Pages

Tuesday, July 31, 2007

"நெஞ்சத்தைக் கிள்ளாதே""நெஞ்சத்தைக் கிள்ளாதே"

ஒரு வருடம் ஓடி வெற்றி கண்ட படம்!
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான (முதல் முறை) தேசிய விருது "பிரசாத்" ராமநாதனுக்கும், சிறந்த மாநிலத்திரைப்பட விருது என்ற வகையில் இயக்குனர் மகேந்திரனுக்குமாக மூன்று தேசிய விருது கிடைத்த திரைப்படம்.

ஆனால் இப்படத்தின் கதைக்கரு சில வினாடிகளிலேயே இயக்குனர் மகேந்திரனின் சிந்தனையில் பிறந்தது என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் அதுதான் உண்மை.

"சினிமாவும் நானும்" என்ற தன் நூலில் "நெஞ்சத்தைக் கிள்ளாதே" திரைக்கரு உருவான அந்த சுவாரஸ்யமான கணங்களை விபரிக்கின்றார் இயக்குனர் மகேந்திரன். அதை வானொலி வடிவமாக்கியிருந்ததை இங்கே தருகின்றேன், தொடர்ந்து அக் கதை பிறந்த கதையை நினைவுபடுத்தும்
"பருவமே புதிய பாடல் பாடு" என்ற இனிய பாடலும் ஒலிக்கின்றது. இதோ கேளுங்கள்.

Thursday, July 26, 2007

நீங்கள் கேட்டவை 15வாரந்தம் உங்கள் ரசனைக்குரிய பாடல்களின் அணிவகுப்பாக மலரும் நீங்கள் கேட்டவையின் 15 படையலில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த வாரமும் வழக்கம் போல மாறுபட்ட இரசனை கொண்ட பாடல்களின் தொகுப்பாக இடம்பெறுகின்றது. அந்த வகையில் இன்றைய நீங்கள் கேட்டவை 15 தொகுப்பில் இடம்பெறும் பாடல்களையும் கேட்ட நண்பர்களையும் பார்ப்போம்.

முதலாவதாக கிடேசன் பார்க் நாயகன் கோபிநாத் தன்னுடைய ஆருயிர் சகோதரி முத்துலட்சுமி அக்காவுக்காக "ஜானி" படத்திலிருந்து எஸ்.ஜானகி பாடும் "காற்றில் எந்தன் கீதம்" என்ற பாடலைக் கேட்கின்றார். வலையுலக வரலாற்றில் ஒரு நேயருக்காக இன்னொரு நேயர் பாடல் கேட்பது இதுவே முதல் முறை (பிளீஸ் யாராவது எழுதி வைக்கவும் ;-))

அடுத்ததாக நக்கீரன் விரும்பிக் கேட்டிருக்கும் பாடலைப் பாடுகின்றார்கள், மலேசியா வாசுதேன், எஸ்.ஜானகி பாடும் "கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை" என்ற பாடலை "என் ஜீவன் பாடுது" திரைக்காகக் கேட்டிருக்கின்றார். எனக்கும் ரொம்பப் பிடித்த பாட்டு இது, என் சீடி இசைத்தட்டு தேயத் தேய இந்தப் பாட்டைக் கேட்டிருக்கின்றேன்.

சர்வேசன் விருப்பமாக "வட்டத்துக்குள் சதுரம்" திரைப்படத்திற்காக "இதோ இதோ என் நெஞ்சிலே" பாடலை, பி.எஸ்.சசிரேகா, எஸ்.ஜானகி ஆகியோர் பாடுகின்றார்கள்.

அடுத்ததாக இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சகோதரம் மழை ஷ்ரேயா, "மீரா" படப்பாடலான "ஓ பட்டர்பிளை" பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் கேட்டிருக்கின்றார். கூடவே பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி ;-)

நிறைவாக ஜெஸிலாவின் தேர்வில் " கண்ணின் மணியே கண்ணின் மணியே" பாடல் சித்ராவின் குரலில் "மனதில் உறுதி வேண்டும்" திரைக்காக இடம்பெறுகின்றது.

இன்றைய நிகழ்ச்சியின் அனைத்துப் பாடல்களுக்கும் இசை வழங்கியிருப்பவர், இசைஞானி இளையராஜா.

