Pages

Friday, February 29, 2008

சிறப்பு நேயர் "ஜிரா என்ற கோ.இராகவன்"


கடந்த வாரம் அப்பாவித்தங்கை துர்கா வந்து பல மொழிப்பாடல்களோடு வித்தியாசமான தன் ரசனையை வெளிப்படுத்தினார். இந்த வாரம் ஆண் நேயர் என்ற வகையில் ஐந்து முத்தான பாடல்களுடன் வந்து கலக்குகின்றார் "ஜிரா என்ற கோ.இராகவன்".


கோ.இராகவனின் பதிவுகள் இலக்கியம், சமயம், இசை, அனுபவம் என்று பலதரப்பட்ட பரப்பில் அகல விரிந்தாலும் அவரின் எல்லாப் பதிவுகளிலும் எஞ்சி நிற்பது அவரின் உயரிய ரசனைச் சிறப்பு. எதையும் அனுபவித்து எழுதும் இவர், பதிவுகள் மட்டுமன்றி பின்னூட்டங்களிலும் அதே சிரத்தையைக் காட்டுவார். பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் இவர் விதைக்கும் கருத்துக்கள் மிகுந்த நிதானத்துடனும், சுவையான தகவற் குறிப்புக்களுடனும் அமையும். சிறப்பாக;

மகரந்தம்

இனியது கேட்கின்

இசையரசி

முருகனருள்

போன்றவை கோ.இராகவனின் படைப்பாற்றலுக்கான களங்களில் சில.

இதோ இனி ஜிரா என்ற கோ.இராகவன் தொடர்கின்ரார்.

1. இது இரவா பகலா - வாணி ஜெயராம், ஏசுதாஸ்

நீலமலர்கள் படத்தில் இடம் பெற்ற பாடல் இது. கவியரசர் எழுதி மெல்லிசை மன்னர் இசையமைத்தது. கமலஹாசனும் ஸ்ரீதேவியும் நடித்திருக்கிறார்கள்.

காதலிக்கு உண்டாகும் ஐயங்களைக் கேள்வியாகக் கேட்கிறாள். அவைகளுக்குக் கேள்வியாலே விடையளிக்கிறான் காதலன்.

காதலி : இது இரவா பகலா?
காதலன் : நீ நிலவா கதிரா?

அவள் நிலவென்றால் அது இரவு. கதிரென்றால் பகல். என்ன அழகான விடை. மெல்லிசை மன்னரும் கவியரசரும் ஏற்கனவே செய்த இந்த முயற்சிதான்...பின்னாளில் உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா என்று கேட்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

வாணி ஜெயராமின் குரலும் ஏசுதாசின் குரலும் இணைந்து ஒலிக்கும் அற்புதப் பாடல்.


2. சிந்து நதிக்கரை ஓரம் - டி.எம்.எஸ், பி.சுசீலா

இளையராஜா இசையில் பாடிய முதல் ஆண் பாடகர் என்ற பெருமை ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜனையே சேரும். அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை மறந்து விட்டு அவர்கள் இருவரும் இணைந்த பாடல்களைப் பார்த்தால் அத்தனையுமே அருமை. ஒன்று கூட பழுது கிடையாது. அன்னக்கிளியில் தொடங்கிய கூட்டணி விரைவிலேயே முறிந்தது நமது கெட்ட நேரம்தான்.

நல்லதொரு குடும்பம் என்ற படத்திற்காக கவியரசர் எழுதி டி.எம்.எஸ்சும் இசையரசியும் பாடிய இந்த ஜோடிப் பாடலில் நடிகர் திலகமும் வாணிஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள். மிக அழகான காதற்பாடல்.


3. அழகி ஒருத்தி இளநி விக்குற - எல்.ஆர்.ஈசுவரி, ஜெயச்சந்திரன்

ஜெயச்சந்திரன் என்றாலே மெல்லிய காதல் பாடல்கள் என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள். ஆனால் அவரையும் துள்ளலிசையரசி எல்.ஆர்.ஈசுவரியையும் இணைத்து ஒரு பாடலை மெல்லிசை மன்னர் இசையமைத்திருக்கிறார். கவியரசரின் பாடல்தான். பைலட் பிரேம்நாத் என்ற படத்திற்காக.

இலங்கையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர்திலகம், மாலினி ஃபொன்சேகா (இலங்கை), விஜயகுமார், ஜெயச்சித்ரா, ஸ்ரீதேவி, ஜெய்கணேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இலங்கையின் இளம் குயில், முருகனெனும் திருநாமம், Who is the blacksheep? ஆகிய அருமையான பாடல்களும் இந்தப் படத்தில்தான்.

இந்தப் பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.....

உப்புக்கடலோரம் ஒரு ஜோடி நண்டு
ஓடி விளையாடி உறவாடக் கண்டு
கன்னம் முச்சூடும் காயாத புண்ணு
கன்னி இளமேனி என்னாகுமென்னு
அம்மான் மகன் சும்மா நிப்பானா
அள்ளிக்கொண்டால் மிச்சம் வெப்பான

கேட்டுப்பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும்.


4. இது சுகம் சுகம் - வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மெல்லிசை மன்னருக்கும் இசைஞானிக்கும் பிறகு தமிழகத்தில் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமாந்தான். அவர் எட்டாத பல உயரங்களுக்குச் செல்கையில் தமிழ்த் திரையுலகத்தையும் விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. அவருடைய இடம் இன்னும் நிரப்ப்பப்படாமல் இருக்கிறது. அவருடைய பாணியை வைத்துக் கொண்டுதான் இன்றைக்குப் பலருக்குப் பிழைப்பே தவிர புதிதாக யாரும் எதுவும் செய்யவில்லை.

அவருடைய இசையில் வெளிவந்த இந்தப் பாடலில் ஒரு சிறப்பு. ஆம். அவருடைய இசையில் வாணி ஜெயராம் பாடிய ஒரே பாடல் இதுதான். வாணி அவர்களிடம் ஏ.ஆர்.ரகுமான் சொன்னாராம். "அம்மா, நீங்க பாட வேண்டிய அளவுக்குப் பாட்டு நான் போடுறதில்லை" என்று. அந்த அளவுக்கு இசைப்புலமை மிக்கவர் வாணி ஜெயராம். அவரும் பாடும் நிலா பாலுவும் இணைந்து குரலால் குழைந்து பாடிய இந்தப் பாடல் மிகமிக அருமையானது.

வண்டிச்சோலை சின்ராசு என்ற படத்தில் வெளிவந்த காரணத்தினால் மட்டுமே காணாமல் போன இந்தப் பாடல் நத்தையில் முத்து. கேட்டு ரசியுங்கள்.


5. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா - சொர்ணலதா, ஏசுதாஸ்

சொர்ணலதாவின் முதல் பாடல். நீதிக்குத் தண்டனை என்ற திரைப்படத்தில் இருந்து. பாரதியாரின் அருமையான தாலாட்டுப் பாடல். கண்ணன் பாட்டில் ஒரு பாட்டு இது. இந்தப் பாடலை இசையாக்கியிருக்கிறார் மெல்லிசை மன்னர். வழக்கமாக பாரதியார் பாடலென்றால் மெல்லிசை மன்னர் பயன்படுத்தியது இசையரசியின் குரலைத்தான். ஆனால் முதன்முறையாக புதுப்பாடகி. சொர்ணலதாவிற்குக் கிடைத்தது மோதிரக்கைக் குட்டு. அதுவும் ஏசுதாசுடன் இணைந்து பாடியிருக்கிறார். பின்னாளில் அவர் நிறையப் பாடல்களைப் பாடித் தேசிய விருதெல்லாம் வாங்கியிருந்தாலும் அவையனைத்திற்கும் முதற்படி இந்தப் பாடலே.


பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்.

அன்புடன்,
ஜிரா என்ற கோ,இராகவன்

Thursday, February 28, 2008

சுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....!

எங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது "பிரிவோம் சந்திப்போம்" பாகம் 1. அது தான் சுஜாதாவை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் புதினம். விறுவிறுவென்று வாசித்து முடித்த பின்னர் தான் அவரை அசை போடத்தொடங்கினேன். அட இது வித்தியாசமான ஒரு வாசிப்பு அனுபவமாக இருக்கிறதே என்று என்ற் வியந்தவாறே, பிரிவோம் சந்திப்போம் இரண்டிலிருந்து, விடாமல் சுஜாதாவை தொடர்ந்தேன். கரையெல்லாம் செண்பகப்பூ, அனிதா இளம் மனைவி, காகிதச் சங்கிலிகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, கனவுத் தொழிற்சாலை, "ஆ" என்று கிட்டத்தட்ட முக்கால்வாசி நாவல்களை ஏப்பம் விட்டும் அடங்கவில்லை. இவரின் எழுத்துக்கள் வரும் சஞ்சிகைகளில், சினிமாப் பகுதிக்கு முன்னர் படிக்கும் பக்கங்கள் இவருடையதாக மாறி விட்டது.

சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்", எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் போன்றவை தான் நனவிடை தோய்த்தலில் என்னை அதிகம் ஈடுபடுத்தி என் ஊர் நினைவுகளை எழுத வைத்தவை.

2002 ஆம் ஆண்டு "கன்னத்தில் முத்தமிட்டால்" படம் வந்த கையோடு நான் அப்போது பணிபுரிந்த வானொலிக்காக என் ஆதர்ஷ எழுத்தாளர் சுஜாதா அவர்களைப் பேட்டி காணத் தொடர்பு கொள்ள விழைத்தேன். எழுத்துலகில் உச்சத்தில் இருக்கும் இவர் நமக்கெல்லாம் பேட்டி கொடுப்பாரா என்ற அவநம்பிக்கை வேறு மனசின் ஓரத்தில் இருந்தது. ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்காத மனிதரைத் தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் உணர்ந்தேன். வானொலிப் பேட்டிக்கு வந்து கலந்துகொண்டு கொட்டமடிக்கும் சில வித்துவச் செருக்குகளைக் கண்டிருக்கின்றேன். ஆனால் சுஜாதாவின் உரையாடல் என்னை அவர்பால் இன்னும் நேசிக்க வைத்தது.

தான் எழுத்துலகில் நிறைவேற்ற நினைக்கும் கனவு குறித்தும் சொல்கின்றார் இந்த ஒலிப்பதிவில்.ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துக் கேட்டபோது " நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்" என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.

இயன்றவரை சாதாரணமான கேள்விகள் கொடுத்து வானொலி கேட்கும் அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்த முயன்றிருக்கின்றேன். காரணம் சுஜாதாவே ஒருமுறை சொன்னது போல் " நீங்க அவள் ஒரு தொடர்கதையில் நல்லா நடிச்சிருக்கீங்க" என்று அவரைப் பார்த்து யாரோ கேட்டது போல் கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

போய் வாருங்கள் சுஜாதா!
மீண்டும் வானலையில் சந்திபோம்
உங்களோடு நேருக்கு நேராக.......


Tuesday, February 26, 2008

வரவிருக்கும் வாரங்களின் சிறப்பு நேயர்கள்

றேடியோஸ்பதியின் புதுத் தொடராக வலம் வந்து கொண்டிரும் இவ்வார சிறப்பு நேயர் தொடர் ஆரம்பித்ததே ஒரு சுவாரஸ்யமான எதிர்பாராத சந்தர்ப்பத்தில். நண்பர் ஜீவ்ஸ் நீங்கள் கேட்டவை பகுதியில் கேட்க வேண்டும் என்று தொடர்ச்சியாக நான்கு பாடல்களைக் கேட்டிருந்தார்.

சரி இவ்வளவு நல்ல பாடல்களைக் கேட்கின்றீர்களே, ஒரு தொடரை ஆரம்பித்து அதில் நீங்களே உங்களுக்குப் பிடிச்ச ஐந்து பாட்டுக்களைச் சிலாகித்து எழுதி அனுப்புங்களேன் என்றேன். சொன்னதும் தான் தாமதம், சில மணி நேரத்திலேயே பதிவோடு மனுஷன் வந்து விட்டார். ஜீவ்ஸ் தொடக்கி வச்ச முகூர்த்தமோ என்னமோ இந்த பிசினஸ் நல்லாவே போகுது ;-).

பல நண்பர்கள்/பதிவர்கள் தம் பதிவுகளை எழுதி அனுப்பி வைத்து விட்டுக் காத்திருக்கின்றார்கள். அவை எப்போது வரும் என்பதை, தம் பதிவை அனுப்பிய ஒழுங்கிலேயே காட்டுகின்றேன். ஒரேயொரு மாற்றம், ஒரு ஆண் நேயர், அடுத்து ஒரு பெண் நேயர் என்ற ஒழுங்கில் மட்டும் இது அமைகின்றது. இதோ அந்த வரவிருக்கும் வெள்ளி வாரங்களின் சிறப்பு நேயர்கள்.

1. பெப்ரவரி 29 - ஜிரா என்னும் கோ.ராகவன்
2. மார்ச் 7 - பாசமலர்
3. மார்ச் 14 - ரிஷான் ஷெரிப்
4. மார்ச் 21 - சினேகிதி
5. மார்ச் 28 - ஸ்ரீராம்
6. ஏப்ரல் 4 - துளசி கோபால்
7. ஏபரல் 11- கண்ணபிரான் ரவிசங்கர்
8. ஏபரல் 18 - நித்யா பாலாஜி
9. ஏப்ரல் 25- சர்வேசன்
10.மே 2 - கயல்விழி முத்துலெட்சுமி
11. மே 9 - அய்யனார்


தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்
KANAPRABA@GMAIL.COM

சரி இந்த அறிவித்தலோடு, என்னைக் கவர்ந்தவை 2 பகுதியையும் தருகின்றேன்.
முதலில் "மெட்டி" திரைப்படத்தில் இருந்து ப்ரம்மானந்தம் பாடும் "சந்தக் கவிகள் பாடிடும் மனதினில்" என்ற பாடலை இளையராஜா இசையில் கேட்கலாம். அதிகம் கேட்காத பாடகர், கர்னாடக இசைக்கலைஞருக்கே உரித்தான குரலில் பாடும் இனிமையான தனியாவர்த்தனம் இது.
Get this widget | Track details | eSnips Social DNA


