Pages

Tuesday, December 27, 2022

இயக்குநர் கங்கை அமரன் 40 ஆண்டுகள் 🎥

நடிகர் பிரபுவுக்கு 1982 ஆம் வருடம் தன் வாழ் நாளில் மறக்க முடியாத ஆண்டு.

அதே ஆண்டின் ஆரம்பத்தில் சி.வி.ராஜேந்திரன் என்ற மூத்த இயக்குநரின்  “சங்கிலி" படத்தின் வழியாக குணச்சித்திர பாத்திரத்தில் மிடுக்கோடு அறிமுகமாகும் அவருக்கு அதே ஆண்டின் கிறிஸ்துமஸ் விருந்தாக அறிமுக இயக்கு நர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளி வந்த “கோழி கூவுது” ஒரு பண்பட்ட நடிகர் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்தது.

அந்த வகையில் அறிமுக இயக்குநர் என்ற தன் இன்னொரு அவதாரத்தை எடுத்த வகையில் கங்கை அமரனுக்கும், வாரிசு நடிகர் என்றாலும் உழைத்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்ற வகையில் நடிகர் பிரபுவுக்கும் இது கலைத்துறையில் 40 வது ஆண்டு. அவரின் சம காலத்து நடிகர்கள் பலர் ஓட்டமிழந்து நின்றாலும், “ஓடுற குதிரையில் நானும் ஒரு குதிரையாக இருக்கணும்” என்று வாய் விட்டுச் சொன்ன பிரபுவின் அந்தத் தாரக மந்திரம் தான் இன்று அவர் மகன் காலத்திலும் குணச்சித்திரமாகப் பரபரப்பாக இயங்க முடிகின்றது.

ஐந்து பாடல்களை வைத்து எப்படியாவது கதை பண்ணி விடலாம் என்ற கதைக்கே இடமில்லை. கோழி கூவுது தொடங்கி தன் ஒவ்வொரு படங்களிலும் கதையம்சத்திலும் கூடத் தன் முத்திரை பதிப்பார் கங்கை அமரன்.

அதற்கு உதாரணமாக பிரபுவை வைத்துப் பின்னாளில் இயக்கிய படங்களான பொழுது விடிஞ்சாச்சு, கும்பக்கரைத் தங்கையா, சின்னவர் ஆகியவற்றில்  வேறுபட்ட கதைப் பின்னணியும் உதாரணமாக அமையும்.

“கோழி கூவுது” படத்தைத் தொடர்ந்து "பாவலர் கிரியேஷன்ஸ்" தயாரிக்க "கொக்கரக்கோ" படம் கங்கை அமரன் இயக்கத்தில் உருவானது. இந்தப் படத்திலும் இசைஞானி இளையராஜா குறை வைக்காத மணி மணியான பாடல்கள். கோழி கூவுது படத்தைப் போல இந்தப் படத்திலும் வைரமுத்து பாடல்களை எழுதினார். அதில் ஒன்று தான் "கீதம் சங்கீதம்". படம் தோல்வி கண்டாலும் இன்னும் ஜீவித்துக் கொண்டிருக்கும் அதிமதுரப் பாடல் இந்தப் படத்தை எப்போதும் நினைப்பூட்டும். 

சினிமாத்துறையில் உச்சத்துக்கு வருவது சுலபமில்லை, அப்படியே வந்தாலும் அதைத் தொடர்ந்து சில வருஷங்கள் தக்க வைத்துக் கொள்வது என்பதும் சவாலான காரியம். இதையெல்லாம் தாண்டித் தங்களது தனித்துவத்தினால் முன்னேறி நின்று நிலைத்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் வெற்றிச் செய்திக்குப் பின்னால் பல இரகசியங்கள் இருக்கும், திறமையானதொரு இயக்குநரின் நெறிப்படுத்தலில் வளர்ந்தவர்கள், தமக்கு ஏற்ற பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அவற்றில் தம்மை நிரூபித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் நடிகர் ராமராஜன் எண்பதுகளின் மிக முக்கியமானதொரு நாயகனாகக் கொள்ளப்படுகின்றார்.

சினிமாவை வணிக சினிமா, வணிகம் சாரா சினிமா என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லாமே வணிக சினிமா தான், போட்ட முதலுக்கு மேல் இலாபம் வரவேண்டும் என்று தானே எல்லாத் தயாரிப்பாளரும் படத்தயாரிப்பில் இறங்குவார்கள்? ராமராஜனைப் பொறுத்தவரை எண்பதுகளில் ரஜினி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் ஒரு பக்கம் கொடிகட்டிப் பறக்க, இவரோ மாமூல் கதையம்சம் கொண்ட, அதிக சவால் இல்லாத பாத்திரங்களில் தன்னை வெளிப்படுத்தித் தானும் ஒரு முக்கியமான குதிரை என்று நிரூபித்தவர். ஆரம்பத்தில் தியேட்டரில் வேலை செய்தும், பின்னாளில் இராம. நாராயணனிடம் உதவி இயக்குநராக இருந்தும், பின்னர் தானே இயக்குநராக மாறியதும் என்று இவரின் பாதையே சற்று வித்தியாசமாகத் தான் ஆரம்பித்தது. ராமராஜனுக்கு "நம்ம ஊரு நல்ல ஊரு" திரைப்படத்தின் மூலம் அரிதாரம் பூசவைத்து நாயகனாக்கிய இயக்குநர் வி.அழகப்பனை நன்றியோடு இன்றும் நினைவுகூருவார். அந்தப்படத்தின் வெற்றியே அவரைத் தொடர்ந்தும் கதாநாயகனாக்கி இருத்தியது.  கங்கை அமரனே இந்தப்படத்தின் இசையமைப்பாளர்.

ராமராஜன் இயக்கிய படங்களில் இசைஞானி இளையராஜாவை இசையமைப்பாளராக்கியும் பாட்டுக்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார். ஆனால் இவரின் அடுத்த சுற்றில் நாயகன் ராமராஜன் என்ற கலைஞன் நீடித்து நிலைத்து நிற்க இளையராஜாவின் பங்கு பெரும்பங்கு என்பதைக் கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ராமராஜனின் படங்களில் ராஜாவின் பாடல்கள் விஷேசமாக இருக்கும், குறிப்பாக நகரம் சார்ந்த கதைக்களனைக் கொண்டு அமைந்த மோகன் படங்களில் ராஜா என்றும், கிராமம் சார்ந்த கதைக்களனைக் கொண்ட ராமராஜன் படங்களில் ராஜா என்றும் இரட்டை சவாரி ஆனால் இரண்டு நாயகர்களுக்குமே இந்த இசை தான் அவர்களின் கலையுலக வாழ்வை நீட்டித்து வைத்தது.  கே.எஸ்.ரவிக்குமார் வகையறா உருவாக்கி வைத்த ஆண்டான் அடிமைச் சமுதாயம் சார்ந்த நாட்டமைக் கதைகளல்ல ராமராஜன் படத்தின் கதைகள், குடும்ப உறவுகளுக்குள் நிகழும் இயல்பான சிக்கல்களை வைத்துப் பாட்டாலே பின்னிப்பிணைத்து வெற்றிகரமான படைப்பாக்கி விடுவார்.

இன்றைக்கும் கிராமியப்படங்கள் வந்து கொண்டு தானிருக்கின்றன, ஆனால் கிராமியம் என்றாலே "செண்பகமே செண்பகமே" என்று முணுமுணுக்கும் எண்பதுகளின் திரைப்பிரியர்களைத் தாண்டி எல்லார் மனசலும் இருக்கிறான் "எங்க ஊரு பாட்டுக்காரன்" . கோழி கூவுது படத்தின் பெரு வெற்றியை கங்கை அமரனாலேயே ஜீரணிக்க முடியாமல் தடுமாறித் தோல்விப்படங்களாகக் கொடுத்தவருக்கு பாட்டுக்காரன் மீண்டும் கைதூக்கி உயர்த்தி விட்டான். பிரபல தயாரிப்பாளர் சங்கிலி முருகன் தயாரிப்பில் வந்த அந்தப் படத்தில் ராமராஜனோடு ரேகா, நிஷாந்தி (அறிமுகம்) என்று ஜோடிகள், மொத்தம் எட்டுப்பாடல்கள், அத்தனையும் முத்துக்கள். கங்கை அமரனே பாடல்களை எழுதி அண்ணனிடம் கொடுக்க, அந்தநாள் நாடகக்காரர் சங்கிலி முருகனின் பழைய நட்பும் சேர்ந்து கொள்ள ராஜா குஷியாகிப் போட்ட பாடல்கள் இன்றும் தேன், " பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு ... பட்டுன்னு சேலையை கட்டி எட்டு வச்சு நடந்துகிட்ட"

 எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் வெற்றியால் எங்க ஊரு காவக்காரன் படத்தை சங்கிலி முருகன் எடுத்திருந்தாலும் ஏனோ கங்கை அமரன் இல்லை டி.பி.கஜேந்திரனே இயக்கம். "செண்பகமே செண்பகமே" பாடல் பாடாத தமிழ் பேசும் ஊர்களே இல்லை என்றாகிவிட்ட பின்னர் அதே தலைப்பில் மீண்டும் கங்கை அமரன், ராமராஜன் இணைந்த படம். "வெளுத்துக் கட்டிக்கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி" என்று பாடலை எழுதி அண்ணன் இளையராஜா ஆரம்பிக்க, தம்பி கங்கை அமரன் மிச்சப்பாடல்களைக் கவனித்துக் கொண்டார். மஞ்சப்பொடி தேய்க்கையிலே பாட்டின் மெட்டு தெலுங்கும் தாவியது, எல்லாப்பாடல்களிலும் உச்சம் "வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்ட வச்சுப்புட்டா"  தமிழ் சினிமாவில் ஓராயிரம் படங்கள் வந்திருக்கலாம், இதில் சில நூறை உச்சம் என்று கொண்டாடவும் செய்யலாம் ஆனால் ஏனோ எனக்கு "கரகாட்டக்காரன்" போன்ற படங்கள் கொடுக்கும் போதை ஏனென்று புரியாத புதிர். படத்தின் வீசிடி வாங்கி அதுவும் தீராமல் ஒரிஜினல் டிவிடி வாங்கி, இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் பிலிம் சுருள் கிடைத்தால் கூட வாங்கிச் சொந்தம் கொண்டாத் தோன்றுமளவுக்குப் பித்துப் பிடிக்க வைத்தது.  படத்தின் பின்னணி இசையை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிய பின்னரும் தீரவில்லை இந்தப் படம் மீது கொண்ட மோகம். ஒருமுறை கனவில் கூட ஏதோ ஒரு ஊர்க்கொட்டகையில் கரகாட்டக்காரன் படம் பார்ப்பது போலக் கண்டு அடுத்த நாள் என்னையே நொந்துகொண்டேன் 😉 இத்தனைக்கும் தில்லானா மோகனாம்பாளின் கொள்ளுப்பேத்தி கதை ஆனால் எல்லாமே அளவாகப் போட்டுச் சமைத்த அறுசுவை அரசு நடராசன் கைப்பதம். இந்தப் படம் ஒரு வருடம் ஓடியதில் வியப்பில்லை, ரசிகனுக்கு என்ன வேண்டும் என்று அவனுக்குத் தெரியும்.   "மோகம் தான் சிந்தும் தேகம் தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்"   "எங்க ஊரு பாட்டுக்காரன்" வெற்றியால் அந்தப் படத்தின் "செண்பகமே செண்பகமே" பாடலை எடுத்துத் தலைப்பாக்கி வெற்றி கண்ட கங்கை அமரனுக்கு "கரகாட்டக்காரன்" கொடுத்த தாறுமாறு வெற்றியால் அந்தப் படத்தில் இடம்பெற்ற "ஊரு விட்டு ஊரு வந்து" பாடலின் தலைப்பை எடுத்து இயக்கிய படம் வெற்றிகரமானதாக அமையவில்லை. அண்ணன் என்னதான் பாடல்களில் சோடை போகாவிட்டாலும் தம்பிக்கோ கவுண்டர், செந்திலை வைத்து பேயாட்டம் ஆடலாம் என்று விளையாடி விட்டார். 

இந்தப் படத்தில் வரும் " சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா" புலம்பெயர் தமிழருக்கு இன்னொரு தேசிய கீதம். "தானா வந்த சந்தனமே" எப்போது கேட்டாலும் தேனா இனிக்குமெல்லோ "கொத்து மல்லி கொண்டையில் ஆட குளிர்ப்பார்வை வண்டுகள் ஆட புத்தம் புது செண்டுகள் ஆட புது தாகம் தோணுமே"   "பொண்ணுக்கேத்த புருஷன்" இந்தப் படத்தின் பெயரை இப்போதுதான் கேள்விப்படுபவர்கள் இருக்குமளவுக்கு அதிக பிரபலமில்லாத படம் ஆனால் பிரபலங்கள் சேர்ந்த படம். மீண்டும் ராமராஜன், கெளதமி, கங்கை அமரன், இளையராஜா.  "சாதி பேதமின்றி சண்டை சிறு பூசலின்றி சகலரும் செல்லும் சினிமா" பாடல் தமிழ் சினிமாவை ஆராதிக்கும் பாடல்.  "மாலை நிலவே மன்மதன் கண்படும் அழகே" சென்னை வானொலியின் அந்தக்காலத்து நேயர் விருப்பத்தில் கட்டுண்டோருக்குப் புரியும் சிறப்பான பாடல்         கரகாட்டக்காரனுக்குப் பிறகு எடுத்ததெல்லாம் ஏனோதானோவென்றும் ஓரளவு வெற்றியும் என்று ஓடியபோது மீண்டும் ஒரு காரனோடு வந்தார் கங்கை அமரன், இம்முறை "வில்லுப்பாட்டுக்காரன்" கங்கை அமரன் இன்ன பிற பாடல்களோடு "சோலைமலையோரம் கோலக்குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேக்கலையோ" மனசை நிறைக்க, அதற்குச் சரிசமமாக வாலி எழுதிய "கலைவாணியோ ராணியோ பாடல்" போட்டி போட்டு இடம் பிடித்தது. வில்லுப்பாட்டுக்காரன் பாடல்களை மட்டும் நன்றாகப் பாடினான்.          கங்கை அமரனுக்கும் ராமராஜனுக்கும் சொல்லிவைத்தாற் போல நேரம் சரியில்லை, கூடவே தமிழ் சினிமாவின் போக்கும் இன்னொரு திசைக்கு மாறிவிட, இந்த பார்முலா படங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் தெம்மாங்கு பாட்டுக்காரன். நீண்ட காலம் இழுபறிப்பட்டு வெளிவந்த படம் (தணிக்கைக்குப் போக முன்னரே என்பதைக் கவனிக்க)  . கங்கை அமரன், இளையராஜா, பாவலர் வரதராஜன் சகோதரர்களின் பாடல்கள் இடம்பெற்ற படம் என்ற தனித்துவம் கூடத் தெரியாமல் போய்விட்டது.      

கங்கை அமரன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஐ வைத்து இயக்கிய படங்களில் முதன்மையானது “வெள்ளைப் புறா ஒன்று”. அந்தப் படத்தில் நடிகை சுஜாதாவுக்கே முக்கிய வேடம். இப்படி ஒரு படம் வந்த சுவடே தெரியாது.

அது போல அவர் இயக்கிய “தேவி ஶ்ரீதேவி” திரைப்படமும் பெரிய வெளிச்சம் காணாத திரைப்படம். நடிகர் ஏவிஎம் ராஜன் தயாரித்த அந்தப் படத்தில் அவரின் மகள் மகாலட்சுமி நாயகி.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை மனதில் வைத்து கங்கை அமரன் எடுக்க நினைத்த படம் “சக்கரைப் பந்தல்” ஆனால் கல்யாண் குமாரையே தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ஒப்பந்தம் செய்து அந்தக் காலத்தில் நாயகனாக அரிதாரம் பூசிய சரண்ராஜ் & நிஷாந்தி கூட்டணியில் எடுத்த படம், விளங்கவில்லை. 

எப்படி சிவாஜியைத் தான் ஆசைப்பட்டபடி "சக்கரைப் பந்தல்" படத்தில் இயக்க முடியவில்லையோ அது போலவே கமலை வைத்து "அதிவீரபாண்டியன்" படத்தையும் இயக்க முடியாது போயிற்று.

அர்ஜீனின் இறங்குமுக காலத்தில் “அண்ணனுக்கு ஜே” படத்தை கங்கை அமரன் இயக்கினார். படத்தில் கங்கை அமரன் முத்திரையே இருக்காது. பாடல்கள் அண்ணன் இசையில் வழக்கம் போலத் தேன் மாரி.

தொண்ணூறுகளில் தானே இசையமைத்து இயக்கிய படமாக அமைந்தது “அத்தை மக ரத்தினமே”. “அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நிலா நிலா” பாடல் மட்டும் அந்தப் படத்தின் பேர் சொல்ல விளங்கியது.

கங்கை அமரன் இதுவரை இயக்கிய படங்களில் அவருக்கு வெற்றியைக் கொடுத்த இறுதிப் படம் இந்த கோயில் காளை. 

கோயில் காளை படத்தில் வழக்கமான விஜயகாந்த்  & கனகா படங்களை விடக் கொஞ்சம் விரசல் தூக்கலாக இருக்கும்.

வங்காள மொழியில் ரவீந்திர நாத் தாகூர் எழுதிய கதையில் ஜெய பாதுரி (அமிதாப் மனைவி) நடித்த சுட்டிப் பெண் பாத்திரத்தை வைத்து கனகாவின் பாத்திரப் படைப்பை உருவாக்கி 

“விஜயகாந்த் ஓர் ஊருக்குப் பெண் பார்க்க வருவார். ஊருக்குள் நுழையும்போது, ஒரு தென்னந்தோப்பைக் கடக்கிறார்கள்; இளநீர் குடிக்க நினைக்கிறார்கள். தென்னை மரத்தில் ஏறி ஒரு பெண் இளநீர் பறித்துப் போடுகிறாள். வழியில் இளநீர் பறித்துப் போட்ட அதே பெண்ணைத்தான், அவர் பெண் பார்க்கப் போகிறார் எனக் கதையை உருவாக்கியிருந்தேன். அந்தப் பெண்ணாக கனகா நடித்தார். முழுக்க முழுக்க அந்த ஜெயா பாதுரி பாதிப்பில் உருவாக்கியதுதான் இது.” என்று கடல் தொடாத நதி தொடரில் “கோயில் காளை” கதாசிரியர் ஆர்.செல்வராஜ் கதை பிறந்த கதையைச் சொல்லியிருக்கிறார்.

