Pages

Wednesday, April 27, 2022

கனவு ஒன்று தோன்றுதே.... இதை யாரோடு சொல்ல.....

இசைஞானி இளையராஜாவின் அசாத்தியமான படைப்புகளில் ஒன்றாக இந்தப் பாடலைக் கொண்டாடும் என் மனம்.
முகப்பு இசையே அந்தக் கனவுச் சுழலுக்குள் இழுத்து போக,
“கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக”
துள்ளிசைக்கும் ஜானகி. “இதை யாரோடு சொல்ல” வில் ஒரு கிசுகிசுப்பும், இலேசான பதட்டமும் ஒட்டியிருக்கும். பூசப்பட்ட இசையும் துள்ளலோடு அதைத் தாங்கிப் பிடிக்கும்.
ஆனால் அதற்குச் சம்பந்தமே இல்லாமல் அப்படியே
பூமகள் மேலாடை…
நெளியுமோ…
நகர்ந்திடுமோ....
நழுவிடுமோ.....ஓஓஓஓ
காமனே வாராதே…ஏஏஏ
காமனே வாராதே
மனமே பகையா
மலரும் சுமையா
உறக்கம் கலைக்க உறுதி குலைக்க.......
என்று ஒரு கஸல் இசைப் பிரவாகத்தில் மூழ்கி எழ முடியாமல் அதில் இருந்து கொண்டே எழுப்பும் சாதகமாகக் கொடுப்பாரே?
அசாத்தியம்....அசாத்தியமே தான். அது ஜானகிக்கே உரித்தானது. அதனால் வேறு யாருக்கும் வேண்டாமல் ராஜா அவருக்கே அளித்திருப்பார்.
இதைக் கேட்கும் தோறும் P.B.ஶ்ரீநிவாஸ் அவர்கள் பிறப்பித்து எஸ்.ஜானகி பாடும் “Tu Nahin Jaan Saki”
ஐ மெல்ல ஞாபகப்படுத்தும். சரணத்தில் கொடுக்கும் இந்த ஜாலம் தான் பாடலின் தனித்துவத்தை அடையாளப்படுத்தும்.
ஆனால் இந்தப் பாடல் உயர வேண்டிய எல்லைக்குப் போய்ச் சேரவில்லை. இந்தப் பாடலின் அடி நாதமாக இருக்கும் ராகமான ரேவதியைக் கூட ஏனைய கூட்டாளி ராகங்கள் அளவுக்கு மெச்சி நான் கண்டதில்லை என்ற ஏமாற்றம் அடி மனதில் இருக்கின்றது.
இந்த இரண்டு சரணங்களின் முடிவிடத்தை நெருங்க நெருங்க அப்படியே ஸ்ருதி குறைந்தும் கூடியும் எழும் மன ஆர்ப்பரிப்பின் இசை வெளிப்பாடு அப்படியே
“ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ பாடிடுமோ
ஆடிடுமோ
பாடிடுமோ...
இடம் சேர்ப்பித்து விடும். இரண்டு பாடல்களுமே ரேவதி ராகம் என்ற அணிகலன் வேறு.

இந்த மாதிரியானதொரு பாடலைக் காட்சியமைப்பிலும் கொண்டு வருவது மகா கஷ்டம். ஒரு படத்தை எடுத்து முடிக்கக் கூடிய நுட்பத்தை முழுப்பாடலையும் உருவாக்கும் போது செதுக்க வேண்டும். ஆனால் எந்தவித சிரத்தையும் இல்லாமல் ஏனோதானோவென்ற போக்கில் படமாக்கப்பட்டுப் பத்தோடு பதினொன்றாகி விட்டது. இம்மட்டுக்கும் படத்தின் இயக்குநர் ஶ்ரீதர் அவர்கள் உச்சபட்ச பாடல் ரசனை கொண்டவர். அதனால் தானோ என்னமோ ராஜாவும் இழைத்து இழைத்து ஒரு தனித்துவப் படைப்பாக உருவாக்கியிருப்பார்.

காட்சியில் வந்தது போலல்லாமல் அந்த ஒற்றைப் பெண்ணின் உணர்வலைகளை மட்டுமே ஒளிப்பதிவாளரின் கண்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும்.

