Pages

Saturday, December 31, 2011

பதிவர்கள் பார்வையில் 2011 - ஒலிப்பகிர்வு

2011 ஆம் ஆண்டு விடைபெறப்போகின்றது. 2012 ஆம் ஆண்டை வரவேற்கும் வானொலிப் பணியில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வழியாக http://tunein.com/radio/ATBC---Australias-Tamil-Radio-s111349/ தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றேன். இந்தவேளை கடந்த ஆண்டு ட்விட்டர் வழியாகவும், வலையுலகம் வழியாகவும் அறிமுகமான நண்பர்களை வைத்து 2010 ஆண்டுக் கண்ணோட்டத்தை வழங்கிய பாங்கில் இந்த ஆண்டும் 2011 ஆண்டுக் கண்ணோட்டத்தை வழங்க எண்ணியபோது நண்பர்கள் கைகொடுத்தார்கள். அந்த வகையில் நண்பர் அப்பு 2011 இல் தொழில் நுட்பம், நண்பர் கிரி ராமசுப்ரமணியன் 2011 இல் திரையிசையுலகம், நண்பர் சதீஷ் குமார் 2011 இல் இந்தியா மற்றும் தமிழகம் ஆகிய பகிர்வுகளை அளித்திருந்தார்கள். உண்மையில் ஒரு தேர்ந்த வானொலியாளர்களின் பாங்கில் இவர்கள் கொடுத்த இந்தப் பகிர்வுகளுக்கு வானொலி நேயர்கள் மத்தியில் பாராட்டும் கிட்டியதை இவ்வேளை மகிழ்வோடு சொல்லிக் கொள்கின்றேன்.

என்னோடு கூடப் பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் எல்லோருக்கும் இந்த வேளை இனிய ஆங்கிலப் புதுவருட வாழ்த்தை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கின்றேன். தொடர்ந்து ஒலிப்பகிர்வுகளைக் கேளுங்கள்.

2011 இல் தொழில் நுட்ப உலகு - வழங்குவது அப்பு2011 இல் திரையிசை - வழங்குவது கிரி ராமசுப்ரமணியன்2011 இல் இந்தியா - வழங்குவது சதீஷ்குமார்
2011 இல் தமிழகம் - வழங்குவது சதீஷ்குமார்

புகைப்படம் நன்றி: http://caricaturque.blogspot.com/

Tuesday, December 27, 2011

ஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு

ஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே
அதனைத் தொடர்ந்து நண்பர் KRS என்ற கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களை இந்தப் படத்தின் பின்னணி இசையைப் பிரித்துக் கொடுக்கின்றேன் தகுந்த உரையை வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்ற போது மனுஷர் வாக்கு மீறாது அருமையானதொரு பகிர்வைத் தந்தளித்தார். உண்மையில் படத்தின் முழு ஒலிப்பதிவயும் வழங்கியபோது எந்தவித காட்சி ஓட்டமும் இல்லாது ஒலியை வைத்தே முன்னர் அவர் பார்த்த இந்தப் படத்தினை அசைபோட்டு எழுதிக் கொடுத்தது என்னளவில் ஒரு சாகித்யம் என்பேன். ஏற்கனவே மெளன ராகம் படத்துக்கும் இதே பாங்கில் தன் முத்திரையைக் காட்டியவர். மீண்டும் இவரோடு இணைந்து இன்னொரு இசைக்காவியத்தைக் கொடுப்பதில் மட்டற்ற மகிழ்வடைகின்றேன். இனித் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் சங்கீத சாம்ராஜ்யத்திற்கு கண்ணபிரான் ரவிசங்கர் துணையோடு அழைத்துப் போகின்றேன். இசையென்னும் இன்ப வெள்ளத்தை அள்ளிப் பெருகுங்கள்.

ராமாயணம்-ராஜாயணம்
* கம்ப இராமாயணம் = தமிழ்க் காப்பியம்!
* இராஜா இராமாயணம் = இசைக் காப்பியம்!