அடுத்து இளையராஜாவின் இசையில் "ஒரு ஓடை நதியாகிறது" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ராஜேஸ்வரி பாடும் "தலையை குனியும் தாமரையே". பாடலைக் கேட்கும் போதே மனதுக்குள் கல்யாணக் கச்சேரி களை கட்டும்.
Get this widget | Track details | eSnips Social DNA


நிறைவாக "உனக்காகவே வாழ்கிறேன்" திரையில் இருந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம், இளையராஜா இசையில் பாடும் "இளஞ்சோலை பூத்ததா" என்னும் இனிமையான பாடல். இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் கேரளாவில் விடுமுறையில் இருந்த நாளொன்றில் ஏஷியா நெட்டின் இசை நிகழ்ச்சிக்காக ஒரு மலையாள இளைஞன் இப்பாடலை வெகு சிறப்பாக பாடியதை தொலைக்காட்சியில் பார்த்த அந்த ஞாபகம் நினைவில் வரும்.
Get this widget | Track details | eSnips Social DNA

Friday, February 22, 2008

சிறப்பு நேயர் - "அப்பாவி சிறுமி" துர்காபோன வாரம் எங்கள் அன்புக்குரிய தல "கோபி" வந்து இளையராஜாவின் ஐந்து பாட்டுக்களோடு வந்து நம்மைக் கட்டிப் போட்டார். இந்த வாரம் சிறப்பு நேயராக வந்து கலக்க இருப்பவர் எங்கள் பதிவுலகத்தின் பாசத்துக்குரிய தங்கை அப்பாவி சிறுமி "துர்கா".

இந்தத் தங்கை அப்பாவி போல இருப்பார், ஆனால் சமயத்தில் "ஆப்பாவி" யாக மாறி பின்னூட்ட ஆப்பும் வைப்பார். பதிவர்கள் பலர் இவர் பின்னூட்ட வரும் போது குலை நடுக்கத்தோடு நகம் கடித்தபடி இருப்பார்கள். பதிவைப்பற்றி நாலைந்து நல்ல விஷயம் சொல்லி விட்டு சுருக்கென்று ஊசி ஏற்றி விட்டுப் போய் விடுவார். பல அண்ணன்களுக்கு அன்ணி தேடிக் கொடுப்பார் (இந்த வாக்கியம் மட்டும் உதவி: தல கோபி).
போன ஜென்மத்தில் நடிகர் சத்யராஜின் தங்கையாய் பிறந்திருப்பார் போல. அவ்வளவு லொள்ளு பார்ட்டி ;-) சந்தேகம் இருந்தால் அவரின் புளாக்கர் புரொபைல் போய் பாருங்க. தானே தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கா.

சரி, நம்ம தங்கச்சி துர்காவின் தனித்துவமான வலைத்தளம் பற்றிச் சில வரிகள்.
தனக்கென்று அரிச்சுவடி என்ற சொந்த வீட்டை வைத்திருக்கின்றார். தான் சந்தித்த அனுபவங்களை தனக்கேயுரிய நகைச்சுவையோடு சொல்வதற்கு துர்காவிற்கு நிகர் துர்கா தான். வலையுலகில் நான் அரிதாகப் படித்த பெண் பதிவர்களின் நகைச்சுவைப் பதிவுகளில் இவருக்கு தனித்துவம் உண்டு. தனது அண்ணன் பையனோடு நடத்திய குறும்புப் பதிவுகள் சில உதாரணங்கள். இப்போது தொடர்கதை எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார்.
முயற்சி திருவினையாக்கட்டும்.

கூடவே "ஜில்லென்று ஒரு மலேசியா" என்ற கூட்டுப்பதிவிலும் தன் பங்களிப்பை இவர் வழங்கி வருகின்றார்.

சரி இனி துர்கா தரும் ஐந்து பாடல்களையும் கேளுங்கள். ( இவர் கேட்ட ஐந்து பாடல்களையும் வீடியோவில் இருந்து ஒலிப்பதிவு செய்து வலையேற்றி எனக்கு தாவு தீர்ந்து விட்டது ;-)

வேறும் 5 பாடல்கள் மட்டும்தான் வேண்டும் என்று அண்ணன் கையைக் கட்டிப் போட்டு விட்டார்.எனக்குத் தமிழ் பாடல்கள் மட்டும் பிடிக்கும் என்று இல்லை.எல்லாம் வகையை இசையையும் விரும்பி கேட்கும் பெரிய மனது J
எனக்கு பிடித்த பாடல்கள் இவைகள் தான்.

1. பாடல்: மார்கழி பூவே
படம்: மே மாதம்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
பாடலாசிரியர் :வைரமுத்து
பாடியவர்:
ஷோபா சேகர்

"காவேரிக் கரையில் நடந்ததுமில்லைகடற்கறை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லைசுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லைசாலையில் நானாகப் போனதுமில்லைசமயத்தில் நானாக ஆனதுமில்லை"

கேட்ட முதல் கணத்திலேயே என்னை கவர்ந்து இழுத்த பாடல் இதுதான்.பாடல் வரிகளும் சரி இசையும் சரி அற்புதம்.எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இவைதான்.சுந்திரமில்லாத வாழ்க்கையை வாழும் ஒரு மனிதனின் உணர்வுகளை இந்த வரிகள் மிக அற்புதமாக பிரதிபலித்தது.
Get this widget Track details eSnips Social DNA


இப்பாடலின் வீடியோ

2. பாடல்: மஹாகணபதிம்
பாடம் :morning raga
இசை:மணி ஷர்மா, Amit Heri
ராகம்: நாட்டை
பாடியவர்:Bombay ஜெயஸ்ரீ


சிந்து பைரவியில் கேட்ட மஹாகணபதிம் நினைவு இருக்கின்றதா?இது மார்னிங் ராகா என்ற படத்தில் fusion music(கலப்பு இசை)யின் வழி புதுமையாக கேட்டு பாருங்கள்.இந்த பாடலை நாட்டை இசையில் கேட்ட பொழுதே இதன் மீது காதல் வந்தது.ஆனால், எனது நண்பர்கள் பலர் கர்நாடக இசை என்றாலே தலை தெறிக்க ஓடுவார்கள்.இப்படி fusion music கர்நாடக பாடலைக் கேட்க சொன்னால் இப்படி ஓடுவது இல்லை.கர்நாடக இசையை இப்படி கொலை பண்ணலாமா என்று சிலர் கோபபடலாம்.ஆனால் இப்படியாவது இசை மற்றவர்களை போய் சேர்கின்றது என்று மகிழ்ச்சி அடையலாமே.
Get this widget Track details eSnips Social DNA


இப்பாடலின் வீடியோ

3. பாடல்:habibi ya noor-el ain
பாடியவர்: Amr Diab


இந்த பாடல் ஏதோ ஒரு தமிழ் பாடல் போல இருந்ததாக சில நண்பர்கள் சொன்னர்கள்.எந்த பாடல் என்று எனக்கும் தெரியவில்லை.உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.
JAMR DIAB 1983 இல் இருந்து இப்பொழுது வரை கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரு எகிப்திய பாடகர்.மத்திய கிழக்கு நாடுகளில் இவர் மிகவும் பிரபலம்.அவர் பாடிய பாடல்களின் எனக்குப் பிடித்த பாடல் இதுதான்.
Get this widget Track details eSnips Social DNA


