".... ...." நாவலை நான் படித்த போது கதாபுருஷன் "காளி" வேலை செய்யும் Winch operator உத்தியோகமும் அவனுடைய வித்தியாச சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் காளியை புலி ஒன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன். பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். அப்போது நான் இயக்குனராகும் எண்ணத்திலேயே இல்லை"
இப்படிச் சொன்ன அந்த இயக்குனர் குறித்த நாவலின் பாத்திரங்களை வைத்துக் கொண்டு மேலதிக திரைக்கதை அமைத்து வெளிவந்த அந்தப் படம் இன்றளவும் இந்தப் படத்தில் "காளி" என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்த நடிகரின் பேர் சொல்லும் படமாக அமைந்து விட்டது. கூட நடித்த அந்தப் படத்தின் நாயகியும் இப்போது உயிருடன் இல்லை, இணை நாயகியும் கூட உயிருடன் இல்லை. இருவருமே தற்கொலை செய்து கொண்டவர்கள்.
இந்தப் படத்தின் முக்கியமான பின்னணி இசையை தருகின்றேன். அந்தப் படம் எது என்று கண்டுபிடியுங்களேன்.
கைப்புள்ள என்று வலைப்பெயர் வைத்துக் கொண்டு பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் பரந்துபட்ட விஷய ஞானங்களுடன் எழுதிக் குவிக்கிறாரே என்று இவரைப் பற்றி அடிக்கடி நான் வியப்பதுண்டு. அக்டோபர் 2005 இல் இருந்து எழுதி வரும் இவர் இன்று வரை வலையுலக சர்ச்சைகளுக்குள் விழுந்து விடாமலும், தன் எழுத்துகளைச் சேதாரப்படுத்தாமலும் எழுதி வருவதுண்டு. எழுத்து வன்மையுடன், காமிராக் கண்களாலும் கைது செய்பவர் இவர். கைப்புள்ள காலிங் என்ற இவரின் வலைப்பதிவு சமீபத்தில் டபுள் செஞ்சுரி போட்டிருக்கு, இந்த வேளை என் வாழ்த்துக்களையும் சொல்லி வைக்கிறேன்.
சிறப்பு நேயர் பகுதியில் ஆக்கம் எழுதி அனுப்பி வைத்து விட்டு ஓய்ந்தார் என்று பார்த்தால் மேலதிகமாக நான்கு மடல்கள் அடுத்தடுத்த நாட்கள் வந்திருக்கு. முன்னர் எழுதிய பதிவை மெருகேற்றிக் கொண்டே இருந்தார். அவ்வளவு சிரத்தையாக ஒப்புக் கொண்ட விஷயத்தில் காட்டியது எனக்கு இன்னொரு ஆச்சரியம். பதிவில் ராஜா படம் தான் வேணும் என்று அடம்பிடித்து, ஒரு முறை ராஜா டவலைக் கட்டிக் கொண்டு இசையமைத்த காட்சிப் படத்தைப் போடுமாறு அடம்பிடித்தார். ஆனால் என் கைக்கு அது கிட்டவேயில்லை. யாராவது வைத்திருந்தால் சொல்லுங்கள் அதை இணைத்து விடுகின்றேன். இப்படி நேற்று நான் போட்டிருந்தேன். இன்று காலை என் மின்னஞ்சலைப் பார்த்தால் நம்ம தல கோபி அன்போடு தன் தெய்வத்தின் படத்தை அனுப்பியிருந்தார். ஆக, கைப்புள்ளையின் ஆசை நிறைவேறிடிச்சு ;)
சரி இனி நம்ம மோகன்ராஜ் பேசட்டும் வணக்கம். ரேடியோஸ்பதியில் உங்கள் விருப்பப் பாடல்களைத் தேர்வு செய்து சொல்லுங்கள் என்று கானா அண்ணாச்சி சொன்னதும், நான் அவரைக் கேட்டது "நெஜமாத் தான் சொல்றீங்களா?". உண்மையைச் சொல்லனும்னா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவர் இந்த சிறப்பு நேயர் பதிவுகளைத் தொடர்ச்சியா வழங்கிட்டு இருக்கும் போது நமக்கும் ஒரு நாள் சிறப்பு நேயராகறதுக்கு வாய்ப்பு கெடைக்குமான்னு நெனச்சிருக்கேன். ஏன்னா தமிழ் திரை இசை உலகைப் பொறுத்தவரை அவர் 'ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்' அவர்களுக்கு ஒப்பானவர். தமிழ் திரை இசையைப் பற்றியும் பாடல்களைப் பற்றியும் பல தகவல்களைத் தொகுத்து வைத்திருக்கும் ஒரு நடமாடும் தகவல் சுரங்கம். ஆகவே அவருடைய வலைப்பூவில் எனக்கு பிடித்த பாடல்களைப் பற்றி எழுதக் கிடைத்த வாய்ப்பு உண்மையிலேயே பெருமைக்குரியது. ஆனா சிறப்பு நேயர் வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு பிடித்த பல நூறு பாட்டுகளில் ஒரு சிலதை தேர்ந்தெடுப்பது சுலபமானதாக இருக்கவில்லை.
1. என்னைப் பொறுத்த வரையில்...இது போல ஒரு அற்புதமான இன்னொரு பாட்டை நான் கேட்டதில்லை. ஒரு பாட்டைக் கேட்டா பல வித உணர்ச்சிகள் மனதில் தோன்றலாம். ஆனா மனசை இதமா வருடிக் கொடுத்து அமைதி படுத்தற மாதிரியான இந்த மாதிரி ஒரு பாட்டைத் தேடிக்கிட்டே இருக்கேன். எந்த மனநிலையில நாம கேக்கறோமோ அந்த மனநிலைக்கேத்த மாதிரியே இந்த பாடலும் என் மனசுக்குத் தோனும். இன்னும் சொல்லப் போனா எனக்கு நினைவு தெரிஞ்சு நான் கேட்ட முதல் சில பாடல்களில் இது அடங்கும். அதனால தாய்மொழி, தாய்பாசம் இதெல்லாம் எவ்வளவு நெருக்கமானதோ அந்தளவுக்கு இப்பாட்டு என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானது. அதோட இந்த படப் பாடல்கள் வெளிவந்த போது தான் எங்க வீட்டுல டூ-இன்- ஒன் முதன் முதல்ல வந்தது. அந்த படம்...முதல் மரியாதை. அந்தப் பாடல்...வெட்டி வேரு வாசம். தேங்க் யூ வைரமுத்து அண்ட் இளையராஜா.
