உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
உதிர்கின்ற ஒரு முடி
களைகின்ற சிறு நகம்
ஸ்ருங்காரச் சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்
மெல்பர்ன் நகரில் வாழ்ந்த 1996 ஆண்டு கால வாழ்க்கையை நினைப்புக்குக் கொண்டு வரும் பாட்டு.
பனிப் புகாருக்குள்ளால் வீட்டில் இருந்து கிட்டத்தட்ட இருபது நிமிடங்களைக் கடந்து நடந்து ரயில் நிலையம் போய் பல்கலைக் கழகம் போகும் ரயிலை எட்டிப் பிடிக்கப் போகும் அந்த நடை தூரத்தில் வாக்மென்னை இடுப்பில் செருகிக் காதில் இயர் ஃபோனால் நிரப்பினால் காதுக்குள் குளிர் போகாது இசையால் நிரப்பிக் கொண்டிருக்கும். நடக்கும் வழியெல்லாம் நீரால் பரவிய தேசப்படம் போலக் குறுக்கு மறுக்காக வளர்ந்திருக்கும் மொட்டைப் புற்களுக்குத் தொப்பி போட்டல் போலப் பனித் துகள்கள் அந்தரத்தில் நிற்கும்.
ப்ரியம் ப்ரியம் ப்ரியம் ப்ரியம் என்று காதுக்குள் ஜெபித்துக் கொண்டிருக்கும் அந்தப் பாட்டு. தனியனாக நடை போட்டுக் கொண்டு போவேன் எதிர்காலம் தெரியாமல்.
இளையராஜா, ரஹ்மான் மட்டுமல்ல வித்யாசாகர், தேவா, சிற்பி என்று எல்லாரையுமே வஞ்சகமில்லாமல் கேட்டு ரசித்து மெச்சிய காலமது. போதாக்குறைக்கு கார்த்திக் ராஜா வேறு இந்தா வாறார் இந்தா வாறார் என்று ஆசை காட்டிக் கொண்டிருக்க ஒன்றிரண்டு படங்கள். அப்போதெல்லாம் இணையம் இல்லை அதனால் சண்டை போடாமல் எல்லார் கொடுத்த பாடல்களையும் ரசிக்க முடிந்தது எல்லோராலும்.
மெல்பர்ன் கரம்டவுன்ஸ் சிவா விஷ்ணு கோயில் தேருக்குப் போல ரயில் பிடித்து, பஸ் ஏறி ஒரு அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தம் வரையான அந்தத் தல யாத்திரை முடிந்து அந்தப் பக்கமாக இருந்த டாண்டினொங் MKS தமிழ்க்கடைக்கும் போகாமல் வீடு திரும்பினால் பொச்சம் தீராது. MKS இன் இசைத்தட்டு விற்கும் பகுதிக்குப் போனால் ஹரிஹரன் புத்தம் புது சீடியில் சிரித்துக் கொண்டிருந்தார். என்னுடைய அப்போதைய வருமானத்துக்கு அது பெரிய முதலீடு என்றாலும் ஒன்றே ஒன்று என்றிருந்த அந்த சீடியை விடக் கூடாது என்று என் ஆஸ்தியாக்கிக் கொண்டேன்.
பிரமிட் வெளியிட்ட இரட்டை சீடி ஸ்பெஷலில் குந்திக் கொண்டிருந்தது "உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்"
அந்தக் காலகட்டத்தில் ஹரிஹரன் தான் இளைஞர்களின் காதலைப் பாடலின் வழியாக மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். "மலர்களே மலர்களே இது என்ன கனவா" என்று ஹரிஹரன், சித்ரா ஜோடிக் குரல்கள் உருகிப்பாடி உருக்கியது போதாமல் "உடையாத வெண்ணிலா" வோடும் வந்து விட்டனர்.
பாடலின் வரிகள் எல்லாமே தமிழ் சினிமாப் பாடல்களுக்குண்டான நீளமில்லாது காற்றில் ஒவ்வொன்றாய் வெடித்துப் பறக்கும் பருத்திப்பூவைப் போலத் துண்டு துண்டாய் பேனாவுக்கு நோகாமல் எழுதியிருப்பார் கவிஞர் வைரமுத்து.
இந்த மாதிரியான மெது இசைப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் வித்யாசாகரை இன்னமும் உயர்த்திப் பிடித்துக் கெளரவிக்காத பாவக்கணக்கைச் சேர்த்து வைத்திருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி மேலிடும்.
"ப்ரியம்" திரைப்படத்தின் விளம்பர வடிவமைப்புக் கூட எடுப்பாக இருக்கும்.
அருண்குமார் என்ற அருண் என்ற அருண் விஜய், மந்த்ரா நடிக்க பாண்டியன் என்ற இயக்குநர் இயக்கியிருந்தாலும் படத்தின் புதுமுகத் தயாரிப்பாளர் அசோக் சாம்ராஜ் தான் அப்போது பேசு பொருள் ஆக இருந்தார். பேசும்படம், ஜெமினி சினிமா தாண்டியும் அந்தக் காலத்துச் சஞ்சிகைகளின் முழுப்பக்க விளம்பரம் "ப்ரியம்" தான். படம் பெரிதாகப் போகவில்லை என்றாலும் சில காலத்துக்குப் பின் "கல்வெட்டு" என்ற பெயரில் முரளியை வைத்துத் தயாரிக்கும் படத்துக்கு விளம்பரம் கொடுத்தார். முரளி முகத்தில் இந்திய தேசியக் கொடி வரைந்திருக்கும். அந்தப் படம் வரவில்லை. பிறகு ஏதோ படத்திற்காக முரளி முகத்தில் தேசியக் கொடி ஒப்பனை போட்டார்.
என்னுடைய இசைக் களஞ்சியத்தில் இன்னும் நான் பேணிப் பாதுகாப்பது அந்த ஹரிஹரனின் இரட்டை இசைத்தட்டுகள் தான். இன்று வரை பிரமிட் நிறுவனம் அந்தக் காலத்தில் வழங்கிய துல்லியமான ஒலித்தரத்தில் இசைத் தட்டுகளைக் கொடுப்பார் யாருமில்லை என்று மெய்ப்பிக்க இது போன்ற இசைத்தட்டுகள் தான் சாட்சியம் பகிரும்.
அந்தி மஞ்சள் மாலை
ஆளில்லாத சாலை
தலைக்கு மேலே பூக்கும்
சாயங்கால மேகம்
ப்ரியம் ப்ரியம் ப்ரியம் ப்ரியம்
மீண்டும் கேட்கிறேன் தன் கூட்டுக்குள் சுருக்கிப் புதைந்து மறையும் நத்தை போலப் பாடலுக்குள் மறைந்து போகிறேன்.
http://www.youtube.com/watch?v=pJoVFumXVps&sns=tw