யாரது
சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது
யாரது…..
சொல்லாமல்
நெஞ்சள்ளிப்
போவது….
அந்த இரு முறை வாசிப்பிலே
தான் காண்பிக்கும் சங்கதியால் பாடலினுள்ளே இழுத்து வைக்கும் ஒரு உணர்வோட்டம் நிரம்பிய குரல்
வாணியம்மாவினுடையது.
“மேகமே….மேகமே…
பால் நிலா தேயுதே…”
பாடலிலே
“தூரிகை எரிகின்ற போது
இந்த தாள்களில்
ஏதும் எழுதாது…”
சோக ராகத்தை அவர் சுரம் பிடிக்கும் போது வயலின் வாத்தியத்துக்கும் அவரின் வாய்ப் பாட்டுக்கும் வித்தியாசம் ஏதும் இருக்காது.
இங்கேயும் பாருங்கள் இருமுறை வாசிப்பார் இப்படி,
“எனக்கொரு மலர்மாலை
நீ வாங்க வேண்டும்
“எனக்கொரு மலர்மாலை
நீ
வாங்க
வேண்டும்”
அந்த இரண்டாவதில் கொடுக்கும் ஆலாபனையே அடுத்து வரும் இனம்புரியா அவலத்தைக் கோடிட்டு விடும்.
இந்திய சினிமாவின் பெருமை மிகு இயக்குநர்களில் ஒருவரான
ரிஷிகேஷ் முகர்ஜியின் குட்டி (Guddi) என்ற ஹிந்திப் படத்தில் வசந்த் தேசாய் இசையில் மூன்று பாடல்களைப் பாடும் வாய்ப்பு வாணி ஜெயராமுக்குக் கிடைக்கிறது.
வாணி ஜெயராம் அவர்களை நான் பேட்டி கண்ட போது,
தான் ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும் என்ற இலட்சியத்துக்குக் காரணமாக அமைந்த தன் இளம் பிராயத்தில் றேடியோ சிலோன் இல் புதன் கிழமைகள் தோறும் ஒலிபரப்பான ஹிந்திப் பாடல்கள் பினாகா கீத் மாலா நிகழ்ச்சி, பதிவு கானா பிரபா
அந்த நிகழ்ச்சியில் பின்னர் தன் ஹிந்திப் பாடலான “போலே ரே பப்பிஹரா” பாடல் 16 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஒலிபரப்பானதும் கனவு பலித்ததும், தமிழ்ப் பாடல்களை றேடியோ சிலோன் கவி நயத்தோடு தொகுத்து அளித்ததை நெகிழ்வோடு பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Guddi படம் பின்னர் சினிமாப் பைத்தியம் என்ற பெயரில் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியாகிறது.
ஹிந்திப் பதிப்பில் தர்மேந்திரா என்ற சினிமா நட்சத்திரம் மீது தீரா மோகம் கொண்ட பெண்ணாக ஜெயா பச்ச்ண் நடித்த போது,
தமிழில் அதையே ஜெய்சங்கர் என்ற நட்சத்திரம் மீது மோகம் கொண்டவராக ஜெயச்சித்திரா நடித்திருப்பார்.
கமல்ஹாசன் துணைப் பாத்திரங்களில் நடித்த காலமது, இங்கேயும் அப்படியே.
ஹிந்தியில் வசந்த் தேசாய் கொடுத்த
“போலே ரே பப்பிஹரா”
https://youtu.be/56AUdC9mn4E?si=zlJn_Bm0hm-oRmKV
தமிழில் வாணி ஜெயராம் அவர்களே பாடியளிக்க, சங்கர் - கணேஷ் இசையில்
“என் உள்ளம் அழகான வெள்ளித்திரை”
https://youtu.be/72bmcsBGrwM?si=3aICu_xfxtACvcAW
ஆனது.
இசையமைப்பாளர்கள் சங்கர் - கணேஷ் இசையில் பின்னாளில் “மேகமே மேகமே” பாடுவதற்கும் அடித்தளம் ஆனது. “மேகமே” பாடல் ஜகித் சிங் பாடிய கஸல் இசையின் தாக்கத்தில் விளைந்தது.
தேகமே.. தேயினும்
தேன் ஒளி வீசுதே..,
மேகமே.. மேகமே….
பால்நிலா தேயுதே….
வாணியம்மா நினைவில் ஈராண்டு
கானா பிரபா
04.02.2025