இப்பாடலின் வீடியோ


4. பாடல்: ra ra rasputing
பாடியவர்கள்; Boney M

இந்த பாடலின் இசைதான் என்னை முதலில் கவர்ந்தது,ஏனென்றால் இந்த பாடல் கேட்ட பொழுது எனக்கு 3 வயது மட்டுமே.தமிழைத் தவிர வேறு மொழிகள் புரியாத வயது.இப்பொழுது கூட எனக்கு மிகவும் பிடித்த பாடல் குழுவினர் Boney M தான்.இசையை ரசிக்க வயது மொழி என்று ஒன்றும் தேவை இல்லை என்பது எனது கருத்து.இந்த பாடல் Rasputin எனப்படும் ஒரு ரஷ்யரை பற்றி பாடியுள்ளார்கள்.யார் இவர் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் google உதவியை நாடவும்.
Get this widget Track details eSnips Social DNA


இப்பாடலின் வீடியோ

5. பாடல்:அக்கா மக..அக்கா மக
பாடியவர்கள்:The Keys


"அக்கா மக அக்கா மக எனக்கு ஒருத்தி இருந்தாளே.
காதலுக்கு redy சொல்லி காதல் முத்தம் தந்தாளே
காதலிச்ச சந்தோசத்தில் ஆகயத்துல பறந்தேண்டா
வில்லன் ஒருத்தன் இருந்தாண்டா மாமன் காரன் அவந்தாண்டா

The Keys மலேசியவிலேயே முதல் தமிழ் பாடல் குழுவினர்கள்.இவர்களின் முதல் ஆல்பம் பாடலே ஒரு புயலை உருவாக்கியது.அதுதான் இந்த பாடல்.ஒரு அத்தை மகனின் குறும்பு பாடல் இதுதான்.இந்த பாடலை கேட்டால் இன்னும் ஆ ட தோன்றும்.இப்பொழுது இவர்கள் என்ன ஆனர்கள் என்றுதான் தெரியவில்லை.எப்படி இருந்தாலும் இந்த பாடலை பல மலேசியர்கள் மறந்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.

Get this widget Track details eSnips Social DNA


இப்பாடலின் வீடியோ

-- From,durga


Friday, February 15, 2008

சிறப்பு நேயர் - "கோபிநாத்"

கடந்த வாரம் மை பிரண்டின் சிறப்புப் பாடல் தொகுப்போடு மலர்ந்த சிறப்பு நேயர் விருப்பத்தை ரசித்திருப்பீர்கள். ஆக்கங்களை அனுப்பி வைத்த பல நேயர்களின் தொகுப்புக்கள் இன்னும் வர இருக்கின்றன. புதிதாக அனுப்பவிரும்புபவர்களும் தொடர்ந்து அனுப்பலாம் என்று கூறிக்கொண்டு இந்த வார சிறப்பு நேயர் பக்கம் நம் பார்வையைத் திருப்புவோம்.

இந்த வாரம் சிறப்பு நேயராக முத்தான ஐந்து பாடல்களோடு வந்திருப்பவர் எங்கள் அன்புக்குரிய பாலைவனத்துச் சிங்கம் "கோபி" என்ற கோபிநாத்.

இந்த றேடியோஸ்பதி வலைப்பதிவில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளுக்கு ஊக்கமளித்து இன்று ஒரு வருடத்துக்குள் 94 இசைப்பதிவுகளைத் தொடுவதற்கு நம்ம தல கோபி தான் முதற் காரணம். மற்றதெல்லாம் அதற்குப் பிறகு தான். இவரின் உற்சாகப்படுத்தும் கருத்துக்கள், ஆலோசனைகள் தான் இப்பதிவுகளைத் தொடர்ந்து தருவதற்கு ஊக்கசக்தியாக அமைந்தது.

என்னைப் போலவே ராஜாவின் வெறிபிடித்த ரசிகர்களில் ஒருவர் கோபி. கூடவே மலையாளப் பட ரசனையும் சேர்ந்து விட்டது. மாதாந்தம் ஒரு பதிவு, அதுவும் உருப்படியான பதிவு போடுவது என்பதை உறுதியாகக் கொண்ட விடாக்கண்டன் இவர்.

கோபிநாத் என்ற தன் சொந்த வலைப்பதிவில் பழைய நினைவுகள், சிறுகதை, ரசித்தவை என்று பல தரப்பட்ட படைப்புக்களை வழங்கி வருகின்றார்.

இதோ கோபியின் ஐந்து பாடல்களும் அவை குறித்த இவரின் ரசனைப் பகிர்வையும் இனிக் கேளுங்கள்.

நமக்கு எப்பவும் இளையராஜா தான். அவரோட இசை மட்டும் ஏன் ரொம்ப பிடிக்கும் என்ற கேள்விக்கு இந்த நிமிடம் வரை பதில் இல்லை. அவரோட இசை பல நேரங்களில் எனக்கு துணையாக இருந்திருக்கிறது, ஒரு தாய்யை போல. எல்லா உணர்வுகளுக்கும் ராஜாவிடம் இசை இருக்கும். அவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். சரி இந்த நேயர் விருப்பதில் எனக்கு பிடித்த பாடல் அனைத்தும் இளையராஜா இசை அமைத்த பாடல்கள் தான். ராஜாவோட பாடல்களில் 5 மட்டும் எடுக்க நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும். என் தோழியின் கூட்டு முயற்சியில் எப்படியே 5 மட்டும் தேர்ந்தெடுத்து விட்டேன்.

தாய்மை

படம் - தளபதி
பாடல் - சின்ன தாய் அவள்.....


அம்மாவின் பாசத்தை யாராலும் கொடுத்துவிட முடியாது. இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் எல்லோருக்கும் அவர்களின் அம்மாவின் நினைவு வரும். அப்படி ஒரு உணர்வை அந்த பாடலில் ஏற்படுத்தியிருப்பாரு ராஜா. படத்தில் இந்த பாடல் ஆரம்பம் மிக நேர்த்தியாக இருக்கும். ரயிலின் ஓசையுடன் புல்லாங்குழலின் ஓசையும் அருமையாக இணைத்திருப்பாரு ராஜா. ஜானகி அம்மாவின் அந்த தாய்மை குரலும், ஸ்ரீவித்யா மற்றும் ரஜினியின் நடிப்பில் அவர்களுக்கு கண்ணுல தண்ணீர் வருதே இல்லையோ எனக்கு கண்டிப்பாக வரும். பாடலின் கடைசி காட்சியில் சந்தோஷ் சிவன் அந்த மல்லிகை பூவை ரஜினி எடுப்பதை திரை பார்க்கும் போது வாய்பிளந்த பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.
Get this widget Track details eSnips Social DNA


நட்பு & நண்பர்கள்

படம் - புது புது அர்த்தங்கள்
பாடல் - கேளடி கண்மணி பாடகன் சங்கதி....

