Pages

Thursday, December 30, 2021

⚡️ மின்னல் முரளி ❤️ ⚡️

இந்தப் படத்தைப் பாதி கடக்கும் போது ஒருவர் மீது பெரும் எரிச்சல் வந்தது. 

அவர் வேறு யாருமல்ல குரு சோமசுந்தரம் தான்.

அந்தக் கடுப்பு குரு சோமசுந்தரம் என்ற நடிகன் மீதல்ல, அவர் ஏற்றிருந்தது “சிபு” என்ற அந்தப் பாத்திரம் மீது. அந்த அளவுக்கு பார்வையாளனுக்கு வெறுப்பை அள்ளி விதைக்கக் கூடிய, போகிற போக்கில் அள்ளி வீசி விட்டுப் போகும் யதாத்த நாயகனாக மிளிர்ந்தார்.

அதே சமயம், அந்த சுய நிலை பிறழ்ந்த சிபுவுக்குள் இருக்கும் ஒரு காதல், அதை அப்படியே மெல்ல மெல்ல விரித்துக் காட்டும் பாங்கு என்று சினிமாத்தனமே இல்லாத உணர்வோட்டம்.


அதுவும் ஒரு பக்கம் ஊரே திரண்டு வந்து சிபுவை அழிக்க நினைக்கும் போது, தன் காதலி இப்போதாவது தன் தூய அன்பைக் கண்டுணர்ந்தாளே என்ற பெருமிதத்தில் அவளின் கையை வாஞ்சையோடு அள்ளி முகத்தில் ஒற்றிக் கொஞ்சி உடைந்துருகும் கணத்தில் அப்படியே தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார் படத்தின் எல்லாக் கதாபாத்திரங்களையும். இந்தப் படத்தின் நிஜ நாயகன் இவரே.

ஏமாற்றம் எழும் போது தன் உதட்டைப் பிரித்து வெற்றுச் சிரிப்பால் காட்டி விட்டு நடத்தும் ஊழித் தாண்டவம் இருக்கே அப்பப்பா....இயக்குநர் ராஜூ முருகன் “ஜோக்கர்” படத்தின் கதையை குரு சோமசுந்தரத்திடம் போகிற போக்கில் சொன்ன போது, 

“ஏன் என்னையே நாயகனாக்கி விடுங்களேன்” என்று கேட்டாராம்.

அவ்வளவு தன்னம்பிக்கை கொண்ட ஒரு நடிகன். 

தலைவாசல் விஜய், பசுபதி என்று நம் சமகாலத்துக் குணச்சித்திரங்களை மலையாள உலகம் சுவீகரித்து வெகு அழகான பாத்திரங்களை எல்லாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். 

இந்த வரவுகளில் சமீபத்தில் குரு சோமசுந்தரத்தை அள்ளிக் கொண்டு போய் விட்டார்கள்.

அந்த வகையில் தமிழர்கள் ஏமாளிகள் தான்.

“மின்னல் முரளி” படம் ஒரு அமானுஷ்ய சக்தியை மையப்படுத்திய சாகச நாயகன், வில்லன் என்ற கதைக் கோட்டில் இருந்தாலும், இதனை இந்தியச் சூழலுக்கு குறிப்பாக தென்னிந்தியச் சுழலுக்கான ஒரு எளிமையான கதையோட்டத்தில் கொடுத்த விதத்திலும் சேட்டன்கள் அடிப்பொளி ஆக்கி விட்டார்கள்.

இன்று கனவு நாயகனாக நவ நாகரிகத்தில் மிளிரும் டோவினோ தாமஸ் ஐக் கூட ஒரு சாதாப் பேர்வழி ஆக்கி, அவர் பின்னால் சுற்றும் காதலி, கைகொடுக்கும் கராத்தே பெண்மணி என்று யாருக்குமே சினிமாத்தனம் பொருந்திய அழகில்லை. எல்லோருமே இயல்பான கிராமத்தான்கள். 

ஏன் சுசின் ஷியாமின் இசை கூட ஒரு தளர்ந்த கிட்டாரிசையும், மெல்லிய ஆவர்த்தனங்களுமாகத் தான் பல இடங்களில். முக்கிய காட்சிகளில் கூட இசையில் பிரமாண்டம் அதி உச்சமாகத் தொனிக்கவில்லை. ஆனால் அதுதான் இந்த எளிய சினிமாவின் அணிகலனாக அமைந்திருக்கின்றது.

படத்தின் எல்லாப் பாத்திரங்களுமே அஞ்சு வர்க்கீஸ் உட்பட, அவரவர் எல்லையில் இருந்து சிறப்பாகப் பண்ணியிருந்தாலும் அந்த சகோதரி மகன் குண்டுக் கண்ணாடி சகிதம் தன் மாமனின் அமானுஷ்ய சக்தியை அறிந்த ஒரேயொருவனாகக் கொடுப்புக்குள் சிரிப்பும், திகில் காட்டும் முகமுமாக நவரசச் சிறுவன்.


“ஆண்டவர் நம்மை நோக்கி வருவார்” என்று போதனை செய்யும் அந்த செபக் கூட்டத்தின் சுவரை உடைத்துக் கொண்டு பாயும் மின்னல் முரளி, “என் மூஞ்சில குத்திய அவன் மூஞ்சியைப் பதம் பார்க்காம விடமாட்டேன்” என்ற சபதம் வைக்கும் கராத்தேப் பெண்மணி “ப்ரூஸ்லீ பிஜி” மின்னல் முரளியை அடையாளம் கண்டு அவனுக்குக் குத்து விட்டுத் தன் சபதத்தை நிறைவேற்றிய பின்னர் தான் அவனிடம் காது கொடுத்துக் கேட்பது என்று சின்னச் சின்ன நுணுக்கமான எள்ளல்கள் படம் முழுக்க.

தொண்ணூறுகளில் மலையாள சினிமா உலகின் ஜனகராஜ் தனமான ஹாஸ்ய நாயகன் ஹரிஶ்ரீ அசோகன் இங்கே ஒரு அனுதாபத்தை அள்ளிப் போகும் வறிய அண்ணனாக. அந்தத் தொங்கும் கண்களின் பரிதவிப்பிலேயே மனுஷன் ஒரு தேசிய விருதுக்கான உச்சத்தைத் தொட்டு நிற்கிறாரே?

தம் பழைய காதலர்களின் திருமணத்துக்குப் போகாவிட்டால் நமக்குப் பொறாமை என்று ஊர் சொல்லும் என்று கல்யாணத்துக்குக் கிளம்புவது, அந்தப் புறக் கிராமத்தின் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் எளிமை, ஒரு சூப்பர் ஹீரோ கதையிலும் கையில் கிடைத்த லுங்கியையோ, வேட்டியையோ முகத்தில் புதைத்து விட்டு உருமாற்றிப் பயணிக்கும் மின்னல் “முரளிகள்” என்று செதுக்கியிருக்கிறார்கள்.

படத்தின் தொடக்கத்தையும், முடிவையும் தீயோடு முடிச்சுப் போட்டு அலுப்புத்தட்டாது பயணிக்கும் விறுவிறு திரைக்கதை வேறு.

ஒரு சூப்பர் ஹீரோ பின்னணியில் உணர்ச்சிபூர்வமான காதல் கதையையும், வாழத் துடிக்கும் இளைஞனின் போராட்டத்தையும் அழகாக முடிச்சுப் போட்டு மோத விட்ட விதத்தில் “மின்னல் முரளி”களுக்கு ஏராளம் நட்சத்திரங்களை அள்ளி வீசலாம்.

கானா பிரபா

30.12.2021



Monday, December 27, 2021

விடை கொடுத்த பாடகர் மாணிக்க விநாயகம் ❤️



“வீழ மாட்டோம்

நாம் வீழ மாட்டோம்

எங்கள் விரல்கள் யாவும் 

விழுதுகள் ஆனதால்

ஆழி திரண்டு அலைகடல் எம்மைத் தின்றாலும்

ஊழி திரண்டு உயிர்களைத் தின்றாலும்......”

சுனாமிப் பேரலை அனர்த்தத்தை நினைவு கூர்ந்து வெளிவந்த “வீழ மாட்டோம்” இசைவட்டு வெளிவந்து 17 ஆண்டுகள் மிதக்கும் நேரம் அந்தப் பாடல் தொகுப்பில் உரப்போடு அந்த முன் பத்தி வரிகளைப் பாடிய பாடகர் மாணிக்க விநாயகம் அவர்களும் விடைபெற்று விட்டார்.

“அத்த மக நெனப்பு

வெத்தலைக்கு சிவப்பு ஓ…..

ஓ...

கொத்தமல்லி

சிரிப்பு பத்திக்குச்சு நெருப்பு

ஓ....”

அட ! ஒரு துள்ளிசைப் பாடலிலும் கூட இலாகவமாக ஒரு சங்கதியைத் தொட்டும் தொடாமாலும் போகிறாரே என்று பிரமிக்க வைத்தவர். அன்று தொடங்கிய திரையிசை இயக்கம் “கண்ணுக்குள்ள கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி” பாடலும் வந்து இந்த ஆண்டோடு 20 ஐத் தொடுகிறது. 

மரபு ரீதியான திரையிசைப் பாடகர்களைத் தவிர்த்து, சாஸ்திரிய இசை உலகில் கோலோச்சியவர்கள், நாட்டுப் பண் பாடவல்லோரையும் தமிழ்த் திரையிசை உள்வாங்கியிருக்கிறது.

தன் முன்னோர்கள் வழியிலேயே இசையமைப்பாளர் வித்யாசாகர் கன்ஷியாம்வாஸ்வாணி ( நதி எங்கே என்ற உயிரோடு உயிராக படப் பாடல்) கஸல் பாடகரையும், புஷ்பவனம் குப்புசாமி என்ற கிராமிய பண் வித்தகரையும் (தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா – எதிரும் புதிரும்) பாட வைத்த போதும் அவர்களின் தனித்துவ அடையாளங்கள் இன்றித் திரையிசைக்கான மாறுபட்ட சட்டையை அணிவித்து அழகு பார்த்தவர். 

மாணிக்க விநாயகம் அவர்கள் “கண்ணுக்குள்ள கெளுத்தி” பாட வருவதற்கு முன்பே ஆயிரக் கணக்கில் பக்தி இலக்கியங்கள் சமைத்த இசையமைப்பாளர் மற்றும் பாடகர். இவரைக் கூடத் தன்னிசையில் பாட வைத்த போது வித்யாசாகர் கொடுத்த இந்தத் துள்ளிசை தான் ஜனரஞ்சக உலகில் பரவலாகக் கொண்டு போய்ச் சேர்த்தது. எப்படி ஒரு சிறுபத்திரிகையில் கோலோச்சும் இலக்கியக்காரன் விகடன் போன்ற வணிக சஞ்சிகையின் வழி அடையாளம் பெறுவது போன்றதொரு பாங்கு.

ஆனால் தனக்குக் கொடுத்ததை அவர் செம்மையாகவே செய்து காட்டினார் என்பதை மாணிக்க விநாயகம் அவர்கள் தொடந்து பாடிக் குவித்த ஏராளம் இதே மாதிரியான பாடல்கள் உதாரணம் பறையும்.

