Pages

Friday, November 10, 2017

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎼 🐞 கனம் கோட்டார் அவர்களே 🔨

பெங்களூருச் சிறையில் இருக்கும் சசிகலா அடிக்கடி வெளியே வந்து நடமாட்டம் என்றெல்லாம் பரபரப்புக் கூட்டியிருக்கும் இந்த வேளை, இதே மாதிரித் தான் ஜெயில் கைதி ஒருவன் அடிக்கடி வெளியே வந்து தன் காரியத்தைச் செய்து விட்டுப் போவதை 29 வருஷங்களுக்கு முன்னமே படமாக எடுத்து விட்டார் இயக்குநர் மணிவண்ணன். தன்னுடைய கூட்டாளி சத்யராஜ் ஐ எடுத்த அந்தப் படம் தான் இந்த “கனம் கோட்டார் அவர்களே”.
சத்யராஜ் இன் நகைச்சுவை ஜோடியாக ஜனகராஜ் அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களில் கலக்கியிருக்கிறார். அது போலவே இந்தப் படமும் அவருக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. தன்னுடைய சட்டப் படிப்பு மாணவன் சத்யராஜ் உடன் சேர்ந்து கலகலக்க வைக்கிறார். எண்பதுகளின் இறுதியில் நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நகைச்சுவையே பண்ணாமல் முழு நீள சிடு மூஞ்சிப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார், அதில் இதுவுமொன்று. தவிர அம்பிகா, ஶ்ரீவித்யா, சந்திரசேகர், சில்க் ஸ்மிதா, பிரதாப் போத்தன், கேப்டன் ராஜ் என்று நடிகர் பட்டாளமே இருக்கிறது.
அண்மைக் காலத்தில் வெளிவந்த Jolly LLB என்ற ஹிந்திப் படம் (உதய நிதி நடித்த ஒரேயொரு உருப்படியான படமாகத் தமிழில் மீளத் தயாரித்த மனிதன் படம் தான்) சட்டம் படித்தவொரு அப்பாவி மாணவன் பின் தன் சாதுர்யத்தால் மூத்த வழக்கறிஞரையே மண்டியிட வைப்பதாக எவ்வளவு அழகாக் காட்டியிருக்கும். கிட்டத்தட்ட அதே பாங்கில் படம் நெடுக சோடாப் புட்டிக் கண்ணாடியுடன் சத்யராஜ் நடித்த அந்தத் தெனாவெட்டுக்கு வேணுமென்றால் சபாஷ் போடலாம். ஆனால் தமிழ் சினிமா மசாலா மாயையில் மூழ்குகிறது பாதிப் படம். இயந்திரத் துப்பாக்கி, காற்றாடி விமானச் சண்டை என்று படம் முடியும் போது படம் பார்த்தவன் ஏதோ வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளிக் கதவைத் திறக்கும் திருப்தி தான் மேலிடுகிறது.
வேதம் புதிது படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பும், அறிமுகமும் சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் இருவரும் இசையமைப்பாளர் தேவேந்திரனை ஒப்பந்தம் செய்யக் காரணமாக இருந்திருக்கும். தேவேந்திரனைப் பொறுத்தவரை மண்ணுக்குள் வைரம், வேதம் புதிது ஆகிய மண் வாசனை சார்ந்த படங்களைப் பண்ணி விட்டு இப்படியொரு பிரமாண்ட மசாலாப் படத்தில் இணைந்தது புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.
இயக்குநர் மணிவண்ணன் தன் படங்களில் இளையராஜா தொட்டு கங்கை அமரன், சங்கர் கணேஷ், தேவா ஈறாக இசையமைப்பாளர்களோடு பணி புரிந்தாலும் பாடல்கள் விஷயத்தில் அவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. அவருடைய படங்களில் நல்ல பாடல்கள் இருந்தது வேறு விடயம். கனம் கோட்டார் அவர்களே படம் கூடப் பாடல்கள் இல்லாமேயே வந்திருந்தாலும் பாதகமில்லை எனுமளவுக்கு அமைந்த படம் வேறு.
