Pages

Saturday, December 22, 2012

"சாகித்ய அகாடமி' விருது பெற்ற‌ எழுத்தாளர் டி.செல்வராஜ் பேசுகிறார்

முற்போக்கு எழுத்தாளர் டி.செல்வராஜ் அவர்களின் "தோல்" என்ற நாவலுக்கு இந்திய "சாகித்ய அகாடமி' விருது இந்த ஆண்டு கிட்டியிருக்கிறது. இந்த நிலையில் அவரை நான் பணிபுரியும் தமிழ் முழக்கம் வானொலி சார்பில் எடுத்திருந்த ஒலிவடிவத்தை இங்கு பகிர்கின்றேன்.

Tuesday, December 18, 2012

பூமாலையே தோள் சேரவா..தீம்தன தீம்தன...

"பூமாலையே தோள் சேரவா
பூமாலையே ஏங்குமிரு தோள் சேரவா"
அஞ்சனா, சத்யப்ரகாஷ் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க, கண்கள் குளமாகின்றன எனக்கு.

படிக்கும் போது சிரிப்பாக இருக்கும் உங்களுக்கு, ஆனால் சற்று முன்னர் அடைந்த பரவசத்தின் வெளிப்பாடு தான் அது. எப்பேர்ப்பட்ட சக்தி இந்தப் பாடலுக்கு.  இருபத்தேழு வருஷங்களுக்கு முன்னர் வந்த பாடல் ஒன்று இன்று கேட்கும் போதும் ஆட்டிப்படைக்கின்றதென்றால் அதை அவ்வளவு சாதாரணமாக ஒதுக்கிவைக்கமுடியாது. எத்தனை ஆயிரம் பாடல்களைக் கேட்டுவிட்டோம், ஆனால் இப்பேர்ப்பட்ட பாடலை என்றாவது ஒருநாள் கேட்கும் போதும் ஆயிரம் சுகானுபங்களை அள்ளித் திரட்டிக் கொடுத்துத் தின்ன வைக்கின்றது.

இசைஞானி இளையராஜாவோடு ஜோடி கட்டிய பாடகிகளில், ஜானகியை மட்டுமே முதல் இடத்தில் வைத்து இந்தக் கூட்டணியை ஆராதிக்கத் தோன்றும். சித்ராவோடு ராஜா பாடிய பாடல்கள் தனியே நோக்கப்படவேண்டியது என்றாலும், எஸ்.ஜானகியை இன்னும் விசேஷமாக ராஜாவோடு ஜோடி போட்டு ரசிக்க இன்னொரு காரணம் அவரின் தனித்துவம் தான். எண்பதுகளில் எஸ்.ஜானகி என்றால் ஆம்பளை S.P.B என்றும் S.P.B ஐ பொம்பளை எஸ்.ஜானகி என்னுமளவுக்கு இருவருமே திரையிசைப்பாடல்களில் ஒரு வரையறைக்குள் நில்லாது எல்லாவிதமான சங்கதிகளிலும் பாடித் தீர்த்துவிட்டார்கள். எஸ்.பி.பி நையாண்டியாகச் சிரித்துப் பாடினால் அதற்கு ஈடுகொடுத்து நையாண்டியாகச் சிரித்துப் பாடும் ஜானகியை மட்டுமே ரசிக்கலாம், இன்னொருவர் பாடினால் அது அப்பட்டமான செயற்கையாக இருக்கும். அப்பேர்ப்பட்ட ஜானகி, ராஜாவோடு சேர்ந்து பாடிய பாடல்களைக் கேட்கும் போது, ராஜாவின் குரல்வளத்துக்கும் அவருடைய அலைவரிசைக்கும் ஏற்றாற்போல இயைந்து பாடுமாற்போல இருக்கும், அங்கேயும் ஒரு செயற்கைத் தனம் இராது. அதனால் தான் இந்தப் பூமாலையையும் நேசிக்கத்தூண்டுகிறது.