வித்யா சாகரும் தன்னகத்தே வைத்துக் கொண்டு “கொடுவா மீசை” (தூள்), தீராத தம்மு வேணும் (பார்த்திபன் கனவு) வரிசையில்  ஏராளம் பாடல்களைக் கொடுத்தாலும், பல்வேறு இசையமைப்பாளர்கள் கூட மாணிக்க விநாயகம் அவர்களது திறன் அறிந்து உள்வாங்கிப் பல் பரிமாணங்களில் அவரைப் பயன்படுத்தினார்கள். ஆனால் அவரின் பக்தி இலக்கிய அடையாளத்தைத் தழுவிய பாடல்களைக் கொடுத்ததில்லை. கானா பிரபா

ஈராயிரத்தின் முற்பகுதியில் திரையிசை சாராத தனிப்பாடல்களை வைத்து “நாத விநோதங்கள்” என்றொரு வானொலி நிகழ்ச்சியை நடத்தினேன். எந்தவித முன்னேற்பாடுமின்றி வானொலிக் கலையகத்தில் நுழைந்து, ஏதோவொரு நம்பிக்கையில் அடுக்கியிருந்த இசைவட்டுகளில் ஒன்றை எழுமாற்றாக எடுத்தால் அங்கே மாணிக்க விநாயகம் அவர்கள் பாடிய சாஸ்திரிய இசைத் தொகுப்பு இருந்தது. “தில்” பாடலைக் கேட்டுக் களி கொண்டிருந்த மனதுக்கு அதுவொரு முற்றிலும் புதிய அனுபவமாகத் தொனித்தது. 

புதிய தலைமுறைப் பாடகர்களோடும் தன்னால் ஈடுகொடுத்துப் பாடி, ரசிகர்களைக் கவர முடியும் என்பதற்கு “தேரடி வீதியில் தேவதை வந்தா” பாடல் கச்சிதமான உதாரணம். அங்கே கார்த்திக்கோடு ஈடு கொடுத்துக் கலக்கியிருப்பார்.

“ஏலேலோஓஓஓஓ

எலெலேலேஓஓஓஓஓ”

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

https://www.youtube.com/watch?v=OyC30xjyQ_Y

திப்புவுக்கு அணி சேர்க்கும் இயற்கையின் பாடலுக்கு வள்ளக்காரரின் ஆலாபனையாக மட்டுமே வந்து சேரும் “மாணிக்க” விநாயகம்.

அந்த மாதிரி ஆலாபனையைக் கொஞ்சம் விரித்து நீட்டி அனுபல்லவியாக மாணிக்க வி நாயகம் அவர்களை இருத்தி யுவன் ஷங்கர் ராஜா செய்த கெளரவம் இப்படி விரியும்,

“ஏலே... ஏ.. ஏலேலேலே...

“ஏலே... ஏ.. ஏலேலேலே...

ஒத்த பனை மரத்துல 

செத்த நேரம் உம்மடியில் 

தல வச்சி சாஞ்சிக்கிறேன் 

சங்கதியை சொல்லி தாரேன்.. 

வாடி... நீ வாடி... 

பத்து கண்ணு பாலத்துல 

மேய்ச்சலுக்கு காத்திருப்பேன் 

பாய்ச்சலோடு வாடி புள்ள 

கூச்ச நச்சம் தேவையில்லை.. 

வாடி.. நீ வாடி.. 

“ஏலே... ஏ.. ஏலேலேலே...

“ஏலே... ஏ.. ஏலேலேலே...

செவ்விளனி சின்ன கனி..

உன்ன சிறையெடுக்க போறேன் வா நீ..”

“ஐயய்யோ என் உசுருக்குள்ள

தீயை வச்சான் ஐயய்யோ.....” 

https://www.youtube.com/watch?v=INo1LHK8GVM

அப்படி ஒரு கிராமிய சங்கீத வித்தகராகவும் மாணிக்க விநாயகத்தையும் அடையாளப்படுத்திய அற்புதம் அது.

கானா பிரபா

“இசைப் பேரறிஞர்” வழுவூர் இராமையாப்பிள்ளை என்ற புகழ்பூத்த பரத நாட்டிய மேதையின் மகனாகப் பிறந்தாலும், தனி அடையாளத்தோடே தன்னை வளர்த்து இசையுலகில் ஆண்டு விட்டுப் போயிருக்கிறார். தன்னுடைய மாமனாராகவும், இசைக் குருவாகவும் “தமிழ் இசைச் சித்தர்” சி.எஸ்.ஜெயராமனைப் பெற்று அவர் வழியே பன்முகப் பாடகராகவும் இன்றைய தலைமுறைக்குத் திகழ்ந்து விட்டுப் போயிருக்கிறார்.

“தாய் சொல்லும்

உறவை வைத்தே உலகம் சொந்தம் 

தாய் உள்ள

வரையில் தானே கிராமம்

சொந்தம்......

17 வயசு

வரைக்கும் நீ வாழும்

வாழ்க்கை தானே

பாலூட்டும் காலம்

வரைக்கும் கூட வரும்....”

https://www.youtube.com/watch?v=UrVHmZh-B4k

என்று தன்னையும் உருக்கிக் கேட்பவனையும் உருக்கும் வல்லமை மிகுந்த பாடகர் இவர்.

“கையோடு அள்ளிய

தண்ணி விரலோடு கசிவது

போல கண்ணோடு நினைவுகள்

எல்லாம் கசிகிறதே……”

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றே அசரீரிப் பாடல்களுக்குக் கச்சிதமாக அமைந்த குரல் மாணிக்க விநாயகம் அவர்களுடையது. அப்படியே புரட்டிப் போட்டது போல “விடை கொடு எங்கள் நாடே” பாடலில் அந்தப் பாடகர் கூட்டணியில் கலந்து போகும் மாணிக்க விநாயகம் அவர்களது குரல் குடத்தில் இருந்து வழியும் நீர் நேர் கோடாய்ச் சீமெந்துத் தரையில் இழுத்துப் போவது போலக் வழிந்துருகும். 

"பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்

மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்

கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை

கடைசியாக பார்க்கின்றோம்........

விடை கொடு எங்கள் நாடே

கடல் வாசல் தெளிக்கும் வீடே

பனை மரக் காடே, பறவைகள் கூடே

மறுமுறை ஒரு முறை பார்ப்போமா...."

ஆழ்ந்த இரங்கல்கள் மாணிக்க விநாயகம் ஐயா !


கானா பிரபா

27.12.2021


Monday, December 20, 2021

“உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது” பாடகர் யுகேந்திரன்



1999 வாக்கில் மெல்பர்னில் நான் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினரோடு கங்கை அமரன் இசைக்குழுவும் வந்து இசைக்கச்சேரி படைத்திருந்தார்கள். என்னளவில் தென்னிந்திய இசை நட்சத்திரங்களைப் பிரமிப்போடு பார்த்த முதல் மேடை அது. அந்த நிகழ்வு முடிந்த பின்னர், கூட்டம் மெல்ல மெல்லக் கலைந்தாலும் நான் ஓரமாக நின்று மெல்ல மெல்ல மேடையில் நின்று கொண்டிருந்த கங்கை அமரன் பக்கம் போனேன் தயக்கத்தோடு.
“சார்!”
என் குரலைக் கேட்டதும் மேடையில் நின்றிருந்தவர் கிட்ட வந்து கையை இறுக்கினார்.
“பூஞ்சோலை எப்போ வரும்?”
என் கேள்வியை எதிர்பார்த்தவர் போல
“கண்டிப்பாக வரும் வரணும்”
என்று விட்டு விடை கொடுத்தார். இசைப்பிரபலத்துடனான என் முதல் பேட்டியும் அதுதானோ 
“பூஞ்சோலை” படம் ஏன் வரவேண்டும் என்ற ஆவலைக் கிளப்பியதற்கு முதற்காரணம்
““உன் பேரைக் கேட்டாலே இனி எதுவும் தோணாது”
இந்தப் பாடல் வெளிவந்த நாட் கொண்டு பித்துப் பிடித்தது போலக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் இந்தப் பாடலைப் பாடிய போது வயது 20. இணைந்து ராஜாவின் மகள் பவதாரணி பாடினார்.
மனோஜ் - கியான் இரட்டையர் இசையில் வெளிவந்த விஜயகாந்த் படமான "உழவன் மகன்" திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வித்யா பாடிய "செம்மறியாடே செம்மறியாடே செய்வது சரிதானா" என்ற பாடலின் இடையில் வரும் மழலைக் குரல் தான் யுகேந்திரன் பாடகராக அறிமுகமானது.
ஆனால் என் கணிப்பில் அவர் வளர்ந்த பாடகராக முதன் முதலில் பாடியது ‘பூஞ்சோலை’ படத்தின் “உன் பேரைக் கேட்டாலே” பாடல் தான்.
உண்மையில் இந்த மாதிரித் தாழ்ந்த தொனியில் யுகேந்திரனுக்கு இன்னும் ஏராளம் பாடல்கள் கிட்டியிருக்க வேண்டும். அவ்வளவுக்கு அற்புதமாகக் கலக்கியிருப்பார் இந்தப் பாடலில்.
கங்கை அமரன் தன் மகன் வெங்கட் பிரபுவை போட்டு எடுத்திருந்த "பூஞ்சோலை" திரைப்படத்தில் இளையராஜா இசையில் "உன் பேரைக் கேட்டாலே" என்ற பாடலை பவதாரணியுடன் சேர்ந்து பாடினார் யுகேந்திரன். அந்தப் படம் பத்து வருஷங்களுக்கு மேலாகக் கிடப்பில் இருக்கின்றது. "ஒருவன் ஒருவன் முதலாளி" என்ற பெயரில் அதனைப் பெயர் மாற்றி 2006 ஆம் ஆண்டில் மீண்டும் கொண்டு வர இருந்தார்கள். அப்படியும் வரவில்லை.
இங்கே ஒரு வினோத ஒற்றுமையைக் குறிப்பிட வேண்டும்.
எப்படி யுகேந்திரன் வளர்ந்த பாடகராக இளையராஜா இசையில் அடையாளப்பட்டாரோ, அது போலவே குழந்தைக் குரலாக இருந்த சரணுக்கு “புண்ணியவதி” படத்தில் கொடுத்தார் “உனக்கொருத்தி பொறந்திருக்கா” பாட்டு. அதுவும் பூஞ்சோலை போல வெளிவராத படம் ஆயிற்று. இந்த வாரிசுகள் எல்லாரும் சேர்ந்து நடித்த “காதல் சாம்ராஜ்யம்” பாடல்கள் வெளிவந்தும் 20 வருடம் கடந்து விட்டது.
அதன் பின்னர் தேவாவின் இசையில் "பொற்காலம்" திரைக்காக "சின்னக் காணங்குருவி ஒண்ணு" என்ற பாடலைப் பாடினார்.அதுவும் இசைத்தட்டில் வந்ததோடு சரி. படத்தில் வரவில்லை. இவர்களை எல்லாம் கடந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் அருள் யுகேந்திரனுக்குக் கிடைக்கவே "பூவேலி" திரைப்படத்தில் "பொள்ளாச்சி சந்தையிலே" என்ற பாடலைப் பாடி நல்லதொரு அறிமுகத்தைப் பெற்றார். தொடர்ந்து பரத்வாஜின் இசையில் நிறையப் பாடல்களைப் பாடியிருக்கின்றார் இவர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் "காதலர் தினம்" திரைக்காக "ஓ மரியா" பாடலை தேவனுடன் இணைந்து பாடியும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "முதன் முதலாய்" பாடலை மதுமிதாவுடன் இணைந்தும் பாடி அந்தப் பாடல்கள் பிரபலமாயிருக்கின்றன. "வீரமும் ஈரமும்" என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கின்றார்.
சிங்கப்பூர் ஒலி வானொலியில் நிகழ்ச்சி படைத்திருந்த மாலினி என்னும் அறிவிப்பாளர் இலங்கையின் சுவர்ண ஒலி என்ற வானொலியின் நிகழ்ச்சிப் பணிப்பாளராகச் சென்றபோது அந்த நேரத்தில் கெளரவ அறிவிப்பாளராக வந்து நிகழ்ச்சி படைத்திருந்த யுகேந்திரனுடன் காதல் மலர்ந்து சிங்கப்பூரையும் தமிழ்நாட்டையும் கொழும்பு இணைத்தது 😉
அவர்தான் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன். இவரது தங்கை பிரசாந்தியும் வளர்ந்து வரும் பின்னணிப் பாடகிகளில் ஒருவர். இவர் பின்னாளில் பாடகராகவும், நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றைய தொகுப்பிலே யுகேந்திரன் பாடிய சிறந்த பாடல்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்கின்றேன். கேட்டு மகிழுங்கள்.
யுகேந்திரன் மழலையாகப் பாடிய "செம்மறி ஆடே" பாடல் உழவன் மகன் படத்திலிருந்து
மனோஜ் கியான் இசையில் இணைந்து பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வித்யா
தேவாவின் இசையில் பொற்காலம் திரையில் வரும் "சின்னக் காணாங்குருவி ஒண்ணு" தன் தந்தை மலேசியா வாசுதேவனுடன்
பரத்வாஜின் இசையில் பார்த்தேன் ரசித்தேன் படத்திற்காக ரேஷ்மியுடன் "பார்த்தேன் பார்த்தேன்"
சித்ரா சிவராமனுடன் பாண்டவர் பூமி திரைக்காக "தோழா தோழா" பரத்வாஜ் இசையில்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லேசா லேசா திரைப்படத்தில் இருந்து "முதன் முதலாய" இணைந்து பாடியவர் மதுமிதா
ஆட்டோ கிராப் திரையில் இருந்து " கிழக்கே பார்த்தேன்" பரத்வாஜ் இசையில்
சபேஷ் முரளி இசையில் தவமாய் தவமிருந்து திரைக்காக "என்ன பார்க்கிறாய்" இணைந்து பாடியவர் சுசித்ரா
கானா பிரபா

