Pages

Sunday, May 26, 2024

இளையராஜா இசையில் பாடகி மனோரமா ❤️

இளையராஜா இசையில் 

பாடகி மனோரமா ❤️



தமிழ்த் திரையுலகில் நடிப்பின் பலபரிமாணங்களைக் காட்டிய, ஆச்சி மனோரமாவின் பிறந்த தினம் மே மாதம் 26 ஆம் திகதி ஆகும்.

அவர் நகைச்சுவைப் பாத்திரங்கள் மட்டுமன்றி குணச்சித்திரப் பாத்திரங்களிலும் கோலோச்சி இருக்கிறார்.

அதுமட்டுமன்றி பல்வேறு இசையமைப்பாளர் இசையில் வெவ்வேறு ரகமாகப் பாடியும் சிறப்புச் சேர்த்துள்ள ஒரு முழுமையான கலைஞர் அவர்.

அவருடைய பிறந்த தினத்தில், இசைஞானி இளையராஜா இசையில் மனோரமா பாடிய பாடல்களைப் பார்ப்போம். 

ஆரம்ப காலத்தில் மனோரமா கூடச் சேர்ந்த நகைச்சுவை நடிகர்களோடு சேர்ந்து பாடும் பாடல் போல அமைந்த பாடல்களாக அமைந்த பாட்டுக்கள் இருக்கின்றன.

குறிப்பாக அச்சாணி படத்துக்காக சுருளிராஜனுக்காக மலேசியா வாசுதேவன் குரல் கொடுக்க, மனோரமா பாடி நடித்த

“அது மாத்திரம் இப்ப கூடாது” https://www.youtube.com/watch?v=1ewaucD5-bk என்ற பாடல் இருக்கிறது.

அப்படியே போனால் தேங்காய்ச் சீனிவாசனுடன் இணைந்து நடித்த, ஆனால் மனோரமா மட்டும் பாடும் “கானாங்குருவிக்கு கல்யாணமாம்” https://www.youtube.com/watch?v=WiPgv2Sh9Qw வாழ நினைத்தால் வாழலாம் படத்துக்காக இருக்கிறது.

இந்தப் பாடலில் இன்னொரு புதுமை இருக்கிறது. இதே பாடலை இன்னொரு வடிவில் வாய் பேசாதவர் பாடுமாற்போலவும் 

https://www.youtube.com/watch?v=zlpS350zRyM

மனோரமா பாடியிருக்கிறார்.

அதுபோல கவுண்டமணியோடு இணைந்து நடித்த மரகதவீணை படத்திலும் தனித்துப் பாடிய “சீச்சி போங்க"  https://www.youtube.com/watch?v=qy4k6Rh_9Uw இருக்கிறது.

இப்படி நகைச்சுவைப் பாடல்கள் என்று சொல்லும் போது இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும்.

எண்பதுகளின் இறுதியில் தமிழ் சினிமாவில் ஒரு அலை கிளம்பியது. அதாவது பல பாடல்களை டம்மி ஆக்கிய கலவைப் பாடல்.

இந்தப் பாணியில் வள்ளி திருமணத்தை மனோரமா எஸ்.எஸ்.சந்திரன் குழுவினர் நடிக்கும் போது இளையராஜா “ஆதி அந்தம் இல்லாதவனே” https://www.youtube.com/watch?v=Bp7X3YwlzNo பாடலை, கலவையாக எல்லாப் பாடல்களையும் இணைத்துக் கொடுத்தார்.  இங்கே மனோரமாவுக்குக் குரல் கொடுத்தவர் பி.சுசீலா. எஸ்.எஸ்.சந்திரனுக்கு இளையராஜா, மற்றும் கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து பாடியிருக்கிறார்.

இந்த இடத்தில் கூட்டுப் பாடலில் மனோரமாவின் பங்களிப்பில் “தாய் மூகாம்பிகை” படத்தில் இசையரசி என்னாளும் பாடலில் மனோரமாவுக்கு எஸ்.ராஜேஸ்வரி, கே.ஆர்.விஜயாவுக்காக சுசீலா, சரிதாவுக்காக ஜானகி என்று ஒரு அற்புதமான இசை வெள்ளத்தை நிகழ்த்திக் காட்டியிருப்பார்கள்.K.P அதையெல்லாம் தனித்துப் பார்க்க வேண்டும். 

மனோரமா கூட்டுப் பாடகியாக பாடிய பாடல்களில்

நடிகர் விஜய் இன் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய அவள் ஒரு பச்சைக்குழந்தை படத்தில் ஷோபா சந்திரசேகரோடு “பொண்ணு பார்க்க வந்தாரு” https://www.youtube.com/watch?v=n3dz6sCC3cw

“பார்த்தாலே தெரியாதோ” https://www.youtube.com/watch?v=qterlTLCYLo பாடலை ஶ்ரீராகவேந்தர் படத்துக்காக வாணி ஜெயராம்,  கெளசல்யாவுடன் இணைந்து பாடியிருப்பார்.