வால்மீகி எழுதிய ஒரு வரலாற்று-கற்பனையை...
தமிழ் மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் = கம்பன்!
இசை மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் = இளையராஜா!!ஒரே படத்துல 16 பாட்டை இந்தக் காலத்துல யாருப்பா கேட்பாங்க? என்னமோ BGM, BGMன்னு சொல்றாங்களே! என்ன பெருசா இருக்கு இந்த SRR - ஸ்ரீ ராம ராஜ்ஜியத்துல? பார்க்கலாமா??


இராமாயணத்தின் கதை எல்லாருக்கும் தெரிஞ்சது தான்! அது மட்டுமா? ஒவ்வொருத்தரும் அவங்க சொந்த இராமாயணத்தையும் இதுல கொண்டாந்து சேர்ப்பாங்க!:)
ஆத்திகனோ, நாத்திகனோ, இலக்கியவாதியோ, புரட்சிவாதியோ - எல்லாருக்கும் இராமாயணத்தில் ஏதோ ஒன்னு இருக்கு!

தெரிஞ்ச கதை தான்! ஆனால் தெரியாத உணர்ச்சிகள்! = அதை எப்படி ஒருத்தருக்குச் சொல்வது?
* சீதை துன்பப் பட்டாள், தெரியும்!
* இராகவன் லூசுத்தனமா நடந்துக்கிட்டான், தெரியும்!
ஆனா, நமக்கு-ன்னு நடக்காத வரை, அது வெத்துக் கதை தானே!

எத்தனை பேரு, காதலில் சண்டை போட்டுட்டு, அவள் தவிக்கும் போது, ஒளிஞ்சி இருந்து பாத்து இருக்கோம்??
அட அவளா? இந்நேரம் சிக்குனு சிக்கன் பிரியாணி தின்னுக்கிட்டு இருப்பா-ன்னு நாம் நினைக்கும் அந்த அவள்...

காதல் பரிசான கைக்கடிகாரத்தை...கண்ணின் மேல் வச்சிக்கிட்டு...
அந்த நொடித் துடிப்பின் சத்தத்திலே...
தரையில் படுத்துக் கிடப்பதை...ஒளிஞ்சி இருந்து பார்த்தோம்-ன்னா?

இந்த உணர்ச்சிகளை எதில் எழுத முடியும்?
* பாட்டில் எழுதினா = காவியம்!
* இசையில் எழுதினா = இளையராஜா!
தெரிந்த கதை, ஆனால் தெரியாத உணர்ச்சிகளைப் படீர்-ன்னு நம் மனத்தில் போட்டு அடிக்கும் வித்தையைப் பார்க்கலாம், வாருங்கள்!

முதல் காட்சி! எல்லாரும் ஊருக்குத் திரும்புதல்! அயோத்தியில் இதையே தீபம் ஏத்தி வச்சி தீபாவளியாகக் கொண்டாடினார்கள்-ன்னும் சிலர் சொல்லுவாய்ங்க!
ராஜா ஏற்றி வைக்கும் தீபாவளி எப்படி? = ஜகதானந்த காரகா

பாட்டு ஒலிக்க, BGM ஒலிக்க..... மீண்டும் அதே பாட்டு, BGM.....
இதுலயே அந்த இன்ப மயமான தருணங்களை மாறி மாறி நெய்து விடுகிறார், ஒரு சீலையப் போல!

ரொம்ப ஆராவாரம் இல்லை...அதே சமயம், மகிழ்ச்சிக்கும் குறைவில்லை! = ஏன்?
ஏன்னா...ரொம்ப துன்பப்பட்டு வரும் இன்பத்தில்...அத்தனை மகிழ்ச்சி இருக்காது!
வலியின் நிழல் தங்கி, மனசுல ஒரு பக்குவமான நிலை இருக்கும்! ராஜா நெய்வதைக் கேளுங்க!
ஜகதானந்த காரகா = தியாகராஜர் பஞ்சரத்தினக் கீர்த்தனை!
ஜய ஜானகி பிராண நாயகா = என்ன ஆனாலும், அவனே அவளோட உயிரு-ன்னு மறுபடி மறுபடி ஒலிக்க வச்சி, பின்னால் வரப் போவதைக் காட்டுகிறாரோ?
ஒரு இராம சினிமாக் காவியத்தை, தியாகராஜர் மரபிசையோடு ஆரம்பிக்கணும்-ன்னு உனக்கு எப்படிய்யா தோனுது, இளையராஜா?