Powered by eSnips.com

Wednesday, July 25, 2007

M.M கீரவாணியின் கீதங்கள்கடந்த பகுதியில் மரகதமணி என்னும் M.M. கீரவாணியின் அறிமுக காலத்துத் தமிழ்ப்பாடல்களைத் தந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக விட்டுப் போன பாடல்களோடு இந்தப் பதிவில் தொடர்கின்றேன்.

இந்த ஒலிப்பதிவில், கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த "ஜாதி மல்லி" திரைக்காக கே.எஸ்.சித்ரா பாடும் மறக்கமுடியவில்லை பாடல் இடம்பெறுகின்றது.மலையாள நடிகர்
முகேஷ், குஷ்பு ஜோடி நடித்திருந்தது இப்படத்தில்.

தொடர்ந்து தெலுங்கில் வெற்றிப்படமாக அமைந்த டாக்டர் ராஜசேகரின் நடிப்பில் வந்த திரைப்படமான "அல்லாரி பிரியுடு" , தமிழில் "யாருக்கு மாப்பிள்ளை யாரோ" என்று மொழிமாற்றப்பட்டபோது அருமையான பாடல்களை இவர் தமிழில் மொழிமாற்றித் தந்திருந்தார். அந்தப் பாடல்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "அன்னமா! உன் பேர் என்பது அன்னமா?" என்ற இனிய பாடல் இடம்பெறுகின்றது. மரகதமணி/M.M. கீரவாணி இசையமைத்த பாடல்களிலேயே எனக்குப் பிடித்தமான பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது இதுவே.

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை ஸ்ரீதேவி , அரவிந்த் சாமியுடன் இணைந்து மலையாள இயக்குனர் பரதனின் இயக்கத்தில் "தேவராகம்" திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே காதில் தேன் வந்து பாயும் இனிமை கொண்டவை. அந்தத் திரைப்படத்தில் இருந்து " சின்ன சின்ன மேகம் என்ன கவிதை பாடுமோ" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுஜாதா ஆகியோர் பாடுகின்றர்கள்.

எம்.எம்.கீரவாணிக்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைக் கொடுத்தது "அன்னமய்யா" என்ற தெலுங்குப்படம். நாகர்ஜீனா நடிப்பில் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இருந்து "அந்தர் யாமி" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா பாடுகின்றனர்.

நிறைவாக "வானமே எல்லை" திரையில் இருந்து "சோகம் இனியில்லை" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட நிறைவு பெறுகின்றது M.M கீரவாணியின் கீதங்கள் என்ற இந்த இசைத் தொகுப்பு.

Friday, July 20, 2007

நீங்கள் கேட்டவை 14வாரங்கள் 14 கடந்தாலும் உங்களின் அபிமானத் தெரிவுகளோடு நீங்கள் கேட்டவை தொடர்கின்றது. இதோ இந்தவார நிகழ்ச்சியின் தேர்வுகளைப் பார்ப்போம்.

இந்தவாரம் பெரும்பாலும் 60, மற்றும் 70 களில் வெளிவந்த படங்களே அதிகம் ஆக்கிரமிக்கின்றன.

முதலில் இடம்பெறும் "வந்த நாள் முதல்" என்ற பாடலை வடுவூர் குமார் மற்றும் மதி கந்தசாமி ஆகியோர் விரும்பிக்கேட்டிருக்கின்றார்கள். பாடல் இடம்பெற்ற திரைப்படம் "பாவமன்னிப்பு". விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில்
T.M செளந்தரராஜன் பாடலைப் பாடுகின்றார்.

அதே பாடல் சோக மெட்டில் என் விருப்பமாக அடுத்து வருகின்றது. பாடலைப் பாடியிருப்பவர் G.K.வெங்கடேஷ்

இந்துமகேஷ் என்ற அபிமான நேயர் தேர்வில் P.B.ஸ்ரீநிவாஸ் குரலில் "உடலுக்கு உயிர் காவல் என்ற பாடல் "மணப்பந்தல்" திரைப்படத்திற்காக M.S.விஸ்வநாதன் இசையில் வருகின்றது.

அடுத்ததாக "தெய்வப்பிறவி" திரைப்படத்திற்காக "அன்பாலே தேடிய" என்று ஜெயராமன் பாடும் பாடலை யெஸ்.பாலபாரதி விரும்பிக் கேட்டிருக்கின்றார். பாடலுக்கான இசை:K.V.மகாதேவன்

தொடர்ந்து பாடல்களைக் கேட்டு வரும் சுதர்சன் கோபால், "பட்டினப் பிரவேசம்" திரைக்காக, M.S.விஸ்வநாதன் இசையில் "வான் நிலா நிலா அல்ல" என்ற S.P.பாலசுப்ரமணியம் பாடும் இனிய பாடலைத் தேர்வு செய்திருக்கின்றார்.

