பரபரப்பான இன்றைய திரையிசைச் சூழலில் ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள், ஒரு இசையமைப்பாளர் அடுத்து என்ன தரப் போகிறார் என்று தொண்ணூறுகளின் இசை ரசிகர்கள் இன்று வரை ஒரு எதிர்பார்ப்போடு இருக்குமளவுக்கு ஒரு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இன்னொருவர் வித்யாசாகர். பின்னவருக்கு அர்ஜூன், தரணி, கரு.பழனியப்பன் போன்றோரின் கூட்டணி வெகு சிறப்பாக அமைந்ததால் அவ்வப்போது வெளிக்கிளம்பி ஒரு அலை அடித்து விட்டு கேரள சினிமாப் பக்கம் போய் விடுவார்.
கார்த்திக் ராஜா நம்மாள், ராஜா வீட்டுப் பிள்ளை என்ற உரிமையோடு நேசிக்கும் தீவிர இளையராஜாவின் ரசிகர்களைத் தாண்டி கார்த்திக் ராஜாவின் அசாத்திய இசைத் திறனே இன்று வரை அவரை நம்பிக்கை நட்சத்திரமாக எண்ணும் பொதுவான இசை ரசிகர் வட்டமுண்டு.
ஒவ்வொரு இசையமைப்பாளரும் எத்தனையோ படங்களில் தமது சாகித்தியத்தைக் காட்டியிருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி ஒரேயொரு படைப்பு அவரின் மிகச்சிறந்த முத்திரைப் படைப்பாக இருக்கும்.
ராஜாவைப் பொறுத்தவரை என்னளவில் தளபதி படத்தைச் சொல்லுவேன். ஆனால் இது ஒவ்வொரு ரசிகருக்கும் வேறுபட்டது.
ஆனால் கார்த்திக் ராஜா கொடுத்ததில் பரவலான வாக்குகள் பெற்று முன்னணியில் இருப்பதென்னவோ கண்டிப்பாக "டும் டும் டும்" படப் பாடல்களாகத் தான் இருக்கும். மணிரத்னம் நிறுவனத் தயாரிப்பு, அவரின் உதவியாளர் அழகம் பெருமாள் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒரு யதார்த்தபூர்வமான கதையும், கதை மாந்தர்களும். பொருத்தமான நடிகர் தேர்வு இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் கார்த்திக் ராஜாவின் இசை.
இது தான் இளையராஜா, ரஹ்மான் பாணியைத் தாண்டிய தனித்துவமான இசை என்று சொல்ல வைக்கும் இசை அடையாளம்.
இந்த மாதிரிக் கூட்டணி வாய்த்திருந்தால் கார்த்திக் ராஜா தொடர்ந்து பத்து வருடங்களைக் கட்டியாண்டிருப்பார் என்று நினைப்பதுண்டு.
இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களைப் பற்றியும் சிலாகித்து எழுதலாம்.
"ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தாய் பொருளென்னவோ" இந்தப் பாடல் எவ்வளவு தூரம் ஆத்மார்த்தமாக உருவாக்கப்பட்டதோ அவ்வளவு நேர்த்தி பாடல் உருவாக்கத்திலும்.
https://youtu.be/crw0T0gKL-k
"உல்லாசம்" படம் அமிதாப் பச்சனின் ஏபிசிஎல் நிறுவனம் தயாரித்தது. விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கிய முதல் படம். கார்த்திக் ராஜாவுக்கு ஆரம்ப காலத்தில் கிட்டிய பெரிய வாய்ப்பு. கவிஞர் பழநிபாரதியோடு பாடகர் அருண்மொழி, இளையராஜாவின் அண்ணன் மகன் பார்த்தி பாஸ்கர் ஆகியோரும் பாடல் எழுத படம்
"கொஞ்சும் மஞ்சள் பூக்கள்" அப்போதைய ஹரிஹரன் & ஹரிணி வெற்றிக் கூட்டுக் குரல்கள். "முத்தே முத்தம்மா" ரகளையான துள்ளிசை கமல்ஹாசன், ஸ்வர்ணலதா.
"யாரோ யார் யாரோ" என்ற சின்னப் பாட்டு இளையராஜா, பவதாரணி குரல்களோடு அந்தப் பாடல் வரிகளையொட்டிக் கொடுப்பாரே ஒரு இசை வெள்ளம் தாறுமாறு தான்.
இவையெல்லாம் தாண்டி அந்தப் பாட்டு, அதை நினைக்கும் போதே காற்றில் மிதக்க வைக்கிற ஆரம்ப இசை அதே தான் "வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா" https://youtu.be/GRIQyIfNhIY
பல்கலைக் கழகக் காலத்தில் கேட்ட பாட்டு "யாரவள் யாரவள்" என்ற அந்த கோரஸ் முத்தாய்ப்பும் உன்னிகிருஷ்ணன், ஹரிணியின் குரல்களுமாக அது தொண்ணூறுகளில் பல காதல் ஜோடிகளின் இதயத்துள் உச்சரித்துக் கொண்டிருந்த மந்திரப் பாட்டு.
"நாம் இருவர் நமக்கு இருவர்" சுந்தர்.C இயக்கி பிரபு தேவாவுக்குத் தாடியை மழித்தும் மழிக்காமலும் வித்தியாசம் காட்டிய (தலையில் அடித்துக் கொள்ளும் சுமைலி)
படம். நடிகை மீனாவின் மார்க்கெட் சரிந்து கொண்டிருந்த காலம், கவர்ச்சி காட்டினால் தான் அடுத்த சுற்று என்று ஈமூ கோழியாக்கி மோசம் செய்து அவரின் குடும்பக் குத்துவிளக்கு இமேஜ் ஐக் காலி செய்த படம். இப்படி இன்னோரன்ன பெருமைகள் (?) இருந்தாலும், அன்றைய இசை ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான பாடல் கிட்டிய வகையில் முந்திய பாவங்களை எல்லாம் மன்னிக்க வைத்தது.
அதுதான் கார்த்திக் ராஜா கொடுத்த "இந்தச் சிரிப்பினை அங்கு பார்த்தேன்" ஹரிஹரன், விபா சர்மா குரல்களில் பாடல் மெட்டும் இசையும் அதகளம் தான்.
இதே படத்தில் வந்த "கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா" பாடலையும் நான் கேட்காது விட்டு வைக்கவில்லை.
நாம் இருவர் நமக்கு இருவர்
படத்தின் பாடல்கள் https://youtu.be/7L_hjC1bvGc
எஸ்.பி.முத்துராமன் தயாரித்து இயக்கிய "பாண்டியன்" படத்தில் "பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா" (மனோ, சித்ரா) பாடல் தான் கார்த்திக் ராஜா இசையமைத்து வெளிவந்த முதல் பாடல் என்பது இது நாள் வரை சொல்லப்படும் உண்மை. அதே காலகட்டத்தில் "பொன்னுமணி" படத்தில் "ஏய் வஞ்சிக் கொடி வந்ததடி" (இளையராஜா பாடியது) பாடலுக்கும் இசையமைத்தார். "ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா" என்ற பாடல் சக்கரைத் தேவன் படத்தில் ராஜா மெட்டுக்கு கார்த்திக் ராஜா இசைக்கோர்ப்பு என்று அறிய முடிகிறது.
இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜாவின் சாகித்தியம் மீது அபார நம்பிக்கை. அதற்கு இம்மாதிரியான வெளிப்படுத்தல்களும் காரணமாக இருக்கலாம். உழைப்பாளி உள்ளிட்ட படங்களுக்குக் கார்த்திக் ராஜாவே பின்னணி இசை. சாதாரண இசை ரசிகர்கள் நமக்கே கார்த்திக் ராஜா கொடுத்ததை வைத்து அவரின் இசைத்திறனை மதிப்பிடமுடிகின்றதென்றால் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கும் ராஜாவாவுக்கு எவ்வளவு மதிப்பீடு இருக்கும்.
