Pages

Tuesday, January 26, 2021

பத்மவிபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்பிபி பாடகன் சங்கதி 34 ❤️ 🥁 இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற அவதாரம் 🎸
இன்றைய நாள் இரண்டு இனிப்பான செய்திகளோடு காலை விடிந்தது. ஒன்று எம் பாட்டுக்கு ஒரு தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்தது. இன்னொன்று சின்னக்குயில் சித்ரா அவர்களுக்கு பத்மபூஷண் விருது கிட்டியது. 2011 ஆம் ஆண்டிலே தனது பத்ம பூஷண் விருதை எஸ்பிபி அவர்கள் பெற்ற போதும் அதே தினம் அவருக்கான பதிவொன்றை எழுதி வாழ்த்தினேன். நேற்று உறங்கப் போகு முன்பு இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற அவரது இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவாறே சென்ற எனக்கு இப்போது இந்த இனிப்பான செய்தியை நண்பர் ராஜா Kraja Raja தனிமடலில் சொல்லி இனிய காலை விடியல் ஆக்கினார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் வாழும் போதே பத்மவிபூஷண் விருது அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் தன் பாடல்களால் எல்லா இனத்து மக்களையும் ஐக்கியப்படுத்தும் அவருக்கு “பாரத ரத்னா” கொடுத்தாலும் அது மிகையில்லை. எனவே அவரைப் போற்றுவோம் இன்னும் இன்னும் பல்லாண்டுகள். இசையமைப்பாளரின் பாடலுக்கு உயிர்கொடுப்பது மட்டுமன்றி, குறித்த பாத்திரமாகவே மாறி அந்தந்த நடிகர்களின் குணாம்சத்துக்கேற்பத் தன்னை ஆவாகித்துக் கொண்டு பாடும் தொழில் திறன் மிக்க பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு வாழ்ந்து காட்டிய உதாரணம் எனலாம். எண்பதுகளில் இசைஞானி இளையராஜா முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்ந்த போது, மற்றைய இசையமைப்பாளர்களின் பாடல்கள் பிரபலம் ஆகுவதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பங்கு பெரிது என்பதை, இசையமைப்பாளர் யாரென்றே தெரியாமல் வாய் முழுக்க முணுக்கும் பாடல்கள் ஒரு தொகை பெறும். அவ்வளவுக்கு முன்னணி, பின்னணி பாராது எல்லா இசையமைப்பாளர்களது பாடல்களையும் நேசித்து அந்தப் பாடல்களை உயிரோட்டம் நிறைந்ததாய் ஆக்கிவிடுவார். சங்கர் கணேஷ், சந்திரபோஸ் என்று நீண்டு செல்லும் இசையமைப்பாளர்களின் பாடல்களை இதற்கு உதாரணமாக அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னும் ஏன், என் போன்ற ரசிகர்களுக்கு பல இசையமைப்பாளர்களைத் தேடி அறிய வைத்ததே பாலசுப்ரமணியம் அவர்கள் கொடுத்த பாட்டுத்திறனே காரணம். தெலுங்கு மொழியைத் தன் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் எல்லா மொழிகளையும் மாற்றாந்தாயாக நினையாது அந்தந்த மொழிக்கு விசுவாசம் செய்தவர். எத்தனையோ பாடல்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நளினமான சிரிப்பும், ஏற்ற இறக்கமும் படம் வருவதற்கு முன்பே காட்சி இப்படித்தான் இருக்கும் என்று ஊகிக்கும் அளவுக்குக் கொடுத்திருப்பார், ஆனால் அந்தப் பாடல்களின் திறன் உணராத இயக்குநர்கள் கையில் சிக்குண்டு