இது இப்படின்னா, பட்டாபிஷேகக் காட்சி = Symphony!
தியாகராஜரில் ஆரம்பிச்சி, கேட்டுக்கிட்டு இருக்கும் போதே, Symphony-இல் ஏத்தி வுடறது! அப்பப்போ, உன் டகால்ட்டி வேலையைக் காட்டிடுற ராஜா நீயி!!:)
Western என்று நெருடாமல், பட்டாபிஷேக கம்பீரம் என்றே இந்த இசை அழகாக அணி வகுக்கிறது!Pl Note: இந்தப் படத்தில், பல BGM களின் துவக்கம், ஒவ்வொரு பாட்டின் முடிவில் இருந்தே துவங்குது!
உற்று கவனிச்சிப் பாருங்க! கண்டு புடிச்சிருவீக...வேறெந்த படத்திலும் இது ராஜா செய்யாத Technique! மெளன ராகம் உட்பட...

சீதையைக் காட்டுக்குத் துரத்தும் BGM பற்றி நான் இங்கே பேசப் போவதில்லை! எனக்கு ரொம்ப வலிக்கும் காட்சிகள் அவை!
நாடு-நாட்டு மக்கள் கருத்து தான் முக்கியம்-ன்னா, தம்பி கிட்ட நாட்டைக் குடுத்துட்டு, தானும் அவளோடு போயிருக்கலாமே??
தம்பிகள் ஒத்துக்க மாட்டாங்கன்னா....யானை யாருக்கு மாலை போடுதோ...அவங்களை மன்னன் ஆக்கிட்டு.....தம்பிகளோடு...அவளுடன் போய் இருக்கலாமே??
- அப்படிச் செஞ்சி இருந்தியானா....கோயிலில் உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டு இருப்பேன்...ஏனோ உன்னைக் கோயிலில் பார்க்க மட்டுமே தோன்றுகிறது! வணங்க அல்ல!!:(இராம கதையைச் சொல்லும் மூன்று பாட்டு!
* தேவுள்ளே மெச்சிந்தி (Practice Song)* ராமாயணமு (அயோத்தி தெருக்களில்)* சீதா-ராமு சரிதம் (அரண்மனையில்...கம்பீர இசை)
தெருக்களில் பாடும் போது, அயோத்தி மக்களை இடிக்கும் இசை...டேய், ஒங்களாலத் தான் ஒரு அப்பாவி தனியாக் கிடந்து துடிக்குறா...பாட்டு வரிகளும் அப்படியே! எழுதியது யாரோ?

சீதையும் ராமனும் சந்திப்பது போலான மாயக் காட்சி! மெய்நிகர் (Virtual Reality)
இந்த இடத்தில் ராஜா போடும் BGM கேட்டாத் தெரியும், எதுக்கு எல்லாரும் ராஜா ராஜா-ன்னு அனத்துறானுங்க-ன்னு :))
* பழைய பாடலையே BGM ஆக்கி, Flashback காட்டுவாரு!
* அதே சமயம், பழைய பாடலில் எல்லாமே புதுப்புது வாத்தியங்கள்!
என்னமா இசையால் ஒரு Flashback இயக்கம்! யோவ் இளையராஜா - நீ என்ன படத்தின் இயக்குனாரா? வெறும் இசை இயக்குனர் தானே? :))

அவன் அவளைப் புரிஞ்சிக்கிட்டானோ இல்லையோ, அவள் அவனை நல்லாப் புரிஞ்சி வச்சிருக்கா!
அவளா சந்தேகப்படுவா?...தன் புருசன் இன்னோரு கண்ணாலம் கட்டிக்கிட்டானோ?-ன்னு...

இல்லை!
ஆனா, ஊரு சொன்னா எதையும் செய்யத் துணியும் லூசு ஆச்சே தன் புருசன்!


