Pages

Monday, December 31, 2007

திரையிசையோடு தாகூரின் காதல் கவிதைகள்

வங்கம் தந்த கவி ரவீந்திர நாத் தாகூரின் காதல் கவிதைகளை வானொலிக்கேற்ற விதத்தில் பயன்படுத்தி தமிழ்த் திரையிசைப்பாடல்களோடு இணைத்துச் நான் செய்த நிகழ்ச்சியை இங்கு பகிர்கின்றேன்.

இத்தொகுப்பில் இடம்பெறும் பாடல்கள்:

1. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

2. மாலையில் யாரோ மனதோடு பேச (ஷத்ரியன்)

3. இதயமதைக் கோயில் என்றேன் ( உயிருள்ளவரை உஷா)

4. ராசாவே உன்னை நான் எண்ணித் தான் ( தனிக்காட்டு ராஜா)

5. காவியம் பாடவா தென்றலே ( இதயத்தைத் திருடாதே)

6. பாடவா உன் பாடலை ( நான் பாடும் பாடல்)

7. நீலவான ஓடையில் (வாழ்வே மாயம்)

8. என் கல்யாண வைபோகம் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

9. உறவெனும் புதிய வானில் ( நெஞ்சத்தைக் கிள்ளாதே)


தாகூரின் கவிதைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்ட சி.எஸ்.தேவ்நாத் இற்கும் வெளியிட்ட நர்மதா பதிப்பகத்துக்கும் என் நன்றிகள்.



இத்தொகுப்பைக் கேட்க



தரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும்

Friday, December 21, 2007

றேடியோஸ்பதி வாக்குப் பெட்டியில் 2007 இன் சிறந்த இசையமைப்பாளர்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் றேடியோஸ்பதியில் வந்து போகும் இசைப்பிரியர்களுக்காக ஒரு வாக்கெடுப்புப் பதிவைக் கொடுத்திருந்தேன். உங்கள் தெரிவில் 2007 இன் சிறந்த இசையமைப்பாளர் என்ற அந்த வாக்கெடுப்பில் கலைந்து சிறப்பித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள். இதோ இந்த வாக்கெடுப்பின் முடிவுகளை இந்த வருடம் முடிகின்ற தறுவாயில் அறிவித்து விடுகின்றேன்.

நவம்பர் 12 ஆம் திகதி ஆரம்பித்து கடந்த ஏழு வார வாக்கெடுப்பின் பிரகாரம் 93 வாக்குகளைப் பெற்று இளையராஜா முன்னணியின் நிற்கின்றார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 72 வாக்குகளைப் பெற்று ஏ.ஆர்.ரஹ்மானும், 68 வாக்குகளோடு மூன்றாவது இடத்தில் யுவன் ஷங்கர் ராஜாவும் இருக்கின்றார்கள்.

இந்தப் போட்டி என்பதே இந்த ஆண்டு வெளிவந்த தமிழ்ப்படங்களில் சிறந்த இசையமைப்பை வழங்கிய இசையமைப்பாளர் என்பதே. ஆனால் இசைஞானியின் கொலை வெறி ரசிகர்களின் ஓட்டுக்களோ இளையராஜாவையே அதிக ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்திருக்கின்றார்கள்.

ஆரம்பத்தில் முன்னணியில் இருந்த யுவன் பருத்தி வீரனுக்காகவும் , ரஹ்மான் சிவாஜிக்காகவும் அதிக ஓட்டுக்களைப் பெற்றிருந்தார்கள்.

இளையராஜாவுக்கு மாயக்கண்ணாடி உட்பட பேர் சொல்லும் திரைப்படங்கள் இந்த ஆண்டு தமிழில் அமையவில்லை. ஆனால் சீனி கம் என்ற ஹிந்தித் திரையில் பழைய பல்லவியோடு புது மொந்தையில் கலக்கியிருந்தார்.

ரஹ்மானுக்கு சிவாஜி படம் உச்ச பட்ச வரவேற்பைக் கொடுத்து ஏறக்குறைய எல்லாப் பாடலையும் ரசிக்க வைத்தது. பாதி புண்ணியம் ரஜினிக்குத் தான். ராஜா என்றைக்குமே இசை ராஜா தான், ஆனால் அவர் மனசு வைக்கணுமே.

