Pages

Wednesday, August 16, 2017

ஏ.ஆர்.ரஹ்மான் - புத்திசைக்கு வயசு இருபத்தைந்து 🥁🎻🎼🎺



ஆகஸ்ட் 15. 1992 ரோஜா திரைப்படம் வெளிவருகிறது. தமிழ்த் திரையிசையின் அடுத்த போக்கை அது தீர்மானிக்கப் போகிறது என்ற முடிவு ஏதும் அந்தச் சமயத்தில் தீர்மானிக்கப்படாத சூழலில், இயக்குநர் கே.பாலசந்தர் தன் கவிதாலயா நிறுவனத்துக்காக வெளியார் ஒருவரை வைத்து இயக்கும் இன்னொரு படம் ( இதற்கு முன் நெற்றிக்கண், ஶ்ரீ ராகவேந்திரா, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களை கவிதாலயாவுக்காக எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்)
என்ற கவனிப்பு , அதையெல்லாம் தாண்டி மணிரத்னம் என்ற நட்சத்திர இயக்குநரின் அடுத்த படம் என்ற ரீதியிலேயே பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணுகிறது.

இளையராஜாவை விட்டு விலகிய வைரமுத்துவுக்கு பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் என்ற ரீதியில் அப்போது கை கொடுத்தவை ஏவிஎம் நிறுவனமும், பாலசந்தரின் கவிதாலயாவும் தான். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் கே.பாலசந்தருக்கும் இளையராஜாவுக்கும் எழுந்த விரிசல், கவிதாலயா நிறுவனத்தோடு இளையராஜா இசையமைத்து (இதுவரை) வெளியான இறுதிப் படம் என்ற கணக்கில் பாலசந்தரின் சீடர் அமீர்ஜான் இயக்கிய "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை" படம் அமைந்து நிற்கிறது. மணிரத்னத்தை வைத்து கே.பாலசந்தர் படம் பண்ணுவோம் என்று தீர்மானித்த போது இளையராஜாவை விட்டு விலகி இன்னொரு இசையமைப்பாளரோடு சேரத் தயக்கம் காட்டினாராம் மணி ரத்னம் (ஆதாரம் Weekend with Star இல் சுஹாசினி). ஆனால் பாலசந்தரோ அது ஒத்துவராது என்று சொல்லி விட்டாராம். அந்த நேரத்தில் பாலசந்தரும் தான் இயக்கிய அழகன், வானமே எல்லை ஆகிய படங்களுக்கும், தன் சிஷ்யர் வஸந்த் இயக்க, கவிதாலயா சார்பில் தயாரித்த நீ பாதி நான் பாதி ஆகிய படங்களுக்கும் மரகதமணி (கீரவாணி) ஐயும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை படத்துக்கு தேவாவையும் ஒப்பந்தம் செய்து விட்டார். இவற்றில் "நீ பாதி நான் பாதி" படத்தைத் தவிர அனைத்துமே ஜனரஞ்ச ரீதியில் வெற்றி பெற்றவை. அதுவும் 1992 ஆம் ஆண்டில் பாலசந்தர் இயக்க மரகதமணி இசையமைத்த "வானமே எல்லை", சுரேஷ் கிருஷ்ணா இயக்க தேவா இசையமைத்த "அண்ணாமலை", மணிரத்னம் இயக்க ரஹ்மான் இசையமைத்த "ரோஜா" என்று மூன்று வெவ்வேறு இசையமைப்பாளர்களை வைத்து கவிதாலயா தயாரித்த படங்கள் சூப்பர் ஹிட். இது தமிழ்த் திரையுலகமே கண்டிராத புதுமையான, சவாலுக்கு முகம் கொடுத்த வெற்றி. ஏன் கவிதாலயா போன்ற தயாரிப்பு நிறுவனமே எதிர்காலத்திலும் கூட இப்படியொரு வெற்றியைக் கண்டதில்லை.

