Pages

Wednesday, December 30, 2009

நடிகர் விஷ்ணுவர்த்தன் நினைவாக

சில கலைஞர்களின் தோற்றத்தைப் பார்த்ததுமே எடைபோடக் கூடிய கதாநாயகக் களை இருக்கும், கூடவே கண்ணியமும் தோன்றும் அப்படி ஒரு நடிகராகத் தெரிந்தவர் தான் இன்று அதிகாலை காலமான நடிகர் விஷ்ணுவர்த்தன். தலைசிறந்த நடிகர்கள் பலருக்கு நல்ல இயக்குனர்கள் முதலில் வாய்த்திருப்பார்கள். அந்த வகையில் விஷ்ணுவர்த்தனின் முதற்படமான "வம்சவிருக்ஷா" (1972) படத்தினை இயக்கி இவரை கன்னட சினிமா உலகில் அறிமுகப்படுத்தியவர் இந்திய அளவில் பேசப்படும் க்ரீஷ் கர்னாட்.

கல்யாண்குமாரை கன்னடத்தில் தேடிப் பிடித்து "நெஞ்சில் ஓர் ஆலயம்" படைத்த ஸ்ரீதர், விஷ்ணுவர்த்தனைத் தேடிப் பிடித்து "அலைகள்" படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுலகுக்கும் அறிமுகப்படுத்தியிருந்தார். நடிகை லட்சுமி இயக்கிய (கே.பாலசந்தர் மேற்பார்வையில்) 1980 ஆம் ஆண்டு குழந்தைகள் தின ஆண்டுப் படமாக "மழலைப்பட்டாளம்' வந்தபோது அதில் ஐந்து பிள்ளைகளை வைத்துக் கொண்டு அல்லற்படும் கெளரி மனோகரி என்ற எழுத்தாளராக வந்து நகைச்சுவையான நடிப்பிலும் கலக்கினார். சமீபத்தில் கூட நண்பர்களோடு சேர்ந்து அந்தப் படத்தைப் பார்த்து ரசித்தேன். "குர்பானி" ஹிந்தித்திரைப்படம் தமிழுக்கு பாலாஜி மூலம் "விடுதலை"யாக தயாரிக்கப்பட்ட போது அதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகியோரோடு முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் இவர். இவரின் சிறந்ததொரு கன்னடத்திரைப்படம் (பெயர் ஞாபகம் வரவில்லை) தமிழில் சிவகுமார் நடித்த "பிரேம பாசம்" என்று மீள எடுக்கப்பட்டது. விஷ்ணுவர்த்தன் தமிழில் நேரடியாகப் படங்கள் செய்தது குறைவு என்றாலும் கன்னடத்தில் இருந்து இவரின் படங்கள் சில மொழி மாற்றம் கண்டிருக்கின்றன. மசாலாப்படங்கள் மட்டுமன்றி கதையம்சமுள்ள படங்களையும் தேடி எடுத்து நடித்தது இவரின் சிறப்பு.

தமிழில் வெற்றி கண்ட சில படங்களை கன்னடம் சுவீகரிப்பது என்பது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் "வானத்தைப் போல" படம் "எஜமான" என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு விஷ்ணுவர்த்தன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் கொடுத்த நம்ப முடியாத வெற்றியால் படத்தினைத் தயாரித்த விஷ்ணுவர்த்தனின் உறவினர் மாரடைப்பால் இறந்ததாக அப்போது பரபரப்பான செய்தி கூட வந்திருந்தது.

"மணிச்சித்ரதாளு" மலையாளத்தில் இருந்து கன்னடத்துக்குத் தாவியபோது "ஆப்தமித்ரா"வாகி கன்னட சினிமா உலகையே புரட்டிப் போட்ட வெற்றியைக் குவித்ததில் விஷ்ணுவர்த்தனின் பங்கும் கணிசமானது. அதுவே பின்னர் "சந்திரமுகி" ஆனது பலரும் தெரிந்த செய்தி. தமிழ் தவிர மலையாளத்தில் மம்முட்டியோடு இவர் இணைந்து நடிக்க ஜோஷி இயக்கத்தில் "கெளரவர்" என்ற திரைப்படம் வெளியானது.

"எனக்கு அரசியல் பிடிக்காது, அரசியலுக்கும் என்னை பிடிக்காது" என்று சமீபத்தில் ஆனந்த விகடனில் தன் மனம் திறந்த பேட்டியை வழங்கியிருந்தார். சினிமா நடிகை பாரதியை கைப்பிடித்துக் கொண்டவர். நடிகராக மட்டுமன்றி பாடகராகத் திரைப்படங்களில் மட்டுமன்றி பக்தி ஆல்பங்களிலும் பாடியவர். தேசிய மட்டத்திலும் மாநில அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞன் "விஷ்ணுவர்த்தன்"
























விஷ்ணுவர்த்தன் என்ற கலைஞனின் ஆத்மா சாந்தியடைவதாக

விஷ்ணுவர்த்தன் நடித்த சில படங்களில் இருந்து பாடல்கள்

அலைகள் படத்தில் இருந்து "பொன்னென்ன பூவென்ன கண்ணே"



மழலைப்பட்டாளம் திரைப்படம் தரும் "கெளரி மனோகரியைக் கண்டேன்"



விடுதலை படத்தில் தேன்றிய காதல் பாட்டு "நீலக்குயில்கள் ரெண்டு"



நிறைவாக விஷ்ணுவர்த்தன் குரலில் மலரும் "தூத்து அன்னா துன்னகே" "ஜிம்மி கள்ளு" படத்தில் இருந்து



விஷ்ணுவர்த்தன் படங்களில் குறிப்பிடத்த படமாக இருக்கும் Mutthina Hara படத்தில் இருந்து பாடல் ஒன்று காணொளியாக