வித்யாசாகருக்கு மொழி படம் ஒன்றே அவரின் திறமையின் அடையாளம். வழக்கமான தன் பாணியில் இருந்து புது மாதிரிக் கொடுத்திருந்தார்.

யுவன் காட்டில் இந்த ஆண்டு அடை மழை. பருத்தி வீரன், சென்னை 28, பில்லா போன்ற படங்கள் வெற்றி பெற்றதும் இவரின் இசைக்கு மேலதிக அங்கீகாரமாக அமைந்து விட்டது. கற்றது தமிழ் இவருக்கு பின்னணி இசையில் ஒரு மேலதிக வாக்கைக் கொடுத்து விட்டது.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை தமிழ் திரையிசையின் சாபக்கேடாக ரீமிக்ஸ் காப்பிகள் வைரஸ் போலப் பரவி புதிய சிந்தைகளைத் தடுத்து விட்டன. ரீமிக்ஸ் குறித்த தன் விசனத்தை முன்பு விகடனிலும், கடந்த வாரக் குமுதத்திலும் எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனா இப்ப இருக்குற ரசிகர்கள், இளைய தலைமுறையினர் இதைத் தான் விரும்புறாங்கன்னு சொல்றது தப்பு. ‘‘தொட்டால் பூ மலரும்..’’ பாட்டை ரஹ்மான் ரீ_மிக்ஸ் செய்திருந்த சமயம், ஏர்போர்ட்ல மீட் பண்ணினோம். என்னைப் பார்த்துட்டு நான் எதுவும் சொல்வேனோன்னு பயந்தார் ரஹ்மான். ஆனா, நான் பாராட்டினேன். காரணம் ரஹ்மான் செய்தது ரீ_மிக்ஸ் மாதிரி இல்ல. முழு பாடல் வரிகளையும் அப்படியே வெச்சுக்கிட்டு டியூன் போட்டார். பாட்டு கேட்கவும் நல்லா இருந்தது. அதுதான் சரி. அப்படித்தான் பண்ணணும். ஆனா பழைய ட்யூனை வெச்சுக்கிட்டு இடையில் ‘காச் மூச்’னு கத்தறதும், சத்தமான மியூசிக்கும் கேட்கவே பரிதாபமாயிருக்கு. ஏன் இப்படிப் பண்ணணும். செய்தா ‘பழமை மாறாமல்’ செய்யணும். இப்ப கூட ‘பில்லா’ படத்துல ‘மை நேம் இஸ் பில்லா’ பாட்டை எனக்குப் போட்டுக் காண்பிக்கிறதுக்காக வர்றேன்னு சொன்னாங்க. நான் தவிர்த்துட்டேன். என்னோட வாழ்த்து எப்பவும் எல்லார்க்கும் இருக்கும். ஒரு ரசிகனா நான் இதை ரசிக்கவில்லை. இளைய தலைமுறைக்கு விஷம் பிடிக்குதுன்னா நாம விஷம் கொடுக்கலாமா? இது தப்பு. சரியில்ல...

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்காக கம்போஸ் செய்தபோது, ஒரு கிராமத்துப் பாடலை நான் பாடிக் காண்பித்தேன். ‘கத்தாழங் காட்டுக்குள்ள... விறகொடிக்கப் போனபுள்ள’ இதுதான் அந்தப் பாட்டு. அதையே கண்ணதாசன், ‘எங்கேயும் எப்போதும்’னு உடனே பாடலை எழுதிக் கொடுத்திட்டார். இப்படி ஒன்றிலிருந்து ஒன்று வந்தால் தப்பில்லை. எதையும் கெடுத்திடக் கூடாது"


அடுத்த ஆண்டாவது இந்த நிலை நீங்கி இன்னும் பல புது இள ரத்தங்களின் இசைப் பாய்ச்சலோடு இனியதொரு இசைவருடமாக மலரட்டும்.