ஆர்ப்பரிக்கும் வயலின் ஆலாபனையோடு எஸ்.ஜானகியும், ராஜாவும் பாடும் இந்தப் பாடலில் இருவருமே முன்னணிப்பாடகர்களாகவும், அதே சமயம் பின்னால் இயங்கும் ஒத்திசைப் பாடகராகவும் இரட்டைப் பணியைச் செய்கின்றார்கள்.
ஜானகி பாடும் போது
"இளைய மனது  
                        தீம்தன தீம்தன
இணையும் பொழுது 
தீம்தன தீம்தன ஆஆஆ"
என்று ராஜா பின்பாட்டு பாடுவதும்
நான் உனை நினைக்காத நாளில்லையே..
தேனினை தீண்டாத பூ இல்லையே 
    நனனாஆஆஆ
நான் உனை நினைக்காத நாளில்லையே 
 என்னை உனக்கென்று கொடுத்தேன்
தேனினை தீண்டாத பூ இல்லையே 
ஏங்கும் இளம்காதல் மயில் நான்
  தேன்துளி பூவாயில் பூவிழி மான்சாயல்
லலலா ..... லலலா .....
என்று ஜானகி பிற்பாட்டுப் பாடுவதுமாகப் பாடல் முழுவதும் இதே சங்கதிதான்.
இப்படியான பாடல்களை எந்தவித சங்கீதப் பின்னணி இல்லாத நம்மைப் போன்ற சாதாரணர்கள் 
மெட்டில் கொட்டியிருக்கும் ஏற்ற இறக்கங்களைக் கேட்டுக் கிறங்கிவிட்டுப் போகவேண்டியதுதான். 
நுட்பமான சங்கீத அனுபவம் நிரம்பப்பெற்றவர்களுக்கு இன்னும் இந்தப் பாடல் கொடுத்திருக்கும் மேன்மை ஒருபடி மேலே தெரியும்.
இசைஞானி இளையராஜா போன்ற மேதையின் மெட்டை உள்வாங்கிக் கிடைத்த இடத்தில் எல்லாம் தன் ஆளுமையைக் காட்டி அதே சமயம் அதிமேதாவித்தனமாகக் குட்டையைக் குழப்பிவிடாத இங்கிதம் தெரிந்த பாடலாசிரியர்களுள் கங்கை அமரனின் பெருமை அதிகம் உலகம் அறியாதது.
பகல் நிலவு படத்தில் எல்லாப்பாடல்களுமே அவரின் கைவண்ணம் தான். "மைனா மைனா மாமன் புடிச்ச மைனா" என்று எழுதிய அதே கைதான் இந்தப் பாடலையும் எழுதியிருக்கின்றது. மேற்சொன்ன பாடல் வரிகளில் கங்கை அமரன் தன்னுடைய தனித்துவத்தைப் பாடல்வரிகளில் புதைத்திருப்பதை ஒரு உதாரணமாகவே பார்க்கலாம். பின்னால் இழைந்து வரும் அந்த ராஜா, ஜானகியின் வரிகளை டம்மியாக லலலா என்றே முழுதுமாக மெழுகியிருக்கலாம். ஆனால் அங்கும் கூடத் தேர்ந்தெடுத்த வரிகளால் ஜொலிக்க வைக்கிறார். பாடலாசிரியர் கங்கை அமரனின் இப்படியான சொற்சிலம்ப வரிகளை வைத்து ஒரு பட்டியல் போடலாம் என்றால் அவர் அண்ணன் பாடுவதற்காக எழுதிக் கொடுத்ததை வைத்தே கலசத்தில் வைக்கலாம். "மோகம் தான் சிந்தும் தேகம் தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்" நினைவிருக்கும் தானே இந்தப் பாடல் வரிகள்?
இப்படியொரு அழகான பாடலைத் தூக்கிக் கொடுத்து விட்டுக் கடந்து செல்லும் ராஜாவுக்கு விசுவாசமாக அமைந்த காட்சியமைப்பு, கண்ணுக்குள் நிற்குமளவுக்குப் பொருத்தமாக அமைந்திருக்கின்றது. இருபத்தேழு ஆண்டுகள் என்ன இன்னும் பல தசாப்தங்கள் வாழ்ந்தால் கூடவே பயணிக்கும் இந்தப் பாட்டு. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இன்று கேட்ட அதே பரவசம் வயலின், புல்லாங்குழல், வீணை கொண்டு மனதை மீட்டும்.
 காற்று சுதி மீட்ட காலம் நதி கூட்ட கனவுகள் எதிர் வரும் அனுபவம், பூமாலையே தோள் சேரவா....

Sunday, December 9, 2012

Ordinary (Malayalam) சுகமான பயணம்

பிரயாணத்தில் சந்திக்கும் மாந்தர்களின் குணாதிசயங்களையும், வழி நெடுகக் கிட்டும் சுவாரஸ்த்தையும், சேர்த்தாலே நம்மூரில் ஏகப்பட்ட கதைகளை அள்ளலாம். ஆனால் இப்படியான படைப்புக்களை அதிகம் கொடுக்காத குறையோடே பயணிக்கிறது சினிமாவுலகம். கடைசியாக தமிழில் மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி திரைப்படம் முற்றிலும் புதுமுகங்களை முக்கிய பாத்திரங்களை வைத்துக் கொடுத்திருந்தது. பரவலாக இந்தப்படம் பலரை ஈர்க்காவிட்டாலும் எனக்கு என்னவோ மிகவும் பிடித்திருந்தது. பயணம் மீதான அதீத காதலாலோ என்னவோ தெரியவில்லை. அந்தவகையில் இன்று பார்த்த Ordinary என்ற மலையாளப்படத்தைப் பார்த்ததும் முதல் வரியில் சொன்ன அந்த திருப்தி கிட்டியது.

