ரொம்ப நாளா பிடிக்கும். அவருடைய படங்கள் எனக்கு பிடிச்ச விடயம். இந்தக் கேள்விகளே பிடித்ததனால அவர்கிட்டேயே வந்து சில நாள் கழித்துப் போய் கேட்டேன். சார் எனக்கு சினிமா கற்றுக் கொள்ளனும். எனக்கு அதுல ஆர்வம் இருக்கு நான் உங்களிடம் உதவியாளரா சேரலாமா என்று கேட்டேன். ரொம்ப மகிழ்ச்சியோட ஏற்றுக்கிட்டாரு. அப்ப அவர் ஆராரோ ஆரிரரோ பண்ணிட்டிருந்தாரு. அந்த இறுதிக் கட்டத்துல போய் சேர்ந்தேன். அதுக்கப்புறம் அவசரப்போலிஸ் 100, ருத்ரா அதுவரைக்கும் இருந்தேன்.

சினிமா எனும் மிகப் பெரிய மீடியத்தை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைச்சது. அதை முடித்து விட்டு வெளியில வந்தப்போ அப்பத்தான் ஒரு ரெலிவிசன் சூடாக உள்ளே வருகுது. ரெலிவிசனுடைய தாக்கம் மெகா தொடர் வாய்ப்பு வந்தது. அதில கதை திரைக்கதை வசனம் எழுத வாய்ப்பு வந்தது. ஒரு மெகா தொடரை பொறுத்தவரைக்கும் ஒண்டு ரெண்டு வருடம் போயிடும். ஏழு எட்டு உதவியாளர்களை வைத்துக் கொண்டு இரவும் பகலுமாக வேலை பார்க்க வேண்டியிருந்தது.

அந்த சூழல்ல எனக்கு சினிமா இயக்கம் ஆசையாயிருந்தாலும் நேரம் ஒதுக்க முடியாமல் இருந்திச்சு. அப்பத்தான் டைரக்டர் வெங்கடேஷ்; என்னை அணுகினார். அவர் அடிப்படையாக என்னோட ரசிகர். என் நாவல்களிகளின் ரசிகன். அவர் எப்ப படம் பண்ணினாலும் நான் தான் வசனம் எழுதனும் என்ற திட்டத்தில இருந்தவர். அத சொல்லிக் கேட்டப்போ மறுக்க முடியலை. தொலைக்காட்சித் தொடர்களின் வேலை மிகுதியாக இருந்தாலும் கூட முழுமையாக சினிமாத்துறைக்குள் நுழையனும்னு தான் ஆசையா இருந்தது. ஆனால் இவரோட அணுகுமுறை எனக்கு பிடித்திருந்ததாலும் மகாபிரபு படத்திற்கு வசனம் எழுதினேன். 100 நாள் ஓடிய வெற்றிப்படம்! அதைத் தொடர்ந்து வசன வாய்ப்புக்கள் வர ஆரம்பித்தது. இன்று வரை 22 படங்களுக்கு வசனம் எழுதினேன்.இது தான் வசனகர்த்தாவாக மாறிய கதை.

இந்த வசனகர்த்தா என்ற துறையை தவிர திரைக்கதை ஆசிரியராகவும் உங்களுடைய பணியை நிலைநாட்டி இருக்கிறீர்களா?


நிச்சயமாக நிச்சயமாக... எல்லா படங்களிலையும் வசனகர்த்தான்னு தனிய இருக்க மாட்டேன். சின்னத் திரையில் கிட்டத்தட்ட 1000 என்னோட கதைகளையே திரைக்கதை செய்திருக்கிறேன். நான் சொன்ன 22 படங்களிலேயும் திரைக்கதை உருவாக்கத்தில் எனது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு மாதம் உட்காந்து எழுதினாப்புறம் தான் வசனகர்த்தாவின் வேலை ஆரம்பிக்குது. எல்லாப் படங்களிலையும் என்னோட திரைக்கதை பங்களிப்பு இருக்கு.

தவிர டைரக்டர் பாலு மகேந்திரா வந்து என்னுடைய 8 சிறுகதைகளை கதை நேரம் அப்பிடிங்கிற தொடருக்காக பண்ணினார். அந்த நேரத்தில அவருடன் திரைக்கதை அமைத்தேன். அந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.
இன்று வரை பாக்கியராஜ் சாரிட்ட இருந்து வெளில வந்துட்டாலும் கூட அப்பப்ப சில படங்களுக்கு கூப்பிடுவார். திரைக்கதை பங்களிப்பில் விவாதத்தில் கலந்துக்கிறதும் உண்டு.