க்ளோசப் காட்சியில் அந்த நாயகன் காட்டவேண்டிய நுணுக்கமான முக உணர்வுக்குப் பதில் லாங் ஷாட் இல் வைத்துப் பழிவாங்கிவிடுவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களுக்கும், தனிப்பாடல் தொகுப்புக்களுக்கும் இசையமைத்திருக்கும் இவரின் படங்களின் வரிசையில் முதலில் தமிழில் இயங்கிய பட்டியலைப் பார்ப்போம். “துடிக்கும் கரங்கள்” திரைப்படத்தின் வழியாகத் தமிழில் இசையமைப்பாளர் என்ற அறிமுகத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு வழங்கியவர் புதுமை இயக்குநர் ஶ்ரீதர் அவர்கள். இதில் ஒரு புதுமை இருக்கிறது. அந்தக் காலத்தில் பாடகர் ஏ.எம்.ராஜா அவர்கள் தெலுங்கில் இசையமைப்பாளராக முன்பே அறிமுகமாகி விட்டாலும் தமிழில் அவரை இசையமைப்பாளராகக் கொண்டு வந்தது “கல்யாணப் பரிசு” வழியாக ஶ்ரீதர் அவர்களே. 23 ஆண்டுகள் கழித்து அதே மாதிரியானதொரு பாங்கில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இசைமைப்பாளர் என்ற அங்கீகாரத்தை அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் கொடுப்பது என்பதே வாழும் போது கொடுத்த ஆகச் சிறந்த பாராட்டு. எப்படி கல்யாணப் பரிசு படம் வழியாக தமிழ்நாடு இசை ரசிகர் சங்கத்தால் 1959 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் என்ற அடையாளத்தை ஏ.எம்.ராஜாவுக்குக் கொடுத்ததோ அது போலவே பின்னாளில் 1991 ஆம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளர் விருதை “சிகரம்” வழியாக தமிழ்நாடு இசை ரசிகர் சங்கம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு வழங்கிக் கெளரவித்தது இன்னொரு சேதி. துடிக்கும் கரங்கள் படத்தின் ஒவ்வொரு பாடல்களின் தனித்துவமே எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற மாபெரும் கலைஞனின் உள்ளிருக்கும் இசைத்திறமையை வெளிக்கொணரும் சான்றுகள். கண்ணை மூடிக்கொண்டே அந்தப் படத்தின் இசையமைப்பாளர் யாராகினும், இயக்குநர் ஶ்ரீதர் படம் என்றால் சொக்கவைக்கும் இசையைக் கொடுத்துக் கிறங்கடித்துவிடுவார். அதற்கு இயக்குநர் ஶ்ரீதர் கலைஞரிடம் எப்படியாவது தனக்குத் தேவையானதை வாங்கிவிடவேண்டும் என்ற முனைப்பும் முக்கிய காரணம். ஏ.எம்.ராஜா காலத்தில் இருந்து பல ஆளுமைகளைக் கண்ட ஶ்ரீதர், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தைத் தனது துடிக்கும் கரங்கள் படத்துக்கான இசையமைப்பாளராக அமைத்துக் கொண்டார். அந்தப் படத்தில் வந்த "சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்" பாடல் அன்றைய றேடியோ சிலோன் என்ற இலங்கை வானொலியின் பிரபல பாடலாகச் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டது.
துடிக்கும் கரங்கள் படப் பாடல்களைக் கேட்க