உபகுறிப்புக்கள் உதவி: விஷ்ணுவர்த்தன் இணையம், விக்கிபீடியா

Monday, December 28, 2009

ஏ.ஆர்.ரஹ்மானின் ஹிந்தி ராஜ்ஜியம் - தொடர் ஆரம்பம்

எழுபதுகளில் திரைசையை அதிகம் சுவாசித்த ரசிகர்களைக் கேட்டுப்பாருங்கள், தமிழ் சினிமா இசையை விட அதிகம் அவர்கள் சிலாகிப்பது ஹிந்திப் பாடல்களைத் தான். இளையராஜாவின் வருகை அன்றைய தமிழ் ரசிகர்களை ஹிந்தி இசை கேட்கும் மரபில் இருந்து பெருவாரியாக விடுவித்துக் கொண்டது. கிராமியமும் மேற்கத்தேயமும் கலந்த ராஜாவின் புது இசை மொழியை ரசிகர்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து மொழி பேதம் பாராது நல்லிசையைக் கேட்கும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கத் தான் செய்கிறது.

இளையராஜா என்ற ஜாம்பவானால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த அளவுக்கு ஹிந்தியில் அவர் காலூன்றிய போது பெரும் வரவேற்புக் கிட்டவில்லை. பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் மட்டுமன்றி வட நாட்டின் பெரும் இயக்குனர்கள் ராஜாவின் இசையைப் பயன்படுத்திய போதும் இந்த நிலை தான் இருந்தது. ராஜாவின் திறமையை வடநாடு அங்கீகரித்தாலும் கூட முழுமையானதொரு ரசிகர் வட்டம் கிடைக்காததற்கு என்ன காரணம். அதற்குப் பதில் சொல்வது போல அமைந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் வருகையும் அவர் ஹிந்தித் திரையுலகில் நிலைநாட்டிய வெற்றிக் கொடியும்.

ரோஜா படத்தின் இசையை ஹிந்திக்கு கொண்டு போனதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று மணிரத்னத்தின் தேசியம் தழுவிய பொதுவான ஒரு கதைக்கருவாக அமைந்தது. அந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றியோடு ரஹ்மானின் இசைக்கும் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பம்பாய் படம் கூட முன்னையதை ஒத்ததே. ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முழுமனதாக அங்கீகரிக்கத் தொடங்கியது ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் வெளியான "ரங்கீலா". ஒரு சுமாரான கதையை வைத்துக் கொண்டு இசையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் நிஜ ஹீரோ. ரஹ்மானின் வருகையில் மிக முக்கியமாக இருந்தது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இசை, அதை ரங்கீலா தாராளமாகவே படைத்தது. எம் டிவி போன்ற இசை ஊடகங்கள் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமான காலகட்டத்தில் "ரங்கீலா"வின் வருகை முக்கியமானதொன்றாக அமைகின்றது. இங்கே ரஹ்மான் ஹிந்தி ரசிகர்களைக் வசீகரிக்கப் பயன்படுத்திய ஆயுதம் உயர் தொழில்நுட்பத்தில் வழங்கிய மேற்கத்தேய இசைக் கோர்ப்பு, இதன் மூலம் வட நாட்டின் மேல்த்தட்டு ரசிகர்களைக் கவர்ந்து கொண்டார். ரங்கீலா குறித்த இன்னொரு விபரமான பதிவைப் பின்னர் பார்ப்போம்.

அடுத்து ராஜாவால் அதிகம் தொட்டுப் பார்க்காத ரஹ்மானால் பரவலாகப் பரீட்சித்துப் பார்த்து வெற்றியடைந்த விஷயம் "ஹிந்துஸ்தானி" இசை. வடநாட்டு ரசிகர்களில் மேற்கத்தேய இசையை நுகர்வோருக்கு சமானமாக இருப்போர் இந்த ஹிந்துஸ்தானி சார்ந்த ரசிகர்கள். இந்த விஷயத்தில் ரஹ்மானின் பல பாடல்களை உதாரணம் காட்ட முடியும். கஸல் மரபு சார்ந்த மெட்டுக்களோடு பொருத்தமான வடநாட்டுப் பாடகர்களை அவர் உள்வாங்கிக் கொண்டார். அத்தோடு ஹிந்துஸ்தானி இசையில் பயன்படுத்தப்படும் வாத்தியக் கருவிகளை நுட்பமாகவும், நளினமாகவும் பயன்படுத்திக் கொண்டார். ஜோதா அக்பர் போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டால் அவற்றின் சிறப்புப் புரியும். ஆகவே ரஹ்மானின் ஹிந்தித் திரையுலக வெற்றிக்கு இன்னொரு காரணம் வடநாட்டு இசைமரபினை அதிகம் உள்வாங்கி மெட்டமைத்ததே.

இந்தத் தொடரில் ரஹ்மானின் இசையில் ஹிந்தியில் வெளியான தனித்துவமான திரைப்படங்கள் குறித்த பார்வை இடம்பெறப் போகின்றது. அதில் முதலாவதாக வருவது 1947 Earth. இந்திய பாகிஸ்தான் பிரிவினையோடு சம்பந்தப்படுத்தியதாக இப்படத்தின் கதைக்கரு அமைகின்றது. தீபா மேத்தா போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்திய இயக்குனரோடு ரஹ்மான் சேர்ந்ததும் அவரின் பிற்கால சர்வதேச அங்கீகாரங்களுக்கு இலகுவாகிப் போனதொன்று.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் பட்டியலாக தீபா மேத்தா இயக்கிய இரண்டாவது படம் இது. முன்னையது Fire. தனது முன்னைய படமான Fire இல் ரஹ்மானோடு கூட்டணி போட ஆரம்பித்தார் தீபா மேத்தா. Fire படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை பம்பாய் படத்தில் நவீனின் புல்லாங்குழலோடு அமையும் இசைக்கோர்வையை மீண்டும் ரஹ்மான் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தார். ஆனால் 1947 Earth படத்தைப் பொறுத்தவரை முழுமையாக புத்தம் புது மெட்டுக்களையும் இசைக்கலவையையும் உருவாக்கியிருந்தார் ரஹ்மான்.

