Pages

Tuesday, July 26, 2011

நடிகர் ரவிச்சந்திரன் நினைவில்...!

"மலேசிய மண் இன்னொரு கலைஞனை இன்று இழந்து நிற்கின்றது" காலை அலுவலகத்துக்குக் கிளம்பும் வேளை என் ஐபொட் இல் இருந்த THR ராகா வானொலி நடிகர் ரவிச்சந்திரனின் மறைவுச் செய்தி பறைகின்றது. நடிகர் ரவிச்சந்திரன் சமீபகாலமாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தார் என்ற செய்திகள் வந்தாலும், இந்த இழப்பை ஏற்க மனம் மறுத்தது.

எண்பதுகளில் அத்திப்பூத்தாற் போல ரூபவாஹினியில் ஏதோவொரு வெள்ளிக்கிழமை மலரும் தமிழ்த்திரைப்படங்கள். அப்படி ஒன்றில் வந்தது தான் அதே கண்கள் திரைப்படம். அதுவரை சினிமா என்றால் சிவாஜி, எம்ஜிஆர், கமல், ரஜினி என்று சுற்றிக்கொண்டிருந்த வயசில் ரவிச்சந்திரன் என்ற நடிகரை ஒரு மர்மப்படத்தில் முதன் முதலில் காணும் போதே அந்த வயசில் அவரின் கலகலப்பான நடிப்பில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டது. பின்னர் ரவிச்சந்திரன் நடித்த எல்லாப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படாவிட்டாலும் அவர் நடித்த நல்ல படங்கள் சிலதையாவது பார்க்கக் கூடியதாக இருந்தது. காதலிக்க நேரமில்லை என்ற அவரது அறிமுகப்படத்தில் இருந்து, உத்தரவின்றி உள்ளே வா என்று வேறு சில பெயர் தெரியாத படங்களை எல்லாம் சினிமா ஈடுபாடு அதிகம் இல்லாத வயதில் பார்த்திருக்கின்றேன்.

தமிழ்சினிமாவில் எப்போதுமே இரண்டு பரபரப்பான நாயகர்கள் இருக்க, அவர்களுக்கு மாற்றாக அடுத்த தரவரிசை நாயகர்களையும் வைத்து அழகு பார்க்கும். எண்பதுகளில் ரஜினி கமல் என்றிருக்க, கார்த்திக், பிரபு , மோகன் என்று ஒரு அடுக்கு இருந்தது போல, அறுபதுகளில் இருந்து எழுபதுகளில் கமல், ரஜினி சகாப்தம் வரும் வரை எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், என்ற வட்டத்தில் ரவிச்சந்திரனையும் விலக்கமுடியாது. ஒரு கல்லூரி மாணவனுக்குரிய களையான தோற்றம், கூடவே அழகாக நடனமாடவும், நளினமாகப் பேசவும் தெரிந்த நடிகராக அறியப்பட்டவர் ரவிச்சந்திரன். அரவிந்தசாமி, மாதவன் வகையறாவுக்கு எப்படி வேட்டி கட்டி மண்வெட்டியைக் கையில் கொடுக்க முடியாதோ அதே மாதிரியான ஒரு நாகரீகக் களை ரவிச்சந்திரனுக்கு. ஶ்ரீதர், சி.வி.ராஜேந்திரன் போன்ற இயக்குனர்களுக்குக் கட்டுப்பட்டு கதையோட்டத்தோடு நாயகன் நாயகி, நகைச்சுவை, நடிகர், குணச்சித்திரங்கள் என்று சமமாக இழைய வரும் பாத்திரங்களுக்காக படைப்புக்களில் ரவிச்சந்திரன் போன்றோர் தான் தெரிவாக அமைந்து விட்டனர்.

கல்லூரிப் பருவத்தில் நடிக்க வந்து இளமை எச்சமிருந்தாலும் நடிப்புத்துறையில் ரவிச்சந்திரனுக்கான இடம் இல்லாமல் போகவே ஒரு இடைவெளி. திரைப்படக்கல்லூரி மாணவர்கள் ஆபாவாணன் தலைமையில் பரபரப்பாக இயக்கிய "ஊமை விழிகள்" படத்திலே குதிரை வண்டியில் கம்பீரமாக வந்து பெண்களின் கண்களைப் பறிக்கும் ஒரு வில்லனாக மறுபடியும் வந்த இவருக்கு இந்தப் படத்தில் கூட காதல் இழப்பில் குணம் மாறும் ஒரு பாத்திரமாக அமைந்தது. தொடந்து பலபடங்களில் குணச்சித்திரமாகத் தன் அடுத்த சுற்றை நிகழ்த்தினார், கூடவே படம் ஒன்றையும் இயக்கினார். நடிகர் ரவிச்சந்திரனுக்கு ஊமை விழிகள் படத்தைத் தவிர வேறு படங்கள் அவரின் அடுத்த சுற்றை மெய்ப்பிக்கவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் ரவிச்சந்திரனுக்கான இடம் தமிழ் சினிமாவில் என்றும் உண்டு.

