Pages

Monday, May 16, 2022

விஜய் மில்டன் தந்தை மகனுக்கு ஆற்றிய உதவி30 வருடங்களாகத் தேடி அலைந்த பாட்டு, 

30 வருடங்களுக்குப் பின் கேட்கிறேன் இப்படி ஒரு தலைப்போடு கடந்த மார்ச் 2021 இல் ஒரு பாடலைப் பகிர்ந்திருந்தேன்.

சிறு வயசில் ஒரு கலியாண வீட்டில் கேட்ட இந்தப் பாட்டின் ஆரம்ப வரிகள், மற்றும் மெட்டு மட்டுமே நினைவில் இருந்தது.

ஆனால் இந்தப் பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் முதற் கொண்டு, யார் இசை என்றே தெரியாத சூழலில் தேடிக் கொண்டே இருந்தேன்.

வேடிக்கை என்னவென்றால் இந்தப் பாடலுக்கு இசையமைத்த வி.எஸ்.நரசிம்மனைக் கூட இடைப்பட்ட காலத்தில் பேட்டியும் எடுத்திருந்தேன்.

இணையத்தில் “தங்க நிலவு” என்று தேடினால் ரிக்‌ஷா மாமாவின் தங்க நிலவுக்குள் கொண்டு போய்ச் சேர்த்தது. இத்தனை ஆண்டுகளாகத் தேடித் தேடி ஈற்றில் சில வருடங்களுக்கு முன் நட்பாகிய கொழும்பில் இருக்கும் நண்பர் சக இசைக் களஞ்சிய நிர்வாகி ஶ்ரீநிவாசன் அவர்களின் காதில் ஒப்புவித்தேன்.  அவருக்கு உடனே ஞாபகத்துக்கு வரவில்லை. நேற்று மீண்டும் நினைப்பூட்டினேன். ஏதோ நினைவில் மெட்டைப் பாடிக் காட்டினார். 

அதே தான் என்று குதித்தேன் 🙂

உடனே சுடச் சுட அனுப்பி வைத்தார் தன் பெட்டகத்தில் தேடி.

பாடலை வி.எஸ்.நரசிம்மனின் ஆஸ்தானப் பாடகி பி.சுசீலாம்மாவும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களும் பாடுகிறார்கள். படத்தை இயக்கிய பூவரசு தான் பாடல் வரிகள். 

என் வாழ்நாள் தவம் ஒன்று பலித்தது.😍😍😍

இப்படியாக எழுதிப் பகிர்ந்திருந்தேன்.


கடந்த சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்  பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இன்ப அதிர்ச்சி. மேற் குறிப்பிட்ட “சித்திரம் பேசுதடி” படத்தை இயக்கியவர் சாட்சாத் அவரின் தந்தையே தான். அந்தப் “பூவரசு" என்ற புனைபெயரில் ஒளிந்திருக்கும் விஜய்ராஜ்.

விஜய் மில்டனின் தந்தை நாடகங்களை எழுதி இயக்கியவர் என்றும் அவரின் “காக்கை குயிலானது” நாடகம் தான் “சித்திரம் பேசுதடி” படமாக எடுக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் சொன்னார்.

இதற்கு முன்னர் விஜய் மில்டனின் தந்தை இயக்கிய “இதயம் தேடும் உதயம்” என்ற படம் அண்மையில் மறைந்த அன்புக்குரிய சக்ரவர்த்தி நாயகனாக நடித்து வெளிவராமலேயே போய் விட்டது. அந்தப் படத்தின் இசை சங்கர் கணேஷ் இரட்டையர்கள்.

“இதயம் தேடும் உதயம்” படத்திலும் அற்புதமான பாடல்கள் உண்டு

https://mio.to/album/Shankar-Ganesh/Idhayam+Thedum+Udhayam+%281984%29

அது சரி விஜய் மில்டனின் தந்தை தன் மகனுக்கு ஆற்றிய உதவிதான் என்ன?