1999 வாக்கில் மெல்பர்னில் நான் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினரோடு கங்கை அமரன் இசைக்குழுவும் வந்து இசைக்கச்சேரி படைத்திருந்தார்கள். என்னளவில் தென்னிந்திய இசை நட்சத்திரங்களைப் பிரமிப்போடு பார்த்த முதல் மேடை அது. அந்த நிகழ்வு முடிந்த பின்னர், கூட்டம் மெல்ல மெல்லக் கலைந்தாலும் நான் ஓரமாக நின்று மெல்ல மெல்ல மேடையில் நின்று கொண்டிருந்த கங்கை அமரன் பக்கம் போனேன் தயக்கத்தோடு.

“சார்!”

என் குரலைக் கேட்டதும் மேடையில் நின்றிருந்தவர் கிட்ட வந்து கையை இறுக்கினார். 

“பூஞ்சோலை எப்போ வரும்?” 

என் கேள்வியை எதிர்பார்த்தவர் போல

“கண்டிப்பாக வரும் வரணும்” 

என்று விட்டு விடை கொடுத்தார். இசைப்பிரபலத்துடனான என் முதல் பேட்டியும் அதுதானோ 

“பூஞ்சோலை” படம் ஏன் வரவேண்டும் என்ற ஆவலைக் கிளப்பியதற்கு முதற்காரணம் 

““உன் பேரைக் கேட்டாலே இனி எதுவும் தோணாது”

https://www.youtube.com/watch?v=nCmy8JLcvIQ

இந்தப் பாடல் வெளிவந்த நாட் கொண்டு பித்துப் பிடித்தது போலக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் இந்தப் பாடலைப் பாடிய போது வயது 20. இணைந்து ராஜாவின் மகள் பவதாரணி பாடினார்.

மனோஜ் - கியான் இரட்டையர் இசையில் வெளிவந்த விஜயகாந்த் படமான "உழவன் மகன்" திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சசிரேகா பாடிய "செம்மறியாடே செம்மறியாடே செய்வது சரிதானா" என்ற பாடலின் இடையில் வரும் மழலைக் குரல் தான் யுகேந்திரன் பாடகராக அறிமுகமானது.

ஆனால் என் கணிப்பில் அவர் வளர்ந்த பாடகராக முதன் முதலில் பாடியது ‘பூஞ்சோலை’ படத்தின் “உன் பேரைக் கேட்டாலே” பாடல் தான்.

உண்மையில் இந்த மாதிரித் தாழ்ந்த தொனியில் யுகேந்திரனுக்கு இன்னும் ஏராளம் பாடல்கள் கிட்டியிருக்க வேண்டும். அவ்வளவுக்கு அற்புதமாகக் கலக்கியிருப்பார் இந்தப் பாடலில்.

கங்கை அமரன் தன் மகன் வெங்கட் பிரபுவை போட்டு எடுத்திருந்த "பூஞ்சோலை" திரைப்படத்தில் இளையராஜா இசையில் "உன் பேரைக் கேட்டாலே" என்ற பாடலை பவதாரணியுடன் சேர்ந்து பாடினார் யுகேந்திரன். அந்தப் படம் பத்து வருஷங்களுக்கு மேலாகக் கிடப்பில் இருக்கின்றது. "ஒருவன் ஒருவன் முதலாளி" என்ற பெயரில் அதனைப் பெயர் மாற்றி 2006 ஆம் ஆண்டில் மீண்டும் கொண்டு வர இருந்தார்கள். அப்படியும் வரவில்லை.

இங்கே ஒரு வினோத ஒற்றுமையைக் குறிப்பிட வேண்டும்.

எப்படி யுகேந்திரன் வளர்ந்த பாடகராக இளையராஜா இசையில் அடையாளப்பட்டாரோ, அது போலவே குழந்தைக் குரலாக இருந்த சரணுக்கு “புண்ணியவதி” படத்தில் கொடுத்தார் “உனக்கொருத்தி பொறந்திருக்கா” பாட்டு. அதுவும் பூஞ்சோலை போல வெளிவராத படம் ஆயிற்று. இந்த வாரிசுகள் எல்லாரும் சேர்ந்து நடித்த “காதல் சாம்ராஜ்யம்” பாடல்கள் வெளிவந்தும் 20 வருடம் கடந்து விட்டது.

அதன் பின்னர் தேவாவின் இசையில் "பொற்காலம்" திரைக்காக "சின்னக் காணங்குருவி ஒண்ணு" என்ற பாடலைப் பாடினார்.அதுவும் இசைத்தட்டில் வந்ததோடு சரி. படத்தில் வரவில்லை. இவர்களை எல்லாம் கடந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் அருள் யுகேந்திரனுக்குக் கிடைக்கவே "பூவேலி" திரைப்படத்தில் "பொள்ளாச்சி சந்தையிலே" என்ற பாடலைப் பாடி நல்லதொரு அறிமுகத்தைப் பெற்றார். தொடர்ந்து பரத்வாஜின் இசையில் நிறையப் பாடல்களைப் பாடியிருக்கின்றார் இவர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் "காதலர் தினம்" திரைக்காக "ஓ மரியா" பாடலை தேவனுடன் இணைந்து பாடியும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "முதன் முதலாய்" பாடலை மதுமிதாவுடன் இணைந்தும் பாடி அந்தப் பாடல்கள் பிரபலமாயிருக்கின்றன. "வீரமும் ஈரமும்" என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கின்றார்.

சிங்கப்பூர் ஒலி வானொலியில் நிகழ்ச்சி படைத்திருந்த மாலினி என்னும் அறிவிப்பாளர் இலங்கையின் சுவர்ண ஒலி என்ற வானொலியின் நிகழ்ச்சிப் பணிப்பாளராகச் சென்றபோது அந்த நேரத்தில் கெளரவ அறிவிப்பாளராக் வந்து நிகழ்ச்சி படைத்திருந்த யுகேந்திரனுடன் காதல் மலர்ந்து சிங்கப்பூரையும் தமிழ்நாட்டையும் கொழும்பு இணைத்தது 😉

அவர்தான் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன். இவரது தங்கை பிரசாந்தியும் வளர்ந்து வரும் பின்னணிப் பாடகிகளில் ஒருவர். இவர் பின்னாளில் பாடகராகவும், நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றைய தொகுப்பிலே யுகேந்திரன் பாடிய சிறந்த பாடல்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்கின்றேன். கேட்டு மகிழுங்கள். 

யுகேந்திரன் மழலையாகப் பாடிய "செம்மறி ஆடே" பாடல் உழவன் மகன் படத்திலிருந்து

மனோஜ் கியான் இசையில் இணைந்து பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சசிரேகா

https://www.youtube.com/watch?v=hAeKsg9TUcA

தேவாவின் இசையில் பொற்காலம் திரையில் வரும் "சின்னக் காணாங்குருவி ஒண்ணு" தன் தந்தை மலேசியா வாசுதேவனுடன்

https://www.youtube.com/watch?v=RiPux2MXUd4

பரத்வாஜின் இசையில் பார்த்தேன் ரசித்தேன் படத்திற்காக ரேஷ்மியுடன் "பார்த்தேன் பார்த்தேன்"

https://www.youtube.com/watch?v=cCL2lcAan8Q

சித்ரா சிவராமனுடன் பாண்டவர் பூமி திரைக்காக "தோழா தோழா" பரத்வாஜ் இசையில்

https://www.youtube.com/watch?v=GdRFWtp1298

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லேசா லேசா திரைப்படத்தில் இருந்து "முதன் முதலாய" இணைந்து பாடியவர் மதுமிதா

https://www.youtube.com/watch?v=OtI9LsNgJBY

ஆட்டோ கிராப் திரையில் இருந்து " கிழக்கே பார்த்தேன்" பரத்வாஜ் இசையில்

https://www.youtube.com/watch?v=Ybri1L10Dfk

சபேஷ் முரளி இசையில் தவமாய் தவமிருந்து திரைக்காக "என்ன பார்க்கிறாய்" இணைந்து பாடியவர் சுசித்ரா

https://www.youtube.com/watch?v=XrJqwCX5z-U

கானா பிரபா

Sunday, December 19, 2021

நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை..💖


இந்த மார்கழி மாதத்து விடியலில் இன்றைய காலை உடற்பயிற்சியில் என் வேக ஓட்டத்தோடு மெதுவாக ஆமை நடை போட்டுக் கொண்டு வந்தது  காதுக்குள் இந்தப் பாட்டும்.
ஆனால் “ஆமையும் முயலும்” கதை போல உடற்பயிற்சி முடிந்த பின்னரும் இந்த ஆமை தான் வெற்றி வாகை சூடி என்னை ஆக்கிரமித்திருக்கிறது.

“நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை....”

https://www.youtube.com/watch?v=XVtRj1KDXV8

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இளையராஜா இசையில் முதன் முதலில் பாடிய பாட்டு. எஸ்பிபியும், எஸ்.ஜானகியும் அடுத்த தசாப்தத்தை மெல்லிசையாலும், துள்ளிசையாலும் தன்னிசையில் கலக்கப் போகிறார்கள் என்று அறிந்தோ அறியாமலோ கொடுத்த “மெது நடைப் பாட்டு”. காதுக்குள் கிசுகிசுக்கும் தாழ் ஒலியில் பாட வேண்டும். வரிகளில் ஆழம் நிறைந்தாலும், ஒரு மாயக் கயிறு கட்டி அதற்குக் கீழே இருந்து பாடுமாற் போல பாட வேண்டும் என்று பயணிக்கும்.
“மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு” என்று இந்தப் பாட்டைச் சொல்லி விடலாம்.

“மாதங்களில் நான் மார்கழி” என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொன்னது போல, இங்கே “திருவாய்மொழியையும்’,
நிகழ்ந்து கொண்டிருக்கும் திருவெம்பாவைக் காலத்தில்
“திருவாசகத்தையும்” இணைத்து ஒரு சைவ, வைணவக் கலவை ஒப்பீட்டோடு

“திருவாய் மொழி, திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்...”

அப்படியே அவற்றை இணைத்து அடுத்த சங்கதியில்
“உன் வாய் மொழி, மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை….”

இப்படி காதல் பாட்டுகளில் தன் “கண்ணனை” அதிகம் அழைத்து வருவார் கவிஞர் வாலியார். “கிருஷ்ண கானம்” படைத்த “கண்ணதாசனும்” என்ன சளைத்தவரா என்னுமாற்போல அந்தத் திருவாய்மொழிப் பிரயோகம்.

இந்தப் பாடலின் காட்சியமைப்பிலேயே புறச்சூழல் சப்தங்கள், அந்த சுவர்க்கடிகாரத்தின் பெண்டுலத்தில் தொடங்கி இயற்கையின் ஓசைகளும் கலந்து வரும். இந்த மாதிரியான செயற்கை ஒலி இணைப்பின் ஆதிக்கத்தை ராஜா பின்னாளில் கை விட்டுவிட்டார். தான் கொடுக்கும் வாத்திய இசையிலேயே அந்த உணர்வைக் கடத்தும் உத்தியைக் கைக்கொண்டு விட்டார்.

அந்த கிட்டார் ஓசை ஆகா, இந்த வாத்தியத்தைப் படிப்போருக்கு ஒரு பால பாட இசைக் குறிப்பைக் கொடுக்கும். அப்படியே
“ஏழிசை பாடும் இமைகள் இரண்டும் பட பட பட வென வரும் தாபங்கள்”
தொடங்கும் மிதப்பில் அந்த கிட்டார் முன்னே வந்து வாசித்து விட்டுப் போகும் ஜாலம் ஆகா. இந்தாருங்கள் கைதட்டுகள்.

“இடையில் தீராத போதை...... “

சொல்லி விட்டுத் தன் அக்மார்க் சங்கதியைப் போடுவார் பாருங்கள்
“ஹா...ஆஆஆ....”

என்னடா இது ஒத்திகையில் வராத சங்கதியை சுப்பிரமணி பாடுறானே என்று எஸ்,ஜானகி திகைத்து விட்டு இருடா தம்பி கவனிக்கிறேன் என்பதைப் போல அடக்கியே வாசித்து ,
அடுத்த சரணத்தில் 
சிறுகதை ஒருநாள் தொடர்கதை 
ஆனால் அது தான் ஆனந்த எல்லை.ஈஈஈ.... .

இதே மாதிரியான இடத்தில் தானே கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட் போட்டாய் தம்பி?” என்று தானும் பதிலுக்கு இழுத்து விட்டு இன்னும் முடியவில்லை கணக்கு என்று எஸ்பிபியைப் பாட வைப்பார்

அவரும் 
“நான் பேச வந்தேன்”

ஜானகி “ஹாஆஆஆஆ”

“சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை”

ஜானகி “ஆஆஆ….”

ஆஹா இந்த மாதிரியான ஒலிப்பதிவுக்கூடக் காட்சியை அப்படியே ஒற்றினால் போலக் காட்சிப்படுத்தினாலேயே அது காலாகாலத்துக்கும் ஒரு ரசனைப் பொக்கிஷமாக இருக்குமே?
அன்று தொடங்கிய இந்த"ஆரோக்கியச் சோட்டை" அடுத்த தசாப்தம் கடந்தும் பயணித்தது. 

பாடல் இடம்பெறும் “பாலூட்டி வளர்த்த கிளி” படத்தின் காட்சியமைப்பிலும் இந்தப் பாடலில் அந்த “நான் சொல்ல வந்தேன்” போலவே பேசுவதற்கு முயற்சித்து அடங்குவார்கள் விஜயகுமாரும், ஶ்ரீப்ரியாவும். 
“ஏதோ பேச உன்னினேன் பேச்சு வரவில்லை” என்று பேச்சுவழக்கில் சொல்லும் உன்னல் அது.

அழகான ஜோடி, காட்சி அமைப்பும் திறமாக இருக்கும். அந்த ஜோடியைச் சற்றே தள்ளி நிறுத்தி எடுத்திருந்தால் இன்னும் ரசிக்க முடிந்திருக்கும். கொஞ்சம் நாடகத்தனமாகவும் அமைந்து விட்டது.

குலமகள் நாணம் உடன் வரும் போது
மௌனமே இறைவன் தூது….
ஒரு கிளி ஊமை 
ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை......ஹாஆஆஆ  

நான் பேச வந்தேன் 
சொல்லத் தான் 
ஓர் வார்த்தை இல்லை......

Sunday, December 12, 2021

ரஜினிக்காகப் பாடியவர்கள்

எண்பதுகளில் வெளியான படங்களின் பாடல் காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் மோகன், கமல்,பிரபு போன்ற நாயகர்களின் நுணுக்கமான முகபாவங்களையும், பாடலுக்கான நளினமான அளவான நடனத்தையும் கொடுத்திருப்பார்கள். ஆனால் இவர்களையெல்லாம் தாண்டி, துள்ளிசைப் பாடல் மட்டுமன்றி காதல் பாடல்களிலும் மிக இயல்பாகவும் அநாயாசமாகவும் நடித்தவர் என்றால் என் முதல் தேர்வு ரஜினியாகத்தான் இருக்கும். காரணம் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற மசாலா நாயகனை அமைதியான அடக்கமான குணாம்சத்தோடு பொருத்திப் பார்ப்பது சவாலான காரியம். அதைக் கட்டுடைத்துக் காட்டியிருக்கிறார் ரஜினி. அதற்கு மூன்று பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.

ஒன்று: தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வரும் "காதலின் தீபமொன்று" இந்தப் பாடல் பிறந்து முப்பது வருடங்கள் கழித்தும் அதே இளமையோடு இருப்பது போலவே பாடல் காட்சியில் தனி ஆளாகத் தன் காதல் உணர்வை அழகாக, அமைதியாக வெளிப்படுத்துகின்றார். 

https://www.youtube.com/watch?v=2C78pEVf9oY

ரஜினியின் ஜோடிப்பாடல்களில் எனக்கு ரொம்பவே பிடித்தது "பெண்மானே சங்கீதம் பாடிவா" நான் சிவப்பு மனிதன் படத்தில் வரும் இந்தப் பாடலையும் காட்சியோடு ஒன்றிப் பார்க்கும் போது அம்பிகாவையும் தாண்டி அழகுணர்ச்சி மிளிர்வது ரஜினியின் நுணுக்கமான முகபாவம் தான்

https://www.youtube.com/watch?v=csvq9Af1JVQ

இன்று காலை “பூமாலை ஒரு பாவை” ஆனது பாடலை ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தப் படத்தில் மட்டும் ரஜினி பூர்ணிமா கலாய்ப்பு பாடல்கள் மூன்று. அந்த மூன்றில் இந்தப் பாடல் தலையாயது. ஒரு தேர்ந்த பாடகி க்ளப்பில் பாடும்போது அவளைக் கலாய்ப்பதற்கென்றே வரும் இளைஞனாக ரஜினி நுழையும் காட்சியில் இருந்து அவரின் நாசூக்கான சேஷ்டையையும், குறும்பான நடனத்தையும் பாருங்கள் மனுஷர் பின்னியிருப்பதை நீங்களும் ரசிப்பீர்கள்  https://www.youtube.com/watch?v=lVWkLsJ2R9Y

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கான அடையாளக் குரல்களாக மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் தங்கி விட்டாலும் இன்னும் ஏராளம் பேர் அவருக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்தும் முயற்சி தான் இந்தப் பதிவு.