ரவிச்சந்திரன் நினைவில் அவரின் திரைப்படங்களில் இருந்து பாடல்கள் சில

"நாளாம் நாளாம் திருநாளாம்" - காதலிக்க நேரமில்லை




"தொடுவதென்ன தென்றலோ" - சபதம்




"தோள் கண்டேன் தோளே கண்டேன்" - இதயக்கமலம்




"நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா" - காதலிக்க நேரமில்லை




"கண்ணுக்குத் தெரியாதா" - அதே கண்கள்



"மாதமோ மார்கழி" - உத்தரவின்றி உள்ளே வா



"விஸ்வநாதன் வேலை வேணும்" - காதலிக்க நேரமில்லை பாடற் காட்சி

Saturday, July 16, 2011

"தெய்வத்திருமகள்" கண்டேன்

வழக்கமாகத் தமிழ்த்திரைப்படங்களுக்கு விமர்சனப்பதிவை சுடச்சட இதுவரை வழங்காமல் இருந்த என் சபதத்தை முறியடித்து விட்டது இன்று தியேட்டர் சென்று பார்த்த "தெய்வத் திருமகள்".
தெய்வ மகன் பின்னர் தெய்வத்திருமகன் ஆகி இப்போது தெய்வத்திருமகள் என்று மூன்று ஆயுளைக் கண்ட இப்படத்தின் போஸ்டர்களை சிட்னியில் இன்னும் தெய்வத் திருமகன் என்றே வைத்திருக்கின்றார்கள். மதராசப்பட்டணம் படம் கொடுத்ததில் இருந்தே இயக்குனர் விஜய் மீது ஒரு தனிமரியாதையை ஏற்படுத்தி விட்டது. ஆனால் அவரது முந்திய படமான கிரீடம் படத்தில் இருந்து மூன்றாவது தடவையாக தெய்வத்திருமகள் படத்திலும் இசைக்கூட்டணியில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் வந்த பாடல்களில் "விழிகளில் ஒரு வானவில்" பாடல் கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சில் சிம்மாசனம் இட்டுவிட்டதை ஒரு பதிவாகவே போட்டிருந்தேன். படம் பற்றிய ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருந்தாலும் கூடவே விக்ரம் ஆர்வக்கோளாறினால் சொதப்பிவிடுவாரோ என்ற ஐயத்தோடு படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.

படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களும், இயக்குனர் உட்பட எவ்வளவு சிரத்தையோடு பணியாற்றியிருக்கின்றார்கள் என்பதைப் படம் முடியும் போது ஏற்பட்ட நிறைவில் உணரமுடிந்தது. இப்படியான ஒரு கதையை ஏற்கனவே ஹொலிவூட்டில் I am Sam ஆகக் கொடுத்திருந்தாலும் இந்தப் படத்தில் தமிழ்ச் சூழலுக்கேற்ற வகையில் பாத்திரங்களும் கதை அமைப்பும் பொருந்திப் போவதே இப்படத்தின் வெற்றிக்கான ஒரு படியாக அமைந்து விட்டது.
மன வளர்ச்சியற்ற பாத்திரத்தில் வரும் விக்ரம், அவரது மைத்துனியாக வரும் அமலா பால், விக்ரமுக்கு உதவும் வக்கீல் அனுஷ்கா, எதிர்த்தரப்பு வக்கீல் நாசர், இவர்களோடு தமிழ் சினிமாவுக்கே உரிய அதிகப்பிரசங்கித்தனமில்லாத குழந்தை என்று அத்தனை பாத்திரங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன.