“ஒரு ஓடை நதியாகிறது" ஒரு அசாதாரண சூழலில் ஒருவனின் பாலியல் இச்சைக்கு ஆளானவளின் கதையாகித் தொடங்கி முடிக்க வழியின்றி ஒப்பேற்றி விட்டது போன்ற கதைப் போக்கைக் கொண்டது. சுமலதா தவிர யாருக்குமே இந்தக் கதையின் கனத்தைத் தாங்கும் சக்தி அப்போது இருக்கவில்லை என்பது இந்தப் படத்தை மீளவும் பார்த்த போது புரிந்தது.
“தலையைக் குனியும் தாமரையே”, “தென்றல் என்னை முத்தமிட்டது” போன்ற பாடல்களை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.
எனக்கு நம்பிக்கை இருக்கிறது, இப்போதெல்லாம் இசைஞானியின் கொண்டாடப்படாத பாடல்களை அகழ்ந்தெடுத்துக் கொண்டாடும் இளைய தலைமுறையின் கண் பட்டு இந்தப் பாடல் இன்னும் ஒளிரும். அந்தக் கையளிப்பு நிகழும் வரை ராஜா ரசிகர்கள் இதைக் கொண்டாடி மகிழ்வோம்.
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
லலல லால லால்லலா
ல லாலால லாலா
லலல லால லால்லா ல லாலால லாலா

கானா பிரபா

Saturday, April 23, 2022

எஸ்.ஜானகி 84 ♥️



திரையிசை கண்ட உன்னதமான ஆளுமைகளில் எஸ்.ஜானகி ஒரு பாட்டுப் பல்கலைக் கழகம். "எஸ்.ஜானகி அளவுக்கு பாடல் தாங்கியிருக்கும் உணர்வை வெளிப்படுத்த இந்தியாவிலேயே யாரும் இல்லை" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குறிப்பிடுவது வெறும் புகழ்ச்சி மாலை அல்ல என்பதை எம் போன்ற கடைக் கோடி ரசிகனும் உணர்ந்து நிற்பான்.


பாடகி சித்ராவின் ஆரம்ப காலத்தில் ஜானகி அம்மாவின் பாட்டைக் கேளு அவங்க ஒரு பாடலை எவ்வளவு தூரம் நியாயம் செய்து பாடியிருக்காங்க என்று இளையராஜா கை காட்டிய போது அங்கே நடமாடும் பாட்டுப் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்து காட்டுகிறார்.


திரையிசைப் பாடல் என்பது வெறுமனே சங்கீத சாகித்தியத்தின் திரட்டு அல்ல அது பாத்திரத்தின் பண்பை, காட்சிச் சூழலின் அனுபவத்தைக் இசைக் கூட்டில் குரல் வழியே கடத்துவது. அங்கே ஒட்டுமொத்த பாடலுமல்ல ஒவ்வொரு வரிகளுக்குமே உணர்வு பேதம் கற்பித்துக் கொண்டு வர வேண்டும் என்ற நுட்பத்தைப் போதித்தவர்கள் திரையிசையில் ஒரு சிலரே. அங்கு எஸ்.ஜானகி அம்மாவின் பங்கு அளப்பரியது.


ஒரு சாதாரண அல்லது அமைதியாகப் போகும் பாட்டின் உணர்ச்சியை நம்முள் அசுரத்தனமாக ஊடுருவி இறக்கி விடுகிறது எஸ்.ஜானகியின் குரல்.

"ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க" ஒலிக்கையில் தனிமையின் குரலாகவும் "சின்னச் சின்ன வண்ணக் குயில்" பாடும் போது குதூகலத்தின் வெளிப்பாடாகவும் மனது மொழி பெயர்க்கும் போது எஸ்.ஜானகி ஒரு பெண்ணின் உணர்வாக மட்டும் அடையாளம் இல்லாது ஆணின் மனோபாவங்களின் மொழியாகவும் அடையாளப்படுத்தப்படுகிறார்.

