KAMAL HAASAN ❤️
A cinematic journey ✍🏻 K.Hariharan
நூல் நயப்பு ✍🏻 கானா பிரபா
கமல்ஹாசன் என்ற ஆளுமையை வெறுமனே நடிகர் என்ற எல்லைக்குள் நிறுத்தி விட முடியாது.
அவர் சினிமாவின் அனைத்துக் கூறுகளையும் கற்றுக் கொண்ட, கற்றுக் கொள்கின்ற ஒரு பூரணமான படைப்பாளி.
இப்படியானதொரு ஆளுமையைப் பற்றிய ஒரு நூல் வருகிறதென்றால் அதன் மீதான எதிர்பாப்பு பல மடங்காக இருக்கும்.
காரணம் அரை நூற்றாண்டு காலமாக கமல் குறித்த பல்வேறு நுணுக்கங்களை அவரின் ரசிகர்கள் மட்டுமன்றி ஒரு துறைவாரியான கல்வியாளர்களும் அணுகியிருப்பதே காரணம்.
அப்படி ஒருவர் தான் கே.ஹரிஹரன்.
“ஏழாவது மனிதன்” திரைப்படத்தின் இயக்குநர் என்ற அடையாளமே ஹரிஹரனை இலகுவாக அடையாளம் காண்பித்து விடும். தற்போது க்ரியா பல்கலைக்கழகத்தில் திரைப்படக் கற்கை நெறியின் பேராசிரியராக இருப்பவரின் பின்னணி வரலாற்றில், திரைப்பட இயக்கம் குறித்த செயற்பாடுகள் அமைப்பு ரீதியாகவும், தனி நபராகவும் நீண்டு விரிந்தது.
ஆகவே கமல்ஹாசன் குறித்த ஒரு நூலை ஆக்க வேண்டும் என்று ஹரிஹரன் முடிவெடுத்த போது அது ஒரு Master class ஆக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அணுகியிருக்கிறார்.
கமலின் 40 திரைப்படங்களை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த நூலை எழுதியிருக்கிறார்.
1981 ஆம் ஆண்டிலிருந்தே கமலோடு பழகிய அனுபவத்தின் வெளிப்பாடுகளாக ஆங்காங்கே திரைக்குப் பின்னால் உள்ள சங்கதிகளையும் தூவியுள்ளார்.
265 படங்களை நடித்து முடித்துள்ள கமல்ஹாசனிடம்
“உங்களின் 40 படங்களைத் தேர்வு செய்திருக்கிறேன்”
என்று ஹரிஹரன் சொன்ன போது “நாற்பது தேறுமா?” என்று ஐயமுற்றுச் சிரித்தாராம் கமல். ஒரு பரிபூரண கலைஞனுக்கு இயல்பாகவே இருக்கும் திருப்தியின்மையின் வெளிப்பாடு என்றே அதை நாம் பார்க்க வேண்டும்.
கமல்ஹாசனின் தந்தைக்கு இருந்த சங்கீத ஆர்வம், தமக்கையின் நடனப் பயிற்சி இதையெல்லாம் தொட்டு அவரின் குடும்பப் பின்னணியைக் கோடிட்டுக் காட்டிவிட்டு
“களத்தூர் கண்ணம்மா” படப்பிடிப்புத் தளத்தில் எல்லா அரங்க அமைப்பும் சினிமாவுக்காக அமைக்கப்பட்ட பொய்த் தோற்றம் என்ற மாயையை சிறுவன் கமல் அறிந்து கொண்ட வியப்பு மாறாமல், சாவித்திரி பிரியமாகக் கொடுத்ததைக் கூட ஏதோ set properly என்று நினைத்துச் சாப்பிட மறுக்கும் கட்டத்தில் இருந்து இந்த நூலைப் படிக்க வேண்டிய சுவாரஸ்யத்தை ஆரம்பம் எழுப்புகின்றது.
ஆனால் அவர் தொடர்ந்து சிறுவனாக நடித்த படங்கள் குறித்தோ, தங்கப்பன் மாஸ்டரிடம் நடன இயக்குநராக இருந்தது குறித்த நீட்சியோ காண்பிக்கவில்லை.
கமலின் ஆத்ம நண்பர், இயக்குநர் ஆர்.சி.சக்தியுடன் “உணர்ச்சிகள்” படத்தை உருவாக்கிய சூழலில் இவரே நாயகனாகிய எதிர்பாராத சூழல்,
பண முடையால் இந்தப் படத்தை அப்படியே போட்டு விட்டு இதே கதையை மலையாளத்தில் “ராஸலீலா” ஆக்கி பின்னணி குறித்து நீளமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கமல்ஹாசனைத் “நம்மட சொந்தம்” என்று மலையாளிகள் கொண்டாடும் அளவுக்கு மலையாளத்தில் அவர் இயங்கிய இருப்பை இந்த நூல் பதிவு செய்யவில்லை.