இறுதியாக, அடிக்கடி வலைப்பதிவில் காணாமல் போகும் "நெல்லைக் கிறுக்கன்" இளையராஜா இசையில் "அகல்விளக்கு" திரைக்காக K.J. ஜேசுதாஸ், S.P சைலஜா ஆகியோர் " ஏதோ நினைவுகள்" என்ற இனிய பாடலைத் தருகின்றார்கள்.

Powered by eSnips.com

Thursday, July 19, 2007

அலைகள் ஓய்வதில்லையூலை 18, 1981, இந்த நாள் "அலைகள் ஓய்வதில்லை" என்ற காதல் சித்திரம் வெளிவந்து அப்போது இளசுகளாக இருந்த பலரின் உள்ளத்தைக் கொள்ளையடித்த படம். நான் தயாரிக்கும் இந்த வார வானொலி நிகழ்ச்சிக்குப் புதுமையாக ஏதாவது செய்யவேண்டுமே என்று இரு நாட்களுக்கு முன்னர் நான் நினைத்தபோது "அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் முழுப்பாடல்களையும் ஒலிபரப்பிக் கூடவே முக்கிய காட்சிகளில் இடம்பெற்ற பின்னணி இசையையும் கலந்து ஒரு நிகழ்ச்சி செய்யத் தீர்மானித்தேன் இந்தப் படம் குறித்த தகவல்களைத் தேடும் போது தான் நேற்று யூலை 18 ஆம் திகதியை நான் இந்த நிகழ்ச்சியைச் செய்யத் தீர்மானித்த அதே நாள் தான் 26 வருடங்களுக்கு முன்னர் இந்தப் படம் வெளிவந்த செய்தியையும் அறிந்துகொண்டேன். என்னதொரு ஆச்சரியமான ஒற்றுமை இல்லையா?

மணிவண்ணன் அப்போது பாரதிராஜாவின் உதவி இயக்குனராக இருந்த மணிவண்ணன் " நிழல்கள்" திரைப்படத்திற்குக் கதையெழுதியிருந்தார். தொடர்ந்து வெற்றிப்படங்களை அளித்து வந்த பாரதிராஜாவின் தோல்விப்படங்கள் பட்டியலில் "நிழல்கள்" சேர்ந்து கொண்டது. ஆனால் சோர்ந்துவிடாமல் தன் ஆசான் பாரதிராஜாவுக்கு ஒரு வெற்றிப்படக் கதையைக் கொடுப்பேன் என்று மணிவண்ணன் கதை வசனம் எழுதிய படமே "அலைகள் ஓய்வதில்லை".

இசைஞானி இளையராஜாவின் குடும்ப நிறுவனமான "பாவலர் கிரியேஷன்ஸ்" சார்பில் அவரின் சகோதரர் பாஸ்கர் தயாரிப்பில் வெளிவந்தது இப்படம். படத்தில் நடித்த கார்த்திக்கிற்கு வயது 21, ராதாவுக்கு 16 மட்டுமெ.
தமிழக அரசின் சிறந்த படமாகவும் தேர்வானது இப்படம்.

இதோ "அலைகள் ஓய்வதில்லை" வெற்றிச் சித்திரத்தின் பாடல்களோடு அப்படத்தின் முக்கிய காட்சிகளுக்கான பின்னணிஇசைத் தொகுப்பையும் கேட்டு ரசியுங்கள்.

பாகம் 1 (ஒலியளவு 28 நிமிடங்கள்)பாகம் 2 (ஒலியளவு 25 நிமிடங்கள்)

Sunday, July 15, 2007

மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - பாகம் 3

Unknown MDs Part 3...


மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் தொடரில் இந்தவாரம் வரும் இசையமைப்பாளர்களில் முதலில் வருபவர் மரகதமணி என்னும் எம்.எம்.கீரவாணி. இவர் குறித்து இன்னொரு தொடரும் றேடியோஸ்பதியில் வந்துகொண்டிருக்கின்றது. இருந்தாலும் ஒரு சிறு அறிமுகத்தோடு மரகதமணி இசையில் "ஜாதி மல்லி" திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "கம்பன் எங்கு போனான்" பாடல் இடம்பெறுகின்றது.

தொடர்ந்து வருபவர், "சொல்லாமலே" திரைப்படத்திற்கு இசையமைத்த "பாபி" என்ற இசையமைப்பாளர். இயக்குனர் சசி இதுவரை தன்னுடைய இயக்கத்தில் வெளிவந்த மூன்று படங்களுக்குமே பரத்வாஜ், பாபி, விஜய் ஆன்ரனி ஆகிய புது இசையமைப்பாளர்களையே பயன்படுத்தி வந்தார். அந்த வகையில் "சொல்லாமலே" திரைக்காக பாபி இசையில் ஹரிஹரன், சித்ரா பாடும் "சொல்லாதே சொல்லச் சொல்லாதே" என்ற பாடல் வருகின்றது.

Friday, July 13, 2007

நீங்கள் கேட்டவை 13எல்லாருக்கும் வணக்கம்!

எப்பிடி சுகமாய் இருக்கிறியளே?
நீங்கள் கேட்டவை 13 இலை உங்களைச் சந்திக்கிறதில எனக்கு ஒரே புழுகம் தான். சரி வாங்கோ நிகழ்ச்சிக்குப் போவம்.

இன்றைய நீங்கள் கேட்டவை பதிவில் முதல் பாடலைக் கேட்டிருக்கின்றார், கேள்வியின் நாயகன் சுதர்ஸன் கோபால், செவ்வந்திப்பூக்களில் செய்த வீடு தான் வேணும்னு இவர் இரண்டு தடவை மடல் கூடப் போட்டு விட்டார். நான் நினைக்கிறேன் இணையத்தளங்களிலே அகப்படாத இந்த அரிய பாடல் என் பொக்கிஷங்களில் ஒன்றாக இருக்கிறதென்று. இதோ உங்களுக்காக சிறப்பாக வரும் இந்தப் பாடல் "மெல்லப் பேசுங்கள்" திரைக்காக , தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் ஆகியோர் பாடுகின்றார்கள். எஸ்.பி.பாலு, ஜானகி ஜோடி போல இந்த ஜோடிக்கூட்டும் இனிமையானது.
இசையமைத்தவர் யாரென்று சொல்ல மாட்டேன். இவர் பெயரை ஒவ்வொருவாரமும் அதிகப்படியாகத் தட்டச்சி, அந்த எழுத்துக்களே தேய்ந்துவிட்டன.
நீங்களே கண்டு பிடியுங்கள் ;-)


இங்கே அழுத்தவும்


அல்லது

Sevanthi.wma


அடுத்ததாக வலையுலகில் சமையல் முதல் சமூகம் வரை ஒரு கை பார்க்கும் மதி கந்தசாமி
"பாஞ்சாலங்குறிச்சி" திரைப்படத்தில் இருந்து காப்பி நிறையக் குடிக்கும் தேவா சார் இசையில் ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் பாடியது. இந்த மேற்கத்தேய ஜாஸ் இசையோடு போட்டி போடும் இந்த கிராமத்து ஜாஸ் ;-)(எங்கேயோ இடிக்குதே)

Get this widget | Share | Track details


ஒவ்வொரு பதிவிலும் என்னைக் கண்காணித்துத் தன் விமர்சனங்களை அளிக்கும் நண்பர் வெயிலான் பாடல் கேட்பது அரிது. ஆனால் அவர் பாடல் கேட்டால் கர்னாடக சங்கீதத்தின் தாக்கம் உள்ள பாடலாகத் தான் இருக்கும். "நின்னைச் சரணடைந்தேன்" என்ற பாடலை அவர் கேட்டிருந்தார். அந்தப் பாடல் "பாரதி" படத்திலும் இடம்பிடித்தது. ஆனால் நான் அவருக்காகத் தரும் இந்தப் பாடல் கர்னாடக சங்கீதப் பாடகி "பாம்பே ஜெயஸ்ரீ" பாடிய படத்தில் வராத தனிப்பாடலான "நின்னைச் சரணடைந்தேன்". இந்தப்பாடலின் சிறப்பு என்னவென்றால் மேற்கத்தேய இசையோடு வித்தியாசமாக வருகின்றது. அதிகம் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள் என்பதற்காகத் தருகின்றேன். இதோ

Get this widget | Share | Track details


வலையுலகில் புதிதாக நுழைந்திருக்கும் அன்புத் தம்பி சினேகிதன் கேட்டிருக்கும் "ஆத்மா" திரைப்படப்பாடலைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அருமையான பாடல்.
" கண்ணாலே காதல் கவிதை" என்ற இந்த இனிய பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடியிருக்கின்றார்கள். பாடல் இசை கங்கை அமரனின் அண்ணன்.

Get this widget | Share | Track details


வலைப்பதிவு உலகில் முதன் முறையாக (பிளீஸ் யாராவது குறிச்சுக்கோங்க ;-))) நீங்கள் கேட்டவை ஒளி வடிவில் வருகின்றது. முதல் பாடலே அம்மா செண்டிமெண்டோடு வரும்
" தளபதி" திரைப்பாடலான "சின்னத்தாயவள்", பாடியவர் எஸ்.ஜானகி. You Tube இல் பாடலை ஏற்றி உதவிய தீனதயாளனுக்கு மிக்க நன்றிகள். முதல் ஒளி மூல நீங்கள் கேட்டவை பாடலைப் பெறும் அதிஷ்டசாலி நம்ம பாலைவனத்துச் சிங்கம் கோபிநாத்Tuesday, July 10, 2007

மரகதமணியின் மயக்கும் இசைஇன்றைய பதிவிலே தமிழ், தெலுங்கு திரையுலகில் 90 களில் குறிப்பிடத்தக்க இசைப்பங்களிப்பை வழங்கிய இசையமைப்பாளர் மரகதமணியின் பாடற் தொகுப்பின் முதற் பகுதி, பாடல்கள் குறித்த அறிமுகங்களோடு இடம்பெறுகின்றது.

கே.பாலசந்தரின் "வானமே எல்லை" திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகி, ஆனால் அந்தத் திரைப்படம் வெளிவர முன்பே அவரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் மூலம் சம காலத்தில் தயாரித்த "நீ பாதி நான் பாதி" தமிழில் மரகதமணிக்கு ஒரு அறிமுகத்தைத் தந்தது. இயக்குனர் வசந்த் "கேளடி கண்மணி" திரைப்படத்திற்குப் பின் இயக்கிய திரைப்படம் "நீ பாதி நான் பாதி".
இந்தத் திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "நிவேதா" என்ற பாடல் இடம்பெறுகின்றது.

தொடர்ந்து "வானமே எல்லை" திரையில் இருந்து "சிறகில்லை" என்ற பாடல் சித்ராவின் குரலில் ஒலிக்கின்றது. தமிழ்த்திரையுலகப் பிரபலங்களின் வாரிசுக்களை நாயகர்களாக்கி வந்த வானமே எல்லை திரைப்படத்தில் நாகேஷ் மகன் ஆனந்த்பாபு, கண்ணதாசன் மகள் விசாலி, மேஜர் சுந்தரராஜன் மகன் கெளதம் போன்றோர் நடித்திருந்தனர்.


இறுதியாக மம்முட்டியும் மூன்று நாயகிகளும் நடித்த கே.பாலசந்தரின் இயக்கத்தில் வந்த "அழகன்" திரையில் இருந்து "தத்தித்தோம்" என்ற பாடலை சித்ரா பாடுகின்றார். தமிழ்த்திரையிசைப் பாடல்களில் மேற்கத்தேய வாத்தியம் ஒன்றோடு போட்டி போட்டுப் பாடும் மிகச் சில பாடல்களில் இதுவும் ஒன்று. கீபோர்ட் வாத்தியத்தை நாயகன் இசைக்க, போட்டியாக வருகின்றது நாயகியின் பாடல், தன் மனவெளிப்பாடாக.

Sunday, July 8, 2007

மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - பாகம் 2
மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் பாகம் இரண்டில் ஒரு சில படங்கள், அல்லது குறிப்பிட்ட சில காலங்கள் மட்டுமே திரையுலகில் இருந்து ஒதுங்கிக் கொண்ட அல்லது வாய்ப்பற்றுப் போன இசையமைப்பாளர்கள் வரிசையில்

கோகுலம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் விக்ரமனின் அறிமுகத்தால் திரையுலகிற்கு வந்து, தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, நான் பேச நினைப்பதெல்லாம் , உன்னை நினைத்து போன்ற படங்களுக்கு இசையமைத்த சிற்பி முதலில் இடம்பெறுகின்றார். திடீரென ஒரு வருடம் தொடர்ந்து படங்கள் சிலவற்றுக்கு இசையமைத்து விட்டு தொடர்ந்த சிலவருடங்கள் காணாமற் போய் மீண்டுவருவது சிற்பிக்கு வாய்த்த அதிஷ்டமென்று சொல்ல வேண்டும். சிற்பி பற்றிய அறிமுகத்தோடு அவரின் இசையில் வந்த "உன்னை நினைத்து" திரைப்படத்தில் இருந்து "யார் இந்த தேவதை" என்ற ஹரிகரன் பாடிய பாடல் இடம்பெறுகின்றது.

தொடர்ந்து வருபவர் சந்திரபோஸ். தன் ஆரம்ப காலத்தில் "போஸஸ் தேவா" இசைக்குழுவில் பின்னாளில் இசையமைப்பாளராக வந்த தேவாவோடு இணைந்து மெல்லிசைக் கச்சேரிகளை வைத்தவர். தேவாவின் இசையில் தாமரை திரைப்படத்தில் பாடியும் இருக்கின்றார். தேவாவிற்கு முன்னரேயே திரையுலகிற்கு வந்து, 80 களில் இளையராஜாவின் ஏக போக இசைராஜ்ஜியத்தில் தன் எல்லைக்குட்பட்ட குறுநில மன்னராக இருந்து இசையாட்சி புரிந்தவர் சந்திரபோஸ். 80 களில் ஏ.வி.எம் இன் பல படங்களுக்கு சந்திரபோஸ் தான் ஆஸ்தான இசையமைப்பாளர். மத்திய கிழக்கில் சில காலம் இருந்து தற்போது தொலைக்காட்சி நாடகங்கள் சிலவற்றில் நடித்து வருகின்றார். இவரின் மகன் கூட ஒரு படத்திற்கு இசையமைத்தவர். சந்திரபோஸ் குறித்த அறிமுகத்தைத் தொடர்ந்து அவரின் இசையில் "அண்ணா நகர் முதல் தெரு" திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" என்ற இனிமையான பாடல் வருகின்றது.

இந்தப் பகுதியின் இறுதி இசையமைப்பாளர் "லவ் டுடே" சிவா. ஆர்.பி.செளத்ரியின் தயாரிப்பில் பாலசேகரன் இயக்கத்தில் வந்த "லவ் டுடே" என்ற வெற்றிப்படத்தின் இசையமைப்பாளர் தான் "லவ் டுடே சிவா". முதற்படம் வெற்றிப்படமாக இருந்த போதும் இவருக்கு படவாய்ப்புக்கள் என்பது எட்டாக்கனிதான். லவ் டுடே, பூமகள் ஊர்வலம், காதல் சுகமானது ஆகிய திரைப்படங்களே சிவாவின் இசையில் வந்த சொற்பப் படங்கள். ஆனால் இவரின் இசையில் மலர்ந்த அனைத்துப் பாடல்களுமே அருமை தான். லவ் டுடே சிவா வின் இசையில் "காதல் சுகமானது" திரையில் இருந்து "சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்லாமல் தவிக்கிறேன் " என்ற சித்ரா பாடும் இனிமையான பாடல் நிறைவாக ஒலிக்கின்றது.அல்லது

இங்கே அழுத்தவும்

Thursday, July 5, 2007

நீங்கள் கேட்டவை 12வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம், welcome to நீங்கள் கேட்டவை 12. வழக்கம் போலவே தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு பாராட்டுக்களையும், ஊக்குவிப்பையும் அள்ளி வழங்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு உடனேயே நிகழ்ச்சிக்குப்
போகலாம். ;-))

இன்றைய நிகழ்ச்சியிலும் வழக்கம் போல பழைய, இடைக்கால, புதிய பாடல்களை பல்வேறு ரசனை கொண்ட நம்ம நண்பர்கள் கேட்டிருக்கின்றார்கள். அந்தவகையில்

நாலு மணி நேர ஜேசுதாஸ் எஸ்.பி.பியின் இசை மழையில் நனைந்து ஜலதோஷம் பிடிக்கமுன்னேயே வந்து பாட்டுக் கேட்டிருக்கின்றார் இந்தவார தமிழ்மண நட்சத்திரம்
சர்வேசன். "சொல்லத் துடிக்குது மனசு" படத்திலிருந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "பூவே செம்பூவே". இசைய வைத்தவர் இளையராஜா.