ஒரு வாசகனாக உங்களுடைய படைப்புக்களை வாசித்து வந்தவன். இப்பொழுதும் இந்த புலம் பெயர்ந்த சூழலிலே கிடைக்கின்ற உங்கள் கதைகளை படித்து வருபவன் என்ற ரீதியிலே பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஒரு இயக்குநராக வரும் பொழுது அவரது தொட்டால் தொடரும் நாவல் தான் அவரது முதல் படைப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தேன். உங்களுடைய பார்வையிலே நீங்கள் இயக்குநராக வரும் பட்சத்திலே எப்படியான சப்ஜக்டை எடுத்து படம் பண்ண வேண்டும் என்று மனதிலே ஆசை இருக்கிறது?

உங்க கணிப்பு 100% சரி ஏன்னா நடுவில அந்த மாதிரி வாய்ப்பு வந்தது. பாக்கியராஜ் சாரிட்ட இருந்து திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது நான் தேர்வு செய்தது தொட்டால் தொடரும் கதை தான்! ஒரு குழுவுடன் திரைக்கதை அமைத்து வசனம் எழுதி முழுமையாக ஸ்கிரிப்ட் தயாராக செய்யப்பட்டது. ஒரு நிறுவனத்திற்காக பேச்சுவார்த்தையும் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் அந்த புரெ க்ட் போச்சு.

உங்களுடைய நண்பர்கள் பிரபல எழுத்தாளர்கள் சுபா இரட்டையர்கள் இப்பொழுது வர்த்தகரீதியிலே வெற்றிப் படங்களை தரக் கூடிய ஒரு வெற்றிகரமான எழுத்தாளர்களாக சுஜாதாவிற்குப் பின்னர் அவர்களது கதைகளை வைத்து வெற்றிப்படமாக உருவாக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. உங்களுடைய கதைகளை இப்படியான ஒரு வெற்றிகரமான இயக்குநரோ அல்லது அறிமுகமான இயக்குநரோ படமாக்க வேண்டும் என்று உங்களை அணுகியிருக்கிறார்களா?


ம்.. நிறைய அப்ரோச் வந்தது. ஆனால் நானே இயக்கணும் என்கிற சூழ்நிலை இருந்ததனால நான் குடுக்கல. இதே தொட்டால் தொடரும்க்கு மட்டும் 6 தயாரிப்பாளர்கள் கேட்டிருக்காங்க. பல இயக்குநர்கள் கேட்டிருக்காங்க. ஏன்னா அந்த சப்ஜெக்ட் அவ்ளோ சவாலான கதை. ஒருவேளை வந்து நான் குடுக்காததால தான் பிய்த்துப் பிய்த்து காப்ப அடிச்சாங்கன்னு தெரியல.பிரச்சனை என்னன்னா நான் வந்து முறையாக இயக்கம் கற்றுக் கொண்டு வந்ததால நானே இயக்கனுங்கிற திட்டத்தில் இருந்ததால் என்னுடைய சிறந்த படைப்புக்களை கதையை மட்டும் கேட்ட போது மறுத்திருக்கிறேன். அது தான் உண்மை. ஆதனால நான் கதையாக யாருக்கும் கொடுக்கலை.

வரலாற்று நவீனம் அதாவது வரலாற்று கதாபுருஷர்களை வைத்து நாவல் பண்ண வேண்டும் என்ற அனுபவத்தை நீங்கள் தொட்டிருக்கின்றீர்களா? அல்லது எதிர்காலத்தில் தொட முயற்சிக்கிறீர்களா?