இளையராஜாவின் குடும்பத் தயாரிப்பு என்பதும் சேர்ந்து கொள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் தேனிசை.

எனக்குக் கோயில் காளை படத்தை நினைத்தாலே அந்தப் படத்தில் இடம் பிடித்த "வண்ணச் சிந்து வந்து விளையாடும்" பாடல் தான் மனசுக்குள் பாடும். அவ்வளவுக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று அது.

வண்ணச் சிந்து பாடலைக் கேட்கும் போது வள்ளி முருகன் காதல் படலத்துக்குப் பொருந்தும் அட்டகாசமான இசைக் கோவையாக உணர்வேன்.

அண்ணன் உடையான் படம் இயக்க அஞ்சான் என்று இசைஞானி இளையராஜா இசையில் கங்கை அமரன் இயக்கிய படம். இயக்குநர் கங்கை அமரன் & இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணி என்றாலேயே கண்டிப்பாகப் பாடலில் தனிச் சுவை இருக்கும் என்று முடிவு கட்டி விட்டுத்தான் கேட்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். இந்தப் படத்திலும் எஸ்.ஜானகி என்ற பாடகிக்கே முழு ஜோடிப் பாடல்களையும் அர்ப்பணித்து விட்டு அந்தப் பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் மனோ ஆகியோர் பாட, தனிப்பாடலில் இளையராஜாவும்,கங்கை அமரனும் கூட்டுச் சேர்ந்து கொள்கின்றனர். மலேசியா வாசுதேவனும் பாடியதாகக் குறிப்பு உண்டு.  இப்படத்தில் இடம் பிடித்த

சோலைக் கிளிகள் ரெண்டு, அடி மானா மதுரையில, தாயிண்டு தந்தையிண்டு, பள்ளிக் கூடம் போகலாமா பாடல்கள் தொண்ணூறுகளின் மறக்க முடியாத பாடல் வரிசைகளில் தவிர்க்க முடியாதவை.

கங்கை அமரன் இயக்க, அவர் மகன் வெங்கட் பிரபு நாயகனாக அமைய, பெரியப்பா இளையராஜா இசையில் “பூஞ்சோலை” படம் உருவாகியும் இன்று 28 வருடங்கள் கழித்தும் முடங்கிப் போயிருக்கின்றது.

சில ஆண்டுகளுக்கு முன் அந்தப் படத்தை “ஒருவன் ஒருவன் முதலாளி” என்ற பெயரில் கொண்டு வர இருந்தும் கைகூடவில்லை.

பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்ற அவதாரங்களோடு ஒரு இயக்குநராகவும் தன்னை வெற்றிகரமாக நிலை நிறுத்திக் கொண்டவர் கங்கை அமரன்.

கானா பிரபா

27.12.2022


Monday, December 26, 2022

பாடகி கோவை கமலா ❤️


பொழுதிருக்கும் போதே

புகழ் தேடு

ஹே அடடடடா

இளமை அது போனா

திரும்பாது

ஹே அடடடடா.....

கானக்கருங்குயிலே 

கச்சேரிக்கு வர்ரியா வர்ரியா...


90களில் புகழ் பூத்த நூறு பாடல்களில் இந்தப் பாடல் தவிர்க்க முடியாததொன்று. பொன்னடியான் வரிகளில் இந்தப் பாடலைக் கேட்டால் துள்ளிசைக்குள் தத்துவார்த்தம் பொதிந்திருக்கும்.

இந்த வாரம் சாய் வித் சித்ராவில் Chithra Lakshmanan  “சேது" படத்தின் தயாரிப்பாளர் கந்தசாமி கலந்து கொண்ட போது இந்தப் பாடல் பற்றிச் சொன்ன போது ஆச்சரியம் எழுந்தது.

“கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்ரியா வர்ரியா” பாடலை உருவாக்கச் சொன்னதே தயாரிப்பாளர் கந்தசாமி தானாம்.

“முத்து" படத்தில் வந்த “கொக்கு சைவக் கொக்கு" மாதிரி ஒரு துள்ளிசைப் பாட்டு அதுவும் எல்.ஆர்.ஈஸ்வரி மாதிரி கனத்த குரலில் வரவேண்டும் என்று அவர் ஆசைப்படவும் முதலில் நாட்டுப்புறப் பாடல்களில் கோலோச்சும் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனைப் பாட ஒத்திகை பார்த்து ஈற்றில் இளையராஜாவின் தெரிவில் வந்தவர் கோவை கமலா.

கோவை கமலாவின் பாடலை முதலில் நான் கேட்ட அனுபவம் ஒரு இடி விழுந்தது போல 😜

ஏன் அப்படி ஒரு உவமை சொல்கிறேன் என்றால், என் சின்ன வயசில் அப்போது உள்ளூர்த் தொலைக்காட்சிச் சேவை வழியாக “ஓடங்கள்" படத்தைப் போட்டார்கள். அதில் மனோரமா தன் தோழிகளோடு சேர்ந்து ஒரு பாட்டைப் பாடுவார். அந்தப் பாட்டின் வரிகள் எப்படி இருக்கும் தெரியுமா?

கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும்

https://www.youtube.com/watch?v=T000GaIrjnM

சம்பத் – செல்வம் இரட்டையர்கள் இசையில் அந்தப் பாட்டைக் கேட்ட போது உண்மையில் கிறுகிறுத்தது. என்னடா கே.பி.சுந்தராம்பாள் சுத்தபத்தமாகப் பக்திப் பாடல் பாடுபவர் அந்தக் குரலில் இப்படி ஒரு பாட்டா என்று. ஆனால் கண்டிப்பாக அவராக இருக்கமாட்டார் என்று தேடிப் பிடித்த போது தான் கோவை கமலா என்ற பாடகி பற்றித் தெரிந்தது.

கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் கலையுலக வாரிசாகத் திகழும் கோவை கமலா எண்ணற்ற பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

கோவில் படத்தில் “காதல் பண்ண" https://www.youtube.com/watch?v=lDKn1OPHnIQ பாடலை முதலில் பரவை முனியம்மாவைப் பாட வைக்க முனைந்து பின்னர் அவருக்குப் பதில் கோவை கமலா வந்ததும் அப்போது துணுக்குச் செய்தியாக வந்தது. எப்படி மனோரமாவுக்குக் குரல் கொடுத்தாரோ அது போலவே பரவை முனியம்மாவுக்கும் பாடகக் குரலானார்.

59 திரைபடங்களில் பாடியிருக்கும் கோவை கமலா இளையராஜா இசையில், ராஜாவே எழுதிய 

“பதியை விட்டுப் பிரிஞ்ச காரணத்தால் 

பாரினில் பிறந்து வந்த தாயே " https://www.youtube.com/watch?v=o8wWMqdQT5U 

என்ற அற்புதமான பாடலை காதல் ஜாதி படத்துக்காகப் பாடியிருக்கிறார். வில்லுப்பாட்டின் சந்தத்தில் அந்தப் பாடல் அமைந்திருக்கும்.

ஏன் “தந்தனத்தோம் என்று சொல்லியே” https://www.youtube.com/watch?v=IomFQhUjkuU என்று வில்லுப்பாட்டையே இளையராஜா இசையில் “கரகாட்டக்காரி” படத்துக்காகப் பாடியிருக்கிறார்.

கலைஞர் வசனம் எழுதிய “உளியின் ஓசை” படத்தின் ரஷ் ஐப் பார்த்து விட்டு "இதில் ஒன்று குறையுதே என்று சொல்லி கூப்பிடு கமலாவை" என்று வாலியை எழுத வைத்துப் பாட வைத்தாராம்

கரகாட்டக்காரியா கூத்தாட்டக்காரியா” என்ற பாடலை.

ஸ்வர்ணலதாவுடன் கோவை கமலா பாடும் ஒரு பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=aZ7TTkSq__w

“இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” படத்தில் “அந்தப்புரம் மகிழ வரும்” https://www.youtube.com/watch?v=vgiehRrizuQ பாடலில் கோவை கமலா தோன்றி நடித்திருக்கிறார்.

தேவா இசையில் “ஒத்துடா ஒத்துடா” (புதுமனிதன்) மலேசியா வாசுதேவன் பாடலிலும் கோவை கமலா குரல் ஒலித்தது.

தேவாவோடு கூட்டுச் சேர்ந்து “ஊனம் ஊனம்” (பொற்காலம்) பாடலையும் பாடியிருக்கிறார். மேலும் காதலி, ஶ்ரீ ராஜராஜேஸ்வரி, சக்ஸஸ், மகா நடிகன் (அல்வா நாயகனே) என்று இன்னும் பல படங்களில் தொடர்ந்து தேவாவால் பாடல்கள் இவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

அவர் தனிப்பாடல்களாகப் பக்திப் பாடல்களை வழங்கியது போலத் திரையிசையிலும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் 

“அருள் தரும் முருகா”, “குன்றக்குடி கொண்ட வேலா”, “பழனியிலே பால் மணக்கும்” ஆகிய பாடல்களை  “யாமிருக்கப் பயமேன்” படத்திலும்,

“உதயத்தில் ஒளி தந்து” https://www.youtube.com/watch?v=GAE8cQ2dnoU 

பாடலை “நவக்கிரக நாயகி” படத்தில் கூட்டுப் பாடகியாவும் பாடியிருக்கிறார்.

ஒரு பேட்டி எதையெல்லாம் கிளறி விட்டது பாருங்கள் 🙂


காலம் இருக்குது வாய்யா

இந்த மண்ணோட மன்னர்களே

https://www.youtube.com/watch?v=cypg2w2XPNM

சேது படத்துக்காக முதலில் படமாக்கியதே இதைத் தானாம். பாலா, விக்ரம், சசிகுமார், அமீர், ரத்னவேல் என்று எத்தனை பேர் காலத்தை மாற்றி வைத்தது இந்தப் பாட்டு....


கானா பிரபா

26.12.2022


Friday, December 23, 2022

அங்கும் இங்கும் பாதையுண்டு இன்று நீ எந்தப் பக்கம் ❤️


கே.பாலசந்தர் என்ற படைப்பாளியின் கருவூலத்தின் இசை மொழியாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும், அதன் பாட்டுத் தலைவனாக பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியமும், 

தன் படைப்பை ஒரு ஐந்து நிமிடப் பாடலால் முன்னோட்டமாகக் காட்டும் திறனாக கவியரசு கண்ணதாசனும் விளங்கிருந்ததை அவர் தம் படைப்புகளின் வழியாகப் பல்வேறு உதாரண வெளிப்பாடுகளாக அமைந்திருப்பதை ஆதாரம் பகிரலாம். வி.குமார் காலத்திலும், எம்.எஸ்வி காலத்திற்குப் பிறகும் திறன் வாய்ந்த இசைக்கூட்டு இருந்தது மறுப்பதற்கில்லை. 

“SPB பாடகன் சங்கதி" நூலை எழுதிய போது ஒரு தனி அத்தியாயத்தை கே.பாலசந்தர் & எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூட்டுக்கு ஒதுக்கினேன். அவ்வளவு பெறுமானமும், தனித்துவமும் கொண்ட கூட்டணி அது. அதைத் தாண்டியும் இன்னும் இன்னும் தோண்டத் தோண்ட எழுத வேண்டும் என்று ஊற்றெடுக்கும் திறன்கள் அவர்கள்.

கே.பாலசந்தர் படைப்புகளில் ஜோடிப் பாடகராக அமைந்தது ஒரு விதம், நான்கு சுவர்கள் படத்தில் செளந்தரராஜனுக்குக் கொடுத்த அதே பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் கொடுத்து அழகு பார்த்த “ஓ மைனா” இரு வேறு பரிமாணங்கள், அவள் ஒரு தொடர்கதையின் விகடகவி கோபால் குரலாகத் தமிழ் கடந்தும் ஒலித்த “கடவுள் அமைத்து வைத்த மேடை”என்று இவற்றையெல்லாம் தாண்டி 

ஒரு படைப்பினை அடையாளத்தும் வகையில் அந்தப் படத்தின் முழு ஓட்டத்துக்கும் பின்னணிக் குரலாக வந்த 

“மான் கண்ட சொர்க்கங்கள்" (47 நாட்கள்),

https://www.youtube.com/watch?v=A4KruXv7k3I

நண்பர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் சூழ்நிலைக்கான பாடலாகத் தொனிக்கும்

“நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் 

 ஆண்டு பாருங்கள் தோழர்களே (புன்னகை)

https://www.youtube.com/watch?v=CJQEjl7K8ZE

படைப்பின் தலைப்பைக் கோடிட்டுக் காட்டும்

“மன்மத லீலை”

https://www.youtube.com/watch?v=u-fzYbVNjc0

“நினைத்தாலே இனிக்கும்"

https://www.youtube.com/watch?v=G0fJmoD7iXw

“தப்புத் தாளங்கள்"

https://www.youtube.com/watch?v=SnoYoiV8PXI

“தில்லு முல்லு"

https://www.youtube.com/watch?v=1LK_nQNjrTM

“உன்னால் முடியும் தம்பி"

https://www.youtube.com/watch?v=xc9wBTJpr74

“மகாகவி சுப்ரமணியபாரதியின் சிந்தனையைத் தன் கருவுக்குத் தோதாய்ப் பொருத்தி எஸ்பிபியைப் பாட்டுடைத் தலைவன் ஆக்கிய “வறுமையின் நிறம் சிகப்பு", பாடகனின் கதை என்றால் அது எஸ்பிபியின் குரல் அன்றோ என்றமைந்த “கேளடி கண்மணி" என்று இன்னும் ஏராளம் உதாரணங்கள் அழகழகாய்ப் பூக்கும்.


என் மனசுக்கு நெருக்கமான “நூல்வேலி” படத்தில் வந்த அந்த அமைதியான மெளலி என்ற பாத்திரப் படைப்புக்குக் கொடுத்த

தேரோட்டம் ஆனந்த செண்பகப் பூவாட்டம்

https://www.youtube.com/watch?v=jbmp4F9thc0

என்று குணச்சித்திரக் குரலாகவும் மிளிர்ந்திருப்பார்.

இவற்றோடு மிக முக்கியமானதொரு பாடலாக நான் நினைத்துக் கொள்வது, இந்தப் பதிவின் ஆரம்பப் பத்தியில் குறிப்பிட்ட கூட்டணியில் மிளிர்ந்த

“அங்கும் இங்கும்

பாதையுண்டு இன்று நீ

எந்தப் பக்கம் அங்கும்

இங்கும் பாதையுண்டு

இன்று நீ எந்தப் பக்கம்

ஞாயிறுண்டு

திங்களுண்டு எந்த

நாள் உந்தன் நாளோ

ஞாயிறுண்டு

திங்களுண்டு எந்த

நாள் உந்தன் நாளோ...”

https://www.youtube.com/watch?v=JmMKpqRZSiE

மும்முனைச் சூழலில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய ஒரு தர்மசங்கடமானதொரு நிலையில் நாயகியைப் பார்த்துக் கேட்குமாற்போல இந்தப் பாடல்.

கதாசிரியர்கள் தாம் எழுதிய கதையின் கதை மாந்தர்களோடே பேசிப் பார்ப்பார்களோ என்று நான் எண்ணுவதுண்டு. அதற்கு மிகப் பெரும் ஆதாரமாகவும் இந்தப் பாடலைக் கொள்ள முடியும். தான் சிருஷ்டித்த அனு என்ற பெண்ணைப் பார்த்து கவியரசர் மொழி பெயர்ப்பில் கே.பாலசந்தர் கேட்கிறாரோ இப்படி?

“கல்லைக் கண்டாள்

கனியைக் கண்டாள் கல்லும்

இன்று மெல்ல மெல்ல

கனியும் மென்மைக்

கண்டாள்”

கனி என்பதைப் பெயராகவும், வினையாகவும் ஆக்கும் திறனோன் கவியரசர்.

“கண்ணா என்றால்

முருகன் வந்தான் முருகா

என்றால் கண்ணன் வந்தான்

எந்த தெய்வம் சொந்தம் என்று

கூறிப் பூஜை செய்வாள் அவள்”

இங்கே உவமையில் காட்டும் துணைப் பாத்திரங்கள் எல்லாமே தெய்வம் இதில் ஏது தன் தெய்வம் என்று அங்கேயும் ஒரு கவிஞர் கிடுக்குப் பிடி.

“எந்த நாள் உந்தன் நாளோ” என்று கேட்கும் போது எப்பேர்ப்பட்டதொரு பரிவைக் கொட்டுவார் நம் பாடும் நிலா பாருங்கள்.

"இன்று நீ" என்பதன் பரிமாணங்களையும் உன்னிப்பாகக் கேட்க வைத்து நெகிழ வைப்பார்.

"கல்லைக் கண்டாள்" மிதப்பில் ஒரு ஏக்கத் தொனியைக் குரலில் படர விடுவார்.

“அங்கும் இங்கும் பாதை உண்டு" பாடல் கச்சேரி மேடையிலேயே உருவான கதையை மெல்லிசை மன்னர் சொல்லக் கேட்டுச் சிலிர்த்ததுண்டு.

https://www.youtube.com/watch?v=itZBjFs4_yc

ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும் தோறும் கே.பாலசந்தர் என்ற படைப்பாளியோடு கண்ணதாசன், விஸ்வநாதன், பாலசுப்ரமணியம் என்று நான்கு தூண்களும் சேர்ந்து கொடுத்த அந்தப் பிரமிப்பு எப்போதும் அகல்வதில்லை.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் நம்மை விட்டு எட்டு ஆண்டுகள் இன்றோடு.