https://www.youtube.com/watch?v=e8nzXcxxZ9s "சங்கராபரணம்" கொடுத்த மாபெரும் வெற்றி அலையால் அந்தக்காலத்தில் தொகையாய்க் குவிந்த சங்கீத, நாட்டியப்படங்களில் மக்கள் மனதில் இடம்பிடித்துக் கொண்டது என்னவோ "மயூரி" போன்ற ஒரு சில படங்கள் மாத்திரமே. கால் ஊனமுற்ற பெண் நடிகை சுதா சந்திரனுக்குப் பெரும்புகழையும் ஈட்டிக் கொடுத்த அந்தப் படம் தேசிய அளவில் அவருக்குச் சிறந்த நடிகையாக்கி அழகு பார்த்தது. இயக்கத்தை, கமல்ஹாசனின் நிழல் இயக்குநர் என்று சொல்லுமளவுக்கு அவரால் அறியப்பட்ட சிங்கிதம் சீனிவாசராவ் கவனித்துக் கொண்டார். இந்தப் படத்தின் இசையை வழங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர் விருதுகளை மாநில அளவில் பெற்றுக்க் கொள்ள உறுதுணை புரிந்தது "மயூரி". இந்த மொழி மாற்றுப்படத்தில் இருந்து "மெளனம் நாணம் மலரும் புது யெளவனம்" பாடல்
https://www.youtube.com/watch?v=7fyPxhquT1A எஸ்.பி.பி ஒரு இசையமைப்பாளர் என்று பரவலாக உலகை அறிய வைத்த பெருமையை "சிகரம்" தட்டிக்கொண்டது. இதே கவிதாலயா பாசறையில் அவரை ஒரு நடிகராக முன்பு “மனதில் உறுதி வேண்டும்” தமிழுக்கு அறிமுகப்படுத்திக் கெளரவித்தது. கே.பாலசந்தரின் உதவியாளர் அனந்து இயக்கிய முதல்படம். படத்தின் பாடல்கள் எல்லாமே பரபரப்பான வெற்றிவாகையைக் கொண்டாடின. கூடவே விருதுகளும் வந்து சேர்ந்தன சிறந்த இசையமைப்பாளர் என்று. இந்தப்படத்தின் எந்தப் பாடலை எடுப்பது எதை விடுவது என்று திணறும் அளவுக்கு "வண்ணம் கொண்ட வெண்ணிலவே", "அகரம் இப்போ சிகரம் ஆச்சு", "உன்னைக்கண்ட பின்புதான்" என்று வரிசைகட்டி நிற்கும். ஆனால் எல்லாவற்றிலும் இருந்து தனித்து அமைதியாக, நிதானமாக ஈர்த்தது என்னமோ "இதோ இதோ என் பல்லவி பாடல்" முந்திய பாடல்களை எல்லாம் கேட்டுத் தித்தித்த வேளை மெதுவாக வந்து மனசின் ஓரத்தில் இடம்பிடித்துக் கொண்டது. இசையமைப்பாளர் தாயன்பன் ஒருமுறை மேடையில் சொன்னது போல இந்தப்பாடலுக்கு அவ்வளவு ஸ்பெஷலைக் கொடுக்கலாம் என்பேன்.
சிகரம் பாடல்களைக் கேட்க
https://www.youtube.com/watch?v=mSRzFkXFa0g "சிகரம்" பாடல்கள் கொடுத்த வெற்றியால் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தமிழில் தொடர்ச்சியாக அப்போது இசையமைக்கும் வாய்ப்பு, அதில் முத்திரை இயக்குநர் மகேந்திரனின் "ஊர்ப்பஞ்சாயத்து" படமும் ஒன்று. கூடவே தயாரிப்புலகின் ஜாம்பவான் கலைப்புலி தாணு தயாரிக்க, இயக்குநர் மகேந்திரன் கதை வசனம் எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்க, பார்த்திபன் நடித்த "தையல்காரனும்" பரபரப்பாகப் பேசப்பட்டது ஆனால் ஏனோ மனசில் ஒட்டுமளவுக்கு தையல்காரன் உழைக்கவில்லை. பாடல்களை எடுத்துக் கொண்டால் அந்தக்கால விவித்பாரதி விளம்பரங்களில் கொஞ்சூண்டு துளி பாடலைக் கேட்டு இன்னும் கேட்கமுடியாதா என்று ஆசை கொள்ள வைத்த பாட்டு "மை மை" என்ற பாட்டு, பின்னர் பல மாதங்களுக்குப் பின்னர் தலைநகர் கொழும்பில் இருந்த ஒரு ரெக்கார்டிங் பார் இல் ஒலிப்பதிவு செய்து கேட்கும் அளவுக்கு உயிர் வைத்து நேசித்த பாட்டு "மை மை மை" "தையல்காரன்" படத்தில் கவிஞர் வாலி அவர்கள் எழுதிய "உலகம் ஒரு வாடகை வீடு" பாடலைப் பற்றி இந்தத் தொடரில் முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.
“தையல்காரன்” பாடல்களைக் கேட்க