இசையமைப்பாளர்கள் கவனத்துக்கு: இப்படியெல்லாம் போட்டி வைக்காதீங்க, எங்களை விட்ருங்க என்று இங்கே வந்து மொக்கை போடாதீங்கப்பா)

முழு வாக்கு வங்கி இதோ:

Sunday, December 16, 2007

நீங்கள் கேட்டவை 24


நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நீங்கள் கேட்ட பாடல்களோடு மலரும் நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் நான் சந்திக்கின்றேன். இனி மாதம் ஒரு பதிவாதல் உங்கள் விருப்பப் பாடல்களோடு கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன். இயன்றவரை இணையத்தில் அதிகம் புழங்காத பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் விருப்பப் பாடல்களை நீங்கள் அறியத்தந்தால் அவை முன்னுரிமை கொடுத்து இடம்பெறும் என்று சொல்லிக் கொண்டு இன்றைய பதிவில் இடம்பெறும் பாடல்களைப் பார்ப்போம்.

முதலில் புதுகைத் தென்றல் என்ற தமிழ்மணத்தின் புதுவரவுப் பதிவர் விரும்பிக் கேட்டிருக்கும் "செவ்வந்தி பூக்களில் செயத வீடு" பாடல் மெல்லப் பேசுங்கள் திரைப்படத்திற்காக தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் குரலில் ஒலிக்கின்றது. இசை: கங்கை அமரனின் சகோதரர், யுவனின் அப்பா

வலையுலக இசை ரசிகர் ஜி.ராகவனின் விருப்பமாக வரும் அடுத்த தேர்வு இளையராஜா சகோதரர் கங்கை அமரன் இசையில் மலர்களே மலருங்கள் திரைக்காக "இசைக்கவோ நான் கல்யாண ராகம்" என்ற இனிய பாடல் ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கின்றது.

புது வரவு இலங்கைப் பதிவர் ரிஷான் ஷெரிப் கேட்டிருக்கும் பாடல் கெளரி மனோகரி திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "பார்த்த பார்வையில் என்னுள்ளம் என்ன பள்ளமானது" என்னும் பாடல். இசையை அமைத்தவர் இனியவன் என்னும் அறிமுக இசையமைப்பாளர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த இப்படத்தை வி.சி.டியில் எடுப்பதே கடினம். நடிகர்கள் உட்பட பெரும்பாலான தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு அறிமுகம் இப்படம். இலங்கை எப்.எம் வானொலிகளில் அப்போது அடிக்கடி வந்த பாட்டு இது.


அடுத்து நம்ம பெருமைக்குரிய கொ.ப.செ கோபி விருப்பமாக மலையாள காலாபாணி, தமிழில் சிறைச்சாலை ஆன திரையில் இருந்து ராஜா சார் இசையில் எம்.ஜி.சிறீகுமார், சித்ரா பாடும் "சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி" என்னும் இனிய கீதம்.

உங்களுக்கெல்லாம் போட்டாச்சு. என் விருப்பத்தையும் சொல்லி விட வேண்டாமா?
ஒரு கைதியின் டைரி திரையில் இருந்து விஜய் என்ற பெயரில் பாடிய இப்போதைய உன்னிமேனனும், உமாரமணனும் கூவும் " பொன் மானே கோபம் ஏனோ" பாட்டைக் கேட்டுக் கிறங்கி நீங்களும் பாட்டுக் கேட்க வாருங்கள் ;-)
Powered by eSnips.com

Friday, December 14, 2007

Heart Beats இசை ஆல்பம் - ஒலிப்பேட்டி


ஆராதனா என்னும் இசைக்கல்லூரியைக் கொழும்பில் நடாத்தி வரும் வி.கே.ஜே மதி அவர்களின் முதல் அரங்கேற்றமாக Heart Beat என்ற இசை ஆல்பம் நாளை டிசம்பர் 15 ஆம் திகதி, உருத்திரா மாவத்தையில் உள்ள "கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படுகின்றது. இந்த ஆல்பத்தை அவரே எழுதி இசையமைத்திருக்கின்றார்.

மதி அவர்களையும், அவரின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டு வரும் நோக்கில் அவருடன் ஒரு ஒலிப்பேட்டியைத் தயாரித்து கடந்த புதன் கிழமை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பியிருந்தேன். அதன் பகிர்வை இங்கே தருகின்றேன்.