சொந்தம் ஒன்று

பந்தம் ஒன்று வெள்ளை

உள்ள கிள்ளை ஒன்று

நடுவில் ஊஞ்சல் ஒன்று

தொடர்கதையோ

பழங்கதையோ விடு

கதையோ எது இன்று

அங்கும் இங்கும்

பாதையுண்டு இன்று நீ

எந்தப் பக்கம் ஞாயிறுண்டு

திங்களுண்டு எந்த நாள்

உந்தன் நாளோ

https://www.youtube.com/watch?v=0yHs_FyCdB4

கானா பிரபா

23.12.2022


Wednesday, December 21, 2022

🌹 காதலுக்கு மரியாதை 🎸 ❤️ 25 வருடங்கள் 💚மெல்பர்னுக்கு வந்து பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அங்கு அடிக்க்கடி தமிழ்ப்படங்கள் திரையிடும் மொனாஷ் பல்கலைக்கழகத்தின் யூனியன் சினிமாவில் முதல் காட்சி பார்த்து விட்டு, அடுத்த காட்சிக்குக் காத்திருந்தோரைப் பார்த்து “நாங்கள் ஏற்கனவே பார்த்த படத்தைத் தானே நீங்கள் பார்க்கப் போறீங்கள்” என்று கிண்டலடித்துக் கொண்டே வந்துது நேற்றுப் போலிருக்கிறது.


அதுவரை அப்பாவின் கடனே என்று படங்களை நடித்துத் தள்ளிய விஜய்க்கு மாபெரும் நட்சத்திர அந்தஸ்தளித்த பூவே உனக்காக, லவ் டுடே வரிசையில் வெள்ளி விழாச் சித்திரமாக அமைந்தது “காதலுக்கு மரியாதை”.


நாடகக்காரராக வேஷம் கட்டிய காலத்தில் இருந்தே சங்கிலி முருகனின் நேசத்துக்குரிய இசைஞானி இளையராஜாவோடு மீண்டும் இணைந்து இசை விருந்தோடு முருகன் சினி ஆட்ஸ் தயாரிப்பின் இன்னொரு வெற்றிச் சித்திரம். அதுவரை விநியோகஸ்தராக இயங்கிய ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் காதலுக்கு மரியாதை அடுத்த படி நிலைக்குக் கொண்டு போக உதவியது. அதற்குப் பின் ஆஸ்கார் ரவிச்சந்திரன் குறைந்தது ஒரு தசாப்தம் வரை உச்ச் தயாரிப்பாளராக இருந்தார் இன்றும் நிலைத்திருக்கிறார்.


இயக்குநர் பாசிலின் பல மலையாளப் படங்கள் தமிழுக்கு மாற்றம் கண்டு தயாரிக்கும் போது நிரந்தர இசையமைப்பாளராக இருப்பது இசைஞானி இளையராஜா. இசைஞானியின் பின்னணி இசையின் ஆழம் எவ்வளவு தூரம் சிறப்பாக இருக்கின்றது என்பதற்கு ஒரு உதாரணத்தை இங்கே தருகின்றேன். 


அனியத்தி பிறாவு திரைப்படத்தினை நான் காதலுக்கு மரியாதை திரைப்படம் வருவதற்கு முன்னர் பார்த்து ரசித்திருந்தேன். மீண்டும் அனியத்தி பிறாவு படத்தைப் பார்த்த போது "காதலுக்கு மரியாதை" திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா எவ்வளவு தூரம் தன் பின்னணி இசையினால் இன்னும் அந்தக் காவியத்தை உயரே தூக்கி நிறுத்தியிருக்கின்றார் என்பதை அழகாகக் காட்டுகின்றது இங்கே நான் தரும் இரண்டு படங்களின் இறுதிக் காட்சியும்.


முதலில் "அனியத்தி பிறாவு" படத்தின் இறுதிக்காட்சி, இசை வழங்கியவர் அவுசப்பச்சன்

https://youtu.be/dokObpEA2KM


இதோ இசைஞானியின் ராக சாம்ராஜ்யத்தில் "காதலுக்கு மரியாதை" இறுதிக் காட்சி, குறிப்பாக நிமிடம் 2.07 வினாடிக்கு முன்னும் பின்னுமுள்ள இசைமாற்றத்தை அவதானித்துப் பாருங்கள். காதலர் கண்கள் சந்திக்கும் போது அதுவரை இருந்த இசை மெல்ல மாறி சோக இழையோடலில் என்னைத் தாலாட்ட வருவாளோ


https://youtu.be/YWBpUCSgX8Y


97 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழில் தனியார் பண்பலை வரிசைகள் உலகளாவிய ரீதியில் பல்கிப் பெருகிய போது பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்களில் ஒன்றாக “இது சங்கீதத் திருநாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ” நிதமும் தவிர்க்க முடியாத பாடலாக ஓலித்தது. கூடவே “ஆனந்தக் குயிலின் பாட்டு இனி எங்களின் வீட்டுக்குள்ளே” என்று இரட்டைக் கொண்டாட்டப் பாட்டுகள்.

 சோகப் பாடல் பிரியர்களுக்கு “ஆரிரரோ ஆரிரரோ ஆனந்தம் தந்தாயே” என்று சித்ராவின் குரலில் அது மறு வடிவத்தில் வருடியது.


பொதுவாகவே ஃபாசில், பாலுமகேந்திரா படங்களில் 

இசைஞானி கூட்டில் கே.ஜே.ஜேசுதாஸ் இன் முத்திரைப் பாடல் ஒன்று இருக்கும். இங்கேயும் “ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுத்துகின்றதே” என்று தொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் அதிகம் ஆக்கிரமித்துக் கொண்ட பாடகி சுஜாதாவோடு கூட்டணி கட்டினார்.


“ஓ பேபி பேபி” விஜய் குரலில் ஒரு துள்ளிசை அந்தப் பாட்டை நினைக்கும் போதெல்லாம் “ந ந ந நா நா நா” என்று இடையிசையில் பவதாரிணியின் குரல் பூச்சு தான் முதலில் தோன்றி மறையும்.


காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஃப்ரெண்ட்ஸ் இந்த மூன்று விஜய் படங்களும் இசைஞானி இளையராஜாவின் இசையில் தொடர்ந்து வந்த போது முழுப் பாடல்களையும் பழநி பாரதி அவர்களே எழுதிய வரிகளில் இளமைக் கொண்டாட்டமாகவும், மெல்லிசையோடு இணைந்த கவி நயமுமாக ரசிக்க வைத்தன. அவற்றில் உச்சமாக அமைந்தது “என்னைத் தாலாட்ட வருவாளோ” பாடல். ஹரிஹரன் பாடிய அந்தப் பாடல் இருபது வருடங்கள் கழித்தும் இன்றும் மேடை நிகழ்ச்சிகளிலும் குடும்ப ஒன்று கூடல்களிலும் சூடான பரிமாறலாக இருக்கிறது.

இளையராஜா பாடிய “என்னைத் தாலாட்ட வருவோளோ” ராஜாவின் குரலைத் தேடி ரசிக்கும்

என்னைப் போன்ற ரசிகர்களுக்கானது.


நடிகர் மணிவண்ணனுக்காக இசைஞானி இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் தேவா பாடிய பாடல்கள்

அபாரமாக ஒத்துப் போயிருக்கின்றன. “மனிஷா மனிஷா போலிருப்பாளா” (நினைத்தேன் வந்தாய்), “கோகுலத்துக் கண்ணா கண்ணா” (கோகுலத்தில் சீதை) இரண்டிலும் அச்சொட்டாக மணிவண்ணன் இருப்பார். அதுபோலவே காதலுக்கு மரியாதையின் “ஐயா வூடு தொறந்து தான் இருக்கு”.

ஜ்ஜும் ஜ்ஜும் என்று ஒரு உதைப்பு ரிதம் பாடலோடு பின்னிப் பிணைந்திருக்க 

"ஏ இந்தா இந்தா இந்தா 

ஐயா வூடு 

தெறந்து தான் இருக்கு"

கேட்கும் போதே அந்த இடம் வலம் பாராமல் துள்ள வைக்கும் மொத்திசை அது.


காதலுக்கு மரியாதை முழுப் பாடல்களையும் கேட்க

https://youtu.be/0xVkHngAzBQ

Thursday, December 15, 2022

❤️ இசைச் சிற்பியின் தெம்மாங்குத் தாலாட்டு 🎸🪘

சீராக சம்பா நெல்லு குத்தி 

நான் சோறு சமைச்சிருக்கேன்

மாமா 

சோறு சமைச்சிருக்கேன்

சேலத்து மாம்பழ சாறெடுத்து

நல்ல ரசமும் வச்சிருக்கேன்

மாமா 

ரசமும் வச்சிருக்கேன்

ஹே ஊத்து தோண்டி

தண்ணி எடுத்து 

வெந்நீர் வச்சிருக்கேன்

மாமா

வெந்நீர் வச்சிருக்கேன்

உன்ன வாயைக் கொப்பளிக்க

பன்னீர் வச்சிருக்கேன்

மாமா

பன்னீர் வச்சிருக்கேன்

மாமா சாப்பிட வாரிகளா….

இல்ல தோப்புக்கு போறீகளா?

https://youtu.be/x4Cn9oGG5Kk

இப்படியொரு மிக நீண்டதொரு பல்லவி போலே இசையமைப்பாளர் சிற்பி அவர்களின் தெம்மாங்கு இசைப் பாடல்களை நீட்டலாம். கூடவே இது போல கிராமிய மணம் சமைத்த பழநி பாரதி அவர்களின் வரிகளும் பதமான சீரகச் சம்பா சோறு ஆகக் குழையாமல் குவிந்து கொள்ளும் மல்லிப் பூ போலே.

மல்லிகை பூவழகில்

பாடும் இளம் பறவைகளில் 

நானும் உன்னை தேடி வந்தேன்

பூங்குயிலே பூங்குயிலே

https://youtu.be/fKRb2hyrx5E

“அன்னை வயல்”  காலத்து சிற்பியை இன்னும் வயற் காட்டு மனிதர்கள் மறக்கவில்லை.

எப்படி எண்பதுகளில் சந்திரபோஸ், தேவேந்திரன் போன்ற இசை ஆளுமைகளை அவர்கள் இன்னார் தான் என்று அடையாளப்படாமல் கிராமங்களின் ரேடியோப் பெட்டிகள் சுமந்து திரிந்தனவோ அது போலவே தொண்ணூறுகளின் இசையமைப்பாளர்களில் சிற்பி அவர்களையும் நம்மவராக வைத்துக் கொண்டார்கள். 

சிற்பியின் “உள்ளத்தை அள்ளித்தா” போன்ற நாகரிகத் துள்ளிசை முகத்தை விடவும் வலிமை கொண்டது தெம்மாங்குப் பாடல்கள். 

அதற்கு வெத போட்டதே அவரின் அறிமுகமான “செண்பகத் தோட்டம்” தான். 

இசைஞானி இளையராஜாவுக்கு ஒரு அன்னக்கிளி, தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஒரு மனசுக்கேத்த மகராசா, தேவேந்திரனுக்கு ஒரு மண்ணுக்குள் வைரம் போன்று எடுத்த எடுப்பிலேயே ஒரு கிராமிய மணம் கமிழும் படத்துக்கு இசையமைப்பாளர் சிற்பியின் வருகை அமைந்திருக்கிறது. இயக்குநர் மனோபாலாவின் “செண்பகத் தோட்டம்” திரைப்படம் சிற்பி அவர்களின் திரையுலக அரிச்சுவடியில் முதல் படம்.

“முத்து முத்துப் பூமாலை” https://youtu.be/AnPPw0wSbv8 மனோ & ஸ்வர்ணலதா கூட்டாகச் சந்தோஷ மெட்டிலும் அதே பாடலை எஸ்.ஜானகி மனோவோடு இணைந்து https://youtu.be/pCoCraCnrU8 சோக ராகத்திலும் பாடிய பாடல்களும், கே.ஜே.ஜேசுதாஸ் இன் “ஓ வெண்ணிலா” http://youtu.be/gbQBHcQeimY பாடலும் அன்றைய கால கட்டத்தில் விரும்பி ரசிக்கப்பட்ட பாடல்கள். இன்னும் ஸ்வர்ணலதா பாடிய “ஒத்த நெலா விளக்கு முத்தம்மா பூ விளக்கு” https://youtu.be/HrdXUrcVxeE பாடலும் தாமதமாக ரசிப்புப் பட்டியலில் சேர்ந்த பாடல். செண்பகத் தோட்டம் படத்தில் மேற்கூறிய பாடல்கள் ஜனரஞ்சக அந்தஸ்த்தை அடைந்திருந்தாலும் சிற்பி அவர்களைப் பரவலாக அறிமுகப்படுத்தத் தவறி விட்ட படமாக அமைந்து விட்டது.

கொட்டைப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் ஊரையே கலக்கி சிற்பியின் அடையாளத்தை நிறுவியது.

தானானன்னா தனத் தானா தானானன்னா

தா நா தா நானன்னா…

ஏலேலங்கிளியே 

என்னைத் தாலாட்டும் இசையே 

உன்னைப் பாடாத நாள் இல்லையே

அடி கண்ணம்மா 

பாடாத நாள் இல்லையே……

https://youtu.be/tT_-d1DDANY

தொண்ணூறுகளின் போர்க்காலப் பொழுதுகளில் சைக்கிள் டைனமோ மின்னேற்றிப் பாட்டுக் கேட்ட இருண்ட பொழுதுகளில் நாங்கள் சிற்பியையும் விட்டு விடவில்லை. சொல்லப் போனால் நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம் பாடல்களை எல்லாம் நாள் முழுக்க கை வலித்து சைக்கிள் சக்கரம் சுற்றிக் காதில் தேனிசை வாற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தோம். அந்தக் கஷ்ட காலங்களில் நமக்குக் கிட்டிய இசை ஒத்தடங்கள் அவை.

குமுதம் போல் வந்தக் குமரியே

முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ

மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்ணனோ

https://youtu.be/5BCPfEYQA_0

பண்பலை வானொலி யுகத்தின் திறப்பு விழாக்களில் சிறப்பு விருந்தினராக வந்தார் சிற்பி காற்றலை வழியே.சிற்பி அவர்களின் இசையில் “மணி - ரத்னம்” படத்துக்காக வந்த “காதல் இல்லாதது வாழ்க்கை ஆகுமா” இலங்கை வானொலியின் புகழ் பூத்த பாடலாய் உலாவியதாக முன்னர் எழுதியிருந்தேன். அதே படத்தில் ஒளிந்திருக்கும் பொக்கிஷம் 

“நீரோடை தாளம் போட்டு ஓடுதே நதியாகத் தான்” 

https://youtu.be/7miJzxK40wk

“பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா

பனியில் நனையும் பெண்ணிலா

https://youtu.be/e2YRS0Uyslc

மக்கள் நாயகன் ராமராஜனுக்கு சிறப்பான பாடல் தந்தார் என்று காட்டியது அம்மன் கோயில் வாசலிலே.

“விவசாயி மகன்” , “பூமனமே வா”, “சீறி வரும் காளை” ஆக மீண்டும் சேர்ந்தார்கள்.

கரிசக் காட்டுக் குயிலே…..

மனம் கரிசாக் கிடக்குது மயிலே

https://youtu.be/R564v3N9-1g

அப்படியே கிராமத்து மண்ணில் இருத்தி விடும் இன்னுமொன்று.

இசையமைப்பாளர் தேவேந்திரனை பாரதிராஜாவின் சீடர் மனோஜ்குமாரும், ஏகலைவர் ஆர்.சுந்தரராஜனும் இசை இயக்குநராக்கிய அழகு பார்த்த பின் தானும் இணைந்தது போலவே இன்னொரு சீடர் மனோபாலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட சிற்பியைக் காலம் கடந்தும் “ஈர நிலம்” ஆக உள்வாங்கிக் கொண்டார். ஒரு பக்கம் சிற்பி என்ற தெம்மாங்குப் பாடகக் குரலும் அவ்வப்போது பொருத்தமாக வந்து சேரும். காத்திருந்த காதல் படத்தில் காதலரே காதலரே எஸ்பிபி வடிவத்தோடு சிற்பி பாடிய வடிவத்தோடு காட்சியிலும் தோன்றிச் சிறப்பித்திருப்பார்.

https://youtu.be/b9Ss-y68aIA

SPB - பாடகன் சங்கதி நூலின் ஒரு பாகமாக அமைந்த “அறிமுக இசையமைப்பாளர்களின் அடையாளம்” என்ற பகுதியில் இசையமைப்பாளர் சிற்பியையும் இணைத்து எழுதியிருந்தேன். திடீரென்று பொறி தட்டவே எஸ்பிபியோடு அவரின் அனுபவங்களையும் கேட்டால் என்ன என்று நினைத்து தொலைபேசி அழைப்பெடுத்தேன்.

நான் எதைப் பற்றிக் கேட்க விழைந்தேனோ அதையே மடை திறந்தாற் போலக் கொட்டினார். எஸ்பிபி என்ற உன்னதப் பாடகர் குறித்து சிற்பி அவர்களது ஒரு வரி நச் என்ற அந்த முத்திரைக் குறிப்பும் அவர் பகிர்ந்த சுவாரஸ்யமான அனுபவங்களையும் கேட்டுச் சிலிர்த்துப் போனேன். அவற்றை அப்படியே இந்த நூலில் ஒரு சொட்டு விடாமல் சேர்த்துக் கொண்டேன்.