அதனால் தான் அந்தந்த மன நிலைகளுக்குத் தோதாகச் சவாரி செய்யப் பாட்டு வாகனம் தேடும் போது அது எஸ்.ஜானகி ஓட்டும் குதிரையிலும் சுகமாகச் சவாரி செய்கிறது.


ஒரு பாடலுக்குக் கொடுக்கும் உச்ச பட்ச நேர்த்தியையும், உருவாக்கத்தையும் வைத்து

எப்படி இசைஞானி இளையராஜாவை ஒரு இசையமைப்பாளர் என்ற எல்லை கடந்து இயக்குநர் என்ற நிலையில் வைத்துப் பார்க்க முடிகிறதோ அது போல எஸ்.ஜானகி ஒவ்வொரு பாடலையும் கையாளும் விதத்தில் இசையமைப்பாளராகவே மிளிர்கிறார்.

மெல்லிசை மன்னர் காலத்தில் T.M.செளந்தரராஜன், P.சுசீலா என்று அமைந்ததோ அது போல் இசைஞானி இளையராஜா காலத்தில் எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று பரிணமித்தது.

இவர்கள் காலத்தில் நாமெல்லாம் இருப்பது பெருமை என்ற நினைப்பு வரும் போது கண்டிப்பாக இவர்களும் இருப்பர்.


"மம்மி பேரு மாரி" https://youtu.be/pwbekjLgZWg (நெஞ்சத்தைக் கிள்ளாதே) என்று விடலைப் பையனாகவும், "கண்ணா நீ எங்கே" https://youtu.be/HFDzZBCT0OI (ருசி கண்ட பூனை) என்று குழந்தையாகவும், "போடா போடா பொக்கை" https://youtu.be/BpaHQVXD62g (உதிரிப் பூக்கள்) என்று கிழவியாகவும் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை கற்றவர்.


"லல்லி லலிலலோ" என்ற ஆலாபனையோடு மச்சானைப் பார்த்தீங்களா பாடலை நினைத்தாலேயே உச்சந்தலை உறைந்து போனதொரு உணர்வு கிட்டும் எனக்கு.


எந்த ஒரு துறையிலும் இறங்கியவர்கள் அப்படியே மாற்றமின்றி அதன் போக்கில் வாழ்ந்தவர்கள் அப்படியேதானிருக்கிறார்கள்,அதையும் தாண்டிக் கடந்து சிந்தனையைச் செயல்படுத்தியவர்கள் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். எஸ்.ஜானகியின் இந்த அறுபதாண்டு இசை வாழ்வு அவரைச் சாதனையாளராக முன்னுறுத்துகிறது. தனக்கு வாய்ந்த அழகிய குரல் என்பது அதன் இனிமையைச் சுவைக்க அல்ல அனுபவிக்கவென்று குரல் பேதங்களில் வெளிப்படுத்தும் உணர்வின் வழி நிரூபித்துக் காட்டியவர்.


எமக்கெல்லாம் இசையரசி பி.சுசீலா அம்மாவின் பாட்டு அன்னையின் குரல் என்றால் பாட்டுக் குயில் எஸ்.ஜானகியின் ஓசை தோழியின் குரலாக நிற்கின்றது.


இன்று தனது 84 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தன்னிகரற்ற பாடகி எஸ்.ஜானகியை வாழ்த்துவதில் கடைக்கோடி ரசிகனாக இருந்து பெருமைப்படுகிறேன்.


எஸ்.ஜானகி அவர்கள் தன் பாட்டுச் சரித்திரத்தில் 65 வருட காலத்தில் நின்று கொண்டிருக்கும் சூழலில் அவரைத் தம் இசையில் பாட வைத்த 50 இசையமைப்பாளர்களை இங்கே பகிர்கின்றேன். இவர்கள் தாண்டி இன்னும் 50 க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களோடு அவர் இயங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கே பகிரப்பட்டிருக்கும் இசையமைப்பாளர்கள் எந்த ஒழுங்கிலும் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். கானா பிரபா


1. சிங்காரவேலனே தேவா (கொஞ்சும் சலங்கை) - சுப்பையா நாயுடு https://www.youtube.com/watch?v=yISAn-DHxJI


