Pages

Friday, September 29, 2023

💛💛💛இளவட்டம் கை தட்டும் டும் டும் ❤️❤️❤️

கனவுக்குள் கண்ணுக்குள்

வந்தாயோ…

மனதுக்குள் நெஞ்சுக்குள்

நின்றாயோ…

“மை டியர் மார்த்தாண்டன்” இசைப் பேழையைக் கேட்டாலேயே அது ஒரு உற்சாக பானத்தை (energy drink) கொடுத்த புத்துணர்வைக் கொடுக்கும்.

ஒவ்வொரு பாடலைத் திறந்தால் Coke போத்தலின் மூடியைத் திறந்தால் பொங்கும் நுரைப் பிரவாகம் தான்.

ஒரு சமயம் “இளவட்டம் கை தட்டும் டும் டும் (எஸ்.ஜானகியுடன் எஸ்பிபி) பாடிய பாடலை எஸ்;பி.சரண் சிலாகித்துப் பாடிய போது 

“அடடே நல்ல பாடலாக இருக்கிறதே”

என்று SPB சொல்லவும், இளையராஜா இசையில் எஸ்பிபி தான் பாடிய விஷயத்தைச் சரண் சொன்னாராம். அப்போது கூட

“என்னமா இசையமைச்சிருக்கான்” என்று ராஜாவைத் தான் புகழ்ந்து தள்ளினாராம் SPB.

நமக்கெல்லாம் இந்தச் செய்தி அதிசயமாக இருக்கும் என்னடா இவ்வளவு நல்ல, பிரபலமான பாடலெல்லாம் மறந்துட்டாரா என்று. ஆனால் இது போலவே “அன்பே ஆருயிரே” (செவ்வந்தி) பாடலை சூப்பர் சிங்கரில் ஒரு சமயம் பையன் ஒருவன் பாடி முடித்ததும் இந்தப் பாட்டு நான் பாடினேனா என்று ஆச்சரியம் பொங்க SPB கேட்டிருப்பார்.

டக் டுடு டக் டக் டுடு டக் இசையோடு தொடரும்

அந்த ஆரம்பக் கூட்டுக்குரல்களே பூவில் மிதக்கும் தேனீக்கள் போல.

SPB & ஜானகி என்ற இரண்டு அசுரர்கள் பாடும் போது கேக் இல் கிரீம் பூச்சுப் போல பின்னால் ஒட்டிக் கொண்டு ஒப்புவிக்கும் கூட்டுக் குரலோசை ❤️

இடையில் SPB யின் வேலையைப் பறித்துத் தானே சிரித்து வைக்க, பதிலுக்கு SPB 

பெண்ணின் நாணம் விடுமா? என்று பாடும் போது தொனிக்க விடும் ஒரு எள்ளல்தனமான சங்கதி

சொர்க்கமய்யா இதையெல்லாம் அனுபவித்துக் கேட்டால்.

இளவட்டம் கை தட்டும் போலவே அதே சந்தத்தை வைத்து வார்த்தை விளையாட்டு போட்டிருப்பார் கவிஞர் வாலி.

பாடலாசிரியரே ராகங்களின் திறன் அறிந்தவராகவும் இருப்பதன் இலாபமென்ன?

கல்யாணி ராகம் தானய்யா இந்தப் பாட்டு என்று போகிற போக்கில் நிறுவி விடுவார். 

“சுந்தரி கண்ணால் ஒரு சேதி” பாடலில் ஒரு மெது நடையாகப் பயணித்த கல்யாணியா அதே கூட்டணிக் குரல் + இசையோடு துள்ளித் துள்ளிப் பாய்கிறாள்? ஆகா 😍

வாத்திக்கருவிகளில் மட்டுமல்ல ராகங்களைக் கையாள்வதிலும் புதிய புதிய உத்திகளை நிறுவ முடியும் என்பதற்கான காலத்தின் சாட்சி நம் இசை ஞானியார் ❤️

https://youtu.be/LDB3Z8RD7dI?si=C_5GCMsB8LHYu3Fx

குரல் வண்ணம் கொஞ்சட்டும்

கல்யாணி

❤️❤️❤️

கானா பிரபா

பின்னணிப் பாடகி B.S.சசிரேகா பேட்டி நிறைவுப் பாகம்


https://www.youtube.com/watch?v=EunsBl204u0


இந்தப் பகுதியில் கமல்ஹாசனோடு சேர்ந்து பாடிய பாடல், எம்.ஜி.ஆர் படத்தில் பாடிய கதை, T.ராஜேந்தர், ஆபாவாணன் படங்களிப் பாடிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.


Monday, September 25, 2023

SPB நினைவில் மூன்றாண்டுகள்

 


பக்கத்தில் 

நீயும் இல்லை…..


