Pages

Thursday, November 19, 2009

றேடியோஸ்புதிர் 48 - யாரவர்....யாரவர்?

கடந்த ரேடியோஸ்புதிர் கொஞ்சம் கஷ்டம் என்பதால் நண்பர்கள் பலர் சிக் லீவ் எடுத்திருந்ததாகச் சொல்லியிருந்தார்கள். எனவே இந்த முறை கொஞ்சம் இலகுவான புதிரோடு களம் இறங்குகின்றேன்.

ஒரு ஹிந்திப் பிரபலம் தான் சேமித்த காசையெல்லாம் கரைக்கவேண்டும் என்ற விதிப்பயன் காரணமாக சினிமாப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஹிந்தி, தமிழ் என்று படங்களைத் தயாரித்து சேமித்த காசையெல்லாம் கரைத்தார். அப்படியாக அவர் தயாரித்த ஒரு தமிழ்ப்படத்திற்கு இயக்கம் பிரபல விளம்பர இரட்டை இயக்குனர்கள். ராசியில்லாத அந்த திறமைசாலி இளைஞன் தான் இசை. அன்றும் இன்றும் முன்னணியில் இருக்கும் நாயகனோடு அன்றைய ராசியில்லாத நாயகனும் நடித்திருந்தார். அந்த ராசியில்லா நாயகன் படத்திலே ஆமையை நண்பனாக "இமையவர்மன்" என்று பெயர் சூட்டி தன் காதலை எல்லாம் சொல்வாரே.

புதிரில் சொன்ன விஷயங்களை வைத்து படத்தையோ அல்லது அந்த இசையமைப்பாளரையோ ஊகிக்க முடிகிறதா? இல்லாவிட்டால் இந்த ஒலித்துண்டத்தையாவது கேட்டுப் பாருங்களேன் கண்டுபிடித்தால் உற்சாகம் தான் ;)

Get this widget | Track details | eSnips Social DNA


கேட்ட கேள்விக்கான சரியான பதில்

படம்: உல்லாசம்

நடிகர்கள்: அஜித், விக்ரம்

தயாரிப்பு: அமிதாப் பச்சனின் ஏ.பி.சி.எல் கார்ப்பரேஷன்

இசை: கார்த்திக் ராஜா

இயக்கம்: ஜேடி - ஜெரி

பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

Tuesday, November 17, 2009

"ஏவிஎம் தந்த எஸ்பிஎம்" நூலாசிரியர் ராணிமைந்தன் பேட்டி

கண்ணதாசனின் "தென்றல்" பத்திரிகையில் ஆரம்பித்து பின்னர் ஏவிஎம் ஸ்ரூடியோவில் சேர்ந்து எடிட்டிங் பயிற்சி பெற்று , உதவி இயக்குனராக மாறி பின்னர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனராக இருந்தவர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள். ரஜினி, கமல் போன்ற பெரும் நடிகர்களை வைத்து இயக்கியிருந்தாலும் மிகவும் அடக்கமான எளிய மனிதர் இவர். சில வருஷங்களுக்கு முன்னர் ஏவிஎம் ஸ்ரூடியோவைப் பார்க்கச் சென்ற நான் இவரை சந்தித்துப் பேசியபோது இருகரங்களையும் பற்றியவாறே நேசத்துடன் பேசியது இன்னும் பசுமரத்தாணி போல இருக்கின்றது.

நான் பணிபுரியும் இன்னொரு எப்.எம் வானொலியான "தமிழ் முழக்கம்" வானொலிக்கு இந்திய செய்திகளைப் பகிர்ந்து வரும் திரு ராணி மைந்தன் அவர்கள் பல சுயமுன்னேற்ற, தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கின்றார். அவர் படைப்பில் அண்மையில் வெளி வந்ததே விகடன் பிரசுரமான "ஏவிஎம் தந்த எஸ்பிஎம்". இந்த நூல் ஆக்கப்பட்ட பின்னணி குறித்த ஒலிப்பேட்டி ஒன்றை கடந்த வாரம் தமிழ் முழக்கம் வானொலிக்காக திரு.ராணி மைந்தன் அவர்களைத் தொடர்பு கொண்டு எடுத்திருந்தேன்.
அந்தப் பகிர்வை இங்கே கேட்கலாம்.ஒலிப்பேட்டியில் இடம்பெற்ற சில சுவையான தகவல்கள்.