இதில் ஏழு பாடல்களும் இரண்டு பின்னணி இசைக் கலவையும் அமைந்திருக்கின்றன. இப்படத்தில் வந்த Banno Raani பாடல் மேலே மேலே இருக்கிறானே என்றும் Ruth Aa Gayee Re என்ற பாடல் "மச்ச மச்சினியே" என்றும் பின்னர் தமிழ் பேசின. Dheemi Dheemi என்ற ஹரிஹரன் பாடல் அப்பட்டமான வட இந்திய இசைமெட்டுக்கு ஒரு சாம்பிள். Yeh Jo Zindagi Hai என்ற பாடலில் சிறீனிவாசைப் பயன்படுத்தியிருப்பார் அதை மீண்டும் சுக்விந்தர் சிங்கோடு இணைத்தும் இன்னொரு பாடலாகத் தந்திருப்பார், அழகாக வந்திருக்கிறது. சிறீனிவாஸ் போன்று சுஜாதா என்ற இன்னொரு தென்னாட்டுக் குயிலையும் Ishwar Allah பாடலில் தேர்ந்தெடுத்தது பொருத்தமான தெரிவுகள்.

1947: Earth படத்தில் வந்த முத்துக்களில் சில இங்கே

படத்தின் மூலப்பின்னணி இசைக் கோர்ப்பு



பியானோ இசையில் இன்னொரு கலவை


சுக்விந்தர் சிங் குழுவோடு பாடும் Ruth Aa Gayee Re, நளினமான இசையோடு அளவெடுத்த சுக்விந்தர் குரல் எவ்வளவு இனிமையைக் கொடுக்கிறது பாருங்கள். இந்தப் பாடல் ஹிந்தியில் வசீகரித்த அளவுக்கு தமிழில் எடுபடவில்லை.


ஹரிஹரன் பாடல் Dheemi Dheemi


Yeh Jo Zindagi Hai பாடலில் இணையும் சிறினிவாஸ், சுக்விந்தர் சிங் குழுவினர்

Tuesday, December 22, 2009

சகலகலாவல்லி பி.ஆர்.விஜயலட்சுமி

கடந்த றேடியோஸ்புதிரில் கேட்டிருந்த கேள்வியாக அமைந்தது கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு , இயக்கம் என்ற நான்கு பணிகளைச் செய்த பெண் இயக்குனர் யார் என்பதற்கு பி.ஆர்.விஜயலட்சுமி என்ற சரியான பதிலைப் பலரும் சரியான பதிலை அளித்திருந்தார்கள்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக விளங்கிய தயாரிப்பாளர், சக இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மகளே பி.ஆர்.விஜயலட்சுமி. இவர் அசோக்குமாரிடம் ஒளிப்பதிவு உதவியாளராக இருந்தவர். பின்னர் கே.பாக்யராஜின் "சின்ன வீடு" திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, அறுவடை நாள் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவுப் பணியைத் தொடர்ந்தார். "ஈரவிழிக்காவியங்கள்" என்ற திரைப்படத்தைத் தயாரித்தும் இருக்கின்றார்.

கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் ஆகிய நான்கு பணிகளைச் செய்த ஆசியாவின் முதல் பெண் இயக்குனர் என்ற பெரும் விளம்பரத்துடன் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கிய முதல் படமே "பாட்டு பாடவா". இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரகுமான், லாவண்யா ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். படமும் சுமாரான வெற்றியைக் கண்டிருந்தாலும், இந்தப் படத்திற்குப் பெரிய பலமே இசைஞானி இளையராஜாவின் இசை தான் என்றால் மிகையில்லை.

"பாட்டுப் பாடவா" படத்திற்கு முன்னர் பி.ஆர்.விஜயலட்சுமி ஒளிப்பதிவு செய்த படமே "தாலாட்டு". நவநாகரீக இளைஞன் தோற்றத்தைக் கொண்ட அரவிந்த்சாமியை அரை ட்ரவுசர் போட்டு கழுத்தில் துண்டும் கட்டிய கிராமத்து இளைஞனாக கற்பனை செய்வதே கஷ்டம் இதை இரண்டரை மணி நேரத் திரைப்படத்தில் காட்டினால் எப்படி இருக்கும்? கூடவே சுகன்யா, சிவரஞ்சனி போன்றோரும் நடித்த படம் டப்பா வரிசையில் சேர்ந்து கொண்டது. படத்தை இயக்கியிருந்தவர் டி.கே.ராஜேந்திரன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மோகன்ராஜின் அடுத்த தயாரிப்பான "பாட்டுப் பாடவா" பி.ஆர்.விஜயலட்சுமிக்கு இயக்குனர் அந்தஸ்தை வழங்கியது

சினிமா உலகத்தில் இருந்து விலகி, தமிழ் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிப் புகழ் பெற்றதோடு இப்போது சரிகம என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தயாரிப்பாளராகவும் விளங்கிவரும் பி.ஆர்.விஜயலஷ்மி தமிழ்த் திரையுலக வரலாற்றில் பெண்கள் தொழிள்நுட்பக் கலைஞர்களாக பெரும் பங்களிப்பை வழங்கியிராத வெற்றிடத்தை நிரப்பியவர்களில் ஒருவர் என்ற ரீதியில் மறக்க முடியாதவர்.