இன்னும் சிறப்பாக, கே..ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகியோர் ஒரே படத்தில் ரஜினிக்காகக் குரல் கொடுத்த

நெற்றிக்கண், படிக்காதவன், தர்மத்தின் தலைவன் போன்ற படங்களும்,

எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், மனோ ஆகியோர் இவருக்காகக் குரல் கொடுத்த “குரு சிஷ்யன்”,

எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், மனோ ஆகியோர் ரஜினிக்காகக் குரல் கொடுத்த “பணக்காரன்”

 எஸ்பிபி மனோ, இளையராஜா

எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், மனோ போன்றோர் அமைந்த

“தர்மதுரை” போன்றவையும் கூட அந்தந்தப் படங்களில் பல்வேறு பாடகர்கள் உச்ச நட்சத்திரமாம் ரஜினிக்குக் குரல் கொடுத்தாலும் உறுத்தாது ரசிக்க வைக்கும். (பின்னாளில் கபாலி, காலா எல்லாம் சேர்த்தியில்லை அவை குழுப் பாடல்கள்) கானா பிரபா

ரஜினிகாந்துக்கான பாடகர் வரிசையில்

1. சம்போ சிவசம்போ (நினைத்தாலே இனிக்கும்) – எம்.எஸ்.விஸ்வநாதன் 

2. நண்டூருது நரியூருது (பைரவி) – T.M.செளந்தரராஜன்

3. வீரமுள்ள பாண்டியராம் (ராணுவ வீரன்) சீர்காழி கோவிந்தராஜன்

4. மை நேம் இஸ் பில்லா (பில்லா) – S.P.பாலசுப்ரமணியம்

5. ஆசை நூறு வகை (அடுத்த வாரிசு) - மலேசியா வாசுதேவன்

6. ஆகாயம் மேலே ( நான் வாழ வைப்பேன்) – K.J.ஜேசுதாஸ்

7. உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி  (பணக்காரன்) – இளையராஜா

8.  நெஞ்சே உன் ஆசை என்ன (நான் போட்ட சவால்) - T.L.மகராஜன்

9. வாழ்க்கையே வேஷம் ( ஆறிலிருந்து அறுபது வரை) – ஜெயச்சந்திரன்

10. மங்கை என்றால் ( ஜாலி ஆப்ரகாம்) – இறைவன் கொடுத்த வரம்

11. காதலெனும் கோவில் (கழுகு) – சூலமங்கலம் முரளி

12. வருவாய் அன்பே (கர்ஜனை) - T. K. S.கலைவாணன்

13. மலையாளக் கரையோரம் (ராஜாதி ராஜா) – மனோ

14. அடிக்குது குளிரு (மன்னன்) – ரஜினி

15. குளுவாலிலே (முத்து) – உதித் நாராயணன்

16. நகுமோ (அருணாசலம்) – ஹரிஹரன்

17. மின்சாரப் பூவே (படையப்பா) - ஶ்ரீனிவாஸ்

18. வாஜி வாஜி (சிவாஜி) – ஹரிஹரன்

19. வாழ்க்கையில் ஆயிரம் (படையப்பா) – பாலகாடு ஶ்ரீராம் (அசரீரிப் பாடல்)

20. டிப்பு டிப்பு (பாபா) - சங்கர் மகாதேவன்

21. சக்தி கொடு (பாபா) – கார்த்திக்

22. கொஞ்ச நேரம் ( சந்திரமுகி) – மது பாலகிருஷ்ணன்

23. அதிரடி (சிவாஜி) – ஏ.ஆர்.ரஹ்மான்

24. சகாரா பூக்கள் (சிவாஜி) – விஜய் ஜேசுதாஸ் 

25. ஓம் ஸாரிரே (குசேலன்) - தலேர் மெஹந்தி

26. காதல் அணுக்கள் (எந்திரன்) – விஜய் பிரகாஷ்

27. கிளிமஞ்சாரோ (எந்திரன்) -  ஜாவேத் அலி

28. மாற்றம் ஒன்று தான் (கோச்சடையான்) – ஹரிச்சரண் (அசரீரிப் பாட்டு)

29. மாய நதி (கபாலி) – அனந்து, பிரதீப் (அசரீரிப் பாட்டு)

30. கண்ணம்மா (காலா) – பிரதீப் (அசரீரிப் பாட்டு)

31. இளமை திரும்புதே (பேட்ட) – அனுருத் ( அசரீரிப் பாட்டு)

32. எத்தனை சந்தோஷம் (பேட்ட) - நாகாஷ் அஸிஸ் 

33. சாரக் காத்தே ( அண்ணாத்த) – சிட் ஶ்ரீராம்

விடுபட்டவை 

34. கோபுரத்திலே (சங்கர் சலீம் சைமன்) - கோவை செளந்தரராஜன்

35. ஆத்துல அன்னக்கிளி (வீரா) - அருண்மொழி

36. அண்ணனோட பாட்டு (சந்திரமுகி) - கே கே (பிரபுக்கும் ரஜினிக்கும்)

36. மருதாணி (அண்ணாத்தே) - நகாஷ் ஆஷிஷ்

37. டிஸ்கோ (தர்மயுத்தம்) – ஹரிராம் 


கானா பிரபா

12.12.2021



Saturday, December 11, 2021

கங்கை அமரன் இசையில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்


“உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை

மணம் விரும்பவில்லை சகியே

மலர் பிடிக்க வில்லை.....”

“மகாகவி” சுப்ரமணிய பாரதியாரின் “கண்ணன் என் காதலன்” என்ற கண்ணன் பாட்டுத் தொகுதியில் இருந்து இந்தப் பாடல்

கங்கை அமரன் இசையில் அழகானதொரு திரையிசைப் பாடலாக விரிந்திருக்கின்றது. அதுவும் ஒரு பாடல் பதிவுக்கான காட்சியமைப்பாகவே இது பயன்படுத்தப்பட்டிருப்பது வெகு சிறப்பு.

“சம்சாரமே சரணம்” என்ற படத்துக்காக காட்சியில் நாயகி ரஞ்சனி பாடுமாற் போல அமைகின்றது இந்த 

“உணவு செல்லவில்லை சகியே”

https://www.youtube.com/watch?v=0ad5X_6XQvg

என்ற பாடல். கானா பிரபா

அந்தக் காலத்தில் “ஊமைக்குயில்” படத்தின் வழியாகப் பிரபலம் பூத்த நாயகன் யோகராஜ்ஜின் (டூப்ளிகேட் பாக்யராஜ்) படங்களில் ஒன்று இது.

இந்தப் பாடலின் சிறப்பு என்னவெனில், இதே பாடலை மனோ குரலில் ஒரு துள்ளிசைப் பாடலாகவும் இப்படி

https://www.youtube.com/watch?v=NWBCPTZskBM

இசையமைத்திருக்கிறார் கங்கை அமரன்.

"பிள்ளைப் பிராயத்திலே" என்ற பாரதி பாடல்,

தீபன் சக்ரவர்த்தி பாடும் 'கனவுகள் கற்பனைகள்" படப் பாடலுக்கும் கங்கை அமரன் இசை வடிவம் இட்டிருக்கிறார்.

“என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்”

https://www.youtube.com/watch?v=cdx77BDpvUE

கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் வரும் கங்கை அமர நாதம் இதற்கு முன் முன்னோரால் வேறு வடிவத்தில் கையாளப்பட்ட பாரதியார் பாடல்.

இந்தப் பாடல் கங்கை அமரனின் தனித்துவம் சொல்லும். ஒரு கொசுறுச் செய்தி, எமது ATBC வானொலியில் 17 ஆண்டுகளைக் கடந்து இடம்பெறும் “சிந்தனைச் சிதறல்” நிகழ்ச்சியின் முகப்புப் பாடலாகவும் இது அலங்கரிப்பது சிறப்பு. கானா பிரபா

எண்பதுகளில் “இனி ஒரு சுதந்திரம்” படத்தை ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியின் கதைப்புலமாக மணிவண்ணன் இயக்கிய இந்தப் படத்தில் மேலும், 

சித்ரா & கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் “மோகத்தைக் கொன்று விடு”

https://www.youtube.com/watch?v=CdlSdbDHhK0

எஸ்.பி.சைலஜா & சித்ரா குரல்களில் “சொல்ல வல்லாயோ” 

ஆகிய சுப்ரமணிய பாரதியார் பாடல்களோடும் இசையமைத்திருப்பது கங்கை அமரனின் தனித்துவம்.

“சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ 

வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ

https://www.youtube.com/watch?v=zgj6cUps8v4

கங்கை அமரனின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்றான “மலர்களே மலருங்கள்” படத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடலுக்கு பி.சுசீலா குரல் கொடுத்தது. இந்தப் பாடலையும் கேட்கும் போது கங்கை அமரன் இசைத்திறன் துலங்கும்.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த தினம் (11.12.1882) இன்றாகும்.

கானா பிரபா


Wednesday, December 8, 2021

இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் பாடிய இளையராஜா




“உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே

மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே”

https://www.youtube.com/watch?v=o4J-x5Af9nc

இன்று காலை சிங்கப்பூர் வானொலியில் இந்தப் பாட்டு ஒலித்தது. 

இசைஞானி இளையராஜா இசையில் பாடலாசிரியர் கங்கை அமரன், பாடகர் கங்கை அமரனாகவும் அவதாரம் எடுத்து, எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு பாடிய “வேற லெவல்” பாட்டு இது.

இன்று கங்கை அமரன் பிறந்த நாள் என்று காலை நினைப்பு மூட்டிய போது, நேற்று க “SPB பாடகன் சங்கதி” நூலில் கங்கை அமரனுக்கான பாகத்தை மறு சீரமைத்து எழுதியது எதேச்சையாக அமைந்து விட்டதை நினைத்துக் கொண்டேன். கானா பிரபா 

இசையமைப்பாளர் கங்கை அமரனைப் பல்வேறு பரிமாணங்களில் அலசி எழுதலாம். அப்படியொன்று அவர் தன் அண்ணன் இளையராஜாவையும் தன் இசையில் பாட வைத்தது.

அந்த வகையில் அமைந்த பாடல்கள்

இளையாராஜாவும், கங்கை அமரனும் இணைந்து 

“நல்ல குடும்பம் நம்ம குடும்பம்” 

https://www.youtube.com/watch?v=mj98d1bDuBI

பாடலை “குடும்பம்” படத்துக்காக புலவர் புலமைப்பித்தன் வரிகளில் கங்கை அமரன் இசையமைத்திருக்கின்றார். கானா பிரபா

இதற்கெல்லாம் ஆதியில் “பண்ணைப்புரத்துப் பாண்டவர்கள்” படத்தில் 

“தூங்காத நியாயங்களே” 

https://www.youtube.com/watch?v=IP_rtut1YHU

என்ற பாடலையும் பாடியிருக்கிறார் இளையராஜா தன் தம்பி இசையில். கானா பிரபா

“பருவம் 18” என்றொரு படம் கங்கை அமரன் இசையில் வந்த போது 

“கூட்டுக்குள் மாட்டிக்கிட்டீங்க”

https://mio.to/album/Paruvam+18+%281979%29

என்றொரு இளையராஜாத்தனமான பாடலைப் பாடியிருக்கிறார்.

“பூவிலங்கு” படம் வழியாக முரளியை அறிமுகப்படுத்திய இயக்குநர் அமீர்ஜான் இயக்கிய “இளங் கன்று”  படத்தில் கங்கை அமரன் இசையில் இளையராஜா ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். ஆனால் அது இசைத்தட்டில் வெளிவராத பாடல். காரணம் படத்தின் எழுத்தோட்ட முகப்புப் பாடலாகப் பின்னர் பதிவானது. 

“பால் குடிக்கும் பிள்ளை இது”

7.30 வது நிமிடத்தில் இருந்து அந்தப் பாட்டு

https://www.youtube.com/watch?v=ngqsb59dYBk

“தெரு விளக்கு” படத்துக்காக இளையராஜா & எஸ்.ஜானகி ஜோடிப் பாடல்

பின்னாளில் கங்கை அமரனின் ஆஸ்தான வெற்றி நாயகனாக அமைந்த ராமராஜன் இயக்கிய “ஹலோ யார் பேசுறது” படத்திற்கு இளையராஜா & கங்கை அமரன் கூட்டு இசை அமைந்திருந்தது.