பாடலைக் கேட்க

சர்வேசன் கேட்ட பூவே செம்பூவே பாட்டைக் கேட்டதும் குரல் தவிர்த்த இந்தப் பாடலின் இசைக்கோலத்தைக் கேட்கவேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது, அதை உங்களோடும்ம் பகிர்ந்து கொள்கின்றேன், இது இப்போது தான் இணைக்கப்படுகின்றது. கேட்டு அனுபவியுங்கள் இந்த இசை ராஜாங்கத்தை.

Get this widget | Share | Track detailsசர்வே புயல் சர்வேசன் போல இசைக்கு ஒரு புயல் நம்ம ஏ.ஆர்.ரகுமான். அவரோடு இயக்குனர் விக்ரமன் இணைந்து விக்ரம் நடித்த "புதிய மன்னர்கள்" படத்திலிருந்து மனோ, சித்ரா பாடும் "ஒண்ணு ரெண்டு மூணடா" என்ற ஆண்களை வெருட்டும் பாடலை விரும்பிக்கேட்டிருக்கின்றார் பாலைவன தேசத்திலிருந்து ஜெஸிலா.
அத்தி பூத்தது போல எப்பவாது ஒருக்கால் தனக்கு ஆசை வந்தா மட்டும் பவ்யமாகப் பாட்டுக் கேட்கிற எங்கட வெற்றி அண்ணை , "அந்தரங்கம்" படத்திலை இருந்து ஜி.தேவராஜன் இசையில் நடித்துக் கொண்டே பாட வல்ல கமலஹாசன் பாடியிருக்கிறார். சோக்கான பாட்டெல்லோ?
சிங்கப்பூர் சீமையில் கட்டுமானமே கதியென்று இருக்கும் நம்ம நண்பர்
வடுவூர் குமார், "அகத்தியர்" படத்தில் இருந்து வயலின் மேதை குன்னக்குடி வைத்யநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடுகின்றார்.
இந்து மகேஷ் அண்ணரின் பழைய பாடல் தெரிவுகள் எப்பவுமே சோடை போகாது. அதை நிரூபிக்க "பாதை தெரியுது பார்" திரைப்படத்தில் P.B.ஸ்ரீனிவாஸ், S.ஜானகி பாடிய "தென்னங்கீற்றுச் சோலையிலே" கேட்டுப் பாருங்கள், புரியும்.
பாடலிசை: M.B ஸ்ரீனிவாசன்.
இறுதித் தேர்வை, இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்துப் பதிவுகளிலேயே சிலாகித்த ராதா ஸ்ரீராம் விரும்பும் "பெற்றால் தான் பிள்ளையா" திரையில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மலரும் "சக்கரக்கட்டி ராஜாத்தி" என்ற பாடலை T.M செளந்தரராஜன் பாடுகின்றார். இணைந்து பி.சுசீலா பாடுகின்றார்.

Get this widget | Share | Track details


சரி நண்பர்களே, இன்றைய பாடல் தேர்வுகள் எப்படியிருந்தன என்பது குறித்தும், புதிய பாடல்களை அறிவிக்கவும் இந்தப் பதிவின் பின்னூட்டலைப் பயன்படுத்துங்கள். ;-)))

Sunday, July 1, 2007

மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - 1

மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் என்ற புதிய தொடர் றேடியோஸ்பதியில் புதிதாய் ஆரம்பிக்கின்றது. தமிழ்திரையுலகில் ஒரு சில படங்களுக்கே இசையமைத்தாலும் நல்ல சில பாடல்களை விட்டுச் சென்ற இசையமைப்பாளர்கள் குறித்த சிறு அறிமுகமும் அவர்களின் இசையில் மலர்ந்த இனிய பாடல்களும் இப்பகுதியில் அரங்கேறுகின்றன.

அந்த வகையில் இன்றைய முதற்பாகத்தில் "சேரன் பாண்டியன்" திரைப்படம் மூலம் திரைக்கு அறிமுகமான இசையமைப்பாளர் செளந்தர்யன், அவரின் இசையமைப்பில் "காதல் கடிதம் வரைந்தேன்" என்ற பாடல் ராஜ்குமார், சுவர்ணலதா குரல்களிலும்,

"தலைவாசல்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் "பாலபாரதி", அவரின் இசையில் வந்த "அமராவதி" திரைப்பாடலான "தாஜ்ஜுமஹால் தேவையில்லை அன்னமே" என்ற பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குரல்களிலும் ஒலிக்கின்றன.