தொடந்து பி.ஆர்.விஜயலஷ்மி இயக்கிய "பாட்டுப் பாடவா" ஒளிப்பதிவு செய்த "தாலாட்டு" திரைப்படங்களில் இருந்து பாடல்கள் சில.

"பாட்டுப் பாடவா" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா பாடும் "வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்



"பாட்டுப் பாடவா" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுரேந்தர், நெப்போலியன் (அருண்மொழி) பாடும் "இனிய கானம் புதிய வேதம்"



"பாட்டுப் பாடவா" திரையில் இருந்து இளையராஜா, உமா ரமணன் பாடும் "நில் நில் நில் பதில் சொல் சொல் சொல்"



"பாட்டுப் பாடவா" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "அட வா வா ராஜா என்னோடு பாட"



நிறைவாக "தாலாட்டு" திரைப்படத்தில் இருந்து மனோ, மின்மினி பாடும் "மெதுவா தந்தியடிச்சானே என் மச்சானே"

Monday, December 21, 2009

றேடியோஸ்புதிர் 49 - யாரந்த சகலகலாவல்லி

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி ஒரு விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் இயக்குனர் பற்றிய புதிர் தான் இது. இவரும் கூட நடிகை சுஹாசினி போல ஒளிப்பதிவைப் பயின்றவர். ஆனால் ஒளிப்பதிவாளராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

இவரின் தந்தை கூட சிவாஜி காலத்தில் பிரபல தயாரிப்பாளர் சக இயக்குனராக இருந்திருக்கிறார்.
இந்தப் பெண்மணி அடுத்துக் கைவைத்தது கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் என்று எல்லாவற்றையும் ஒரே திரைப்படத்தில் செய்து ஒரு படத்தினை இயக்கியிருந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து இன்னொரு படம் கூடப் பண்ணியிருந்தார். முதலில் இயக்கிய படத்தில் ஒரு பாடகரை நாயகனாக்கியதோடு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பெயரில் உள்ள இன்னொரு நாயகனையும் நடிக்க வைத்தார். இரண்டு படங்களுக்குமே இசை இளையராஜா.
சரி, யார் இந்த சகலகலாவல்லி இயக்குனர் என்று கண்டு பிடியுங்களேன்.
பி.கு. இவர் இப்போது ஒளிப்பதிவில் இல்லாமல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தின் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கிறார்.

புதிருக்கான சரியான பதில் இதோ:
அந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர்: பி.ஆர்.விஜயலஷ்மி
இயக்கிய படம்: பாட்டு பாடவா
ஒளிப்பதிவு செய்த படங்கள்: சின்ன வீடு, அறுவடை நாள், தாலாட்டு
அவரின் தந்தை: பி.ஆர்.பந்துலு
போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

Saturday, December 12, 2009

ரஜினி 60 - சிறப்பு "பா"மாலை


ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இன்றோடு 60 அகவையை தொட்டிருக்கிறது. இன்னும் இடைவிடாது வாழ்க்கை என்னும் Test Match இல் ஆடிக்கொண்டு ரசிகர்களாகிய எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றான் இந்தக் கலைஞன்.

மலையாள சினிமாவுலகில் மோகன்லாலில் கலையம்சம் கொண்ட படங்களை எப்படி ரசிக்கின்றேனோ அந்த எல்லையில் வைத்து அவரின் பொழுது போக்குச் சித்திரங்களையும் ரசிக்கின்றேன். அதே போன்று தான் கமலை எவ்வளவு தூரம் ரசிக்கின்றேனோ அந்தளவுக்கு ரஜினியும்.

சினிமா என்ற கனவுத் தொழிற்சாலைக்கு வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் சோதனைகளும், ஏற்ற இறக்கங்களும் இருந்திருக்கின்றன. அதில் ரஜினி என்ற தனி மனிதனும் விதி விலக்கல்ல. ஆனால் தான் சினிமாவில் வகுத்துக் கொண்ட பாதையை சீராக வைத்துக் கொண்டு அதிலிருந்து இம்மியும் பிசகாமல்
பயணிக்கின்றான் இந்தக் கலைஞன். எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.

ஆரம்பத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் கூட வாழ்க்கையின் ஏதோ ஒரு சந்தப்பத்தில் இருந்து அவரைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படித்தான் நானும்.
மன இறுக்கத்தில் இருந்து விடுபடவும், சோர்வில் இருந்து எழுப்பி நின்று நிமிரவும் இவர் படங்கள் டாக்டர் கொடுக்காத மருந்து வகைகள்.

எஸ்.பி முத்துராமன் போன்ற இயக்குனர்களின் நடிகனாக இருந்த ரஜினி பின்னாளில் தனக்கான கதை, பாத்திரம் என்பதை வடிவமைக்கும் அளவுக்கு உரிமை எடுக்கக் காரணம் தன்னை நேசிக்கும் ரசிகனைப் பூரண திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே.

இன்று இந்தியாவின் குமரி முதல் இமயம் வரை தெரிந்த பிரபலம் என்ற அந்தஸ்து இருந்தாலும், தன் தலையில் கர்வத்தை இமயம் வரை ஏற்றாத கலைஞர் இவர்.

ஆண்டுகள் அறுபதைத் தொட்டிருக்கும் இந்தக் கலைஞனுக்கு நான் தருகிறேன் "பா"மாலை. இவை ரஜினியோடு இது நாள் வரை பணியாற்றிய ஒவ்வொரு இசையமைப்பாளர்களின் இசையில் இருந்தும் கோர்த்த முத்துக்கள்.