“மண்ணுக்கேத்த பொண்ணு” என்ற ராமராஜன் இயக்கிய படத்தில் 

“என்னைப் பத்திக் கேட்டுப்பாரு” 

https://www.youtube.com/watch?v=s2vy--QzKMo

என்ற முகப்புப் பாடலை கங்கை அமரன் பாடலை எழுதி, இசைக்க இளையராஜா பாடிச் சிறப்பித்தார்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர் கங்கை அமரன் அவர்களுக்கு.

கானா பிரபா


Sunday, November 14, 2021

இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இசைஞானி இளையராஜாவின் பாடலாசிரியராக

"கற்பகம்" என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கி எடுத்து அந்தப் படத்தின் வசூலை வைத்து கற்பகம் ஸ்டூடியோ என்று கட்டினார் என்ற உண்மையை இந்தக் காலத்தில் சொன்னால் எவ்வளவு தூரம் வாய் பிளப்போம். இந்தப் படத்தின் வழியாக நாயகியாக அறிமுகமாகி முன்னணி நட்சத்திரம் ஆனார் கே.ஆர்.விஜயா.
"முந்தானை முடிச்சு" படத்தை கே.பாக்யராஜ் இயக்கி வெளியிட்ட போது அது தனது கற்பகம் படத்தின் தழுவல் என்று அந்தக் காலத்தில் சாடியிருந்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
அப்போது கே.பாக்யராஜ் அதை மறுத்தெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் காலம் எவ்வளவு தூரம் கணக்கைக் காட்டுகிறது. ஆனால் 2015 ஆம் ஆண்டு குமுதம் இதழில் கே.பாக்யராஜ் எழுதிய தொடரில் தனது முந்தானை முடிச்சு படம் உருவாக கற்பகம் படம் அடிப்படை என்று எழுதியிருந்தார். இது கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இறப்பதற்குச் சில காலம் முன்பே நிகழ்ந்தது.
பெண்களை மையப்படுத்திய கதைகளை எடுத்த வகையில் அந்தக் காலத்து பாக்யராஜ் இவர்.
"கற்பகம்" படத்தில் இன்னொரு சுவாரஸ்யம், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த இந்தப் படத்தில் வெறும் பெண் குரல் பாட்டுகள் மட்டுமே உண்டு. இதே போல தனி ஆண் குரல்களோடு பாடல்கள் அமைந்த வகையில் டி.ராஜேந்தரின் "ஒரு தலை ராகம்" , இளையராஜாவின் "இதயம்" ஆகியவை அமைந்திருந்தன.
இன்னொரு சுவாரஸ்யத் துணுக்கு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இசைஞானி இளையராஜா இசையில் இயக்கிய "பார்த்தால் பசு" (ராமராஜன் & பல்லவி நடித்தது) படத்திலும் சித்ரா மற்றும் சைலஜா பாடிய பெண் குரல் பாடல்கள் மட்டுமே உண்டு.
சித்தி, சாரதா, பணமா பாசமா உள்ளிட்ட வெற்றிச் சித்திரங்களை இயக்கியவர்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய இறுதித் திரைப்படம் விஜய்காந்த், பானுப்பிரியா (இரட்டை வேடம்) நடிப்பில் "காவியத் தலைவன்" . பிரமாண்ட இயக்குநர் & தயாரிப்பாளர் ஆபாவாணனால் கதை, திரைக்கதை எழுதப்பட்டது.
நடிகர் தியாகராஜன், ஶ்ரீதேவி நடிப்பில்"தேவியின் திருவிளையாடல்" படத்தை எடுத்திருந்தார்.
தமிழ் சினிமாவில் இயக்குநரே பாடலாசிரியர் ஆக விளங்கிய பெருமையின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவராகவும் விளங்கியவர். பல்வேறு இசையமைப்பாளர்களுக்கு எழுதியிருக்கிறார்.
“உன்னழகைக் கன்னியர்கள் கண்டதினாலே” https://www.youtube.com/watch?v=GhxXHrBIP3c என்ற புகழ்பூத்த பாடல் கூட கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கைவண்ணம் தான். அவரின் குரு நாதர் ஶ்ரீதர் தயாரித்த “உத்தம புத்திரன்” படத்தில் ஜி.ராமநாதன் இசையில் எழுதியிருந்தார்.
பொதுவாக ஶ்ரீதர், கே.பாலசந்தர் போன்ற தமிழ் சினிமாவின் புதுமை யுகத்தின் தொடக்க இயக்குநர்கள் இளையராஜாவோடு இணைந்து கொடுத்த படங்கள் வெற்றியையும் தனி கவனிப்பையும் பெற்றன.
ஆனால் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்க இளையராஜா இசையமைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா (200 வது படம்) நடித்த "படிக்காத பண்ணையார்", "யுக தர்மம்", "பார்த்தால் பசு" போன்றவை அதிகம் பேசாப் படங்கள்.
இளையராஜா இசையில் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் நான்கு பாடல்களை எழுதிருக்கின்றார்.

யுகதர்மம் படத்தில்
மலேசியா வாசுதேவன் பாடிய “உன்னால் விளைந்ததடா’

எஸ்.ஜானகி பாடிய “என்னமோ பண்ணுதே”

மற்றும் "உருக்கு மனசு" என்ற பாடலும்,

இவற்றோடு படிக்காத பண்ணையார் படத்தில்
மலேசியா வாசுதேவன், எஸ்.சைலஜா பாடிய பாட்டு
“அட ஒண்ணும் தெரியாத பாப்பா”

ஆகியவையே அவையாகும்.

இன்று இயக்குநர் இமயம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களது 6 வது நினைவாண்டாகும்.
புகைப்படம் நன்றி : கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மகன் ரவி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். Ravi KS Gopalakrishnan
கானா பிரபா
14.11.2021

Wednesday, November 10, 2021

பிள்ளைப் பாசமும் மனித ஜாதியும்



1991 ஆம் ஆண்டு நவம்பர் 5 தீபாவளி வெளியீடுகளில் வந்த இன்னொரு இளையராஜா படமும் உண்டு. ஆனால் காலவோட்டத்தில் இப்படியொரு படம் வந்த சுவடே இல்லாத உலகமும் வந்து விட்டது. அதுதான் வி.எம்.சி.ஹனீபா இயக்கத்தில் உருவான “பிள்ளைப்பாசம்”. 

முரசொலி செல்வம் தனது பூம்புகார் புரடெக்க்ஷன்ஸ் வழியாக வி.எம்.சி.ஹனீபாவை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு அழைத்து வந்து, கலைஞர் கருணாநிதி வசனத்தில் வந்து “பாசப் பறவைகள்” என்ற வெற்றிச் சித்திரத்தையும், தொடர்ந்து பாடாத தேனீக்கள் என்று தொடர்ந்ததும் வி.எம்.சி.ஹனீபா தொடர்ந்து தமிழில் இயங்கியதையும் முன்னொரு விரிவான பகிர்வில் கொடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாகத் தன் “ப” வரிசைப் படங்களில் ஒன்றாக மீண்டும் பூம்புகார் தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து வி.எம்.சி.ஹனீபா இயக்கிய படமே பிள்ளைப்பாசம்.

மரண தண்டனைக் கைதிகளைக் கழுவேற்றும் சிறைப் பணியாளராக சிவகுமாரும், தன் மகன் ராம்கியே அந்த மரண தண்டனைக் கைதியாகவும் எதிர் கொள்ளும் ஒரு சவால் நிறைந்த படமாக “பிள்ளைப் பாசம்” வெளியானது. ஆனால் முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் அலையில் அந்தத் தீபாவளித் திருநாளில் இம்மாதிரியான கனதியான கருப்பொருளில் அமைந்த இந்தப் படத்தை மக்கள் ஒதுக்கி விட்டார்கள்.

அதே ஆண்டு இன்னொரு படம் சிவகுமாரும் ராம்கியும் நடிக்க வெளியாக இருந்தது. அதுதான் மனித ஜாதி. 

பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைமணி அவர்கள் தன்னுடைய கதை, தயாரிப்பில் மனோபாலா இயக்கிய “மல்லுவேட்டி மைனர்” என்ற வெற்றிச் சித்திரத்தைக் கொடுத்த பின்னர், தானே கதை எழுதி இயக்கிய படம் தான் மனித ஜாதி.

ஆனால் பட வெளியீட்டில் சிக்கல் எழுந்து, தமிழகத்தில் திரையிட முடியாத சூழலில் வெளிநாட்டில் திரையிட்டு, படம் திருட்டு வீடியோவாக வந்து கலைமணி அவர்கள் இயக்கிய இந்த இறுதித் திரைப்படத்துக்கு இந்த நிலை நேர்ந்தது வருத்தம்.

1991 ஆம் ஆண்டில் இரட்டை நாயகர்களாக நடித்த சிவகுமார் & ராம்கி கூட்டணியின் பிள்ளைப் பாசம் மற்றும் மனித ஜாதி இரண்டுக்குமே இவ்வகைத் துரதிஷ்டம்.

பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர்  என்று பன்முகம் கொண்ட ஆளுமை கங்கை அமரன் அந்தந்தத் துறைகளின் வழியாக என் ரசனைக்குத் திறமான தீனி போட்டவர் பாடகராகவும் கூட இதில் பங்கு போட்டிருக்கிறார். 

இசைஞானி இளையராஜாவின் குரலுக்கு நெருக்கமாக இருந்தாலும் கங்கை அமரன் குரலை அடையாளப்படுத்த முடியும். அவருக்குக் கிடைத்த பாடல்களை வைத்து ஒரு தனிப்பதிவு கொடுக்க வேண்டும். நான் கேட்ட வகையில் ஒன்று கூடச் சோடை போகாத ரகம்.

ஒரு சோறு "சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்" இசையரசி P.சுசீலாவுடன் பாடிய அந்தப் பாட்டைப் பற்றி எழுதும் போது "பூஜைக்கேற்ற பூவிது" என்று  கூடப் பாடிய சித்ரா ஞாபகப்படுத்துகிறார் இன்னொன்றை.

"மன்னன் கூரைச் சேலை" (சிறைச்சாலை) பாடலைப் பற்றி முன்னர் சிலாகித்து எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு ஆண் குரல்கள், மலையாளத்தில் இளையராஜா என்றால் தமிழில் கங்கை அமரன். 

 "அடி குயில்கள் பாடும் நாள் வந்தால்" என்று கடக்கும் அந்த அடிகளை இழுத்துப் பிடித்து ரசித்துக் கொண்டே இருப்பேன் மீண்டும் மீண்டும்.

அவ்வளவுக்கு கங்கை அமரன் இந்தப் பாடலில் ஒரு குறுகிய பகுதியில் நிறையவே நியாயம் செய்திருப்பார். 

மனித ஜாதி படத்தில் வரும் 

"இரு பாதம் பார்த்தேன்" பாடலும் கிட்டத்தட்ட "மன்னன் கூரைச் சேலை" பாட்டோடு ஒட்டி உறவாடக் கூடிய அளவுக்கு மெதுவாகப் பயணித்து

மனதைச் சூறையாடும் பாங்கு கொண்டது. இந்தப் பாடலில் கங்கை அமரன், சித்ரா இருவருக்குமே சம பங்கு. 