ஒருவர் நம்மோடு இருக்கும் நேரத்தை விட இல்லாத நேரத்தில் தான் இன்னும் இன்னும் நினைக்கப்படுவார்.

அது நம்மோடு வாழ்ந்த சக மனிதர்கள் மட்டுமன்றி நம்மை உயிரூட்டியவர்களுக்கும் சாலப் பொருந்தும். அப்படி ஒருவர் தான் எங்கள் SPB.


அவரின் இன்மையில் தான் அவர் பாடிச் சென்ற அதுவரை கேட்காத பாடல்களைத் தேடித் தேடிக் கேட்டேன் ட்ரங்குப் பெட்டியைக் கிண்டிக் கிளறிப் பழைய புகைப்பட ஆல்பத்தைத் தேடியெடுத்துக் கேட்பது போலவொரு சுகத்தைக் கொடுப்பார்.


ஒரு பாடலை எப்படி

மனம் திறந்து பாட வேண்டும்

இன்னொரு பாடலை எப்படி

மனசுக்குள் பாட வேண்டும்

என்று பாடமெடுப்பார்.


இசைக் கலைஞர்கள், தன் முன்னோர்கள் தன் சமகாலத்தவர் என்று ;


SPB அளவுக்கு 

இசையமைப்பாளர்களைப் பற்றி விலாவாரியாகப் பேசிய யாருமே இல்லை,


SPB அளவுக்கு 

இசைக் கலைஞர்களைப் பற்றி விலாவாரியாகப் பேசிய யாருமே இல்லை,


SPB அளவுக்கு 

ஒவ்வொரு பாடல்களின் பிறப்புக்கும் பின்னால் உள்ள கதையை யாரும் அதிகம் பேசியதில்லை.


அவர் நம்மோடு இல்லாத இந்தச் சூழலிலும் SPB விட்டுச் சென்ற அவரின் பாடல் நுணுக்கங்களை எத்தனை இசைக் கலைஞர்கள், பாடகர்கள் ஆழமாக ஆய்ந்து பேசுகிறார்கள் என்பது கூடக் கேள்விக்குறியே.


“இசைஞானி இளையராஜா திரையிசைத் துறையில் என்னவெல்லாம் உத்திகள், நுணுக்கங்கள் உண்டோ அவற்றையெல்லாம் நிகழ்த்திக் காட்டி விட்டார், அவர் ஒரு முழுமையான பல்கலைக்கழகம்” 

என்று அண்மையில் சாய் வித் சித்ராவில் இசையமைப்பாளர் ரகுநந்தன் சொன்னார் இப்படி.

அதை அப்படியே பாடகர் உலகத்தில் பொருத்தி விட்டால் சர்வ இலட்சணமும் SPB க்கே பொருந்தி நிற்கும்.


ஒவ்வொரு பாடல்களிலுன் அந்தந்த ஜீவனைக் கொடுக்கத் தன் ஜீவனை அவர் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்.


“ஒரு பாடல் பாட வந்தவர் 

நம் பாடல் ஆகிறார்”


SPB யின் ஒவ்வொரு பாடல்களைக் கேட்கும் போதும் அவர் உயிர் பெற்று நம்முள் ஊடுருவுகிறார்.


உயிர் பிரிந்தாலும் 

நடமிடுவேனே 🙏

SPB ❤️ 


கானா பிரபா

25.09.2023

Friday, September 22, 2023

❤️❤️❤️ பாடகி B.S.சசிரேகா பேட்டி ❤️❤️❤️ பாகம் 3


இந்தப் பகுதியில் லட்சுமி படத்தில் கிடைத்த வாய்ப்பும், கிடைக்காத பாடலும்

"வாழ்வே மாயமா" பாடலின் நீட்சிக்காக இளையராஜா கையை நீட்டிக் காட்டிப் பாடல் பயிற்சி கொடுத்த நிகழ்வு, 

மலேசியா வாசுதேவனோடு பாடிய அனுபவம்,

சங்கர் - கணேஷ் கூட்டணியில் பாடியது

போன்ற நினைவுகளைப் பகிர்கின்றார்.

பேட்டியைக் கேட்க

https://www.youtube.com/watch?v=yjLj7mEM_o0

இரவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட "விழியில் விழுந்து இதயம் நுழைந்து" ❤️❤️❤️ பாடகி சசிரேகா பேட்டி பாகம் 2


இரவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட

❤️❤️❤️

"விழியில் விழுந்து இதயம் நுழைந்து"

❤️❤️❤️

பாடகி சசிரேகா பேட்டி பாகம் 2

https://www.youtube.com/watch?v=_o3MITOK1Vg&t=21s

இந்தப் பகுதியில் தனக்கு விருது மேடை ஒன்றில் கிடைத்த ஏமாற்றமும், கூட்டுப் பாடகியாகப் பிரபல பாடகிகளோடு பாடிய போது கிட்டிய திருப்தியையும் பகிரும் சசிரேகா, "விழியில் விழுந்து இதயம் நுழைந்து" பாடல் பிறந்த கதையையும் சொல்கிறார் கேளுங்கள்.