ஏதோ நாட்டுக்காக அஸ்வமேத யாகம் செய்யறான், பொண்டாட்டி பக்கத்துல இல்லாமச் செஞ்சா, நாட்டுக்கே ஆபத்து-ன்னு ஒத்தைப் பிராமணன் கெளப்பி விட்டாப் போதுமே...
ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி ஐயா, இன்னோரு கண்ணாலம் கட்டிக்குவாரா?

இராமன் என்ன நிலையில் இருக்கான்-ன்னு பாக்கத் துடிக்குது அவளுக்கு! தன்னை ஊர் அறிய மறுதலித்தவன்...இப்போ உள்ளத்து அளவிலும் மறுதலிப்பானோ?-ன்னு படக்படக்...
வால்மீகி மூலமா, ஆவியாகி, anonymous ஆக உள்ளே வரும் சீதை...தனக்குப் போட்டியாக...இன்னொருத்தியைக் காணும் காட்சி...


சீதையின் சிலையை வடிச்சி வச்சிக்கிட்டு...நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்!!!
அவன்-அவள் = ஊர் அளவில் பிரிஞ்சாலும், உள்ளத்து அளவில் பிரிவதே இல்லை!
இந்த BGM இல் கல்லும் கரையும்! காதலிச்சி இருக்குறவன் எவனும் கட்டாயம் இந்த BGM கேட்டு கண் பனிக்கும்!!
ராமரின் பள்ளியறைக்கு சீதை ஆவியுருவில் வந்து, ராமர் தன் நினைவில் என்றும் இருக்கும் உண்மையைக் கண்டுணரும் போதுபடத்தின் Grand Finale & Graphic Effort - ஒருத்தியின் தாங்கும் எல்லை தான் எவ்ளோ?
இலங்கையில் மரத்தின் கீழ் தற்கொலை முயற்சி, அப்பறம் பலர் முன்னிலையில் மறுதலிப்பு-தீக்குளித்தல்.....அப்படியே தொடர்ச்சியா ஒவ்வொன்னா....
பூமி பிளந்து, அவள் உணர்ச்சியை எல்லாம் ஒட்டு மொத்தமாய் விழுங்கும் சுனாமிக் காட்சி!


பாலகிருஷ்ணா = இராமரா? நயன்தரா = சீதையா?
அடக் கொடுமையே-ன்னு கேலி பேசுபவர்களையும்....பாலகிருஷ்ணா/நயன் முன்னேயும் பின்னேயும் இசையை ஓடவிட்டு, அவர்கள் நடிக்காததையும், உணர்ச்சியால் கொண்டு வந்து தந்த படம் இது!

படத்தில், பாடல்களின் இசையைச் சொல்ல, தனிப் பதிவு தான் போடணும்! இங்கு BGM பற்றி மட்டுமே கொஞ்சமே கொஞ்சம் பேசினோம்!

இவ்வளவு பெரிய புராணப் படத்துக்கு, ராகங்கள் இல்லாத பாட்டா?
சின்னக் கண்ணன் அழைக்கிறான்-ரீதிகெளளை புகழ் இளையராஜா...இந்தப் படத்தில் போட்ட ராகங்கள் என்ன-ன்னு அறிஞ்சவங்க வந்து சொல்லட்டும்! நமக்கு இலக்கணம் அம்புட்டு போதாது:)

ஸ்ரீராம லேரா = அம்சாநந்தி-ன்னு மட்டும் தெரியுது!

கலி நிங்கி நீரு = கீரவாணியா?

சீதா சீமந்தம், அதை விட, தாண்டகம் என்னும் இசைப் பகுதி அமர்க்களம்! கேட்டுப் பாருங்க!படம் முழுக்க தபேலா + வீணையின் ஆட்சி!
BGM-இல் வீணையை இம்புட்டு புழங்கி இருப்பது, இதுவாத் தான் இருக்கும்-ன்னு நினைக்கிறேன்!

SPB = கலக்கல்! ஸ்ரேயா கோஷல் = ஓக்கே, நல்லாப் பண்ணி இருக்காங்க!
சித்ரா = ஒரே ஒரு பாட்டு தானா?
இந்த ராஜா இதை மட்டும் ஏன் இப்படிச் செஞ்சாரு?

BGM என்பது கத்தி மேல் நடக்கும் வித்தை!