“வீரத்தாலாட்டு” படத்தில் படிக்கட்டுமா https://youtu.be/6eZg_035rJE?si=calIfe-R-br8fLgu பாடலை எஸ்.ஜானகி பாட, நிறைவில் மனோரமா வருவார்.அடுத்ததாக மனோரமா உரையாடல் பாணியில் குரல் கொடுத்த பாட்டுகளில் மறக்க முடியுமா

இந்த ராஜா கைய வச்சா பாட்டு? https://www.youtube.com/watch?v=Bkjlplvdq_c

அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலோடு, அப்படியே

அப்படியே சத்யராஜுடன், கற்புள்ள காளையை https://www.youtube.com/watch?v=l-Wg4uMQT-4 பாடலை மகுடம் படத்தில் எஸ்பிபியோடு சேர்ந்திருப்பார்.

இப்படி இளையராஜா இசையில் மனோரமா பாடிய பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகும் போது, 

எனக்கு ஆத்மார்த்தமாகப் பிடிச்ச பாட்டு, முத்துக்காளை படத்தில் மனோரமா ஒரு தொகையறாவாக

“வாழையிலை பரப்பி வச்சு” https://www.youtube.com/watch?v=HFVQpchkNBc கொடுக்க, கூடவே 

ஏர் எடுத்து ஏர் எடுத்து பாடுபடு பாடு என்று எஸ்பிபி இணையும் அற்புதமான பாட்டு.

இதே மாதிரி மனோரமா தொகையறாவாக

மூடி வச்ச முளைப்பயிரா வெளஞ்சு நின்னான் செவலப்புள்ள 

என்று “உன்னை நான் சேர்ந்திருக்க” https://www.youtube.com/watch?v=9DJe0RJPLuo பாடலை, எஸ்பிபி சித்ரா குழுவினரோடும்  ஆர்.வி.உதயகுமார் இணை நாயகனாக நடித்து இயக்கிய சின்ன ராமசாமி பெரிய ராமசாமி படத்துக்காகப் பாடியிருக்கிறார். ஆனால் படம் வெளிவரவில்லை.

ஒரு பாடல் எப்படி அமைய வேண்டும் என்று சந்தம் போட்டு மனோரமா இணையும் நாட்டுப்புற பாட்டு ஒண்ணு https://www.youtube.com/watch?v=JAV_mrBz1F0 பாடல் நாட்டுப்புறப் பாட்டு படத்தில் இருக்கிறது, சித்ரா, அருண்மொழி கூட இணைந்த அருமையான பாடலது.

இளையராஜா இசையில் மனோரமா ஒரு கொண்டாட்டமாகப் பாடி முடித்து விட்டார் போல என்று எண்ணுமாற்போல இளையராஜா, ஸ்வர்ணலதா, எஸ்.என்.சுரேந்தர், அருண்மொழி கூட்டணியோடு

“இனி நாளும் திரு நாள் தான்” https://www.youtube.com/watch?v=xgm-wAyRji0&t=236s பாடலை திருநெல்வேலி படத்துக்காகப் பாடியதையும் சொல்லி வைக்க வேண்டும்.

இந்தப் பகிர்வை எழுத எனக்கு உதவியாக இருந்த இளையராஜா பாடல் திரட்டு வழங்கிய அண்ணன் அன்புவுக்கும் மிக்க நன்றி.

கானா பிரபா

26.05.2024

பதிவை எழுதிய என் பெயரை அழித்துவிட்டு வாட்சாப் மற்றும் தளங்களில் பகிர வேண்டாம்.

Saturday, May 25, 2024

அந்தப்புரத்தில் ஒரு மகராணி ❤️❤️❤️

அந்தப்புரத்தில் ஒரு மகராணி ❤️❤️❤️


இளையராஜா ஒரு படத்துக்காவது இசையமைப்பாரா என்ற கேள்விக்குறியை மாற்றிப் போட்டது அன்னக்கிளி. இளையராஜாவுக்குக் கிராமியப் பாட்டுத்தான் வரும் என்ற கூச்சலுக்கும் பதில் சொல்ல ஒரு மேற்கத்தேய இசைப் பின்னணியோடும் பாடல் கொடுப்போம் என்று பஞ்சு அருணாசலத்தாரிடம் இளையராஜா தன் ஆரம்பத்தில் சொன்னதை “திரைத்தொண்டரில்” பஞ்சு சார் நினைவுபடுத்தி இருந்தார்.