2. கண்ணன் மனநிலையை (தெய்வத்தின் தெய்வம்) - ஜி.ராமநாதன்

https://www.youtube.com/watch?v=Bovg1fJmoGE


3. காற்றுக்கென்ன வேலி (அவர்கள்) - எம்.எஸ்.விஸ்வநாதன்

 https://www.youtube.com/watch?v=n9NNqlWBgCY


4. மழை வருவது (ரிஷிமூலம்) - இளையராஜா

https://www.youtube.com/watch?v=nbJ91JLfziQ


5. பூவே நீ யார் சொல்லி ( தணியாத தாகம், மலேசியா வாசுதேவனுடன்) - ஏ.ஏ.ராஜ் 

https://www.youtube.com/watch?v=dbnFVkXHc9s


6. என்னை அழைத்தது யாரடி கண்ணே ( ஒருவனுக்கு ஒருத்தி, ஜேசுதாஸுடன்) - வி.குமார்

https://www.youtube.com/watch?v=pdWPbApwWc4


7. பொங்கியதே காதல் வெள்ளம் ( மண்ணுக்குள் வைரம், எஸ்பிபி & குழுவினருடன்) - தேவேந்திரன்

https://www.youtube.com/watch?v=xnvp3S4s4D4


8. அள்ளி அள்ளி வீசுதம்மா ( அத்த மக ரத்தினமே) - கங்கை அமரன்

https://www.youtube.com/watch?v=v6Ls9ylLrPU


9. ஆறெங்கும் தானுறங்க ( மனசுக்கேத்த மகராசா, மனோவுடன்) - தேவா

https://www.youtube.com/watch?v=lMxgZmBnl2s


10. கண்ணுக்குட்டி செல்லம்மா ( நந்தா என் நிலா) - வி.தட்சணாமூர்த்தி


11. மெளனம் நாணம் (மயூரி, எஸ்பிபியுடன்) - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

https://www.youtube.com/watch?v=7fyPxhquT1A


12. ஊருக்கு மேற்கால ( பொண்ணு பிடிச்சிருக்கு) - சந்திரபோஸ்

https://www.youtube.com/watch?v=vXszqrZp3is


13. ஓ காதல் போதை ( முடிசூடா மன்னன், எஸ்பிபியுடன்) - சத்யம்

https://www.youtube.com/watch?v=wnqedwsfwyI


14. நான் பதினாறு வயதானவள் ( பகடை பன்னிரண்டு) - சக்ரவர்த்தி

https://www.youtube.com/watch?v=qg0KAYuc_4A


15. வசந்தம் பாடி வர ( இரயில் பயணங்களில்) - T.ராஜேந்தர்

https://www.youtube.com/watch?v=M7bj_X9s708


16. சின்னச் சின்ன பொம்மை ( எதையும் தாங்கும் இதயம்) - T.R.பாப்பா

https://www.youtube.com/watch?v=Hmmo2w4qEAs


17. சிரிக்கத் தெரியுமா? ( குழந்தைகள் கண்ட குடியரசு) - T.G.லிங்கப்பா

https://www.youtube.com/watch?v=NfCQuVxJQys


18. உன்னைத் தேடினேன் ( இவள் ஒரு பெளர்ணமி) - T.K.ராமமூர்த்தி

https://www.youtube.com/watch?v=CASI4OOmhD0


19. தேன் சிந்துதே வானம் ( பொண்ணுக்குத் தங்க மனசு, எஸ்பிபியுடன்) ஜி.கே.வெங்கடேஷ்

https://www.youtube.com/watch?v=WwXSegOTutI


20. பொன்னே பூமியடி ( மனிதரில் இத்தனை நிறங்களா, வாணி ஜெயராமுடன்) - ஷியாம்

https://www.youtube.com/watch?v=GI8ECeyNq5s


21. நெஞ்சினிலே நெஞ்சினிலே ( உயிரே) - ஏ.ஆர்.ரஹ்மான்

https://www.youtube.com/watch?v=qrUCK9G-jNU


22. காதல் இல்லை என்று சொன்னால் (பருவ ராகம், ஜேசுதாசுடன்) - ஹம்சலேகா

https://www.youtube.com/watch?v=gSICp8IPcRA


23. பன்னீரில் நனைந்த பூக்கள் ( உயிரே உனக்காக, குழுவினருடன்) - லஷ்மிகாந்த் & பியாரிலால்