தன் இசைப் புலமையைக் காட்ட வேணும்-ன்னு நினைச்சா, இசையே பெருசாகி, காட்சி கவிழ்ந்து விடும் அபாயம்...
அதே சமயம், உணர்ச்சிகள் பேச வேண்டிய இடத்தில், இசை மட்டுமே பேசி ஏங்க வைக்கும் இசை!

BGM இல்லாம, காதுல பஞ்சி வச்சிக்கிட்டு.....இன்னொருகா அரங்கத்தில், ஸ்ரீ ராம ராஜ்ஜியம் பாருங்க...
இளையராஜாவுக்கு இப்பதிவிலே முகஸ்துதி செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!

மனித உணர்வுகளை.......இசையோடு கோர்த்துக் கட்டும் மாயம்!
அதுவும் நாகரீக keyboard காலத்திலும்...வீணை, தபேலா, நாதசுரம், புல்லாங்குழல் போதாது-ன்னு, இன்னும் என்னென்னமோ Western Instruments.....
நூறு வாத்தியக் கருவி, ஒன்னா வந்து, உங்க முன்னாடி வாசிச்சா எப்படி இருக்கும்???

பல BGM களின் துவக்கம், ஒவ்வொரு பாட்டின் முடிவில் இருந்தே துவங்கும் புது முயற்சி!!
ஏ, மாயக் காரனே, இளைய-ராஜாவே......
* அன்று கம்பன் செய்த இராமாயணம் = தமிழ்க் காப்பியம்!
* இன்று நீ செய்த இராமாயணம் = இசைக் காப்பியம்!
திருவாசகத்துக்குப் பின்....இந்தப் படத்தால்.....
கம்பனைப் போல்.........."காவியப்" புகழ் உனக்கு!
இறவா இசையோடு இருப்பாய் நீ!

முகப்பு இசைராமர், சீதை மஞ்சத்தில் காதல் மொழி பேசும் நேரம்
ராமர் சீதையோடு மஞ்சத்தில் இருக்கும் போது ஆராய்ச்சி மணி ஒலிக்க, சீதை தடுத்தும் ராமர் நீதி கேட்கப் புறப்படும் போது


சீதை குறித்த அபாண்டத்தை பத்ரன் தயங்கித் தயங்கி ராமரிடம் கூறும் போது

சீதை குறித்த புறணியைக் கேட்டு ராமர் மதி கலங்கும் போது

ராமரின் கட்டளைப்படி இலக்குவன் சீதையைக் காட்டுக்கு அழைத்துச் செல்லும் காட்சிவால்மீகி முனிவர் காட்டுக்குள் சீதை வரவேற்கப்படும் போதுசீதைக்கு முறையான வளைகாப்பு நடத்தவில்லையே என்று ஆதங்கப்படும் கோசலை தன் மனக்கண்ணில் அந்த நிகழ்வைக் காணும் போது
ராமர் இன்னும் தன் நினைவில் இருப்பாரோ அல்லது இன்னொரு துணை தேடியிருப்பாரோ என்று கலங்கும் சீதைராமர் செய்யும் அஸ்வமேத யாகம்அஸ்வமேத யாகத்தில் பயணித்த குதிரையை லவ குச சகோதரர்கள் காட்டுக்குள் கட்டிப்போடும் போது இலக்குமணன் தன் படையோடு வந்து அவர்களோடு போர் புரியும் காட்சிலவகுச சகோதரர்களைச் சந்திக்க வரும் இராமர், சீதையைக் காண்பதும் லவ குச சகோதர்கள் தன் பிள்ளைகள் என்று உணர்வதும், இறுதியில் பூமாதேவியிடம் சீதை தன்னை ஒப்புவிப்பதும். இது நீண்டதொரு இசைத்துண்டுTuesday, December 6, 2011

இசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க


வணக்கம் மக்கள்ஸ்! இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான அறிமுகத்தைக் கொடுத்துவருவது உங்களில் பலர் அறிந்ததே.
தற்போது இன்னொரு அறிவிப்பும் இணைந்திருக்கின்றது. அதாவது இசைஞானி இளையராஜாவின் தலைசிறந்த 10 பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வரிசைப்படுத்தி அனுப்பினால் அவற்றை மேடையில் இசைக்கக் காத்திருப்பதாகச் சொல்லியிருக்கின்றார். இசைரசிகர்களாகிய எமக்கு, குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் பல்லாயிரம் முத்துக்களில் எந்த முத்தைக் கோர்ப்பது என்பது சவாலான காரியம். ஆனாலும் ஜாலியாக நாம் எல்லோருமே பின்னூட்டம் வாயிலாக எம் ஒவ்வொருவருக்கும் பிடித்த இசைஞானி இளையராஜாவின் தலைசிறந்த 10 பாடல்களைப் போடுவோமா?
எங்கே ஆரம்பிக்கட்டும் ஆட்டம்.

Youtube: shivshiva85's Channel
Saturday, December 3, 2011

The Dirty Picture ஒரு நடிகையின் ப(பா)டம்

எப்பவுமே சினிமாக்காரனைக் கூத்தாடி என்றெல்லாம் சொல்லும் அதே ஜனங்கள் தான் அவனைப் போற்றித் துதிக்கவும் தயங்குவதில்லை, இது ஒருவகை ஈகோயிசம் என்ற சாராம்சத்தில் பிரேமி என்ற தன் சின்னத்திரை நாடகத்தில் கே.பாலசந்தர் ஒரு பாத்திரத்தின் மூலமாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது.

சினிமாவுக்குத் தேவையானது மூன்றே மூன்று சரக்கு entertainment, entertainment, entertainment என்னால் கொடுக்கமுடிந்தது ஒன்றே ஒன்று அது entertainment, இப்படியாக The Dirty Picture என்ற ஹிந்திப்படத்தில் சில்க் என்ற நாயகி பாத்திரம் பேசுகிறது. எண்பதுகளில் உச்சாணிக்கொம்பில் இருந்த ஒரு ஒரு கவர்ச்சி நடிகை சில்க். சில்க் என்ற நடிகைக்கு முன்னரும் பின்னரும் எத்தனையோ இருந்திருக்கின்றார்கள் ஆனால் ஒரேயொரு சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் அவரின் தற்கொலையோடு முடிவுக்கு வருகின்றது அந்த நடிகையின் பயணம். சினிமா ஆசை என்ற பெருங்கனவில் வீட்டை விட்டு ஓடி சென்னைக்கு வரும் ரேஷ்மா ஒரு வறிய குடும்பத்துப் பெண் தன் முன் இருந்த சவால்களை எதிர்கொண்டு ஜெயித்துக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் எல்லாம் தொலைத்துத் தன்னையும் தொலைத்த கதைதான் இந்தப் படத்தின் கரு.


"அவளோட புகழ் சோளப்பொரி போல, மேலே போனது கீழே வரத்தான் செய்யும்" சூர்ய காந்த் என்ற உச்ச நடிகர் ஒரு இடத்தில் பேசுவார், சினிமாவில் மட்டுமல்ல நம் வாழ்க்கையின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவர் எப்போது கீழே விழவேண்டும் என்று காத்திருக்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது. வித்யாபாலன் என்ற நடிகைக்கு ரேஷ்மா என்ற அபலைப்பெண்ணில் இருந்து சில்க் என்ற உச்ச நடிகையாக மாறி அந்தப் பாத்திரமாகவே வாழவைத்திருக்கின்றது இந்தப் படம். வித்யாபாலனுக்கும் சில்க் இற்குமான தோற்ற நிலையில் ஏற்கமுடியாது ஆரம்பிக்கும் படம் முடியும் போது வித்யாபாலனின் உழைப்புக்கு சபாஷ் போட வைக்கின்றது.