ஆனால் அன்னக்கிளியைத் தொடர்ந்து சத்தமில்லாமல் ஒரு அரச படத்துப் பாட்டு 

தன் இசையில் எப்படி இருக்கும் என்பதைச் சத்தமில்லாமல் முன்னோட்டம் காட்டி விட்டார். அதுதான்

“அந்தப்புரத்தில் ஒரு மகராணி அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்”

ஒரு கனவுப் பாடலை சஹாராவுக்கும் கொண்டு போகலாம், தாஜ்மஹாலுக்கும் அழைத்துப் போகலாம். ஆனால் இங்கே ராஜா அந்தப்புரத்து உப்பரிகையில் நம்மை இருத்தி விட்டுப் பாடலை நடத்திக் காட்டுகிறார். அவர் தன்னோடு கூட அழைத்தது

அரசவைக் கவிஞர் புலவர் புலமைப்பித்தன் அவர்களை.

“அந்தபுரத்தில் ஒரு மகராணி

அவள் அன்புக் கரத்தில் ஒரு மகராஜன்

அன்பு உலகம் தன்னை அரசாளும் - அந்த 

ஆனந்தமே இவர்க்கு உறவாகும்”

இப்படியாகத் தொடரும் இளையராஜாவின் மெட்டுக்கு கங்கை அமரன் எழுதிய நீள் வரிகளில், ஆரம்ப ஈரடிகளை மட்டும் புலவர் புலமைப்பித்தன் எடுத்துக் கொண்டு

தன் குறும்புத்தனமான காமத்துப்பாலைப் பாடல் முழுக்க இறைத்து விட்டார்.

அன்று தொடங்கிய பந்தம், நானொரு பொன்னோவியம் கண்டேன், ஓ வசந்த ராஜா, மான் கண்டேன் நான் கண்டேன், ராத்திரியில் பூத்திருக்கும் என்று நீளும் அரசர் காலத்துப் பாடல்களாய் பிரதிபலிப்பதில் எல்லாம் இந்த அரசவைக் கவிஞரை இளையராஜா அழைத்துக் கொடுத்தார்.

கே.பாலாஜியின் “தீபம்” படத்துக்கு முன்பே, அதாவது அன்னக்கிளி வருவதற்கு முன்பே ஜெமினி கணேசன், பத்மினி ஜோடியாக நடிக்க “தீபம்” என்ற பெயரில் ஒரு படத்துக்கு இளையராஜா இசையமைக்க, கங்கை அமரன் வரிகளில் “சித்தங்கள் தெளிவடைய சிவனருளை நாடு” என்ற பாடலை  T.M.செளந்தரராஜன் பாடி விட்டார்.

இரண்டு பாடல்கள் பதிவான நிலையில் படம் முடங்கிப் போய் விட்டது.

“அந்தப்புரத்தில் ஒரு மகராணி” பாடலில் 

அதீத நாணம் கொண்ட காதலியின் குங்குமப் புன்னகை முகம் போல ஜானகியம்மாவின் குரல், அடடா அன்னக்கிளியில் குதூகலித்த அந்தக் குரலா என்று அதிசயம் கொள்ள வைக்க, “அன்னக்கிளி உன்னைத் தேடுதே” சோகராகம் கொடுத்த செளந்தரராஜன் இங்கே பகட்டாகக் குரல் கொடுப்பார்.

இந்தப் பாடலுக்கு மூன்று சரணம் ஆனால் பல்லவியோடு சிறு துளி கிட்டார் இசையை வழிய விட்டு ஜானகியிடம் கொடுப்பார் ராஜா.

காதலி பாடும் வரிகளில் மிகக் கவனமாகச் சொற்களை அடுக்குபவர்,

எதிராளியாய் காதலன் பக்கம் வரும் போது அவளின் சொற்களை வாங்கி மன்மதக் கணை தொடுப்பார் புலவர்.

“சாமந்திப்பூக்கள் மலர்ந்தன” வைத் தொடரும் வரிகளைக் கேட்டால் அந்தக் குறும்புச் சேஷ்டைகளை அவதானிக்கலாம் 😃

“அமுத ரசம் தேவை” என்று அவன் பாட

“என அழைக்கும் பார்வையோ”

அவன் பார்க்கும் பார்வை பொல்லாத பார்வை என்று முதற்சரணத்திலேயே பொய்க்கோபம் போல எச்சரிக்கை விடுவாள்.

அவனோ பிடி கொடுக்காமல் அடுத்த சரணத்துக்கும் துரத்திக் கொண்டு வருவான். சமயம் பார்த்து ஒன்று கொடுப்பான் பாருங்கள் இப்படி

“அவன் கொள்ளை கொள்ள துடித்தது

என்ன பார்வை?” என்று மீண்டும் அந்த விஷமப் பார்வையை அவள் கோடிட்டுக் காட்ட

“அது பார்வை அல்ல பாஷை என்று

கூறடி என்றாள்” என்று முடித்து விடுவான், மேற்கொண்டு அந்த இடத்துக்கே அவள் வரமாட்டாள்.

இவளை எப்படி மடக்கலாம்? 

ஆபரணத்துக்கு மயங்காத பெண் உண்டோ?