ராணி மைந்தனின் ஒருவருஷ கால உழைப்பாக இந்த நூல் வந்திருக்கின்றது.

எஸ்.பி.முத்துராமன் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அப்போது ராணி மைந்தனை அழைத்து வைத்து கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு படமாக தன் அனுபவங்களை சொல்லச் சொல்ல பதினாறு மணி நேரங்களுக்கு மேலாக ஒலிப்பதிவு செய்து நூலை ஆக்கியிருக்கின்றார்.

முத்துராமன், ஜெய்சங்கர் போன்றோரின் டயரியை எடுத்து ஒவ்வொரு மாதமும் தனக்குத் தேவையான நாட்களின் கால்ஷீட்டை இவரே எழுதி வைத்துவிடும் அளவிற்கு உரிமை எடுத்துக் கொள்வாராம்.

ரஜினியை வைத்து 25 படங்களை எடுத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் என்ற பெருமை எஸ்.பி.முத்துராமனுக்கே சாரும்.

ரஜினிகாந்த் தொடர்பு கொண்டு எஸ்.பி.முத்துராமன் வாழ்க்கை வரலாற்று நூலை விழாவாக எடுத்துச் செய்ய வேண்டும் என்றாராம். ஆனால் எந்திரன் படப்படிப்பு இருந்த காரணத்தால் எளிமையாக ரஜினி வீட்டில் வைத்து வெளியிடப்பட்டது.

Thursday, November 12, 2009

இசையமைப்பாளர் கங்கை அமரன்

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், "அன்னக்கிளி" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது.

இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் "பத்ரகாளி" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே நான் தொட்டுச் செல்வது இசையமைப்பாளர் கங்கை அமரன் மட்டுமே. மற்றையவையை பிறிதொரு வேளை பார்த்துக் கொள்வோம்.

அமர்சிங் என்ற கங்கை அமரன் அடிப்படையில் நல்லதொரு இசைக்கலைஞன், தன் அண்ணன்மார் பாவலர் வரதராஜன், ராசய்யாவோடு ஊர் ஊராய்ப் போய்ப் பாட்டுக் கட்டியவர். ஆரம்பத்தில் பெண் குரலுக்குப் பொருத்தமாக ராசய்யாவின் குரல் பவனி வந்து கொண்டிருந்து ஒரு கட்டத்தில் அவரின் குரல் நாண் ஆண் சுருதி பிடித்தபோது பெண் குரலுக்கு அடுத்த ரவுண்ட் கட்டியவரே இவராம்.

பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வந்த காலகட்டத்தில் "புதிய வார்ப்புகள்" படத்தில் கதாநாயகனாக அரிதாரம் பூசக்கிடைத்த பாக்கியத்தை இன்னொரு ராஜ் பறித்துக் கொண்டதால் கதாநாயக அவதாரம் மட்டும் திரையில் கிட்டாது போனாலும் இவரின் பாட்டுக் கட்டும் பணி மட்டும் ஓயாது தொடர்ந்தது.
இளையராஜாவின் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிட்டிய எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதை "செந்தூரப்பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே" என்று தேன் கவியைக் குழைய விட்டு அண்ணனுக்குப் பெருமை சேர்த்தார் கவிஞர் கங்கை அமரன்.

"கோழி எப்படிய்யா கூவும்" என்று சீண்டினார் இவரைப் போல அன்று இளவட்டக் கவிஞராக இருந்த வைரமுத்து கங்கை அமரன் எடுக்கவிருந்த "கோழி கூவுது" படத் தலைப்பைக் கேட்டு விட்டு. "உங்க பேரில் வைரமுத்து இருப்பதால் வைரமும் முத்தும் கொட்டியா கிடக்குது?" என்று விட்டுக் கொடுக்காமல் பதிலடி கொடுத்த அறிமுக இயக்குனர் கங்கை அமரனுக்கும் இயக்குனராக நல்லதொரு அங்கீகாரம் கிட்டியது. கோழி கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கும் கூவியது.

மீண்டும் என் முதல் பாராவுக்கே வருகின்றேன். இங்கே நான் சொல்ல வந்தது இசையமைப்பாளன் கங்கை அமரன் பற்றி. "இவன் மட்டும் ஒரே வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சிட்டிருந்தால் ஒரு நல்ல இசையமைப்பாளர் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருப்பார்" சொன்னவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அல்லவா.

கங்கை அமரனின் பாடல்களைக் கேட்டால் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதிப்பும், 70 களில் இருந்த இளையராஜாவின் பாணியும் இருக்கும். அந்த வகையில் தொடர்ந்து அவரின் ஒரு சில பாடல்களைத் தாங்கி வரும் இசைத் தொகுப்பைக் கேளுங்கள்.

இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது அப்போது பிரபலமாக இருந்த காஜா இயக்கத்தில் "விடுகதை ஒரு தொடர்கதை" மூலம். அந்தப் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் காலங்கள் கடந்த பின்னும் தேனாக இனிக்கும். ஒன்று "விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.ஜானகி பாடும் பாடல். இன்னொரு பாடல் இங்கே நான் தரவிருக்கும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் "நாயகன் அவன் ஒரு புறம்"
சம காலத்தில் வந்த இன்னொரு படம் "மலர்களே மலருங்கள்". இந்தப் படத்திலும் கங்கை அமரனுக்குப் புகழ் சேர்த்தவை பி.சுசீலா பாடிய சுட்டும் விழிச்சுடர் தான், இன்னொன்று இங்கே நான் தரும் ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி குரல்களில் 'இசைக்கவோ நம் கல்யாண ராகம்'
"அப்போல்லாம் இளையராஜாவை சந்திக்கவே முடியாத அளவுக்கு மனுஷர் பிசியா இருந்த காலத்தில் நம்ம ரேஞ்சுக்கு ஏற்றவர் கங்கை அமரன் தான் என்று முடிவு பண்ணி அவரோடு சேர்ந்து படம் பண்ணினேன்" இப்படிச் சொல்கிறார் இயக்குனர் பாக்யராஜ். சந்தர்ப்பம் அப்படி அமைந்தாலும் இயக்குனராக பாக்யராஜ் செய்த படங்களில் முந்தானை முடிச்சு நீங்கலாக இளையராஜாவோடு இணைந்து அவர் பணியாற்றிய படங்கள் பெரு வெற்றி பெற்றது இல்லை எனலாம். ஆனால் சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் இவர்கள் வரிசையில் கங்கை அமரனோடு சேர்ந்து பணியாற்றிய சுவரில்லாத சித்திரங்கள், மெளன கீதங்கள் படங்களும் வெற்றிப் படங்கள் வரிசையில் சேர்ந்து கொண்டன. சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் வரும்
"காதல் வைபோகமே" பாடலை முன்னர் இன்னொரு இசைத் தொகுப்பில் தந்ததால் நான் இங்கே தருவது மெளன கீதங்கள் படத்தில் இருந்து " மூக்குத்திப் பூ மேலே காத்து"1990 களில் ஒரு ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு கங்கை அமரன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பரிவாரங்களோடு வருகின்றார். கங்கையும் எஸ்.பி.பியும் சேர்ந்தால் கிண்டலுக்குக் கேட்க வேண்டுமா. "இவனெல்லாம் இசையமைச்சு நான் பாடவேண்டியதாப் போச்சு பாருங்க" என்று சொல்லி ஓய்கிறார் எஸ்.பி.பி மேடையில் வைத்து. அரங்கம் அந்த நேரம் ஒரு கணம் நிசப்தமாக இருக்கிறது. அடுத்த கணம் "நீலவான ஓடையில்" பாடலை ஒரே மூச்சில் பல்லவி முழுக்கப் பாடி விட்டு கங்கை அமரனை உச்சி மோந்து கட்டிப் பிடிக்கிறார் எஸ்.பி.பி. மலையாளத்தில் "நீலவானச் சோலையில்" என்த்று பாடிச் சென்றவர் கே.ஜேசுதாஸ்."வாழ்வே மாயம்" கங்கை அமரனுக்கு வாழ்நாள் சொத்து.அதே மேடையில் அடுத்துப் பாட வருகின்றார் எஸ்.ஜானகி. "பாலு மாதிரியே நம்ம கங்கை அமரன் இசையில் எனக்குப் பிடிச்ச பாட்டு ஒண்ணு சொல்லணும்" என்று சொல்லி விட்டு பின்னணி வாத்தியங்களைச் சைகை காட்டி விட்டுப் பாட ஆரம்பிக்கின்றது அந்தப் பாட்டுக் குயில் "அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நிலா நிலா". அப்போது தான் வெளி வந்த படமான "அத்த மக ரத்தினமே" படத்தின் பாடலை முதல் தடவையே அரங்கத்தில் கேட்டவர்களின் ஊனுக்குள் புகுந்து உள்ளத்துச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தது அந்தப் பாடல்."ஜீவா" என்றொரு படம் வந்தது. சத்யராஜ் நடித்த அந்தப் படத்தில் ஒரு பாட்டு "சங்கீதம் கேளு இனி கைத்தாளம் போடு". இளையராஜாவின் பாடல்களையே ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்த சென்னை, தூத்துக்குடி, திருச்சி வானொலிகளின் அன்றைய உங்கள் விருப்பம் நிகழ்ச்சிகளில் பங்கு போட்டுக் கொண்டது இந்தப் பாடல். கிட்டார் இசையும், கொங்கோ வாத்தியமும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு கைத்தாளம் போட வைக்கும் பாட்டு இது. இடையிசையில் வீணை லாவகமாகப் பயன்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல மேற்கத்தேயக் கலப்புக்கு இசை நகரும் சிறப்பே அழகு. நான்கு வருசத்துக்கு முன்னர் சிங்காரச் சென்னைக்குப் போனபோது தேடியலைந்து லகரி இசைத்தட்டில் தேடிப் பிடித்துப் பொக்கிஷமாக நான் பாதுகாக்கும் பாட்டு இது.
இசையமைப்பாளர் கங்கை அமரன் ஓய்ந்து விடவில்லை, இன்னொரு தொகுப்பிலும் வருவார்.