சினிமா என்ற கனவுலகத்தைத் தேடிப் போய் அவமானங்கள் பட்டு ஜெயிக்கும் ரேஷ்மா என்ற சில்க், ரசனை மாறும் போது தனக்குப் போட்டியாக வரும் நாயகியை ஏற்றுக் கொள்ளா முடியாத ஒரு சராசரி மனித மனம் என்ற அளவுக்கு இந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

சினிமா என்ற கனவுத்தொழிற்சாலையைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா கனவுத்தொழிற்சாலை ஆக்கியபோது விகடனில் நடிகை லட்சுமியின் கண்டனத்தோடு கூடிய சந்திப்பை ஏற்படுத்த வேண்டியிருந்தது. ஒரு நடிகையின் கதை என்ற தோரணையில் கவிஞர் வைரமுத்து கவிதை பாடி நடிகை சுஹாசினி தலைமையில் அவருக்கு எதிராகப் போராட்டம் எல்லாம் நடந்தது வரலாறு. ஆனால் உண்மையில் ஒரு நடிகையாக வாழ்க்கைப்பட்டவளைச் சுற்றி சூழலில் எந்தப் பெண்ணுமே உடல் அல்லது உணர்வு ரீதியான காயத்துக்கு ஆளாகாமல் தப்பமுடியுமா என்பது கேள்விக்குறி. அதைப் பட்டவர்த்தனமாகக் காட்டி நிற்கின்றது இந்தப் படம்.

ஏப்ரஹாம் என்ற தலைசிறந்த இயக்குனர்(இம்ரான் ஹசானி) சினிமாவில் கவர்ச்சி மாயை வெறுத்து நல்ல கதை தான் ஜெயிக்கும் என்ற உணர்வோடு இருப்பவர். அவரின் அசரீரிக் குரலாகத் தான் சில்க் என்ற நடிகையின் வாழ்க்கை இந்தப் படத்தோடு பயணிக்கின்றது. ஏப்ரஹாம் வெறுத்து ஒதுக்கும் சில்க், தயாரிப்பாளர் செல்வ கணேஷ் இன் பார்வை பட்டு சினிமாவில் நுழையவும், கூடவே சூர்யகாந்த் என்ற முது வயது சூப்பர் ஹீரோவின் அரவணைப்புக் கிட்டி மெல்ல மெல்ல அவள் பெரும் புகழ் என்ற உச்சாணிக்கொம்பை அடைவதும், கூடவே அவளின் தோல்விக்காகவும் தன் வெற்றிக்காகக் காத்திருக்கும் ஏப்ரஹாம் என்ற இயக்குனரும் என்று இந்த முக்கிய புள்ளிகளே கதையை நகர்த்திச் செல்கின்றனர்.

ஒரு நடிகையை ஒரு எல்லைக்கோட்டுக்கு மேல் ஏற்காத வெளிச்சமூகம் மட்டுமல்ல திரையுலகத்துக்குள்ளும் அதே நிலை என்பதையும் வெறும் பாலியல் ரீதியான பந்தத்தை மட்டுமே எதிர்பார்க்கும் ஆண்களிடமிருந்து உண்மையான அன்பைத் தேடும் சில்க் ஆகவும் இந்த நடிகையின் பரிமாணம் வெளிப்பட்டிருக்கிறது.

பரபரப்புப் பத்திரிகையாளர் பாத்திரத்தை நாம் வழக்கமான வாராந்த சஞ்சிகையின் எழுத்தில் தரிசிக்க முடிந்ததைத் திரையில் காணமுடிகின்றது.

வேலையிடத்தில் சந்திக்கும் சவால்கள் என்பது பொதுவான ஒரு விடயம். ஆனால் கலை என்று வரும் போது அங்கே உணர்வு ரீதியான பல சவால்களைச் சந்திக்க வேண்டும். ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு குதிரை சட்டென்று தாமதித்தால் கூடவரும் குதிரைகள் முன்னே ஓடிவிடும் அல்லது இடறித்தள்ளிவிடும். என் ஊடகத்துறையில் கடந்த பதினோரு ஆண்டுகளில் தனிப்பட்ட ரீதியில் சந்தித்த காழ்ப்புணர்வுகளைத் திரையில் ரேஷ்மா என்ற சில்க் பாத்திரத்தோடு பொருத்திப் பார்க்க முடிகின்றது. உன்னால் ஏராளமான வெற்றிகளைக் கொடுத்து ரசிகர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிகின்றதே அதே வெற்றி உன் ஒரு படத்தின் தோல்வியால் அழிக்கப்பட்டு விடும் என்று ஏப்ரகாம் சொல்லும் உண்மை எல்லோருக்கும் பொருந்தும்.