விஜய் மில்டனுக்கோ திரைப்படக் கல்லூரியில் படிக்க ஆசை, அதுவும் இயக்குநராகும் துறை சார்ந்த படிப்பு வேண்டும். ஆனால் அந்த நேரம் டிகிரி முடித்தால் தான் அந்தத் துறையில் படிக்க வேண்டும். அப்போது விஜய் மில்டனோ பட்டப்படிப்பை முடித்திருக்கவில்லை.

அப்போது விஜய் மில்டனின் அப்பா சொன்னாராம்,

“நான் இரண்டு படங்களை இயக்கிய போதும் மீதி எல்லாத் துறையையும் இலகுவாகக் கவனிக்க முடிந்தது ஆனால் இந்த ஒளிப்பதிவாளர் வேலை மட்டும் பிடிபடவில்லை, நீ அதையே படித்து அதன் வழியா பின்னாடி இயக்குநராக வர வாய்ப்பிருக்கும்”

என்று அறிவுரை கொடுத்தாராம். அப்பேர்ப்பட்ட அறிவுரை தான் இன்று வெற்றிகரமான விஜய் மில்டன் என்ற ஒளிப்பதிவாளரைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அது மட்டுமா தன் தந்தையின் கனவும், தன் கனவுமான இயக்கத்தை வேறு செய்து காட்டியும் விட்டார் விஜய் மில்டன். எப்பேர்ப்பட்டதொரு உன்னதமானதொரு வழிகாட்டல் அது பாருங்கள்.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் கேட்ட அந்தப் பாடல், இப்போது அடுத்த ஆண்டிலேயே இன்னொரு சுவையான வரலாற்றையும் கொடுத்து விட்டது. 

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனின் தந்தை பூவரசு என்ற பெயரில் எழுதி, நரசிம்மன் இசையில் சுசீலாம்மாவுடன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய, 30 வருடங்களாகத் தேடிய பாட்டு இதுதான்,

“தங்க நிலவு தரையில் இறங்கி

 நடந்து போகுது

அதைத் தங்கச் சொல்லி 

கெஞ்சிப் போகுது”

https://www.youtube.com/watch?v=j8Y-uGa6qWQ

கானா பிரபா


Tuesday, May 10, 2022

கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே ❤️


இசைஞானி இளையராஜாவின் தாளலயம் காலத்துக்குக் காலம் வெவ்வேறு பரிமாணத்தில் விளைந்த போது, அது தொண்ணூறுகளில் கருக்கட்டிய விதத்தை “உடல் தழுவத் தழுவ” (கண்மணி) வழியாக முன்னர் உச்சுக் கொட்டிச் சிலாகித்திருந்ததைப் படித்திருப்பீர்கள். அந்த மாதிரியான பாடல்களில் Tempo அப்படியே தொடக்கம் முதல் முடிவிடம் வரை ஒரே சீராக முடுக்கி விடப்பட்டிருக்க, முன்னால் நின்று பாடுவார்கள். அதிலிருந்து இன்னொரு பரிமாணத்தில் “ஒரு மைனா மைனாக் குருவி”, “வெண்ணிலவு கொதிப்பதென்ன” வந்தது போல அதே அலைவரிசையில் நான் ரசிப்பது இந்த

“கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே” 

https://www.youtube.com/watch?v=P9JlBumqATk

“டுக் டுக் டா டுடுடடுக் டுக் டா” அந்த Tempo தன் பாட்டுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்க, பாடுபவர்கள் மெல்லிசை கூட்டும் புதுமை இங்கிருக்கும்.

இந்தப் பாடலின் அழகியல் என்னவென்றால் போதாக்குறைக்குக் கூட்டுக் குரல்களையும் உள்ளே நுழைத்து விடுவார். அது ஏதோ வண்ண விளக்கு ஒளி பாய்ச்சிய மேடையில் கோரஸ் பாடும் வண்ணச் சிட்டுக்கள் வந்து பாடி விட்டு மீண்டும் மனோ, சித்ரா கையில் ஒப்படைத்து விட்டுப் போகுமாற் போல.

“கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலனே” போலீஸ் படத்துப் பாட்டுக்கு கங்கை அமரனின் குறும்புத் தனமான வரிகள்.