பத்தனம்திட்டாவில் இருந்து கவி என்ற எழில் கொஞ்சும் மலைக்கிராமத்துக்குச் செல்லும் ஒரேயொரு அரச பஸ் சேவை, பஸ் ஓட்டுனர் பிஜூ மேனன், வழி நடத்துனர் குஞ்சக்கோ போபன் இவர்களோடு கவி கிராமத்து மக்கள் என்று இடைவேளை வரை நல்லதொரு கலகலப்பான பயணமாகப் பதிவு செய்கிறது, அதன் பின் தொடரும் மர்ம முடிச்சும் முடிவில் கிட்டும் விடையுமாக அமைகிறது Ordinary படம்.
தொண்ணூறுகளின் நாயகன் பின் குணச்சித்திரம் என்று இயங்கும் பிஜூ மேனனுக்கு மிக முக்கியமான படங்களில் ஒன்றாக இதைச் சொல்லலாம். கொஞ்சம் முரட்டுத்தனம் கலந்த குணாம்சத்தைத் தன் குரலில் வெளிப்படுத்தும் பாங்கிலேயே வித்தியாசத்தைக் காட்டுகிறார். நாயகன் குஞ்சக்கோ போபனுக்கு இன்னொரு படம் என்ற அளவில் மட்டுமே.வழக்கமாக கதாநாயகரிடம் அடிபட்டுக் கதறும் மாமூல் வில்லன் பாத்திரங்களில் வந்த பாபுராஜ் இந்தப் படத்தில் குடிகாரப்பயணியாக வந்து கலகலப்பூட்டி ஆச்சரியப்படுத்துகிறார் தன் கலக்கல் நடிப்பால்.

கேரள மலைக்கிராமம் Gavi இன் அழகை அள்ளிச்சுமந்திருக்கிறது இந்தப் படம். மசாலாப்படத்திலும் கூட இயற்கை கொஞ்சும் எழிற் கிராமங்களைச் சுற்றிக் காட்சியமைத்துக் கவர்வதில் மலையாளிகள் தனித்துவமானவர்கள் என்பதைப் பல படங்கள் உதாரணம் சொல்லும். இதுவும் அப்படியே.

இந்தப்படத்தின் இன்னொரு பலம் பாத்திரமறிந்து கொடுத்த இசை வள்ளல் வித்யாசாகருடையது. உறுத்தாது பயணிக்கும் பின்னணி இசை மட்டுமன்றி, முத்தான பாடல்களும் முதல்தடவை கேட்டபோதே ஒட்டிக்கொண்டுவிட்டன. இடையில் எத்தனையோ புது இசையமைப்பாளர்கள் வந்துவிட்டாலும், வித்யாசாகருக்கான இடத்தைக் கேரளர்கள் கெளரவமாக வைத்திருப்பதற்கான காரண காரியம் தேடவேண்டியதில்லை

Ordinary சாதாரண கதை ஆனால் அசாதாரணமாக மனசில் ஒட்டிக்கொள்கிறது.















Monday, December 3, 2012

மனசை நிறைய வைத்த "உஸ்தாத் ஓட்டல்"


"வயிறு நிறையிறதுக்கு சமையல் பண்ண யாராலும் முடியும், ஆனா மனசும் நிறையணும் அதான் முக்கியம்" திலகன் (உஸ்தாத் ஓட்டல்)
மலையாள சினிமா கொஞ்ச வருஷமாகத் தன் சுயத்தை இழந்து கோலிவூட், டோலிவூட்  வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் சூழலில் அடுத்த தலைமுறைக் கலைஞர்கள் எங்கே போகப்போகின்றார்கள் என்றதொரு கவலை கேரளத்தின் நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகர்களின் நிஜமான கவலையாக இருக்கும். இப்படியானதொரு சூழலில் சில நம்பிக்கைகளை ஏற்படுத்தும் படைப்புக்கள் ஆங்காங்கே பூக்கும் போது இனம் கொள்ளாத சந்தோஷம் தோன்றும். அப்படியானதொரு நிறைவை ஏற்படுத்தியிருந்தது உஸ்தாத் ஓட்டல் திரைப்படத்தைப் பார்த்து முடித்த பின்னர்.