சரி இப்படி முதலில் ஐஸ் வைப்போம் என்று

தொடங்குவான்

“சங்கு வண்ண கழுத்துக்குத் தங்க மாலை”

அவள் குளிர்ந்திருப்பாள் தானே சரி அடுத்த அடி

“அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்தி மாலை”

மீண்டும் குறும்புத்தனம்.

இப்படியாகக் காமத்துப்பாலை ஒரு பாடலின் இண்டு இடுக்குகளில் எல்லாம் வழிய விட்டுப் புலவனார் எழுத, செளந்தரராஜன் , ஜானகி ஜோடியோ மெய்மறந்து அந்தக் கட்டிப் போட்ட மெட்டில் ஊஞ்சல் ஆடி மகிழ்வார்கள்.

அதுவும் செளந்தரராஜன், சிவாஜி கணேசன் முகபாவத்துக்கு முன்பே குரல்பாவத்தில் ஒத்திகை பார்த்த்து விடுவார்.

“அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்தி மாலை” இது இந்த “அந்தப்புரத்தில் ஒரு மகராணி”யில் புலவர் புலமைப்பித்தன் வடித்தது.

“அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்” இது கங்கை அமரன் எழுதியது.

இரண்டுமே மாயா மாளவ கௌளை”

இசையா? வரியா? சரி சரி பாடலுக்குள்ளேயே மீண்டும் போய் விடுவோம்

“ஆராரிரோ…ஆரி ராரோ ஆராரிரோ….”

பாடல் முடியும் போது அவர்கள் இருவரும் தாலாட்டுக் கட்டிலில் மூழ்கிடுவார்கள் என்பதைக் கட்டியம் கூறுமாற்போல அந்தக் கடைசிச் சரணத்துக்கு முன்னோட்டமாக வீணை இசை “ஆராரிரோ” கொடுக்கும் பாருங்கள் ஆகா அப்படியே அரச சபையை சொர்க்க லோகத்தில் அமர்த்தியது போல ஒரு இசையனுபவத்தில் மூழ்க வைக்கும்.

இன்று கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக நான் கேட்டுக் கொண்டிருப்பது பாண்டியனுடன் சுர்முகி மேடையில் பாடிய இது. என்னவொரு தேன் இனிமை 😍

https://youtu.be/jGxN0PCas3Q?si=BYwURf8_ADpeYoo2

மூலப்பாடல்

https://youtu.be/pJ9aIpxZjcs?si=fyYYUndZS9FAjcx7

T.M.செளந்தரராஜன் நினைவு தினம் இன்று 🙏

கானா பிரபா

Friday, May 24, 2024

ரெட்டைக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ளே....❤️

ரெட்டைக்கிளி சுத்தி வந்த 

தோப்புக்குள்ளே....❤️


ஏ.. விடியாத பொழுதாச்சு..

அடி ஏ. விழிகூட சொமையாச்சு..

கண்ணீரு கடலாச்சு..

உன் எண்ணம் படகாச்சு..

நீ உள்ள மனம் தானே

எப்போதும் சிறையாச்சு...

அந்த ஈனக்குரல் இளையராஜாவுக்காக வளைந்து கொடுக்கக் கூடியது. அதனால் தான் அவர் பாடும் தொனியிலேயே ஒரு கழிவிரக்கம் கூட்டிவிடும். குரல் கமற அவர் அந்தரத்தில் நிறுத்த,

அப்படியே புல்லாங்குழல் அதை ஏந்தி மீட்டும் போதும் அதற்கும் தொண்டை கட்டி, இலேசான கமறலைப் பிரதிபலித்துக் கடந்து போய் சித்ராவிடம் கொடுக்கும்.

இப்படியான சோகப்பாடல்களின் தொகையறாவில் ஒரு ஆண் குரல் பாடிவிட்டுப் போகும்.  திரும்ப வராது.

ஆனால் இங்கோ நாயகி தன் துன்பியலைப் பாட, இன்னொரு திசையில் நாயகன் குரலைக் கொடுத்திருப்பார் ராஜா. இரட்டைப்படையாக பாடல் பரிணமிக்கும்.

காதலர் கீதங்கள் நிகழ்ச்சியை வானொலியில் நான் படைத்த காலத்தில் அடிக்கடி வந்து போன பாடல் இது.

நேற்று ஏனோ கிராமத்து மின்னல் பாடல்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

இன்று காலை உடற்பயிற்சி நேரத்தில் Touring Talkies  இல் ராமராஜன் கிராமத்து மின்னல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

நம் எண்ணமே வாழ்வு 😍

“கிராமத்து மின்னல்" இசைஞானி இளையராஜாவின் குருநாதர் ஜி.கே.வெங்கடேஷ் தயாரித்த படம். கே.ரங்கராஜ் இயக்கி ராமராஜன் நடித்த போது, படத்தின் இறுதிக் காட்சியில் ராமராஜன் இறப்பது போல அமையும்.