முதலில் வருவது இசைஞானி இளையராஜா இசையில் முரட்டுக் காளை படத்தில் இருந்து "பொதுவாக என் மனசு தங்கம்"



அடுத்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "போக்கிரி ராஜா" திரையில் இருந்து "போக்கிரிக்கு போக்கிரி ராஜா"



சந்திர போஸ் இசையில் வரும் இந்தப் பாடல் "ராஜா சின்ன ரோஜா" திரையில் இருந்து "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா"



இசைப்புயல் ரஹ்மானோடு "முத்து"வாக் கைகோர்த்து "ஒருவன் ஒருவன் முதலாளி


இந்த பால்காரனுக்கு பால் கறக்கவும் தெரியும் பாசம் கலந்து கொடுக்கவும் தெரியும், அண்ணாமலைக்கு இசை கொடுக்கிறார் தேவா. வந்தேண்டா பால்காரன்



"ஹலோ ரஜினி மாமா, உன்னோடு வாழ்த்துக்கள் சொல்லலாமா" , நாட்டுக்கு ஒரு நல்லவன் என்று தமிழ் மாறிய அம்சலோகா இசையில்



தேவுடா தேவுடா என்று இடைவேளைக்குக்குப் பின் வந்து ஒரு வருஷம் ஓட வைத்தார் சந்திரமுகியில். இசை வித்யாசாகர்.



"தேவாமிர்த"மாய் ஒலிக்கும் இந்தப் பாடல் சங்கர் கணேஷ் இசையமைப்பில் அலெக்ஸ் பாண்டியனைக் காட்டிய மூன்று முகம் திரையில் இருந்து



பாடும் நிலா பாலு சூப்பர் ஸ்டாருக்கு மெட்டுக் கட்டிய "துடிக்கும் கரங்கள்" படத்தில் இருந்து "சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்"



"தப்புத் தாளங்கள்" பாணியில் நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்த அந்தப் படத்தில் இருந்து விஜயபாஸ்கர் பாட்டுக் கட்டிய "என்னடா பொல்லாத வாழ்க்கை"



விஜய் ஆனந்த் என்ற இசையமைப்பாளருக்கு முகவரி ரஜினியின் "நான் அடிமை இல்லை" படப் பாடல்கள், அதிலும் குறிப்பாக "ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் ஒலிக்கின்றது"



இசையமைப்பாளர் கார்த்திக் ராஜவை அறிமுகப்படுத்திய பாடல் "பாண்டியனின் ராஜ்ஜியத்தில்



ஜீ.வி.பிரகாஷ்குமார் போன்ற அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் குசேலன் மூலம் ஒரு வாய்ப்பு "போக்கிரி ராஜா நீயும் பொல்லாதவன்"



ரஜினி ரசிகர்களின் பெரு விருப்பத்துக்குரிய பாடல் "ஆசை நூறு வகை" அடுத்த வாரிசில் இருந்து போனஸ் பாடலாக.



"தேவர் மகனில்" சிவாஜியையும், எத்தனையோ படங்களில் கமலையும், ஏன் சமீபத்தில் "பா"வில் அமிதாப்பையும் பாட வைத்த இசைஞானி இளையராஜா, ரஜினியை மட்டும் விட்டு விடுவாரா என்ன.
"அடிக்குது குளிரு" அது சரி சரி ;-)



நிறைவாக எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில் ஒன்று, காரணம் பாடிய ஜேசுதாஸ் இசையமைத்த இளையராஜா மட்டுமல்ல இந்தப் பாட்டில் வரும் வரிகள் இந்தக் கலைஞனுக்கே உரித்தானவை.

ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே

நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது

போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கை பாடங்களை
நடிப்பேன் உந்தன் மஞ்சத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே

எல்லாமே புதுமை என் பாணியில்
சொல்லாமல் புரியும் என் பார்வையில்

திறமை இருந்தால் மாலை இடு

இல்லை என்றால் ஆளை விடு




Saturday, December 5, 2009

"பா (Paa)" ர்த்தேன், பரவசமடைந்தேன்!

இசைஞானி இளையராஜாவுக்காக மட்டுமே தியேட்டர் படியேறிய இன்னொரு ஹிந்திப் படம் "பா". முந்தியது ""சீனி கம்". பா படம் நேற்றே வெளியாகியும் பதிவர்களின் அதிரடி விமர்சனங்கள் இன்னும் வராதது ஆச்சரியம்.

இன்று மதியம் 1 மணி காட்சிக்குப் போவோம் என்று நினைத்து தியேட்டருக்கு காரை விட்டேன். போகும் போது கூட்டம் அதிகமாக இருக்கும் , படம் பார்க்கும் கொடுப்பினை இருக்குமா என்ற நினைப்போடு மட்டுமே இருந்தேன். அந்த மல்டிபிளக்ஸ் தியேட்டரில் டிக்கட் வாங்கி "பா" வரப்போகும் திரையரங்குக்குள் சென்றேன். பின் வரிசையில் இரண்டு ஜோடிகள். முன்னே தனியே நான். ஆக மொத்தம் ஐந்தே பேர் பார்க்கப் போகும் ஸ்பெஷல் ஷோ "பா (Paa)" குறித்த நேரத்துக்கே ஆரம்பமானது.

"பா" என்று ஒலித்துக் கொண்டே ஒரு பெண் குரல், அட அது ஜெயா பச்சன். படத்தின் கலைஞர்களையும் அவர் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டே ஒரு சின்ன இடம் விட்டு அறிமுகம் "அமிதாப் பச்சன்" என்று சொல்லி ஆரம்பக் காட்சியை புதுமையாகப் படைத்த போதே அதீத எதிர்பார்ப்பு ஒட்டிக் கொண்டது.