படம் : முதல் மரியாதை(1985) பாடலாசிரியர் : வைரமுத்து இசை : இளையராஜா பாடியது : S.ஜானகி, மலேசியா வாசுதேவன்
2. சில நாட்களுக்கு முன்னாடி அலுவலகத்திலிருந்து திரும்பி வரும் போது பண்பலையில் ஒலிபரப்பான ஒரு பாட்டைக் கேட்டேன். அந்தப் படம் பிள்ளை நிலா. பேபி ஷாலினிக்குப் பேய் பிடித்து ஆட்டுவது போல வந்த ஒரு படம். மோகன், நளினி ஜோடியின் மகளாக வருவார் பேபி ஷாலினி(அப்போ பேபி தான்). அந்தப் பாட்டை என் தம்பி சிறுவயதில் "ராஜா மகள் ரோஜா தின்றாள்" என்று பாடுவான். அப்போது அந்த பாட்டு அவ்வளவு சிறப்பானதாக எனக்கும் தோன்றியதில்லை. ஆனால் அன்று மாலை கேட்டதிலிருந்து ஏனோ மனதை வெகுவாகக் கவர்ந்தது. நான் கண்டறிந்த வரை இளையராஜாவுடைய பாடல்களில் சிம்பிள் ஃபார்முலா ஒன்று உண்டு. அது பாடலின் தொடக்கம் சாதாரணமானதாக இருந்தாலும் மிக பிரமாண்டமானதாக இருந்தாலும் இடையில் வரும் வரிகளில் மீண்டும் மீண்டும் கேட்டு ஏங்கச் செய்யுமாறு இசையமைத்திடுவார். அதுவே பல நாளானாலும் அந்த பாடல் மனதை விட்டு நீங்கா இடம் பிடிப்பதற்கு காரணம் என நான் நினைக்கிறேன். இந்த பாடலில் பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களின் குரலில் சரணங்களில் வரும் வரிகள் யாவும் அத்தகையவே. இந்தப் பாடலைத் தேடி எடுத்து ஒரு நாள் என் அம்மாவிற்கு போட்டு காட்டினேன். கேட்ட மாத்திரத்தில் அவங்க சொன்னது "இந்தப் பாட்டை உன் தம்பி ராஜா மகள் ரோஜா தின்றாள்னு பாடுவானே". இது போன்ற நினைவுகளுக்கு விலையேது? அப்போ தான் புரிஞ்சது இளையராஜாவின் இசை என்பது எங்களுக்கு ஒரு வாழ்க்கை முறையாகவே இருந்திருக்கிறது என்பது. அதனால் தானோ என்னவோ நான் ரசிக்கும் தலைவரின் பாடல்களை யாராவது இகழ்ந்து பேசினால் ஏன் கோபம் வருகிறது என்று - ஏனென்றால் அது என்னை போன்ற பலரின் ரசனையையும், இது நாள் வரை நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையையே இகழ்வது போன்றானது. நான் இவ்வாறு சொல்வதில் மிகை ஏதுமில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.
படம் : பிள்ளை நிலா (1985) பாடலாசிரியர் : unknown இசை : இளையராஜா பாடியது : P.ஜெயச்சந்திரன்
3. விஜி மேனுவல்(Viji Manuel) என்பவர் இளையராஜாவிடம் பல நாட்களாக கீபோர்டு வாசிப்பாளராக இருப்பவர். கீபோர்டு வாசிப்பாளர் என்றால் வெறுமனே இசையமைப்பாளர் நோட்ஸ் கொடுத்தால் வாங்கி வாசிச்சுட்டு போற ஆள் இல்லை. சொந்தமாக ஆல்பம் எல்லாம் வெளியிட்டு இருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால் இவரும் ஒரு இசையமைப்பாளர் தான். இவருடைய தந்தை ஹாண்டேல் மேனுவல்(Handel Manuel) அவர்களும் பல சிறப்புகளைப் பெற்ற புகழ்பெற்ற பியானோ இசை கலைஞர். விஜி மேனுவல் சரளமான ஆங்கிலத்தில் ஏதோ ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் சில ஆண்டுகளுக்கு முன் தந்த தகவல் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஏதோ ஒரு பாடலுக்கு(எந்த பாடல் என்று சரியாக நினைவில்லை) ராஜா அவர்கள் கொடுத்த நோட்ஸ் மிகவும் கடினமானதாக இருந்ததாம். அதை வாசிக்கும் போது அவருடைய இரு கைகளும் கீபோர்டின் ஒவ்வொரு கோடியில் இருந்தனவாம். இருப்பினும் பாடலின் கடைசியில் வரும் ஒரு நோட் தான் விரும்பியபடி வரவேண்டும் என்று ராஜா மிக உறுதியாக இருந்தாராம். கைகள் இரண்டும் இருவேறு இடங்களில் ஏற்கனவே தரப்பட்ட நோட்ஸ்களை வாசித்துக் கொண்டிருந்தபடியால் அந்த கடைசி நோட்டை எந்த கையாலும் வாசிக்க முடியாத நிலையில் இருந்தாராம் விஜி. இருப்பினும் ராஜா கொடுத்த அந்த கடைசி நோட்டையும் வாசித்தாராம் - எப்படி? - குனிந்து தன் மூக்கால் கீபோர்டை அழுத்தி வாசித்தாராம். இத்தகவலைத் தெரிவித்து விட்டு 'ராஜாவுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்' என்று பொருள்படும் வகையில் 'Anything for Raaja' என்று கூறி முடித்தார்.
இளையராஜா யாஹூ குழுமத்தில், உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு க்விஸ் போட்டியில்(மின்னஞ்சல் மூலமாகத் தான்), இளையராஜா தலையில் துண்டு ஒன்றைப் போட்டுக் கொண்டு ஆர்க்கெஸ்ட்ராவை வழிநடத்திக் கொண்டிருக்கும் படம் ஒன்றைக் காட்டி அப்படத்தின் சிறப்பு என்று கேட்டிருந்தார்கள். எனக்கு விடை தெரிந்திருக்கவில்லை. பின்னால் தெரிந்து கொண்டது - ஆர்க்கெஸ்ட்ராவை வழிநடத்திக் கொண்டிருந்த அன்று கடும் காய்ச்சலால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தாராம் இளையராஜா. இருப்பினும் காய்ச்சலைத் தணிப்பதற்காக ஒரு ஈரத் துண்டினைத் தலையில் போட்டுக் கொண்டு ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டாராம். அப்போது தான் புரிந்தது தேர்ந்த இசை கலைஞர்கள் கூட ராஜாவுக்காக எதுவும் செய்ய துணிவதற்கான காரணம், இசைக்காக ராஜா எதையும் செய்யத் துணிவதனால் தான் என்று. மேலே சொன்ன படி கடும் காய்ச்சலோடு ராஜா இசையமைத்து வெளிவந்த படம் தான் மோகன்லால் நடித்த 'குரு'(1997) என்ற மலையாளத் திரைப்படம். இப்படத்திற்காக புதபெஸ்டிலிருந்து ஹங்கேரி சிம்பொனி ஆர்கெஸ்டிரா கலைஞர்கள் வாசித்தது இப்படத்தின் சிறப்பு.
'ஈ சீதைக்கும் ப்ரியம் அருளியதொரு மின்னாரம் மானத்து' - மொழி புரியலைன்னாலும் பாடலில் இந்த வரிகளைக் கேட்டு பாருங்க. உருகிடுவீங்க.
படம் : குரு (1997) - மலையாளம் பாடலாசிரியர் : ரமேசன் நாயர் இசை : இளையராஜா பாடியது : சுஜாதா
4. தன்னுடைய வரிகளைத் தாங்கி இனிமையான பாடல்கள் வர வேண்டும் என்பதற்காகவே காசு போட்டு படம் எடுப்பாராம் கவிஞர் கண்ணதாசன். அப்படி அவருடைய தயாரிப்பில் வெளிவந்த படம் "கறுப்பு பணம்". விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரின் இசையில் வந்த அழகானதொரு இரவு பாடல் அதுவும் இரவு படகு பாடல். எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் குரலில் என் அம்மாவுக்கு பிடித்த பாடல்களில் ஒன்று இது. பலரும் கேட்டிருக்க மாட்டார்கள் என்றெண்ணி இப்பாடலை இங்கு பகிர்கிறேன். அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி அமைதியான இரவு வேளைகளில் கேட்க நல்லதொரு பாடல் இது.