கமல்ஹாசனை ஒரு திறம்பட்ட கலைஞனாக இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் உருவாக்கிய விதத்தை அரங்கேற்றம் படத்தில் இருந்து, அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, அவர்கள், வறுமையின் நிறம் சிகப்பு ஈறாகத் தொட்டு அலசுகிறார் நூலாசிரியர். உன்னால் முடியும் தம்பி பேசப்படாதது பெருங்குறை.
இந்த நூலின் அதிக பக்கங்களைப் பிடிப்பது ஏறக்குறைய அந்த நாற்பது படங்களின் கதைச் சுருக்கத்தைக் கொடுத்தது. வாசிப்பு ஓட்டத்தில் ஒரு சலிப்புத்தன்மையை இது உண்டு பண்ணுகிறது.
கமல்ஹாசன் படைப்புகளைத் தேடி நுகராதவருக்கு உதவும் என்றாலும், குறித்த படைப்புகளை இன்னும் அலச வேண்டிய சூழலில் அதை நீர்த்துப் போக வைக்கிறது.
கமலை முன்னுறுத்தியே இந்த நூல் எழுதப்பட்டதால் சுற்றி இயங்கிய ஆளுமைகளைப் பற்றியோ, இணையாக இயங்கிய பாத்திரங்கள் எவ்விதம் அவரின் நடிப்பை ஒளிரச் செய்தனர் குறித்த ஆய்வு ரீதியான தேடல் இங்கில்லை.
குறிப்பாக அனந்து குறித்து தொடர் நீட்சி இல்லை, கிரேஸி மோகனின் வகி பாகம் எவ்வளவு பெரியது, கூட இயங்கிய இலக்கிய கர்த்தாக்கள் யாருமே அடையாளப்படுத்தப்படவில்லை.
திராவிட இயக்கங்களின் தோற்றம், அவற்றின் பிரிவு என்பது ஒரு சமூகப் பார்வையாக மட்டுமன்றி குடும்ப அமைப்பிலும் பொருத்திப் பார்க்க முடியும் என்ற நோக்கிலேயே நூலாசிரியர் கமல் படங்களை அணுகியிருக்கிறார். முக்கியமாக கே.பாலசந்தர் படங்களில் அத்தகு உளவியல் ஒற்றுமை இருந்ததாகவும், அதை அவரிடமேயே நேரில் சொன்னதாகவும் ஹரிஹரன் குறிப்பிருக்கிறார்.
படைப்பாளியாக கமலின் படைப்புகளை இவ்விதம் இவர் ஒப்பு நோக்கும் உரிமை உண்டெனிலும், வலிந்திழுத்துத் திராவிட அரசியலை இந்த நூலில் இணைத்து அதன் வரலாற்றோடு பயணிப்பதும் நூலின் அடிப்படைப் பண்பைத் திசை திருப்புகிறது.
போர்க்குணம் மிக்க இளைஞனான “சத்யா” வைத் தன் கருத்தியலுக்குச் சாதகமாக்குகிறார் நூலாசிரியர்.
அதே சமயம் “ஹேராம்” குறித்த இவரின் மீள் வாசிப்பு, சாகோத்ராம் என்ற பாத்திரம் குறித்த புரிதலை ஆழப்படுத்துகின்றது.
16 வயதினிலே படம் கமலை ஒரு புதிய பரிமாணத்தில், கிராமியத் தளத்தில் கொண்டு சேர்த்த விதத்தை நுட்பமாகப் பதிவு செய்த அதே வேளை "சகலகலாவல்லவன்" படத்தை இன்னொரு திசையில் வைத்தும் சிலாகிக்கிறார்.
மனச் சிதைவு கொண்ட பெண்ணை அரவணைக்கும் பாத்திரமாக மூன்றாம் பிறையிலும்,
அதே மனச்சிதைவுக்குத் தானே ஆளாகும் குணாவுமாக இரு படைப்புகளையும் தனித்தனியாக ஆய்வு செய்தும், ஒப்பிட்டு நோக்குவதும் சிறப்பான சிந்தனை.
வட நாட்டில் கமல்ஹாசனுக்கு முக்கிய திறவுகோலாக இருந்த “ஏக் துஜே கேலியே” படத்தை வாங்க ஆளே இல்லாத சூழலில் எல்.வி.பிரசாத்துக்கும் கமலுக்குமான பந்தம், அந்தப் படம் சிக்கலில் இருந்து மீண்டு வந்து வசூல் சாதனை படைத்ததை எழுதிய விதத்தை ஒரு படமாகவே கொண்டு வரலாம்.