Saturday, November 7, 2009

சுரேஷ் சக்ரவர்த்தி ஒலிப்பேட்டி

"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின் அனுபவங்களில் சொன்னது போலத் தான் அந்தப் பேட்டி எடுத்த நிகழ்வும் அமைந்திருந்தது.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னர் இணையம் என்ற ஒரு ஊடகம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேசும் நல்லுலகை ஆக்கிரமிக்க ஆரம்பித்த வேளை இணையமூலமான தமிழ் ஒலிப்பகிர்வை வழங்கிய முன்னோடிகளில் India Direct இன் கலாபுகழ் தமிழோசை என்பது தவிர்க்க முடியாத அங்கமாக இருந்தது. அதில் பாடல் தொகுப்புக்கள், பேட்டிகள் என்று சுரேஷ் சக்ரவர்த்தியும் பின்னாளில் சுபஸ்ரீ தணிகாசலமும் வழங்கிய ஒலிப்பகிர்வுகள் தனித்துவமானவை. அப்போது நான் பல்கலைக்கழகப் படிப்புக்காக புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா வந்திருந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த தனிமை வாழ்வின் குறையை கொஞ்சமாவது நிவர்த்தி செய்தது இந்த ஒலித் தொகுப்புக்கள். இவற்றை மீண்டும் மீண்டும் கேட்டு ஆனந்தமடைவேன்.


