
ஒரு இயக்குனருக்குள் இசையையோ குறித்த இசையமைப்பாளரையோ நேசிக்கும் ஆத்மார்த்தமான ரசிகர் இருப்பாரேயானால் எந்தக் காலத்திலும் அவர் யாசிக்கும் மெட்டுக்களை குறித்த இசையமைப்பாளரிடம் பெற்றுக் காலத்தால் அழியாத இசைக்காவியம் படைக்கலாம் என்பதற்கு எத்தனையோ இயக்குனர்களை முன்னுதாரணங்களாகக் காட்டலாம். இங்கே நான் கொண்டுவருபவர் மலையாளப் படவுலகின் ஜனரஞ்சக இயக்குனர் சத்யன் அந்திக்காட்.
சத்யன் அந்திக்காட் இன் ஆரம்பகாலப் படங்களை எடுத்துக் கொண்டால் அவற்றில் இளையராஜாவின் பங்களிப்பு இல்லை. கொச்சு கொச்சு சந்தோஷங்கள் படத்தை தொடர்ந்து ஒரு சிறு இடைவெளி விட்டு மீண்டும் சத்யன் அந்திக்காட் - இளையராஜா கூட்டணி சேர்ந்த போது வந்த படங்கள் அனைத்துமே இசைச்சாகரம் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக அவை வெறுமனே நல்ல பாடல்களைக் கொண்ட படங்கள் என்பதை விட , சத்யன் சொல்ல வந்த படைப்பை நுணுக்கமான இசையால் நெய்தளித்த அருமையான பின்னணி இசை குறித்த படங்களை ஒரு படி உயர்த்தியும் விட்டன.
இன்றைக்கு இளையராஜாவின் இசைக்கு வர்த்தக உலகில் சற்றே இறக்கம் இருந்தாலும் தொடர்ந்து ஏழாவது படமாக தொடர்ச்சியாக இளையராஜாவைப் பயன்படுத்திவரும் சத்யன் சந்தேகமே இல்லாமல் அவரின் தீவிர ரசிகராக இருக்கிறார் என்பதில் ஐயமே இல்லை. அதை நிரூபிக்குமாற் போல, இளையராஜா சத்யனோடு சேரும் ஓவ்வொரு படங்களிலும் தனித்துவமான இசையை விட்டுச் செல்வார்.
இந்த ஆண்டு சத்யன் அந்திக்காட் இற்கு மிகவும் விசேஷமான ஆண்டு. காரணம் அவர் இயக்கி வெளிவரும் 50 வது படமான "கதா தொடருன்னு" வரவிருக்கின்றது. சத்யனும் ராஜாவும் கூட்டணி வைத்த ஓவ்வொரு படத்தையும் ஆழ அகலமாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதை ஆறப்போட்டு விட்டு திடீர் விருந்தாக, இவர்கள் கூட்டணியில் வந்த சில முத்துக்களை இங்கே தருகின்றேன்.
கொச்சு கொச்சு சந்தோஷங்கள்

ஜெயராம் காவ்யா மாதவன் நடித்து வெளிவந்த இப்படம் 2001 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிராந்திர மொழிப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுத் தேசியவிருதைப் பெற்றுக் கொண்டது.
இந்தப் படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் ஒரு இனிய பாடல் "கோட மஞ்ஞில்"
மனசினக்கரே
முதுமை வரமா, சாபமா? விடைதேடும் கேள்வியோடு மனதில் பாரத்தை விதைத்த படம். அதைப்பற்றி அனுபவித்து எழுதிய பதிவு மனசினக்கரே - முதுமையின் பயணம்
மனசினக்கரே தரும் "தங்கத்திங்கள்"
அச்சுவிண்டே அம்மா