Tuesday, September 19, 2023

"என்னுயிர்த் தோழன்" பாபு


கரணம் தப்பினால் மரணம் என்பார்கள் அது “என்னுயிர்த் தோழன்” பாபு விஷயத்தில் கடந்த 32 வருட சாட்சியாக இருந்தது.

புகழை உழைக்கக் கொடுத்த அதிக பட்ச விலை அதுதான்.

என்னுயிர் தோழன் திரைப்படம் படமாக்கப்படும் வேளை கல்கியில் தொடராக வெளிவந்தது. பாரதிராஜாவின் எழுத்தில் வந்த இப்படம் இவரது வழக்கமான பாணியில் இருந்து விலகி அரசியல் வாழ்வில் ஒரு சாதாரண தொண்டன் எப்படி ஏமாற்றப்படுகின்றான் என்பதை நடப்பு அரசியலோடு பொருத்தி எடுத்திருந்தார். 

பாபு அப்பட்டமாக “தர்மா” என்ற பாத்திரமாகப் பொருந்தி இருப்பார்.

பாரதிராஜாவின் மனைவி முன்னர் ஒரு பேட்டியில் தன் கணவர் இயக்கிய படங்களிலேயே என்னுயிர் தோழனே பிடித்தது என்று சொல்லியிருக்கின்றார். பாரதிராஜாவின் உதவி இயக்குனரும், இப்படத்தின் அறிமுக நாயகனுமான பாபு இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏராளம் படங்களில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். விக்ரமனின் “பெரும் புள்ளி” மற்றும், “தாயம்மா” போன்ற ஒரு சில படங்களில் நடித்த நிலையில் "மனசார வாழ்த்துங்களேன்" படத்தில் அவர் டூப் போடாமல். நடித்து விபத்தில் சிக்கி இன்று வரை உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் 32  வருடங்களாகப் படுக்கையில் இருந்தார்.




பாபு குறித்து தன் வாழ்க்கைத் தொடரில் பாரதிராஜா பேசியது

https://youtu.be/y1ndTbAqGxs?si=PLP7EhZM90GYmPCg

இடையில் கொஞ்சக் காலம் உடல் நிலை தேறியது போல இருந்த போது பாரதிராஜா மீண்டும் உதவி இயக்குநராக அணைத்துக் கொண்டார். ஆனால் காற்று ஊதிய பலூன் நிலையாகிப் போனார்.

தன் அண்ணன் பாபுவைக் கவனிப்பதற்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்த தம்பியும் திடீர் அகால மரணம். தாயின் அரவணைப்பில் பாரதிராஜா போன்ற நேசங்களின் உதவியோடு காலத்தை வலியோடும், வேதனையோடும் கழித்தார். பொன்வண்ணன்  மிக நெருக்கமாகப் பழகியவர் பாபுவின் வாழ்க்கையை ஆவணப் படமாக எடுத்தும் பின்னர் வேறு காரணத்தால் வெளியிடவில்லை.

“என்னுயிர்த் தோழன்” பாபு ஆத்மா வலி கடந்து ஆன்மா சாந்தியடையட்டும் 🙏

Friday, September 8, 2023

💚💚💚பின்னணிப் பாடகி B.S.சசிரேகா 💚💚💚💚 பிறந்த நாள் இன்று ❤️❤️❤️

70 களிலும், 80 களிலும் தமிழ்த் திரையிசை உலகில் கோலோச்சிய, காலத்தால் மறக்கவொண்ணாப் பாடகி சசிரேகா அவர்களது நீண்ட நெடும் திரையுலகப் பயணம் பொன்விழாவைக் கடந்தது.

இந்த நிலையில் அவரின் விரிவான முழு நீளப் பேட்டியை ஒவ்வொரு பாகங்களாகப் பகிரவுள்ளேன்.

அவர் மனம் திறந்து பகிரும் பல அரிய தகவல்களைத் தொடர்ந்து கேளுங்கள். 

சசிரேகா பேட்டி பாகம் 1 ஐக் கேட்க

https://www.youtube.com/watch?v=-vCmwMwYzGk

08.09.1950 ஆம் ஆண்டு பிறந்த எங்கள் பின்னணிப் பாடகி B.S.சசிரேகா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கானா பிரபா