சிற்பி அவர்கள் அந்த உரையாடலில் பகிர்ந்து கொண்ட பாட்டு ஜானகி ராமன் படத்தில் வரும்

பொட்டு மேல பொட்டு வைச்சு பொட்டலிலே போற புள்ள

நீ தொட்டு வச்ச குங்குமம்மா

நான் மண்ணில் வந்து பொறக்கலையே

https://youtu.be/1_36prliutA

மொச்ச கொட்ட பல்லழகி

முத்து முத்து சொல்லழகி

சீமையிலே பேரழகி 

https://youtu.be/DaERvm86gck

ரஞ்சிதமே காலத்தில் தோண்டி எடுத்துக் கேட்ட 28 வருடங்களுக்கு முன் வெளிவந்த சிற்பியின் உளவாளி பாடல் நினைப்பூட்டுவதே அவரை இன்னும் ரசிகர்கள் அடிமனதில் வைத்திருப்பதற்குச் சான்று.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 

இசைச் சிற்பி அவர்களுக்கு ❤️

கானா பிரபா

15.12.2022

Wednesday, December 14, 2022

🏍️ ராசுக்குட்டி🧑‍🦼

 “செட்டியாரே! 

என்னால உங்களுக்கு நிறைய நஷ்டமாகிடுச்சு. பாக்யராஜிடம் ஒரு படம் பண்ணக் கேட்டிருக்கிறேன் பண்ணித் தர்ரேன்னு சொல்லியிருக்கிறார். அதை உங்களுக்கே மாத்தித் தந்துடுறேன்.”


பிரபல கதாசிரியரும், தயாரிப்பாளருமான தூயவன் தன் இறப்புக்கு முன் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் கொடுத்து விட்டுப் போன மரண சாசனம் தான் “ராசுக்குட்டி”.


தூயவன் தயாரிப்பில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை வைத்து எடுத்த “நானே ராஜா நானே மந்திரி” படத்தில் அவரை நகைச்சுவை நாயகனாக ஏற்றுக் கொள்வார்களோ என்ற குழப்பத்தில் பின் பாதிக் கதையைக் குழப்பியதால் அந்தப் படம் முதலுக்கு நஷ்டமில்லாமல் ஓடித் தப்பியது. அதன் பின் கவுண்டமணியை நாயகனாக்கிய படம் அவுட். இப்படி தூயவன் படங்களுக்கு நிதி ஆதாரம் அளித்து நஷ்டப்பட்ட பஞ்சு அருணாசலத்துக்கு நன்றிக் கடனாகத் தான் பாக்யராஜ் கால்ஷீட்டை அவருக்கு எழுதிக் கொடுத்தார்.


ராசுக்குட்டி முதல் ஷெட்யூல் பார்த்த பஞ்சு அருணாசலத்துக்கு அதிருப்தி. பாக்யராஜும் அதை ஆமோதித்து என் மனைவி கூட இது உங்க படம் மாதிரி இல்லையேன்னு சொன்னாங்க என்று சொல்லி விட்டு அடுத்த ஷெட்யூல் எடுத்து முடித்தால் சிறப்பாக வந்ததாம். இவற்றை எல்லாம் பஞ்சு அருணாசலத்தார் தன் “திரைத்தொண்டர்” நூலில் பதிவாக்கி இருக்கிறார்.


பாக்யராஜ் படங்களில் நான் அடிக்கடி பார்த்து ரசிக்கும் படங்களில் முதன்மையானது ராசுக்குட்டி. அதுவும் பாக்யராஜ் வளர்ப்புப் பிள்ளை என்ற காட்சி எல்லாம் நெகிழ வைத்துக் கரைக்கும்.


கதையோட்டம் தெரியாத சூழலில் இப்படத்தைப் பார்க்கும் போது எதிர்பாராத திருப்பமாக  ஒரு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுக்கும். 

உதார்த்தனத்தில் இருந்து அந்த இரண்டு நிமிடத்துக்குள் நிலை குலைந்து சரணாகதி நிலையில் அப்படியே கை கூப்பி வணங்குவாரே அது தான் பாக்யராஜ் முத்திரை.


“என் சொத்தைப் பிரிச்சுக் கொடுங்க” என்று அடாவடியாகக் கேட்கும் ராசுக்குட்டிக்கு அதே இடத்தில் வைத்து, 

தான் கல்யாண்குமார் - மனோரமா தம்பதிகளின் சொந்த மகன் இல்லை என்ற உண்மை தெரிய வரும். 


அப்போது அந்தக் காட்சியமைப்பில் எழும் மாறுதல் என்பது சாதாரண கிராமத்து செண்டி என்று ஒதுக்க முடியாத அளவுக்கு மெல்ல மெல்ல நம் எல்லோர் மனதிலும் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணுமளவுக்கு அப்படியே மாற்றி விடும் காட்சிப் போக்கு. மனோரமாவுக்கு பழக்கப்பட்ட வேடம் என்றாலும் இதில் புதிதாகத் தெரிவார். அதுவும் உண்மை தெரிந்ததும் மருகு ம் காட்சியில்.


ராசுக்குட்டிக்கு வயசு 30. அந்த அனுபவத்தில் சிறு பகிர்வை பாக்யராஜ் பகிர்ந்திருக்கிறார்.


https://youtu.be/TemYWbWBNsU


ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி லாலி என்று அட்டகாஷ் ஜோடி ஒரு புறமென்றால் படம் தொடங்கிய போதே “வாடி என் செங்கமலம்” என்று மின்மினிப் பூச்சியின் ரீங்காரம் ஆஹா.

இதையெல்லாம் தாண்டி 


அடி நான் புடிச்ச கிளியே

வாச மலர் கொடியே

எம் மனசு தவிக்குதடி


தாரை தப்பட்டை ஒலியைப் போட்டு அப்படியே கோரஸ் அதைத் தாண்டி ஒரு சோக உணர்வுக்கு கொண்டு போகும் “ராஜ” வல்லமை. 

எஸ்.பி.பி இது மாதிரி எத்தனை பாடியிருப்பார். ஆனால் இந்தப் பாட்டைக் கேட்கும் போது அவ்வளவு புத்துணர்வு உணர்வுப் பிரவாகமாகக் கொட்டுவார்.


https://youtu.be/OCxwCWAfaoM


கானா பிரபா

14.12.2022

Friday, December 2, 2022

யுகபாரதி


"பல்லாங்குழியின்

வட்டம் பார்த்தேன் 

ஒற்றை நாணயம் 

புல்லாங்குழலின்துளைகள் 

பார்த்தேன் 

ஒற்றை நாணயம்"

https://www.youtube.com/watch?v=ppU1JFRRbx8

எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை வண்ணத்தில் என்னவொரு அழகான ஆரம்பத்தோடு தொடங்கினார் யுகபாரதி பாருங்கள்.

“ஆனந்தம்” படத்தில் ஐவரோடு ஒருவரானவர், வித்யாசாகரின் பாண்டவர் அணியிலும் தவறாது பயணித்து இன்று 20 ஆண்டுகளைக் கடந்து 1000 க்கும் மேற்பட்ட பாடல்களில்

தன் தனித்துவத்தை நிறுவிக் கொண்டே பயணிக்கிறார்.

"ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை முழுக்க உள்ளுணர்ந்து, அதன் பிறகு அந்தக் கதாபாத்திரமாகவே மாறி, அவனுடைய உடல் மொழி என்ன, அவனுடைய அறிவு மட்டம் என்ன, அவனுடைய சிந்தனையின் எல்லை என்ன என்பதை உணர்ந்து அதன் வழி பாட்டு எழுதுவார்"

இப்படியாகப் பாடலாசிரியர் யுகபாரதி குறித்து டி.இமான் சாய் வித் சித்ராவில் குறிப்பிட்டார். இந்தக் கூற்றை நியாயப்பட்டுத்த, யுகபாரதி அவர்கள் பாட்டெழுத்திய எல்லா இசையமைப்பாளர்கள், பாடல்கள் என்று ஒரு சுற்று சுழன்று விட்டு வந்தால் கச்சிதமாக ஒட்டிக் கொள்ளும்.  

அற்றைத் திங்கள் வானிடம்

அல்லிச் செண்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்

சொக்கும் ராகம் யாழிடம்

காணுகின்ற காதல்

என்னிடம்

நான் தேடுகின்ற யாவும்

உன்னிடம்

https://youtu.be/e8UR4e_phMM

இந்தப் பாடலில் தொடங்கி யுகபாரதியின் வரிகளைக் காதலித்துக் கொண்டே இருக்கிறேன்.

"ஜெய் பீம்" படத்தின் அந்த இறுதி நொடிகளில் நீதிமன்றக் காட்சி கடந்த ஆறுதற் பெருமூச்சுக்குப் பின் என்ன கிட்டப் போகிறது எனும் போது "மண்ணிலே ஈரமுண்டு" என்று கொடுப்பாரே ! அங்கே தான் அந்த ஒட்டு மொத்தப் படைப்புக்கும் தன்னாலான நியாயத்தையும் விதைத்து விட்டுப் போவார். இன்னும் ஆழமாக அவரின் பாடல்கள் இன்றைய தலைமுறையால் ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

வித்யாசாகரின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அவர் கொண்ட சாகித்தியத்துக்கு மலையளவு கொண்டாட வேண்டிய நம் சமூகம் நண்டு சிண்டுகள் கொட்டம் அடிக்கும் இந்த நேரத்திலும் கூடக் கண்டு கொள்ளாமல் இருக்கிறதே என்ற விரக்தி மேலிடும். அதில் உச்சம்

“கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை” பாடலைக் கேட்கும் போதெல்லாம். செட்டி நாட்டுத் திருமண மரபை ஆவணப்படுத்திய “இரு விழியோ”, அந்தாதி வடிவில் “நெஞ்சத்திலே நெஞ்சத்திலே” என்று இன்னும் கொண்டாட இரண்டு உண்டு.

இயக்குநர் கரு.பழனியப்பன் - வித்யாசாகர் ஜோடி அந்தக் காலத்து ஆர்.சுந்தரராஜன் - இளையராஜா கூட்டணி போன்று வெகு சிறப்பாகப் பயணித்தவர்கள். குறிப்பாக "பார்த்திபன் கனவு" தொட்டு "சதுரங்கம்", "சிவப்பதிகாரம்", "பிரிவோம் சந்திப்போம்", "மந்திரப் புன்னகை" என்று இந்தப் படங்களில் வந்த ஒவ்வொரு பாடல்களுமே இருந்து இருந்து பொறுமையாக நேர்த்தியாக இழைத்த அற்புதங்கள் போல மிளிரும். சொல்லப் போனால் வித்யாசாகரைத் தொடர்ச்சியாகவும், சிறப்பாகவும் பயன்படுத்தியவர்களில் மெல்லிசைக் களத்தில் கரு.பழனியப்பனுக்குத் தான் முதலிடம்.

இவர்களோடு கூட்டணி சேர்ந்த பாடலாசிரியர்கள் பலர் இருந்தாலும் பாடலாசிரியர் யுகபாரதி மட்டும் தனித்துத் துலங்குவார். இந்தப் பாடல் கூட அவரின் கை வண்ணமே.

இரு மனம் ஒப்புவிக்க திருமணம் நிச்சயக்கபட்ட அடுத்த கணமே சம்பந்தப்பட்ட ஆணும் சரி பெண்ணும் சரி உணர்வு ரீதியாக ஒரே நிறத்தில் தான் இருப்பார்கள். அவர்களின் கனவுலகம் திருமண பந்தத்தால் கைகூடும் இன்பத்தை மட்டுமே கோட்டையெழுப்பும்.

இந்தப் பாடல் எவ்வளவுக்கெவ்வளவு சுவை மிகுந்ததாக இருக்கிறதோ அதில் ஒரு சொட்டும் வீணாகாத காட்சிப்படுத்தல் இருக்கும்.

உதாரணமாக, முதலாவது சரணத்துக்கு முந்திய இடை இசையில் 1.09 நிமிடத்தில் இலிருந்து 1.11 நிமிடம் வரையான காட்சியமைப்பைப் பாருங்கள். நிச்சயிக்கப்பட்டவன் நினைவில் தோய்ந்த நாயகி ஸ்நேகா குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் தண்ணீர்ப் போத்தலை எடுத்துக் குடித்துக் கொண்டே தன்னிலை மறந்து நகருவதைத் தன் பார்வையால் வெட்டிவிட்டு ஒரு மின்னல் சிரிப்புச் சிரிக்கும் தந்தையாக மகாதேவன், அந்த இடம் ஒரு ஹைக்கூ.

அதே போல் மறுபக்கத்தில் 1.30 நிமிடத்தில் இழைத்த காட்சியில் வெறும் இலையில் சோறுன்ணும் தோரணையில் சேரன்.

"பட்டின் சுகம் வெல்லும் விரல்

 மெட்டின் சுகம் சொல்லும் குரல்

 எட்டித் தொட நிற்கும் அவள்

 எதிரே எதிரே"

இந்தப் பாடலில் மகத்துவம் உணர்ந்து உயிரோட்டமுள்ள காட்சி வடிவம் கொடுத்த்த இயக்குநர் கரு.பழனியப்பனையும் எவ்வளவு பராட்டினாலும் தகும்.

 http://www.youtube.com/watch?v=hQmpVS1qsVk&sns=tw

இம்மூவர் கூட்டணியைப் பாருங்கள் 

“கனா கண்டேனடி தோழி” (பார்த்திபன் கனவு) 

“கண்டேன் கண்டேன்” ( பிரிவோம் சந்திப்போம்)

“சொல் சொல்” ( பிரிவோம் சந்திப்போம்)

“கண்டும் காணாமல்” ( பிரிவோம் சந்திப்போம்)

“நெஞ்சத்திலே நெஞ்சத்திலே” ( பிரிவோம் சந்திப்போம்)

அன்பில்லாமக் கரைஞ்சது போதும் (மந்திரப் புன்னகை)

https://www.youtube.com/watch?v=g93O0VXjcgA

அம்புலிமாமா ( சதுரங்கம்)

எங்கே எங்கே (சதுரங்கம்)

அற்றைத் திங்கள் (சிவப்பதிகாரம்)

சித்திரையில் என்ன வரும் (சிவப்பதிகாரம்)

அடி சந்திர சூரிய (சிவப்பதிகாரம்)

https://www.youtube.com/watch?v=amGzQrGY10g

🌼கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை 🌴

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் பாடல் பற்றி எங்காவது கண்டாலோ ஏதாவது வானொலியில் ஒலிக்க ஆரம்பித்தாலோ அதைக் கடந்து போயிருக்கிறேன். அவ்வளவுக்கு அலுப்புத்தட்டுகிறாரே இந்த டி.இமான் என்று மனசுக்குள் நினைத்துக் கொள்வேன்.

இசையமைப்பாளர் டி.இமானின் ஆரம்ப காலப் பாடல்களில் நிறையத் தேடல் இருந்தது. ஆனால் எப்படி எஸ்.ஏ.ராஜ்குமார் புது வசந்தம் படத்துக்கு முன்னர் விதவிதமான அழகான பாடல்களைக் கொடுத்து வந்தாரோ அதே போல. ஆனால் எஸ்.ஏ.ராஜ்குமாருக்குப் புது வசந்தம் கொடுத்த பெரிய திருப்புமுனை போலவே டி.இமானுக்கு மைனா  படமும். அதற்குப் பின் அள்ளுப்பட்டு வந்த பாடல்கள் எல்லாமே மைனாத் தனமாகவும் கும்கித் தனமாகவும் அமைந்து விட்டது. ஒரே இசைப் பரிணாமத்தில் கிட்டத்தட்ட எல்லா இளம் நாயகர்களும் இமானின் இசையில் நடிக்கும் அளவுக்கு. "கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை" பாடலின் ஆரம்பமே அப்படியானதொரு எடுகோளை எடுக்க வைத்தது. ஆனால் வார இறுதியில் பொழுது போகாத பொம்முக்குட்டியாக "றெக்க" படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அன்று தொட்டதுதான் இந்த நிமிஷம் வரை முணுமுணுத்து ரசிக்க வைக்கிறது இந்தப் பாட்டு.

"கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை" பாடலைத் தூக்கி நிறுத்துவதே இந்தப் பாடலை வெகு அற்புதமாக, படத்தின் மிக முக்கியமான காட்சியமைப்புக்குப் பயன்படுத்திய வண்ணமே.

அதற்குப் பின்னர் தான் இந்தப் பாடலைக் காதலிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

யுகபாரதி இந்தப் பாடலை எழுதும் போதே பாரதியராக முண்டாசு கட்டியிருப்பார் போல, வரிகளில் அச்சொட்டான சுப்ரமணிய பாரதித்தனம் அழகோ அழகு. 

அந்தப் பாடல் படம் திரைக்கு வரும் வரை ரசிகர்களை ஆட்டிப் படைத்தது. ஆனால் விழலுக்கு இறைத்த நீராகப் பொருந்தாத படைப்புக்குப் போனதால் இன்று பாடலையே மறந்து போகும் நிலை. ஆகவே தான் இம்மாதிரியான பாடல்கள் படமாக்கும் அடுத்த நிலையில் தான் அதன் ஜீவிதமும் இன்றைய காலத்தில் இருக்கிறது.

"புதிய உலகைத் தேடிப் போகிறேன்" பாட்டைப் பாடிய வைக்கம் விஜயலட்சுமி தானே இந்தப் பாட்டையும் பாடியது என்று ஊர்மிளா கேட்டார். எனக்கு முன்பே றெக்க படம் பார்த்து விட்ட அவரும் இந்தப் பாடலைக் கேட்டு உருகிப் போனார்.

இல்லை இந்தப் பாட்டைப் பாடியது நந்தினி ஶ்ரீகர்.

“சக்க சக்களத்தி” 

https://www.youtube.com/watch?v=ioH20FxEZgM

வழியாக ரஹ்மான் மெட்டுக்கும் வரிகள் பதியம் போட்டார்.

இசைஞானியிடம் இன்னும் நிறைய எழுதியிருக்க வேண்டும் என்று ஒரு சோறு பதமாகச் சுவைக்க வைக்கும் 

“பூவைக் கேளு காத்தைக் கேளு” (அழகர்சாமியின் குதிரை)

https://www.youtube.com/watch?v=kTAm3TltwrE

மெட்டில் இசைஞானி

என்றும் அழகாக செய்கின்ற

மாயம் போல

உன்னில் பல நூறு இன்பம் தர

நீயும் வந்தாயே கூடி வாழ 

https://www.youtube.com/watch?v=q_XoN95NvnI

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 

இனிக்க இனிக்க எழுதும் கவிஞர் யுகபாரதிக்கு ❤️ 🎻💐 

கானா பிரபா

02.12.2022

Thursday, December 1, 2022

நிலவு வந்தது நிலவு வந்தது


நீயும் நானும் சேர்ந்ததற்கு

காதல் தானே காரணம்..

காதல் இங்கு இல்லை என்றால்

வாழ்வில் ஏது தோரணம் 💚


ஒரேயொரு ஐந்து நிமிடத்துக்குள்ளான பாடலில் அந்தக் காதலர்களின் அன்னியோன்யத்தை நிறுவிக் காட்ட வேண்டும். ஏனெனில் இந்தக் காட்சியமைப்பு நினைவொழுக்கின் பழைய வாழ்வைக் கிண்டிப் பார்க்கும் சூழல். சவாலை வாங்கிக் கொண்டது இசைஞானி ஆயிற்றே.


நிலவு வந்தது நிலவு வந்தது

ஜன்னல் வழியாக

ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது

கண்கள் வழியாக

https://youtu.be/Oz2JryqZOog


என்னை இழந்தேன்

செந்தேன் மொழியில்..

விண்ணில் பறந்தேன்

சிந்தும் கவியில்.. ❤️


ஒரு பக்கம் வாலியார் உருகித் தள்ளி எழுதி விட உயிர்கொடுக்கும் காதலர் வாய் மொழியாக ஜானும்மாவும், மனோவும்.

பாடலைப் பின்னிப் போட்ட அந்த இசைத் தூவல் எல்லாம் அவளை இழந்த போதும், அந்தக் காதலின் ஈரம் இன்னும் அவன் மனசுக்குள் இருப்பதைக் காட்டும். 


அந்த ஆரம்ப இசைச் சத்தம் இடையிசை எல்லாம் நீர்த்துளிகள் பட்டுத் தெறிக்கும் ஓசை நயம் அப்படியே வளித்து அள்ளும் புல்லாங்குழல்.


இரண்டாவது சரணத்தில் ஒலியெழுப்பும் மணியோசையோடு துளிர்க்கும் இசை தரும் தேவாலயத்தின் சன்னல் வழியே சுதந்திரமாக எட்டி  வான வெளி பறக்கும் புறாக்களாய்.


ஈழத்தில் போர் கனன்று கொண்டிருந்த அந்தத்


தொண்ணூறுகளின் காலப் பகுதியில் ஒவ்வொரு பாடல்களையும் “ஆழக் கடலில் தேடிய முத்து” போலக் கேட்டது. 5 வருடம் மின்சாரமில்லா இருட்டு வாழ்க்கையில் பாட்டுக் கேட்க மட்டும் குறைச்சலில்லை.

“இதயம்” கொடுத்த பரவசத்தில் “என்றும் அன்புடன்” படப் பாடல்கள் ஷண் றெக்கோர்டிங் பார் இல் வந்திருக்குது என்றறிந்து சுதாவின் மக்ஸெல் காஸட்டை காற்சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு யாழ் நகர பாஸ் ஸ்ராண்ட்டடியில் நடு நாயகமாக இருந்த அந்தக் கடைக்குப் போய் சதீஷ் அண்ணையைக் குசலம் விசாரித்து, நாளைக்கே தந்துடுங்கோ என்று அன்புக் கட்டளை போட்டு.

அடுத்த நாளும் விமானக் கழுகுகளின் இரையாகாமல் தப்பிப் பிழைத்து ஒலிப்பதிவு செய்த “என்றும் அன்புடன்” பாடல்களை, சைக்கிளைத் தலைகீழாகக் கிடத்தி மிதியடியைச் சுழட்டி டைனமோ வழியாக வயரில் பாயும் மின்சாரத்தை டேப் ரெக்கார்டரில் பாய்ச்சினால்

❤️❤️❤️❤️❤️❤️

இன்பம் என்றால் என்னவென்று

உன்னிடத்தில் கண்டு கொண்டேன்..

இன்னும் என்ன உண்டு என்று

சொர்க்கம் வரை செல்லுகின்றேன் 

❤️❤️❤️❤️❤️❤️


இப்போதும் கூட “நிலவு வந்தது” பாடலைக் கேட்டால் அந்தப் பள்ளிக்கூடக் காதலியைக் காணும் ஒரு இன்பப் பரவசம் தலையில் இருந்து கால் வரை அதிர்வலையை எழுப்பும்.


“என்றும் அன்புடன்” படம் வந்து இந்த ஆண்டோடு 30 ஆண்டுகளைத் தொட்டு நிற்கின்றது. ஆனால் எனக்கென்னவோ பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டி அதன் நறுமணத்தை மேவி நாசிக்குள் இழுக்கும் அனுபவம்.


நண்பர்களுக்கு டியூசன் போய் வர, மதியா சாப்பாட்டுச் செலவுக்குக் கொடுக்கும் பணத்தில் கொஞ்சம் மிச்சம் பிடித்துப் பங்கு போட்டு, ஒரு போத்தல் மண்ணெண்ணை வாங்கி 

இந்தப் படத்தையும் சூட்டோடு சூடாகப் பார்த்து ரசித்தோம்.

எங்கள் தமிழர் பகுதியில் பொருளாதாரத் தடை போட்ட அந்தக் காலம் மண்ணெண்ணெய் 200 ரூ என்றால் இப்போது எத்தனை ஆயிரம் என்று கணக்குப் பண்ணிப் பாருங்கள். 


“சின்னஞ்சிறு அன்னக்கிளி கண்ணில் ஆடுது”


https://youtu.be/Aukv-5HuAoE


இந்தப் பாட்டுக்குப் பின்னால் உள்ள கதை சொல்வார் இசைஞானி தன் மேடைகள் தோறும். மெல்பர்னில் அவர் 2013 இல் மெல்பர்ன் மேடையில் பகிர்ந்து கொண்டதை முன்னர் எழுதியிருந்தேன், அது ;


வாலி அண்ணன் எனக்கு முதலில் எழுதிய பாட்டு "கண்ணன் ஒரு கைக்குழந்தை". ஆனால் நான் இசையமைப்பாளரா வர்ரதுக்கு முன்னாடியே எனக்காக என் அண்ணன் பாஸ்கர் ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி இறங்கினார். அப்போ ஒரு தயாரிப்பு நிறுவனம் தாங்கள் தயாரிச்சிட்டிருக்கிற ஒரு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்காக வாலி எழுதிய பாடலைக் கொடுத்து அந்தப் பாடலை இசையமைக்கச் சொன்னார்கள், நானும் "வட்ட நிலா வானத்திலே" என்ற அந்தப் பாட்டை இசையமைத்துக் காட்டினேன்" என்று அந்தப் பாடலைப் பாடிக்காட்டினார்.

அந்தப் பாடலின் மெட்டை எங்கோ கேட்ட மாதிரி இருக்கே என்று என் வலது புற மூளை இயங்கத் தொடங்கியது. சட்டென்று கண்டுபிடித்து விட்டேன். அந்த மெட்டில் "என்றும் அன்புடன்" படத்தில் வரும் "சின்னஞ்சிறு அன்னக்கிளி கண்ணில் ஆடுது" என்ற பாடல், அதுவும் வாலி தான் எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது.


“இதயம்” படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தான் அதே முரளி & ஹீரா ஜோடியை வைத்து “என்றும் அன்புடன்” படத்தைத் தயாரித்தது. இங்கு காதலர்களாக ஒன்று சேர்ந்தாலும் மண வாழ்வில் ஒன்று சேராதிருப்பர். சித்தாராவுக்கும் ஒரு கதை, காலனி கலாட்டா என்று படம் ரசிக்கும் தரமென்றாலும் முன்னதைப் போல ஓடிச் சம்பாதிக்கவில்லை.


“என்றும் அன்புடன்” படத்தை இயக்கிய பாக்யநாதன், பின்னர் விஜய்யை வைத்து” நெஞ்சினிலே” படத்தை இயக்கினார். ஆனால் படப்பிடிப்பு நேர விஷயத்தில் கறார்த்தனம் காட்டிய எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஒரு முறை படப்பிடிப்பில் எழுந்த சோதனையால் அவரைத் தள்ளி விட்டுத் தானே இயக்கினார். இதனால் மனமுடைந்த ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் அந்தப் படத்தோடு விலகிய பின்னணிக் கதையை சாய் வித் சித்ராவில் சொல்லியிருக்கிறார்.


இயக்குநர் பாக்கியநாதன் & ராதிகா  ஜோடியாக “சித்திரச்சோலை” படம் எடுத்து முடிக்காமலேயே முடங்கிப் போனது.


“துள்ளித் திரிந்ததொரு காலம்”


https://youtu.be/v7X316JzJUo

 

அதுவரை “நிலவு வந்தது” பாட்டிலேயே மோகித்துக் கிடந்த எங்களுக்கு, படம் பார்த்த பின் பிடித்துப் போனது இந்தப் பாடலின் காட்சி அனுபவத்தோடு கேட்ட போது….


காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே

இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே


துள்ளித் திரிந்ததொரு காலம்

பள்ளிப் பயின்றதொரு காலம்


கானா பிரபா

01.12.2022

Monday, November 21, 2022

கதை வசனகர்த்தா "ஆரூர்தாஸ்"

தமிழகத்தில் நான் முதன் முதலில் காலடி வைத்து இந்த ஆண்டோடு 20 ஆண்டுகள் நிறைவுறுகிறது. வேலை நிமித்தம் பெங்களூருக்கு வந்தவன், பெரியம்மா வீட்டையும் (!) எட்டிப் பார்ப்போம் என்று சென்னைக்கு வந்தேன்.

தேவி பாரடைஸ் சென்று “கன்னத்தில் முத்தமிட்டால்" பார்த்து விட்டுத் திரும்பியவன் முன்னால் ஒரு சிறு புத்தக அங்காடி கண்ணில் படவும், அங்கே தொங்கியிருந்ததில் ஒன்றை எடுத்தேன்.
அதுதான், ஆரூர்தாஸ் எழுதிய “சினிமா : நிஜமும் நிழலும்".
ஆகவே பெரியம்மா வீட்டுப் பரிசாக இன்னும் ஞாபகத்தில் நினைப்பூட்டிக் கொண்டிருப்பது இந்த நூல் தான். இதுவரை ஆரூர்தாஸ் அவர்களைச் சந்திக்கவே வாய்ப்பில்லாமல் போனவனுக்கு, அவரின் கையெழுத்தும் பொறிக்கப்பட்டதைப் பெற்றதைத் தான் ஒரு அதிசயமாக நினைத்துக் கொள்கிறேன்.

“சிற்றுளியும் மலையைப் பிளக்கும் !
சிறிய படமும் வசூலை அளக்கும்”

“விதி” படத்தின் விளம்பர வாசகம் கூட ஆரூர்தாஸின் கைவண்ணமே. அறிஞர் அண்ணாவின் “வேலைக்காரி”, கலைஞர் கருணாநிதியின் “பராசக்தி” படத்தின் நீதிமன்றக் காட்சிகள் எவ்வளவு தூரம் ரசிகர் மனதில் கோலோச்சினவோ அதுபோலவே, பராசக்திக்குப் பின் 32 ஆண்டுகளுக்குப் பிறகு “விதி” படத்தின் நீதிமன்றக் காட்சிகள்
ஆரூர்தாஸின் சிற்றுளியால் செதுக்க, பெரும் வசூல் மழையைக் கொட்டிய வெற்றிச் சித்திரம் ஆனது.
அந்தக் காலத்தில் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற படங்களின் வசன ஒலிப்பேழைகளுக்கு நிகராகச் சக்கை போடு போட்டது “விதி” படத்தில் ஆரூர்தாஸ் எழுதிய வசனங்களோடு மிளிர்ந்த ஒலிச்சித்திரம். இன்றும் நமக்கெல்லாம் அந்தப் படத்தின் வசனங்கள் மனப்பாடம் ஆகுமளவுக்குப் பதியம் போட்டது.

மொழி மாற்றுப் படங்களுக்கு வசனமெழுதித் தொடங்கிய இவரின் கலைப்பயணத்தில் தமிழில் நேரடி கதை, வசனகர்த்தா என்ற அந்தஸ்தைக் கொடுத்தது தேவரின் “வாழ வைத்த தெய்வம்”.
தொடர்ந்து நீண்ட நெடுங்காலம் அவரைக் கதை வசனகர்த்தாவாக வாழ வைத்தது. தேவரின் அன்புக்குரியவராக அங்கே தொடர்ந்தும் அவரின் பேனா இயங்கியது.

பின்னாளில் இது போலவே “விதி” பட வெற்றி தொடர்ந்தும் கே.பாலாஜியின் தயாரிப்பில் உருவான படங்களில் இவரை எழுத வைத்துச் சிறப்பித்தது.

கவியரசு கண்ணதாசனால் “பாசமலர்கள்” என்று சூட்டப்பட்டு, பீம்சிங்கால் “பாசமலர்” ஆக்கப்பட்டதில் வசனம் எழுதிய ஆரூர்தாஸ் அந்தப் படம் பெற்ற பெரும் புகழில் பங்கு போட்டுக் கொண்டார்.

“என் படங்கள்லே டைரக்டர் மாறுவாரு, மத்தவங்கள்ளாம் மாறுவாங்க, ஆனா ரெண்டே ரெழ்ண்டு பேர் மட்டும் எப்பவும் மாற மாட்டாங்க, ஒருத்தர் சிவாஜி கணேசன் இன்னொருத்தர் ஆரூர்தாஸ்” என்று சொன்னவர்கள் தயாரிப்பாளர்கள் சந்தானம் மற்றும் வி.சி.சுப்புராமன். அதன்படியே பாசமலர், அன்னை இல்லம், அன்பளிப்பு என்று சந்தானம் தயாரித்தவைகளிலும், வி.சி.சுப்புராமனின் பார் மகளே பார், தேனும் பாலும் படங்களிலும் சிவாஜியும்,ஆரூர்தாசும் தான்.
ஜெமினி கணேசனுக்கு அடையாளத்தை நிறுவிய “வாழ வைத்த தெய்வம்” வசனகர்த்தாவை சிவாஜிக்கு ஜெமினியே அறிமுகப்படுத்தியதால் தான் 29 படங்களில் எழுதியிருக்கிறேன் என்று நன்றி பாராட்டியிருக்கிறார் ஆரூதாஸ்.

இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆருக்காக, தாய் சொல்லைத் தட்டாதே, குடும்பத் தலைவன், அன்பே வா, பெற்றால் தான் பிள்ளையா, தனிப்பிறவி உட்பட ஒரு தொகைப் படங்களிலுமாக இரண்டு முன்னணி நட்சத்திரங்களுக்குச் சமகாலத்தில் வசனகர்த்தாவாகப் பரபரப்பாக இயங்கியவர்.

அதுபோலவே தேவர் பிலிம்ஸ், ஏவிஎம் என்று முன்னணி நிறுவனங்களின் முக்கிய வசனகர்த்தா. சிவாஜி பிலிம்ஸின் முதல் வித்தான “புதிய பறவை” படத்துக்கும் சிவாஜியே விரும்பி அமர்த்தப்பட்டவர், கடைசிக் காட்சியில்
“பெண்மையே நீ வாழ்க!
உள்ளமே உனக்கு நன்றி”
என்று முத்தாய்ப்பாக முடிக்க வேண்டும் என்று சொல்லி மீண்டும் காட்சியமைக்க வைத்தவர் ஆரூர்தாஸ்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட “பூ ஒன்று புயலானது” (விஜயசாந்தியை உச்சாணிக் கொம்பில் ஏற்றிய படம்) படத்தில் ஆரூர்தாஸ் எழுதிய வசனங்கள் ஆனந்த விகடனில் வாரா வாரம் பிரசுரமானது.

“நாட்டிய தாரா” மொழி மாற்றுப் படத்தோடு தொடங்கியவருக்கு அவரின் இன்னொரு சுற்றாக மொழிமாற்றுப் படங்கள் வெற்றியைக் குவித்தன. மை டியர் குட்டிச்சாத்தான், வைஜெயந்தி ஐ.பி.எஸ், இதுதாண்டா போலீஸ், அம்மன் உள்ளிட்ட படங்களின் வெற்றியில் ஆரூர்தாசின் வசனமும் முக்கிய நாயகன்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றுப் படங்கள் கொட்டிக் கொண்டிருந்தன. ஒரு பக்கம் மருதபரணி இன்னொரு பக்கம் ஆரூர்தாஸ் என்று பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள் அப்போது.

Touring Talkies இல் அடிக்கடி வந்த கேள்விகளில் ஒன்று சித்ரா சாரை  ஆரூர்தாஸைப் பேட்டி எடுக்கும் படி கேட்பார்கள். முன்பு கொரோனா, பின்னர் சில மாதங்களுக்கு முன் ஆரூர்தாஸின் மனைவியார் இறந்த காரணத்தால் அந்தப் பேட்டி நமக்கெல்லாம் கிடைக்கும் வாய்ப்பே இல்லாமல் போனது ஆரூர்தாஸ் என்ற திரையுலக வசன “கர்த்தா”வின் நினைவுகளை அவரின் நீண்ட நெடிய பேட்டியாகப் பதியாமலேயே போய் விட்டது.

ஆரூர்தாஸ் என்ற கதை வசனகர்த்தா,
தமிழ்த் திரையுலகம் செழிப்பான உரையாடல் வளத்தோடு வாழ்ந்தது என்பதன் சாட்சியம், ஏசுவின் திருவடிகளைச் சேர்ந்தார்.