"இரு பாதம் பார்த்தேன் சிறு பூவைப் போலே”

https://www.youtube.com/watch?v=iJYhut5wNQ8

அந்தத் தொண்ணூறுகளின் ஆரம்பம் ஈழத்தில் கனத்த போர்க்காலம். உணவுப் பொருட்களுக்கே கூப்பன் கடைகளில் (ரேஷன்) வரிசையில் நின்றாலும் வித விதமாகப் பாட்டுக் கேட்கும் சுவைக்கு ஒன்றும் குறைச்சலில்லை நமக்கு.

புதிய கேஸட்டுகளை வாங்க வக்கில்லாத சூழலில், இருப்பிலும் இல்லை என்பது வேறு விடயம் பழைய நைந்து போன லேபல் எல்லாம் நொதிந்த ஒரு கேஸட்டை ரெக்கார்டிங் பார் காரரிடம் கொடுத்துப் பதிவு செய்து, சைக்கிள் டைனமோவில் மின் பிறப்பாகிப் பாடலைப் போட்டால் அந்த அறையே அதிர்ந்தது 

“நல்ல தலைவனும் தலைவியும் வாழும் வீடு தேவன் ஆலயம்”

https://www.youtube.com/watch?v=cEgTHkOgRHM

பிள்ளைப் பாசம் படத்தில் முதல் பாடலாகப் பதிவு செய்து கேட்ட அந்தப் பாட்டின் அதிர்வலையை இன்றும் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறேன். பின்னாளில் நான் வானொலி நிகழ்ச்சி செய்யும் காலத்தில் எல்லாம் திருமண நாள் வாழ்த்துப் பாடல்களில் இந்தப் பாடலை நேயர் வாழ்த்துப் பகிர்வாக் கொடுத்து மகிழ்வது என்பது கொடுப்பினை.

பிள்ளைப் பாசம் படத்தின் பாடல்களைக் கேட்க, குறிப்பாக இளையராஜாவின் “விடிந்ததா” பாடலைக் கேட்டுப் பாருங்கள் படத்தில் எதிர்கொள்ளப் போகும் அந்த அவலத்தை நோக்கி நகரும் ஒரு துன்பியல் சங்கீதம்

