Pages

Friday, September 8, 2017

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் 
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் 💃🏃🥁

இசைஞானி இளையராஜாவை வெறுமனே இசையமைப்பாளர் என்ற எல்லைக்குள் அடக்கி விட முடியாது என்பதற்கு எவ்வளவோ விதமான உதாரணங்களை அவரின் பாடல்களின் வழியாகவும், பின்னணி இசையில் கொடுத்திருக்கும் ஆழமான உணர்வலைகளின் வழியாகவும் உய்த்துணரலாம். இவர் கொடுத்த எத்தனையோ பாடல்களை அவை திரை வடிவம் பெறுவதற்கு முன்னமேயே மனக்கண்ணில் இன்னது போலக் காட்சி வடிவம் பெறுக் கூடும் என்றதொரு பிரதியை எடுத்து விடுவோம். பின்னர் காட்சியில் காணாத திருப்தியை விலக்கி விட்டு நாம் கற்பனையில் ஆக்கிய அந்த வடிவத்தோடே பாடலை அனுபவிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் வாய்த்ததுண்டு.

ஒரு பாடலில் அவர் கொடுத்திருக்கும் நுட்பம் உணர்ந்த தேர்ந்த ஒளிப்பதிவாளரோ, நடன இயக்குநரோ, படத்தின் இயக்குநரோ ஒளிச் சேர்க்கையிலும், காட்சிப் பின் புலத்திலும், நடன அசைவிலுமோ நியாயம் கற்பித்துக் குறித்த பாடலின் தரத்தைப் பேணியிருக்கிறார்கள்.

பாடகராக எப்படி ஒரு T.M.செளந்தரராஜன் குரல் சிவாஜி கணேசனாகவும் எம்.ஜி.ஆராகவும் இனம் பிரித்துக் காட்டியதோ அதே பாங்கில் ரஜினிகாந்துக்கான குரலில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இயங்கியதை இசையமைப்பாளர் என்ற பேதமின்றிக் கண்டுணரலாம். உதாரணமாக சந்திரபோஸ் இசையில் "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா" என்பது ஒரு சோறு.

இனி "ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்" பாடலுக்கு வருவோம். இந்தப் பாடல் உங்களுக்கு எப்படியோ எனக்கு வாரா வாரம் ஏதோவொரு உலக வானொலி வழியாகவேனும் காதில் விழுந்து விடுகிறது. அதுவும் இந்தப் பாட்டைப் பற்றி நினைத்தாலே
"டுக்கு டுக்குடு டும் டுக்கு டுக்குடு டும்...." என்று பாட்டைத் துள்ள வைத்திருக்கும் தாள லயம் தான் காதுக்குள் ஒலிக்குமாற் போலவொரு பிரமை.
இந்தத் தாள லயம் அல்லது அடி ரஜினிகாந்துக்கான பாடலை உருவாக்க முனையும் போதே இது இவருக்கான துள்ளல் இசை தான் என்று இசைஞானியார் தீர்மானித்திருப்பது போலத் தென்படும். இந்த இடத்திலேயே பாடலின் நிறம் தீர்மானிக்கப்பட்டதும் மீதியெல்லாம் தானாக மனதில் இறங்குமளவுக்கு அற்புதமான பயணமாக இந்தப் பாடல் அனுபவம் இருக்கும்.

"ராஜ்ஜ்ஜாதி ராஜா உன் தந்திரங்கள்" எனப் போதை ஊசி போடும் ஸ்வர்ணலதாவுக்கு

"மாய ஜாலமென்ன" என்று ஸ்டைலாக வார்த்தையை அள்ளி விடும் அக்கணமே எஸ்.பி.பி ரஜினியாகி விடுகிறார்.

பாட்டு முடியும் போது எஸ்.பி.பியின் ரஜினியிசம்
"ரூபாப்ப ராபாப்ப ராப பப்பா" முத்தாப்பு.

ஸ்வர்ணலதாவின் குரல் குஷ்புவுக்கானதோ என்றொரு சினிப் பட்டிமன்றம் நிகழ்ந்த தொண்ணூறுகளை நினைப்பூட்டும் வகையில் இங்கேயும் பாடல் வழியே அது முன் மொழியப்படுகிறது. 

இந்த இரண்டு பாடகர்களும் தத்தமது பாணியில் வேற்றுமையில் ஒற்றுமை காட்டும் சுவையான கலவை.

மேற்கத்தேயத்தோடு களம் இறங்கிய பாட்டு இடையிசையில் "டண்டக்கு டண்டக்கு டக்கு" என ஒரு நாட்டுப் புறக் குத்து போட்டுப் பார்க்கும் போது அப்பப்பா அதன் சுவை தான் என்னே 😀

ஆகவே தான் இசைஞானி இளையராஜாவை ஒரு முழுமையான இசை இயக்குநராக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் எந்த இடத்தில் நடனமும், நளினமும், ஓசை கலவாத குரலும், குரல்களின் அணி வகுப்பும் அதற்கேற்ற நடன மாந்தரும் வர வேண்டும் என்று தீர்மானித்து எழுதி இசைத்தும் விடுகிறார். அப்படியாகக் காட்சியிலும் தப்பிப் பிழைத்த அழகான படைப்பு இந்த
டுக்கு டுக்குடு டும் டுக்கு டுக்குடு டும்....

0 comments: