Pages

Saturday, January 6, 2018

அதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸



பள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருத்தி ஏதோவொரு தன்மையால் கவனத்தை ஈர்ப்பாள். அப்படித்தான் இந்தத் திரையிசைப் பாடல்களும். இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது பிரபல்யமாக்கப்பட்ட பாடல்களையே அதிகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றையும் தாண்டி எத்தனையோ பாடல்கள் இந்தத் திரையிசைச் சுரங்கத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் அல்லது கொண்டாடப்படாமல் இருந்து வருகின்றன.
இந்த விஷயத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூட விதி விலக்கு அல்ல. 

இன்று வரை கொண்டாடிக் கொண்டிருக்கும் அலை பாயுதே பாடல்களுக்கு முன் வந்த பாடல்கள் பலதும், வந்த போது கொண்டாடித் தீர்த்த அளவு, பின்னர் வானொலிகள் கூட அதிகம் சீண்டுவதில்லை. ஏனோ “பிரபல்யம்” ஒட்டிய பாடல்களை என் மனம் அதிகம் நாடுவதில்லை. ஒரு படத்தில் அதிகம் கவனிக்கப்படாத பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்பேன். அப்படியான பாடல்களில் ஏனோ இன்னும் நெருக்கமாக இசையமைப்பாளர் என்னோடு உரையாடுவது போல இருக்கும். அப்படியானதொரு பட்டியலோடு ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளில் அவரின் அரிய பாடல்களோடு வந்திருக்கிறேன்.

🎷 நெஞ்சே நெஞ்சே மறந்து விடு (ரட்சகன்)
https://youtu.be/f00Jc2mlywY

நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே என்று புலம்ப வைக்கும் அளவுக்கு மிக நெருக்கமான காதல் பாட்டு இது. பாடலின் வரிகளை மெட்டோடு மட்டும் இசை கலக்காது பாடிப் பாருங்கள். ஒரு இசையமைப்பாளனின் அசாத்தியத் திறமை இங்கே தான் இருக்கிறது. அது என்னவெனில் ஒரு பாடலை ரசிகன் தான் நினைத்த எந்த வடிவிலும் தன் எண்ணவோட்டத்துக்கேற்ப 
ஓட்டிப் பார்த்து வித விதமான ரசிக்க முடியும்.

கே.ஜே.ஜேசுதாஸுக்கு ரஹ்மானால் கொடுக்கப்பட்ட ஆகச் சிறந்த பாட்டாக இதையே எடுத்துக் கொள்வேன்.
வட இந்தியப் பாடகி சாதனா சர்க்கத்தின் பால் மணம் மாறாத் தமிழ்க் குரல் இந்தப் பாடலுக்கு ஒரு பலம்.
“காதல் பிச்சை கேட்கிறேன் ஹாஆஆ...” என்று அவர் உருகும் போது கல் நெஞ்சமும் இளகி விடும் அக்கணம்.
காதலனும் காதலியும் போட்டி போட்டுக் கொண்டு 
சம விகிதத்தில் உருகித் தள்ளும் அபூர்வமான பாடல்களில் இதுவுமொன்று.

முதல் சரணத்துக்கு முந்திய இடையிசையில்
 “தீம்தர தீம்தர தீம்தர தீம்தரா 
    தீம்தர தீம்தர தீம்தர தீம்தரா” என்ற சங்கதிக்கு அமைவாக முணுமுணுக்கும் இசையும் கூட வரும் கோரஸ் கூட்டணி “அஹஹாஹா” என்று இணையும் அந்தக் கணம் நேரமெடுத்து நேர்த்தியாக இசை பண்ணும் ரஹ்மானை அனுபவத்தை நேரடியாக உணரலாம்.

🎷 நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம் (டூயட்)
https://youtu.be/49IgoOITI-A

இசை சார்ந்த ஒரு படத்தின் சாரத்தை ஒரு பாடலுக்குள் அடக்க முடிந்தால் இம்மாதிரியானதொரு பாடலாகத் தான் அது வடிவெடுக்கும். சாக்சபோன் வாத்தியம் ஆரம்பித்து வைக்கப் பின் அதனோடு மொழி பேசும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் மீண்டும் அதுவும் அவரோடு இசையால் பேசும் அழகியலுமாகப் புதைந்திருக்கிறது இந்தப் பாடலில்.

“சிங்கார வேலனே தேவா” பாடலில் எப்படி குரலும் நாதஸ்வரமும் அந்நியோன்யமாகப் பேசிப் பழகினவோ அவை மறு பிறவி எடுத்துப் புத்திசையாகப் பேசுமாற் போல இந்தப் பாடல்.

🎷 உன்னைக் கேளாய் ( தேசம்)
https://youtu.be/DSJzrIGOzM0

தேசம் என்ற ஒரு படம் ரஹ்மான் இசையில் வெளிவந்ததே புலம் பெயர் தமிழ் வானொலிகள் மூலமே அதிகம் அறியப்பட்டது. காரணம் தாய் நாட்டை இழந்து பிரிந்து வாடுதலின் சோகத்தைப் புனைந்து பாடிய “உந்தன் தேசத்தின் குரல்” https://youtu.be/Z5cjyAjRiCQ பாட்டு.

ஸ்வதேஷ் திரைப்படம் தமிழில் “தேசம்” ஆனது. 
பாடல்கள் முழுதும் எழுதியது கவிஞர் வாலி
ஹிந்தியில் ஹரிஹரன், உதித் நாராயணன், கைலாஷ் கர்  பாடிய Yun Hi  Chala Chal” தமிழுக்கு வந்த போது அதே ஹரிஹரனுடன் T.L.மகராஜனுடன் இணைந்து கொடுத்த அட்டகாஷ் துள்ளிசைப் பாடல் இது.
தத்துவப் பாடலொன்றைக் கேட்கும் போது இருக்கும் சோக மன நிலையை இன்னும் கீழிறக்கும் பாங்கு கொண்ட பாடல்கள் ஒரு பக்கமிருக்க, இம்மாதிரித் துள்ளிசை கலந்து கொடுக்கும் தத்துவப் பாடல்களைக் கேட்கும் போது அலாதி இன்பமும் உற்சாகமும் பிறக்கும்.

“ரும்தும் தானன ரும்தும் தானன ரததும் தானன” என்று 
நாட்டுப்புறத்தானும் நகரத்தானும் நட்போடு கை கோர்க்கும் அந்த அழகியல் அற்புதமான பாடலாக விரிகிறது. 

“எத்தனை கால்கள் சென்றனவோ 
எத்தனை கதைகள் வென்றனவோ”

சாலை வழியே வாழ்க்கைப் பயணத்தைப் பாடலில் ஓட்டிப் பார்ப்பது எவ்வளவு சுகானுபவம்.

🎷 செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ (பவித்ரா) 
https://youtu.be/7SjAaavQVpw

அப்போது வரிசையாக ஒவ்வொரு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியவிதத்தில் பவித்ரா படத்தில் கே.சுபாஷ் உடன் கை கோர்த்திருந்தார் ரஹ்மான். 
படத்தில் "உயிரும் நீயே" , "அழகு நிலவே" பாடல்களோடு "கோயம்முத்தூர் கோயம்முத்தூர் தாண்டி" என்ற எள்ளல் பாடல் அளவுக்குக் கூட செவ்வானம் பாடல் அப்போது பிரபலமாக இருக்கவில்லை. இந்தப் பாடல் வந்த நேரம் நான் கொழும்பில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த நேரம் எப்போதாவது அரிதாக இலங்கை வானொலி இந்தப் பாட்டைக் கொடுக்கும் போது நின்று கேட்டுவிட்டுப் போவேன்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சகோதரி எஸ்.பி சைலஜாவிற்கு இளையராஜாவால் ஆரம்பத்திலிருந்து பாடும் வாய்ப்புகள் அதிகம் கிட்டியது போல, எஸ்.பி.பி மகள் பல்லவிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாய்த்திருக்கிறார். காதலிக்கும் பெண்ணின் கைகள் (காதலன்) படப்பாட்டில் தந்தையுடன் சேர்ந்து பாட வாய்ப்புக்கிட்டியது இவருக்கு. ஜீன்ஸ் படத்தில் உன்னிகிருஷ்ணனுடன் "ஹைர ஹைர ஐரோப்பா" வரிசையில் பவித்ராவில் இந்தப் பாட்டு. ஏ.ஆர்.ரஹ்மான் அதிகம் முன்னுறுத்தியும் தொடர்ந்தும் நிறையப் பாடவில்லை இவர். ஶ்ரீராம் சிட்ஸ் அதிபரின் மகனைக் காதலித்துத் திருமணம் முடித்து அமெரிக்கா சென்றதாக ஞாபகம். 