இல்லை. நான் தொட்டதே இல்லை. ஒரேயொரு சிறுகதை மட்டும் தான் பண்ணினேன். ஆந்த ஒரேயொரு சிறுகதைக்கே மட்டும் நான் 15 புத்தகங்களை படிக்க வேண்டியிருந்தது. .வரலாற்று புதினங்கள் எப்படி என்கிறது வந்து மிகப் பெரிய கடினமான ஒரு விடயம். ஆதற்கான எழுத்து நடையும் வேறாக இருக்கிறது. அந்த ஒரு சிறுகதையை எழுதிய அனுபவத்திற்கு அப்புறமா தான் கல்கி சாண்டில்யன் இவங்க எல்லாம் எவ்வளவு அற்புதமாக பண்ணியிருக்கிறாங்க என்ற பிரமிப்பு எனக்குள்ளே ஏற்படடுச்சு அது ஒரு மிகப் பெரிய விடயம்! இன்றைக்கு வரைக்கும் பொன்னியின் செல்வன் பேசப்படுது அப்டின்னா…! என்னைக்கோ வந்து லைப்ரரிக்கு போனீங்கன்னாலும் சரி நூலக கண்காட்சிக்கு போனீங்கனனாலும் சரி அத்தனை பதிப்பாளர்களும் கையடக்கபதிப்பு மலிவுவிலைப் பதிப்பு என்று ஒரு பதிப்பாளர் விடாமல் பொன்னியின் செல்வனை பப்ளிஷ் பண்ணி .வைச்சிருப்பாங்க. அந்தளவிற்கு எத்தனை தலைமுறை மாறியும் இன்றைக்கும் அந்த சாயம் மாறாமல் இருக்கிற சப்ஜெக்ட் அந்த கதை தான்! அதுக்கு பின்னாடி இருக்கிற உழைப்புக்கு சல்யூட் அடிக்கணும்னு தோணுது. ஆந்த அளவிற்கான பொறுமையும் எனக்கு இல்லை. ஆந்த அளவிற்கான நேரமும் எனக்கு இல்லை. அந்த எழுத்து நடையும் எனக்கு கைவரப் பெறாது. அதனால வந்து நான் வரலாற்று நவீனங்களில் முயற்சி பண்ணவேயில்லை. இனியும் பண்றதாயும் இல்லை.


நிறைவாக இன்றைய வாசகன் அதாவது 80களிலிருந்த வாசகன் வெறுமனே முழுநேரமாக இந்த நாவல்களை பத்திரிகை ஊடகத்தை சார்ந்து தனது பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது. இன்றைய காலகட்டத்து வாசகனுக்கு பல தேவைகளிலே ஒரு தெரிவாக நாவல்கள் சிறுகதைகள் படிப்பது என்பது இருக்கிறது. இன்றைய காலகட்டத்து வாசகனை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள?