நிஜமாகவே நம்மோட வாழ்க்கை பாதையை சரியான திசையை நோக்கி சொலுத்த கூடிய சக்தி நட்புக்கு உண்டு. அந்த கடற்கரை பாதையில் அந்த நண்பன் தன்னோட மனச்சுமைகளை தோழியிடம் இறக்கி வைத்தபடி அந்த பாடல் இருக்கும். அவனின் மனபாரத்தையும், வாலி அவர்கள் பாடல் வரிகளின் (கால் போன பாதைகள் நான் போன போது கை சேர்த்து நீ தானே மெய் சேர்த்த மாது) அழத்தையும் உணர்ந்து ராஜாவின் இசை அந்த நட்பின் திசையை நமக்கு சரியாக உணர்த்தியிருக்கும். பாலு அவர்களின் குரல் பாடலுக்கு மேலும் வலிமை சேர்த்திருக்கும்.
Get this widget Track details eSnips Social DNA


காதல்

படம் - கோபுர வாசலிலே...
பாடல் - காதல் கவிதைகள் எழுதிடும் நேரம்...


YES I LOVE THIS IDIOT, I LOVE THIS LOVEABLE IDIOTTTTTTTTTT.....என்று நாயகி தன்னோட காதலை அந்த அரங்கத்தில் ஆரவாரத்துடன் வெளிபடுத்தி பின் அந்த ஆரவாரத்தை அப்படியே வயலினில் கொண்டுவந்திருப்பாரு ராஜா. பிறகு அந்த வயலின் இசையை அழகாக முடித்து புல்லாங்குழல் மற்றும் கோவில் மணி யோசையின் துணைக் கொண்டு அந்த ஆரவாரத்தில் இருந்து அழகான மெலோடி காதல் பாடலாக கொடுத்திருப்பாரு. வாலியின் வரிகளும் அந்த காதலை அழகாக சொல்லியிருக்கும். இயக்குனர் பிரியதர்ஷனும் அந்த பாடலை காட்சி படித்திருக்கும் விதம் மிக அழகாக இருக்கும்.
Get this widget Track details eSnips Social DNA


காதல் 2

இசைஞானியை பற்றி பேசும் போது கண்டிப்பாக அவரின் ரசிகன் கலைஞானி கமலை பற்றி சொல்லமால் இருக்க முடியுமா என்ன ! ! !

படம் - ஹோராம்
பாடல் - நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி....


இந்த பாடல் ஏன் பிடிக்கும்? முதலில் வருமே அந்த பியனோ இசைக்கா? இல்ல நடுவில் வருமே அந்த மென்மையான புல்லாங்குழல் அதற்காகவா? ஒரு கணவன் தன் மனைவியுடன் கொண்ட காதலை தன் வழக்கமான முத்தத்துடன் காட்சி படித்திருப்பாரே கமல் அதற்காகவா? ஆஷா போஸ்லே அவர்களின் அந்த மென்மையான அம்மிங் வருமே அதற்காகவா? இல்ல கலைஞானி கமல் எழுதிய முதல் பாடல் என்பதற்கா?
ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு தகுந்தாற் போல் இசை அமைத்தாரே நம்மோட ராஜா அந்த திறமைக்கா?

எதற்காக பிடித்திருக்கு என்று இன்று வரை புரியமால் நான் ரசித்துக் கொண்டுயிருக்கும் பாடல் இது.
Get this widget Track details eSnips Social DNA


தனிமை - ஏக்கம் - வேண்டுதல்
படம் - நீங்கள் கேட்டவை
பாடல் - பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா


இந்த பாடல் எனக்கு சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும். இந்த பாடலை எந்த இடத்தில் கேட்டாலும் நின்னு கேட்டுட்டு தான் போவேன். அப்படி ஒரு கொலைவெறி. காரணம் எல்லாம் ரொம்ப சிம்பல் - அம்மா ;)
Get this widget Track details eSnips Social DNA


எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த தலைவர் கானா அவர்களுக்கு என்னோட நன்றிகள் ;)
கோபிநாத்

Friday, February 8, 2008

சிறப்பு நேயர் ".:: மை ஃபிரண்ட் ::."


இந்த றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக வலம் வர இருப்பவர் ".:: மை ஃபிரண்ட் ::.".. இதெல்லாம் சொல்லியா தெரியணும்? பதிவில் இருக்கும் "சித்து" வின் படத்தைப் பார்த்தாலே புரியும்னு சலிக்காதீங்க ;-)

மலேசியத் திருநாட்டில் இருந்து பதியும் ஒரு சில பதிவர்களில் .:: மை ஃபிரண்ட் ::. தனித்துவமானவர்.

THe WoRLD oF .:: MyFriend ::. என்ற பிரத்தியோகத் தளத்தில் தன் எண்ணப் பகிர்வுகளையும்,

ஜில்லென்று ஒரு மலேசியா என்ற கூட்டுத்தளத்தில் மலேசியாவின் வரலாறு, பண்பாடு, சுற்றுலா குறித்த தகவல்களையும்,

கூடவே தேன் கிண்ணம், பயமறியா பாவையர் சங்கம் என்று ஒரு லாரி வலைப்பதிவுகளையும் வைத்திருக்கின்றார் இவர். எல்லாவற்றையும் சொல்லணும் என்றால் இந்தப் பதிவே தமிழ் மண முன் பக்கம் ஆகிவிடும். பலவிதமான வலைப்பதிவுகள் வைத்திருந்தாலும் வெகு சிரத்தையோடு எழுதிப் போடுவது இவரின் சிறப்பு. மலேசியா குறித்த இவரின் விதவிதமான பதிவுகள் என் முன்னுரிமை வாசிப்பில் எப்போதும் இருக்கும்.


அழிந்து போய்க்கொண்டிருக்கும் கும்மிக் கலையை இவரின் பின்னூட்டப் பெட்டி வாழ வைத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சரி இனி .:: மை ஃபிரண்ட் ::. இன் சிறப்பு விருப்பங்களை அவர் சொல்லக் கேட்போம்.

பிரபா அண்ணா இப்படி ஒரு அறிவிப்பு விட்டதும் கண்டிப்பாக கலந்துக்கணும் என முடிவெடுத்தாச்சு

. ஆனால், எனக்கு இருக்கிற ஒறெ பிரச்சனை 5 பாடல்கள் தேர்வு செய்யுறதுதான். அண்ணே "5 பாடல் மட்டுமே!"ன்னு ஸ்ட்ரிக்கா சொல்லிட்டார். எனக்கோ 100 பாட்டுக்கு மேலே இருக்கே.. அதுல எது தேர்வு செய்யுறதுன்னு தெஇயாமல் நான் விழிக்க; என்னை பார்த்து என் கணிணி விழிக்க.. என்னை தேர்ந்தெடு என்னௌ தேர்தெடுன்னு ஒவ்வொரு பாடல்களும் என்னை பார்த்து கண் சிமிட்ட ஆரம்பித்து விட்டது
ஒரு வழியா

5 பாடல்கள் தேர்வாகியாச்சு.. ஒன்னொன்னா பார்ப்போம் வாங்க..