காலம் பல வருஷங்களைச் சுழற்றிய நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி அவுஸ்திரேலியாவில் இருக்கின்றார் என்பது மட்டும் தெரிந்த நிலையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இவரை வானொலிப் பேட்டிக்கு அழைத்து வருவோம் என்று எப்போதோ நினைத்திருந்தேன். வானொலி நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு ஒரு இருபது நிமிடம் வரை இவரை நேற்றுப் பேட்டி எடுக்கப் போகின்றோம் என்று நினைத்திருக்கவில்லை. அவரின் மெல்பனில் உள்ள உணவகத்துக்கு அழைத்து என் தகவலைச் சொல்லி வைத்தேன். சில நிமிடங்களில் என் போனுக்கு அழைத்தார். இன்னும் பத்து நிமிஷங்களில் உங்கள் அனுபவங்களை எமது வானொலி நேயர்களுக்குப் பகிரமுடியுமா என்றேன். திடீரென்று கேட்டதால் என்ன சொல்வாரோ என்று நினைத்த எனக்கு தாராளமாக பண்ணலாம் பிரபா என்று சொல்லி வைத்தார். பேட்டி ஆரம்பமானது, 57 நிமிடத்துளிகளில் மனுஷர் தன் கலகலப்பான பேச்சில் தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து நிறைவானதொரு பேட்டியைத் தந்து விட்டார். இந்தப் பேட்டியை வானொலியைக் கேட்டவர்கள் மட்டுமன்றி இணைய ஒலிபரப்பின் மூலமும் நண்பர்கள் இணைந்து கேட்டு ரசித்தார்கள்.

தொடர்ந்து சுரேஷ் சக்ரவர்த்தி பேசுவதைக் கேட்போம்பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான சில பகிர்வுகள்.

நடிகை ஸ்ரீபிரியாவை ஆலு அக்கான்னு அழைப்பேன், எவ்வளவோ பேர் வந்து இதுக்கு வரணும்(கலைத்துறை) சாதிக்கணும், பேரோடு சேர்ந்து புகழும் புகழோடு சேர்ந்து பணமும் கிடைக்கணும்னு வருவாங்க. ஆனா உனக்கு எல்லாமே ஈசியா, சுலபமா வந்ததால உனக்கு இதனோட அருமை தெரியல. நீ விட்டுட்டுப் போறாய் அப்படின்னாங்க. நான் எதுவுமே பிளான் பண்ணி இப்படி வரணும் அப்படி வரணும்னு வரலே.

00000000000000000000000000000000000000000000000000000

அப்போது சினி இண்டஸ்ரியில் 15 ஆர்டிஸ்ட் தேதி பார்த்துக்கிட்டிருந்தேன். ராமா நாயுடுவின் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புது நகைச்சுவை நடிகரா என்னை அழைச்சுப் போனாங்க. அப்போது எனக்கு 18, 19 வயசு, விளையாட்டுப் பையனா இருந்த என்னை கூட நடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஊக்கப்படுத்தி நடிக்க வச்சார். எனக்கு தெலுங்கு தெரியாத நிலையில் ஆங்கிலத்தில் எழுதி வச்சு படிச்சா தமிழில் கெட்ட வார்த்தை பேசுவது போல இருந்தது. "நாய் வேஷம் போட்ட குலைச்சாகணும், மொழியை கத்துக்கோ" அப்படின்னு எஸ்.பி.பி சொல்லி நிறைய தெலுங்குப் படம் பார்க்க வச்சு ஒரு மாசம் அந்த மொழியை கற்றேன்.தெலுங்கில் தொடர்ந்து 3 படம் பண்ணினேன்.


பிரேமா படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை நான் வழங்கிய முந்திய பதிவைக் காண


000000000000000000000000000000000000000000000000000000000000தமிழில் ஜி.வியின் தயாரிப்பில், கே.சுபாஷ் இயக்கத்தில் "வாக்குமூலம்" என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தேன். அந்தப் படத்தில் கூட நடித்தவர் கவிதாலயா கிருஷ்ணன் அவர் நான் சூட்டிங்கில் பண்ணிய சேஷ்டைகளைப் பார்த்து, அப்போது அழகன் படத்தில் வரும் அதிராம்பட்டி சொக்கு பாத்திரத்துக்காக சிபார்சு செஞ்சார்.
பாலசந்தர் ஆபீஸ் போனேன்.
தொடர்ந்து பாலசந்தர் மாதிரி பேசிக்காட்டி அந்த நாள் சம்பாஷணையை நினைவு படுத்துகிறார்.