https://www.youtube.com/watch?v=kPem1YyAU-Q

கானா பிரபா

10.11.2021

மனிதஜாதி படப்பிடிப்புப் புகைப்படம் நன்றி IMDB மற்றும் தினமலர்

Tuesday, November 9, 2021

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்



இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் & இசைஞானி இளையராஜா கூட்டணி தொண்ணூறுகளில் எப்படிக் கலக்கியது என்பதை இந்த உலகமே அறியும். ஆனால் ஆர்.வி.உதயகுமாரின் முதல் இரண்டு படங்களில் “உரிமை கீதம்” மனோஜ் - கியான் இரட்டையர்கள் இசையிலும், தொடர்ந்து வந்த “புதிய வானம்” படம் அம்சலேகாவின் இசையிலும் வந்தது.
எப்படி ஆபாவாணன் குழு என்ற திரைப்படக் கல்லூரி மாணவர் கூட்டத்துக்கு மனோஜ் கியான் இரட்டையரின் மிரட்டும் இசை கை கொடுத்ததோ அது போல அடுத்த பிரிவு மாணவர் அணியில் இருந்து வந்த ஆர்.வி.உதயகுமாருக்கு முகவரி எழுதிய “உரிமை கீதம்” படத்துக்கும் மனோஜ் – கியான் தான் இசை. கார்த்திக் – பிரபு ஆகிய இரண்டு பெரும் நட்சத்திரங்கள் இணைந்த இப்படத்தின் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானதில் வியப்பில்லை அப்படியொரு பிரபலம் கிட்டியது. அதில் “மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்” (வித்யாவுடன்) https://www.youtube.com/watch?v=DpKo-qDU9Y0 இனிமை சொட்ட, “பொன் மானே நில்லடி” (சித்ராவுடன்), “விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் ( உமா ரமணன், சுந்தரராஜன் இணைந்து) பாடல்களும் ரசிக்கப்பட்டவை.
அந்த நேரம் சத்யா மூவீஸ் தயாரிப்பில் சங்கர் - கணேஷ், கங்கை அமரன் உள்ளிட்டோர் இசையமைப்பாளர்களாக இருக்க, இந்தப் படம் நடிகர் சிவாஜி கணேசன் & சத்யராஜ் இணைந்து நடித்த பிரமாண்டப் படமாக அமைந்தது. தனது முதல் படமான
“உரிமை கீதம்” படத்தில் அனைத்துப் பாடல்களையும் தானே எழுதிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் “புதிய வானம்” படத்தில் மற்றைய பாடலாசிரியர்களுக்கும் வழி விட்டார்.அப்படியாக கங்கை அமரன் கூட ஒரு பாட்டை எழுதினார். இந்தப் படத்தில் எழுந்த நட்பால் கங்கை அமரன் இளையராஜாவிடம் ஆர்.வி.உதயகுமாரிடம் அறிமுகப்படுத்தினார். பின்னர் தொடந்தது அந்த இசைக் கூட்டணி. அதன் பிறகு தொடர்ந்து 9 படங்களில் இளையராஜா & ஆர்.வி.உதயகுமார் இணைந்த போது பெரும்பாலும் ஆ.வி.உதயகுமாரும், ஒன்றிரண்ட்ஜ் வாலியுமாக இருக்க, சிங்காரவேலன் படத்தில் மட்டும் பாடலாசியர் கலவையில் கங்கை அமரனுக்கு ஒரேயொரு பாட்டு கிடைத்தது, அது “ஓ ரங்கா ஶ்ரீலங்கா கொப்பரத் தேங்கா”.
இந்தப் படத்திலும் ஐந்து பாடல்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியமே சுளையாக அனைத்தையும் எடுத்துக் கொண்டார். சிவாஜிக்கும் & சத்யராஜுக்குமான கூட்டுப் பாடலை மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.பாலசுப்ரமணியம் (பெண் குரல் பேபி சங்கீதா) சேர்ந்து “ஒரு பாடல் சொல்கிறேன்” என்றும்,
“ராக்கிளியே” என்ற சூப்பர் ஹிட் பாடலையும் ஆர்.வி.உதயகுமாரே எழுதினார்.
புதிய வானம் பாடல்களைக் கேட்க
கானா பிரபா
இசைஞானி இளையராஜாவோடு ஆர்.வி.உதயகுமார் கூட்டணி அமைத்த முதற்படமாக அமைந்தது தொடர்ந்து வந்த "கிழக்கு வாசல்". தயாரிப்பாளர் ஜி.தியாகராஜனின் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இசைஞானி இளையராஜாவை வைத்துப் பண்ணிய வெற்றிப்படங்களில் "கிழக்கு வாசல்" பெரு வெற்றி கண்ட படமாக அமைந்து சாதனை படைத்தது. கார்த்திக், ரேவதி ஆகியோரின் சினிமாப் பயணத்தில் தவிர்க்க முடியாத படமாக இது இன்றளவும் இருக்கின்றது.
"தாங்கிடத்தத்த தரிகிட தத்த" என்று சந்தம் போட்டு நெஞ்சின் கதவுகளைத் தட்டி உள்ளே சென்று உட்காரும் "அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" பாடலாகட்டும் சித்ராவின் தேன் குரலில் "வந்ததேஏஏஏஏ குங்குமம்" என்ற மெல்லிசையாகட்டும் படத்தில் மீதமுள்ள பாடிப் பறந்த கிளி உள்ளிட்ட எல்லாப் பாடல்களையும் சேர்த்து கிழக்கு வாசல் படத்தின் பாடல்கள் தங்கக் கிரீடம் சூட்டவேண்டிய தராதரம்.
கிழக்கு வாசல் பாடல்கள்
ஒரு படம் இடைவேளைக்குப் பின் மீண்டும் தன் வழக்கமான இரட்டை நாயகர்கள் செண்டிமெண்டில் வந்த படம் "உறுதிமொழி" இதில் சிவகுமார், பிரபு முக்கிய நாயகர்கள். கானா பிரபா
ஆர்.வி.உதயகுமாரோடு திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்து வெளியே வந்து ஒளிப்பதிவாளராக இயங்கிய ரவி யாதவ், இவரின் தயாரிப்பில் வந்த படமே உறுதிமொழி. இப்போது ரவி யாதவ் முழுமையாகத் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி மும்பை சென்று விட்டார். கிழக்கு வாசல் கொடுத்த பெருங்கவனிப்போடு ஒப்பிடுகையில் உறுதிமொழி திரைப்படம் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் இந்தப் படத்தில் வந்த "அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா" பாடல் அந்த நாளில் சென்னை வானொலியில் திரைகானத்திலும், நேயர் விருப்பத்திலும் ஒலித்துத் தன் இருப்பைக் காட்டியது இன்னும் இந்த ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி கொடுத்த இந்த ஜோடிப்பாட்டை நேசிப்பவர்கள் நெஞ்சாங்கூட்டில் வைத்திருப்பர்.
உறுதி மொழி பாடல்கள்
தொடர்ந்து கார்த்திக், சிவகுமார் கூட்டணியோடு வந்தது "பொன்னுமணி". இந்தப் படத்தை எவ்வளவு தூரம் தமிழகத்து ரசிகர்கள் ரசித்தார்களோ தெரியவில்லை. ஆனால் ஈழத்து ரசிகர்களிடையே இந்தப் படம் வந்த காலகட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மின்சாரம் இல்லாது மண்ணெண்ணையில் நீர் இறைக்கும் மெஷினை இயக்கி மின்சாரம் தருவித்துப் படம் பார்த்த அந்தக் கற்காலத்தில் வந்த பொற்காலச் சினிமா இது. இசைஞானி இளையராஜாவின் மூத்த புதல்வர் கார்த்திக் ராஜா தன் தந்தையை "ஏ வஞ்சிக்கொடி" என்று முதன்முதலில் பாடவைத்து இசையமைத்தார். ஏனைய பாடல்களில் "நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா" எம் ஊரில் நாதஸ்வரம் வாசிப்பவர்களின் வாசிப்பில் அந்தக் காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு பாடலாகக் கல்யாண வீடுகளிலும், கோயில் திருவிழாவின் ஜனரஞ்சக வாசிப்பு நேரத்திலும் இடம்பிடித்த பாடலது.
பொன்னுமணி பாடல்கள்
"பாவலர் கிரியேஷன்ஸ்" இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் தயாரிப்பில் கமலை "சிங்காரவேலன்" ஆக்கி ஆர்.வி.உதயகுமார் இயக்கிய படம். "அதிவீரராம பாண்டியன்" என்ற படத்துக்காக கமல் தனக்குக் கொடுத்த கால்ஷீட் என்றெல்லாம் தம்பி கங்கை அமரன் கோபித்தார். ஆனாலும் படம் இன்னொரு கரையில் வளர்ந்தது. படத்தில் வில்லன் உட்பட எல்லோருமே சிங்காரமாக இருக்கவேண்டும் என்பதை முன்னுறுத்துவதாக அப்போது பேட்டியில் எல்லாம் சொன்னார் ஆர்.வி.உதயகுமார். இசைஞானி இளையராஜாவின் நீண்ட சாம்ராஜ்யத்தில் எக்கோ இசைத்தட்டுக்கள் காலம் பெரியது. ஆனால் அவர்களோடு கொண்ட பிரிவால் தயாரிப்பாளர் ஏக்நாத் உடன் சேர்ந்து பனையோலை விசிறியைச் சின்னமாகப் போட்டு வந்த "ராஜா ரெக்காட்ஸ்" இல் சிங்காரவேலனும் வந்தது. அப்போது பாடல் ஒலிநாடா வாங்குபவர்களுக்குப் போட்டியும் பரிசு வெல்பவர்களுக்கு சிங்காரவேலன் படத்தின் வெற்றி விழாவில் கெளரவமும் கிட்டும் என்றெல்லாம் விளம்பரம். சும்மாவே இசைஞானியின் பாடல்கள் பட்டையைக் கிளப்பும், அதிலும் தன் குடும்பத் தயாரிப்பில் வந்த படம் என்றால் சொல்ல வேண்டுமா? பம்சுக்க பம்சுக்க பம்பம் தான் ;0
புதுச்சேரி கச்சேரி பாடலில் வரும் "டைகராச்சாரி" சொல் மட்டும் ஒலி இழந்து இலங்கை வானொலியில் ஒலித்தது, காரணம் ஏன் என்பதும் வேணுமோ? கானா பிரபா
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் பாடல் இன்றளவும் என்னை இம்சை செய்யும் இனிய காதலியாய்
சிங்கார வேலன் பாடல்கள்
"சின்னக்கவுண்டர்" ஆர்.வி.உதயகுமாருக்கு கிழக்கு வாசலுக்குப் பின் மீண்டும் பெரியதொரு வெற்றியைக் கொடுத்து அழகு பார்த்தது. படத்தில் விஜயகாந்த், மனோரமாவின் கெட் அப் மற்றும் சுகன்யாவின் பொருத்தமான பாத்திரத் தேர்வு, கவுண்டமணி செந்தில் இவற்றையெல்லாம் விஞ்சி இசைஞானி இளையராஜா போட்டுக் கொடுத்த ஒவ்வொரு பாடல்களுமே வெறும் அஞ்சு பாட்டுக் கணக்கல்ல. ஒவ்வொன்றும் காட்சிகளோடு இழத்துச் சேர்த்த முத்துக்கள். அதிலும் "முத்துமணி மாலை என்னைத் தொட்டுத்தொட்டுத் தாலாட்ட" பாடல் கடந்த ஒரு வருஷமாக நான் செய்யும் புதிய வானொலி நிகழ்ச்சியான "முத்துமணிமாலை" இன் மகுடப்பாடல். இந்தப் பாடல் வந்த சமயத்தில் இலண்டனில் இருக்கும் அண்ணர் வாங்கித் தந்த டேப் ரெக்காடரில் அப்போது இயங்கிய எஃப் எம் 99 என்ற வானொலியை ஒலிக்கவிட்டு "முத்துமணி மாலை" பாடலைப் பதிவாக்கியது ஒரு அழகிய நினைவாக.
சின்ன கவுண்டர் பாடல்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் பார்வை தொடர்ந்து வெற்றிப்படம் கொடுக்கும் ஆர்.வி.உதயகுமார் மீது விழுந்த போது அது ஏவி.எம் என்ற பெரும் தயாரிப்பு நிறுவனமும் கூட்டுச் சேர "எஜமான்" படமாகியது. படம் முழுவதும் ரஜினியை வேஷ்டி கட்டவைத்து வானவராயர் ஆக்கியது ஒரு புதுமை என்றால், ஏவிஎம் உடன் ஊடல் கொண்டிருந்த இசைஞானி இளையராஜாவை வைத்துத் தான் படம் பண்ணுவேன் என்று விடாப்பிடியாக இருந்து அதைச் சாதித்தது ஆர்.வி.உதயகுமாரின் இன்னொரு சாதனை. கிழக்கு வாசல் படத்தில் வாலியும் பாட்டெழுதினார் ஆனால் தொடர்ந்து வந்த உறுதி மொழி, பொன்னுமணி படங்களில் முழுமையாக ஆர்.வி.உதயகுமாரே எல்லாப்பாடல்களையும் எழுதினார். மீண்டும் வாலிக்கும் ஒரு வாய்ப்பு எஜமான் படத்தில்.
இசைஞானி இதில் கொடுத்த பாடல் முத்துக்கள் ஒவ்வொன்றுமே நட்சத்திரத் தகுதி. அதிலும்
"ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இனியான இளமானே துணையான இளமானே"
என்ற பாடல் உச்சம். இதே பாடலை சோக மெட்டோடு ராஜாவே பாடியிருப்பது படத்தில் மட்டும் வரும்.
எஜமான் பாடல்கள்
நடிகர் பிரபுவின் 100வது படம் யார் இயக்குவது என்ற தகுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்புக் கொடுக்கப்பட்டவர் ஆர்.வி.உதயகுமார். அமெரிக்கா சென்ற நதியாவை மீண்டும் களமிறக்கி, மீனாவையும் சேர்த்து இரட்டை ஜோடியாக்கி "ராஜகுமாரன்" படமாக்கினார். அன்றைய காலகட்டத்தில் இந்தப் படத்துக்கான விளம்பரம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பே படத்தின் வெற்றிக்கு ஆப்பு வைத்தது. என்னதான் இசைஞானி இளையராஜாவின் முத்தான பாடல்கள் இருந்தாலும் வெற்றி கொடுக்காத படம், பாடல்களை மட்டுமே வெற்றியாக்கியது. "சித்தகத்திப் பூக்களே" பாடலோடு "என்னவென்று சொல்வதம்மா" பாடல் மறக்கமுடியாத எஸ்.பி.பி கானம்.
ஆர்.வி.உதயகுமாருக்கு. தனக்கு ஆரம்ப காலத்தில் வெற்றி தேடித்தந்த நாயகன் கார்த்திக்கை வைத்து இலக்கியத்தரமான தலைப்பை வைத்தவர் கூட்டணியில் ஒரு சறுக்கலாக அமைந்தது நந்தவனத் தேரு.
அழகான அறிமுகம் ஶ்ரீநிதிக்கும் ஒரு முற்றுப்புள்ளி.
வழக்கம் போல எல்லாப்பாடல்களும் ஆர்.வி.உதயகுமார் எழுதினார். குறிப்பாக "வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே"
பாடல் வெற்று வார்த்தைக் கவிஞர் அல்ல இவர் என்பதைக் காட்டிய ஒரு பாட்டு. மீண்டும் ஒருமுறை கேட்டுப் பாருங்கள் மீண்டும் ஒருமுறை கிறங்கிப் போவீர்கள்.
தமிழ் சினிமாவின் எண்பதுகளின் முக்கிய நட்சத்திரங்கள் அனைவரையும் இயக்கிப் பெருமை கொண்ட ஆர்.வி.உதயகுமாருக்கு முழுமையாக அரிதாரம் பூசிக்கொண்டால் என்ன என்று தோன்றியிருக்கும். அவ்வப்போது சிறு சிறு துண்டு வேடங்களில் வந்தவர், நடிகர் ஜெயராமோடு, தானும் நாயகனாகி "சின்ன ராமசாமி பெரிய ராமசாமி" என்ற படத்தை இயக்கினார். படத்தில் நடித்த பல நடிகர்களே ஃபீல்டை விட்டுப் போய்விட்டார்கள் ஆனால் படம் வருஷங்கள் கடந்தும் வெளிவராமல் இன்னும் பெட்டிக்குள் தூங்குகின்றது. இதுவரை இசைஞானி இளையராஜா, ஆர்.வி.உதயகுமார் சேர்ந்த கூட்டணியில் இறுதிப்படம் என்ற பெருமை மட்டும் தான் இப்போது இதற்கு. வாழையடி வாழையா என்ற கே.ஜே.ஜேசுதாஸ் பாடி இந்தப் படத்துக்காக இசைத்த பாடல் மட்டும் இன்னும் ஒலிக்கிறது வானொலிகளில்.
இசைஞானி இளையராஜாவோடு இணைந்து இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கொடுத்த இந்த முத்தான பத்துப் படங்களோடு இன்னொரு சுற்றும் இணையவேண்டும் என்பதே உங்களைப் போன்ற என் ரசிகனின் அவா. பார்ப்போம் பொறுத்து.

ஆர்.வி.உதயகுமார் அர்ஜீனுடனும் நட்சத்திரக் கூட்டணி அமைத்தார் சுபாஷ் படம் மூலம். அந்த நேரம் அர்ஜுனுடன் ராசியான இசையமைப்பாளராக இயங்கி வித்யாசாகரின் இசைக்கு ஆர்.வி.உதயகுமார் கொடுத்த வரிகள் பாடல்களாகப் பரிணமித்தன.
குறிப்பாக “முகம் என்ன மோகம் என்ன” https://www.youtube.com/watch?v=ZhdSLwbQNqU

அந்தப் படத்தில் உச்சம் தொட்ட பாட்டு.

ஆர்.வி.உதயகுமாரின் முதல் படத்தைத் தயாரித்த சுபஶ்ரீ பட நிறுவனமே சுபாஷ் படத்தைத் தயாரித்ததும் குறிப்பிடத்தக்கது.


பின்னர் விக்ராந்த் நாயகனாக தமிழில் அவர் கொடுத்த படம் கற்க கசடற.
தெலுங்கில் திருட்டுப் பயலே படத்தை இயக்கியுமிருந்தார்.

“ஹாய் ஹாய் ஹாய் ஹாய் வெண்ணிலவே ஹாய்” இந்தப் பாடல் பின்னாளில் ஆர்.வி.உதயகுமார் தாரக ராமுடு என்ற தெலுங்குப் படத்தை இயக்கிய போது கோட்டி இசையில் இடம் பிடித்த பாட்டு.
இன்றும் தெலுங்கு தேசம் இப்பாடலைக் கொண்டாடுவதை இசை மேடைகளில் தரிசிக்கலாம். அப்படி ஒன்று எஸ்பிபியின் மேடைப் பகிர்வாக
இந்தப் படம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு “வெள்ளி நிலவே” என்ற பெயரில் மொழி மாற்றப்பட்ட போது தேடி தேடி ரசித்து வருகிறேன்
ஆர்.வி.உதயகுமார் அவர்கள் வெளியார் படங்களிலும் பாடலாசிரியராக இயங்கியதைப் பின்னர் பகிர்வாகத் தருகின்றேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாடலாசிரியர் & இயக்குநர் ஆ.ர்.வி.உதயகுமாருக்கு.
கானா பிரபா
09.11.2021
தயவு செய்து இந்தப் பதிவை வாட்சாப்பிலோ பிரதி எடுத்தோ, பெயரை அழித்தோ பகிராதீர்.