“ஆடு மேய்க்கிற நாயகன் செத்துப் போவது போலக் காட்டினா மக்கள் ஏத்துக்க மாட்டாங்க" என்று ராமராஜன் ஆலோசனை சொன்னாலும் முடிவு அப்படியே அமைந்ததால் தான் படமும் எழுபது நாட்களோடு ஓடி ஓய்ந்ததாகச் சொன்னார்.

ராமராஜன் மக்கள் எதை விரும்புறாங்களோ அதையே கொடுக்க வேண்டிய நாயகன். தன்னோட ஆள் சிரிச்சுச் சந்தோஷமாக ஒண்ணு சேரணும் என்று கிராமத்தார் நினைத்ததால்தான் அப்படியான படங்களுக்குத் திரும்பத் திரும்ப வந்து போனார்கள்.

ராமராஜன் இயக்குநர்களின் நாயகன் அல்ல. நட்சத்திர இயக்குநர்களை அவர் தவிர்த்ததன் உளவியல் அதுவாகக் கூட இருக்கலாம். அவருக்கு எப்படித் தன் ரசிகர்கள் எதைக் கேட்கிறார்களோ அதைக் கொடுக்கும் நகாசு தெரிந்ததால் ஐந்து வருஷத்தில் ஹிட்டடிக்கக் கூடிய நாயகனாகவும் ஆகிப் போனவர்.

கிராமத்து மின்னல் பாடல்கள் அனைத்தையும் கங்கை அமரன் எழுதினாலும் “ரெட்டைக் கிளி" பாடல் அவருக்கு அருமையான வாய்ப்பு, அந்த இரட்டைக் குதிரைச் சந்தத்துக்குப் பாட்டெழுதி விட்டார்.

சித்ராவின் குரல் அமைதியாய் மனதுக்குள் அழும் ஓசை நயம், 

ராஜாவின் குரலோ தொலைவில் இருக்கும் அந்தக் காதலிக்காய் ஓலமிட்டுப் பரந்து விரியும்.

பாடலோடு பயணிக்கும் இசைக்கும் பின்னால் அடி நாதமாய் இசைக்கும் ஒலிக்கீற்றுகளோடு ஆழமாக உறவாடிப் பார்த்தால் புரியும் அங்கே ஒரு இசை ஜாலம் புரிந்திருப்பார் ஞானியார்.

போராடும் நெஞ்சுக்குள்ளே

ஏதேதோ உண்டாச்சு....

நீரோடும் கங்கை நதி..

ஏன் இப்போ ரெண்டாச்சு

ஏ ஆச ராசா அன்பென்ன லேசா

ஏஆச ராசா 

இவ அன்பென்ன 

லேசா

https://www.youtube.com/watch?v=7K1G1WaNw5Y

 கானா பிரபா


Friday, May 10, 2024

பின்னணிப் பாடகர் T.L.தியாகராஜன் ❤️

திருச்சி லோகநாதன் என்ற பழம் பெருமை மிகு பாடகரின் வாரிசுகளில் ஒருவராகப் பிறந்து, இசை வாரிசுகளில் ஒருவராகவே ஆகிப் போனவர் தியாகராஜன் அவர்கள்.

“தேடும் என் காதல் பெண் பாவை....”

https://www.youtube.com/watch?v=sER7VivuyH0

எண்பதுகளில் இலங்கை வானொலியில் ஒலித்த அந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் T.L.தியாகராஜன். வாணி ஜெயராம் அவர்களோடு இணைந்து பாடியிருப்பார். சந்திரபோஸ் இசையில் ஒரு மலரின் பயணம் தொடங்கி இன்னும் தொடர் வாய்ப்புகளை அவர் வழங்கிச் சிறப்பித்தார்.

“ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே”

https://www.youtube.com/watch?v=iOT3bSb_RQ8

வாய்க்கொழுப்பு படப் பாடலும் அவருக்குப் புகழ் கொடுத்தது. லலிதா சாகரியோடு இணைந்து சந்திரபோஸ் இசையில் பாடினார்.

“காளிச்சரண்” படத்தில் “வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்”

https://www.youtube.com/watch?v=pYlP3TAzHYE

கூட்டுப் பாடல் 

“என்ன சொல்ல” (வாணி ஜெயராம்)

https://www.youtube.com/watch?v=0bhSAhzM9Wo

அவள் போட்ட கோலம் படத்துக்காகவும்

“வேட்டைக்காரன் நானே” (மலேசியா வாசுதேவனுடன்),  ரமணா ரமணா (லலிதா சாகரியுடன்) ஆகிய பாடல்களை “முதல் குரல்” படத்துக்காகவும் என்று இசையமைப்பாளர் சந்திரபோஸ் இவருக்கு தொடர்ந்து அருமையான வாய்ப்புகளை வழங்கியவர்.