1- மனமே தொட்டா சிணுங்கிதானே (தொட்டா சிணுங்கி)

90 களில் வெளியாகிய பல எவர்க்ரீன் பாடல்களில் ஒன்றாக அமைந்தது. ஆனாலும், இது மற்ற பாடல்களை விட கொஞ்சம் தள்ளீ யூனிக்காக தெரிந்த பாடல். கவலை, சந்தோஷம்ன்னு என்ன ஒரு மூட்ல இருந்தாலும் அதுக்கேற்ற மாதிரி இந்த இசையும் என் உயிரோடு கலந்ததுபோல உணர வைக்கும். காலை, மாலை, இரவு என்று நேரம் காலம் பார்க்காமல் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று..
இந்த பாடல் இரண்டு வெர்ஷன்களில் இருக்கும். ஒன்று ஹரிஹரன் பாடியது. இன்னொன்று ஹரிணி பாடியது. எது சிறந்தது என்று இன்று வரை என்னால் நிர்ணயிக்க முடியவில்லை. இரண்டுமே அற்புதம். இந்த மாதிரி சூப்பர் ஹிட் கொடுத்த ஜெர்ரி இப்போ எங்கே? எங்கே? எங்கே?


2- கல்லூரி மலரே மலரே (சினேகிதியே)

இந்த படம் வெளியான காலத்துல நான் இன்னும் இடைநிலைப்பள்ளியில் படிச்சிட்டு இருந்தேன். கல்லூரி மாணவியா இருந்து இந்த படம் என்னை இம்ப்ரஸ் பண்ணியிருக்குன்னு சொன்னா அது சகஜம். ஆனால், அந்த சின்ன வயசுலேயே இந்த படமும் இந்த படத்தின் பாடல்களும் ரொம்ப ரொம்ப இம்ப்ரஸ் பண்ணியிருந்தது எனக்கு. தினமும் 3 வேளை சாப்பிடுறேனோ இல்லையோ, மூனு வேளை கண்டிப்பா இந்த படத்தை பார்ப்பேன். 6 தடவையாவது இந்த பாடலை கேட்பேன். அப்படி ஒரு பைத்தியம் இந்த பாடல் மேல்.
சுஜாதா, சித்ரா இருவரும் இணைந்து பாடிய முதல் பாடலும் இதுதானே! வித்யாசாகர் வித்தியாசமான இசையில் வைரமுத்துவின் முத்து முத்தான வரிகளுக்கு இவர்கள் இருவருடன் சேர்ந்து சங்கீதாவும் குரல் கொடுத்திருப்பார். பாடலின் ஒவ்வொரு வரியும் அருமையோ அருமை. பல விதமான உதாரணங்களுடன் நட்பை மிக எளிதாக ஆனால் ஆழமாக சொல்லியிருப்பார் கவிப்பேரரசு.
"

ஐஸ்க்ரீம் தலையில் செர்ரி பழம் இருப்பது அரை நொடி வாழ்க்கையடி"
"பாறைகள் மேல் முட்ட நினைத்த முட்டைகள் தவிடுபடி"
இந்த வரிகளின் தனித்துவம் தெரிகிறதா? அது மட்டுமல்லாமல் முயல்-ஆமை கதையும் இதில் கொண்டு வந்திருக்கிறார். நாமெல்லாம் சாதாரணமாவே ஆமையின் சப்போர்ட்டராக இருந்திருப்போம். ஆனால், இந்த பாட்டை கேட்டதிலிருந்து நான் இனி முயலோட கட்சின்னு கட்சிக்கூட மாறிட்டேனா பாருங்களேன்..
"முயலுக்கு ஊசி போட்டு தூங்க வைத்து தேர்தலில் ஆமை ஜெயித்தடி.. முயலுக்கு மயக்கம் தெளிந்துவிட்டால் ஆமையின் பாடு ஆபத்தடி"
Get this widget Track details eSnips Social DNA


3- பளிங்குனால் ஒரு மாளிகை (வல்லவன் ஒருவன்)

மை ஃபிரண்டுன்னா அவ புது பாட்டு மட்டும்தான் கேட்பாள்ன்னு பல பேர் நினைக்கலாம். ஒரு காலம் வரை அதுதான் உண்மையா இருந்தது. 80-இல் வெளியான பாடல்களையாவது கேட்பேன். ஆனால், கருப்பு வெள்ளை படம்ன்னாலே தூர ஓடிடுவேன். இங்கே ரேடியோவில் தினமும் இரவு 11 மணிக்கு இந்த மாதிரி பழைய பாடல்கள் ஒளிப்பரப்புவார்கள். அம்மாக்கு இந்த பாடல்கள் ரொம்ப பிடிக்கும். ஆனால், அந்த பாடல் ரேடியோவில் கேட்டதுமே உடனே ஓடிப்போய் ரேடியோவை அடைத்துவிடுவேன். ரேடியோ ரிப்பேர், ரேடியோவில் இன்னைக்கு பழைய பாட்டு இல்லை, அப்படி இப்படின்னு பல வகையான பொய்களை சொல்லி தினமும் சமாளிக்க வேண்டியது இருக்கும்.. அப்பப்பா.....
இப்படி இருக்கும் சமயத்தில் ஒரு நாள் அகத்தியனின் அதிரடி ரீமிக்ஸின் பழைய பாடல்களின் ரீமிக்ஸ் கேட்க நேரிட்டது.. என்னமா பின்னியிருக்கார் போங்க. அப்போதுதான் முதன் முதலாக இந்த பாடலை கேட்டேன். அந்த சம்பவத்துக்கு பிறகுதான் பழைய பாடல்கள் கூட நல்லா இருக்கேன்னு கொஞ்சம் கொஞ்சமா பழைய பாடல்களை தேடிப்பிடித்து கேட்க ஆரம்பித்தேன். இப்போது என்னுடைய சொந்த கலேக்ஷனிலும் பல பழைய பாடல்கள் இருப்பதுக்கு இந்த பாடல்தான் பிள்ளையார் சுழி. :-)4- வேர் டூ வீ கோ (புதுக்கோட்டையிலிருந்து சரவணன்)

ஒரு டப்பா படம். அதனால், பாடல்களில் அருமையும் மக்களுக்கு தெரியாமல் புதைந்து போனது. இந்த வரி 100% இந்த பாடலுக்கு பொருந்தும். யுவன் இசையில் யுவனே பாடிய பாடல். இதமாக இருக்கும். வரிகளில் ஸ்பெஷல் என்று சொல்ல பெருசா ஒன்றும் இல்லை. இது முழுக்க முழுக்க இந்த இசையால் நான் மயங்கிய பாடல். இந்த இசையில் யுவனின் குரல் பதிந்த விதமும் ஆங்காங்கே கோரஸ் சேர்த்த விதமும் வியக்கும் படி செய்திருக்கிறார் யுவன். பாடல் வெளிவந்ததிலிருந்து சமீப காலம் வரை என் மொபைலின் ரிங்டோனாக இருந்த பாடலும் இதுவே!

Get this widget Track details eSnips Social DNA5- குழலூதும் கண்ணனுக்கு (மெல்ல திறந்தது கதவு)

இந்த காலக்கட்டத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்கள் உலகத் தரம் வாய்ந்தவை. இந்த படத்தின் ஸ்பெஷலிட்டியே MS விஸ்வநாதன் மெட்டமைக்க ராஜா இசையமைத்ததுதான். ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு முத்துக்கள்.
"ஊருசனம் தூங்கிடுச்சு ஊதக்காத்து அடிச்சிருச்சு" என்ற பாடல்தான் சூப்பர்ன்னு பல பேர் சொல்லி கேட்டிருக்கேன். இந்த பாடலும் என்னை கவர்ந்த பாடல்தான். ஆனால் குழலூதும் கண்ணனுக்கு பாடலில் உள்ள அந்த சுகமான சூழல் நான் கேட்கும்போதெல்லாம் என்னை ஆட்கொள்வதை ஒரு நாள் உணர்ந்தேன். அதிலிருந்து இந்த பாடலும் நான் தினமும் கேட்கும் பாடல் லிஸ்டில் நீங்காத இடம் பிடித்துவிட்டது.