கொஞ்சம் அதிகப்படியாகக் காட்டினாலேயே ஓவர் செண்டிமெண்ட் என்ற எல்லைக்குள் பாயும் கதை அமைப்பில் அடுத்து வரும் காட்சிகளை ரசிகனை ஊகிக்கவிட்டு ஆனால் அதை இன்னொரு திசையில் கொண்டு சேர்க்கும் இயக்குனரின் சாமர்த்தியம் முடிவு வரை இருக்கின்றது. இயக்குனரின் மனக்கண்ணில் இருந்ததை தன் காமிராக் கண்ணில் காட்டிய நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் இப்படத்தின் இன்னொரு பலம். படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருப்பது படத்துக்குப் பலம், அதே வேளை ஒவ்வொரு பாடல்களையும் ஏனோதானோவென்று படமாக்காமல் அவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக விழிகளில் ஒரு வானவில் பாடலைப் போல ஒரு அழகான பாடலைத் திரையில் காணும் முன் ரசிகன் விதவிதமாகக் கற்பனை பண்ணி அந்தப் பாடலைக் கேட்டிருப்பான். அந்தக் கற்பனையைக் கடந்து இந்தப் பாடலை எடுத்த விதம் அருமை. கூடவே கதை சொல்லப்போறேன் பாடலில் வந்த குறும்பு கிராபிக்ஸ், ஜகடதோம் பாடல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். படத்தின் பின்னணி இசையின் மூல இசை இசைஞானியின் "Paa" இசையை நினைவுபடுத்தியும், இறுதிக்காட்சிகளில் வரும் இசையும் அவ்வப்போது ராஜாத்தனமான இசையாக ஒலித்தாலும் ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாகப் பொருந்திப் போகின்றது.

ஒவ்வொரு பாத்திரங்களுக்குப் பின்னால் உள்ள நியாயத்தை ரசிகனே தீர்மானிக்கும் வகையில் அமைத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் ஆரம்பக்காட்சிகளில் தந்தை மகள் பாசத்தை ஓவராக இழுத்துவிட்டார்களோ என்று நினைக்கும் போது அந்தக் காட்சிகள் படத்தின் பிற்பாதியில் வரும் காட்சிகளுக்கான நியாயத்தன்மையைக் காட்டி நிற்கின்றன.
"தெய்வத் திருமகள்" கண்டிப்பாகப் பார்த்தே தீரவேண்டியவள்

Saturday, July 2, 2011

"ஆயில்யன் - அனு" => மணப்பந்தல் காண வாராயோ

இன்று ஜீலை 3 ம் திகதி திருமண வாழ்வில் புகும் நமது ஆயில்யன் அவர்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றோம். 2007 ஆம் ஆண்டில் பதிவுலகில் சுனாமியாக வந்து தொடர்ச்சியாக வலையுலகில் அலையடித்தவர் புதுப்புது சமூக வலைத்தளங்கள் வரும் போதெல்லாம் அவற்றைப் பெருந்தன்மையோடு உள்வாங்கி ஆர்குட், பேஸ்புக், ட்விட்டர், பஸ் என்று ஒவ்வொரு தளங்களிலும் தடம்பதித்த சிங்கன்(ம்) இவர்.

என் உடன்பிறவாத் தம்பியாக, சின்னப்பாண்டி என்ற புகழ் நாமத்தோடு வரும் ஆயில்யன் (எ) முத்துகுமரன் ஜீலை 3 ஆம் திகதி இராஜராஜேஸ்வரி (எ) அனுவைக் கைப்பிடித்துத் தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்கின்றார். இந்த வேளை அவரின் மனம் போல மாங்கல்யம் அமைந்ததோடு இந்தத் திருமண வாழ்வு தம்பதியருக்கு ஆண்டவனின் அருளையும் பதினாறு செல்வங்களையும் (மக்களையும்) பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம். தம்பி ஆயில்யனைக் கண்கலங்காமக் (தூசு விழுந்தாக் கூட) கண்ணின் மணிபோலக் காக்கும் பொறுப்பு தங்கை அனுவுக்கு உண்டு என்பதைத் தீவிரமாக இந்தவேளை வலியுறுத்துகின்றோம்.

இப்படிக்கு
ஆர்குட், பேஸ்புக், ட்விட்டர், பஸ் குழும நண்பர் குழாம்
அம்மா சங்கம் (மலையாள நடிகர் குறிப்பாக நடிகைகள் சங்கம்)
ஸ்ரேயா கொசல் நற்பணி மன்றம்
ஆண்பாவம் திரைப்பட ரசிகர் வட்டம்

இந்தவேளை ஆயில்யன் தம்பதியருக்காக நாம் தரும் சிறப்பு திருமண வாழ்த்துப்பாடல் பட்டியல்

"வாராய் என் தோழா வாராயோ மணப்பந்தல் காண வாராயோ"




"நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பெண்ணும் தான் பேரு விளங்க இங்கு வாழணும்"



"ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்"



"குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்"



"அழகிய கல்யாணப்பூமாலைதான் விழுந்தது என் தோளில் தான்"



பி.கு: இதுவரை நண்பர் ஆயில்யனுக்காகப் பயன்பட்ட "காதல் கசக்குதய்யா" பாடலை இன்னொரு நண்பருக்காக இடம் மாற்றுகின்றோம்.