“உள்ளே வெளியே” படம் பார்த்திபன் மசாலா சமாச்சாரங்களை அள்ளி வீசி எடுத்த “நீங்கள் கேட்டவை” ரகம். முந்திய வருடம் குரு நாதரோடு “ராசுக்குட்டி", அடுத்த வருடம் சீடரோடு “உள்ளே வெளியே” என்று ஐஸ்வர்யா நடித்த, அவரின் தாராளமயமாக்கல் கொள்கையும் சேர்ந்து கொள்ள படம் பார்த்திபன் நினைத்தது போலவே “உங்கள் விருப்பம்" ஆனது.

“பொண்டாட்டி தேவை” படத்துக்குப் பின் இயக்குநர் பார்த்திபனோடு கை கோர்த்த இளையராஜா, இடையில் தாலாட்டு பாடவா, உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் என்று வெவ்வேறு இயக்குநர்களோடு பார்த்திபனை நாயகனாக்கி வந்த படங்களில் இருந்து வித்தியாசப்பட்டதை அந்த நேரம் என்ன மனநிலையில் பார்த்திபனைப் பார்த்துச் சொல்லியிருப்பாரோ என்று நினைப்பதுண்டு. 

ஆனாலும் “கண்டு பிடி நீதான்” , “சக்கரக்கட்டி சக்கரக்கட்டி” பாடல்களோடு தன் கருமமே இசையாகக் கொட்டி விட்டார்.

இளையராஜாவின் காதலன் பார்த்திபன் இயக்கிய படங்களில் பிடித்த பாடல் என்றால் முந்திக் கொண்டு இந்தப் பாடலைத் தான் கையைக் காட்டுவேன்.

ஒருமுறை இந்தப் பாடலில் மூழ்கினால் அப்படியே நீர்ச்சுழி போல இழுத்துக் கொண்டு போய் அளவு கணக்கில்லாமல் கேட்க வைத்து விட்டுத் தான் அனுப்பி விடும். அப்போதும் மனம் வராமல் கரையேறுவேன்.

நேற்றும் அப்படித்தான்.

என்னை மறந்தேன்

இன்ப மருந்தே

உள்ளத்தில் எண்ணத்தில்

தித்தித்தை போடுதே

கள்ளத்தனமாக

கன்னம் வைத்த காதலியே

https://www.youtube.com/watch?v=P9JlBumqATk

கானா பிரபா


Thursday, May 5, 2022

அரிதாரம் பூசிய (சங்கர்) கணேஷ்


“நடிகனின் காதலி நாடகம் ஏனடி

ஆடலில் பாடலில் வல்லவன் நானடி....”

என்று பாடலுக்கு மட்டுமா இசைமைத்தார்? ஆடினார், பாடினார், படம் கூட இயக்கினார் (சங்கர்) கணேஷ் அவர்கள்.

“ஏ உன்னத்தான்

எங்க பாக்குறே..

உன்னத்தான்...அட...உன்னத்தான்

செப்புக்குடம் தூக்கிப் போற

செல்லம்மா.....நான்

விக்கிப் போறேன் தாகத்துலே

நில்லேம்மா...”

https://www.youtube.com/watch?v=21D3MH26j78

இலங்கை வானொலி பூத்துக் குலுங்கிய காலத்தில் மறக்கவெண்ணாப் பாடல்களில் ஒன்றாக இதையும் கொண்டாடுவார்கள் அந்தக் காலத்து 60s, 70s kids.

ஒரு காலத்தில் நாயகனே பாடி நடித்த காலம் போய், பின்னர் எல்லாமும் அவரே ஆன டி.ராஜேந்தர் காலம் வரை கண்டு இன்று ஜி.வி.பிரகாஷ்குமார் காலத்தில் மிதந்து கொண்டிருக்கிறோம்.

ஏன் இளையராஜாவுக்குக் கூட இந்த கதாநாயக ஆசை விடவில்லை என்று முந்திய பதிவில் பகிர்ந்திருக்கிறேன். 

https://www.facebook.com/1393380529/posts/10219189976645595/?d=n

“புதிய வார்ப்புகள்” கங்கை அமரனின் குரலை மட்டும் வாங்கிக் கொண்டு பாக்யராஜுக்கு ஒட்டி வைத்தது.