Get this widget Track details eSnips Social DNA


5 பாடல் மட்டும் என சொல்லி என்னை இத்துடன் நிறுத்த சொன்ன பிரபா அண்ணனை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கண்டிக்கிறேன். :-) அடுத்து சந்தர்ப்பம் கிடைத்தால் மற்ற பாடல்களை பற்றியும் சொல்கிறேன். அதுவரையில் நன்றி கூறி விடைப்பெருகிறேன்.
வணக்கம்

.:: மை ஃபிரண்ட் ::.

Tuesday, February 5, 2008

என்னைக் கவர்ந்தவை 1 - "என் அருகில் நீ இருந்தால்"

இந்த றேடியோஸ்பதியில் உங்கள் விருப்பப் பாடல்களையும் கூடவே ஒரு சில என் விருப்பப் பாடல்களையும் கொடுத்து வந்த நான் இந்தப் பதிவின் மூலம் எனக்குப் பிடித்த சில அரிய தேர்வுப் பாடல்களைத் தரலாம் என்றிருக்கின்றேன்.

அந்த வகையில் இந்தப் பதிவில் "என் அருகில் நீ இருந்தால்" திரைப்படத்தில் இருந்து இரண்டு பாடல்களத் தருகின்றேன். என் பள்ளிக்காலத்தில் ரசித்த பாடல்களில் என்றும் நீறு பூத்த நெருப்பாய் இருப்பவற்றில் இவையும் ஒன்று. ஆனால் பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது. இப்போது சின்னத்திரையில் பிரபலமாக விளங்கும் சுந்தர் கே. விஜயன், ஆரம்பத்தில் படம் இயக்கவந்த போது எடுத்துக் கெடுத்த படம் இது. இந்தப் பாடல்களைக் கேட்டு பத்து வருடங்களின் பின் போன வருஷம் ஏதோ ஒரு வீடியோ கடையில் பழைய வீடியோ காசெட்டுக்களுக்குள் புதைந்து கிடந்த இந்தப் படத்தை எடுத்து வந்து பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு எடுத்த ஒரு சொதப்பல் படத்துக்கு இளையராஜாவின் இசை வீணடிக்கப்பட்டிருந்தது.

இங்கே நான் தரும் பாடல்களில் முதலில் மனோ, உமா ரமணன் பாடும் "ஓ உன்னாலே நான் பெண்ணாகினேன்" என்ற பாடல் வருகின்றது. இருவருமே கருத்தொருமித்து ராஜாவின் இசையை உணர்ந்து ஜீவன் கொடுத்திருக்கின்றார்கள். சென்னை வானொலி தான் 90 களில் இந்தப் பாடலை எனக்கு அறிமுகப்படுத்தியது. இதைக் கேட்காதவர்களுக்கும், நீண்ட நாள் கழித்துக் கேட்பவர்களுக்கும் இது ஒரு சந்தர்ப்பம். இதோ
Get this widget | Track details | eSnips Social DNA


அடுத்து நான் தருவது இளையராஜாவே இசையமைத்துப் பாடும் " நிலவே நீ வரவேண்டும்" என்ற பாடல். பாடல் முழுக்க உறுத்தல் இல்லாத கிற்றார் இசை தவழ வரும் பாடல் எப்போதும் கேட்க இதமானது. பாடலில் வித விதமான சங்கதிகள் கொடுத்து அவற்றைத் தானே பாடி எம்மை ரசிக்க வைத்திருக்கின்றார் ராஜா.
Get this widget | Track details | eSnips Social DNA

Friday, February 1, 2008

சிறப்பு நேயர் - "காமிரா கவிஞர்" CVR


றேடியோஸ்பதியின் வாராந்தப் புதுத்தொடருக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு ஒரு நன்றியைக் கொடுத்துவிட்டு இந்த வாரச் சிறப்பு நேயருக்குச் செல்வோம்.

இந்த வாரம் சிறப்பு நேயராக வந்திருப்பவர், உங்கள் எல்லோருக்கும் அறிமுகமான, புகைப்படங்களால் கவிதை படைக்கும் "காமிரா கவிஞர்" CVR. இவரின் காமிரா தொட்டதெல்லாம் பொன் தான் என்பதை இவர் படைக்கும் தமிழில் புகைப்படக்கலை தொடர் நிரூபித்து வருகின்றது.
கூடவே தனித்துவமாக இவர் படைக்கும் பதிவுகள்:

என் எண்ணங்கள் எழுத்துக்களாய்
SimplyCVR

தான் எடுக்கும் புகைப்படங்கள் போலவே ஐந்து முத்தான பாடல்களோடு வந்திருக்கின்றார் CVR. அவற்றுக்கு இவர் தரும் விளக்கமும் அழகோ அழகு. அவற்றை ரசித்துப் பாருங்களேன்.


நான் முன்பே ஒரு முறை என் பதிவு ஒன்றில் குறிப்பிட்டது போல தமிழ் திரையிசை என்பது அள்ள அள்ள குறையாத அமுதச்சுரங்கம்.
அதில் என் மனதை கவர்ந்த பாடல்கள் பல்லாயிரம்,அதில் ஐந்து மட்டும் பிடித்தவை என்று சொன்னால்,சிதறிக்கிடக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் பிடித்தமான ஐந்தை தேர்ர்ந்தெடுப்பது போல்.
இருந்தாலும் என் மனதில் இன்னேரம் சட்டென தோன்றிய ஐந்து பாடல்களை தோன்றிய பொழுதில் பிடித்து இந்த மடலில் நிறப்பி அனுப்புகிறேன்.

1.)பாடல் : சொர்க்கத்தின் வாசப்படி
படம் : உன்னை சொல்லி குற்றமில்லை
இசை : இளையராஜா
பாடகர்கள் : யேசுதாஸ்,சித்ரா
பாடசாசிரியர் : வாலி

சில பாடல்கள் நாம் அமைதியாக இருக்கும் போது,குதூகலமாக இருக்கும் போது,சோகமாக இருக்கும் போது இப்படி பற்பல நேரங்களில் கேட்க பிடிக்கும்,ஆனால் இந்த பாட்டை நான் எப்பொழுது கேட்டாலும் என் மனதை மயக்கி விடும்.
தொடக்கத்தில் சாக்ஸ் தரும் கிறக்கம் கலையும் முன்னரே யேசுதாஸின் தெய்வீக குரல் மயக்கத்தை ஆழப்படுத்தி எனை ஒரு வித அமைதியான நிலைக்கு அழைத்து சென்றுவிடும்.சின்னக்குயில் சித்ராவின் இனிமையான குரலும் சேர்ந்துக்கொண்டு பாடல் முடியும் வரை என்னை பரவசத்தில் ஆழ்த்தி விடும்!!
இத்தனையும் சொல்லிவிட்டு இந்த பாடலின் வரிகளை பற்றி குறிப்பிடவில்லை என்றால் எனக்கு அடுத்த வேளை சோறு கிடைக்காது!!!
என்ன நளினம்,என்ன மென்மை,காதலின் கதகதப்பு இவையணைத்தையும் வாலியின் வைர வரிகள் நமக்கு அளித்து இந்த பாட்டை நீங்காத இடத்தை பிடிக்க செய்துவிட்டது.
நீங்களும் தான் கேட்டு பாருங்களேன்