இசையமைப்பாளர் சேகர் மகன் என்ற முத்திரையைத் தாண்டித் தன் பதின்ம வயதுகளில் இளையராஜா, T.ராஜேந்தர், S.A.ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்களிடம் கீ போர்ட் கலைஞராக ஒரு பக்கம், விளம்பரப் படங்களுக்கு இசை, திரை சாரா இறை பக்தி, தனிப் பாடல்கள் என்று இசையமைப்பாளராகத் தன்னை நிலை நிறுத்தப் போராடிய ரஹ்மானுக்கு மணிரத்னம் அவர்களின் சகோதரி சாரதா அவர்களின் அறிமுகம் கிட்டவும், அந்த நேரத்தில் புது இசையமைப்பாளரைத் தேடிய மணிரத்னம் அவர்களிடம் ரஹ்மானைக் கொண்டு போய சேர்க்கிறது காலம்.

"எனக்கு மரபு வழியான சினிமாப் பாடல்களுக்குள் நில்லாமல் அதையும் தாண்டி ஏதாவது பண்ணணும் அது திரையிசையைக் கடந்ததாகக் கூட இருக்கலாம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தேன்" என்று ரஹ்மான் தன் அந்த ஆரம்ப காலத்தை நினைவுபடுத்தினார் அண்மையில். 

இசைஞானி இளையராஜாவோடு ஏற்பட்ட பிரிவுக்குப் பின் வைரமுத்து இணைந்து பணியாற்றிய இயக்குநர்களும் சரி இசையமைப்பாளர்களும் சரி வைரமுத்துவுக்கான இடத்தைக் குறித்த பாடல்களில் துலங்க வைத்ததன் நீட்சியே ரஹ்மான் வருகையிலும் நிகழ்ந்தது. ரோஜா பாடல்களில் "சின்னச் சின்ன ஆசை" பெற்ற பெருவாரியான வரவேற்பில் வைரமுத்துவின் பங்கு வெள்ளிடை மலை. 
ஆனால் இங்கே ரஹ்மானுக்கும் வைரமுத்துவோடு சேர்ந்து வெற்றி கிட்டியது.
ரஹ்மானோடு வைரமுத்து இணைந்து பணியாற்றிய பாடல்களைப் பட்டியல்படுத்தினால் இந்தக் கூட்டணியின் சிறப்பும் தனித்துவமும் புரியும்.

ரோஜா பாடல்களைப் பற்றிச் சிறு குறிப்பேனும் சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தில் பங்கேற்ற பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா போன்ற தேர்ந்த முன்னணிப் பாடகர்களோடு தன் திரையிசைப் பயணத்தில் புதுப் புதுக் குரல்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனைக் கிணங்க் ஏற்கனவே பாடி அதிகம் ஜனரஞ்சக வட்டத்தை எட்டாத உன்னி மேனன், சுஜாதா போன்றோரோடு வட நாட்டில் இருந்து ஹரிஹரன் ஐயும் இழுத்து வந்து தமிழில் கோலோச்ச வைக்கிறார். 
தன்னுடைய முதல் முயற்சியில் சம பங்காக இந்தக் கணக்கை வைத்து ரசிகர்களிடம் விட்டு விடுகிறார்.
மீரா படத்தில் இசைஞானி இளையராஜாவால் மின்மினி என்று பெயர் சூட்டப்பட்ட மினி ஜோசப் "சின்னச் சின்ன ஆசை" பாடலுக்கு முன்பே ராஜா இசையில் ஏராளம் பாடியிருந்தாலும் ரஹ்மானே அறிமுகப்படுத்தியது போன்றதொரு தோற்றப்பாட்டைக் கொடுத்தது. இதுவே அன்னக்கிளி வழியாக எஸ்.ஜானகிக்கும் நிகழ்ந்தது.
அதாவது "மீள நிறுவப்பட்ட" குரல்களாகத் தன் இசையில் பிரதிபலிப்பது.
இதன் நீட்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் புதுக் குரல்களைத் தேடிய பயணம் என்றொரு பகிர்வை முன்னர் கொடுத்திருக்கிறேன். அதை வாசிக்க
http://www.radiospathy.com/2011/01/blog-post.html