படம் : கறுப்பு பணம் (1964) பாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன் இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியது : L.R. ஈஸ்வரி
எம்.எஸ்.வி. அவர்கள் இசையில் எனக்கு பிடித்த இன்னொரு பாடல் - சொல்லத் தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
5. ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையில் நான் மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று இது. ஆல் இந்தியா ரேடியோவின் ரெயின்போ எஃப்எம் அலைவரிசையில் இவ்வாண்டு பொங்கல் தினத்தன்று ரகுமான் ஒரு நேர்காணல் வழங்கினார். அதில் தன் இசையமைக்கும் பாணி பற்றி அவர் சொன்ன தகவல் ஒன்று - "எல்லாரும் சங்கராபரணம், கல்யாணி அப்படின்னு கர்நாடக இசை அடிப்படையாகக் கொண்ட ராகங்களை வைத்து இசை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிலிருந்து நாம் தனித்து தெரிய என்ன செய்யலாம் என்று யோசித்த போது மாண்ட், திலாங் போன்ற இந்துஸ்தானி ராகங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் இசையமைக்கலாமே என்று". அவ்வாறு இந்துஸ்தானி இசை சாயல்கள் தெரியும் ஒரு அழகான பாடல் - "உதயா உதயா". எனக்கு மிகவும் பிடித்தமானதொரு பாடலும் கூட.
படம் : உதயா (2003) பாடலாசிரியர் : அறிவுமதி இசை : ஏ.ஆர்.ரகுமான் பாடியது : ஹரிஹரன், சாதனா சர்கம்
பி.கு: நேயர் விருப்பம் பதிவில் ஐந்து பாடல்களைத் தேர்வு செய்து தருமாறு சொல்லியிருந்தார் கானா அண்ணாச்சி. பாத்துக்கங்க மக்களே...நான் நியாயஸ்தன். அவரு சொன்ன நம்பரான அஞ்சை நான் தாண்டலை :)
0000000000000000000000000000000000000
நண்பர் மோகன்ராஜின் பாடல்களைக் கேட்டு ரசித்திருப்பீர்கள், அடுத்த வாரம் G3 இன் பாடல் தெரிவுகளோடு உங்களை சந்திக்கிறேன். நீங்களும் இதே போன்று உங்கள் பாடல் ரசனையை வெளிப்படுத்த விரும்பினால் kanapraba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்.
"பெற்றோர்கள் குழந்தைகளுக்காகத் தான் தம் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றார்கள் என்று சொல்லிக் கொண்டு நாள் முழுவதும் ஓடி ஓடி சம்பாதிக்கிறார்கள். ஆனால் அந்த சம்பாதித்த பணம் எல்லாம் வாழ்க்கைக்கு பயன்படுகிறதா என்று சொன்னால் பெற்றோர்களின் பார்வையில் ஆமாம், குழந்தைகளின் பார்வையில் இல்லை என்று தான் எனக்குக் கிடைத்த பதில். ஒரு தோல்வியான வாழ்க்கையை வாழும் பெற்றோரை கண்டேன். குழந்தைகளின் பார்வையில் ஏன் இந்த உலகத்தைச் சொல்லக்கூடாது என்று நினைத்தேன். இதைக் கதையாக எடுத்துச் சொன்னபோது பிரபல தயாரிப்பாளர்கள் தாணு, தேனப்பன் போன்ற நண்பர்கள் கோடிக்கணக்கில் போட்டு எடுக்கும் சினிமாவில் இதையெல்லாம் வைத்து எடுக்கிறாயே என்று என்மேல் கொண்ட ஆதங்கத்தில் சொன்னார்கள். நான் யோசித்தேன் ஒரு நல்லவிஷயம் என்று தெரிகிறபோது இன்னொருவர் பணத்தின் மூலமாக பரிசோதனை செய்வதை விட நாமே செய்வோம் என்று நான் கட்டிய வீட்டை அடமானம் வைத்து தயாரிப்பாளராக ஆரம்பித்தேன்."
இப்படியாக "வண்ணத்துப்பூச்சி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தடம் பதித்திருக்கும் படைப்பாளி திரு.ராசி அழகப்பனை நேற்று அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சார்பில் வானலையில் சந்தித்தேன். அவரின் மனப்பதிவுகள் 28 நிமிட ஒலிப்பகிர்வாகத் தொடர்கின்றது.
பேட்டியில் இருந்து சில துளிகள் எழுத்து வடிவில்
வலம்புரி ஜான் ஆசிரியராக இருந்த "தாய்" பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது வாய்ப்புத் தேடிப் போன போது "உனக்கு என்ன தெரியும்" என்று கேட்ட போது "தெரிந்து கொண்டு வாழ்க்கை தொடங்குவதில்லை, தெரிந்து கொள்வது தான் வாழ்க்கை" அவருக்கு நான் சொன்ன ஒரு வார்த்தையைக் நம்பி என்னைத் கணத்தில் துணை ஆசிரியராகச் சேர்த்துக் கொண்டார். அங்கே தான் என் பத்திரிகை வாழ்க்கை தொடங்கியது.
கதவைத் திற காற்று வரட்டும், நிழல் தேடும் மலர் (கவிதை நூல்), புல்வெளிப்பாதை, மழைத் தேன், கும் இருட்டு, உயிர்க்காற்று, தாய் நிலம் உட்பட 15 கவிதை நூல்கள் எழுதியிருக்கிறேன்.
சாவி இதழில் "ஆகஸ்ட் 15" என்ற கவிதையை எழுதினேன், அந்த காலகட்டத்தில் "வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள் என்று சுவற்றிலும் , பேரூந்துகளிலும் எழுதி வைத்திருப்பார்கள். அப்போது வீடு எங்கே இருக்கிறது மரம் நடுவதற்கு என்று என்னுள் எழுந்த வேகமான சிந்தனையில் அந்தக் கவிதையை எழுதினேன். "வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள் என்கிறீர்களே ஆமாம் நடுகிறோம் ஒரு மரம் நடுவதற்கு ஒரு வீடு தாருங்கள்" என்று நான் எழுதினேன். அந்தக் கவிதை தான் எல்லோரும் என்னை திரும்பிப்பார்க்க வைத்தது. அந்தக் காலகட்டத்தில் திரு கமல்ஹாசன் அவர்கள் ஒரு வேகமான இளைஞனை என் திரைப்படத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தார். அப்போது நான் அவரை முதன்முதலாக சந்திக்கிறேன்.
"நீங்கள் ஒரு மேற்கத்தேய சிந்தனையுள்ள மனிதராக இருக்கிறீர்கள், நானோ 80 வீடுகள் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ராயப்பேட்டை என்ற நெசவாளர் கிராமத்திலே பிறந்திருக்கிற நான் மக்களுடைய அடித்தட்டு எண்ணங்களைச் சொல்வது தான் திரைவாழ்க்கை என்று கருதிக்கொண்டிருக்கிறேன். எனக்கும் உங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்று ஆரம்பத்திலேயே நான் சொன்னபோது அவர் சிரித்து விட்டார். "என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நான் வாழ்ந்த வாழ்க்கை அவ்வாறு, நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை அவ்வாறு, இருவரும் புரிந்து கொள்வோம், திரைப்படத்தில் நாம் கால் ஊன்றுவோம்" என்று சொல்லி மய்யம் என்ற அவர் பத்திரிகை நடத்தி வந்தார், அதில் 60 சதவிகிதம் சினிமா சம்பந்தமாகவும் 40 சதவிகிதம் இலக்கியம் சம்பந்தமாகவும் வரவேண்டும் என்று சொன்னேன். அதை ஏற்றுக்கொண்டார். இரண்டாண்டு காலம் அதை நடத்தினோம்.
அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்திலே என்னைத் துணை இயக்குனராக அறிமுகப்படுத்தினார். அது ஒரு சுவையான அனுபவம். முப்பது நாட்கள் குள்ளமான அப்புவாக எப்படி நடிப்பது என்று பயிற்சி செய்து கொண்டிருந்தோம். அதில் தான் நான் எல்லா தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்டேன்.பொதுவாக பத்தாண்டுகள் கழித்துத்தான் வசனம் சொல்லிக் கொடுக்கிற வாய்ப்புக்கிடைக்கும் துணை இயக்குனர் என்று சொல்வார்கள். ஆனால் துவக்கத்திலேயே எனக்கு அந்தப்பதவி கிடைத்தது. அது எல்லாவற்றுக்கும் காரணம் பத்மஸ்ரீ கமல்ஹாசன் என்மேல் வைத்திருந்த நம்பிக்கை. நான் ஒளிவுமறைவின்றிப் பேசுவது அவருக்கு பிடித்திருந்தது. பெரியார் சிந்தனைகள், சினிமாவில் இலக்கியம் சார்ந்த விடயங்கள் வரவேண்டும் என்பது இவையெல்லாம் இவரிடம் நான் கற்றுக் கொண்டது.
மைக்கேல் மதன காமராஜன், குணா, மகளிர் மட்டும், தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களின் திரைக்கதைக் குழுவில் நான் இருந்தேன். நான் இப்போது வாழ்கிறேன் என்று சொன்னால் திரைப்பட உலகத்தில் அது முழுக்க முழுக்க பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம், தைரியம், புதிதாக எதையாவது செய்யவேண்டும் என்று சொன்ன வார்த்தை தான் என்னை வாழ வைக்கிறது.
ருத்ரைய்யா, குடிசை படம் எடுத்த ஜெயபாரதி, ஏழாவது மனிதன் எடுத்த ஹரிஹரன் இவர்கள் எல்லாம் புதிய செய்திகளைச் சொல்லி அதை மேற்கொண்டு சொல்லமுடியாமல் போய்விட்டார்கள். அருமையான சிந்தனையாளர்கள். ஆனால் நான் யாருக்கு சொல்லவேண்டும், ஏன் சொல்ல வேண்டும், கண்டிப்பாக சொல்லவேண்டும் என்ற வரையறையோடு ஒரு திரைப்படத்தை வரைந்தேன்.
மலையாளத்திரைப்பட உலகத்தில் பரதன் என்ற ஒரு இயக்குனரிடம் நான் சில காலம் பணியாறிய போது அவர் ஒரு முறை சொன்னார். நான் ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று நினைத்தேன். யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியில் என் ஸ்கூட்டரை ஐயாயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து லாரி என்ற படத்தை உருவாக்கினேன். எப்பொழுதெல்லாம் பணம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அந்தப் படத்தை தொடர்ந்து இயக்கி முடித்தேன் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள் என்றார். என் கதையின் களம் இவர்கள் தான் இதில் சமரசம் செய்து கொண்டு வெற்றி பெறவேண்டிய அவசியம் இல்லை என்று இதுவரையில் சினிமாவை சந்திக்காத நபர்கள், வீட்டுக்கே லாயக்கில்லாதவர்கள் என்று விரட்டிய பிள்ளைகள் இப்படியாக தேர்வு செய்து தேடி எடுத்தேன் "வண்ணத்துப்பூச்சி" நடிகர்களை. மிகப்பிரமாதமாக அவர்கள் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
வண்ணத்துப்பூச்சி திரைக்கதை வசனத்தை கிழக்கு பதிப்பகம் நூலாக வெளியிட்டது. எத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியொரு படம் என்று இயக்குனர் மகேந்திரன் சொன்னது இந்தப்படத்தின் கருவுக்கு கிடைத்த வெற்றி. குழந்தைகள் படம் பார்த்து எவ்வளவு காலமாயிற்று என்று பாலுமகேந்திரா வியந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஓடி ஓடி சம்பாதிக்கும் பெற்றோர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் பணம் சம்பாதிப்பது போல் அன்பு செலுத்த நேரம் ஒதுக்குவதும் சம்பாத்தியமே என்பதை உணர்வார்கள் படங்கள் நன்றி: ராசி அழகப்பனின் பிரத்தியோக தொகுப்பு
சிறப்பு நேயர் தொடரின் இரண்டாம் சுற்றிலே அடுத்து ஐந்து முத்தான பாடல் தெரிவுகளோடு வந்திருப்பவர் பயமறியா பாவையர் சங்கத்தின் கெளரவ உறுப்பினரும், வருத்தப்படாத வாலிபர் சங்கத்து சிங்கியுமான "இராப் (rapp).
"வெட்டி ஆபீசர்" என்ற வலைப்பதிவு ஒன்றை மே 2008 இல் இருந்து உருவாக்கி, சொல்லிலும் பதிவிலும் காட்டி வரும் இவர் சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க என்ற தத்துவத்துக்கேற்ப நடப்பவர் என்பதை சகோதர வலைப்பதிவுகளிலும் இவர் போட்டு வச்சிருக்கும் பின்னூட்டங்களே சாட்சி. ஆனால் இங்கே அவர் கொடுத்திருக்கும் முத்தான ஐந்து பாடல்களுமே வித்தியாசமான ரசனை கொண்டு அமைந்திருக்கின்றன. கேட்டு இன்புறுங்கள். சிறப்பு நேயர் தொடரில் நீங்களும் இடம்பெற உங்கள் ஆக்கங்களை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
1) சந்தோஷம் இங்கு சந்தோஷம் படம்: மனிதனின் மறுபக்கம் பாடிவர்: சித்ரா
பள்ளிக்காலம், கல்லூரிக்காலம் இப்டி நாம பிரிச்சிக்கிட்டே போனாலும், அந்தந்த காலக்கட்டத்தில் நமக்கு மிகவும் விருப்பமான ஒரு கட்டம் இருக்கும்(அவ்வ்வ்வ்வ்.. சரி எனக்கிருக்கு). அப்டி, ஜாஸ்தி வீட்டுப்பாடத் தொந்தரவுகள், படிக்கிறக் கவலைகள் எதுவுமில்லாமல், வீட்டில் கொடுக்கும் செல்லத்தை டேக் இட் பார் கிராண்டட் ஆட்டிட்யூடோட அனுபவித்த காலம்னா எண்பதுகளின் இறுதி மற்றும் தொண்ணூறுகளின் ஆரம்பம். அப்பொழுது பாப் கட்டிலிருந்து, பரதநாட்டியத்திற்காக முடி வளர்க்க ஆரம்பித்தக் கட்டம். இந்தப் பாடல்களைக் கேக்கும்போது மட்டும் எனக்கு மனதில் தோன்றும் காட்சி, அம்மா எனக்கு தலை பின்னிவிடுகிறக் காட்சிதான். அதுவும் மிக அவசர அவசரமா அவங்க வேலைய முடிக்கணும், பட் அதுக்கு எவ்ளோ இம்சை கொடுக்க முடியுமோ நான் கொடுக்கிறது. அது காலை ஏழரயிலிருந்து எட்டுக்குள் இருக்குமாதலால் , அளவான அழகான வெயில் இருக்கும். அப்போது ரேடியோவில் இந்தப் பாடல்கள் ஒலிக்கும். இந்தக் காட்சிகள் தவிர இந்தப் பாடல்கள் கேட்கும்போது வேறெதுவுமே தோணாது. அழகான ராதாவை இந்தப் பாடலில் பார்க்கலாம்.