நீல மலர்கள் படத்தில் வந்த இது இரவா பகலா நீ நிலவா கதிரா பாடலைப்போலவே இந்தப் பாடலின் வரிகளும் அமைக்கப்பட்டிருக்கும்.
எஸ்.பி.பல்லவியை திரையிசையில் தனித்துவமான பாடகி என்றெல்லாம் உயர்த்த முடியவில்லை என்றாலும்,  அப்பாவித்தனம் ஒட்டிய அந்தக்குரலில் ஏனோ ஈர்ப்பு இருக்கிறது. குறிப்பாக "செவ்வானம் சின்னப்பெண் சூடும்" பாடல் அவருக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு. மனோவை முந்திக் கொண்டு இவர் பாடும் போது கொடுக்கும் நுணுக்கமான சங்கதிகளைக் கவனித்தால் நீங்களும் என் கட்சியில் சேர்ந்துகொள்வீர்கள்.

🎷 சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே (வண்டிச்சோலை சின்ராசு) 
https://youtu.be/aNEcfbaI66g

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்ப காலத்து மெது நடைப் பாடல்களில் இதையெல்லாம் ஒதுக்கி விட்டுக் கடக்க முடியாது என்னுமளவுக்கு வசீகரம் நிறைந்த இசை கொண்ட பாட்டு. 

ஜெயச்சந்திரன், மின்மினி பாடும் போது இந்த ஜோடிக் குரல்களை மனதில் வைத்துக் கொண்டே மெட்டுக் கட்டியிருப்பாரோ என்னுமளவுக்கு அச்சொட்டான ஜோடிக் குரல் பொருத்தம் இசையோடு இழைந்திருக்கும். ஒரு பாடலுக்குத் தேர்ந்த குரல்களும் எவ்வளவு தூரம் அணி செய்கின்றன என்பதை இம்மாதிரியான உதாரணங்களின் மூலமே நிறுவ முடியும்.
இதையே தெலுங்கில் கொடுத்த போது எப்பேர்ப்பட்ட ஜாம்பவானான எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஸ்வர்ணலதா கூட்டணி இருந்தும் மனதில் ஜெயச்சத்திரன் & மின்மினி குரல்கள் மாற்றீடைத் தேடாது பதியம் போட்டிருக்கு

இந்தப் படத்தை ஒரு மாறுபட்ட முயற்சியாக, அப்போது தொடர்ந்து கிடைத்த நகரப் பின்னணி சார்ந்த படங்களில் இருந்து விலகியதாகரஹ்மான் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.
பண்பலை வானொலிகள் மெல்ல முளைத்துக் கொண்டிருந்த சமயம் "செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்குறியே" என்ற சாகுல் ஹமீத் பாட்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம். 
"பரோட்டா பரோட்டா" கவிஞர் நா.காமராசன் ரஹ்மானுக்காக இதுவரை எழுதிய ஒரே பாடல் (நேரடிப் படத்தில்) என நினைக்கிறேன்.

"இது சுகம் சுகம்" வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஜோடி சேர்ந்த இன்னொரு மென் காதல் மெட்டு.

"சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே" பாடலைக் கேட்கையில் "ஆத்தங்கரை மரமே" (கிழக்குச் சீமையிலே) பாடலின் மெது நடையாகப் படும் எனக்கு. 