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்கள் அதன் கதையமைப்பில் சோடை போனாலும் காட்சித் திறன் மிகுந்ததாக இருக்கும். அதற்கு அவருக்கு முதலில் வாய்த்த இயக்குநர் மணிரத்னம் மற்றும் விளம்பரப் பட உலக அனுபவம் உப காரணிகளாக இருக்கலாம். பின்னாளில் அதைத் தக்க வைக்க, சேர்ந்த ஷங்கர், கதிர் (ரகுமானின் நண்பர்), விளம்பரப் படங்களின் வழியாக வாய்த்த டெலிஃபோட்டோஸ் சுரேஷ் மேனன் (புதிய முகம்), ராஜீவ் மேனன் (மின்சாரக் கனவு) போன்ற சில உதாரணங்களை முன்னுறுத்தலாம்.
ரஹ்மானின் இசைப் பயணம் மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்துப் படைப்புகளை ஒப்புக் கொண்டதற்குத் தன்னுடைய இசை காட்சி வடிவம் பெறுவதன் பாங்கினாலான அவரின் மிகுந்த கரிசனையும், எதிர்பார்ப்பாகவும் அமையக் கூடும்.
இங்கே காட்சி வடிவம் எனும் போது சம காலத்த்தில் பிரபு தேவா அலையடித்தது ரஹ்மானுக்கு இன்னுமொரு வரப் பிரசாதம்.

தேர்ந்தெடுத்துப் படம் பண்ணினாலும் வண்டிச்சோலை சின்ராசு, மனிதா மனிதா (தெலுங்கு), பரசுராம் போன்ற கரும்புள்ளிகளும் அவரை ஒட்டிக் கொண்டன. அதே போல் மரியாதை நிமித்தம் பாலசந்தருக்காக பார்த்தாலே பரவசம், பாரதிராஜாவுக்காக தாஜ்மஹால் ஆகியவை பண்ணியதும் ரஹ்மானுக்குக் கிடைத்த இக்கட்டுகள். 
கிழக்குச் சீமையிலே படம் ரஹ்மானுக்கான இன்னொரு பரிசோதனை முயற்சிக்கு உதவியது. கிராமச் சூழல் கொண்ட படத்துக்குத் தன் தனித்துவத்தை விடாது அதே சமயம் அந்தப் பாங்கிலேயே கொடுத்ததால் அது அங்கீகரிக்கப்பட்டது. கருத்தம்மாவும் அதே பாங்கில் இசை ரீதியாக வெற்றி பெற்ற படைப்பு.

எந்தவொரு உன்னதமான படைப்பாளியும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட மாட்டான். விரிந்த தன் தேடல்களைச் சமரசமில்லாமல் ரசிகர்களுக்கும் சுவைக்கக் கொடுப்பான். இளையராஜாவின் ஒவ்வொரு தசாப்தங்களிலும் இந்த அனுபவத்தைக் கண்டுணர்ந்திருக்கிறோம். பாடல்களே இல்லாமல் வரவிருந்த அலை பாயுதே படத்திற்குப் பாடல்கள் தேவை என்று வற்புறுத்தியவர் ரஹ்மான். அவர் நினைத்திருந்தால் அலை பாயுதே உடன் தேங்கியிருந்து அது போலவே இன்னும் சுட்டுக் கொண்டிருக்கலாம். அது போல் திரையிசை தாண்டி "வந்தே மாதரம்" போன்ற திரை சாரா இசைப் படைப்புகளிலும் தன் முயற்சியைக் குறைக்காது பெருக்கினார்.

தொண்ணூறுகளில் இளையராஜா மீண்டும் தராத அந்த எண்பதுகளின் இசையைத் தேவாவின் வழியாக ரசித்தது போல ரஹ்மானின் தொடர்ச்சியாகவே ஒரு இசைப் பட்டாளம் தமிழ்த் திரையிசையில் நீண்டு தொடர்கிறது.