இன்றைக்கு வாசகர்கள் குறைந்திட்டு இருக்காங்க ஒரு நல்ல வாசகர்கள் குரூப் இருக்குன்னா ஏற்கனவே வாசித்து வந்தவர்களின் ரசனை மாறியிருக்கிறது. அதனால தான் வந்து இன்றைக்கு பல புதிய எழுத்தாளர்கள் நேரடியாக பப்ளிஷ் செய்றதுக்கு கொண்டு வாறாங்க. முந்தியெல்லாம் பத்திரிகையில வெளிவந்தா தான் புத்தகமாக வெளிவரும். ஆனால் இன்றைக்கு அந்த அவசியம் இல்லாமல் ஒரு சில எழுத்தாளர்கள் நேரடியாகவே பிரசுரத்துக்குக் கொண்டு வாறாங்க. ஏற்கனவே வாசித்துக் கொண்டிருந்த வாசகர்களின் ரசனை அதிகமாகியிருக்கிறது. புதிய வாசகர்கள் சேர்ந்திட்டிருக்கிறாங்களா அப்படின்னா இந்தக் கேள்வியை பல கோணங்களில பார்க்க வேண்டியிருக்கிறது .இன்றைக்கு தமிழ் வாசகர்கள் என்பதை மட்டும் பேசுறேன். ஆங்கில வாசகர்கள் வேறு. ஆங்கில வாசகர்கள் கோடிக்கணக்காக பெருகிட்டு இருக்கிறாங்க.
எங்கேயோ இருந்து எழுதப்பட்ட ஹரிப்பாட்டர் கதையை வாங்கிறதுக்கு சென்னையில அதிகாலை 3.30 மணிக்கு புத்தககடை திறப்பதற்கு முன்பாக கியூவில பத்துப் பதினொரு வயசுப் மாணவன் நிற்கிறான் என்றால்… அந்தளவிற்கு வந்து ஆங்கில கதைகளை படிப்பதற்கான ஆர்வம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதே மாதிரி ஆங்கில எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் எப்படி சக்கை போடு போடுதோ இந்தியாவிலும் தமிழ்நாடுகளிலும் நல்லபடியாகவே விற்பனையாகிறது. நான் தமிழை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறேன். தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் புத்தகங்கள் என்று பார்க்கும் போது இந்த தமிழ் பதிப்பகங்கள் குறைந்திட்டு இருக்காங்க. ஏன்னா அடுத்த தலைமுறை அவரவர் வீட்டுல தமிழை பற்றி என்ன தான் உயர்வாக பேசினாலும் தன் குடும்பம் அப்பிடின்னு வரும் போது தமது குழந்தைகளை தமிழ்மொழிக் கல்விக்கு உத்தனை பேர் அனுப்புகின்றனர்?
ஏன்னா அவர்களுடைய எதிர்காலத்திற்காகவும் வேலைவாய்ப்பிற்காகவும் மற்ற சில காரணங்களுக்காகவும் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் நாட்டில் தமிழே படிக்காமல் ஒரு உயர்ந்த கல்வியை படித்து முடித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்க்க முடியும் அல்லது இந்தியாவிலே எங்கேயாவது வேலை பார்க்க முடியும் என்ற சூழ்நிலை தான் இன்றைக்கு இருக்கு. அதுதான் உண்மை. தமிழ் நாட்டிலேயே தமிழ் மொழிக் கல்வியை படிப்பது குறைவு எனும் போது அவர்கள் எப்படி தமிழ் கதைகளை படிப்பார்கள்? ஒரு தமிழ் மொழிக்கல்வி அதிகமானால் தான் தமிழ் புத்தகங்களை படிப்போர் அதிகமாவர். ஏற்கனவே புத்தகம் படித்துக் கொண்டிருப்போர்களும் தமிழை மறக்காது தமிழிலே படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர்களும் தமிழை ஒரு காலத்தில் மறக்க மாட்டார்கள்.
ஒரே ஒர சின்ன உதாரணம் இதுக்கு சொல்ல விரும்புறேன். ஏன்னுடைய இரண்டு மகள்களும் ஊடகத்துறை என்கிற எலக்ரோனிக் மீடியா படித்தாங்க பிரபலமான கல்லூரியல. இரண்டு பேருமே வேற வேற வருடங்கள்ல படித்தாங்க. அவங்க கிளாஸ்ல ஒரு 43 பேரு படித்தாங்க. அந்த காலகட்டத்திலே வகுப்பில இரண்டு மூன்று பேருக்குத் தான் தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். மற்ற 39பேரும் தமிழ் புரிஞ்சுக்குவாங்க. கதைக்க மாட்டாங்க. எழுதப் படிக்க தெரியாதவங்க எப்படிப் படிப்பாங்க? இப்ப இந்த ஜெனறேசன்ஸ் வேலைவாய்ப்பு உயர்கல்விக்காக ஆங்கில மொழியை நோக்கியே அவர்களுடைய பார்வை இருக்கிறதால ஆங்கிலப் புத்தகம் படிக்கிறாங்களே ஒழிய தமிழ் புத்தகங்கள் தமிழ் நாவல்களை இன்றைய தலைமுறையினர் பதின் பருவத்தில் இருக்கும் 14 வயதில் ஆரம்பித்து 19 வயதானோர் அதிகமாக படிக்கவில்லை என்பது என்னோட கருத்து!

பேட்டியின் வாயிலாக உங்களுடைய வாழ்வின் பல அனுபவங்களை உங்களுடைய எழுத்துலக அனுபவங்களை பகிர்ந்தீர்கள். அவுஸ்திரேலிய நேயர்கள் சார்பாக பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களே உங்களது வேலைப்பழுவுக்கு மத்தியிலே இந்த சுவையான பேட்டியை அளித்தமைக்காக எமது நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொலைதூரத்தில் இருந்தாலும் அவுஸ்திரேலியாவில் இருந்தாலும் அவுஸ்திரேலிய நேயர்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு எழுத்தாளனை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும். அவருடைய அனுபவங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடனும் ஆர்வத்துடனும் செயற்பட்ட உங்கள் நிறுவனத்திற்கும் என்னை பேட்டி கண்ட உங்களுக்கும் தங்கள் மூலமாக இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்ற நேயர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, March 19, 2011

"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு" இயக்குனர் பாலுமகேந்திரா வழங்கும் ஒலிப்பகிர்வு