தொடர்ந்து ஹிந்திப் படங்களில் கமலின் இயக்கத்தைப் பதிவு பண்ணவில்லை.
சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து படங்களின் வழியாக கே.விஸ்வநாத் என்ற படைப்பாளியோடு கமலை இணைத்தாலும், விஸ்வநாத்தின் பரிமாணத்தை ஆழப்படுத்தியிருக்கலாம்.
கமல்ஹாசன் என்ற கலைஞனின் தொடர் இயக்கத்தில் இளையராஜாவின் வகிபாகத்தை ஆங்காங்கே தொட்டுச் செல்வதன் மூலம் விலக்க முடியாத பந்தத்தை இருவரும் கொண்டிருப்பதைக் காட்டி நிற்கின்றது.
“நீ கே.பாலசந்தர் ஸ்கூலில் மட்டும் இருக்க முடியாது,
எஸ்.பி.முத்துராமன் ஸ்கூலிலும் இயங்க வேண்டும்” என்று SPM சொன்னதே கமல் பட வரலாறும் கூறுகின்றது.
KAMAL HAASAN — A cinematic journey ஒலி வடிவில் Audible இல் கிடைக்கிறது. ஒலிக் கேட்பு அனுபவத்தில் மிக மோசமான தயாரிப்பு இது.
ஒலி கொடுத்தவருக்கு தமிழ்ச் சூழல் குறித்த பூரண அறிவோ, படங்கள், பெயர்கள் குறித்த ஞானமும் தேடலும் இல்லை.
விருமாண்டி படத்தில் இடம்பெறும் முக்கிய பாத்திரமான “கோட்டைச்சாமி” ஐ “கொட்டைச்சாமி” என்கிறார். “கண்மணி அன்போடு” பாடலை “கண்மணி உன்னோடு” என்று சொல்கிறார்.
அத்தோடு கமலஹாசன் உட்பட ஆங்காங்கே வரும் இயக்குநர்கள் குரல்களை மிமிக்ரி செய்கிறேன் பேர்வழி என்று கடுப்பேத்துகிறார்.
ஒலிப்பெட்டக முயற்சியில் மிக மோசமான செயற்பாடு இது.
உலக சினிமா குறித்த விசாலமான பார்வையை நூலாசிரியரும் கொண்டிருப்பதால் கமல்ஹாசனின் நடிப்பில் இருந்த உலக நடிகர்களின் தாக்கத்தையும், அவர்களுக்கான ஒரு மரியாதையாக கமல் அவற்றைக் கையாண்டிருப்பதையும் நுணுக்கமாகப் பதிவு செய்கிறார்.
மைக்கேல் மதன காமராஜனில் நான்கு பாத்திரங்கள் இருந்தும், காமேஸ்வரன் எடுபட்டதும், ஆளவந்தான் “நந்து” எடுபடாதாதையும் ஓப்பு நோக்குகின்றார்.
நிகழ் உலகத்தில் வாழும் சினிமா ரசிகன் தான் தேடும் கனவுலகம் பொய்த்ததை கமல்ஹாசனின் படைப்பு ரீதியான தோல்விகளுக்கும் ஒரு காரணியாக முன் வைத்து உதாரணம் பறைகிறார்.
எண்பதுகளின் இறுதியில் ஒரு சினிமாப் பத்திரிகையில் (ஜெமினி சினிமா ?) கமல் தன்னுடைய படங்கள் குறித்த அனுபவப் பார்வையைக் கொடுத்திருந்தார்.
இந்த நூலைப் பொறுத்தவரை இதை ஒரு நல்ல தொடக்கம் என்று சொல்லலாம். Conversations with Mani Ratnam நூல் கொடுத்த திருப்தியைக் கொடுக்கவில்லை. அதே பாங்கில் பரத்வாஜ் ரங்கனோடு, ஹரிஹரனும் இணைந்து கமல்ஹாசனோடு இன்னொரு முயற்சியில் இறங்க வேண்டும். ஏனெனில் பரத்வாஜ் ரங்கனோடு ஹரிஹரன் கொடுத்த பேட்டியில் இவ்விருவர் அலைவரிசையும் கச்சிதமாக கமல்ஹாசனை அழகாக அடையாளப்படுத்தியது.
இந்தப் பகிர்வை ஒலிவடிவில் கேட்க
https://www.youtube.com/watch?v=5JWVM83-nYI
கானா பிரபா
30.07.2024