இந்தியாவில் அகலத் திறந்து விடப்பட்ட தராளமயமாக்கல், திறந்த பொருளாதாரக் கொள்கை போன்றவை நுகர்வோரின் அடிப்படைப் பண்டங்களில் இலிருந்து பொழுது போக்குச் சந்தை வரை இலக்கு வைத்தது. இந்த நேரத்தில் ரஹ்மானின் வருகை முக்கியமாகப்படுகிறது.  இசையுலகில் நவீனத்தின் புதிய கதவு திறந்து விடப்பட ரஹ்மான் முக்கிய காரணி ஆகின்றார். அதுவரை மேட்டுக்குடி மக்களை இலக்கு வைத்த மேற்கத்தேய இசையின் பரவல் ரஹ்மான் வழியாக அடித்தள மக்களுக்கும் சென்று சேருகிறது.
இதற்கு முந்திய காலகட்டத்தில் இளையராஜா இதையே மரபுரிமை வாய்ந்த இசையோடு கலந்த கலவையாகப் பிரிப்பேதுமின்றிக் கொடுத்ததால் அந்தப் பாணி அந்நியமாகப் படவில்லை.

சண்டையில் எதிரியின் போர்த் தந்திரோபாயங்களை நாளடைவில் கற்றுத் தேறுவது போல கலைத் துறையிலும் தன் முன்னோர்களால் எடுத்துச் செல்லப்பட்ட திரையிசையைத் தான் கையில் எடுத்த பின் அந்தப் பழைய முன் அனுபவங்களை வைத்துப் படிப்பினைகளைப் தன் இசைத் தொழிலின் பாடங்களாக்கினார். அதுவே அன்று தொட்டு இன்று வரை தன் பாடல்களுக்கான காப்புரிமத்தைக் கையில் வைத்துக் கொண்டு முறையாகக் கையாள்வது, தன்னுடைய படைப்புக்கான சந்தை மதிப்பை அதிகப்படுத்தும் விளம்பர உத்திகளை மேற்கொள்ளக் கூடிய, வர்த்தக உலகத்துக்கான தன் பிரதிநிதிகளைக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தது, பாடல்களில் பேணிய உன்னத ஒலித்தரம், இன்றைய iTunes உலகில் கூடச் சுடச் சுடத் தன் படைப்புகளை கடைக்கோடி நுகர்வோர் வரை எட்டச் செய்வது என்று வர்த்தக ரீதியிலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கான பரிமாணம் தனித்துவமாகவும், ஸ்திரத்தன்மையோடும் தொடர்கிறது. ஒரு படைப்பாளி சறுக்குவது இந்த இடத்தில் தான். ஆனால் ரஹ்மான் அந்த விஷயத்தில் தக்கோரைத் தன்னகத்தே வைத்துக் கொண்டது வெற்றியைச் சுலபமாக்கியது.

எழுபதுகளில் திரைசையை அதிகம் சுவாசித்த ரசிகர்களைக் கேட்டுப்பாருங்கள், தமிழ் சினிமா இசையை விட அதிகம் அவர்கள் சிலாகிப்பது ஹிந்திப் பாடல்களைத் தான். இளையராஜாவின் வருகை அன்றைய தமிழ் ரசிகர்களை ஹிந்தி இசை கேட்கும் மரபில் இருந்து பெருவாரியாக விடுவித்துக் கொண்டது. கிராமியமும் மேற்கத்தேயமும் கலந்த ராஜாவின் புது இசை மொழியை ரசிகர்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து மொழி பேதம் பாராது நல்லிசையைக் கேட்கும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கத் தான் செய்கிறது
இளையராஜா என்ற ஜாம்பவானால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த அளவுக்கு ஹிந்தியில் அவர் காலூன்றிய போது பெரும் வரவேற்புக் கிட்டவில்லை. பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் மட்டுமன்றி வட நாட்டின் பெரும் இயக்குனர்கள் ராஜாவின் இசையைப் பயன்படுத்திய போதும் இந்த நிலை தான் இருந்தது. ராஜாவின் திறமையை வடநாடு அங்கீகரித்தாலும் கூட முழுமையானதொரு ரசிகர் வட்டம் கிடைக்காததற்கு என்ன காரணம். அதற்குப் பதில் சொல்வது போல அமைந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் வருகையும் அவர் ஹிந்தித் திரையுலகில் நிலைநாட்டிய வெற்றிக் கொடியும்.