கானா பிரபா
21.11.2022

உசாத்துணை நன்றி : சினிமா : நிஜமும் நிழலும் - ஆரூர்தாஸ்


Monday, November 14, 2022

அப்பிடிப் பாக்குறதுன்னா வேணாம் 💜❤️


சுற்றிச் சுழன்றிடும் கண்ணில்

இசைத் தட்டு ரெண்டு பார்த்தேனே

பற்றி இழுத்தென்னை அள்ளும்

கன்னக் குழிகளில் வீழ்ந்தேனே....

அடித்துப் போட்டது போலதொரு களைப்பில் அமர்ந்தவன் இந்தப் பாடலை ஏனோ கேட்கவேண்டும் என்று தோன்ற கடந்த 1 மணி நேரமாகச் சுழற்றிச் சுழற்றிக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

சிலர் சாப்பிடும் போது பார்த்திருப்பீர்கள் தட்டில் அடுக்கி வைக்கப்பட்ட கறிகளை ஒவ்வொன்றாக நோகாமல் மெல்ல எடுத்துச் சாதத்தோடு கலந்து ஆற அமரச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். குறைந்த பட்சம் அரை மணி நேரம் அவர்களுக்குத் தேவையாக இருக்கும். கருமமே கண்ணாயினர் என்பது போல வேறெங்கும் கவனமில்லாது அன்னப் படையலை உருசி காண்பதே அவரின் சிந்தனையில் இருக்கும். சாப்பாடு ஒன்றே தான் ஆனால் அதை மள மளவென்று அள்ளி வாயில் திணித்து, கோப்பையை வழித்துத் துடைத்து ஐந்து நிமிடத்துக்குள் தமது "வேலை" முடிந்ததே என்று போய்க் கொண்டிருப்பர்.

அது போலத் தான் ஒரு பாடலை அனுபவித்துக் கேட்பதும்.

ஐந்து நிமிடப் பாடல் தான் ஆனால் அந்தப் பாடலின் மெட்டமைப்பு, வரிகளின் பொருத்தப்பாடு, இவற்றையெல்லாம் சுவை கூட்டிச் செவிக் குணவாகத் தரும் இசைக் கோவை இவற்றையெல்லாம் நேசித்துக் கேட்கும் போது அந்தப் பாடல் பதிலுக்கு நம்மிடம் காட்டும் நேசம் இருக்கிறதே ஆஹா.

அப்படி ஒரு பாடலோடு தான் இன்று வந்திருக்கிறேன்.

"அப்படிப் பாக்குறதுன்னா வேணாம் கண்ணுல தாக்குறதுன்னா வேணாம்" இயக்குநர் பார்த்திபன் சில வருடங்களுக்கு முன் இந்தப் பாடல் பிறந்த கதையை எள்ளுப் போலச் சொல்லியிருந்தார்.

ஒரு சம்பாஷணைக்குண்டான இந்த வரிகளை இசைஞானி இளையராஜா ஆரம்ப வரிகளாக்கிச் சுடச் சுட மெட்டமைத்துப் பிரமிக்க வைத்ததாகப் பார்த்திபன் கூற்று.

இனி நான் முன் சொன்ன விடயத்துக்கு வருகிறேன்.

முதலில் இதைக் கேளுங்கள்

https://soundcloud.com/ashaheer/appadi-parkarathu

இந்த இசைக் குளிகை பாடலின் இரண்டாவது சரணத்தில் பிரவாகமாகப் பாயும். கேட்கும் போது கடல் குளியலில் கைகளைச் சுதந்தரமாக அகல விரித்து நீர்வலையை அலம்பும் போது பிறக்கும் இன்பம் வருகிறதா இல்லையா.

சரி இனி இந்தப் பாடலின் ஆரம்ப இசைக்குப் போவோம்.

https://m.soundcloud.com/ravinat14/appadi?in=ravinat14/sets/ring-tones-raja

இளமைத் துள்ளலாய்க் குதிக்கும் இந்த ஆரம்ப இசையைப் பிரசவித்த போது இசைஞானிக்கு 59 வயது. எண்பதுகளில் வந்த பாடல்களையே மீளவும் கொடுத்துக் கொண்டிருக்கலாம் என்றொரு கருத்தைக் கொண்டிருப்போரின் எண்ணத்தையெல்லாம் இது மாதிரியான புத்திசை கரைத்து விடும். இந்தப் பாடல் வந்த போது 20 வருடங்களுக்குப் பின் இன்று போல் கரைந்து போய் விடுவேன் என்று நினைத்தே இருக்கவில்லை.காலம் போன பின் தான் இன்னும் இனிக்கிறது.

தன் வாழ்நாள் பூராகவும் புதிது புதிதாய் தேடிக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கெல்லாம் தான் கட்டிக் காத்த ரசிகச் சூழலுக்குள் (comfort zone) நின்று கொண்டு படைக்க முடியாது.

இது இசைக்கு மட்டுமல்ல எல்லா விதமான வினைத் திறனிலும் உச்சத்தைத் தேடிக் கொண்டிருப்போருக்கான அடிப்படைப் பண்பு. அதுதான் அவரை மாண்பு மிக்கோர் ஆக உயர்த்தும்.

"அப்படிப் பாக்குறதுன்னா வேணாம்" 

https://soundcloud.com/sridharravi/appadi-parkirthenna-ivan

மாதங்கியின் மயக்கும் குரலோடு இடை இசையில் ஜதி ஒன்று சொல்லி அவரை முழுமையாகப் பாட விட்டு இரண்டாவது சரணத்தோடு இணைந்து கொள்வார் உன்னிகிருஷ்ணன்.

இசைஞானி இளையராஜாவின் இசை மேதமையால் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றிருக்கும் இயக்குநர் குழாம் ஒரு புறமிருக்க, அவரை உள்ளார்ந்த நேசத்தோடு காதலித்துப் போற்றும்

மிகச் சில இயக்குநர்களில் பார்த்திபனும் ஒருவர்.

பொண்டாட்டி தேவை படத்தில் இருந்து இளையராஜாவோடு பார்த்திபன் கூட்டில் இசைப் படையல்கள் வாய்த்ததும் அவை பாடல்களிலும் குறை வைக்காதவை என்றாலும் பார்த்திபனின் குருநாதர்கள் ராஜாவோடு பணியாற்றிய போது கிட்டிய பரவலான வெகுஜன அந்தஸ்த்தைக் கொடுக்கக் கூடிய வெற்றி கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

பாடகி சுதா ரகு நாதன் தமிழ்த் திரையிசையில் பாட வந்து இந்த ஆண்டோடு 20 ஆண்டுகள் “நிறைந்திருக்கிறது"

“எனை என்ன செய்தாய் வேங்குழலே” வாலியின் கை வண்ணம்,

https://www.youtube.com/watch?v=WQMs5enVRTs

“எனக்கிணை யார் இங்கே இசையில்" 

https://www.youtube.com/watch?v=Hc5uqId_APw

“கண்ணன் நீயென் இசை நாத ஓவியம்"

https://www.youtube.com/watch?v=0jchEUXPTw0

கவிஞர் முத்துலிங்கம் கணக்கில் இரண்டு என்று முத்தான மூன்று பாடல்களோடு, இசைஞானி இளையராஜா இசையில் இருபது வருடங்களுக்கு முன்னர் திரையிசையில் அறிமுகமானார் சாஸ்திரிய சங்கீதப் பாடகி சுதா ரகுநாதன்.

பின்னாளில் பார்த்திபனின் சிஷ்யர் கரு.பழனியப்பன் இயக்கிய “மந்திரப் புன்னகை” படத்தில் இன்னொரு தேமதுரைப் பாடல்

“என்ன குறையோ” என்று தொடங்கும் கண்ணன் பாடலையும் சுதா ரகுநாதன் பாடியளித்ததை ரசித்துப் பகிர்ந்துள்ளேன்.

http://www.radiospathy.com/2010/12/blog-post.html

இசைஞானி இளையராஜாவின் “இவன்" பாடல்களில் வாலி, முத்துலிங்கம், மேத்தா, இளையராஜா, பழநிபாரதி, கபிலன், நா.முத்துக்குமார் என்று பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்கும் கவிஞர் குழாம் ஆகா.....

“அப்படி பாக்குறதுன்னா வேணா

கண் மேலே தாக்குறது வேணா

தத்தித் தாவுறதுன்னா னானா

தள்ளாடும் ஆசைகள் தானா”

தன் மேல் படரும் காதலன் கண்களைத் தவிர்ப்பதற்குத் தான் திரையிசை நாயகிகள் எத்தனை பாடல்களைப் பாடியிருப்பார்கள் இதற்கு முன்பும். அவை காலத்தால் அழியாதவை என்றால் இதுவும் தானே?

“வளையாத மூங்கிலில்

ராகம் வளைஞ்சு ஓடுதே”

போலத் தன் பாட்டுகளில் இசையையும், வாழ்க்கையையும் பிணைத்துக் கவி பாடும் திறனாளர் பழநிபாரதி அவர்கள்.

அதனால் தான் கண்களை இசைத்தட்டாகச் சுழற்றி விடுகிறார்.

“இவன்” பார்வையை அவள் தடுக்க, இவனோ அந்தப் பார்வையின் தேடலில் விளைந்ததை உச்சபட்ச உவமைகளோடு ஒப்புவிக்கிறான்.

அந்தப் பேரின்ப வெள்ளத்தில் விழுந்தவர்கள் நாமும் தான்.

தீக்க்ஷண்யாவின் கண்களில் “இவன்” விழுந்தான்.

“பேரின்ப வெள்ளத்தில்

நான் மூழ்கிப் போனேனே.....”

இந்தப் பேரின்ப இசையில் “இவன்” விழுந்தேன்”

"அப்படிப் பாக்குறதுன்னா வேணாம்" இன்று முழு நாளையும் என்னை ஆக்கிரமித்திருக்கும் இசை விருந்து.

ஆதி தாளம் போட்டு

எனை பாதியாக செய்து

தத்தளிக்க விட்டாயே


https://www.youtube.com/watch?v=Azodz4PitV8


கானா பிரபா


Thursday, November 10, 2022

காலங்கள்.. மழைக்காலங்கள்...❤️


தேன் குடித்த வண்டுக்குத் தேன் தான் கள்ளு. அது போல இந்தப் பாடலைக் கேட்டால் இசைத்தேன் இன்பதேன். அதுவே கள்(ளு) ஆகியும் விடுமல்லவா? 

தேன் குடித்த வண்டின் களிப்பு இந்தப் பாடலைக் கேட்கும் தோறும் எனக்கெழும். 

கவியரசர் கண்ணதாசனும் “காலங்கள் மழைக்காலங்கள்” பாடலில் “கள்” ஐப் பரவ விட்டிருக்கிறார். ஒவ்வொரு அடிகளும் கள்ளால் நிறைவுற்றிருக்கும்.

வெறும் “கள்” உண்ட மயக்கத்தை அனுபவித்ததில்லை, ஆனால் தாயகத்தில் இருந்த காலத்தில் அப்பம் செய்வதற்குக் கள்ளைப் பயன்படுத்தி மாவைப் புளிக்க வைக்கும் வழக்கம் இருந்ததால் அந்தக் கள் சுவை எப்படியோ ஒட்டிக் கொண்டு விட்டிருக்கலாம்.

“கள் பெற்ற பெருவாழ்வு” டாக்டர் மு.வரதராசனர் எழுதிய அந்தக் கட்டுரையில் “கள்” என்ற விகுதியின் பொருள் மயக்கத்தைப் பற்றி எழுதியிருப்பார். அந்தக் கட்டுரை நம் பள்ளிக்காலத்துத் தமிழ்ப் பாட நூலின் ஒரு அங்கமாக அப்போது இருந்தது.

“கள் பெற்ற பெருவாழ்வு” கட்டுரையைப் படிக்க

https://madhuramoli.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0.../

“கள்ளோ காவியமோ” என்ற நாவலைக் கூட டாக்டர் மு.வரதராசன் எழுதியளித்தும் உள்ளார்.

“காலங்கள் மழைக்காலங்கள்” பாடல் இடம் பிடித்த “இதயத்தில் ஓர் இடம்” படத்தில் ஜெயச்சந்திரனுக்கு ஒரு துள்ளிசை “காவேரி கங்கைக்கு மேலே”  https://www.youtube.com/watch?v=RUTVbpv2CWs  

இலங்கை வானொலியின் அந்தக் காலத்துப் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்களில் ஒன்றாகிப் போன “மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள்” https://www.youtube.com/watch?v=krYjIaZeT8c

ஜேசுதாஸ் குரலில் ஒலித்தது பலரின் மலரின் நினைவுகளில் கறுப்பு வெள்ளையாக நிழலாடும்.

இளையராஜா இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடவே இல்லை என்று அலும்பு பிடிப்பவர்களின் மூக்கை உடைக்க இதே படத்தில் அவரோடு  சந்திரன் பாடிய “மணப்பாறை சந்தையிலே” https://www.youtube.com/watch?v=Ew7N1LZYtd8 பாடலும் உண்டு.

மலேசியா வாசுதேவன் அவர்களின் தலை சிறந்த பத்துப் பாடல்களைக் கொடுக்கச் சொன்னால் இந்தப் பாடலை எப்படியாவது முதல் மூன்றுக்குள் நுழைத்து விடுவேன்.

“மணி முத்தங்கள்

நகை மின்னல்கள்

சிரிக்கின்ற பெண்கள் 

காவியங்கள்

மலர் மொட்டுக்கள்

இளஞ்சிட்டுக்கள்

அணைக்கின்ற ஆண்கள் 

ஓவியங்கள்

நேரங்கள் நதி ஓரங்கள்

ஆனந்த காலங்கள்”

என்று மனுஷர் உருகித் தத்தளிக்க, 

“எனை அள்ளுங்கள்

கதை சொல்லுங்கள்

அழகென்னும் தேரில் 

நடை போடுங்கள்

மலர் மஞ்சங்கள்

இரு நெஞ்சங்கள்

பிறர் காண வேண்டாம் 

திரை போடுங்கள்”

சுதந்திரப் பறவையாய் ஜானகியார் கடந்து விடுவார்.

“ஆட்டுக்குட்டி முட்டையிட்டு”, “தண்ணி கருத்திருச்சு” போன்ற பாடல்களில் ஒரு கிராமியத்தனமான குரலாக வெங்கலமாக மிளிர்ந்தவர், மிக மெருதுவானதொரு குரல் அலைவரிசைக்கு மாறிப் போய் இந்த மாதிரியான பாடல்களில் அடங்கிப் போய் விடுவார்.

கோடு கிழித்த அந்த அலைவரிசைக்கு மேலே எழாது தன் கோட்டுக்குக் கீழேயே நின்று ஜாலம் செய்யும் மலேசியா அண்ணரின் குரல்.

கிட்டார் மழைத்துளிகள், தபேலாவின் முத்தங்கள், 

உச்சி மோந்து வருடும் புல்லாங்குழல்கள்.....வயலின்கள்

இந்த ராகதேவன் பாடல்கள் சொர்க்கங்கள்

ராகங்களே சுகங்கள்

நாங்கள் கலை மான்கள் 

பூக்கள்….

காலங்கள் 

மழைக்காலங்கள்

புதுக்கோலங்கள்……

https://www.youtube.com/watch?v=jfVoCIS0xv0

கானா பிரபா

Wednesday, November 9, 2022

யாரிகாகி ஆட்டா மனசொலி ஹேளு ❤️❤️❤️


இசைஞானி இளையராஜா தன் பாடல்களில் வெவ்வேறான காட்சிச் சூழல்களிலும் புதுமையான உத்திகளைக் கையாண்டிருப்பதைப் பார்க்கும் போது ஆச்சரியம் மேலிடும்.


அவ்வாறானதொரு பாடல் தான் இந்த “ யாரிகாகி ஆட்டா”


https://youtu.be/mK1ak5B9tXo


கன்னடத்தில் Bharjari Bete 

படத்துக்காக 41 வருடங்களுக்கு முன்பே செய்து காட்டிய உத்தி அது. ஒரு காபரே நடனத்துக்கு 3 beats உத்தியைக் கையாண்டு அந்தப் பாடலை அமைத்திருக்கிறார்.

இந்த உத்தியைப் பற்றி ராஜா விளக்கிய பின்னர் பாடலைக் கேட்கும் போது அட போடத் தோன்றும்.


https://youtu.be/dqU5XM7ZuYQ


எஸ்.ஜானகி போன்ற அசுரத்தனமான பாட்டுக்காரர் தான் ராஜாவின் மனதில் ஓடும் இவ்வாறான புதுமைகளுக்கு வழி கோலுவார்கள். அதையே நிரூபித்தும் காட்டியிருக்கிறார் ஜானகிம்மா. ஆரம்பத்தில் பதுங்கிப் பதுங்கிப் பின் சுதந்திரப் பிரவாகமாகக் கொட்டுவார் பாருங்கள் அப்பப்பா


கன்னடத்தில் “ஹ” வகை வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கும். இங்கே “ஹேளு” என்று ஜானகிம்மா உச்சரிக்கும் போதெல்லாம் அதே இன்ப அனுபவம்.


பாடலின் இசைக் கோப்பும் இந்தப் புதுமை அனுபவத்தின் உச்ச சோடனையாக இருக்கும். தாள லயம் மூன்று மூன்று என்று தட் தட் தட்


இந்த மாதிரியான அற்புதமான பாடல் கன்னடத்தில் படமாக்கப்பட்ட வகையிலும் ஒரு பிரமிப்பான அனுபவத்தைக் கொடுக்கும்.

ஆனால் இது நான்கு வருடங்கள் கழித்துத் தமிழில் அந்த ஒரு நிமிடம் (1985) ஆன போது “நல்ல நேரம்” என்று ஜெயமாலினிக் குலுக்கலுக்குப் பயன்பட்ட போது கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அதை நீங்களே YouTube இல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்தத் தமிழ் வடிவத்தின் ஒலிப் பகிர்வை மட்டும் இங்கே கேளுங்கள்.


https://youtu.be/ELpXrToXfwE


எப்படி அந்த 3 beats உத்தியை யாரிகாகி ஆட்டா வரிகளும் மெய்ப்பித்ததோ அதே அளவு நியாயத்தைத் தமிழில் வைரமுத்து கொடுத்த வரிகளும் கொடுக்கவில்லை. இந்த மாதிரிப் பாட்டுக்கு வாலியோ, கங்கை அமரனோ அதிகபட்சமாக இருந்திருப்பார்கள்.


எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற இசை அசுரன் தான் பாடாத பாடல்களின் இசை நுணுக்கங்களைக் கூடப் பாட்டுப் பேட்டி மேடைகளில் பகிர்ந்து விளக்குவார். இந்தப் பாடலைக் கூட அவர் விட்டு வைக்காததைப் பார்க்கும் போது ஆச்சரியமும், இன்னொரு பக்கம் இப்படியான ஞானஸ்தரை எப்பிறப்பில் காண்போமோ என்ற கவலையும் எழும். 


https://youtu.be/RHP5_vcksMI


இசையமைப்பாளர் ஹம்சலேகாவை மட்டுமல்ல கணேச சதுர்த்தி மேடைகளில் இன்னும் கன்னடர்களின் பெரு விருப்பப் பாடலாய் இது இன்னும் கொண்டாடப்படுகிறது.


கன்னடத்தின் மகா நடிகன் சங்கர் நாக் இப்போது நம்மிடையே இருந்திருந்தால் தனது 68 வது பிறந்த நாளை இன்று 09.11.2022 ரசிகர்கள் புடை சூழக் கொண்டாடியிருப்பார். 

தன் 36 வயதிலேயே அகாலம் கொண்ட அவரின் “ஜோதயலி” https://youtu.be/xfWnvQHdkNo பாடல் வழியாக இன்னமும் மொழி கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். இசைஞானி இளையராஜா & சங்கர் நாக் தனிப்பதிவு பின்னர் கொடுப்பேன். சங்கர் நாக் இன் “Geetha” கன்னடப் படத்தில் ராஜா இசை கொண்டாடப்பட்டது போலவே Bharjari Bete பாடல்களும் இன்னொரு பரிமாணத்தில் அமைந்தவை. 

பாடல்களைக் கேட்க


https://youtu.be/VD4Vyfsg-zE


அவை கொண்டாடித் தீரா அனுபவம். 😍❤️


கானா பிரபா

Tuesday, November 8, 2022

உஷா உதூப் 75 ❤️❤️❤️

“பாப் இசை உலகின் ராணி” என்ற பட்டத்தோடு 56 வருடங்கள் தொடர்ந்து இளமைத் துடிப்போடு மேடைகளில் ஆட்டமும், பாட்டுமாகக் களிப்பூட்டும் மகாராணி. 

அண்மையில் ஒரு இசை நிகழ்வுக்குப் பயணிக்கும் போது அந்த வழியில் பாடகர் கார்த்திக் உள்ளிட்ட கலைஞர்கள் பக்கமிருக்க, இசைஞானி இளையராஜாவின் அரிய பாடலொன்றைப் பாடி அசத்தி விட்டு, ராஜாவைப் பார்த்து ”உங்க எல்லாப் பாட்டும் தெரியுமே” என்று சிரித்துப் பேசுகிறார்.

எஸ்பிபி போலத் தான் இவரும், தன்னுடைய ஒவ்வொரு மேடைத் துளிகளையும் உற்சாகக் கட்டுக்குள் வைத்திருப்பதில் உஷா உதூப் பாடகி என்ற எல்லையைத் தாண்டி, வாழ்வைக் கொண்டாடும் மகோன்னதம்.

வயசெல்லாம் வெறும் இலக்கம் தான் என்று துள்ளாட்டமும், கொட்டமுமாக இவரைப் பார்க்கும் போதே உற்சாகம் அள்ளும்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது YouTube ஐத் தட்டிப் பார்த்தால்

எஸ்பிபியை உஷா புகழும் காணொளி கண் பட்டது.

https://www.youtube.com/watch?v=zX6WGrgYOwg

இருவருமே 

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் தன் பங்குக்கு “ஊருக்கு உழைப்பவன்” படத்தில் 

It's Easy To Fool You https://www.youtube.com/watch?v=Kzw20o-_OcI

பாடலில் கூட்டுச் சேர்ந்து பாடியுமிருக்கிறார்கள்.

இசைஞானி இளையராஜா இசையில், உஷா உதூப் கடந்த ஆண்டு நவராத்திரி ஸ்பெஷலாகக் கொடுத்த “நிலா அது வானத்து மேலே” ஐ ஆன்மிகத்தில் கலக்கிக் கொடுத்த

Bhoi Maa Bhoiee

https://www.youtube.com/watch?v=gGNLG9yJiPk

பாடலுக்கு முன்பே, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை படத்தில் இரண்டு பாடல்கள்

“ராத்திரியில் தூக்கமில்ல"

https://www.youtube.com/watch?v=2O1n7y_HoZo

பாடகர் சாய்பாபாவுடன் கொட்டமடித்த 

“கற்சிலை சிலை தான்" 

https://www.youtube.com/watch?v=eNaPknsFNUA

இனிய உறவு பூத்தது பாடலின் அந்த உடற்பயிற்சிக் கட்டளைக் குரலாக எஸ்.ஜானகியோடு இணைந்த “சிக்கென்ற ஆடையில்”

https://www.youtube.com/watch?v=Udn3Y6Y1JQA


Keechuralu தெலுங்குப் படப் பாடல் (பரிந்துரை நண்பர் TC Prasan)

https://www.youtube.com/watch?v=6osVOyDKxG4

இசைஞானியின் 500 வது படமான “அஞ்சலி” கொடுத்த

“வேகம் வேகம் போகும் போகும்”

https://www.youtube.com/watch?v=1omuE_510gg

கூட்டுப் பாடல் என்று அமைந்திருந்தது. இன்று இசைஞானியின் உலகச் சுற்றுலாக்களில் பயணித்துக் கொண்டே இருக்கிறார்.

இளையராஜாவின் பிறந்த நாளுக்காக அவர் பாடியளித்த இசைக்கலவை

https://www.youtube.com/watch?v=U45DGYEuagA

1966 இல் பாடகியாக அறிமுகமான உஷா உதூப் 13 இந்தியப் பிராந்திய மொழிகளிலும், 8 வேற்று மொழிகளிலும் பாடியிருக்கின்றார். எந்த மொழி ஆனாலும் அது அந்நிய மொழி அல்ல தன் மொழி என்றாக்கி விடுவார்.

உஷா உதூப்பின் பயணம் தமிழில் 70 களிலேயே அமைந்திருந்தது. 

குன்னக்குடி வைத்திய நாதன் அவர்களின் இசையில்

“மேல் நாட்டு மருமகள்” படத்தில் Love is Beautiful https://www.youtube.com/watch?v=VXJzKk04a9A பாடலைப் பாடியதோடு காட்சியிலும் தோன்றி நடித்திருந்தார்.

இன்னொரு ஆங்கிலப் பாடலாக “Under A Mango Tree” https://www.youtube.com/watch?v=mqRdpqeJ37U

பாடலை “மதன மாளிகை” படத்துக்காக இசையமைப்பாளர் M.B.ஶ்ரீனிவாசன் வரிகள் எழுதி இசையமைக்கப் பாடினார்.

உஷா உதூப் தமிழில் “மன்மதன் அம்பு” படத்திலும் நடிக்க வைக்கப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=JY70nB3ePZk

உஷா உதூப்பின் மேடை எவ்வளவு தூரம் உற்சாகக் களையோடு இருக்கிறது என்பதற்கு உதாரணம் இது

https://www.youtube.com/watch?v=QO3oILb1vSY

பாப் இசைப் பாடகர் என்றால் அதீத முக்கல் முனகலோடு அந்நியப்பட்டு நில்லாது, பொதுமறை இசைப் பறவையாக ரசிகர்களை

மாற்ற வல்ல இயல்பு கெடாப் பாடகி இவர்.

தான் பாடாத பாடல்களைக் கூட, அது ஆண் குரல் என்றாலென்ன, பெண் குரலென்றால் என்ன அப்படியே தன்னுடையாக்கி மேடையேற்றிப் பிரதிபலிக்கும் பேராற்றல் மிகு அம்மணி இவர்.

இதோ பாருங்களேன்

https://www.youtube.com/watch?v=fDfojAS8C8I

வாழ்வைக் கொண்டாடப் பாடல்கள் மட்டுமல்ல, பாடகர்களும் தான் என்பதை மேடையில் நிரூபித்துக் கொண்டே இருக்கும்

உஷா உதூப் என்ற மகா கலைஞர் துள்ளிசையாய் ஓயாது இயங்க எல்லாம் வல்ல ஆண்டவன் துணையிருக்கட்டும்.

கானா பிரபா

08.11.2022


Monday, November 7, 2022

கமல்ஹாசன் என்ற பாட்டுக்காரர் தனக்காகப் பாடாத பாடல்கள் ❤️🎸

“பொன் மானை தேடுதே

என் வீணை பாடுதே

உன் பார்வை தொடுத்தது

எனக்கொரு பூ மாலை

சுகம் தர நடந்தது”

https://www.youtube.com/watch?v=Qr3PEIoio8s

எதுவித முன்னேற்பாடும் இல்லாமல் அப்படியே ராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்துக்குள் வந்த கமல், இளையராஜா வேண்டிக் கேட்க அப்படியே “சுகம் தர நடந்தது" போலப் பாடி விட்டுப் போனார் மு.மேத்தா வரிகளில் நடிகர் மோகனுக்காக, அந்தச் சம்பவம் “ஓ மானே மானே” படத்துக்காக அமைந்தது.   

இதற்கு முன்பும் இன்னொரு சந்தர்ப்பம் கமல்ஹாசனுக்கு அமைந்திருக்கிறது. 

“பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் 

ஐயனை நீ காணலாம்” என்ற ஜேசுதாஸ் பாடல் சரணம் ஐயப்ப்பா படத்தை நினைப்பூட்டி விடும். இந்தப் படத்தின் இசைமைப்பாளர் சந்திரபோஸ் இசையில் “சரணம் ஐயப்பா” படத்தில் “அண்ணா வாடா தம்பி வாடா” https://www.youtube.com/watch?v=MmXkDbGJo2E  என்ற பாடலை கமல்ஹாசன் பாடியிருந்தாலும் அது வேறொருவருக்கானதாக அமைந்தது. இதே படத்தில் கமல் கெளரவ வேடத்திலும் தோன்றியிருக்கின்றார்.

கங்கை அமரன் இசையில் தெரு விளக்கு படத்தில் இளையராஜா பாடியது போல, கமல்ஹாசனும் & சைலஜாவோடு இணைந்து

"மதுரைப் பக்கம் என் மச்சான் ஊரு"

https://www.youtube.com/watch?v=bJaRXU_eC5A

பாடியுள்ளார்கள்.

கமல்ஹாசன் என்னும் கலைஞன் தன் நடிப்புத் திறனோடு, ஆடல், பாடல் திறனையும் ஒருங்கே வளர்த்துக் கொண்டவர். முன்னர் ஒருமுறை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பாலமுரளிகிருஷ்ணா கூட, கமல் தன்னிடம் சங்கீதம் கற்க வந்ததாகவும், ஒரு சில நாட்களிலேயே அவரின் திறமையைக் கண்டு தான் வியந்ததாகவும் முறையாக இன்னும் பயிற்சி எடுத்திருந்தால் அவரின் பாடும் திறன் இன்னும் உயர்ந்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

குணா பாடல் ஒலிப்பதிவில் கூட இளையராஜா கமலோடு பேசும் போது கமலுக்கு ஹைபிட்சில் பாடும் திறன் இருப்பதைச் சிலாகித்து, சிங்கார வேலனில் "போட்டு வைத்த காதல் திட்டம்" பாடலைப் பாட வாய்ப்புக் கொடுத்ததைக் குறிப்பிட்டிருந்தார்.

“ஞாயிறு ஒளிமழையில்” (அந்தரங்கம்) https://www.youtube.com/watch?v=rLSmBy55ot0  படத்தில் ஜி.தேவராஜன் இசையில் தொடங்கி சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளடங்கலாக ஏராளம் இசையமைப்பாளர் இசையில் கமல்ஹாசன் பாடியிருக்கிறார். அவற்றில் 99 வீதமானவை தனக்கான படங்களுக்காகவே பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னாளில் “காதலா காதலா” படத்தில் கார்த்திக் ராஜா இசையில் பாடி நடித்த கமல்ஹாசனை, தன் பெரியப்பா மகன் பார்த்தி பாஸ்கர் பாடல் வரிகளில் பவதாரணி, ஸ்வர்ணலதாவுடன் கூட்டுச் சேர்த்துக் கொடுத்த “முத்தே முத்தம்மா” https://www.youtube.com/watch?v=ippxU28VPMM 

அட்டகாஷ் ரகம். தனிப்பட்ட ரீதியில் கமல் பாடிய பாடல்களில் உச்சமாக ரசித்துக் கேட்பேன்.

அது போல இதுவரை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் கமல்ஹாசன் நடித்திருக்காவிட்டாலும், யுவனின் ஆரம்பகால ஆல்பமான “The Blast” இல் 

“பூக்கள் எல்லாம்” (பார்த்தி பாஸ்கர் & சுஜாதா வரிகள்) 

https://www.youtube.com/watch?v=jj1j2bN0Aws

“வா நந்தனே” (அமரர் வாசன் வரிகள்)

https://www.youtube.com/watch?v=kcbq05ZeNxg

அவள் தேவதை (கவி ரவி வரிகள்)

https://www.youtube.com/watch?v=1OXeyLqqx2Q

போன்ற பாடல்களில் தன் குரலைக் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.

பின்னாளில் புதுப்பேட்டையில் நா.முத்துக்குமார் வரிகளில்

“நெருப்பு வாயில்”

https://www.youtube.com/watch?v=nj2_XlOc5N4

பாடலில் யுவன் இசையில் ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார் கமல்.

தனிப்பட்ட ஆல்பம் என்று சொல்லும் போது கொரோனா காலத்தில் ஜிப்ரான் இசையில் கமல்ஹாசன் பகிர்ந்த “அறிவும் அன்பும்” பாடல் தொகுதியும் குறிப்பிட வேண்டியது. கானா பிரபா

கமலின் தயாரிப்பு என்று வரும் போது நளதமயந்தி படத்தில் வித்தியாசமான இரண்டு பாடல்கள் 

Sudupattadha

https://www.youtube.com/watch?v=ydrEqU1y-pE

Stranded On the Streets

https://www.youtube.com/watch?v=LyBGscQMRW4

ரமேஷ் விநாயகம் இசையில் கமல் பாடியளித்திருந்தார்.

முத்துராமலிங்கம் படத்திற்காக நீண்ட இடைவெளிக்குப் பின் தன் இசையில் கமல்ஹாசனைப் பாட வைத்தார் “தெற்கத்தி சிங்கமடா” இளையராஜா. பெரிதும் திருப்தி தராத படைப்பு அது. இளையராஜாவுக்காக பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதிக் கொடுத்த இறுதிப் பாடல் அது.

ஆனால் Happi படத்துக்காக ராஜா மீண்டும் கமலை அழைத்துக் கொடுத்த Zindagi dish  https://www.youtube.com/watch?v=EYYn9rZvSdk பொக்கிஷம் எனலாம்.

“வானம் முழுதும் பௌர்ணமி

உன் அழகில் தான் வந்ததோ

தேசம் முழுதும் மின்மினி

உன் வரவை தான் தேடுதோ.....”

பன்முகத் திறமையாளர் நம்மவர் கமல்ஹாசனுக்கு இனிய 68 வது பிறந்த நாள் வாழ்த்துகள்.

கானா பிரபா

07.11.2022


Thursday, November 3, 2022

வான் மீதிலே …..💛 வா வெண்ணிலா 💚 ஏ வெண்ணிலா ❤️

“வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே”


என்ற அதியற்புதமான பாடல் “சண்டி ராணி” படத்தில் இடம்பெற்றிருந்தது. அதை ஒருமுறை இளையராஜா, எம்.எஸ்.விஸ்வ நாதனிடம் சிலாகித்துப் பேசவும், அப்போது சி.ஆர்.சுப்பராமன் அவர்களின் உதவியாளராக இருந்த சமயம் தானே அந்தப் பாடலை கம்போஸ் செய்த தகவலை சொல்லியிருக்கிறார். அதை ராஜா மேடையில் கூறுவதை 5 வது நிமிடத்தில் கேட்கலாம்.


https://youtu.be/OKT7psGQ41E


“வான் மீதிலே” பாடல் பிறந்த கதையை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதனே சொல்லும் அற்புதமான பகிர்வையும் கேட்டுப் பாருங்கள்.


https://youtu.be/fIOOK9QCb7k


இதே பாடலின் வழி மூலமாக 33 ஆண்டுகள் கழித்து மெல்லிசை மன்னரும் இசைஞானியும் ஓன்று கூடி இசையமைத்துப் பிறந்தது தான் “மெல்லத் திறந்தது கதவு” படத்தில் இடம் பெற்ற “வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே” 


https://youtu.be/9VMs5JITg5Q


இந்தப் பாடலின் காட்சியமைப்பில் இன்னொரு சிறப்பாக அந்த இசைப்பள்ளி ஆசிரியராக வெள்ளைச் சட்டையுடன் தோன்றுபவர் இன்னொரு இசை மகானுபவர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்கள்.

இப்படியாகப் பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தது “வான் மீதிலே” பாடல்.


“வா வெண்ணிலா” பாடல் இன்று வரை 35 ஆண்டுகள் கழித்தும் புத்துணர்வோடு இருப்பதைத் தனியாக வேறு சொல்ல வேண்டுமா?


சண்டி ராணி படத்தைத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மும்மொழிகளிலும் இயக்கி நடித்தவர் பானுமதி ராமகிருஷ்ணா. நாயகன் என்.டி.ராமராவ்.