மதியின் கைவண்ணத்தில் வந்த "யாழ் நகர வீதியில் நாம் சுற்றித் திரிந்த காலங்கள்" என்ற பாடலைக் கேட்டிருந்தேன். அந்தப் பாடலே இவருடைய திறமைக்கு ஒரு சான்று. இப்பேட்டியின் ஆரம்பத்தில் அப்பாடலின் சில துளிகளையும் உங்கள் செவிக்கு விருந்தாக இட்டிருக்கின்றேன். இசைத் துறையில் வி.கே.ஜே.மதியின் புகழ் வியாபியிருக்க வேண்டும் என்று இவ்வேளை வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

Monday, December 10, 2007

நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு நினைவில் - ஒலிச்சித்திரம்


ஊடகவியலாளர் டி.அருள் எழிலன் அவர்கள், சிலவாரங்கள் முன் ஆனந்த விகடன் சஞ்சிகையில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு நினைவாக சிறப்புத் தொகுப்பை அளித்திருந்தார். ஆண்டு முடிவதற்குள் எம்.ஆர்.ராதா குறித்த வானொலிப்படைப்பை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வழங்க வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு அந்த ஆக்கம் பேருதவியாக அமைந்தது. அருள் எழிலன் அனுமதியுடன் அந்தப் பிரதியினை வானொலிக்குப் பொருத்தமான அம்சங்களுடன் இணைத்து "நடிகவேள் எம்.ஆர்.ராதா நினைவில்" என்ற ஒலிச்சித்திரமாக ஆக்கியிருக்கின்றேன். 45 நிமிடம் வரை ஓடும் படைப்பு இது.

இப்படையலில் "ரத்தக்கண்ணீர்" திரையில் வந்த புகழ்பெற்ற வசனங்களுடன், புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை, பொன்னார் மேனியனே, குற்றம் புரிந்தவன், மற்றும் நீயே உனக்கு என்றும் நிகரானவன் போன்ற எம்.ஆர்.ராதா தோன்றி நடித்த பாடல்களும் இடம்பெறுகின்றன.

பிரதியினை அளித்த அருள் எழிலனுக்கு மிக்க நன்றிகள்.

பதிவில் இடம்பெறும் படம் உதவி: மலேசிய ஆஸ்ரோ வானவில் இணையம்



To Download (Right-click, Save Target As/Save Link As)

http://www.radio.kanapraba.com/MRRadha.mp3

Tuesday, November 27, 2007

றேடியோஸ்புதிர் 4 - சொக்கனுக்கு வாய்ச்ச சுந்தரியோ...?


இங்கே வழக்கம் போல் பாட்டுப் புதிர்ப் போட்டிபோடு வந்திருக்கின்றேன். இந்தப் புதிரில் எஸ்.ஜானகி ஸ்வரம் பாடி, ஆரம்ப இசை மட்டும் ஒலிக்கின்றது. பாட்டு என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள்.
பாடலைக் கண்டு பிடிக்க சில உப குறிப்புக்கள். எஸ்.ஜானகியோடு இன்னொரு பாடகரும் பாடியிருக்கின்றார். இசைய வைத்தவர் இளையராஜா. இந்தப் படத்தின் நாயகன் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நடிக்க வந்த காலத்துப் படங்களில் ஒன்று. நல்ல மசாலா இயக்குனரின் திரைப்படமாக இது இருந்தாலும் இந்த நாயகனுக்கு இந்தப்படமோ அல்லது அந்தக் காலகட்டத்தில் வந்த வேறு படங்களோ எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. ஆனால் பல வருஷங்கள் கழித்து ஒரு அறிமுக இயக்குனரின் முதல் படமே இந்த நாயகனுக்கு ஒரு திருப்புமுனையாக வந்து, இன்று முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர்.

தொண்ணூறுகளில் சென்னை வானொலியின் ஞாயிறு தோறும் வரும் நீங்கள் கேட்டவையின் ரசிகராக இருந்தால் இந்தப் பாட்டை இன்னும் சுலபமாகக் கண்டுபிடிக்கலாம். சரி இனிப்பாட்டைக் கண்டு பிடியுங்களேன்.