இந்தப் படத்தைப் பார்த்து மூன்று வருஷங்கள் கழிந்தும், பதிவாகப் பகிர்ந்து கொள்ள முடியா அளவுக்கு வார்த்தைகளில் அடக்கமுடியாத உணர்ச்சிச் சித்திரம் இது. ஊர்வசிக்கு காலாகாலத்துக்கும் உயிலில் எழுதி வைக்க வேண்டிய நடிப்பை அளித்தது. இசைஞானியும் சத்தியன் அந்திக்காடுவும் இணைந்து சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே மெட்டுப் போட்டு ரசித்த சீடிக்களும் வந்து பரபரப்பைக் கிளப்பியது. இசைஞானி மத்திய கிழக்கு நாட்டுக்குக் கடத்திப் போகும் பாட்டு ஒன்று இதில் இருந்து "எந்து பறஞ்சாலும்"
ரசதந்திரம்

இந்தப் படத்தை கேரளாவின் ஆலப்புழாவில் ஒரு தியேட்டரில் பார்த்து இன்புற்ற அந்த நாள் இன்னும் பசுமரத்தாணி போல. அதைப் பற்றி தமிழ்மண நட்சத்திர வாரத்தில் நான் எழுதிய பதிவு.
ரச தந்திரம் - திரைப்பார்வை
ரசதந்திரம் தரும் "பொன்னாவணிப் பாதம் தேடி" மதுபாலகிருஷ்ணன், மஞ்சரி குரல்களில்
வினோதயாத்ரா

கதையே இல்லாத படத்தையும் கூட, ரசிகனின் கைப்படித்து உட்காரவைத்து விசிறி விட்டுப் பார்க்க வைக்கும் தந்திரம் சத்தியன் அந்திக்காடுவுக்கு உண்டு என்று நிரூபித்த இந்தப் படம் திலீப் இன் நகைச்சுவை நடிப்புக்குத் தீனி கொடுத்தது. அதில் வரும் மதுபாலகிருஷ்ணன் பாடும் "மந்தாரப்பூ" என் சர்வகாலத்து இசைப்பட்டியலில் ஒன்று
இன்னதே சிந்த விஷ்யம்
மூன்று ஆர்ப்பாட்டமான பெண்மணிகளுக்குப் பாடம் படிப்புக்கும் வேலை மோகன் லாலுக்கு, கூடவே குறும்புக்காரி மீரா ஜாஸ்மினும். சொல்லவா வேண்டும் இவர்கள் கொட்டத்துக்கு. ராஜாவை மனதில் இருத்தி வைத்து நேசிக்கும் பாடகன் சிறீகுமாருக்குக் கிடைத்த இன்னொரு பொக்கிஷ வாய்ப்பு "கண்டோ கண்டோ காக்கைக் குயிலே"
பாக்யதேவதா

சத்யன் அந்திக்காடு இயக்கி இறுதியாக வெளி வந்த படமிது. இதைப் பற்றியும் ஒரு பதிவு போட்டு நிறைவடைந்தேன்.
"பாக்ய தேவதா" என்னும் இளையராஜா
கனிகா மீது மையல் கொண்டு ஜெயராம் பாடும் "ஸ்வப்னங்கள் கண்ணெழுதிய" (பாடியவர்கள் சித்ரா, ராகுல் நம்பியார்) பாடலைக் வெறும் கேட்கும் போது இருந்த சுகம் பார்க்கும் போது இரட்டிப்பாகின்றது காட்சியோடு அளவாகப் பொருந்தி.
கத தொடருன்னு

சத்யன் அந்திக்காடுவின் கலையுலக வாழ்வில் ஐம்பதாவது படமாக வரவிருக்கும் கத தொடருன்னு ராஜாவோடு அமர்க்களமான கூட்டணியாகத் தொடர்கின்றது. சத்யனும் ராஜாவும் இன்னும் தமது வெற்றிக்கூட்டணியில் இன்னும் பல நிறைவான படைப்புக்களைத் தர வாழ்த்தி இந்தப் படத்தில் இருந்து ஹரிகரன், சித்ரா குரல்களில் "ஆரோ" பாடல் நிறைக்கின்றது.