ரோஜா படத்தின் இசையை ஹிந்திக்கு கொண்டு போனதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று மணிரத்னத்தின் தேசியம் தழுவிய பொதுவான ஒரு கதைக்கருவாக அமைந்தது. அந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றியோடு ரஹ்மானின் இசைக்கும் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பம்பாய் படம் கூட முன்னையதை ஒத்ததே. ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முழுமனதாக அங்கீகரிக்கத் தொடங்கியது ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் வெளியான "ரங்கீலா". ஒரு சுமாரான கதையை வைத்துக் கொண்டு இசையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் நிஜ ஹீரோ. ரஹ்மானின் வருகையில் மிக முக்கியமாக இருந்தது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இசை, அதை ரங்கீலா தாராளமாகவே படைத்தது. எம் டிவி போன்ற இசை ஊடகங்கள் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமான காலகட்டத்தில் "ரங்கீலா"வின் வருகை முக்கியமானதொன்றாக அமைகின்றது. இங்கே ரஹ்மான் ஹிந்தி ரசிகர்களைக் வசீகரிக்கப் பயன்படுத்திய ஆயுதம் உயர் தொழில்நுட்பத்தில் வழங்கிய மேற்கத்தேய இசைக் கோர்ப்பு, இதன் மூலம் வட நாட்டின் மேல் தட்டு ரசிகர்களைக் கவர்ந்து கொண்டார். 

அடுத்து ராஜாவால் அதிகம் தொட்டுப் பார்க்காத ரஹ்மானால் பரவலாகப் பரீட்சித்துப் பார்த்து வெற்றியடைந்த விஷயம் "ஹிந்துஸ்தானி" இசை. வடநாட்டு ரசிகர்களில் மேற்கத்தேய இசையை நுகர்வோருக்கு சமானமாக இருப்போர் இந்த ஹிந்துஸ்தானி சார்ந்த ரசிகர்கள். இந்த விஷயத்தில் ரஹ்மானின் பல பாடல்களை உதாரணம் காட்ட முடியும். கஸல் மரபு சார்ந்த மெட்டுக்களோடு பொருத்தமான வடநாட்டுப் பாடகர்களை அவர் உள்வாங்கிக் கொண்டார். அத்தோடு ஹிந்துஸ்தானி இசையில் பயன்படுத்தப்படும் வாத்தியக் கருவிகளை நுட்பமாகவும், நளினமாகவும் பயன்படுத்திக் கொண்டார். ஜோதா அக்பர் போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டால் அவற்றின் சிறப்புப் புரியும். ஆகவே ரஹ்மானின் ஹிந்தித் திரையுலக வெற்றிக்கு இன்னொரு காரணம் வடநாட்டு இசைமரபினை அதிகம் உள்வாங்கி மெட்டமைத்ததே.

 1947 Earth. இந்திய பாகிஸ்தான் பிரிவினையோடு சம்பந்தப்படுத்தியதாக இப்படத்தின் கதைக்கரு அமைகின்றது. தீபா மேத்தா போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்திய இயக்குனரோடு ரஹ்மான் சேர்ந்ததும் அவரின் பிற்கால சர்வதேச அங்கீகாரங்களுக்கு இலகுவாகிப் போனதொன்று.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் பட்டியலாக தீபா மேத்தா இயக்கிய இரண்டாவது படம் இது. முன்னையது Fire. தனது முன்னைய படமான Fire இல் ரஹ்மானோடு கூட்டணி போட ஆரம்பித்தார் தீபா மேத்தா. Fire படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை பம்பாய் படத்தில் நவீனின் புல்லாங்குழலோடு அமையும் இசைக்கோர்வையை மீண்டும் ரஹ்மான் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தார். ஆனால் 1947 Earth படத்தைப் பொறுத்தவரை முழுமையாக புத்தம் புது மெட்டுக்களையும் இசைக்கலவையையும் உருவாக்கியிருந்தார் ரஹ்மான். இதில் ஏழு பாடல்களும் இரண்டு பின்னணி இசைக் கலவையும் அமைந்திருக்கின்றன. 