2) கஜ்ரா மொஹப்பத்வாலா படம்: கிஸ்மத் பாடியவர்: ஷம்ஷாத் பேகம் குழுவினர்
பொதுவாக ஓ.பி.நய்யார் மீதுக் கூறப்படும் பிரபலமானக் குற்றச்சாட்டுகளில் ஒன்று, சுட்டப் பழத்தின் மீதான நம்பிக்கையே அவருக்கு ஜாஸ்தி என்பது. ஆனால், அப்பொழுது இருந்த மற்ற இசையமைப்பாளர்களும் இப்டி செய்திருக்கின்றனர். இன்றையக் காலக்கட்டத்தில் மிக மிக எளிமையாக அனைத்து பாரம்பரிய இசையைக் கேட்கும் வசதியுள்ளதால், இது தெளிவாக நிரூபணமாகியுள்ளது.
இந்தக் காரணத்தைக் கூறியே அவருடைய ஜனரஞ்சகப் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பை யாரும் கண்டுகொள்ளவில்லயோவெனத் தோன்றும். பெரும்பான்மையாக இவருடையது, எளிமையான இனிமையான ஜனரஞ்சகப் பாடல்கள். குறிப்பிட்ட இந்தப்பாடலில் ஷம்ஷாத் பேகம் அவர்களின் குரலும், எளிமையான நகைச்சுவையான பாடல் வரிககளும், துள்ளும் இசையும் மிகப் பெரிய பலம். இதயெல்லாம் எதற்காக ரீமிக்ஸ் செய்தார்கள், அப்படி என்ன கொலைவெறி என்றுதான் புரியவில்லை.
3) ஊரார் உறங்கையிலே உற்றாரும் படம்: நாலு வேலி நிலம் பாடியவர்: திருச்சி லோகநாதன்
திருச்சி லோகநாதன் குரலைப் போன்ற ஒரு குரலினைப் பார்ப்பது அபூர்வம். அநியாய எதிக்ஸ் பார்த்துப் பல நல்ல வாய்ப்புகளை உதறினார் எனக் கேள்வி. இவருடைய சொந்த வாழ்க்கை சம்பந்தமான புத்தகங்கள் படிக்கும்போது, ஆச்சர்யமாகிவிடுகிறது. இவருடைய முக்காவாசிப் பாடல்கள் மிகப் பிடிக்கும். இந்தப் பாடலின் வரிகள் மிக மிக சுவையோடு இருக்கும். அடுத்து என்ன பதில் கொடுப்பார் என்ற ஆவலைத் தூண்டும். தென்னிந்தியாவில் பிறக்காமல் வேறெங்குப் பிறந்திருந்தாலும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு அவருக்குக் கிடைத்திருக்கக் கூடிய அங்கீகாரமே வேறு. இதன் வீடியோவும் பார்த்ததில்லை. யார் நடித்தார்கள் என்று கூடத் தெரியாது.
4) புத்திசிகாமணி பெத்தபுள்ள படம்: இருவர் உள்ளம் பாடியவர்கள்: ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி
நடிகவேலை ரசிக்காதவர்கள் இருக்கமுடியுமா? ஆனால் இந்தக் குறிப்பிட்ட படத்தின் பாடல்கள்(வீடியோ) மட்டும் நெட்டில் கூட கிடைக்கவில்லை. இந்தப் பாடல் அந்தக் காலக்கட்டத்தில் வந்த பல குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமானப் பாடல்களுள் ஒன்றுதான் என்றாலும், அதில் உள்ள அழகான நகைச்சுவை, இனிமையான ஜோடிக் குரல், கலக்கலான யதார்த்தம் இந்தப் பாடலின் ரசிகயாக்கியது. இதற்கு நடிகவேலும், மனோரமா அவர்களும் நடித்திருக்கிறார்கள் எனத் தெரிந்ததில் இருந்து பார்க்க ஆவல்.
5) என்னடி முனியம்மா உன் கண்ணுல படம்: வாங்க மாப்பிள்ளை வாங்க பாடியவர்: டி.கே.எஸ்.நடராஜன்
இந்தப் பாடலின் ரீமிக்ஸ் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒரிஜினலில் பாடியவரின் குரலும் கூட இப்பாடலின் வெற்றிக்குக் காரணமெனத் தோன்றும். இவ்வளவு பிரபலமானப் பாடலின் வீடியோவை இதுவரைப் பார்த்ததே இல்லை. பார்த்தவர்களும் விழுந்து விழுந்து சிரித்தே கொல்கிறார்கள். ஆனால், எப்படி இருக்கும் எனச் சொல்வதில்லை. இதனுடைய ஆடியோவும் தரவிறக்கம் செய்வதற்குக் கிடைக்கவில்லை. ஹி ஹி, அதனால் இப்பாடலின் எம் பி 3 தரவிறக்கம் செய்யும்படிக் கிடைத்தாலும் நன்றாக இருக்கும்.
கர்நாடக இசை உலகின் பெண் மும்மூர்த்திகளில் இறுதியாக நம்மிடையே வாழ்ந்து வந்த டி.கே.பட்டம்மாள் அவர்கள் கடந்த யூலை 16 ஆம் திகதி வியாழன், 2009 இவ்வுலகத்தை விட்டு நீங்கினார். இந்தியா கடந்து உலகெங்கும் இசை மணம் பரப்பிய அவரை பத்ம விபூஷன் விருது உட்பட பல விருதுகள் கிடைத்து அந்த விருதுகளுக்குப் பெருமை தேடித்தந்தன. கர்நாடக இசையுலகம் தவிர்ந்து தமிழ்த்திரையிசையிலும் டி.கே.பட்டம்மாள் அவர்களின் பங்களிப்பு சிறப்பானது.
சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் பண்பலை வானொலியான "தமிழ் முழக்கம்" வானொலிக்காக பட்டம்மாள் அவர்களின் சிஷ்யை திருமதி அமிர்த்தி யோகேஸ்வரன் அவர்களை பட்டம்மாள் குறித்த நினைவுப் பகிர்வினை வழங்க அழைத்திருந்தேன். பட்டம்மாள் குறித்த நினைவுகளோடு அவர் இயற்றிய பாடலான "கற்பகமே கண் பாராய்" என்ற பாடலை வழங்குகின்றார்.
ஏ.வி.எம் நிறுவனம் சுப்ரமணிய பாரதியார் பாடல்களின் உரிமத்தினை வாங்கி "நாம் இருவர்" திரைப்படத்தில் பயன்படுத்தியபோது டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிய "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என்ற பாடல்.
டி.கே.பட்டம்மாள் அவர்களும் அவர் தம் பேத்தி நித்ய சிறீ உடன் இணைந்து பாடும் "பாருக்குள்ளே நல்ல நாடு"
சுத்தானந்த பாரதியாரின் கவிவரிகளோடு டி.கே.பட்டம்மாள் பாடும் "எப்படிப் பாடினரோ" பாடலோடு நிறைவாக்குகின்றேன்.
றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் தொடர் மீண்டும் அடுத்த சுற்றில் கலைக்கோவனின் படைப்போடு ஆரம்பிக்கின்றது.
றேடியோஸ்பதியில் வாய்த்த நண்பர்களில் சற்றே வித்தியாசமாக அறிமுகமானவர் நண்பர் கலைக்கோவன். இவர் றேடியோஸ்புதிர் மூலமாகவே அறிமுகமாகி தொடர்ந்து விடாமல் போட்டிகளில் பங்கெடுப்பதோடு புதிரில் விடை சொல்லும் பாணியில் கூட ஒரு வித்தியாசத்தைக் காண்பிப்பார். உதாரணத்துக்கு, ஒரு முறை பாடகர் யுகேந்திரன் குறித்த புதிரைக் கேட்ட போது அவர் கொடுத்த பதில் பின்னூட்டம் இப்படி இருந்தது.
"சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக".. இடைக்குரல் கொடுத்த மலேசியா வாசுதேவன் வீட்டு பூ. ......யுகேந்திரன் இந்த "சின்ன கானாங்குருவியின்" பாடல் பொற்காலம் ஒலித்தட்டில் மட்டும் இடம்பெற்று படம் பெறாமல் போயிற்று. ஆனாலும் ..... தம்பதி சகிதமாக (துணைவி மாலினியுடன்) தற்போது .., தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை (சமீபத்தில் விஜய் தொ.கா. சூப்பர் சிங்கர்) அலங்கரிக்கின்றனர்.
பாடல் புதிர்களில் சாமர்த்தியத்தோடு பதில் சொல்வதோடு நண்பர் கலைக்கோவனின் இசை ரசனை கூட தனித்துவமானது என்பதற்குச் சான்றாக அமைகின்றது இவரின் தேர்வுகள். தொடர்ந்து கலைக்கோவன் பேசுகிறார், நான் ஒதுங்கிக் கொள்கிறேன் ;) என்னை பற்றி..,
இசை ரசிகன்., கடந்த ஓராண்டாய் ரேடியோஸ்பதியின் வாசகன்.
தற்போது வசிப்பது ஹைதராபாத்,எப்போதும்(என் மகன் அன்பு அனுமதித்தால்) பாடல் கேட்க பிடிக்கும்.
எப்போதாவது கவிதை எழுதுவதுண்டு.
தெரிவுகள்
எனது தெரிவுகள், இளையராஜாவின் இசை கோலோச்சிய எண்பதுகளில் வெளிவந்த பாடல்கள் இடம் பெறுகின்றன.
இவற்றை,எனக்கு பிடித்த சமகால பாடகர்களை நினைவு கூறும் வகையில் தொகுத்திருக்கின்றேன்.
1. மேகமே மேகமே(பாலைவனச்சோலை)- வாணிஜெயராம்
இது எனது முதல் தெரிவு.,எப்போது கேட்டாலும் இனிக்கும் ஒரு கஜல் வடிவம்.சோகம் இழையொடும் குரலில் ”எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்,அது எதற்க்கோ?” என கேட்கும் வரிகள் கொஞ்சம் கணமானவை.
எப்போதெல்லாம் மனம் கணமாகிறதோ அப்போதெல்லாம் கேட்க தூண்டும் பாடல்.வைரமுத்துவின் ஆழமான வரிகள் மேலும் அழகை சேர்த்திருக்கும், ”புது சேலை கலையாமல் அணைப்பேன்”(ரவிவர்மன் எழுதாத) என்ற வரிகளுக்கு புது அர்த்தம் கொடுத்த கவிஞராச்சே சும்மாவா பின்ன.
இந்த பாடல் ஹிந்தியில் ஜக்ஜித் சிங் பாடிய கஜலின்(தும் நஹி.. ஹம் நஹி..) நகல் என்பது பின்னாளில் தான் தெரிந்தது.
ராஜாவின் குரலில் ஒரு ஆனந்தமான பாடல்.ராஜாவின் இணைக்குரல் பாடல்கள் ஒரு தனி ரகம்,அனைத்து பாடல்களுமே நன்றாகவே இருக்கும்.இந்த பாடலுக்கு ஆனந்த ராகம் கேட்கும் நேரத்தில் கூவிய குயில் இணைக்குரல் கொடுத்திருப்பார்.
பாடலில் "வெட்கம் அது உங்களுக்கில்ல வெட்கம் மறந்தா பொம்பளை இல்லே" என பெண் குரல் என வினவி,
பின் ”ஆசைய சொல்ல நினைச்சேன் சொல்லமா தான் விட்டேனே” என்று முடியும் சரணம் ஒரு அழகான காதலின் உண்மை.
இந்த பாடலின் சரணங்களுக்கு இடையில் வரும் “ஐலேசா” வரிகளும் ஒரு கிக்.பாடல் சாத்தனூர் டேமில்(திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது)படமாக்கப்பட்டது என நினைக்கிறேன்.
ஆனால் இப்போதெல்லாம் சினிமாவில் சாத்தனூர் டேம் வருகிறதா என்பது சந்தேகமே.
3. தெய்வீக ராகம்(உல்லாச பறவைகள்)- ஜென்சி
இந்த பாடலை கேட்கின்ற போது ,வரிகளுக்கும் மெட்டுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாய் தோணும்.தெய்வீகராகம்- ராகம் தெய்வீகமா என்பதை அறிந்தவர்கள் சொல்லுங்கள்,ஆனால் என்னை பொறுத்தவரை, இது தெவிட்டாத பாடல் (கேட்டாலும் போதும் இளம் நெஞ்சங்கள் வாடும்).
குறைந்த எண்ணிக்கையில் பாடல் பாடி ரசிகர்களுக்கு குறை வைத்த ஜென்சி பாடிய பாடல்.
கிணற்றுக்குள் இருந்து எழும் ஹம்மிங் போன்ற ஓரு ஆரம்பமே சுண்டி இழுக்கும்,பாடல் காட்சியமைப்பும் என்னை கவர்ந்த ஒன்று.
கேசட்டில் பாட்டு ரெக்கார்டிங் பண்ணும் போது echo, stereo வைக்கணுமான்னு கேட்பாங்க.ஆனா இந்த பாடலை(படத்தில் எல்லா பாடலும்) கேட்க அப்படி ஒரு அவசியம் இல்லை,அவ்வளவு இனிமையான ரெகார்டிங்.தன்னை மறந்து, நான் ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.பாடல் வரியெங்கும் ஸ்டீரியோ தோரணம் கட்டி.,சரணத்தின் முடிவில் தனனன..னன என echo-வில் எதிரொலிக்கும் அனுபவமே அலாதி.
5. பூவண்ணம் போல நெஞ்சம்(அழியாத கோலங்கள்) – ஜெயசந்திரன் ,சுசீலா
”பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்” என விண்ணப்பிக்கும் காதலின் மென்மை மெருகோட வரும் ஒரு அருமையான் பாடல்.வழியெங்கும் பாடல் வரிகளில் ஒரே கவிதை வாசம்.வங்காள இசையமைப்பாளர் சலீல் சவுத்திரியின் இசையில் வந்த ,இந்த பாடல் மெட்டு மலையாளம்,ஹிந்தி மற்றும் வங்காள மொழியிலும் பயன்படுத்த பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
6. ஆஷா அட்சிலொ பாலொ பாஷா அட்சிலொ (ஆனந்த ஆஷ்ரம்)- கிஷோர்குமார் (Asha Chilo Bhalobasha Chilo - Ananda Ashram )- வங்காள மொழியில் அமைந்தது. எனக்கு பிடித்த வேற்று மொழி பாடல்களில் ஒன்று.மனைவியை இழந்த நாயகன் மனைவியை பிரிந்த தவிப்பில் பாடுவதாக அமைந்த பாடல்.மொழி கடந்து என்னை கவர்ந்த பாடகரான கிஷொர் குமாரின் குரல் ஒன்றே பொதும், பாடல் விளக்கம் கூட தேவையில்லை.