மேற்கண்ட பாடல் புதிருக்கான சரியான விடை:
படம்: காவல் கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இயக்கம்: எஸ்.பி.முத்துராமன்
அந்த நாயகன்: விக்ரம், ஆனால் பாடலில் வேறு இருவர் தோன்றி நடித்திருக்கின்றார்கள்
போட்டியில் சரியான விடையளித்த மணி, வவ்வால், சொக்கன் உங்களுக்கு பாராட்டுக்கள்.
இதோ முழுமையான பாடல்

Monday, November 26, 2007

80 களில் வந்த அரிய பாடல்கள் - பாகம் 2

கடந்த பதிவின் தொடர்ச்சியாக 80 களில் மலர்ந்த மேலும் சில அரிய பாடல்கள் இந்தப் பதிவிலும் இடம்பிடிக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் இசையமைத்து இந்தப் பாடற் தொகுப்பு மலர்கின்றது.
அந்த வகையில், முதலில் வரும் பாடலை இசையமைத்திருக்கின்றார் டி.ராஜேந்தர். இவர் தன்னுடைய படங்கள் அன்றி வெளியார் படங்கள் சிலவற்றிலும் சிறப்பாக இசையமைத்திருக்கின்றார் என்பதற்கு உதாரணமாக மலரும் இந்த இனிய பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குரல்களில், "பூக்களைப் பறிக்காதீர்கள்" திரையில் இடம்பெறும் "காதல் ஊர்வலம் இங்கே" என்ற பாடலாகும்.

தொடர்ந்து தேவேந்திரன் இசையில் "பொங்கியதே காதல் வெள்ளம்" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாட மண்ணுக்குள் வைரம் திரைக்காக இடம்பெறுகின்றது.

அடுத்து, நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் நாயகனாக நடித்த "பாய்மரக்கப்பல்" திரையில், கே.வி.மகாதேவன் இசையில் வரும் "ஈரத்தாமரைப் பூவே" என்ற இனிய பாடல் எஸ்.பி.சைலஜா பின்னணிக்குரலிசைக்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.

எண்பதுகளில் இளையராஜாவுக்கு மாற்றீடாக விளங்கிய சந்திரபோஸ் இசையமைத்த படமான "விடுதலை" திரையில் இருந்து "நீலக்குயில்கள் ரெண்டு" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.

நிறைவாக மனோஜ் கியான் இரட்டையர்கள் இசையமைப்பில் வரும் "ஒரு இனிய உதயம்" திரைப்பாடலான "ஆகாயம் ஏனடி அழுகின்றது" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுகின்றார்கள்.

பாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் ;-)

Sunday, November 18, 2007

80 களில் வந்த அரிய பாடல்கள் - பாகம் 1


இந்த ஒலித்தொகுப்பில் 80 களில் வெளிவந்த அரியபாடல்கள் சில இடம்பெறுகின்றன. அந்தவகையில்,

"அம்மா பிள்ளை" திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "இனிய தென்றலே இரு கைகள் வீசி வா" என்ற பாடல் முதலில் இடம்பெறுகின்றது. பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து.

வி.குமார் இசையில் "மங்கள நாயகி" திரைப்படத்தில் இருந்து "கண்களால் நான் வரைந்தேன், அன்பெனும் ஓர் கவிதை " என்ற இனிய பாடல் கே.ஜே.ஜேசுதாஸ், பி சுசீலா குரல்களில் ஒலிக்கின்றது.
இந்தப் பாடலைக் கேட்கும் போது "உன்னிடம் மயங்குகிறேன்" பாடல் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாயது.

ராம் லக்ஷ்மன் இசையமைக்க "காதல் ஒரு கவிதை" திரைப்படத்தில் இருந்து "காதல் பித்து பிடித்தது இன்று" என்ற பாடல் நிறைவாக ஒலிக்கின்றது. இத்திரைப்படம் ஹிந்தியில் Maine Pyar Kiya என்று வெளிவந்திருந்தது. ராம் லக்ஷ்மன் என்ற இசையமைப்பாளரின் பெயர் வந்த காரணமும் இவ்வொலித் தொகுப்பில் இடம்பெறுகின்றது.

பாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் ;-)

Monday, November 12, 2007

உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?