சில்க் என்ற நடிகையின் கதை என்ற மையத்தை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமான காட்சிக் கோர்வை, புத்திசாலித்தனமான வசனங்கள் என்று போவதால் படத்தை ரசிக்க முடிகின்ற அதே சமயம் இயக்குனர் எப்ரகாம் , சில்க் காதலும் கூடவே வரும் பாடலும் ஸ்பீட் ப்ரேக்கர்.

இளமையாகக் காட்டிக் கொண்டு தொப்பை மறைத்து ஹீரோயிசம் காட்டும் நஸ்ருதின் ஷா கலக்கியிருக்கிறார். ஆனால் படத்தின் ஆரம்பத்தில் "சத்யா மூவீஸ்" தங்க மகன் போஸ்டரில் இருந்து ப்ளஸ் டூ பாஸ் ஆகித் தன் தாய் மடியில் செல்லம் கொட்டும் காட்சியிலும், தொய்ந்து விழும் திறந்த உடம்போடு அவர் போடும் ஆட்டமும் ரஜினியில் இருந்து தென்னக மூத்த நடிகர்கள் எல்லோரையும் பதம் பார்க்கின்றது. முழுமையாகக் கோடம்பாக்கத்தின் சூழலும் வருவதால் படத்தின் முகப்பில் இருந்து ஒரு சில காட்சிகள் வரை "அட்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க" பாடலும் தமிழ்ப் பேசுவதோடு பாத்திரங்கள் எல்லாமே தென்னிந்திய வாடையோடு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள்.

என்னடா இது, பகையாளி கூட என்னை எதிர்க்கமுடியாத நிலை என் நிலை என்று மருகுவதாகட்டும், அப்பாவிப்பெண்ணில் இருந்து படிப்படியாகச் செல்வாக்கு மிக்க நடிகையாக மாறுவதும் தேய்வதும் அவரது நடிப்பின் வாயிலாகவே காட்டிச் சிறப்பிக்கின்றார். தன் கனவைத் தொட்டுவிடத் துடிக்கும் ஏழைப்பெண், சாதித்துக்காட்ட முனையும் வெறி, சவால்களை எதிர்கொள்ளும் விதம், எல்லாம் தொலைந்து நிர்க்கதியான நிலை எல்லாவற்றையும் தாங்கி வெளிப்படுத்துகின்றார் வித்யா பாலன். கவர்ச்சி நடிகையின் படம் என்பதால் இந்திய சினிமா தொடமுடியாத உச்சங்களையும் தொடுகின்றார்.

இப்படியான உணர்வுபூர்வமான கதையை வைத்து கோடம்பாக்கத்து பாபுகணேஷ் போன்ற மொக்கைகள் கைமா பண்ணிக் காசு பார்த்திருப்பார்கள். ஆனால் நேர்த்தியான திரைக்கதை, வசனம், தேர்ந்த நடிகர்கள், புத்திசாலித்தனமான இயக்கம் (Milan Luthria) என்று இந்தப் படம் சிறப்பானதொரு படைப்பாக வந்திருக்கின்றது.
எண்பதுக்கே உரிய மண்ணிறச் சாயம் கொண்ட ஒளிப்பதிவின் சொந்தக்காரர் Bobby Singh.

புகழ் என்ற நட்சத்திரத்தை அடைய நினைப்பவர்கள் அந்த எல்லையைத் தொட்டதும் தடுமாறாமல் பயணிக்க வேண்டிய சதுரங்க ஆட்டத்தில் நின்று நிலைப்பதென்பது எவ்வளவு சவாலானதொரு நிலை என்பதோடு, காலவோட்டத்துக்கேற்பத் தன்னைப் புதுப்பிக்காதவன் ஓரம் கட்டப்பட்டு விடுவான் என்பதை மறைமுகமாகச் சொல்லிவைப்பதில்
The Dirty Picture, a neat film

பிற்குறிப்பு: இப்படம் வயது வந்தோருக்கு மட்டுமே உகந்தது