ஐந்து பாடல்கள் தான் அனுப்பவேண்டும் என்பது விதி,அது ”குறைந்த பட்சம் ஐந்து பாடல்” என்றிருக்காத என்ற நப்பாசையும் இருந்தது.எனவே ஆறாவது பாடலை வேற்று மொழி பாடலாக சேர்த்து கொள்ளுங்களேன்(ஒரு புது விதியாக சேர்த்துக்கலாமே).
கலைக்கோவனின் விதவிதமான தெரிவுகள் நிச்சயம் உங்களை வசீகரித்திருக்கும் என்று எண்ணுகின்றேன். அடுத்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பிக்க இருக்கிறார் "பயமறியா பாவை" ராப் அவர்கள். உங்கள் படைப்புக்களும் இடம்பெற வேண்டுமானால் எழுதி அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: kanapraba@gmail.com
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவலாசிரியர் வைரமுத்து இன்று தனது 56 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். தமிழ்த் திரையுலகில் கண்ணதாசனுக்குப் பின்னர் ஒரு புதிய பாங்கில் திரையிசைப்பாடல்களை அள்ளி வழங்கிய வைரமுத்து அவர்கள் எத்தனையோ சிறந்த பாடல்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கின்றார். பிரபலமான இசையமைப்பாளரில் இருந்து பெயர் தெரியாத இசையமைப்பாளர் வரை வைரமுத்துவின் வரிகள் தனித்துவமாக நிற்கும் சிறப்பு வாய்ந்தவை. இந்த வேளை வைரமுத்து அவர்களுக்கு அவர் "யுத்" திரைப்படத்தில் எழுதிய தன்னம்பிக்கை தரும் பாடலை பிறந்த நாள் பாடற் பரிசாக வழங்குகின்றேன்.
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி விளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணிப் பண்ணித் திருந்திய பிறகு தான் நாகரீகம் பிறந்ததடி தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவழக்கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டியில்லை உள்ளம் என்பது பூந்தொட்டியானால் நாளை துன்பமில்லை புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
ஆதியிலாண்டவன் இந்த பூமியை படைத்தானே அவனாசையைப் போலவே இந்த பூமி அமையலையே ஆண்டவனாசையே இங்கு பொய்யாய் போய்விடில் மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மையென்றும் தீமையென்றும் நாலுபேர்கள் சொல்லுவது நம்முடைய பிழையில்லையே துன்பமென்ற சிப்பிக்குள் தான் இன்பமென்ற முத்து வரும் துணிந்தபின் பயமில்லையே
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டு கொள் காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
00000000000000000000000000000000000000000000000
றேடியோஸ்பதியின் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சிறப்பு நேயர் தொடர் ஆரம்பிக்க இருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். இந்தத் தொடரில் வலைப்பதிவர் மட்டுமன்றி வலையுலக வாசகர்களும் பங்கெடுத்துக் கொள்ள முடியும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். 1. உங்கள் விருப்பத் தேர்வில் ஐந்து பாடல்களைத் தெரிவு செய்யுங்கள், அவை தமிழ் மட்டுமன்றி பிறமொழிப் பாடல்களாகவும் இருக்கலாம். பாட்ல்களை நீங்கள் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. 2. நீங்கள் தேர்வு செய்த இந்த ஐந்து பாடல்கள் ஏன் உங்களைக் கவர்ந்தன என்பது குறித்த உங்கள் ரசனையை இவை ஒவ்வொன்றுக்கும் உங்கள் பாணியில் எழுதுங்கள். வெறுமனே பாடலையோ பாடல் வரிகளையோ தருவதை தவிர்க்க வேண்டும். உங்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களோடு தொடர்பு படுத்தியும் இவற்றை நீங்கள் விரும்பினால் தரலாம். 3. உங்கள் தொகுப்பை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் 4. அனுப்பிவைக்கப்பட்ட ஆக்கங்கள் வந்து சேர்ந்த ஒழுங்கில் இவை இடம்பெற இருக்கின்றன
தொடர்ந்து வரும் வாரங்களில் வர இருப்போரில் இதுவரை ஆக்கங்களை அனுப்பியோர் 1. கலைக்கோவன் - யூலை 17 பதிவு வர இருக்கின்றது 2. ராப் - யூலை 24 பதிவு வர இருக்கின்றது
நேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து.
எனக்குள் இருக்கும் இசை குறித்த தீராத வேட்கையை நான் பணிபுரியும் வானொலி நிலையத்தில் ஒரு எல்லை வரை மட்டுமே கடந்த 10 ஆண்டுகள் கொண்டு வர முடிந்தது. ஆனால் இந்த வலைப்பதிவினை ஆரம்பித்தவுடன் கட்டற்ற எல்லை வரை என்னால் பயணிக்க முடிந்தது. அதற்குக் காரணம் நான் விரும்பியதை மட்டுமே கொடுப்பது என்பதை விட என்னைச் சுற்றியுள்ள நீங்கள் இசை மீது அளவு கடந்த நேசிப்போடு இருப்பது பெருங்காரணம்.
தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போல எத்தனையோ பதிவுகளில் பின்னூட்டங்கள் வாயிலாக மேலதிகமான செய்திகளோடும், தகவல்களோடும் வந்து இந்தத் தளத்தை முற்றுகையிட்டுப் பிரமிக்க வைத்தீர்கள். இன்று இந்த இரண்டு ஆண்டுகளில் கடந்து விட்ட நிலையில் றேடியோஸ்பதியில் ஆரம்பித்த தொடர்களும் அதற்கு நீங்கள் தந்த வரவேற்பினையும் இரை மீட்க ஒரு வாய்ப்பு. அந்த வகையில் இந்தச் சிறப்புத் தொகுப்பு தொடந்து உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகின்றேன்.
றேடியோஸ்பதியின் முதல் தொடராக வந்து சிறப்பித்தது "நீங்கள் கேட்டவை" இந்தத் தொடர் பல்வேறு ரசனை கொண்ட் பாடல்களை வலைப்பதிவு வாசகர்கள் கேட்க அதைப் பூர்த்தி செய்யும் வகையில் 29 தொடர் பதிவுகளாக வந்து சிறப்பித்தது. இந்தத் நீங்கள் கேட்டவை தொடரின் மாதிரிக்கு ஒன்று: நீங்கள் கேட்டவை - பாகம் 2
நீங்கள் கேட்டவையின் இன்னொரு பரிமாணமாக குறித்த ஒரு நேயரின் ரசனைகளை மட்டுமே தொகுத்து அமைந்த சிறப்பு நேயர் தொடரும் உங்களில் பலரை ஈர்த்தது. இந்தத் தொடர் 21 அங்கங்களாக 21 நேயர்களைகளின் தனித்துவமான ரசனைகளை அவர்களின் விளக்கங்களோடு கலந்து பரிமாறியது. அதில் மாதிரிக்கு ஒன்று சிறப்பு நேயர் "எம்.ரிஷான் ஷெரிப்
பாடல்கள் மட்டுமன்றி இசைத்துறையில் சாதனை படைத்தவர்களின் ஒலிப்பேட்டிகளையும் கொடுக்க எண்ணி மலர்ந்த ஒலிப்பேட்டிகள் கூட அவ்வப்போது இடம்பெற்று வந்தன. அந்த வகையில் ஒன்பது பேட்டிகள் இந்தப் பதிவில் நிரப்பின. அந்த ஒலிப்பேட்டிகளில் மாதிரிக்கு ஒன்று பத்மபூஷன் T.N. சேஷகோபாலன் ஒலிப்பேட்டி
தமிழ்த்திரையிசையில் பழம் தின்று கொட்டை போட்ட மேதைகள் மட்டுமன்றி புதியவர்களையும் கெளரவப்பத்தும் வரிசையில் "சுப்ரமணியபுரம்" திரைப்படம் வெளிவந்த சமயம் அந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனைப் வானொலிப் பேட்டி கண்டு சமகாலத்தில் றேடியோஸ்பதி நேயர்களுக்கும் பகிர்ந்தளித்தேன்.