"அமுதமழை பொழியும் நிலவிலே"

https://www.youtube.com/watch?v=3lfGX3hPK1s

இந்தப் பாடல் இலங்கை நேயர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்த பாட்டு. இப்போதும் பண்பலை வானொலிகளில் இந்தப் பாடல் விருப்பப் பாடலாக ஒலிபரப்பாகிறது. இந்த மாதிரியான பாடல்களையும் விட்டு வைக்காத ரசிகர்கள் இருக்கிறார்களே என்ற வியப்பும் எழுவதுண்டு. 

"பொம்பள மனசு" படத்துக்காக ரத்தின சூரியன் என்ற இசையமைப்பாளர் இசையமைத்தது. அவர் தற்போது உயிருடன் இல்லை.

பாடலைப் பாடியவர் பாடகர் T.L.தியாகராஜன்  அவர்கள்.

இன்று பக்தி, மெல்லிசைப் பாடல்களைப் பாடியவண்ணம் தன் இசைப் பயணத்தைத் தொடரும் T.L.தியாகராஜன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

கானா பிரபா

10.05.2024

Wednesday, May 8, 2024

ஆகாயத் தாமரை… அருகில் வந்ததே…..❤️❤️❤️

ஆகாயத் தாமரை…அருகில் வந்ததே…..❤️❤️❤️

புன்னகை முல்லை 

புது விழிக் குவளை

அழகிய அதரங்கள் 

அரவிந்தப் பூவோ?

“அரவிந்தப்பூ ” எது என்று கூகிளானிடம் கேட்டுப் பாருங்கள். அவனே திணறுவான்.

இங்கே தான் கவிஞர் வாலியாரின் கை வண்ணம் இருக்கிறது.

“அரவிந்தப்பூ” என்பது தாமரை மலரின் இன்னொரு பெயர். ஆனால் அது கையாளப்படும் இடம், காதல் தெய்வம் மன்மதன் தன் மலர்க்கணையாக் தாமரை மலரைப் பாவிக்கும் போது..

தன் காதலியின் புன்னகையை முல்லை மலரின் செந்தழிப்புக்கும், அவளின் விழிகளைக் குவளை மலர்களுக்கும், கன்னங்களை ரோஜாக் கொத்துக்கும், கொடி இடையை அல்லிச் செடிக்கும், அவளின் சிவந்த மேனியை செவ்வந்திப் பூவுக்கும் உவமை அணி செய்யும் கவிஞர் குறும்பாக இந்த அரவிந்தப் பூ ஆகிய தாமரையை அவளின் உதடுகளில் பொருத்துகிறார். விரிந்த தாமரை உதடுகளின் அச்சொட்டாக இருப்பது போலவும் அதே வேளை காதல் மயக்கத்தைக் கொடுக்கும் மன்மத பாணமாகவும் கையாண்டிருக்கிறார் கவிஞர் வாலி.

அது மட்டுமா?

ஒரு மட மாது உருகுகின்றாளே

உனக்கா புரியவில்லை ( நெஞ்சம் மறப்பதில்லை)

என்று கவியரசு கண்ணதாசன் திரையிசையிலும், 

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி (பட்டினத்தார் பாடல்), 

 மலையான் மகள் மடமாது இடம் ஆகத்தவன் (சுந்தரமூர்த்தி சுவாமிகள்),

என்று பக்தி இலக்கியங்களிலும் கையாளப்பட்ட “மடமாது” உமா தேவியாரின் இன்னொரு பெயரும் கூட.

“மடந்தை” என்னும் பெண்ணின் பருவ நிலையில் காதல் கூடும் பருவம் அது. அதுவே மடமாது ஆகி நிற்கின்றது.

வாலியாரும் தன் பங்குக்கு

“ஒரு மடமாது 

இணை பிரியாது

இருக்குமோ 

மறக்குமோ…”

என்று முத்தாய்ப்பார்.

நாடோடிப் பாட்டுக்காரன் படத்தில் கவிஞர் வாலியோடு, முத்துலிங்கம், நா.காமராசன், பிறைசூடன், கங்கை அமரன், பரிணாமன் என்று சக படைப்பாளிகளுக்கும் பகிர்ந்தளித்தார் இசைஞானி.

ஒரு படத்தில் எல்லாப் பாடலும் எனக்கே வேண்டும் என்று பேராசைப்பட்ட கவிஞர்கள் அல்ல இவர்களும்.

சங்கிலி முருகன் நாடகங்கள் போட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவரிடம் போய்ச் சேர்ந்தவர்கள் இளையராஜா சகோதரர்கள். அந்த நன்றியும், விசுவாசமும் என்றும் இருப்பதால் தான் இரண்டு படங்களுக்குப் பணமே வாங்காமல் இசை கொடுத்தார் இளையராஜா என்று வாயாரச் சொல்லி மகிழ்வார் சங்கிலி முருகன்.