இந்த ஆண்டு முதல் றேடியோஸ்பதி மூலம் என் இசைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கும் அதே வேளை ஆண்டு முடிவதற்குள் ஒரு இசைத் தேர்வுப் போட்டியை நடத்த நினைத்தேன்.
2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் இசையமைப்பாளர்களில் இருந்து முதல் மூன்று இசையமைப்பாளர்களை வலைப்பதிவர்கள் மற்றும் வலைப்பதிவு வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் முறையில் இந்தப் போட்டி அமைகின்றது. காரணம் இசை ரசிகர்கள் தான் விருதுகளைத் தேர்தெடுக்கும் உண்மையான நடுவர்கள்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் இசையமைப்பாளருக்காக நீங்கள் பின்னூட்டம் மூலம் பிரச்சாரம் கூட வழங்கலாம். அதாவது, குறித்த அந்த இசையமைப்பாளர் எந்த வகையில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு முதலிடத்தில் இருக்கின்றார் என்று.

இங்கே நான் ஒவ்வொரு இசையமைப்பாளர்களுக்குப் புகழ் கொடுத்த திரையிசைப் பாடலில் ஒன்றையும் தரவிருக்கின்றேன். அதற்குக் காரணம் இப்போதுள்ள ஏராளமான இசையமைப்பாளர்களில் குறித்த பாடலை இசையமைத்தவர் யார் என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம். இதோ இந்தப் போட்டியில் வரும் இசையமைப்பாளர்களின் பாடல்களைக் கேளுங்கள், கேட்டுக் கொண்டே உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.

யுவன் சங்கர் ராஜா

பருத்தி வீரன் படத்தில் கிராமிய இசையாகட்டும், சத்தம் போடாதே, சென்னை 28 போன்ற படங்களில் நகரத்தின் நவீனத்தைக் காட்டும் இசையாகட்டும், கற்றது தமிழ் போன்ற உருக்கமான கதைக்களமாகட்டும் யுவனுக்கு இந்த ஆண்டு நிறைய வாய்ப்பைக் கொடுத்து உயர வைத்தது.


வித்யாசாகர்

இடைக்கிடை தமிழில் வந்து தலை காட்டுவார், பின்னர் தெலுங்கோ மலையாளத்திலோ இசையமைத்துக் கொண்டிருப்பார். பின்னர் அர்ஜீனோ, தரணியோ இவரை தமிழுக்கு இழுத்து வருவார்கள். இம்முறை பிரகாஷ்ராஜ் புண்ணியத்தில் மொழி திரைப்படம் மூலம் "காற்றிற்கும் மொழி" கொடுத்தவர்.


ஏ.ஆர்.ரஹ்மான்

வித்யாசாகருக்கு பிற மாநிலம் போல ரஹ்மானுக்கு பிற நாடுகள். அடிக்கடி வெளிநாடுகளுக்குத் தாவி மேடை நாடகங்களுக்கோ சீனப் படங்களுக்கோ இசையமைத்துக் கொண்டிருந்த இவரை, இயக்குனர் ஷங்கர் விடமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்று "சிவாஜி" படத்துக்கு மெட்டுப் போட வைத்தார்.
விஜய்யின் அழகிய தமிழ்மகனைப் பற்றிப் இப்போதைக்குப் பேசுவதாக இல்லை. ஏனென்றால் கொஞ்சம் காலம் கழித்து தான் ரஹ்மானின் டியூன் சூடு பிடிக்கும்.


ஜி.வி.பிரகாஷ்குமார்

சிக்கு புக்கு ரயிலே பாடிய பையனா இவன்? என்று கேட்கும் அளவுக்கு வெயில் படமூலம் தன் தடம் பதித்தவர். இந்த ஆண்டு கிரீடம் படத்தில் சாதனா சர்க்கம் மூலம் அக்கம் பக்கம் பாடவைத்து ரசிகர்களையும் முணுமுணுக்க வைத்தவர்.


மணிசர்மா

சென்னைக்கார இசையமைப்பாளர், ஆந்திராக்காரம் தான் இவருக்கு பிடிக்கும் போல. ஆனாலும் போக்கிரி மூலம் ஒரு சில தெலுங்கு டியூனை குழைத்து ஒப்பேத்தி விட்டார். இருந்தாலும் போக்கிரி கேட்கப் பிடிக்கும்.