https://www.youtube.com/watch?v=2k0J_kH6NK8


24. என்னை யாரும் தொட்டதில்லை ( அபூர்வ சகோதரிகள், குழுவினருடன்) - பப்பி லஹரி

https://www.youtube.com/watch?v=eXQCyy7kRvU


25. பூமேடையோ ( ஆயிரம் பூக்கள் மலரட்டும், எஸ்பிபியுடன்) - வி.எஸ். நரசிம்மன்

https://www.youtube.com/watch?v=R-h7JjpEHUk


26. ஏ அசைந்தாடும் காற்றுக்கும் ( பார்வை ஒன்றே போதுமே, உன்னிகிருஷ்ணனுடன்) - பரணி

https://www.youtube.com/watch?v=GeXh0aYCBe8


27. அதிகாலைக் காற்றே நில்லு ( தலைவாசல்) - பாலபாரதி

https://www.youtube.com/watch?v=DB0Lgm5EFMY


28. பூமியே பூமியே ( செங்கோட்டை, எஸ்பிபியுடன்) - வித்யாசாகர்

https://www.youtube.com/watch?v=QMl6Pr2cvys


29. சூரியனே ( மாயி) -.எஸ்.ஏ.ராஜ்குமார்

https://www.youtube.com/watch?v=Pjo7W8x7ntA


30. சீரகச் சம்பா நெல்லு ( கண்ணன் வருவான்) - சிற்பி

https://www.youtube.com/watch?v=x4Cn9oGG5Kk


31. முத்துப் பந்தலில் (தோடி ராகம், T.N.சேஷகோபாலனுடன்)- குன்னக்குடி வைத்யநாதன்


https://youtu.be/9kKH_Oppr4Q


32. வா வா பூவே வா (ரிஷி, ஹரிஹரனுடன்) - யுவன் சங்கர் ராஜா


https://youtu.be/l8IhsULSqLY


33. கங்கை நதி மறையலாம் (பூவே இளம் பூவே) - ஜெர்ரி அமல்தேவ்


https://youtu.be/JEl-McLCfEE


34. மணியோசையும் ( அந்த ராத்திரிக்குச் சாட்சி இல்லை, எஸ்பிபியுடன்) - கே.வி.மகாதேவன்


https://youtu.be/pkY_4V6Rftc


35. தென்னங்கீற்று ஊஞ்சலிலே (பாதை தெரியுது பார், ஶ்ரீனிவாஸ் உடன்) - M.B.ஶ்ரீனிவாசன்


https://youtu.be/WbZhbo_ftoE


36. வள்ளுவன் குறளில் ( கல்யாண வளையோசை, M.L.ஶ்ரீகாந்த் உடன்) - M.L.ஶ்ரீகாந்த்


https://youtu.be/XhjLhqsOheE


37. ஆகாயம் ஏனடி ( ஒரு இனிய உதயம், எஸ்பிபியுடன்) - மனோஜ் & கியான்


https://youtu.be/ZJPtqUCkOfg


38. மானா மதுரையில் ( வா அருகில் வா, ஜேசுதாசுடன்) 