“ஆகா…யத்…தா ம ரை

அருகில் வந்ததே

நாடோ..டிப் பா டலில் 

உருகி நின்றதே……”

ஊர் ஊராய்ப் பாட்டுப் பாடிப் பிழைப்பை நடத்தும் நாடோடிப் பாட்டுக்காரனின் இந்த “ஆகாயத் தாமரை” யில் ஒரு நாடகத்துக்குண்டான பாடலின் நளினம் அதன் ஆரம்பத்தில் தேங்கி நிற்கும். அதையே Zee Tamil சரிகமப வில் பாடகர் ஶ்ரீனிவாஸ் சிலாகித்திருப்பார்.

இதே படத்தில் “வனமெல்லாம் செண்பகப் பூ” பாடலை ஒரு தெருப் பாடகன் பாடுவது எப்படியென்று எஸ்பிபிக்கும், 

https://youtu.be/PAEnFZvS5iY?si=K3exIAZbXWK6vOR5

ஒரு தேர்ந்த சங்கீத ஞானம் விளைந்த பரதம் கற்கும் மாணவி எப்படிப் பாடுவாள் என்று சுசீலாவுக்குமாக 

https://youtu.be/stKH4kWXgYQ?si=D-2Kg3ptnfJThF6V

வேறுபடுத்திக் காட்டியிருப்பார் ராஜா.

அது போல் முன்னிசையாக தாரை, தப்பட்டை, தபேலா ஆவர்த்தனத்தில் தாள வாத்தியக் கையாளலை “வனமெல்லாம் செண்பகப்பூ”, “ஆகாயத் தாமரை” போன்ற சந்தோஷங்களில் மட்டுமல்ல

“காதலுக்குக் கண்கள் இல்லை மானே”

https://youtu.be/a74oKc89ieY?si=CtmN8mUl8Th86kG9

சோகத்தின் முன்னிசையிலும் தொடர்புபடுத்தியிருப்பார்.

இசைஞானி இளையராஜா & எஸ்.ஜானகி ஜோடி கட்டிய பாடல்கள் எல்லாமே தித்திக்கும். ஆனால் இது இன்னும் அதிகம் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என நினைப்பேன்.

அந்த  Zee Tamil ஆட்டோக்காரத் தம்பி புண்ணியத்தில் இன்று நாடோடிப் பாட்டுக்காரனின் இந்தப் பாடல் மீண்டும் இன்னொரு சுற்று கொண்டாடப்படுவது என் போன்ற ரசிகர்களுக்கெல்லாம் ஏதோ நம் படைப்பைக் கொண்டாடுவது போல ஒரு பூரிப்பு. பாடல் வெளியான மின்சாரமற்ற ஈழத்து வாழ்வியலில் சைக்கிள் டைனமோ சுற்றிச் சுடச் சுடக் கேட்ட காலம் எல்லாம் மீண்டது போல.

மின்னும் வண்ணப் பூக்கள் 

எல்லாம் மாலை என்று 

ஆகலாம்

மன்னன் தந்த மாலை எந்தன்

நெஞ்சைத் தொட்டு 

ஆடலாம்

நெஞ்சைத் தழுவியது துலங்கிட 

உறவு விளங்கிட

இனிய கவிதைகள் புனைந்திட

ஆகாயத் தாமரை

அருகில் வந்ததே

https://youtu.be/NbqioJCGW_A?si=128Kvu6GmW5GqfgZ

✍🏻 கானா பிரபா


#அரவிந்தப்பூ #அரவிந்த பூ

Thursday, May 2, 2024

உமா ரமணன் ❤️ மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே.....💛

ஒரு காலம் இருந்தது. ஒவ்வொரு பாடகர்களின் குரலுக்கும் ஒரு தனித்துவம் இருந்தது. அவர்கள் பாடிய பாடல்கள் அவர்களுக்காகவே வார்க்கப்பட்டது போன்றதொரு அந்நியோன்யம் தொனிக்கும். 

அவர் தம் பாடல்களை மீளப் பாடி இனிமை சேர்த்தாலும் அந்தக் குரல்களை அச்சொட்டாகப் பிரிதியெடுக்கவும் யாராலும் முடியவில்லை, அதுதான் அவர்களின் தனித்துவம். அப்படியொரு குரல் தான் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வலம் வந்த உமா ரமணனுடையது.

உமா ரமணன் ஜோடி சேர்ந்து பாடினாலும்  ஒரு ஏகாந்தமும், ஏக்கமும் ஒட்டியிருப்பது போலத் தனித்த குரல்.

ஏ.வி.ரமணன் & உமா ரமணன் காதல் தம்பதியின் கூட்டு இணைந்து 50 ஆண்டுகளைக் கடந்திருக்கும் போது ஜோடிக் கிளி ஒன்று பறந்து விட்டது.

1972 ஆம் ஆண்டு ஏவி.ரமணனின் “மியூசியானோ” இசைக்குழுவில் தன் எதிர்காலத் துணை ஆகப் போகிறவரே பாட அழைத்தார்.