கேரளத்தின் பெரும் நடிகர் மம்முட்டியின் மகன் தல்குவார் சல்மான் நடித்த இரண்டாவது படம் இது. வாரிசு நடிகரைக் களமிறக்கும் போது ஏகப்பட்ட மசாலாவை அள்ளித் தூவி பில்ட் அப் கொடுப்பது தானே இன்றைய நடைமுறையாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் தல்குவார் சல்மானின் பாத்திரம் ஆரம்பம் முதல் இறுதி வரை அந்தப் பங்கத்தைச் செய்யாது கதையின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றாக மட்டுமே தன் பங்களிப்பைச் செய்கின்றது. இன்னும் சொல்லப்போனால் உஸ்தாத் ஓட்டல் சொந்தக்காரராக வரும் கரீம் என்ற திலகனுக்கான இறுதி யாத்திரையின் மகத்தான அஞ்சலிகளில் ஒன்று இந்தப் படம் எனலாம்.

லண்டனில் ஒரு பெரும் நட்சத்திர ஓட்டலில் பிரதம சமையற்காரராக வேலை செய்யவேண்டும் என்ற கனவோடு  ஃபைஸி (தல்குவார் சல்மான்), அவனின் தந்தைக்கோ தம் சொந்த ஊரான கோழிக்கோடுவில் ஒரு நட்சத்திர ஓட்டலின் உரிமையாளராக ஃபைஸியை வைக்கவேண்டும் என்ற இலட்சியம்.  தந்தை, மகனுக்குள்ளிருக்கும் இந்த இலட்சிய முரண்பாடுகளால், கோழிக்கோடுவில் உஸ்தாஸ் ஓட்டல் என்றதொரு பிரியாணிக்கடை நடத்திவரும் ஃபைஸியின் தாத்தா கரீமின் கவனிப்புக்குள்ளாகும் ஃபைஸியின் வாழ்க்கை எப்படி மாறுகின்றது என்பதே இந்தப் படத்தின் அடி நாதம். சொல்லப்போனால் இந்தக் கதையை ஏகப்பட்ட துண்டுகளாக வெவ்வேறு வடிவங்களிலேயே தமிழிலேயே ஏராளம் படங்கள் வந்து குவிந்து விட்டன. ஆனால் உஸ்தாத் ஓட்டல் பார்க்கும் போது அந்தக் கழிந்த கதைகளையெல்லாம் கடந்து ஒரு சேதி வெகு இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கும். அது தான் இந்தப் படத்தின் வெற்றி. 

கரீம் என்ற முஸ்லீம் கிழவராக வாழ்ந்திருக்கும் திலகனைப் பற்றி என்ன சொல்ல? வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பான முதலாளியாகவும், கனிவான தாத்தாவாகவும் தன் பேரனோடு கொள்ளும் அந்தப் பந்தம், இவருக்குள் இருக்கும் இருவேறு குணாம்சங்களை இந்த ஒரே படத்தில் காட்டியிருக்கிறது.  மம்மூட்டி மகன் தல்குவார் சல்மான் இதுபோன்ற கதை நாயகனாக இன்னும் தேடித் தேடி நடித்தால், இது போன்ற  அடக்கமான நடிப்பில் மகன் தந்தைக்காற்றும் உதவியாக இருக்கும். 
படத்தின் கதையை எழுதியிருக்கும் அஞ்சலி மேனன், படத்தின் முடிவில் கொடுக்கும் அந்த முடிச்சு ஒன்றே அவரின் சிந்தனையில் இருந்து புதிதாய்ப் புறப்பட்டதாக இருக்கும், அதுவே போதும் அவரின் பணியை மெச்ச. அதோ போன்று ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு என்று ஒவ்வொன்றிலும் தெரியும் நேர்த்தியோடு இசையமைப்பாளர் கோபி சந்தர் கொடுக்கும் அந்த இஸ்லாமியப் பின்னணியோடு மணக்கும் இசை இன்னொரு கச்சிதம். இயக்குனர் அன்வர் ரஷித் முன்னர் எடுத்த ராஜமாணிக்கம் உள்ளிட்ட மோசமான கார மசாலாச் சமையலை மன்னிக்க வைத்து விடுகிறது இந்த சுலைமானி.
 "இவனுக்கு சமையலைக் கற்றுக் கொடுத்துவிட்டேன், எதுக்காக சமைக்கிறோம்னு கற்றுக் கொடு" மதுரையில் இருக்கும் தன் நண்பர் நாராயணன் கிருஷ்ணனுக்கு கரீம் எழுதிய அந்தக் கடிதம்தான் வாழ்க்கையின் இன்னொரு அர்த்தம் புரிய வைக்கிறது, அதற்காக உஸ்தாத் ஓட்டலைத் தலைமேல் ஏற்றிக் கொண்டாடலாம்.