றேடியோஸ்பதி இளையராஜா புகழ் மட்டும் தான் பாடும் என்ற ஒரு சிலரின் கூற்றை மறுதலிக்கும் வண்ணம் 36 பதிவுகள் வரை ராஜா தவிந்த ஏனைய இசையமைப்பாளர்களை மட்டுமே முன்னுறுத்திய பதிவுகள் வந்திருந்தன. அதில் நான் விரும்பி ரசித்து எழுதிய பதிவுகள் இவை.
இந்தப் வலைப்பதிவில் அவ்வப்போது இசைவிமர்சனங்களோடும் பதிவுகளைப் பகிர்ந்திருக்கின்றேன். அந்த வகையில் நான்கு திரைப்படம் சார்ந்த பதிவுகளும் வந்திருக்கின்றன. அவற்றில் மாதிரிக்கு ஒன்று
தமிழ்த் திரையுலகம் சார்ந்தவர்களின் மறைவின் போது அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் நினைவுப்பதிவுகள் பலவும் வந்திருக்கின்றன, இதுவரை 13 நினைவுப்பதிவுகள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. எழுத்தாளர் சுஜாதாவின் ஒலிப்பேட்டி என்பது இதுவரை எங்கும் வெளிவராதது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நினைவப் பேட்டிகளில் மாதிரிக்கு ஒன்று
றேடியோஸ்பதியின் நேயர்களுக்கு ஜாலியான போட்டி வைக்கலாம் என்ற எண்ணத்தோடு ஆரம்பித்த றேடியோஸ்புதிர் இந்த வாரத்தோடு 42 புதிர்களை அவிழ்த்து இருக்கின்றது. இந்தப் புதிரை நீங்கள் மிகவும் விருப்போடு ரசித்து விளையாடுவது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்தப் புதிர்களில் மாதிரிக்கு ஒன்று றேடியோஸ்புதிர் 1 - பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு என்ன?
நிறைவாக, என் நேரத்தை நிறையவே எடுப்பதும் என் மனதை நிறைவடையச் செய்வதும் ஆன ஒரு அம்சம் பின்னணி இசைத் தொகுப்பு. சராசரியாக 4 - 5 மணி நேரம் வரை ஒரு படத்தைப் பார்த்து தகுந்த இடத்தில் நிறுத்தி இசை பிரித்து பின்னர் எடிட் பண்ணிச் செய்யும் பின்னணி இசைத் தொகுப்பு என்பது றேடியோஸ்பதியின் மகுடமாகத் தொடரும் தொடர் இதுவரை 22 படைப்புக்களைத் தந்து இன்னும் தொடர்கின்றது. அந்த வகையில் நான் ரசித்துச் செய்த சில பின்னணி இசைத் தொகுப்புக்கள் சில
வாழைப்பழத்தையும் கொடுத்து அதை உரிச்சும் கொடுப்பது போல புதிர் ஒன்று தருகிறேன். கண்டுபிடியுங்களேன் ;0.
இங்கே இளையராஜா இசையமைத்த இரண்டு பாடல்கள் கொடுக்கப்படுகின்றன. இவ்விரு பாடல்களுமே ஒரே மெட்டில் போடப்பட்டவை.ஆனால் ஒன்று சந்தோசப் பாடலாக ஜோடிக்குரல்களிலும் இன்னொன்று ஒற்றை ஆள் பாடும் சோகராகமாக அமைகின்றது. இந்த இரண்டு பாடல்களில் ஒன்று தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட டப்பிங் படத்தில் இருந்தும், இன்னொன்று நேரடித் தமிழ்ப்படத்தில் இருந்தும் வருகின்றன. இதில் எது தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாறிய பாடல் என்பதே கேள்வியாகும். ஒரேயொரு உபகுறிப்பு. அந்தத் தெலுங்குப் படத்தை இயக்கியவர் பிரபல ஒளிப்பதிவாளர். ஆனால் அவர் பாலுமகேந்திரா அல்ல.
முதலில் வருவது ஜோடிப்பாடல் நிலவு சுடுவதில்லை திரைப்படத்திற்காக கிருஷ்ணச்சந்தர் , ஜானகி பாடும் "நாளும் என் மனம்"
இரண்டாவது காதல் கீதம் திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "பெண்மை என்பது அட உண்மை இல்லையா" தனிப்பாட்டு
மேற்கண்ட கேள்விக்கான சரியான பதில் காதல் கீதம் திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "பெண்மை என்பது அட உண்மை இல்லையா" தனிப்பாட்டு. காதல் கீதம் என்ற படம் தெலுங்கில் வெளிவந்த அபி நந்தனா என்ற திரைப்படத்தின் மொழிமாற்றுப் படமாகும். ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இயக்கிய படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தப் படத்தில் கார்த்திக், ஷோபனா, சரத்பாபு போன்றோர் நடித்திருப்பார்கள். இதோ அந்த மூலப்பாடல் அபி நந்தனா படத்தில் இருந்து
றேடியோஸ்பதி தொடர்களில் இன்னொரு தொடராக, இசைஞானி இளையராஜாவின் குரலில் ஒலித்த தேர்ந்தெடுத்த முத்தான பாடல்களைத் தொகுப்பாகத் தரவிருக்கின்றேன். அந்த வகையில் முதல் தொகுப்பில் முழுமையான காதல் தொகுப்பாகத் தருகின்றேன். இவை தனித்தும் ஜோடி சேர்ந்தும் பாடிய பாடல்களாக அமைகின்றன.
இந்தத் தொடரை றேடியோஸ்பதியின் தூண்களில் ஒருவரான தல கோபி என்ற கோபிநாத்துக்கு நாளைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குச் சிறப்புப் பரிசாக அளிப்பதில் மகிழ்வடைகின்றேன்.
முதலில் வருவது பாலைவன ரோஜாக்கள் படத்தில் இளையராஜா தனித்துப் பாடும் "காதல் என்பது பொதுவுடமை" என்ற பாடல் இடம்பெறுகின்றது. ஜனகராஜுக்கு ராஜா கொடுத்த பாடல்களில் இதுவும் ஒன்று.
தொடர்ந்து கீதாஞ்சலி திரைக்காக சித்ராவுடன் ஜோடி சேரும் பாடல் " துள்ளி எழுந்தது பாட்டு" பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வந்த இந்தப் படத்தில் வந்த அனைத்துக் காதல் பாடல்களும் இளையராஜாவின் குரலில் வந்தன.
அடுத்ததாக வருவது " படிச்ச புள்ள" படத்தில் வரும் சோகப்பாடல், இந்த மெட்டில் மனோ, சித்ரா பாடும் சந்தோஷ மெட்டும் இந்தப் படத்தில் இருக்கின்றது.
"பகல் நிலவு" திரைப்படத்தில் வரும் "பூமாலையே தோள் சேரவா" ராஜாவுக்கு பாட்டு ஜோடி ஜானகி தான் என்பதை நிரூபிக்கின்றது மீண்டும் ஒருமுறை.
நிறைவாக வருவது தொண்ணூறுகளில் வெளிவந்த "பூந்தோட்டம்" திரையில் இருந்து "வெண்ணிலவுக்காசைப்பட்டேன்" பாடல் முத்தாய்ப்பாக நிறைக்கின்றது.