இசை மேடைகளில் கூடியவர்கள் திருமண பந்தத்திலும் கூடும் காலமாக 1976 அமைந்தது.

எழுபதுகளில் ஹிந்திப் பாடல்களையெல்லாம் தன் மேடைகளில் பாடிப் புகழ் பூத்த ஏ.வி.ரமணன் & உமா ரமணன் கூட்டுக்கு முதல் வாய்ப்பே ஹிந்தியில் கிடைக்கிறது.

“Play Boy” படத்துக்காக 

Hai Ek Buddhu Chhora 

https://www.youtube.com/watch?v=bn2epGkSKJk

என்ற பாடலை சோனிக் ஓமி இசையில் ஏ.வி.ரமணன் & உமா ரமணன் ஜோடி பாடித் திரையிசை உலகில் கால்பதிக்கிறார்கள்.

அப்படியே தமிழில் இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் “கிருஷ்ண லீலை” படத்துக்காக எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் “மோகனக் கண்ணன்” 

https://www.youtube.com/watch?v=9OoryLXXeCs

பாடலை அதே ஜோடி மீண்டும் பாடியது திரையிசை உலகம் காணாப் புதுமை.

ஆனாலும் உமா ரமணனும், தானும் ஒன்றாக இளையராஜா இசையில் பாடவேண்டும் என்ற ஆசை நிராசையாக இருப்பதாக ஒரு பேட்டியில் ஏ.வி.ரமணன் குறிப்பிட்டும் இருந்தார்.கானாபிரபா

ஏ.வி.ரமணன் எண்பதுகளில் இசையமைப்பாளராக இயங்கிய சூழலில் விஜயகாந்தின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்றான “நீரோட்டம்” படத்துக்கும் இசை வழங்கியிருக்கிறார்.

அந்தப் படத்தில் இருவரும் இணைந்து பாடிய

“ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே”

https://www.youtube.com/watch?v=zgU0zY7kiP4

இலங்கை வானொலி யுகத்தில் கோலோச்சிய பாடல்.

அதே படத்தில் “ஆவோ பையா”, “தேவனின் கண்கள்” ஆகிய பாடல்களிலும் இந்த ஜோடி இணைந்து பாடியதும் குறிப்பிட வேண்டியது.

இசைஞானி இளையராஜாவின் இசையில் ஜோடிக் குரலாகவும், தனித்த பாடகியாகவும் 78 பாடல்கள் பாடியிருக்கிறார். கானாபிரபா

உமா ரமணன் என்ற பாடகிக்குக் கிடைத்த வாய்ப்புகள் அரிதாக இருந்தாலும், கிடைத்த வாய்ப்புகள் எல்லாவற்றிலும் தன் முத்திரையைப் பதித்தவர். பெண்ணுலக தீபன் சக்கரவர்த்தி போல.

“அமுதே தமிழே அழகிய மொழியே” தெள்ளு தமிழ்ப் பிள்ளையாய்,

“பூங்கதவே தாழ் திறவாய்” காதலியாய்,

“பூங்காற்றே இங்கே வந்து பாடு” சகோதரியாய்

“மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே” தாய்மையின் பிரதிபலிப்பாய்,

“ஊரடங்கும் சாமத்திலே” தோழியாய், 

“ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி” கேட்டால் கையெடுத்துக் கும்பிட வைப்பார், 

என்று கடக்க முடியாத பாடல்கள்.

“ஆனந்த ராகம் கேட்கும் காலம்” தமிழ்த் திரையிசை உள்ளவரை நிலையாய் அவர் பேர் சொல்லும் பாட்டு.

“நீ பாதி நான் பாதி கண்ணே”, “ நில் நில் பதில் சொல் சொல்”

“வெக்காத செந்தூரம் தான்” என்று அப்பழுக்கற்ற கிராமியத்தனத்திலும் (பூத்துப் பூத்துக் குலுங்குதடி பூவு) தன் முத்திரை காட்டியவர்.

கடல் அலைகளின் தாளம் 

பல ஜதிகளும் தோன்றும்

நினைவினில் ஒரு ராகம் 

நிதம் பலவித பாவம்

ஆடும் கடல் காற்றும் 

அங்கு வரும் பாட்டும்

ஓராயிரம் பாவம் ஏற்றுதே 

நிதமும் தேடுதே ராகம் பாடுதே

மனதினிலே கனவுகளே வருகிறதே 

தினம் தினம்

யார் தூரிகை தந்த ஓவியம் 

யார் சிந்தனை தந்த காவியம்

உமா ரமணனை நினைத்தால் அதுவே ஆகிறார்.

இனிமேல் பாடல்களில் மட்டும் வாழப் போகும் 

உமா ரமணனுக்குப் பிரியா விடை.

கானா பிரபா

02.05.2024