கிழக்குப் பதிப்பகம் வழங்கி வரும் மொட்டை மாடிக் கூட்டத்தில் நேற்று இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார் என்ற செய்தி வந்தபோது அந்த நிகழ்வு சென்று கொண்டிருக்கும் நேரம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரக்குக் கூட்டுத்தாபனத்தில் எனது வானொலி நிகழ்ச்சியும் சமகாலத்தில் இடம்பெறுவதால் ஒரு புதுமுயற்சியாக நேரஞ்சல் செய்வோமே என்று நினைத்தபோது கிழக்குப் பதிப்பகமும், நண்பர் ஹரன் பிரசன்னாவும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். எனது நேயர்களோடு நேரடி உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே மறுமுனையில் ஒலித்தரம் குறித்த பரிசோதனையை ஹரன்பிரசன்னா முழு அர்ப்பணிப்போடு செய்து உதவினார் ;-)

50 நிமிடங்கள் வரை சென்ற இந்த நேரடி இந்த நிகழ்வை வெற்றிபெறச் செய்ய மறுமுனையில் இருந்து உதவிய நண்பர் ஹரன்பிரசன்னாவுக்கு இந்த வேளையில் எனது நன்றிகள். இந்த முயற்சியை சென்னையில் இருந்து சிட்னி, ஐரோப்பா வரை நேரடியாகக் கேட்டு மகிழ்ந்த நேயர்கள் பலர்.

"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு" (from writing to cinema) இதுதான் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் எடுத்துக் கொண்ட கருப்பொருள். இதனை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் மூன்று மாதங்களுக்குப் போதுமான சினிமாப் பாடத்தையே எடுத்து முடித்து விட்டார் இந்தக் கருத்தரங்கில். எழுத்து வடிவம் கொண்ட ஒரு படைப்பு எப்படி சினிமாவாக் மாற்றம் காண்கின்றது என்பதை பல்வேறு நடைமுறை உதாரணங்களையும் வாழ்வியல் அனுபவங்களையும் இணைத்து அவர் பேசுகின்றார். உண்மையில் சினிமாவை நேசிப்போருக்கும், முனைப்பில் இருப்போருக்கும் இந்தப் பேச்சு கண்டிப்பாகப் பயனளிக்கும். எனவே இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன்.

Download பண்ணிக் கேட்க

அங்கம் 1

அங்கம் 2

நேரடியாகக் கேட்க

அங்கம் 1அங்கம் 2

Thursday, March 17, 2011

ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலில் காதோரம்...
"ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா
ஓசைகள் ஏதும் இல்லாமல் வெய்யிலின் வண்ணம்தான்
ஓவியமானது அப்போதுதானா"

இன்றைக்கு எத்தனை முறை இந்தப் பாட்டைக் கேட்டிருப்பேன்....?
கணக்கில்லை,
ஏன் இந்தப் பாட்டை இன்று கேட்கவேண்டும் என்று மனம் உந்தியது...?
தெரியவில்லை
ஆனால் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன், கைகள் தானாகத் தட்டச்சும் போதும் காதுகளை நிறைக்கின்றது இந்தப் பாடல்.

மணக்கோலத்தில் கோட் சூட் அணிந்த ஆண்மகனும், பாரதிராஜா படங்களில் வரும் வெள்ளுடைத் தேவதையாகப் பெண்மகளின் வெண் கையுறையில் கரம்பதித்து நிலம் நோகாமல் மெல்லக் கால் பதித்து வந்து யாருமில்லாத அந்த அமைதி கும்மிய அறையின் மேசையில் மெழுகுதிரி மெல்ல அலுங்காமல் குலுங்காமல் மெல்ல ஆடி ஒளிபரப்ப வேறெந்த வெளிச்சமோ, ஓசைகளோ இல்லாத அந்த வேளை ஒலிக்க வேண்டும் இந்தப் பாடல் என்று கற்பனை செய்து திருப்தி கொள்கிறது என் மனம்.

