பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பயணத்தில் வழக்கம் போல என் கால்கள் இசைக் கடைதேடி இழுக்க, ஸ்பென்ஸர் பிளாஸாவில் இருக்கும் Music World போகிறேன்.
அங்கு குவிந்து கிடந்த எண்ணற்ற இசைப் புதையல்களில் இருந்து கைகள் ஒவ்வொன்றாய் ஆய்ந்து அப்படியே அடுக்கிக் கொண்டு போகச் சட்டென்று என் கவனம் திரைப்படமல்லாத தனிப்பாடல்தொகுப்பில் விழுகிறது. அங்கே “அறிந்தேன்” என்றொரு இசைப்பேழை கிடக்க அதில் என்ன ஒரேஎஸ்பிபி மட்டும் என்ற ஆர்வக் கோளாறால் அதையும் வாங்குவதற்காக எடுத்துக் கொள்கிறேன். சிட்னிவந்து தான் கேட்கும் வாய்ப்புக் கிட்டுகிறது.
"அறிந்தேன்
நினைத்தேன்
திருப்பிக் கொடு
பிரிந்தேன்
அழைதேன்
நினைதேன்
காதலில்
மறந்தேன்"
அந்த இசைப் பேழை முழுக்க எஸ்பிபி மட்டும் தான் பாடுகிறார். இரண்டு பக்கமும் அவர்தான்.
அலுக்கவே இல்லை, அந்தப் பாடல்கள் கோவையாகக் காதலின் பரிமாணத்தை எஸ்பிபியின் குரல் தழுவிக்கொண்டாடுகிறது.
திரையிசைப் பாடல்களை விடுங்கள் இதுமாதிரி எத்தனை எத்தனை திரைசாரத் தனிப் பாடல்கள், பக்திஇலக்கியங்களின் இசை வடிவங்களைத் தன் குரலால் நிறமூட்டி விட்டுப் போயிருக்கிறார் அவர்.
இளையராஜாவின் பாடல்கள் என்றால் அவர் இசையமைத்த நாலாயிரம் கடக்கும் பாடல்களில் சிலநூறைத்தான் பரவலாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அது போலவே எஸ்பிபி பாடியதில் பிரபல இசையமைப்பாளர் தவிர்ந்த பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடிக் கேட்கும் போது கிடைக்கும் அனுபவ வெளிப்பாட்டையே இந்தத் தொடர் கட்டுரையின் மூல இழையாக எடுத்துக்கொண்டிருக்கிறேன்.
அது என்னவெனில் புத்தம் புது இசையமைப்பாளர்களின் அடையாளத்தை நிறுவ எஸ்பிபி எவ்வளவு துணை நின்றிருக்கிறார் என்பதைக் காட்டி நிற்கும்.
இந்த இடத்தில் எஸ்பிபி பழமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலமாகவே விளங்குகிறார் என்றே நோக்கவேண்டும். இசைத்துறையில் ஐம்பது ஆண்டுகளைத் தொட்டவர் மூன்று தலைமுறைகளைக் கண்டவர். இம்மூன்றிலும் தன் ரசிகர் குழாத்தை வளைத்தும் போடும் குரல் வித்தகர்.
அதனால் தான் ரஹ்மான் வழியாக ஒரு புத்திசை இயக்கம் எழுந்த போது “காதல் ரோஜாவே” இல் ஆரம்பித்து இன்று வரை தவிர்க்க முடியாத குரலாக இருந்திருக்கிறார். அது சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்து, வினீத், அப்பாஸ் என்றெல்லாம் ரஹ்மானோடு பயணப்பட்டு நீண்டிருக்கிறது, அதையும் கடந்து போயிருக்கிறது.
அது கொண்டு போய் எஸ்பிபியின் தமிழுக்கான இறுதித் தேசிய விருதான “தங்கத் தாமரை மலரேயில்” கொண்டு நிறுத்தியிருக்கின்றது.
அடுத்த தலைமுறையின் இளம் காதலர் படங்களிலும் “காதலெனும் தேர்வெழுதிக் காத்திருந்த மாணவன் நான்” (காதலர் தினம்) என்றும், “சொல்லாயோ சோலைக்கிளி (அல்லி அர்ஜீனா), எந்தன் வாழ்வின் காதல் நிலவே (காதல் வைரஸ்) எஸ்பிபி தொடர்ந்திருக்கிறார். இவை சில சொட்டு உதாரணங்கள் தாம்.
புதுப் புதுக் குரல்களாகத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் ரஹ்மானாலேயே கடக்க முடியாதவர்.
போன வருடம் கூட
“எஸ்பிபி சாரிடம் நேரம் கேட்டிருக்கிறேன்
அவர் தான் இன்னமும் கொடுக்கிறார் இல்லை”
என்று எஸ்பிபி முன்னாலேயே கலகலத்திருக்கிறார் ரஹ்மான்.
“வாய்பாட்டு பாடும் பெண்ணே
மெளனங்கள் கூடாது
வாய் பூட்டு சட்டமெல்லாம்
பெண்ணுக்கு ஆகாது”
“என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்” வந்த போது இளையராஜாவின் தீவிர ரசிகனாக என்னைப் போன்றவர்களை அசைத்து போட்டு ரஹ்மான் பக்கமும் இன்னமும் நெருக்கமாக காதுகொடுக்கக் கேட்க வைத்தது அந்த சிரிப்பான் எஸ்பிபியின் நளினக் குரல். அந்த வகையில் அவர் ஒரு இணைப்புப் பாலமும் கூடத்தான்.
ரஹ்மானுக்கு முந்திய சகாப்தம் இசைஞானி இளையராஜா காலத்திலும் கூட இசையாலும், எண்ணற்ற பாடகர்களை உள்ளிளுத்த வகையாலும் எழுந்த மாற்றம் எஸ்பிபி கணக்கில் கை வைக்கவில்லை. இளையராஜாவின் இசையில் அதிகம் பாடி வைத்தவர் எஸ்பிபி தான்.
மாற்றம் என்பது சடுதியாக விளைவது அல்லது, அது மெல்ல மெல்ல விளைவிப்பது. ராஜாவின் ஆரம்ப காலத்தின் இசையோட்டங்கள், பாடகர் ஒழுங்கு என்பது மெல்ல மெல்ல மாறிய பாங்கு ஓருதாரணம். ஆனால் எல்லா மாற்றங்களிலும் எஸ்பிபி தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். புதியதொரு இசையமைப்பாளர் இசைக்க வரும் போதும் கூட எஸ்பிபி முத்திரையோடு தன் பாடலை அடையாளப்படுத்தும் சூழல் இருந்திருக்கிறது. ஒரு இசையமைப்பாளர் தன்னை நிலை நிறுத்துவதற்கும், தன் பாடலை மிகஇலகுவாகக் கடைக்கோடி ரசிகனிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இங்கே உறுதுணை எஸ்பிபியின் குரல்.
அந்த வகையில் எஸ்பிபியின் குரல் புதிய புதிய இசையமைப்பாளர்களுக்கு எவ்வளவு தூரம் தோதாய்த் தோள் கொடுத்தது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
படம் நன்றி : ஏவிஎம் நிறுவனம்