- சாணக்யா


https://youtu.be/G7IYVmwejUM


39. கல்யாணப் பாட்டு (புதிய பூவிது, எஸ்பிபியுடன்) - கண்ணன் & லதா


https://youtu.be/cMeu6j_6uFo


40. அன்பாலே தேடிய என் ( தெய்வப் பிறவி, சி.எஸ்.ஜெயராமனுடன்) - சுதர்சனம்


https://youtu.be/xmR-BruNIwA


41. தொட வரவோ ( இரு நிலவுகள், எஸ்பிபியுடன்) - ராஜன் & நாகேந்திரா 


https://youtu.be/tKBQRA7pbl0


42. ஏழிசை கீதமே (ரசிகன் ஒரு ரசிகை) - ரவீந்திரன்


https://youtu.be/xbzimQCgdok


43. வளையல் சத்தம் யம்மா ( சேலம் விஷ்ணு, எஸ்பிபியுடன்) - சங்கீதராஜன்


https://youtu.be/A-K1biU2kkY


44. பட்டு வண்ண ரோசாவாம் (கன்னிப் பருவத்திலே) - சங்கர் & கணேஷ்


https://youtu.be/khBtT36CB0U


45. வா வா இதயமே ( நான் அடிமை இல்லை, எஸ்பிபியுடன்) - விஜய் ஆனந்த்


https://youtu.be/ZVXAzghjc4w


46. கனவுகளே ஊர்கோலம் (சாமந்திப் பூ) - மலேசியா வாசுதேவன்


https://youtu.be/4xzVVEWndNo


47. பூங்குருவி ( சுந்தரகாண்டம்) - தீபக்


https://youtu.be/q54DqR-O6NA


48. காமதேவன் ஆலயம் (இது நம்ம ஆளு) - கே.பாக்யராஜ்


https://youtu.be/5OxLQ5-2m10


49. நிலையாக வீசுதே ( மணமாலை) - வேதா


https://youtu.be/FaW50u4UzMI


50. உள்ளம் எல்லாம் தள்ளாடுதே ( தூரத்து இடிமுழக்கம், ஜேசுதாசுடன்) - சலீல் செளத்ரி 


https://youtu.be/YGBrg32T2U0


ஈராயிரங்களின் சமீப வரவாக  “வேலை இல்லாப் பட்டதாரி” (அனிருத்), திருநாள் ( ஶ்ரீகாந்த் தேவா) போன்ற படங்களிலும் பாடிச் சிறப்பித்திருக்கிறார் எங்கள் “பாட்டுத் தலைவி” எஸ்.ஜானகி.


கானா பிரபா 

23.04.2022

Saturday, April 2, 2022

ஒரு காவியம் அரங்கேறும் நேரம் மழை தூவுதே இதமாகுதே ❤️

ஒரு படைப்பு வழக்கமான திரைப் பரிமாணத்தை விட்டு விலகி அமைந்து விட்டால் இசைஞானியும் தன் பங்குக்கு அதற்கு ஏதாவது சீர் செய்ய வேண்டும் என்று அவா கொள்வார் போல. 

அதனால் தான் “என் ராசாவின் மனசிலே” படத்தில் “குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே” https://www.youtube.com/watch?v=JL_LoEqEkLs பாடலின் மெது வேக வடிவத்தைப் படத்தின் எழுத்தோட்டத்திலேயே பொருத்தி அழகு பார்த்தார். வெளிவந்த சூழலில் படத்தைப் பார்த்து முடித்த பின்னர் அந்த ஆரம்பப் பாடல் தான் கனதியாக நெஞ்சில் அமர்ந்து கொண்டது. அப்போது ராஜ்கிரண் பேட்டியில் கூட இந்தப் பாடல் ராஜாவே விரும்பிக் கொடுத்த பாடல் என்றே சொல்லியும் இருந்தார். 

“ஒரு காவியம் அரங்கேறும் நேரம்”

https://www.youtube.com/watch?v=tIkw3vOAkMc

அப்படியொரு தன்மை கொண்ட பாட்டு. ஆனால் துரதிஷ்டவசமாகக் காட்சி வடிவம் கொணராத பாடல்களில் ஒன்றாக அமைந்து விட்டது.

அறுவடை நாள் படத்தைப் பார்த்து முடித்து விட்டு மனச்சாட்சி உள்ளவர்கள் இந்தப் பாடலை முகப்பில் வந்த “தேவனின் கோயில் மூடிய நேரம்” பாடலுக்குப் பதிலாகப் பொருத்திப் பார்த்தால் அந்தப் படத்தின் காவியத்தனத்தை அழகூட்டிக் காட்டியிருக்கும். 

“தேவனின் கோயில் மூடிய நேரம்” பாடல் அதி உச்சம் கொண்ட பாட்டு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அந்தப் பாடல் வர வேண்டிய சூழல் ஆரம்பக் காட்சி அல்ல.