ஒரு தூய அரசியல்வாதியாக வரவேண்டும் என்ற நினைப்பில் கேம்பிரிட்ஜில் மேற்படிப்பு படிக்கும் Amol Arte (அபிஷேக் பச்சன்) க்கும், டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கும் வித்யா (வித்யா பாலன்)க்கும் திடீர்க் காதல், அதனால் விளைவது திடீர்க்கர்ப்பம். குழந்தை வேண்டாம் என்ற கொள்கையோடு இருக்கும் அபிஷேக், ஆனால் இவரின் முடிவுக்கு முரண்டு பிடிக்கும் வித்யா பாலன் உறவை அறுத்து விட்டு அபிஷேக்க்கின் கண்களில் இருந்து காணாமல் போய் விடுகிறார். Progeria என்ற மூப்பு நோய் கண்ட Auro (அமிதாப்) 12 வயசில் எம்பி அபிஷேக் பச்சனைத் தன் பள்ளி விழாவில் சந்திக்கிறார். பல ஆண்டுகள் கழித்து அபிஷேக் தன்னுடைய குழந்தை தான் அது என்று தெரியாமலேயே நட்புப் பாராட்டி நேசம் வளர்க்கிறார். அபிஷேக் தன் மகனை எப்படிக் கண்டு பிடித்தார். வித்யா பாலனின் முடிவு என்ன என்பது தான் கதை.
படத்தின் முழுக்கதையையும் சொல்லி சுவாரஸ்யத்தைக் கெடுக்க விரும்பவில்லை.

பள்ளி விழாவில் சிறந்த கண்காட்சிப் பொருளுக்குப் பரிசு அறிவிக்கப்படுகிறது. அதைத் தேர்ந்தெடுத்தவர் எம்பி Amol Arte. கழிப்பறையில் இருந்து தன் பேண்டை இழுத்துக் கொண்டே இழுத்து இழுத்து நடந்து கொண்டே வருகிறான் Auro. ஆயிரத்துக்கு மேல் பள்ளிச் சிறுவர்கள் கூடியிருக்கும் அந்த பள்ளி மண்டபமே அவன் பேர் சொல்லிக் குதூகலிக்கிறது. அவனோ அமைதியாக வந்து மேடையில் பரிசுக் கிண்ணத்தை வாங்குகிறான். என்னடா இது மூடியாக இருப்பானோ என்று நினைப்பை மாற்றி விடுகிறது. தன் இரு பின் பக்கங்களையும் ஒரே சமயத்தில் தட்டி கூக்குரல் இட்டு ஆரவாரிக்கிறான் மாணவர்களோடு. இதுதான் உண்மையான Auro.

Auro என்ற குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் அமிதாப்பை படம் முடியும் வரை தேடவேண்டியிருக்கிறது. ஆகா என்னவொரு குழந்தைக்கேற்ற தனித்துவமான நடிப்பு அது. அவருக்குப் பண்ணியிருக்கும் மேக் அப் கூட செயற்கையாகத் திரையில் தெரியாதது ஒளிப்பதிவின் இன்னொரு சிறப்பு. பொதுவாக இப்படியான நோய் கண்ட குழந்தைகளை வச்சு எடுக்கும் படங்களில் அநியாயத்துக்கும் செயற்கையாக அந்தப் பாத்திரம் அனுதாப மூட்டையை கட்டி வைத்திருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு துளி கூட படம் முழுதும் அதை நிரவாமல் அதே நேரம் ஒரு கேலிக்குரிய பொருளாக இந்தப் பாத்திரத்தைக் காட்டாததும் இயக்குனர் பால்கி இன் சாமர்த்தியம் பிளஸ் வல்லமை. சீனி கம் இல் சில காட்சிகளில் தடுமாறிய பால்கி அடுத்த 2 ஆண்டுகளில் இந்தப் படம் மூலம் ஒரு தேர்ந்த இயக்குனராகி விட்டார்.

ஒரு முறை "கற்றதும் பெற்றதும்" தொடரில் சுஜாதா சொல்லியிருப்பார். ஒரு நல்ல சினிமாவில் முக்கிய பாத்திரங்கள் அனைத்துமே முதல் 15 நிமிடங்களுக்குள் ஏதோ ஒரு வகையில் பார்வையாளனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று. அதைத் தான் இந்தப் படமும் பின்பற்றியிருக்கிறது. mudi midi பாடலிலேயே வித்யா பாலன் அபிஷேக் காதல் ஆரம்பமாகி அந்த ஐந்து நிமிடத்துக்குள்ளேயே விடைபெற்றுக் கொள்ளும் வகையில் காட்சியமைப்பு இருக்கின்றது. படத்தின் எந்த ஒரு காட்சியும் அநியாயத்துக்கு நீளமாக இல்லாதது திறமையான எடிட்டிங்கை காட்டுகிறது.

பி.சி.ஸ்ரீராம் இன்னமும் மெளன ராகம் காலத்திலேயே இருக்குமாற் போல தன் ஒளிப்பதிவை இளமையாக வைத்திருக்கிறார். இவருக்குப் பின்னால் ஒரு ஒளிப்பதிவு பள்ளியே உருவாக்கி நல்ல கலைஞர்களை வளர்த்து விட்டாலும் இன்னமும் பி.சி.ஸ்ரீராமின் இடம் தனித்துவமானது என்பதைக் காட்டுகிறது காட்சி அமைப்புக்களும், ஒளிப்பதிவு நேர்த்தியும்.