விஜய் ஆண்டனி

நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் பாட்டில் அடையாளப்படுத்தப்பட்ட இவர், நான் அவனில்லை மூலம்
ஏன் எனக்கு மயக்கம் என்ற பாட்டில் கிறங்க வைத்தவர் இந்த ரீமிக்ஸ் புலி.


தினா

"மன்மத ராசா கன்னி மனச கொல்லாதே" மறக்க முடியுமா? தொலைக்காட்சி நாடகங்களின் இசைராஜா தீனா இப்போதெல்லாம் தான் இசையமைக்கும் நாடகங்களுக்கு போடும் பாட்டுக்கு தன் மகன் பெயரை போட்டு விட்டு திரையுலகத்தில் நிரந்தர இடம் பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் உப்பு கல்லு பாட்டு இந்த ஆண்டு இவர் பெயரைச் சொல்ல வைத்திருக்கிறது.


இளையராஜா

இப்போதெல்லாம் ராஜா சார் பாட்டுக் கேட்க ஹிந்தியோ, மலையாளமோ தான் போகவேண்டியிருக்கு. ஆனாலும் சேரனின் மாயக் கண்ணாடி மூலம் மாயம் காட்டிப் போனார். ராஜா ஆடிய ஆட்டம் என்ன, இந்த ஆட்டத்துக்கெல்லாம் அவரை இழுக்கலாமா? இரு தசாப்தங்களாக அவர் தானே முதலில் இருந்தார் என்ற ராஜா வெறியர்கள் சலித்துக் கொள்ளலாம். இருந்தாலும் இந்த ஆண்டு வந்த இசைப் பட்டியல் அடிப்படையில் இளையராஜாவையும் சேர்த்துக் கொள்கின்றேன்.


பரத்வாஜ்

பழைய நினைவுகளை வைத்துப் படம் பண்ண வேண்டுமென்றால் கூப்பிடுங்கள் பரத்வாஜை என்று சொல்லலாம் போலிருக்கிறது. பள்ளிக்கூடம் பாட்டுக்கள் படத்தோடு பேசப்படுகின்றன.


டி.இமான்

நடிகர் அர்ஜீனின் தற்போதய ஆஸ்தான இசையமைப்பாளர், சுந்தர் சி இன் படங்களுக்கும் தொடர்ந்து கைவண்ணம் காட்டுகிறார். வீராப்பு பாடல்கள் மனசில் நிற்கின்றன.


சபேஷ் முரளி

சபேஷுக்கு குத்துப் பாட்டு பாடத் தெரியும், ஆனால் மெலடியாக இசையமைக்க வரும் என்பதை தன் சகோதரர் முரளியோடு இணைந்து நிரூபித்து வருகின்றார். இந்த ஆண்டு அதற்கு உதாரணமாக வந்தது "அம்முவாகிய நான்".


ஸ்ரீகாந்த் தேவா

"நாளைய பொழுதும் உன்னோடு" திரைப்படத்தில் பேசப் பேராசை என்ற பாடலை இவர் இசையமைப்பில் கேட்டிருந்தீர்களானால் இந்தப் போட்டியில் ஸ்ரீகாந்த் தேவாவை விலக்கி வைக்கமாட்டீர்கள். அருமையான மெலடி கொடுத்திருக்கின்றார்.


ஹாரிஸ் ஜெயராஜ்

ரஹ்மானின் ஜெராக்ஸ் என்று வந்த வேகத்திலேயே இவர் மீது புகார் கொடுத்தார்கள். ஆனாலும் என்ன இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிற்கின்றார். ஒரே மாதிரிப் பாடல்கள் கொடுக்கின்றார் என்பது இவர் மீது கொடுக்கப்படும் சமீபத்திய புகார். "உன்னாலே உன்னாலே", "பச்சைக்கிளி முத்துச்சரம்" மூலம் பரவசப்படுத்தியவர்.


சரி, இசையமைப்பாளர்களையும், அவர் தம் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள், இனி உங்கள் வாக்கை வழங்குங்கள். முடிவுகள் இரு வாரத்தின் பின் வெளியாகும்.