வான் மீதிலே” பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடியவரும் பானுமதி தான். இந்தப் பாடலில் கவரப்பட்ட

இசைஞானி பின்னாளில் பானுமதியைத் தன் இசையில் பாட வைத்த நேரம் என்ன பேசியிருப்பார்கள் என்றெல்லாம் கற்பனை செய்வேன்.

பானுமதி இளையராஜா பேட்டியில் 


http://isaignanibakthan.blogspot.com/2013/


அந்தச் சந்தேகமும் தீர்ந்தது.


“சண்டி ராணியே எனக்குக் கப்பம் கட்டு நீ” (மன்னன்) முதலடிகளை வழக்கம் போல் ராஜாவே எடுத்துக் கொடுத்தும் இருக்கலாம். 


ஆனால் இந்த சண்டி ராணியின் கணக்கு இன்னும் விட்டு வைக்கவில்லை. கங்கை அமரனும் இசையமைப்பாளராக இயங்கிய போது “வான் மீதிலே” பாடலின் பாதிப்பில் ஒரு பாடலைக் கொடுத்தார். அதுதான்

“ஏ வெண்ணிலா என் நெஞ்சமே

 உன் வானம் தானே”


https://youtu.be/-UuYqA04TGs


கங்கை அமரன் அவர்களே அந்தப் பாடலை எழுதி இசையமைத்து “இது ஒரு தொடர்கதை” படத்துக்காக வெளிவந்தது.

எஸ்.பி.பாலசுப்ரமணியமும், எஸ்.ஜானகியும் தனித்தனியாக “வா வெண்ணிலா” பாடியிருக்க (வா வெண்ணிலா எஸ்பிபியோடு ஆலாபனையிலும் ஜானகி) , 

“ஏ வெண்ணிலா” பாடலை இருவரும் சேர்ந்து பாடியிருப்பார்கள்.  அங்கேயும் ஒரு குறும்புத்தனம் பண்ணியிருப்பார் கங்கை அமரன்.  வா வெண்ணிலா பாடலின் எஸ்.ஜானகி வடிவம் ஒரு தபேலா தாளக் கட்டுடன் பாடுவதை இந்த  ஏ வெண்ணிலா பாடலிலும் பிரதிபலிக்குமாற் போலொரு சங்கதியை 2.30 நிமிடத்தில் கொடுத்து எஸ்பிபியை ஆலாபனை பாட வைத்திருப்பார்.


வா வெண்ணிலாவுக்கும், ஏ வெண்ணிலாவுக்கும் இன்னொரு ஒற்றுமை, மெல்லத் திறந்தது கதவு படத்தை ஆர்.சுந்தரராஜன் இயக்கியது போல, இது ஒரு தொடர்கதை படத்தை அவரின் உதவியாளர் அனு மோகன் இயக்கியிருக்கிறார்.


தமிழ் சினிமா ஜாதகப்படி மோகன் & அமலா ஜோடி சேர்வதில் ஏகப்பட்ட சிக்கல். “உன்னை ஒன்று கேட்பேன்” படத்தில் தன் காதலி அமலாவை வில்லன்களிடம் பறி கொடுத்து விடுவார். “மெல்லத் திறந்தது கதவு” படத்தில் சேற்றுக் குழியே வில்லன் ஆகி விடும். 

இது ஒரு தொடர்கதையிலும் அப்படி இப்படிச் சுற்றி ஒரு வழியாக ஒன்று சேர்ந்து விடுவார்கள்.


கங்கை அமரன் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மகா ரசிகர் என்பது இந்தப் பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் உணரும்.


காட்சியோடு ஏ வெண்ணிலா 


https://youtu.be/SRQfJFqstJw


ஆளுமைப்பட்ட மனிதர்களைப் பின்பற்றி வாழ்வது உலகியல் நியதி.

இங்கே “வான் மீதிலே”  என்ற பாடல் எத்தனை ஆண்டுகள் கழித்தும் இவ்விரு பாடல்களுக்கும் ஆளுமைப்பட்டு நிற்பதை உணரலாம்.


இசைஞானி சொல்வது போலத் தான் 

“ஒரு பாடல் தோன்றுவதற்கு முன் அது ஒவ்வொரு வாத்தியங்களின் இசையாக வெளிப்படும் போது இன்னதாகத் தான் வெளிப்படும் என்று அது உணருமா என்ன” ❤️


கல்யாணராகம் பாடி 

காதல் செய்ய வந்தேனே�இன்னிசை பாடும் ராகம் நூறு 

நீயே ஆதாரம்


உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்�நிலவே இன்று நீ விடியிரவாய்�ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம் தானே 💚🎸


கானா பிரபா

03.11.2022

Saturday, October 29, 2022

வேட்டி கட்டிய சரஸ்வதி வாலி ❤️

“தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல்

வைகாசி வெய்யில் போல வாட்டுதே”

https://www.youtube.com/watch?v=A2Sb6x1F9o0

அனிச்சையாக அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களில் இதுவுமொன்று. அதுவும் இன்று வாலியார் பிறந்த நாளில்

காலையில் முகத்தில் முழித்ததும் இந்தப் பாடலோடு தான்.

“சொல்லவா சொல்லவா ஒரு காதல்கதை” பாடலெல்லாம் ராஜாத்தனமான மெட்டும், இசையுமாக தேவா கொடுத்த உச்சம்.

அதில் சரிபாதி பங்கு இயல்பாகக் கவசகுண்டலமாக ஒட்டிக் கொண்ட வாலி அவர்களுக்கும் போய்ச் சேர வேண்டும்.

"மை அளந்த கண்ணும்

என் கையளந்த பெண்ணும்

மின்சாரம் பாய்ச்சுமா"

"கள்ளிருக்கும் கிண்ணம்

என்னுள்ளிருக்கும் வண்ணம்

உன் பார்வை பார்க்குமா"

என்று சொற்களோடு சிலம்பம் ஆடுவார்.

வாலியாரை “வேட்டி கட்டிய சரஸ்வதி” என்று விழித்தது சாட்சாத் தேவாவே தான். “வாலிப வாலி” நிகழ்வில் https://www.youtube.com/watch?v=WjvZw6nysFM

தன்னுடைய முதற்பாடலுக்கு நல்ல சகுனமாக வாலியார் தொடக்கி வைத்த வரிகளோடு நெகிழ்ந்து பேசியிருப்பார் தேவா. 

வாலியை நினைத்தால் நூறு தலைப்புகள் வரும். சரி வாலியும் தேவாவும் என்று கணக்குப் போட்டால் அதைப் பிரித்தாலேயே ஏகபட்ட கிளை பரப்பும். ஆகவே “சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை”யின் நீட்சியாக அந்தப் பாடலின் பாட்டுடைத் தலைவன் சரத்குமாருக்காக வாலி(ப) வரிகளில் தேவா கொடுத்த பாடல்களை அலசிப் பார்த்தேன்.

“சூரியன்” திரைப்படம் தேனிசைத் தென்றல் தேவா வாழ்வில் வெளிச்சம் பரப்பிய பிரமாண்டம். அந்தப் பிரமாண்டத்தில் அணி சேர்ந்தவர் வாலி அவர்களும்.

எப்படி “மஸ்தானா மஸ்தானா”வுக்கும், “முக்காலா முக்காப்புலா”வுக்கும் அர்த்தம் தேடத் தேவை இல்லாமல் இசையின் தள லயத்தோடு வரிகளை ரசித்தோமோ அது போல ஒரு பாட்டு

“லாலாக்கு டோல் டப்பிமா”. ஆனால் இந்தப் பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்த மர ஆலையில் வேலை செய்பவர்களின் களைப்பு நீங்க ஒரு பாட்டு. அங்கே பாமரத்தனமாக, நாட்டுப்புற மனிதர்களுக்கான சொல்லாடலாகவே பாடலும் அமைகின்றது.

அதே சமயம் சூரியன் படத்தின் ஏனைய பாடல்களைப் பார்த்தால்

கந்த சஷ்டி கவசத்தில் இருந்து உருவிய சந்தத்தில் “பதினெட்டு வயசு இளமொட்டு மனசு” இந்தப் பாடலில் வாலியின் சொல்லாடல் எவ்வளவு தூரம் இலாவகமாக வந்து அமரும் என்பதற்கு உதாரணம் பறையும்

“பக்கம் நெருங்கிட.. 

விருந்திட.. ஆசை விடுமா”.

வளைகாப்புச் செய்யும் பெண்ணுக்கு ஒரு பாட்டு “கொட்டுங்கடி கும்மி” 

https://www.youtube.com/watch?v=p6o7rKU3P0I 

“சிவப்புக் கல்லு மாணிக்கம் போல்

புள்ளப் பொறக்கணும்

அது சூர்யகாந்தி பூவைப் போல

மெல்ல சிரிக்கணும்”

போகிற போக்கில் ஒரு அழகியலைப் பூப்போல எறிந்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார் வாலி.

“தூங்கு மூஞ்சி மரங்களெல்லாம்” பாடலும் அது போலத் தான், 

பூமிக்கு என்னென்ன தாகங்களோ பங்குனி மாதத்திலே

பூவைக்கு என்னென்ன மோகங்களோ பூ பூத்த காலத்திலே"

இயற்கையையும், காட்சிச் சூழலையும் இணைத்து அழகு பார்ப்பார்.

சூரியனின் ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு ரகம். அவற்றுக்கான வரிகளில் வாலி காட்சிப்படுத்தியிருக்கும் எளிமையும், பிரமாண்டமுமே காலம் தாண்டி மனசில் நிக்க வைக்கின்றது.  உணர்வு பூர்வமான நெகிழ வைக்கும் பாட்டாய் “மன்னாதி மன்னன்” கேட்டால் கண்கள் கசியும். 

வசந்த காலப் பறவை படத்தின் வெற்றியே சூரியனிலும் அதே வாலி & தேவா வெற்றிக் கூட்டணி தொடர வழி வகுத்திருக்கும். அடுத்த “இந்து” படத்திலும் அப்படியே ஆயிற்று. இம்மூன்றிலும் சரத்குமார் இருந்தாலும் சூரியனில் நாயகனாக மிளிர்ந்தார்.

“பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது

வீட்டுக்குள் நீ இருந்தால்......” 

https://www.youtube.com/watch?v=GtPCGimwZGI

எஸ்பிபியை 90களில் முழு வீச்சில் பயன்படுத்திய விதத்தில் தேனிசைத் தென்றல் தேவா குறையே வைத்திருக்க மாட்டார்.

கனத்த போர்க்காலத்தில் மின்சாரமில்லாப் பொழுதுகளில்

சைக்கிளில் இருக்கும் டைனமோ வழியாக மின்சாரம் கொடுத்து

இந்தப் பாட்டைக் கேட்ட காலமெல்லாம் நினைப்பில் வரும்

ஒவ்வொரு தாயகப் பயணத்திலும் பயணிக்கும் பஸ் இல் மீண்டும்

கேட்கும் போதெலாம். பேண்டு மாஸ்டர் படத்தில் இந்தப் பாடலின் சந்தோஷ & சோக வடிவங்களை மட்டும் வாலியாரை வைத்து எழுதி வாங்கியிருப்பார் தேவா.

சரத்குமாருக்காக தேவா இசைத்ததில் “மகா பிரபு” படத்தின் அனைத்துப் பாடல்கள் கணக்கில் இன்னொரு முத்து

“மைனா மைனா மடியிலே”

https://www.youtube.com/watch?v=xQ5IsSgDY6E

தேவா இசையில் சரத்குமாருக்கான படமாக வந்த “முன் அறிவிப்பு” பாடல்கள் அனைத்துமே பெண் குரல்கள். அவற்றையும் வாலியே எழுதினார்.

“நீலகிரி மலை ஓரத்தில ஒரு செவ்வந்தி மெட்டு”

https://www.youtube.com/watch?v=daoeLKrbZgs

அப்படியே 90களுக்கு அழைத்துப் போய்விடும். வாலி அவர்கள் எழுதிய அந்தப் பாடலோடு மொத்தம் நான்கு பாடல்களைக் கொடுத்தார் தேவா இசையில் “நம்ம அண்ணாச்சி” சரத்குமாருக்கு.  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய “தோஸ்து” படத்தின் அனைத்துப் பாடல்களும் வாலி கொடுத்தவையே.

இன்றும் தாயகப் பயணத்தில் நம்மூரை மிதித்தால் எங்கோ ஒரு வீட்டில் இருந்து தேனிசைத் தென்றல் தேவா கொடுத்த தொண்ணூறுகளில் ஒன்று காதில் விழும். அதில் தவிர்க்க முடியாதது “முத்து நகையே முழு நிலவே” பாடல். அதுவும் கலியாண வீடு என்றால் பாட்டுப் போடுபவர் மறவாது இந்தப் பாட்டு சீடியையும் எடுத்து வந்து விடுவார் போல. 

“மண்ணுக்குள் வைரம்” புகழ் இயக்குநர் மனோஜ்குமார் தொண்ணூறுகளில் பழி வாங்காத வில்லனே இல்லை எனுமளவுக்குப் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வந்தார். ஆனால் அதிலும் குடும்ப sentiment மசாலாவை அதிகம் தூவி விடுவார். நடிகர் சரத்குமார் நாயகனாக அரிதாரம் பூசிய போது கூடவே வித்தியாசமான தோற்றங்களும் கிட்டிய அதிஷ்டக்காரர். மனோஜ்குமார் இயக்கிய சாமுண்டி அப்படி இன்னொன்றாக அமைந்தது.

அந்தக் காலகட்டத்தில் தேனிசைத் தென்றல் தேவாவோடு படத்தின் முழுப்பாடல்கள் அல்லது அதிகபட்சப் பாடல்கள் என்று கணக்கு வைத்து எழுதிய காளிதாசன் இல்லாத படங்கள் அரிது. அப்படி அரிதாக தேவாவோடு கவிஞர் வாலி கூட்டணி அமைத்த படமே “சாமுண்டி”.

“முத்து நகையே.. முழு நிலவே.. 

குத்து விளக்கே.. கொடி மலரே”

https://www.youtube.com/watch?v=Onkgvb0cppw

பாடலில் மெட்டும், இசைக் கோப்பும் அப்பட்டமான இசைஞானி இளையராஜாவின் தாக்கத்தால் கொடுத்த பாட்டு.

எஸ்.பி.பி & எஸ்.ஜானகியின் குரல்களில் அப்படியே கிறங்கி விடுவோம். இந்தப் பாட்டு முழுக்க வாலியாரின் வரிகளும் தெம்மாங்கு இசையும் அப்படியே வயற்காட்டுக்கு இழுத்துப் போய் விடும்.

“மண்ணத் தொட்டு கும்பிட்டுட்டு 

பொட்டொண்ணு வச்சுக்கம்மா” 

https://www.youtube.com/watch?v=uCLBMbNOPt0

தங்கை பாசத்தோடு கலந்து வரும் படத்தின் முகப்புப் பாடல். முத்து நகையே பாடலுக்கு நிகராகக் கொண்டாடப்படுவது.

இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் வெள்ளையத் தேவன் படத்தில் இளையராஜா கொடுத்த “தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு” பாடல் வந்து ஞாபகமூட்டும். அதுவும் வாலியார் கைவண்ணம் தான்.


கண்ணுல பால ஊத்த வந்த கண்ணம்மா” 

https://www.youtube.com/watch?v=ZRa-FFtxsIc

அந்தக் காலத்து தொண்ணூறுகளின் தேவா முத்திரைப் பாட்டு. எஸ்.பி.பியோடு இதில் ஜோடி கட்டிப் பாடுபவர் சித்ரா. 

“ஏத்துங்கடி ஏத்துங்கடி நல்ல கார்த்திகை தீபம்”

சித்ரா மற்றும் குழுவினர் பாடும் பாடல் வட இந்திய இசையமைப்பாளர் கொடுத்த இசையமைப்போ எனுமளவுக்கு அதன் ஆரம்பம். கிராமியத் துள்ளிசையாக இனிக்கும்.

எஸ்.ஜானகி பாடும் “கும்மணும் கும்மணும்” பாடல் அதிகம் எடுபடாத பாடல்.  “கதவ சாத்து கதவ சாத்து மாமா”  அந்தக் காலத்துப் பட்டிமன்ற மேடைகளில் திரையிசைப் பாடல்களை எள்ளி நகையாடக் கை கொடுத்த பாட்டு.

இளையராஜாவின் இசையை ஆழ்ந்து கவனிப்பவர்கள் அந்த இசை அளிப்பில் காலத்துக்குக் காலம் மாற்றமொன்று நிகழ்வதை அவதானிக்கலாம். தொண்ணூறுகளிலும் அப்படியொரு மாற்றம் நிகழ்ந்தது. அந்தச் சூழலில் தேவாவின் வருகை இளையராஜாவின் பாடல்களைத் தழுவிய போக்கில் ரசிகனை ஈர்க்கும் வண்ணம் முந்திய காலகட்டத்துப் பாணியைக் கலந்து கொடுத்து தேனிசைத் தென்றல் தேவா ஆட்கொண்டார். அதில் இந்த சாமுண்டி படத்தில் கவிஞர் வாலியோடு இணைந்து அனைத்துப் பாடல்களைக் கொடுத்ததும் ஒரு புதுமை. ஏனெனில் இதே தொண்ணூறுகளில் இளையராஜாவின் இசையில் முழுப் படப் பாடல்கள், அதிக பாடல்கள் என்று சம காலத்தில் மீட்டர் ஏற்றிக் கொண்டிருந்தார் வாலி.

கண் இரண்டும்

மயங்கிட கன்னி மயில்

உறங்கிட நான் தான்

பாட்டெடுப்பேன் உன்னை

தாய் போல் காத்திருப்பேன்

இன்னொரு பிறவி இருந்தால் கவிஞர் வாலியாக அல்ல, மனிதர் வாலியாக ஜாலியாக வாழ்வைக் கொண்டாடிய மனிதனாகப் பிறக்க வேண்டும் என்றொரு ஆசை.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நம் இறவாக் கவிஞருக்கு.

கானா பிரபா

29.10.2022