"ஏன் நீங்க வெள்ளைச் சட்டை போடுறீங்க" சிறுவன் அவுரு கேட்கிறான்.
"அரசியல்வாதிகள்னா வெள்ளைச் சட்டை போடுவாங்க" எம்பி அமோல் சொல்கிறார்.
"துக்கத்துக்கும் கூட வெள்ளைச் சட்டை போடுவாங்க, இல்லையா" மீண்டும் அவுரு
"ஆமா" எம்பி அமோல்
"ஓ நாட்டைச் சாவடிச்சுட்டோமே என்ற துக்கத்தில் தானே வெள்ளைச் சட்டை போடுறீங்க, ஹோ ஹோ ஹோ" அவுரு நையாண்டி பண்ணிச் சிரிக்கிறான்.

குழந்தைகளுக்கான பள்ளிக் காட்சிகளில் வருகின்ற வசனங்களில் அதி மேதாவித்தனம் இல்லாத குழந்தைகளின் மொழி நடையும் உணர்வும் பேசப்படுகின்றன.
அபிஷேக் - வித்யா ஊடல், வித்யா - தாய் சம்பாஷணைகள் சினிமாத்தனமில்லாத எளிமை.
உண்மையிலேயே வசனகர்த்தாவும் "பா" வின் உயிரோட்டத்தில் பங்கு போடுகிறார். ஹிந்தி வகையறாப் படங்களைப் பார்க்கும் போது ஆங்கில சப்டைட்டில்கள் படத்தைக் கொன்று குழி தோண்டிப் புதைத்து விடும். அந்த வேலையை இங்கே செய்யாத புண்ணியவானைக் கூடப் பாராட்ட வேண்டும்.

சிறுவனாக வரும் அமிதாப் முதல் இடத்தில் இருந்தால், அடுத்த இடத்தில் நடிப்பில் கலக்குபவர் வித்யா பாலன். இவ்வளவு நாளும் ஒரு நோய்வாய்ப்பட்ட பிள்ளையை வைத்துக் கொண்டு நான் கஷ்டப்பட்ட கதை உனக்குத் தெரியுமா என்று பக்கம் பக்கமாக வசனம் பேசாமல் தன் கண்களாலும் முக பாவனைகளாலும் உணர்ச்சிகளைக் காட்டியிருக்கும் வித்யாபாலனுக்கு இந்தப் படம் பெரிய வரம். அமிதாப்பின் நடிப்புலக இளமைக் காலம் முழுமையான மசாலாவோடு போய்விட்டது. ஆனால் அபிஷேக்கிற்கு இப்படியான நேர்த்தியான கதைகளில் எல்லாம் வாய்ப்புக் கிடைத்திருப்பது பெரும் வரப்பிரசாதம். இவரின் தந்தையாக வந்து வழக்கம் போல் இயல்பாகச் செய்கிறார் பர்வேஷ் ராவால். வித்யா பாலனின் அம்மாவாக நடிக்கும் அருந்ததி நாக் உம் அளவாகச் செய்து சிறப்புச் சேர்க்கிறார்.

இளையராஜா எங்கே போனாலும் துரத்திச் சென்று கேட்டுப் பரவசமடையும் ரசிகர் கூட்டம் உண்டு. இந்த ஆண்டு இளையராஜாவுக்கு இந்திய அளவில் கிடைத்த ஆஸ்கார் இந்த "பா". இசைஞானிக்கு மாற்றீடாக இந்தப் படத்தில் இன்னொரு ஜீவனை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

"புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை " என்ற பாடல் அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக மெட்டுக் கட்டி இசையமைத்து ஆனால் படத்தில் வராத பாடல். ஆனால் 28 வருஷங்களுக்குப் பின்னர் "Halke se bhole" என்று குழந்தைகள் கூட்டம் கோரசாகப் பாடும் பாடலாக எடுக்கப்பட்டு திரையில் அதைக் காணும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் அளவுக்கு அந்தச் சூழ்நிலை அமைக்கப்பட்டிருக்கும்.

"மூடி மூடி" பாடல் உட்பட எல்லாப் பாடல்களையும் தேவையில்லாமல் நுழைக்காது இலாவகமாகக் காட்டி அந்தப் பாடல்களின் சூழ்நிலையோடு பொருத்திப் பார்க்கும் போது மெய்சிலிர்க்கின்றது. இளையராஜாவின் பாடல்களை குப்பனும் சுப்பனும் ரீமிக்ஸ் ஆக்கிக் கொல்லும் இந்தக் காலத்தில் தானே விதவிதமான படையலாக மீளத் தரும் போது அதன் சுகந்தமே தனி தான்.

படத்தின் மெயின் தீம் இசையான அந்த வயலின்களின் ஆவர்த்தனத்தை மகிழ்ச்சி, சோகம் என்று விதவிதமாகக் கலவையாகக் காட்டியது ஒரு பக்கம். பாத்திரங்கள் மெளனிக்கும் போது மெளனித்து, பீறிடும் போது ஆர்ப்பரித்துக் கலக்கியிருக்கிறது இசைஞானியின் பின்னணி இசை. அம்பேத்கர் நகர் என்ற வறியோர் பகுதியில் நடக்கும் அரசியல் பரப்புக் காட்சியில் தளபதியில் கலெக்டர் அரவிந்த்சாமிக்குப் பின்னணியில் ஒலித்த அதே இசை மீளவும் வந்து நிரப்புகிறது. படத்தின் ஒரு காட்சியில் அபிஷேக்கின் மொபைல் போன் ஒலிக்கும் ரிங் டோன் இசை "பல்லவி அனுபல்லவி" படத்தில் வரும் பாடலின் இசைவடிவமாகத் தந்து கிடைத்த சந்து பொந்துகளையும் இசையால் நிரப்பி விடுகிறார். இசைஞானிக்குத் தேவை இப்படியான திறமையாக வேலை வாங்கக் கூடிய ஒரு நல்ல இயக்குனர்.