இயக்குநர் விக்ரமன் இளையராஜாவோடு கூட்டுச் சேரவிருந்த "இனியெல்லாம் சுகமே" படத்தில் நீங்கள் கார்த்திக் ராஜாவைப் பயன்படுத்தலாமே என்று ராஜாவே கேட்டதாகத் தனது "நான் பேச நினைப்பதெல்லாம்" நூலில் விக்ரமன் குறிப்பிட்டிருந்தார். விக்ரமன் ராஜாவின் பரிந்துரையை ஏற்று அந்தப் படமும் வெளிவரக் கூட வாய்ப்பு இருந்திருக்குமேயானால் கண்டிப்பாக இன்னொரு இசைப் புதையல் கிட்டியிருக்கும்.
"மாணிக்கம்" திரைப்படமே கார்த்திக் ராஜாவை அதிகாரபூர்வமாக இசையமைப்பாளராக முன்னுறுத்தி வெளிவந்தது. டி.சிவா தயாரிக்க, ராஜ்கிரணைக் காலி பண்ணிய படம்.
ஆல்பம் திரைப்படம் கவிதாலயா தயாரிப்பு இயக்குநர் வசந்த பாலனின் முதல் படம் என்ற பேரிகையோடு வந்தாலும் வசூல் ரீதியாகக் கவனத்தை ஈர்க்காத படம். ஆனால் கார்த்திக் ராஜாவுக்கு இந்த ஆல்பமும் மறக்க முடியாத இசை ஆல்பம். "செல்லமே செல்லம் என்றாயடி" என்று ஷ்ரேயா கோசலைத் தமிழுக்குக் கூட்டி வந்த படம் இணைந்து பாடியவர் ஹரிஹரன். "காதல் வானொலி சேதி சொல்லுதே" (சுஜாதா, ஹரிஷ் ராகவேந்திரா) பாடல் தான் இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.
https://youtu.be/R4KElZlDhp4
பார்த்திபன் தனது முதல் படமான புதிய பாதை படத்தில் சந்திரபோஸ் உடன் ஜோடி சேரும் போதே நல்ல பாடல்களைத் தருவித்தவர்.
அவர் படங்களில் பாடல்கள் சோடை போகாது. கார்த்திக் ராஜாவுடன் சேர்ந்த குடைக்குள் மழை படத்தின் வணிகத் தோல்வி பாடல்களையும் இழுத்துத் தள்ளி விட்டது. "அடியே கிளியே" பாட்டு இளையராஜாவே பாடி இசையமைத்ததோ என்றெண்ணத் தோன்றும். அந்தப் பாடல் குறித்த என் சிலாகிப்பு http://www.twitlonger.com/show/n_1snavea
"உள்ளம் கொள்ளை போகுதே" படம் தான் சுந்தர்.C கார்த்திக்ராஜாவுக்கு முன்னதை விட இசை மரியாதை செய்த படம். கார்த்திக் குஷியாக சின்னச் சின்னப் பாடல்களைக் கொடுத்திருப்பார். "கவிதைகள் சொல்லவா" அருமையான முத்து.https://youtu.be/7Hmrvj-XaF0
"நதியோடு பேசும் தென்றல்" https://youtu.be/CAy5CjKBCJQ
பாட்டின் பிரம்மாண்டமான இசை எடுப்பு பாடல் காட்சியில் விஜய்காந்தும், குட்டி பொம்மையுமாகப் பொருந்தாது சறுக்கி அற்புதப் பாட்டைக் காட்சி வடிவத்தில் மோசம் செய்த படம் "அலெக்சாண்டர்"
பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் கேயார் இயக்க விஜய்காந்த் நடித்த படமது.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். ஆனால் ரயிலில் இருந்து இறங்க வேண்டுமே நான் :-)
வேலைக்குப் போகும் ரயிலில் இன்று பிறந்த நாள் காணும் கார்த்திக் ராஜாவுக்கு வாழ்த்துகளோடு
ஒரு சிறப்புப் பகிர்வு இது. விட்ட குறை தொட்ட குறையை இன்னொரு பதிவாகத் தருகிறேன்.