படம் நெடுக சோடாப் புட்டிக் கண்ணாடியோடு வரும் சத்யராஜ் ஐ வித விதமான உருவத் தோற்றங்களில் அழகு பார்த்தது
“பட்டப் படிப்பு தேவை இல்லை கனம் கோட்டார் அவர்களே” என்ற எஸ்.பி.பி பாடும் பாட்டு
https://youtu.be/K7Z2T8b75HM
நீதிபதியில் இருந்து வழக்காடு மன்றத்தில் இருக்கும் ஒவ்வொரு பாத்திரங்களாகத் தோன்றுவார்.
இதே மாதிரி மலேசியா வாசுதேவன் பாடும் “யார் இட்ட சட்டம்”
https://youtu.be/ZmuDC-QKl2o
பாடலில் கடற்படை, விமானப்படை, காவல்துறை அதிகாரியாகவெல்லாம் வருவார். இந்தப் படத்தின் விளம்பரத்துக்கு அவர் இம்மாதிரி வரும் தோற்றங்கள் கை கொடுத்திருக்கும். பின்னாளில் சத்யராஜ் நடித்த படங்களின் முழுப் பாத்திரங்களாக இவற்றில் சில இடம் பிடித்தன. சத்யராஜ் இயக்கிய வில்லாதி வில்லன் கூட இதே பாதிப்புத் தான்.
“காதல் கவிதை பாட கனவே நல்லது”
https://youtu.be/hqE624-UcL4
கனம் கோட்டார் அவர்களே படத்தின் மொத்தம் ஐந்து பாடல்களில் இன்றுவரை இனிப்பது இந்தப் பாடல் தான்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா மற்றும் குழுவினர் பாடும் இந்தப் பாடல் இடைக்காலப் பாடல்கள் தொகுப்பில் தவிர்க்க முடியாதது. பலர் சந்திரபோஸ் இசையில் வந்ததாகக் கூட நினைக்கிறார்கள்.
காதல் கவிதை பாட பாடலின் இசையில் தேர்ந்த இசையமைப்பாளரின் நுட்பம் மிளிரும். பாடல் இடம் பிடித்த இப்படம் பற்றிய பின்னணி தெரியாதவர்கள் ஏதோவொரு முழு நீளக் காதல் கதை கொண்ட படப் பாடல் என்று நினைக்குமளவுக்கு இனிமை கொண்டது இந்தப் பாடல்.

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 🎻 காலையும் நீயே மாலையும் நீயே 🎷 🥁 உழைத்து வாழ வேண்டும் 🎺


எவ்வளவு தான் திறமை இருப்பினும் ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு அதிஷ்டமென்பது இவ்வளவு தூரம் கிடைக்குமா என்றே இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணத்தை ஆச்சரியத்தோடு நோக்க வேண்டியிருக்கிறது.
எடுத்த எடுப்பிலேயே எண்பதுகளின் உச்சமாக விளங்கிய தயாரிப்பாளர் கோவைத்தம்பியின் “மண்ணுக்குள் வைரம்”, அதனைத் தொடர்ந்து அதுவரை இசைஞானி இளையராஜாவோடு வெற்றிக் கூட்டணியாக இயங்கிய இயக்குநர் இமயம் பாரதிராஜாவோடு “வேதம் புதிது” இவற்றைத் தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு தேவேந்திரனுக்கு இரட்டை அதிஷ்டம் வாய்க்கிறது. அதுவே இந்தப் பதிவில் சொல்லப்படுகின்றது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய உச்ச நட்சத்திரங்களுக்கு அடுத்து வைக்கக் கூடிய அளவுக்கு திரையுலகில் அப்போது மின்னியவர் விஜய்காந்த். அதிலும் கிராமியம், நகரம் என்று எல்லா விதக் கதைப் பின்னணியும், ஏற்கனவே அனுபவப்பட்ட இயக்குநர்கள், அறிமுக இயக்குநர்கள் என்று விஜய்காந்த் அளவுக்கு தில்லாக நடித்துத் தள்ளிய நடிகர் யாருமிலர். இப்படியானதொரு கால கட்டத்தில் ஒரே ஆண்டில் விஜய்காந்த் நடித்த இரண்டு படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு தேவேந்திரனுக்குக் கிட்டுவதென்பது எவ்வளவு பெரிய அதிஷ்டம். அவற்றில்
ஒன்று ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் “காலையும் நீயே மாலையும் நீயே” இன்னொன்று அமீர் ஜான் இயக்கத்தில் “உழைத்து வாழ வேண்டும்”.