படத்தைப் பார்த்து முடிக்கும் போது ஒரு எண்ணம் வருவது தவிர்க்க முடியாதது. ஒரு திறமையான இயக்குனர் மட்டுமல்ல , சாமார்த்தியமாகக் கதை சொல்லிக் கட்டிப் போட வல்ல பால்கி என்ற இயக்குனர் பி.சி.ஸ்ரீராம், இளையராஜா என்ற ஜாம்பவான்களின் திறமையை அளவோடும் அழகாகவும் பயன்படுத்தி இப்படியான படைப்புக்களைக் கொண்டு வரவேண்டும், அதை ரசிகர்கள் முழுமனதாக ஆதரிப்பதன் மூலம் அந்த எண்பதுகளில் விரவிய இசைஞானத்தை அள்ளிப் பருகலாம்.

Wednesday, December 2, 2009

2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்

வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், welcome to றேடியோஸ்பதி.
2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக றேடியோஸ்பதி ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களை மையமாக வைத்துப் போட்டிகளை நடாத்தியதை நீங்கள் அறிவீர்கள். தெரியாதவர்களுக்காக

2007 இல்
உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?

2008 இல்
2008 இன் சிறந்த இசைக்கூட்டணி?

ஆகிய போட்டிகளை உங்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அந்த வகையில்
இந்த 2009 ஆம் ஆண்டு மூன்றாவது ஆண்டாக வரும் றேடியோஸ்பதி போட்டியை சற்று வித்தியாசமாகத் தரலாம் என்று வந்திருக்கின்றேன்.

2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைசைப்பாடல்கள், மற்றும் 2008 இல் பாடல்கள் வெளியாக 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள், மற்றும் தமிழ்த் திரையிசைமைப்பாளர்களை மையப்படுத்தி இந்தப் போட்டி அமைகின்றது.

போட்டி இதுதான், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று தலைப்புக்களில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீங்கள் கட்டுரை அல்லது பதிவு எழுத வேண்டும். பதிவர்கள் தமது சொந்த வலைப்பதிவில் எழுதிய பின்னர் கட்டுரைக்கான தொடுப்பை இங்கே பின்னூட்டமாகத் தர வேண்டும்.

பதிவர்களாக இல்லாதவர்கள் தமது கட்டுரைகளை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் தற்காலிகமாக ஒரு இடத்தில் அது வலைப்பதிவாகத்
தரப்படும்.

போட்டிக்கான ஆக்கங்கள்

1. 2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்

ஏன் கவனிக்கப்பட்டிருந்தார், அந்தத் தகுதியை எட்ட அவர் உழைத்த உழைப்பு என்ற விரிவான அலசல் எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கே ஒரு விஷயம் குறித்த இசையமைப்பாளர் தமிழ்த் திரையில் தான் 2009 இல் பங்களித்திருக்க வேண்டியதில்லை. தமிழ் இசையமைப்பாளரின் பொதுவான இசைச் சாதனை. அங்கீகாரம் குறித்த கோணத்தில் எழுதலாம்

2. 2009 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் பாடல்களைச் சிறப்பாகவும், பொருத்தமாகவும் பயன்படுத்திய படங்கள் குறித்த அலசல்
பாடல்கள் திரைப்படங்களுக்குத் தேவை இல்லை என்ற சூழலில் 2009 இல் வெளியான தமிழ்த்திரைப்படங்களில் பொருத்தமாகப் பாடல்களைப் பயன்படுத்திய படங்கள்

3. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது 2009 ஆண்டின் தமிழ்த் திரையிசை எப்படி இருந்தது?

ஏற்றம் மிகுந்ததாக இருந்தது அல்லது ஒப்பீட்டளவில் 2009 ஆம் ஆண்டு இசைவரவுகள் முன்னைய ஆண்டுகள் மாதிரி இல்லை என்ற கோணத்தில் விளக்கமான ஒப்பீடுகள் வேண்டப்படுகின்றன.


2009 ஆம் ஆண்டில் வெளியான திரையிசைப்பாடல்களின் பட்டியலைக் காண

போட்டி விதிமுறைகள்

1. போட்டிக்கான ஆக்கங்களை ஜனவரி 1, 2010 ஆண்டுக்கு முன்னதாக எழுதிப் பதிவாக்க வேண்டும். பதிவுத்தொடுப்பை அறியத் தரவேண்டியது அவசியம்.

2. ஒருவர் மூன்று தலைப்புக்களிலும் தனித்தனி ஆக்கமாக எழுதலாம்.

3. போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவை தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர்களால் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றுக்கு விடப்படும். இறுதிச் சுற்றில் உங்களின் தீர்ப்பே முடிவானது. ஆகக்கூடிய வாக்குகள் பெற்ற மூன்று ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்களாகப் பங்கேற்போர் போட்டியில் பங்கு பெறத் தடை உண்டு

4. உங்கள் ஆக்கங்கள் வெறும் படங்களின்/இசையமைப்பாளர்களின் பட்டியலாக இருந்தால் புள்ளிகள் குறைவாக வழங்கப்படும் அதே நேரம் உச்ச பச்ச மேதமையான கர்னாடக இசை ஒப்பீடு, ராக ஒப்பீடு போன்றவையும் எதிர்பார்க்கப்படவில்லை. உங்கள் ஆக்கம் எல்லோரையும் சென்றடையும் விதத்தில் உள்ள இசையாக இருக்கட்டுமே.

முத்தான அந்த மூன்று ஆக்கங்களுக்கும் கிடைக்கும் பரிசு தனித்துவமானது.
தமிழ் சினிமா இசை சம்பந்தப்பட மூன்று நூல்கள் வென்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்பட இருக்கின்றன.