"மெல்லினமே மெல்லினமே" என்ற ஷாஜகான் படப் பாடலில் மெட்டை இலேசாக நினைவுபடுத்தும் பாட்டு இது, இரண்டுக்குமே இசை மணிஷர்மா தான். தெலுங்கில் ஆர்ப்பாட்டமான துள்ளிசை இசையமைப்பாளராக இனங்காணப்பட்ட மணிஷர்மாவின் மென்மையான பாடல்களில் தான் எனக்குக் காதல் அதிகம். அதில் மெல்ல மெல்ல நெருங்கி முதல் இடத்தைப் பிடித்து விட்டது "ஜில்லென வீசும் பூங்காற்று" என்ற திருதிரு துறு துறு படப்பாடல். பொதுவாகவே புதிய பாடகர்களில் ஆண் பெண் குரல்கள் இணைந்த பாடல்களில் இப்போதெல்லாம் ஒரே அலைவரிசையில் இயங்கும் குரலிசையைக் காண்பதரிது. ஆனால் இந்தப் பாடலில் சேர்ந்த ஹரிச்சரண், சைந்தவி குரல்கள் இரண்டும் ஒத்திசைக்கின்றன மெல்லிசையாக. அதிலேயே பாடலின் முதல் வெற்றி நிரூபணமாகிவிட்டது. குறிப்பாக இருவருமே தமது வழக்கமான குரலில் இருந்து இறங்கி கீழ்ஸ்தாயியில் பாடும் பாங்கு. சாக்சபோனை கஞ்சத்தனமாக உபயோகித்துக் கம்பீரமாக முத்திரை பதிக்கும் இசையில் கிட்டாரோடு மேலும் இசைந்த மேற்கத்தேய வாத்தியக் கருவிகள் எல்லாமே பாடலின் தாற்பரியம் உணர்ந்து தாழ்வுமனப்பான்மையோடு உழைத்திருக்கின்றன.

இந்தப் பாடலை கல்யாண ரிஸப்ஷன் வீடியோவில் இணைத்துப் பாருங்கள் ஒரு புது அர்த்தம் கிட்டும்.

திருதிரு துறுதுறு படத்தை இன்னும் பார்க்கவில்லை, படத்தின் இயக்குனர் நந்தினி ஜே.எஸ் என்ற பெண்ணாம். இந்தப் பாடல் கொடுத்த சுகந்தத்தில் பாடலாசிரியர் முத்துக்குமாராகத் தான் இருக்கும் என்ற ஆவலில் தேடினால் எழுதியவர் லலிதா ஆனந்த் என்ற புதுமுகக் கவிஞராம். கவிஞரே உங்களின் பாடல்வரிகளின் பொருளுணர்ந்து உயிர்கொடுத்த மணிஷர்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.எப்போது என்னில் கலந்தாய் நீ.....
ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா

ஓசைகள் ஏதும் இல்லாமல் வெய்யிலின் வண்ணம்தான்
ஓவியமானது அப்போதுதானா

விண்மீன்கள் யாவும் அன்று பல கண்களாக மாறி
நமை உற்றுப்பார்த்த போது தானா

நம் சுவாசம் கூட அன்று இரு கைகளாக மாறி
மெல்ல தொட்டுக் கொண்ட போது தானா

ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா

தலையணை உள்ளே அன்று நான்
பறவைகள் பாடும் ஓசை கேட்ட பொழுதா

உலர்த்திய போது அன்று என் உடைகளின்
உந்தன் பார்வை உதிர்ந்த பொழுதா

மணல்வெளியில் பாதம் கோடி
உன் சுவடை பார்க்கும் போதா

எப்போது என்னில் கலந்தாய் நீ.....

ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா

மழைத்துளி எல்லாம் அன்று பல நிறங்களில்
உந்தன் மீது விழுந்த பொழுதா

பனித்துளி உள்ளே அன்று ஓரழகிய
வானம் கண்டு ரசித்த பொழுதா

குளிரிரவில் தென்றல் தீண்ட
உன் விரல் போல் தெரிந்து போனாய்

எப்போது என்னில் கலந்தாய் நீ.....

Thursday, March 10, 2011

கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா


படத்தின் காட்சியோட்டத்திற்கு அமைய குறித்த கதாபாத்திரத்தை ஆறுதற்படுத்துமாற்போல அமையும் அசரீரிப் பாடலைக் காட்சியின் பின்புலத்தில் அமைத்து விடுவது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்துச் சங்கதி. இப்படியாக அமையும் பாடலின் தொனி குறித்த கதாபாத்திரத்தின் மீது அனுதாபம் தொனிக்கும் விதத்தில் ரசிகன் கொடுக்கும் ஒத்தடமாகக் கூட அமைந்து விடுவதுண்டு. அப்படி அமைந்த ஒரு பாடலை நீண்ட நாட்களுக்குப் பின்னர் கேட்டபோது சங்கிலிக் கோர்வையாக இப்பாடலை ரசித்த காலங்களும் நினைவுக்கு வந்தது.