000000000000000000000000000000000000000000000000000000000000000

நான் டிவியில் ரொம்ப பிரபலமா இருந்த நேரம் பாலசந்தர் என்னை வச்சு "சொர்ணரேகை"ன்னு ஒரு சீரியல் எடுத்தார். சித்தி சீரியல் புகழ் பாஸ்கரின் முதல் இயக்கம் அது. காமடிக்கு அப்போது நான் பிரபலமா இருந்த நேரம் என்னை ஒரு ஜோசியராக வரும் கொலைகாரன் பாத்திரத்தில் நடிக்க வச்சார். எனக்கு சுட்டுப் போட்டாலும் செந்தமிழ் வராது. ஆனால் அதில் செந்தமிழ் பேசி , கர்னாட்டிக் பாட்டு பாடி எடுக்கணும். குறிப்பாக அந்தக் காட்சியில் வசனம் பேசுவதெல்லாம் டப்பிங் இல்லாம லைவா பண்ணியிருந்தோம்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000சன் டிவியில் இணைந்த அனுபவங்களைப் பகிர்கின்றார்,

சிறுவயசு முதலே கலாநிதி மாறன், நான், சக்சேனா, கண்ணன், ஷம்மின்னு நாம எல்லாம் நண்பர்கள். முரசொலியின் வண்ணத்திரை, குங்குமம் ஆகிய பத்திரிகைகளுக்கு அபோது எழுதினேன். கலாநிதி மாறனை புகழ், தயாநிதி மாறனை அன்பு அப்படின்னு அழைப்போம். அதன் பாதிப்பில் வந்தது தான் பின்னாளில் இணைய ஒலிபரப்பாக நான் தயாரித்த கலாபுகழ் தமிழோசை நிகழ்ச்சி.

துபாய்ல இருந்து அப்போது வந்திருந்தேன். சன் டிவிக்கு ஸ்டூடியோ கிடையாத நிலையில் சத்யா ஸ்டூடியோவில் கண்ணன் என்பவர் இயக்கிய டிக் டிக் டிக் நிகழ்ச்சி. செட் எல்லாம் போட்டு ஆடியன்ஸும் வந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த முக்கியமான காமடியன் வராத நிலையில் கலாநிதி மாறன் "நீயே பண்ணுப்பா"ன்னு மேடையில் ஏத்தி விட்டார். ஓவர் நைட்டில் என்னை ஸ்டாராக்கி விட்டார். தொடந்து துபாய்க்கு நான் போக முடியாம ஏழரை வருஷங்கள் ஆயிரக்கணக்கான சீரியல்கள், நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன்.
முதன் முதலாக சன் டிவியின் Senior manager of Programming ஆக இருந்திருக்கேன்.

அமிதாப் பச்சனின் எபிசி கார்ப்பரேஷனுக்காகப் பண்ணிய "பதி சபாபதி" நாடகம் பிறந்த கதை. அதனைத் தொடர்ந்து அவ்வை ஷண்முகி படத் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டில் தொடந்த வழக்கு பற்றியும் பேசுகிறார்.

நான்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மாறி கடைசியில் தேர்வான உமாவுடன் பெப்சி உங்கள் சாய்ஸ், மீண்டும் மீண்டும் சிரிப்பு போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கிய நினைவுகளைப் பகிர்கின்றார்.

00000000000000000000000000000000000000000000000000000


பிரபு தேவா தயாரித்த சீரியல் கொடுத்த சிக்கலும் அதனைத் தொடர்ந்து சன் டிவியில் இருந்து ஜெயா டிவிக்கு கதையை பேசுகின்றார். ஜெயா டிவியின் முதல் நாள் லைவ் நிகழ்ச்சியில் சன் டிவி என்று வாய் தடுமாறிப் பேசி வாங்கிக் கட்டியதும் , விளம்பர இடைவேளையில் ஜெயலலிதா தொலைபேசியில் அழைத்துப் பேசியதையும் நினைவுபடுத்துகின்றார்.