🎷 ஒண்ணு ரெண்டு மூணடா (புதிய மன்னர்கள்) 
https://youtu.be/e-06nR9tc_E

“நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கிப் போனேன்டி” பாடலை வாங்குவதற்குள் இயக்குநர் விக்ரமன் ஏ.ஆர்.ரஹ்மானைக் கசக்கிப் பிழிந்து விட்டாராம். தெம்மாங்குப் பாட்டொன்று இருந்தால் நல்லா இருக்கும் என்று ரஹ்மானிடம் விக்ரமன் எதிர்பார்க்க, ரஹ்மான் கொடுத்த ஒவ்வொரு மெட்டும் அவருக்குத் திருப்தியில்லாமல் அமைந்து விடுகிறது. கடைசியில் பழநி பாரதி அவர்களைக் கொண்டு பாடலை எழுதி வாங்கி அதற்கு மெட்டுப் போடச் சொன்னாராம். 
அந்தப் பாட்டுக்கு மெட்டுக் கட்டி ரஹ்மான் கொடுத்த அட்டகாசமான பாடல் தான் இந்த “நீ கட்டும் சேலை மடிப்புல”.

புதிய மன்னர்கள் படத்தின் பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் வழக்கமான நிறம் இருக்காது. பின் நாட்களில் ஹிந்தி உலகில் லகான், ரங் தே பாசந்தி என்று தேசிய எழுச்சி சார்ந்த அடையாளப் படங்களுக்கு முன்னோடி இது. 

ஆண்களா பெண்களா உசத்தி என்பது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் இருந்து பட்டி மன்ற மேடைகளில் இருந்து திரையிசைப் பாடல்கள் வரை ஏட்டிக்குப் போட்டியாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அப்படியானதொரு பாங்கில் அமைந்த பாட்டுத் தான் “ஒண்ணு ரெண்டு மூணடா”.
இந்தப் பாடல் வெளிவந்த காலத்தில் சக மாணவியர் கூட்டத்தைக் கலாய்த்துப் பார்த்த காலம் என்பதால் பள்ளிக் காலத்துப் பசுமை நினைவுகளைக் கிளறி விடும் என்பதால் மீன் பொரியலை வெறுஞ் சோறுடன் அள்ளிச் சாப்பிடும் சுவை போல ரசிப்பேன். 
“இசையமைப்பாளரே! எனக்கு ஒரு போட்டிப் பாட்டு வேணும் அந்தப் பாட்டில் பாடும் ஆணோ பெண்ணோ தங்கள் பாலினத்தை விட்டுக் கொடுக்காத தில் பாட்டு முடியும் வரை இருக்கணும்” இப்படியொரு எதிர்பார்ப்போடு இயக்குநர் விக்ரமன் ரஹ்மானிடம் யாசித்திருப்பாரோ என்று அந்த இசையமைப்புச் சூழலைக் கற்பனை பண்ணிப் பார்ப்பேன். விடுவாரா ரஹ்மான்? பாட்டு முழுக்க அந்த சக்தியை (energy) வீரியம் மிகுந்த இசையால் பின்னிக் காட்டியிருக்கிறார்.
தொம்த தொம்த தொம் தொம் என்று அந்தப் பாடலில் வரும் ரிதத்தின் உதைப்பைப் பாடலைக் கேட்டு முடித்த பின்னரும் அசை போட்டுக் கொண்டிருப்பேன்.
இசையை விலத்தி வரிகளை மட்டும் பிரித்துப் பார்த்தால் அந்த மெட்டில் ஆங்காங்கே ஒரு சாஸ்திரிய சங்கீதத்தனம் ஒட்டியிருக்கும். மனோ சித்ரா காதல் ஜோடிப் பாட்டுக்காரர்களை இப்படிப் போட்டியாளர்களாகப் பாட வைக்கும் புதுமையும் இனிக்கிறது. 
தேனிசைத் தென்றல் தேவாவால் களம் இறக்கப்பட்ட பாடலாசிரியர் கவிஞர்  காளிதாசன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எழுதிய ஒரே பாடல் இதுவாகத் தானிருக்கும். இந்தப் படத்தின் மற்றைய பாடல்கள் அனைத்தையும் எழுதி, ரஹ்மானுடன் முதன் முதலில் கை கோர்த்தார் பழநி பாரதி.

(தொடரும்)