இசையாசிரியராகப் பள்ளியொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரனை அப்பள்ளி விழாவுக்குப் பிரதம விருந்தினராக வந்த இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. அப்பள்ளி விழாவில் தேவேந்திரன் இசைமைத்து மாணவர்கள் பாடிய பாட்டு ஆர்.சுந்தரராஜனை வசீகரிக்க, அவரும் தேவேந்திரனைத் தன் புதிய படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார். ஆனால் அந்தப் படம் அப்போது எடுக்க முடியாத சூழல் ஏற்படவே தேவேந்திரனின் அறிமுகம் “மண்ணுக்குள் வைரம்” வழியாக நிகழ்கிறது.
(தேவேந்திரன் - ஆர்.சுந்தரராஜன் சந்திப்பு குறித்த தகவல் உதவி நன்றி விக்கிப்பீடியா)
எண்பதுகளில் மாமூல் கதைகளை வைத்து இசையால் அவற்றுக்குத் தங்க முலாம் பூசி பெரு வெற்றிகளைக் குவித்தவர் ஆர்.சுந்தரராஜன். அவர் நினைத்திருந்தால் இளையராஜாவோடு சேர்ந்து இன்னொரு படம் பண்ணியிருக்கலாம். ஆனால் முன்னர் ஒரு பதிவில் நான் குறிப்பிட்டது போல அந்தக் காலகட்டத்து உச்ச இசைமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்று படத்துக்குப் படம் கலந்து கட்டி இசைக் கூட்டணி போட்டவர் ஆர்.சுந்தரராஜன். அவர் வழியாகத் தேவேந்திரன் அறிமுகம் நிகழாவிட்டாலும் ஆர்.சுந்தரராஜனின் குரு பாரதிராஜா, பாரதிராஜாவின் சிஷ்யர் மனோஜ்குமார் போன்றோரால் ஏற்கனவே
அடையாளப்படுத்தப்படுவதற்குக் காரணி ஆகி விட்டார்.
ஆர்.சுந்தரராஜன் கலந்து கொண்ட நிகழ்வில் தன் மாணவர்களுக்காக இசைத்த பாடலைச் சிறிது மாற்றம் செய்து “பொங்கியதே காதல் வெள்ளம்” என்று ஆக்கினாராம் தேவேந்திரன்.
கிராமியத் தெம்மாங்கில் “மண்ணுக்குள் வைரம்”, சாஸ்திரிய சங்கீதம் கலந்து பாடிய “வேதம் புதுது” ஆகிய படங்களுக்குப் பின்னால் இரண்டு பெரிய மசாலாப் படங்களைக் கையிலெடுக்கிறார் தேவேந்திரன்.
“காலையும் நீயே மாலையும் நீயே” இந்தப் படத்தில் விஜய்காந்த் மற்றும் பிரபு என்று இரட்டை நாயகர்கள். கூடவே விஜய்காந்துக்கு அப்போது வகை தொகையில்லாமல் ஜோடி கட்டிய ராதிகா இங்கேயும்.
“குக்கு கூ எனக் கூவும் குயிலோசை” அடடா இந்தப் பாட்டைக் கேட்டு எத்தனை வருடமாகி விட்டது உச்சுக் கொட்டுமளவுக்கு இனிய மெல்லிசை எஸ்.ஜானகி மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஜோடி சேர. பாடலுக்குக் கொடுத்த இசையில் அதீத ஆர்ப்பரிப்பு இல்லாவிட்டாலும் இந்தப் பாட்டுக்குப் போட்ட மெட்டு வசீகரிக்க வைக்கிறது. அப்படியே இந்த மெட்டைத் தேவேந்திரன் ஆர்.சுந்தரராஜனுக்கு எப்படிச் சொல்லியிருப்பார் என மனதில் ஓட்டிப் பார்க்க முடிகிறது.
“வாடி என் சிட்டுக் குருவி” மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி குழு பாடியது அதிகம் பிரபலமாகாததொன்று.