ஆனால் இந்த விஷயத்தில் சமகாலத்தில் இயங்கிய (சங்கர்) கணேஷ் அவர்களுக்கும் இந்த அரிதார ஆசை விட்டு வைக்கவில்லை.

தன்னுடைய இசைக் கூட்டாளி சங்கரோடு இணைந்து இயக்குநர் ஆசையையும் “ஜகதலப் பிரதாபன்” 

https://www.facebook.com/1393380529/posts/10228182685497696/?d=n

வழியாகத் தீர்த்துக் கொண்டவர் இளையராஜா இசையில் “பங்குனிக்குப்புறம் சித்திரையே”  https://www.youtube.com/watch?v=YYCFRsCPqIk

பாடலையும் பாடி வைத்து விட்டார் இந்த இசையமைப்பாளர் ஆகிய கணேஷ் அவர்கள்.

சரி இனி அவரின் அரிதார முகத்தைப் பார்ப்போம்.

இளையராஜா ரசிகர்களுக்குத் தீனி போட்ட சாதனை, எச்சில் இரவுகள், ஆளப்பிறந்தவன், ஆயிரம் நிலவே வா போன்ற படங்களோடு எழுபதுகளில் “பட்டாம்பூச்சி” படத்தையும் இயக்கிய பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் அவர்களே இந்த (சங்கர்) கணேஷ் மனதில் நாயக ஆசையை உண்டு பண்ணி “ஒத்தையடிப் பாதையிலே” படத்தையும் இயக்கினார். அந்தப் படத்தில் கணேஷ் நடித்ததே மறந்து போன யுகத்தில் இன்றும் நினைவில் தங்கியிருப்பது அந்த “செப்புக்குடம் தூக்கிப் போற செல்லம்மா” பாடல் தான். அதே படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய அந்தப் பாடல் மட்டுமல்ல மலேசியா வாசுதேவன் பாடிய “வெள்ளரிக்கா காட்டுக்குள்ளே” பாடலும் சேர்ந்து சங்கர் கணேஷ் இசையில் நாயகன் (சங்கர்) கணேஷ் இற்காகக் குரல் கொடுத்தார்கள்.

அடுத்தது தான் (சங்கர்) கணேஷ் இற்கு இன்னொரு மகுடமாக அமைந்தது. ஒரே படத்திலேயே T.M.செளந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகிய மூவருமே (சங்கர்) கணேஷ் அவர்களுக்காகப் பாடிய படமும் வாய்த்தது, அது 

சங்கர் கணேஷ் கூட்டணியின் புகழ் பூத்த பாடலான “நான் உன்னெ நெனச்சேன்” என்ற தலைப்பிலேயே அமைந்தும் விட்டது.

“உன்னைத் தொட்டா தோஷமில்லை” மற்றும் சில்க் ஸ்மிதாவோடும் ஆடிப் பாடும் யோகத்தோடு அமைந்த “நீ பார்த்த பார்வை புரியாத நேரம்” ஆகிய அற்புதமான பாடல்கள் எஸ்பிபி குரலில் இந்தப் படத்துக்காக சங்கர் கணேஷ் இரட்டையர் இசையில் நாயகன் (சங்கர்) கணேஷிற்காக வாய்த்தது.

அத்தோடு அரசியலிலும் பகைக்காமல் எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் போற்றித் துதித்து செளந்தரராஜன் பாடிய “அந்த மூன்று பேருக்கும்” பாடலோடு “அடி மருதாணிப் பூவே” பாடலுமாக இந்தப் படத்தில் அமைந்தது.

“நான் உன்னெ நெனச்சேன்” பாடல்களைக் கேட்க

https://gaana.com/album/naan-unna-nenachen

“நான் உன்னெ நெனச்சேன்” படத்துக்குப் பின்னால் சில சுவாரஸ்யங்களும் உண்டு.