பாடலின் வரிகளைப் பார்க்க

பாடலைக் காண

பாடலைக் கேட்க
Get this widget Track details eSnips Social DNA


2.) பாடல் : தாலாட்டும் காற்றே வா
படம் : பூவெல்லாம் உன் வாசம்
இசை : வித்யாசாகர்
பாடகர் : சங்கர் மஹாதேவன்
பாடலாசிரியர் : வைரமுத்து

பாடலில் என்னை மிகவும் கவர்ந்தது,பாடலின் வரிகள்

தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா

இப்படி ஒவ்வொரு வரியை பாடிக்கொண்டே போக ஒரு வரிக்கு அடுத்த வரி நம்மின் ஆர்வத்தை கூட்டிக்கொண்டே போகும்.பாடல் முழுதும் காதலன் தன் கனவுகளையும் ,தன் காதல் நிறைவேறாமல் போய் விடுமோ என்று தன் பயங்களையும் பட்டியலிடும் போது நம் மனம் நம்மையும் அறியாமல் அந்த காதல் வெற்றிபெற வாழ்த்து கூறும்.ஒரு ரயில் போகும் ஓசையை பிண்ணனியாக வைத்து வித்யாசாகர் அழகாக இசை அமைக்க,தனக்கே உரித்தான உணர்வு பூர்வமான குரலில் சங்கர் மஹாதேவன் பட்டையை கிளப்பியிருப்பார்.பாடலின் இரண்டாவது பகுதியில் ஜோதிகாவும்,அஜீத்தும் ரயில் தண்டவாளத்தில் படம் பிடித்திருக்கும் விதமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்!! :-)

பாடலின் வரிகளைப் பார்க்க

பாடலைக் கேட்க
Get this widget Track details eSnips Social DNA


3.)பாடல் : சொந்தம் வந்தது
படம் : புது பாட்டு
இசை : இளையராஜா
பாடகி : சித்ரா
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் (சரியா தெரியல)

இளையராஜாவின் கிராமிய பாடல்கள் மேல் எனக்கு என்றுமே ஒரு தனி மோகம் உண்டு!கிராமியப்பாடலுக்கு ஏற்ற எளிமையும் இனிமையும் சேர்ந்து கண நேரத்தில் என் உதடுகளில் புன்னகையை வரவழைத்து விடும்.எளிமையான பாட்டாக தோன்றினாலும் பாடலை பாடிய விதம் மற்றும் இசையமைப்பில் உள்ள நேர்த்தியை கவனிக்காமல் இருக்க முடியாது.
உதாரணமாக
கண்ணேன்னு சொல்ல வேண்டாம்,கிளியேன்னு கில்ல வேண்டாம்,
கண்ணாலே கொஞ்சம் பாரு போதும்

என்று சித்ரா பாடும் போது,அதில் காதல் சுவையோடு சேர்ந்த மிடுக்கும் பளிச்சிடும்.அந்த வரியின் முடிவில் அழகான புல்லாங்குழலின் இசையோடு முடித்திருக்கும் விதம் ,இந்த படோடாபமில்லா பாட்டுக்கு அவர்கள் எடுத்திருக்கும் நுணுக்கமான உழைப்புக்கு சான்று.
மேலே பார்த்த வரியை போல ஒரு கிராமத்து பெண்ணின் கலங்கமில்லா காதலை எடுத்து கூறும் வகையில் அற்புதமான பாடல் வரிகள்.
இப்படி பல விஷயங்களால் நாம் விரும்பி கேட்கும் பாடல்களில் ஒன்றாக இந்த பாட்டு அமைந்து விடுகிறது.

பாடலைக் காண

பாடலைக் கேட்க
Get this widget Track details eSnips Social DNA


4.)பாடல் : முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
படம் : ஆஹா
இசை : தேவா
பாடகர் : ஹரிஹரன்
பாடலாசிரியர் : வைரமுத்து

மிகவும் பிரபலமான பாடல்.பாடலின் காட்சியமைப்பும் இந்த பாடலின் மிகப்பெரிய பக்கபலம்.ஒரு இளைஞனின் துடிப்பும் ,காதலால் அவனுள் ஏற்படும் உற்சாகமும் மிக அழகாக வெளிக்கொணர்ந்திருப்பார் இயக்குனர்.பாடல் முழுக்க கதாநாயகன் ஆட்டம்,பாட்டம் என்று ஓடிக்கொண்டு இருந்தாலும் பாடல் முழுக்க காட்சி ஸ்லோ மோஷனில் தான் போகும்,ஆனாலும் பாடலின் உணரச்சியில் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல்,காதல் செய்தால் இவ்வளவு சந்தோஷமா என்று நம்மையும் யோசிக்க வைத்து விடும்.
இசை பாடல் பாடப்பட்ட விதம்,வரிகள் என மற்ற அம்சங்களும் கனக்கச்சிதமாக பொருந்தியிருக்கும் பாடல்.இளமையையும் காதலையும் கண்டு பார்த்து நாம் பொறாமை பட வைத்துவிடும் பாடல்!
http://www.youtube.com/watch?v=GgPKtSrDp58

Get this widget | Track details | eSnips Social DNA


5.)பாடல் : மலரே மௌனமா
படம்: கர்ணா
இசை : வித்யாசாகர்
பாடகர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,எஸ்.ஜானகி
பாடலாசிரியர் : வாலி
ஆகா!
என்ன ஒரு இனிமை,என்ன ஒரு இனிமை!!! ஹிந்துஸ்தானி இசையின் இதமும் பதமும் முழுமையாக இந்த தமிழ் பாடலில் கேட்டு ரசிக்கலாம்!!
அதுவும் எஸ்.பி.பி மற்றும் ஜானகி பற்றி சொல்லவும் வேண்டுமா??? தங்களின் தேனினும் இனிய குரலின் மூலம் பாடல் முழுவதும் இழைத்தார் போல் அப்படி ஒரு மென்மை!!
பாடலுக்கு வாலியின் வைரவரிகள் பாடலின் அழகுக்கு அழகு சேர்ப்பவை

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ?
மீதி ஜீவன் என்னை பார்த்த போது வந்ததோ..

போன்ற வரிகள் நம் இதயத்திற்கு ஒற்றடம் கொடுக்க வல்லவை!
அதனுடன் மலை பிரதேசத்தில் எடுக்கப்பட்ட கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சியமைப்பு இந்த பாட்டில் இன்னொரு ரசிக்கவைக்கும் அம்சம்.

பாடலைக் காண

பாடலைக் கேட்க
Get this widget Track details eSnips Social DNA


எனக்கு பிடித்த பாடல்கள் உங்கள் ரசனைக்கும் விருந்தாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்!!!
வாய்ப்பளித்த கானா பிரபா அண்ணாச்சிக்கு மிக்க நன்றி!!
:-)