Pages

Sunday, September 12, 2021

பாட்டுக் குயில் ஸ்வர்ணலதாவும் சில அறிமுக இசையமைப்பாளர்களும்


மகாகவி சுப்ரமணிய பாரதியார் பாட்டுடன் தான் ஸ்வர்ணலதா

தமிழில் நீதிக்குத் தண்டனை வழியாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அறிமுகமானர்.

மகாகவி சுப்ரமணியபாரதியார் மறைந்தது செப்டெம்பர் 12 ஆம் திகதி அதிகாலை, ஸ்வரணலதா மறைந்ததும் அப்படியே.

பாரதியார் இறக்கும் போது அவருக்கு வயது 38 

ஸ்வர்ணலதா இறக்கும் போது அவருக்கு வயது 37

இந்த வாழ்க்கை எவ்வளவு விசித்திரங்களை ஒற்றுமையோடு நிகழ்த்திக் காட்டுகிறது…..

பாட்டுக் குயில் ஸ்வர்ணலதாவைப் பற்றி நினைத்தால் இசைஞானி இளையராஜாவில் இருந்து ரஹ்மான் ஈறாகப் பல அரிய பாடல்கள் மனசை நிறைக்கும். தொண்ணூறுகளின் அறிமுக இசையமைப்பாளர்களின் முதல் படங்களிலும் ஸ்வர்ணலதாவின் குரலை அரங்கேற்றி அழகு பார்த்தார்கள். அவற்றில் சில இதோ

"செம்பருத்தி செம்பருத்தி நேசப் பூவே இந்தச் செவ்வந்திக்கு எப்ப வருது"

https://www.youtube.com/watch?v=hiEaGseh9Hs

இந்தப் பாடல் தொன்ணூறுகளில் வெளிவர இருந்த "பவளக் கொடி" படத்தில் அறிமுக இசையமைப்பாளர் என்.சோமன்ராஜ் இசையில் வரவிருந்தது. இன்றும் இலங்கையின் பண்பலை வானொலிகள் கொண்டாடும் இந்தப் பாடலை ஸ்வர்ணலதாவுடன் மனோ பாடியிருப்பார்.

ஆனந்த், கோபால் ராவ் & ஷலீன் ஷர்மா ஆகிய மூன்று இசையமைப்பாளர்களும் "ஆகோஷ்" என்ற பெயரில் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரித்து அவர் மகன் எபி குஞ்சுமோன் நாயகனாக நடிக்க "கோடீஸ்வரன்" படத்தில் அறிமுகமாக இருந்தார்கள். படம் 20 வருடங்கள் கடந்தும் இன்னும் வராவிட்டாலும் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இங்கேயும் மனோ மற்றும் ஸ்வர்ணலதாவின் "அடி கண்ணே"

https://www.youtube.com/watch?v=mhm1-fl9LjQ கலக்கலான துள்ளிசை ரகம்.

"கோகுலம்" என்ற பெயரைப் போலவே படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள். இயக்குநர் விக்ரமனோடு இசையமைப்பாளர் சிற்பி அவரின் ஆரம்ப காலத்தில் இணைந்த இந்தப் படத்தில் முத்தான மூன்று பாடல்கள். அதில் மனோவுடன் ஜோடி கட்டிய "புது ரோஜா பூத்திருக்கு" https://www.youtube.com/watch?v=3eyhkUt_xJM ஒரு காலத்தில் எனையாண்ட காதல் பாட்டு.

ஆனால் சிற்பி அவர்களுக்கு முதன்முதலாக ஒரு “சிறப்பு” அறிமுகத்தைக் கொடுத்த செண்பகத் தோட்டம் படத்தில் “முத்து முத்துப் பூமாலை” https://www.youtube.com/watch?v=AnPPw0wSbv8

சிறு பாட்டு என்றாலும் மனோவோடு கூட்டுச் சேர்ந்து கலக்கியிருப்பார். இதே பாடல் சோக வடிவில் ஸ்வர்ணலதாவுக்குப் பதில் ஜானகி இணைந்திருப்பார்.

வெற்றி முகம் படத்தில் வசந்த ராஜன் என்ற இசையமைப்பாளர் மூன்று ஜோடிப் பாடல்களை மனோ & ஸ்வர்ணலதாவுக்காகப் பகிர்ந்து கொடுத்திருப்பார்.

தொட்டு விட நான் தொட்டு விடத் தான்

இந்தப் பட்டு உடல் பூப்பூக்கும்

https://youtu.be/BLukaNjROtA

எஸ்பிபி & ஸ்வர்ணலதா கூட்டுப் பாடிய இந்தப் பாடல் கேட்ட கணம் கொண்டு இன்னும் கேட்கக் கேட்கத் தூண்டுகிறது. எஸ்பிபியின் கலகலப்பான வாய் மொழி ஒரு பக்கம், இலேசாக ஜலதோஷம் தொற்றியது போன்ற ஸ்வர்ணக் குரலோடு ஸ்வர்ணலதா என்று அழகிய கூட்டு இது. பாடல் சரணத்துக்குப் பாயும் போது சங்கதிகள் தெறிக்கும் இலாவகம். கறுப்பு ரோஜா படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை இசையமைத்தவர் எம்எஸ்வி ராஜா.

தொண்ணூறுகளின் சூப்பர் குட் படங்களின் தயாரிப்பாளர் சூப்பர் குட் செளத்ரியுடம் கதை சொல்லப் போய் இசையமைப்பாளர் ஆன செளந்தர்யனின் முதல் படம் சேரன் பாண்டியன். படம் பார்க்கும் போது அந்த நேரத்தில் தான் அறிமுகமான "ஏ சம்பா நாத்து" https://www.youtube.com/watch?v=Gal__ab6Njo பாடலைக் கேட்டதுமே கவர்ந்து கொண்டது. ஸ்வர்ணலதா ஜோடிக் குரல்களோடு பாடிய அந்தப் பாட்டுக்கு முன்பே அதே படத்துக்காக ராஜ்குமாருடன் பாடிய "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு" https://www.youtube.com/watch?v=DutG8rDr3Uw பட்டி தொட்டியெல்லாம் கலக்கிய பாட்டு.

"இரவுகளை உறங்க வைக்கவே தாலாட்டு" https://m.youtube.com/watch?feature=share&v=unTwWw1l5Jc இசையமைப்பாளர் காண்டீபன் இசையில் சித்திரமே நீ சொல்லடி படத்துக்காக ஸ்வர்ணலதா பாடிய தனிப்பாட்டு இன்றும் கனேடியத் தமிழ் வானொலி ஒன்றின் இரவு நேரத்து நிகழ்ச்சியை நிறைக்க வைக்கும் பாட்டு.

மேலும் யுவன் ஷங்கர் ராஜாவின் அறிமுகப் படம் அரவிந்தன் இலிருந்து "தங்கச் சூரியனே"

https://www.youtube.com/watch?v=prxftSE4w-k

மனோ, ஸ்வர்ணலதா, குழுவினர்

முன்பு ஸ்வர்ணலதா நினைவு நாளுக்காகப் பகிர்ந்தது. மேலதிக சேர்க்கைகளோடு இந்நாளில் பகிர்கின்றேன்.

கானா பிரபா


1 comments:

மகிழ்நிறை said...

ஸ்வர்ணலதா!!! குயிலே போ போ! இனி நான் தானே என குயிலை விரட்டிய குரலரசியின் நினைவு நாள் பதிவு அருமை!! என்னுள்ளே என்னுள்ளே பாடல் தான் அவரது பாடல்களிலேயே எனக்கு மிக மிகப்பிடித்து பாடல்