ஒருவாறு முட்டி மோதி ஜி.கே.வெங்கடேஷ் அறிமுகத்தோடு “வாராய் என் தோழி வாராயோ” பாடலோடு தான் விஸ்வநாதன் & ராமமூர்த்தி இரட்டையர்களிடம் வாய்ப்பைப் பெற்றவர் இந்த (சங்கர்) கணேஷ்.

பாலும் பழமும், பாகப்பிரிவினை, பாதகாணிக்கை, படகோட்டி, குடியிருந்த கோயில் என்று மாபெரும் வெற்றிப்படங்களைத் தயாரித்த புகழ்பூத்த தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.

ஜி.என்.வேலுமணியின் மகன் ஜி.வி.சரவணன் அவர்களது நட்பு (சங்கர்) கணேஷுக்குக் கிடைக்கவே அந்த நட்பில், சரவணனின் சகோதரியிடம் காதலாகி “உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்” ரேஞ்சில் காதல் கவிபாடி, அந்த நேரம் அந்தப் பெரிய தயாரிப்பாளர் மகளை இந்தப் பையனுக்குக் கொடுப்பதா என்று ரசபாசமாகி ஒருவாறு ஜி.என்.வேலுமணி குடும்பத்து மாப்பிள்ளை ஆனார் (சங்கர்) கணேஷ்.
“நான் உன்னெ நெனச்சேன்” படத்துக்கு இப்போது மீண்டும் வருவோம். அந்தப் படத்தை ஶ்ரீ வேலுமணி பிலிம்ஸ் என்று குடும்பத் தயாரிப்பாக்கி, படத்தின் எழுத்தோட்டத்தில் ஜி.என்.வேலுமணி தயாரித்த படங்களின் பாடல்கள், படத் தயாரிப்பில் எடுத்த புகைப்படங்களையும் காட்சிப்படுத்தி, அந்தப் படத்தை இயக்கியது வேறு யாருமல்ல, (சங்கர்) கணேஷின் நண்பனும், மனைவி வழி மைத்துனனும் ஆன ஜி.வி.சரவணன் தான்.

அந்தப் படத்தில் சிறுவேடமும் நடித்தார் சரவணன், 

“இளவயதிலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்” என்ற அஞ்சலிக் குறிப்போடு தான் “நான் உன்னெ நெனச்சேன்” படமும் தொடங்கும்.

ஆம், படம் வெளியான போது (சங்கர்) கணேஷுக்கு திருமண வாழ்வின் சொந்தமாக இருந்த சரவணன் மறைந்து விட்டார்.

கானா பிரபா


Tuesday, May 3, 2022

ராமராஜனால் நாயகன் ஆகிய ராஜ்கிரண்


"உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு என் ராசா 

"என் மேல் ஆசை இல்லையா....."

https://www.youtube.com/watch?v=VwLD6HMsXj0

"ராஜாதி ராஜா" படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் முழங்கிய போது அந்தப் படத்தில் ஓரமாக இருந்த மேற் சொன்ன சோகப் பாடல் மீது என் போன்றவர்களுக்கு அப்போது பெரிய ஈர்ப்பு இருந்தது.

சுசீலாம்மாவும், சித்ரா அவர்களும் கொடுத்த உணர்ச்சிப் பிரவாகமாகக் கொடுத்த அந்தப் பாடல் படத்தில் வந்திருக்கிறதா என்று யாழ்ப்பாணம் ராஜா தியேட்டர் படியேறினால் ஏமாற்றமே மிஞ்சியது. 

90 களில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு மேல் மின்சாரம் இல்லாத போர்க்கால வாழ்வியலின் ஆரம்பமும், ராஜா தியேட்டரில் ஓடிய கடைசிப் படமாக "ராஜாதி ராஜா" அமைந்து விட்டது.

அந்தப் படத்தில் ரஜினியின் ஆள் மாறாட்டக் காட்சிகளை ஒட்டி ராதா, நதியாவுக்கான பாடலாக உருவாகியிருந்தது.

அத்தோடு விட்டதா? என்றால் இல்லையே.

சில மாதங்களுக்குப் பின்னர் ராஜ்கிரண் தயாரிக்கும் “பெத்தவ மனசு” படத்தில் “உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு” என்ற அந்தப் பாடலைப் பயன்படுத்தப் போவதாக விகடன் அறைகூவியது.