இன்றும் மலையாளிகளைக் கேட்டுப் பாருங்கள் "ஜோதா" (தமிழில் அசோகன்) தான் நம்மட ரெஹ்மான் இசையமைச்சது என்று பீற்றுவார்கள். வெளியீட்டில் ரோஜாவுக்கு அடுத்து வந்த படம் அது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னக மொழிப் பிராந்தியப் படங்களில்  இளையராஜா தக்க வைத்திருந்த கோட்டையை அந்தந்த மொழிகளில் இசையமைத்து வெற்றியைச் சம்பாதிக்க முடியாவிட்டாலும் இன்று இந்திய அளவில் ரஹ்மானுக்கான ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தியது அவரின் ஹிந்திப் பிரவேசமே.

ரஹ்மானின் ஹிந்திப் பிரவேசம் அதைத் தொடர்ந்து தீபா மேத்தா போன்றவர்களால் உலக அரங்குக்கு எடுத்துச் செல்லப்படுதல், அதனைத் தொடர்ந்து Bombay Dreams என்ற மேடை இசை நாடகம், Slumdog Millionaire திரைப்படம் வழியாக இரண்டு Oscar விருதுகள், மற்றும் இசைக்கான Grammy விருதுகள் இரண்டு என்று நிகழ்த்தப்பட்ட வரலாறுக்கு முந்திய தொண்ணூறுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்ததற்கான தாமதமான அங்கீகாரங்களாகவே இவை எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும். அந்த அளவுக்கு அவர் ஏற்கனவே இசையுலகில் புதுமையை நிகழ்த்திக் காட்டி விட்டார். 

தமிழ் திரையிசையின் மூன்று முக்கிய இசை ஆளுமைகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான் ஆகியோரைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கான மாற்றத்துக்கான இசை இனி எங்கியிருந்து, யாரால் எடுத்து வரப்படப் போகிறது என்றதொரு கால கட்டத்தை நெருங்கும் இவ்வேளை, ரஹ்மான் இசைத்துறையில் நிகழ்த்திக் காட்டிய தேடல்களை மீறியதொரு வரப் போகும் படைப்பாளி எவ்விதமான ஆளுமை செலுத்தப் போகிறார் என்ற கேள்விக்கு விடை தெரியாதவொரு குழப்பமே தற்போது இசைத்துறையில் நிலவும் கூட்டணி ஆட்சியில் தொடர்கின்றது.

பிற் குறிப்பு : இங்கே பந்தி பிரித்துச் சொல்லப்பட்ட 
ஒவ்வொரு விடயங்கள் குறித்தும் விரிவான தனித்தனிக் கட்டுரைகளாக எழுதலாம், விடுபட்ட பலதும் உள்ளது. காலமும் நேரமும் வாய்க்கும் போது ஒவ்வொன்றாகத் தொடுகிறேன் அதுவரை நன்றி வணக்கம் 😀

கானா பிரபா
16.08.2017

Saturday, August 12, 2017

கோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்

கோப்பி தோட்ட முதலாளிக்கு 
கொழும்பில தானே கல்யாணம்
கண்டியில வாங்கி வந்த 
சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁

எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்கள் இந்தப் பாட்டின் முதல் அடிகளைக் கேட்டாலேயே இப்போதும் உடம்புக்குள் ஸ்பிரிங் போட்டது போலத் துள்ளத் தொடங்கி விடுவார்கள்.

இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் எழுபதுகளில் இறுதியில் வெளிவந்த படங்களில் உச்சம் இந்த "பைலட் பிரேம்நாத்".
ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். முழுப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி. ஆனால் "கோப்பித் தோட்ட முதலாளிக்கு" பாடலில் கண்டிப்பாக பாடலைப் பாடிய ஏ.ஈ.மனோகர் அல்லது பெயர் குறிப்பிடாத இலங்கைக் கவிஞர் ஒருவர் பங்களிப்பு முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும்.

இந்திய இலங்கைக் கலைஞர்களோடு இணைந்து தயாரித்த இந்தப் படத்தில் சிலோன் மனோகர் என்ற பொப்பிசைச் சக்ரவர்த்தி ஏ.ஈ.மனோகர் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் பாடிய துள்ளிசைப் பாடல் "கோப்பித் தோட்ட முதலாளிக்கு" பாடலோடு இன்றைய துள்ளிசைப் பாடல்கள் ஒன்றுமே போட்டி போட முடியாது. அந்தளவுக்குத் தாளக் கட்டும், இசையும் அதகளம் பண்ணியிருக்கும்.
உதாரணமாக
"ஜிஞ்சினாக்குடு ஜாக்குடு ஜிக்கு ஜிங்குடு ஜிக்கா ஜிக்காச்சா"

"தா தகஜுனு ததீம்தக ததீம்தாதா"

"குங்குருக்கு குங்குருக்கு குங்குருக்கு காமாட்சி"

இந்த அடிகளைக் கேட்டுப் பாருங்கள் மெல்லிசை மன்னர் துள்ளிசை மன்னராகக் கலக்கியிருப்பார்.
எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் ஏ.ஈ.மனோகரனைத் தவிர்த்து வேறு யாரையும் இந்தப் பொப் இசைப் பாட்டில் இவ்வளவு அட்டகாசமாக ஒட்டியிருக்க முடியாது.

ஈழத்தின் முக்கியமான தமிழர் பிரதேசங்களையும் தொட்டுச் செல்கிறது இந்தப் பாட்டு. உதாரணமாக

"மட்டக்களப்பில மாமங்கத்துல 
மச்சானுக்கு விருந்து 
ஆகா படைச்சாங்க 
இடியப்பம் சொதியோட கலந்து"

"திருகோணமலையில தானே 
திருமணத்தைப் பார்க்க ஆகா 
யாழ்ப்பாண மக்களெல்லாம்
வந்திருந்து வாழ்த்த"

இந்தப் பாடல் ஆரம்பிக்கும் போது காட்சியில் ஶ்ரீதேவி சொல்வார் "எங்க வீட்ல எல்லாரும் பாடகர்கள்" என்று. அதற்கு தேங்காய் சீனிவாசன் சொல்வர் "எங்க வீட்ல சிங்கர் மெஷினே இருக்கு" என்பார். இலங்கையில் ஒரு காலத்தில் சிங்கர் தையல் மெஷின் இல்லாத வசதியானோர் வீடுகளை விரல்விட்டு எண்ணலாம். இன்று காலை வானொலி நிகழ்ச்சியில் ஐசாக் சிங்கர் இன்று தான் தன் தையல் இயந்திரத்துக்கான காப்புரிமை பெற்ற நாள் என்ற சிறப்பு நிகழ்ச்சி செய்தேன். என்னவொரு ஒற்றுமை 😀

நண்பர் ஜி.ரா இந்த ஆண்டு முற்பகுதியில் முதல் தடவையாக ஈழத்தைச் சுற்றிப் பார்க்க வந்த போது என் மனசுக்குள் பைலட் பிரேம்நாத் தான் ஓடியது. அவ்வளவுக்கு அவருக்கு இலங்கையும் பிடிக்கும் எம்.எஸ்.வியும் பிடிக்கும்.

பாடலைக் கேட்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்

‪ https://www.youtube.com/watch?v=YoBji9RLqn8&sns=tw ‬

https://soundcloud.com/kanapraba/kopi-thotta-mudhalalikku