தென்றல் சுடும் திரைப்படம் 1988 ஆம் ஆண்டு ராதிகா, நிழல்கள் ரவி நடிப்பில் கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத, இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்த படம். இந்தப் படம் ஹிந்தி நடிகை ரேகா நடித்த ஒரு ஹிந்திப்படத்தின் தழுவல் கூட. இப்படத்தின் பாடல்கள் வெளிவந்த காலகட்டத்தில் "தூரி தூரி துமக்க தூரி" என்ற வாலி எழுதிய பாடலை முணுமுணுக்காத ஆட்களே கிடையாது. நிழல்கள் ரவியால் ஏமாற்றப்படும் ராதிகாவின் போராட்டங்களும், பழிவாங்குதலையும் கதைக்கருவாகக் கொண்டது இப்படம். இப்படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடல் தான் முக்கியமாக இங்கு பேசப்படப்போகிறது. அதுதான்
"கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா" என்ற இளையராஜா எழுதி இசையமைத்த பாடல். பதிவின் முதற்பந்தியில் சொன்ன விஷயங்களைத் தான் இப்பாடல் தொனிக்கிறது.
போராட்டங்களைச் சந்திக்கும் அந்த அபலைப்பெண்ணுக்கு ஆறுதல் கூற வருகின்றது இசைஞானி இளையராஜாவின் குரல். சோகம் இழையோடும் இசை அந்தப் பெண்ணின் மன உணர்வுகளின் வடிகாலாக வரும் போது அதனோடு இழையும் பாடலின் வரிகள் அவளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகப் பின்னப்பட்டிருக்கின்றது. இப்படியான பாடலை அதிமேதாவித்தனமான பாடகர் யாராவது பாடியிருந்தால் அது வெறும் உபதேசமாகத் தான் வந்து விழுந்திருக்கும். ஆனால் பாமரத்தனமாக தொனிக்கும் எளிமையான வரிகள் இசைஞானியின் குரலில் அவளுக்கு ஆறுதலாகவும் அதே சமயம் தன்னம்பிக்கையைப் போதிக்கும் வண்ணமாகவும் அமைந்து விடுகின்றது. பாடலில் உபயோகிக்கப்பட்ட வாத்தியக்கருவிகள் குறிப்பாக ஆர்ப்பரிக்கும் வயலின் இசை அவளின் மனப்போராட்டத்தினைத் தொனிக்க, மெல்லென மிதந்து வரும் புல்லாங்குழல் இசை ராஜாவின் அந்த உபதேசங்களுக்குத் தலையாட்டுமாற்போல அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக "கண்ணம்மா கண்ணம்மா கொடிக்கோர் கொம்பு தான் உள்ளதா இல்லையா சொல்" போன்ற அடிகளைக் கேட்டுப்பாருங்கள் உணர்ந்து கொள்வீர்கள். காட்சிப்புலத்தை உணர்ந்து தக்கவேளை அசரீரியாக அமைந்துவிடும் ராஜாவின் பாடல்களில் இந்தப் பாடலுக்குத் தனி முத்திரை உண்டு.இப்படியான அசரீரி போலத் தொனிக்கும் பாடல்களை ராஜாவுக்கு முன்னோடியாகக் கொடுத்தவகையில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் "எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே" என்ற சிவகாமியின் செல்வன் திரைப்படப்பாடலை முன் சொன்ன பாடலோடு பொருத்திப் பார்த்து ஒப்பு நோக்க முடிகின்றது. கிட்டத்தட்ட இரண்டு சூழ்நிலைகளிலும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்ட அபலை ஒருத்தியை ஆற்றுப்படுத்தும் பாடலாக அமைகின்றதுமீண்டும் ராஜாவுக்கே வருகின்றேன். என் உயிர்க்கண்ணம்மா என்றதொரு படத்தில் வரும் "பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி" என்ற பாடலும் இந்த சூழ்நிலைப் பாடல்களோடு மூன்றாவதாக வைத்துப் பார்க்க வேண்டிய பாடல். ஆனால் இந்தப் பாடல் குறித்த பாத்திரத்திரத்தை நோக்கிப் பாடும் வண்ணம் அமையாமல் பொதுவான காட்சிப் பின்புலத்துக்கான பாடலாக அமைகின்றது.