பின்னர் மகேந்திரன் இயக்கி, பாண்டியராஜன் நடித்த "ஊர்ப் பஞ்சாயத்து" படத்துக்கும் இசையமைப்பாளராக எஸ்.பி.பாலசுப்ரமணியமே இயங்கினார்.

"உலகம் பிறந்தது எனக்காக" என்றதொரு மசாலாப்படம், ஏவிஎம் நிறுவனம் இளையராஜாவோடு ஊடல் கொண்டிருந்த காலகட்டத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடிக்க வெளிவந்திருந்தது. அந்தப் படத்தின் முக்கிய இசையமைப்பாளராக, பிரபல இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் அமைய, இணை இசையமைப்பாளர் பொறுப்பை எஸ்.பி.பாலு எடுத்துக் கொண்டார். “வானுக்கு நிலத்தோடு நிலத்துக்கு நீறோடு நீருக்கு அலையோடு அலைகளோ மனதோடு நட்பு நட்பு”
எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற இசை மேதையின் வாழ்வில் மறக்க முடியாத இரு ஆளுமைகள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் & இசைஞானி இளையராஜா. இவர்களைத் தன்னிசையில் பாட வைத்த வகையிலும் ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொண்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். அந்த வாய்ப்பு தன் தனையன் எஸ்.பி.பி.சரணுக்கும் ஒரு நல்வழி காட்டவெண்ணி எடுத்த "உன்னைச் சரணடைந்தேன்" படத்தின் இசையமைப்பாளராக அமர்ந்த வகையில் கிட்டியது. இதே போல கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களைத் தான் இசையமைத்த முத்தின்ன மாவா (தமிழில் நான் புடிச்ச மாப்பிள்ளை) படத்தில் இரண்டு பாடல்களைப் பாட வைத்ததோடு அதில் ஒன்றில் ராஜ்குமாருடனேயே (தீபாவளி) பாடியதையும் முன்னர் இதே தொடரில் சிலாகித்திருந்தேன்.
https://www.youtube.com/watch?v=Qdib4LG_Wv0 எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த படங்கள் வரிசையில் தெலுங்கில்
Toorpu Velle Railu (கல்லுக்குள் ஈரம் படத்தின் தெலுங்கு வடிவம்), நாகேஸ்வரராவ் நடிப்பில் 1983 இல் வெளியான Oorantha Sankranthi, இளையராஜாவோடு தொடர்ந்து இணைந்து பணியாற்றிய வம்சி அவர்கள் ஒரு மாறுதலுக்காக எஸ்பிபியை இசையமைப்பாளராக்கிய Lawyer Suhasini (சுஹாசினி, பானுச்சந்தர்), தமிழில் கமல்ஹாசன் நடித்த பேர் சொல்லும் பிள்ளை படத்தின் தெலுங்குப் பதிப்பாக பாலகிருஷ்ணா நடித்த ராமு (1988) தமிழை விடத் தெலுங்கில் பெரு வெற்றி கண்டது, சின்னத்தம்பி பெரிய தம்பி படத்தின் தெலுங்குப் பதிப்பாக ராஜேந்திர பிரசாத் & சந்திரமோகன் நடித்த Chinnodu Peddodu மாபெரும் வெற்றிப் படமாகவும் அமைந்தது. மேலுமொரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது ராஜேந்திர பிரசாத் நடித்த விவாக போஜனம்பு (Vivaha Bhojanambu ) (1988) என்ற திரைப்படம். நாகார்ஜூனா & விஜயசாந்தி நடித்த Jaitra Yatra (1991) படத்துக்கும் இசைத்து தந்தை நாகேஸ்வரராவ், தனையன் நாகார்ஜூனா என்று இருவருக்கும் இசைத்த பெருமை அவருக்குக் கிட்டியது.
அமெரிக்க இந்தியக் கூட்டுத் தயாரிப்பான Padamati Sandhya Ragam, நந்தி விருதுகளை அள்ளிய Kallu ஆகிய படங்களுக்கும் இசையமைத்தார்.

  மேலும் கன்னடத்தில் சிங்கீதம் சினிவாசராவ் கதையில் குமார் பங்காரப்பா, அமலா நடித்த Belliyappa Bangarappa, சின்னத்தம்பி பெரிய தம்பி படத்தின் கன்னடப்பதிப்பான Ramanna Shamanna (அம்பரிஷ் & ரவிச்சந்திரன்) , விஷ்ணுவர்த்தனின் செளபாக்ய லஷ்மி என்று அங்கும் இசையமைப்பாளராக அடையாளப்பட்டார்.

அத்தோடு மயுரி படம் தெலுங்கில் இருந்து தமிழ், மலையாளம் என்று மொழி மாற்றம் செய்யப்பட்ட போதும் ஹிந்தியில் அது Naache Mayuri என்று மீள எடுக்கப்பட்ட போதும் எஸ்பிபி பின்னணி இசைத்தார்.

இவ்விதம் மொத்தம் பிராந்திய மொழிகளில் 45 படங்களுக்கு இசையமைத்த வகையில் பாட்டுத் தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இசையுலகின் சிகரமாக விளங்கி நிற்கின்றார். பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை!.....
https://www.youtube.com/watch?v=pBlY-QVAH_0 கானா பிரபா பி.கு : இப்பதிவை முன் அனுமதியுடனேயே மீள் பிரசுரம் செய்ய வேண்டும்