“அறுவடை நாள்” படத்தை முதலில் சிவாஜி கணேசனுக்குப் போட்டுக் காட்டிய பின்னர் நடிகர் திலகம் சொன்னாராம்.

“படம் ஓகே மீதியை வந்து சாமியார் பார்த்துக்குவார்” என்று. 

(சாய் வித் சித்ராவில் இயக்குநர் ராஜ்கபூர்)

அதுதான் இளையராஜா, அதே தான் அவர் மற்றவர்களிடமிருந்து அந்நியப்பட்டு படைப்பு ரீதியாக ஆத்மார்த்தமாக எவ்வளவு உச்சம் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்கும் கிணறு. கிராமத்தாரிடம் கேட்டுப் பாருங்கள் கலக்கிக் கலக்கி இறைக்க இறைக்கத்தான் ஊற்றெடுக்கும். நாம் எவ்வளவுக்கெவ்வளவு எமது ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோமோ அதற்கு மேலாகச் சிந்தனையில் ஞான வெள்ளம் ஊற்றெடுக்கும்.

ஒற்றை மிருதங்க நாதம் ஓசையடங்கிப் போக, அப்படியே கூட்டுக்குரல்கள் சங்கமித்து ராஜாவை அழைப்பார்கள். அவர் கதை சொல்ல ஆரம்பிப்பார். 

“ஒரு காவியம் அரங்கேறும் நேரம்

ஒரு காவியம் அரங்கேறும் நேரம்

மழை தூவுதே இதமாகுதே

மழை தூவுதே இதமாகுதே

ஒரு காவியம்....”

அவர் சொல்லச் சொல்லக் கூட்டுக் குரல்களும் இடம் விட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

“காதல் எனும் யாகம் காணுகின்ற யோகம்

காட்டு நதி வேகம் காதல் மனம் போகும்”

அதற்கு மேல் தங்கள் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் ராஜாவுக்கு அமைதியான ஆர்ப்பரிப்பை நிகழ்த்துவார்கள்.

பின்னர் இரண்டாவது சரணத்தில் மிதக்கும் போதுதான் சுதந்திரமாகத் தம் உணர்வைக் கூட்டாக வெளிப்படுத்துவார்கள் அந்தக் கூட்டுக் குரல்கள்.

கங்கை அமரனும் தன் அண்ணனுக்கு வரிகளால் தோள் கொடுத்திருப்பார்.

இந்தப் பாடல் பின்னப்பட்டிருக்கும் வாத்தியங்களை எண்ணிப் பாருங்கள். கை கொள்ளும் அளவில் தான் இருக்கும். ஆனால் ஒரு நூறு கூட்டம் இசைக் கூட்டுகள் தராத ஒரு தாக்கத்தை விளைவித்துக் கொண்டிருப்பார்கள் அந்த ஒரு சில. அந்த ஆரம்ப மிருதங்க ஓசை கரைதல் வழக்கமாகப் பாடல் முடியும் முத்தாய்ப்பாக அமைவது. ஆனால் அதையே தொடக்கமாக வைத்துக் கொண்டு ஒரு கட்டுடைத்தலை நிகழ்த்தியிருப்பார்.

அந்த வீணை நட்டுவாங்கம் கொடுக்க, மிருதங்கம் சின்னதாய் பரதம் ஆடி விட்டுப் போகும்.

புல்லாங்குழல் ராஜாவின் உணர்வின் பரிபாஷையாய் விளங்கும்.

மனம் சஞ்சலப்பட்டிருக்கும் போது இந்தப் பாடலைப் போட்டு விட்டுக் கண்ணை மூடிக் கொண்டால் அப்படியே விக்ஸ் தடவும் சுகம். 

ஊறும் நதி யாவும் சேரும் இடம் ஒன்று

நாளும் விலகாமல் கூடும் சுகம் இன்று

சேர்ந்ததே நன்று..

ஒரு காவியம் அரங்கேறும் நேரம்

மழை தூவுதே இதமாகுதே

https://www.youtube.com/watch?v=tIkw3vOAkMc

படத்தில் வராத பாடலைக் காட்சித் தொகுப்போடு ஒரு அன்பர் கொடுத்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=t2FHhgIgN_Q

கானா பிரபா