ஆனால் ஜெயச்சந்திரன் மற்றும் எஸ்.ஜானகி பாடிய இந்தப் படத்தின் மூன்றாவது ஜோடிப் பாடல் “சம்மதம் சொல்ல வந்தாள்”அதகளம். அந்தக் காலத்து ரெக்கார்டிங் பார்களின் தேவ கீதமாக இந்தப் பாட்டு இருந்தது. எஸ்.ஜானகி என்ற பாடகியை மட்டும் வைத்துக் கொண்டு எஸ்.பி.பியோடு மெது வேகப் பாட்டு, மலேசியா வாசுதேவனோடு தெம்மாங்கு ரகம், ஜெயச்சந்திரனோடு மெல்லிசை என்று மூன்று முத்துகளைக் கொடுத்துத் தனி முத்திரை பதித்திருக்கிறார் தேவேந்திரன். “காலையும் நீயே” பாடல் எஸ்.ஜானகி குழுவினர் பாடியது இரண்டு பாட்டாகக் கிட்டுகிறது.
“ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” பாட்டைக் கேட்டாலே எண்பதுகளின் காளையர்க்குக் கண்கள் பழுத்து விடும். பழைய காதலியை நினைத்து ஒன்றில் பாட்டைத் தேடுவார்கள் அல்லது பாட்டிலைத் தேடுவார்கள். “காலையும் நீயே மாலையும் நீயே” படத்தில் இருந்து உச்சமாக இருக்கும் ஒரு பாட்டைக் காட்டச் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு “ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” https://youtu.be/3pwdEh0cyqk பாடலை நோக்கித் தாராளமாகக் கையை நீட்டலாம். இந்தப் பாடலின் மெட்டு, கே.ஜே.ஜேசுதாசின் மது தோய்த்த தளர்ந்த, விரக்தியான, சோகம் சொட்டும் ரசங்கள் காட்டும் குரலினிமை, வரிகள், அதனோடு இசைந்து பயணிக்கும் இசை என ஒரு சோகப்பாட்டை அனுபவித்துக் கேட்க முடியுமென்றால் இந்தப் பாடல் அதற்கான பரிபூரண தகுதி கொண்டது.
“அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னைத்தான்
யார்கிட்ட சொல்லி அழுவேன்” என்று முத்தாய்ப்பாய் வரும் இடம் பாடலைக் கேட்ட பின்னரும் நினைவில் பாடிக் கொண்டிருக்கும்.
“காலையும் நீயே மாலையும் நீயே” படத்தின் பாடல்களை அறிமுகம் ராஜசுந்தர், கவிஞர் வாலி மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதினார்கள்.
ரெங்கபாபு மற்றும் செல்வி ஆகிய பாடகர்கள் அறிமுகமானார்கள். ரெங்கபாபு - செல்வி தம்பதி track இல் பாடிய பாட்டு “குக்குக்கூ எனக் கூவும் குயிலோசை” இந்தப் பாட்டு இவர்களின் குரலில் தனக்குப் பிடித்தமானது என்று எனக்கு Vinyil Records தந்த அன்பர் “காலையும் நீயே மாலையும் நீயே” இசைத்தட்டைத் தன்னுடனேயே வைத்து ஆசையோடு இன்றும் கேட்டு வருகிறார்.
அனைத்துப் பாடல்களையும் கேட்க
https://youtu.be/DJx3McKzZuw
“வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம்” https://youtu.be/6i1sNyWOvTY இந்தப் பாடலை அச்சரம் பிசகாமல் பாடிய எண்பதுகளின் வாலிபக் குருத்துகளைக் கண்டிருக்கிறேன். “உழைத்து வாழ் வேண்டும்” திரைப்படத்துக்காக தேவேந்திரன் போட்ட மெட்டு இன்று முப்பது ஆண்டுகள் கடந்தும் கே.ஜே.ஜேசுதாஸ் பேர் சொல்லும் பாட்டு.