ஆனால் “பெத்தவ மனசு” பட அறிவிப்போடு சரி அப்படியே இந்தப் பாடல் இரண்டாவது தடவையும் தன் ராசியை நொந்து கொண்டது.

வெற்றிகரமான பட விநியோகஸ்தராக இருந்து பின்னர் அந்த வெற்றியைத் தன் தயாரிப்பிலும் அனுபவித்தார் ராஜ்கிரண். ராமராஜனை வைத்து அவர் தயாரித்த “ராசாவே உன்னெ நம்பி”, “என்னைப் பெத்த ராசா” எல்லாம் அந்தக் காலத்து ராமராஜ யுகத்தின் வெற்றிக்கனிகள். ஆனால் இதற்கெல்லாம் முதலீடு இசைஞானி இளையராஜாவின் இசை தான். அதனால் தான் தன் படங்களிலே இசைஞானி, ராகதேவன் என்று விளம்பரப்படுத்தியதோடு இளையராஜாவின் படத்தை எப்படியாவது ஒரு காட்சியில் நுழைத்துத் தன் ராசியைக் கவனித்துக் கொண்டார் ராஜ்கிரண்.

இப்படியாக மூன்றாவதாக ராஜ்கிரண் தயாரிப்பில் ராமராஜன் நடிக்க உருவானது தான் “பெத்தவ மனசு”. 

“பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா” என்ற பாடல் ராஜ்கிரண் & ராமராஜன் கூட்டணியின் முந்தய படமான “என்னப் பெத்த ராசா” படத்தில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு ராஜ்கிரணுக்கு ஒரு குணச்சித்திர வேடம் அளித்து அவரின் அரிதார முகத்துக்கு மறைமுகமாக ஒத்திகை பார்த்தது அந்தப் படம். இந்தப் படத்தில் அவர் தோன்றும் உருவத்துக்கும் பின்னாளில் நாயகனாகிய “என் ராசாவின் மனசிலே” உருவ அமைப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

சரி “பெத்தவ மனசு” படத்துக்கு என்னவாயிற்று என்ற முடிவு 32 ஆண்டுகள் கழித்து இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 

அண்மையில் டூரிங் டாக்கீஸ் இல் வெளிவந்த சிஸர் மனோகரின் பேட்டியில் ஒரு வரியில் இதைச் சொல்லி விட்டுக் கடந்து விட்டார், அப்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த ராமராஜனோடு இணைந்து இந்தப் படத்தை எடுத்து 75 வீதம் முடித்த நிலையில் அவரின் கால்ஷீட் சிக்கலால் அப்படியே கிடப்பில் போய் விட, அந்தப் படத்தின் கதை வசனகர்த்தாவான கஸ்தூரி ராஜா அந்த நேரம் சொன்ன கதை தான் “என் ராசாவின் மனசிலே” ஆனதாக அந்தப் பேட்டியில் சொன்னார். 

ஒரு கால்ஷீட் பிரச்சனையால் “உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு” ராசியில்லாத பாடலும், ஒரு ராசியான நாயகனாக ராஜ்கிரணையும் உருவாக்கி கோடி ரூபா சம்பளக்கார நாயகனாகவும் உயர்த்தி விட்டது.

வானம் தான்

சாட்சி இருக்கு பூமி

தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்ச

தொட்டு சொல்லு என்

ராசா என் மேல் ஆசை

இல்லையா என் மேல்

ஆசை இல்லையா

https://www.youtube.com/watch?v=VwLD6HMsXj0

இந்தப் பாட்டும் என்னுடன் 32 வருடங்களாக ஏதோவொரு வகையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது 🙂

கானா பிரபா

ராஜாதி ராஜாவோடு விடை பெற்றுத் திருமண வாழ்வில் புகுந்த நதியாவுக்கு வாழ்த்தி மகிழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமரர் பஞ்சு அருணாசலம், “பாவலர் கிரியேஷன்ஸ்” அமரர் பாஸ்கர் மற்றும் திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் தோன்றும் படம் நன்றி : Filmi Street