0000000000000000000000000000000000000000000000000000000

உத்தம்குமாரின் India Direct மூலம் கலாபுகழ் தமிழோசை என்ற இணைய ஒலிபரப்பை நடத்திய அந்த நான்கு வருச நினைவுகளும் அது கொடுத்த திருப்தியையும் சொல்லி மகிழ்கின்றார்.

00000000000000000000000000000000000000000000000000000000

தனது கலை வாழ்வுக்கு சிறு ஓய்வு கொடுத்து விட்டு அவுஸ்திரேலியாவின் மெல்பனில் வாழ்ந்து வரும் சுரேஷ் சக்ரவர்த்தி தற்போது நடத்தும் Madras Banyan Tree என்ற உணவகம் ஆரம்பித்த கதையோடு பேட்டி நிறைவை நாடுகின்றது.

00000000000000000000000000000000000000000000000000000000

பி.குறிப்பு: சுரேஷ் சக்ரவர்த்தியின் காட்சி வடிவத்தை இந்தப் பதிவுக்குப் போடவேண்டும் என்று எண்ணி இன்று பகல் பூராவும் தேடி ஒருவாறு அழகன் பட டிவிடி வாங்கி அதில் இருந்து அவர் stills தயாரித்து இங்கே அவற்றையும் பகிர்ந்திருக்கின்றேன். இவரைப் போல இன்னொரு சுவாரஸ்யமான கலைஞரைச் சந்திக்கும் நாள் கிட்டும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகின்றேன்.

Tuesday, November 3, 2009

றேடியோஸ்புதிர் 47 - "ராஜாதி ராஜா" படத்தில் வராத பாட்டு

"ராஜாதி ராஜா" படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் திரைப்படங்களில் காலம் கடந்து ரசிக்க வைக்கும் படம். பாவலர் கிரியேஷன்ஸ் படம் என்றால் சொல்ல வேண்டுமா பாடல்களும் கூடுதல் கலக்கலாக இருக்கும். ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் ரஜினி, ராதா, நதியா போன்றோர் நடித்த இந்தப் படத்தில் இருந்து ஒரு புதிர்.

படத்தின் நீளம் கருதி இப்படி பாடல்கள் பல படங்களிலே துண்டாடப்பட்டிருப்பது வழக்கம். இந்தப் படத்திற்காக இசையமைத்து ஒலிநாடாக்களிலும், இசைத்தட்டிலும் வெளிவந்த பாடல்களில் ஒரு பாடல் ராஜாதி ராஜா படத்தினைப் பார்க்கும் போது காணாமல் போயிருக்கும்.கேள்வி இதுதான் இந்த ராஜாதி ராஜா திரைப்படத்திற்காக இசையமைத்து ஒலிநாடாக்களிலும், ஏன் வானொலிகளிலும் ஒலிபரப்பப்படும் பாடல் ஒன்று படத்தில் வரவில்லை. அந்தப் பாடல் எது என்பதே கேள்வியாகும். பின்னர் இந்தப் பாடலை அன்றைய காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த "டவுசர் பாண்டி" ராமராஜன் பின்னர் தான் நடிக்க இருந்த "பெத்தவமனசு" என்ற திரைப்படத்தில் பயன்படுத்த இருந்தார். கொடுமை என்னவென்றால் பின்னர் 'பெத்தவமனசு' படமே வராமல் போய் விட்டது. அந்த ராசியான பாட்டைக் கண்டுபிடியுங்களேன்.

போட்டி முடிவடைந்தது, பதில் இதுதான்.

இந்தப் படத்தில் வராத பாடல் "உன் நெஞ்சத் தொட்டுச் சொல் ராசா என் மேல் ஆசை இல்லையா" பாடியவர்கள் பி.சுசீலா மற்றும் சித்ரா

போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்

அந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்