எண்பதுகளின் சோகப் பாடல்கள் அதுவும் தனிப் பாடல்கள் என்றால் கே.கே.ஜேசுதாஸ் தான் உச்சம். எப்படி இளையராஜாவுக்கு ஒரு “கனவு காணும் வாழ்க்கை யாவும்”, ரவீந்திரனுக்கு ஒரு “பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்”, எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு ஒரு “ராஜ்ஜியம் தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன்”, மனோஜ் - கியானுக்கு ஒரு “அழகான புள்ளி மானே” என்று இந்தச் சோகப்பட்டியலை நீட்டிக் கொண்டு போக முடிகிறதோ அங்கே கண்டிப்பாக தேவேந்திரனின் “ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” பாடலும் “வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” பாடலும் இருக்கும்.
உழைத்து வாழ வேண்டும் படத்திலும் விஜய்காந்துக்கு ராதிகா ஜோடி. மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைத்தம்பி தயாரிக்க, அமீர்ஜான் இயக்கிய படமிது.
“முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா” https://youtu.be/-BxG0XersDU கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா ஜோடியில் பிரபலமான பாடலாக அமைந்தது.
“வெண்ணிலவை முதல் நாள் இரவில் படைத்தான்” https://youtu.be/EldFmSj4nwg பாடலும் எஸ்.பி.பி மற்றும் கூட்டுக் குரலோடு இனிமை சேர்த்த பாட்டு.
“பூமி என்ன பூமி” என்றொரு பாட்டு மலேசியா வாசுதேவன் குரலில் இடம் பிடித்தது. Life is funny என்றொரு போட்டிப் பாட்டு அனுராதா, எஸ்.பி.பி & குழுவினர் பாடியது கடனே என்று சேர்த்தது.
காலையும் நீயே மாலையும் நீயே மற்றும் உழைத்து வாழ வேண்டும் ஆகிய படங்களை இந்தத் தொடர் எழுதுவதற்கான ஆராய்ச்சிக்காகப் பார்த்தேன். என்னதான் திறமையான இசை வல்லுநராக இருப்பினும் திரைப்படமொன்றுக்குத் தேவையான, அதுவும் இந்த இரண்டு மசாலாப் படங்களுக்கும் உயிர் நாடியாக விளங்கும் பின்னணி இசையில் அதிகம் தேற முடியாத நிலையே தேவேந்திரன் இசையில் தென்பட்டது. இரண்டு படங்களின் மாமூல் திரைக்கதையமைப்பும் இவற்றை மீண்டும் பார்த்து ரசிக்க முடியாமல் ஆக்கி விட்டது.
‪கானா பிரபா‬
‪10.11.2017‬

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேதம் புதிது


மண்ணுக்குள் வைரம் படத்துக்குப் பின் இப்படியொரு பெரிய வாய்ப்பு தனக்குக் கிட்டுமென இசையமைப்பாளர் தேவேந்திரன் நினைத்திருப்பாரா? இன்று வரை தமிழ்த் திரையிசையில் ஒரு அழுத்தமான பதிவாக அமைந்து விட்டது "வேதம் புதிது" திரைப்படத்தின் பாடல்கள்.
கடலோரக் கவிதைகள் திரைப்படத்திற்குப் பின்
இயக்குநர் பாரதிராஜாவும் பாடலாசிரியர் வைரமுத்துவும் புதிய கூட்டணியை நாடிய போது அப்போது தேவேந்திரன் அறிமுகமும் சேர்ந்து கொள்கிறது. அதுவரை நிழல்கள் படம் நீங்கலாக சமுதாயப் பிரச்சனையை அதிகம் கலக்காது எடுத்து வந்த பாரதிராஜா, நாடகாசிரியர் கண்ணன் அவர்களின் "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்ற மேடை நாடகத்தைக் கையிலெடுத்து "வேதம் புதிது" ஆகத் திரை வடிவம் கொடுத்தார்.
சத்யராஜுக்கு வாழ் நாளில் பேர் சொன்ன பாத்திரங்களில் ஒன்றாக அமையவும், அழகுப் பதுமை அமலாவுக்கு நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தவும் இந்தப் படம் வகை செய்தது.
இதில் இடம் பெற்ற
"நான் கரையேறிட்டேன் நீங்க கரையேறிட்டீங்களா"
இன்று வரை புகழ் பூத்த வசனம்.
முதல் மரியாதை படத்தின் பாடல்களை விரும்பிக் கேட்ட போது மேலதிகமாக ரசிக்க வைத்தது பாடலாசிரியர் வைரமுத்து ஒவ்வொரு பாடல்களுக்கும் கொடுக்கும் விளக்கம். அதையொட்டிய பாங்கில் வேதம் புதிது படத்தின் ஒவ்வொரு பாடல்களுக்கும் வைரமுத்துவின் அறிமுகம் கொடுக்கப்பட்டது. மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் "ஜாதிகள் இல்லையடி பாப்பா" பாடலைத் தவிர மீதிப் பாடல்களை வைரமுத்துவே எழுதினார்.
இளையராஜா பாசறையில் இருந்து வெளியே வந்த பாரதிராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் அந்தக் கூட்டணியை மீறிய இசைப் படைப்பைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். இசையமைப்பாளர் தேவேந்திரனுக்கோ முதல் படத்தில் கிட்டிய பெயரைத் தாண்டிய கவனமும் தன் இருப்பைத் தக்க வைக்க வேண்டிய நிலை. இவையெல்லாம் சேர்ந்து "வேதம் புதிது" பாடல்கள் ஒவ்வொன்றையும் செதுக்க வேண்டிய தேவை இருந்ததை அவை ஒவ்வொன்றையும் கேட்டுச் சுவைக்கும் போது உணரலாம்.
எடுத்த எடுப்பிலேயே "சந்திக்கத் துடித்தேன் பொன் மானே" பாடலைத் தான் சொல்வேன். எவ்வளவு அமைதியாகக் காதலின் ஆழம் பேசும் பாட்டு இது.
ஆனால் துரதிஷ்டவசமாக இந்தப் படத்தில் இடம் பெறாது போனதால் பரவலாகப் போய்ச் சேராத அரிய சரக்கு இது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி ஜோடி கட்டும் இந்தப் பாட்டு "மந்திரம் சொன்னேன் வந்து விடு" பாடலுக்குப் பதிலீடாக முந்திப் பிரசவித்திருக்குமோ?
"கண்ணுக்குள் நூறு நிலவா இதுவொரு கனவா"
https://youtu.be/QqKA8pgY4S4
நூறு இடைக்காலப் பாடல்களைப் பட்டியல் போடச் சொன்னால் எஸ்.பி.பி மற்றும் சித்ரா பாடிய இது முந்திக் கொள்ளும் தரவரிசையில் இருக்குமளவுக்கு ரசிகர் நெஞ்சில் இடம் பிடித்தது. சில பாடல்களுக்குத் தான் அந்தப் பாடல்கள் பிறந்த போது வாழ்ந்த தலைமுறை தாண்டி முந்திய, பிந்திய தலைமுறைகளும் நேசிக்க வைக்கும் கொடுப்பினை இருக்கும். அந்த மாதிரிப் பாடல்களில் இதுவுமொன்று. குருவைப் போற்றும் "ஓம் சஹனா வவது" உப நிஷதமும் "அம்பா சாம்பவி" இராஜராஜேஷ்வரி அட்டகமும்
கலந்து கொடுக்கும் புதுமையை காதல் பாடலுக்குள் உறுத்தல் இல்லாமல் செய்து காட்டினார் தேவேந்திரன்.
"பூவே பெண் பூவே இதிலென்ன ரகசியம்" என்று கூட்டுக் குரல்கள் ஒலிக்கு முன் துள்ளியோடும் இசைப் பிரவாகம் கொடுத்திருப்பார் பாருங்கள் ஆஹா 😍
இந்த மாதிரியான சோதனை முயற்சிகளில் நிரம்பிய இசைஞானமும் ஜனரஞ்சகப் படைப்புக்கான அடிப்படையும் அறிந்திருக்க வேண்டும். தேவேந்திரனின் முத்திரைப் பாட்டு என்னுமளவுக்கு இசையிலும் திறன் காட்டியிருப்பார் இதில்.
அந்தக் காலத்துக் காதலர் கைக்குட்டையைக் காதல் வாகனமாக்க ஏதுவானது.
"என்னென்ன தடை வந்த போதும் காதல் இறப்பதில்லை" என்று வரும் கணத்தில் உடைந்து அழுகை வரும். அவ்வளவு உணர்வு பூர்வமான பாட்டு "புத்தம் புது ஓலை வரும்"
https://youtu.be/gz3N2MlwqTo
காதலனைத் தேடும் அந்த எதிர்பார்ப்பு பாடலின் முகப்பு இசையிலேயே அப்பட்டமாகத் தொனிக்கும்.
இந்தப் பாட்டு வரிகளில் தொனிக்கும், எதிர்பார்ப்புடன் கூடிய அவ நம்பிக்கையை அப்படியே சித்ரா குரல் பிரதிபலிக்கும். உதாரணமாக "கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கிக் காலம் கழித்திருப்பேன்" என்று வரும் போது வரும் எதிர்பார்ப்பு "தேவனே காத்திருப்பேன் தீயிலே பூத்திருபேன்" எனும் போது தொய்ந்து விடும்.
எண்பதுகளின் இளைஞர் சமுதாயம் வாழ்க்கை வெறுத்துப் போய்க் கேட்ட பாடல்கள் எவை என்று
பழைய ரெக்கோர்டிங் பார் வைத்தவரிடம் கேட்டால் அவர் கொடுக்கும் பட்டியலில்
"மாட்டு வண்டிச் சாலையிலே"
https://youtu.be/bIQ6VayXKBc
பாடலும் இருக்கும். பாரதிராஜாவின் ராசியான பாடகர் மலேசியா வாசுதேவனின் சோக கீதம் இது. கூட்டுக் குரல்களை (chorus) வெகு அழகாகப் பயன்படுத்தும் வித்தை கற்றவர். கண்ணுக்குள் நூறு நிலவா பாடலில் எப்படிக் காதலர் கொண்டாட்டத்துக்கான கூட்டுக் குரல்களாக இயங்கினவோ அவையே இங்கு
"காட்டு மரங்களெல்லாம் கை நீட்டி அழைக்குது
மாட்டுச் சலங்கையெல்லாம் மகளோட அழுகுது"
என்றும்
"சின்னக் கிளியிரண்டும் செய்து விட்ட பாவம் என்ன
அன்பைக் கொன்று விட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன"
என்றும் உடைந்து போய் நலிந்த குரலாய் ஒலிக்கின்றன.
எல்லோரும் "கண்ணுக்குள் நூறு நிலவா" பாடலில் மையல் கொண்டிருக்க எனக்கோ "மந்திரம் சொன்னேன் வந்து விடு" https://youtu.be/1BcgCp5mAag
பாடல் மேல் மையல் கொண்ட "மனோ"பாவத்தில் இருந்தேன். இன்றும் கூட "கண்மணி உனக்கொன்று தெரியுமா" என்று குழைந்து பாடுவது தான் நெஞ்சில் மனோரஞ்சிதமாக இருக்கும்.
மனோ, எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கும் பாட்டு இது.
தேவேந்திரனுக்கு சுதந்தரமாக ஆசைக்கு ஒரு காதல் பாட்டை இசைக்க விட்டு விட்டுக் காத்திருந்தது போல இருக்கும்.
இந்தப் பாட்டு பாரதிராஜா படங்களுக்கே உரித்தான முத்திரைக் கைதட்டலோடு நிறைவுறும்.
அண்மைய வருடமொன்றில் "இளையராஜாவை விட தேவேந்திரன் திறமைசாலி" என்று சொன்ன பாரதிராஜாவே "வேதம் புதிது" படத்துக்குப் பின் தேவேந்திரனை நாடவில்லை.
ஆனால் இது தோல்விப் படமாக இருக்கும் உணர்ந்த சந்தர்ப்பங்களில் கூட இளையராஜா அதைக் குறிப்பிட்டு விட்டு பாரதிராஜாவுக்குக் குறை வைக்காது உயரிய பாடல்களைக் கொடுத்து வந்தவர்.
வேதம் புதிது படத்தின் பாடல்கள் அந்தப் படைப்பின் மேன்மையை இன்னும் உயர்த்த வழி கோலிய வகையில் கச்சிதமாக அமைந்தன, இன்று வரை இதற்கு இசை இளையராஜா தான் என்று கண் மூடித்தனமாகச் சொல்லும் அளவுக்கு.
வேதம் புதிது படத்தின் பாடல்களைத் துல்லிய ஒலித்தரத்தில் கேட்க
https://youtu.be/rFn9xzCTXY4